Monday, October 31, 2011

ஜேன் ஆஸ்டின் தன் சகோதரிக்கு எழுதிய கடிதம்...ஜேன் ஆஸ்டின் (Jane Austin, டிசம்பர் 16, 1775 ஜூலை 18, 1817) ஒரு பிரிட்டானியப் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய நடுத்தர மக்களைப்பற்றிய நேசப் புனைவுகள் ஆங்கில இலக்கிய உலகில் இவருக்கு அழியாத இடத்தைத் தந்துள்ளன. இவரது புதினங்களில் காணப்படும் யதார்த்தவாதமும், கூர்மையான சமூக விமர்சனமும் வெகுஜன வாசகர்களிடம் மட்டுமல்லாது விமர்சகர்களிடமும், இலக்கிய ஆய்வாளர்களிடமும் இவருக்கு பெரும் மதிப்பைப் பெற்றுத்தந்துள்ளன.
18-ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தின் ஸ்டிவென்டன் கிராமத்தில் பிறந்தார். கஸாண்ட்ரா ஆஸ்டின் என்கிற தன் சகோதரியுடன் ஆஸ்டின் ஆபே பள்ளிக்குப் படிக்கச் சென்றார். கீழ் நடுத்தரவர்க்கக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஆஸ்டின், தன் தந்தை மற்றும் சகோதரர்கள் மூலம் கல்வி கற்றார். அவருடைய எழுத்துப்பணியை அவரது குடும்பத்தார் பெரிதும் ஊக்குவித்தனர். இளம் வயதில் பலதரப்பட்ட இலக்கிய பாணிகளில் பரிசோதனையாக எழுதிப்பார்த்த ஆஸ்டின், பின் தனக்கே ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார்.
17ம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த ‘உணர்ச்சிகரமான புதினப் பாணியை நிராகரித்த ஆஸ்டினது படைப்புகளில் யதார்த்ததைமும், நகைச்சுவையும் இழைந்தோடுகின்றன. அவரது புதினங்கள் 18ம் நூற்றாண்டு ஆங்கிலப் பெண்கள் சமூகத்தில் முன்னேறவும் பொருளதார ஆதாயத்திற்காகவும் ஆண்களையும், திருமணத்தையும் சார்ந்திருந்ததை சுட்டிக்காட்டுகின்றன. 1811 முதல் 1816 வரை வெளியான சென்ஸ் அண்ட் சென்சிபிளிட்டி, பிரைடு அண்ட் பிரிஜுடைஸ், மான்ஸ்ஃபீல்டு பார்க், எம்மா ஆகிய நான்கு புதினங்கள் ஆஸ்டினுக்கு சிறிதளவு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தன.
அவர் மறைவுக்குப் பின் நார்த்தாங்கர் ஆப்பி,பெர்சுவேஷன் என்று மேலுமிரு புதினங்களும் வெளியாகின. ஆஸ்டின் வாழ்ந்த காலத்தில் அவர் இலக்கிய உலகில் பெரிதாக அறியப்படவில்லை. அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப்பின் 1869ல் வெளியான எ மெமயர் ஆஃப் ஜேன் ஆஸ்டின் என்ற அவரது வாழ்க்கை வரலாறு சமூகத்தின் பார்வை அவர் படைப்புகளின் மீது திரும்பக் காரணமானது. அதன் பின்னர் அவரது புகழ் பரவி, அவரது புதினங்களுக்கு பெரும் வரவேற்பு உருவானது.
தற்போது ஆஸ்டின் தலை சிறந்த ஆங்கில எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆஸ்டினது படைப்புகள் பலமுறை தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன; உலகெங்கும் ஆங்கில இலக்கிய பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.
தன் சகோதரி கஸாண்ட்ராவிற்கு ஜேன் ஆஸ்டின் ரௌலிங்கிலிருந்து இக் கடிதத்தை 18.09.1796 அன்று எழுதினார்.

என் இனிய காஸாண்ட்ரா,

இன்று காலை முழுவதும் திட்டங்களை அமைப்பதிலும், கஷ்டங்களைப் போக்குவதிலும் உள்ள சந்தேகங்களுடனும் யோசனைகளுடனுமே கழிந்தது. இந்த வாரத்திற்குள் சீக்கிரம் நடக்க வேண்டாம் என நான் கருதுகிற ஒன்றின் அறிவிப்பு இன்று காலை கிடைத்தது. பிராங்குக்கு ‘டிரைடான் தலைமை வகிக்கும் ‘கேப்டன் ஜான்கோர் கப்பலில் பதவி கிடைத்துள்ளது. இதனால் புதன் கிழமை நகரத்தில் இருப்பார். அந்த நாளில் அவருடன் நான் சேர்ந்திருக்க விருப்பம் கொண்டிருந்தாலும், பியர்ஸன்ஸ் வீட்டில் இருக்க்க் கூடிய நிச்சயமில்லாத்தன்மை இருப்பதால் என்னால் போக முடியாது.
நான் செல்வி.பி.க்கு எழுதினேன். இன்று காலை அவளிடமிருந்து பதில் வரும் என நம்பினேன். எல்லாமே சுலபமாகவும், மேன்மையாகவும் செல்கிறது என்றும், நான் கலந்து கொள்வதற்கு விருப்பமாயிருக்கிற பிராங்கின் பதவியேற்புக்குச் செல்வதற்கான சாத்தியம் பற்றியும் விளக்கமாக இருக்கும் என நம்புகிறேன்.

எனக்காக மட்டுமே அவர் புதன் கிழமை வரை இருக்கிறார். புதன் கிழமை என்னை வரவேற்றுக் கொள்வார்களா என்பதை செவ்வாய்க் கிழமையில் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களால் முடியாது என்றால், எட்வர்ட் திங்கட்கிழமை என்னை கிரீன்வீச்சுக்கு அழைத்துப் போவதாய் கூறியுள்ளான்.

ஏற்கனவே குறிக்கப்பட்ட நாள் இது. இது அவர்களுக்குச் சிறப்பாய்ப் பொருந்தும். ஒருவேளை செவ்வாய்க் கிழமையில் எனக்கு பதில் கிடைக்கவில்லை என்றால், மேரி வீட்டில் இல்லை என நினைத்துக்கொள்வேன். நான் முடிந்தவரை இங்கே காத்திருக்க வேண்டும்.
அப்பா தன்னுடைய ஊதாரிமகளை நகரத்தில் இருந்து அழைத்து வர விருப்பமாய் இருப்பார் என நம்புகிறேன். கிரீன்வீச்சை அடைந்ததும் விரைவில் திரும்பவும் எழுதுகிறேன். மிஸ் பியர்ஸன் என்னுடன் திரும்பினால், அதிகமான அழகை எதிர்பார்க்கக் கூடாது என எச்சரிக்கையாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். முதல் சந்திப்பிலேயே அவரைப் பற்றி நான் கருதி கருத்துக்கு அவர் பொருத்தமாக இருந்தார் என்று அவரிடம் பொய்யாக நடிக்க மாட்டேன்.

பிராங்குடன் திரும்பும் யோசனை எனக்கு வந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பியர்ஸன்ஸ் வீட்டில் இல்லாமல் இருந்திருந்தால், எனக்கு சிறிது பீர் கொடுக்கும் உடல் பருமன் கொண்ட பெண்ணுடன்தான் பொழுதைக் கழிக்க வேண்டும்.

உன் நெருக்கமானவர்களுக்கு என் அன்புகள்.

எப்போதும் உன்னுடைய,
ஜே. ஆஸ்டின்.


பரணிலிருந்த தன் பழைய கடிதங்களை மீட்டெடுக்கிறார் இம்சையரசி தன் வலைப்பக்கத்தில் அன்புள்ள....என்னும் பதிவில்

என் மேல நீங்கதான் எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க அப்பா. இந்த கடிதங்கள எடுத்துப் பாக்கலைனா எனக்காக நீங்க கண்ணீர் சிந்தினது எனக்குத் தெரியாமலேப் போயிருக்கும்’.....

Sunday, October 30, 2011

பெயரற்ற கடிதங்கள்நீண்ட இடைவெளிக்குப் பின்
நிகழும் சந்திப்பு...
பகிர்ந்து கொள்ள
பல நினைவுகள் இருந்தும்
மௌனம் என்ற
நாகரிகப் பார்வையில்
நகர்ந்து கொண்டிருந்தது நேரம்!
பிரிகையில்...
உன் குடும்பம் பற்றி நீயும்
என் குடும்பம் பற்றி நானும்
உப்புச்சப்புமில்லாமல்
பேசி முடிக்கையில...
தப்பித்தவறிக்கூட அந்த
பழைய பார்வையை
பார்க்கவே இல்லை
உன் கண்களில்.


எல்லாவற்றையும்
மறந்தது போல்
யதார்த்தமாய் பேசும் நீ!
பழகிய நாட்களில்
எனக்கு எழுதிய
பெயரற்ற கடிதங்களை
இனியும் நான்
பாதுகாத்து வைப்பதில்
பயனில்லை!
குப்பைக் கூடையில்
போடவேண்டும்!
சரி....
நீங்காமல் நெஞ்சில் கிடக்கும்
பழைய நினைவுகளை
என்ன செய்வது?

நன்றி; மீரா பழனி, சென்னை.

 

Friday, October 28, 2011

‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ - விகடன் விமர்சனம்

ஆனந்தவிகடனில் வந்த விமர்சனம்:

உல்லாச உலகம் எனக்கே சொந்தம் என விட்டேத்தியாக அலையும் கணவனாக தங்கர்பச்சான்; அவரை வழிக்குக் கொண்டுவர தவிதவிக்கும் பொறுப்பான மனைவியாக நவ்யா நாயர்; புரியாத வயசில் மணி மணியாக இரண்டு பெண் குழந்தைகள்... இவர்களுக்குள் நடக்கிற பாசப்போராட்டம்தான் படம்.

ஷிண்டா விஸ்டயாய ஷியாமளா என்கிற மளையாளப் படத்தை நேர்த்தியாகவே தழுவியிருக்கிறார் தங்கர்.

கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியாராக இருந்து கொண்டு, ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு, தண்ணி-சீட்டாட்டம் என செட் சேர்த்துக்கொண்டு அலைகிற தங்கர்பச்சானைத் திருத்த, அவரைப் பெற்றவர்களும், மாமனாரும் முட்டி மோதுகிற காட்சிகளில் காமெடியும் கண்ணீரும் சரிவிகிதக் கலவை.

இவரைத் தருத்த நினைக்கிற ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டலாக அட்வைஸ் தர... அதன்படி, வேண்டா வெறுப்பாக சபரிமலைக்கு மாலை போடுகிறார் தங்கர். திருந்திட்டானப்பா எனக் குடும்பமே சந்தோஷம் அடைகிறது. ஆனால் கொண்டதே கோலம் என்று ஒரேயடியாக தங்கர், தீவிர சாமி பக்தராக மாறிவிடுவது எதிர்பாராத திருப்பம்.

குத்திக் காட்டுகிற உலகத்திலிருந்து தப்பிக்கிற யுக்தியாக ஒரேயடியாக ஆன்மிக போர்வை போர்த்திக்கொள்ளும் மனுஷர், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி, ஊர் ஊராக சுற்றித்திரிகிறார்.

இங்கே பரிதவித்து நிற்கும் நவ்யாவையும் அங்கே கால் போன போக்கில் நடக்கிற தங்கரையும் மாறி மாறிக் காட்டிக்கொண்டே வருகிற ஒரு பாடலில், வெறும் காட்சிகளாலேயே இரண்டு மூன்று தடவை நம் கண்களைக் கசிய வைத்துவிடுகிறார்கள்.

பின்னர் பொறுப்பை உணர்ந்து திருந்தி, குடும்பத்தைத் தேடிவரும் தங்கரை, பழுக்க காய்ச்சிய இரும்பாக மாற்றி சுற்றங்கள் சுட்டெரிக்க... அன்பை மட்டுமே பொழிந்த மனைவி கூட மனதைக் கல்லாக மாற்றிக்கொண்டு அம்பாகக் குத்த... தொடர்ந்து அரங்கேறுகிற கிளைமாக்ஸில் பதை பதைப்பு, பரிதவிப்பு, பரவசம் என உணர்ச்சிகள் மாறி மாறி வீசுகின்றன.,


தேனு... தேனு... என நவ்யாவிடம் குழையும் போதும், உண்மை உணர்ந்து கதறும் போதும் நடிகர் தங்கர், நம் மனசில் இடம் பிடிக்கிறார். ஆனால் 60-களில் தமிழ் சினிமா பாத்திரங்கள் பேசிய பாணியில் இழுத்து இழுத்து அவர் வசனம் பேசுவதுதான் லேசாக நெருடுகிறது.

ரொம்ப நாளைக்குப் பிறகு ஸ்கூலுக்குப் போகிற தங்கர்பச்சானை வழியில் நண்பர்கள் வசியம் பண்ண, சட்டென மூடு மாறி சரக்கடிக்க அவர் கிளம்புவதும், போகிற இடம் சுடுகாடு என்றுகூடத் தெரியாமல் ஜமுக்காளம் விரித்து பாட்டிலைத் திறந்துவிட்டு அவஸ்தைப்படுவதுமாக முன்பாதி காமெடி ஜில்லாக் கூத்து.

அய்யப்பன் கோயிலில் பொசுக்கென்று அவர் முழுநேர ஆன்மிகவாதியாக மாறுவதற்கு வலுவான காரணம் காட்டப்படவில்லை. அதே போல் இரண்டாம் பாதியில் காட்சிகளாலேயே விளக்கியிருக்கக் கூடிய சில இடங்களில் வளவள வசனங்கள்.

துலக்கி வைத்த குத்துவிளக்காக நடிப்பிலும் தோற்றத்திலும் ஜொலிக்கிறார் நவ்யா நாயர். கனன்ற் வரும் கோபத்தைத் தொண்டைக் குழிக்குள்ளேயே புதைத்துக்கொண்டு  கணவனைத் திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையோடு அவர் தொடர்ந்து போராடுகிற காட்சிகளில் பிரமாதமான முகபாவங்கள்.

ஆபாச ஆக்ஷன் மசாலா இல்லை; வழக்கமான காதல் பழிவாங்கல் இல்லை! ஆனாலும் அழுத்தமான கதையிலேயே அசத்திவிட்டார்கள்.

மார்க் 100 / 44

இசை; இளையராஜா
இயக்கம்; தங்கர்பச்சான்
தயாரிப்பு; தங்கர்பச்சான்

திரைப்படம் வெளியான ஆண்டு; 2005.

Thursday, October 27, 2011

‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ - மறக்க முடியாத சினிமா

உங்கள் தந்தை ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்து, அரைகுறை ஆடைகளுடன் அல்லது கோவணத்துடன் நீங்கள் படிக்கும் பள்ளியில் சக மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் பார்க்க உங்களிடம் வந்து பேசினால் உங்கள் நிலை என்னவாயிருக்கும்?

குடும்பத்தை நிர்வகிக்க வக்கில்லாமல், சம்பாதிக்க துப்பில்லாமல், உழைப்பதற்கு உடலை வளைக்காமல் வெட்டியாய் எத்தனை நாளைக்கு வீட்டில் உட்கார்ந்து சாப்பிட முடியும்? பாட்டன் சம்பாதித்த நிலத்தில் பாடுபட்டாலே போதும். ஆனால் எது தடுத்தது?

இன்றுவரை அதன் காரணம் தெரியவில்லை. ஆறு பிள்ளைகள் வரிசையாக. உடுக்க துணி இல்லை. வயிறார உண்ண உணவில்லை. படிக்க புத்தகங்கள் இல்லை. எதைப்பற்றியுமே கவலைப்படாமல் ஒரு மனிதரால் இருக்க முடியுமா என்ன?

வீட்டில் எந்த நேரமும் சதா சண்டை. மனைவியைப் போட்டு அடித்தல், தடுக்கப்போகும் பிள்ளைகளுக்கும் அடி. இரவிலே வயலுக்கு நீர்பாய்ச்ச செல்லவேண்டியிருந்தால் சின்னஞ்சிறு பிள்ளைகளை துணைக்கு அழைத்துப் போவது! வர மறுத்தால் அடி. அப்படியே தனியே போனாலும் கதவை வெளிப்புறம் பூட்டிவிட்டுப் போவது! இரவில் சிறுநீர் கழிக்க அவஸ்தைப்பட்ட குடும்பத்துக்கு விடிவுகாலம்?

எப்படியோ மனம் வந்து வாங்கிக்கொடுத்த புதுச்செருப்பை பள்ளியில் யாரோ ஒருவனிடம் திருட்டு கொடுத்துவிட்டு வீட்டிற்கு பயந்து பயந்து போய் நிலைமையைச் சொல்லியும், தலைகீழாய் கட்டிவைத்து அடித்த கொடுமையும் உங்களில் யாருக்காவது நடந்தது உண்டா?

தினமும் அடி உதைகளுக்கிடையே ஒவ்வொரு வேளையும் பிள்ளைகளின் பசி போக்க எப்படியோ சமாளித்து, நாள் முழுக்கவேலை செய்து, பிள்ளைகளைப் படிக்க வைத்து ஆளாக்கிய தாயின் தியாகத்தை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

இருக்கலாம்! நிறைய இருக்கலாம். பொறுப்பற்ற ஆண்வர்க்கத்தினால் சீரழிந்து போன குடும்பங்கள் எத்தனையோ இருக்கலாம். குழந்தைகளைப் பெற்றுவிட்டால் மட்டும் போதுமா? அவர்களை வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்க வேண்டிய கடமையிலிருந்து ஆண்வர்கம் விலகிப்போனால் அந்தக் குடும்பத் தலைவி படும்பாட்டை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறீர்களா? பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறீர்களா?

இன்னும் நிறைய சொல்ல்லாம். இதையெல்லாம் அனுபவித்தவன் நான்தான். உயிரோடு எதற்கு செத்துத் தொலைத்தாலே நிம்மதி என்று ஒட்டு மொத்த குடும்பமே நினைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! மறைந்து போனவர்கள் பற்றி தவறாகப் பேசக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் என்னால் தவிர்க்க முடியவில்லை. என் தாய்க்குத் தெரிந்தால் தடுப்பாரோ என்னவோ!?


தந்தைப் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தோம் நானும் என் சகோதரர்களும். 'அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு', ஆனால் எங்களுக்கு....? படிப்பைக்கூட பள்ளிக்கூட வாழ்க்கைக்கு மேல் தொடர முடியவில்லை. உறவுகள் எல்லாம் எள்ளி நகையாட எப்படியெல்லாமோ துன்பங்களை அனுபவித்தோம். சந்தோஷமான குடும்பங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏக்க்கமும் பொறாமையும் மேலோங்கும்.

கையில் காசுத்தட்டுப்பாடு வரும்போதேல்லாம் வீட்டிலுள்ள எதையாவது விற்பது... வீடுகட்ட சொந்த நிலத்தில் செங்கல் சூளைபோட்டு வைத்திருக்க, அதையெல்லாம் விற்று ராஜவாழ்க்கை. காலையில் டவுனுக்குப் பொனால் சிற்றுண்டி பிறகு ஒரு சினிமா, பின் மதிய உணவு அப்புறம் ஒரு சினிமா, இரவு சாப்பாட்டையும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து நிம்மதியான உறக்கம்.

எங்களைப்ற்றி கிஞ்சித்தும் கவலையே படாத மனிதரை எப்படி தந்தை என்று அழைப்பது? எதுவுமே முடியாத போது கடைசியாய் அகப்பட்டதுதான் மனநிலை பாதித்தவர் வேடம். எங்கள் குடும்பத்திற்கு மட்டும்தான் அவரின் வேடம் தெரியும். ஆனால் ஊரிலோ மற்றவர்களுக்கோ அவர் மனநிலை பிறழ்ந்தவர். கொஞ்சநாள் சாமியார் வேடமும்!

ஊர் ஊராக சுற்றி, தெரிந்தவர்களிடத்தெல்லாம் பிச்சை கேட்டு, வீட்டு சாப்பாட்டில் விஷம் இருக்கிறதென்று மறுத்து, முடியாது போனபோது ஒடுங்கி தனியான ஒரு இடத்தில் அடங்கி கொடுப்பதைத் தின்று அப்படியே செத்தும் போனார். அந்த நிலைமையில் என் தாய் எங்களை வளர்க்க பட்டபாடு சொல்லிமாளாது. ஊர் உறவுகளுக்கு மத்தியில் நாங்கள் பட்ட வேதனையும் அவமானமும் அளவிடற்கரியது.

எல்லாம் ஆழ்மனதில் அமிழ்ந்து போன நிலையில், இந்த நினைவுகள் எல்லாம் ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியைப் பார்க்கும் போது எனக்கு ஏற்பட்டது. ‘அழகியிலிருந்து தங்கர்பச்சானின் ரசிகனாகிவிட்டபடியால் இந்த படத்தை பார்த்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு சாராசரி குடும்ப வாழ்க்கையை எதார்த்தமாகக் காட்டியிருந்தார் தங்கர்பச்சான்.

எக்குதப்பாக நடந்து கொள்வதும், பிறகு மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதையும்  அச்சு அசலாக பொருத்தமாக செய்திருக்கிறார் தங்கர். அதிலும், "உள்ளே வா" என்று ஒரு வார்த்தை சொல்ல மறுக்கும் மனைவியை கெஞ்சுவதும், அப்பா மாமனார் என்று முக்கிய உறவுகளாவது தன்னை குடும்பத்தோடு சேர்த்து வைக்காதா என்று கதறுவதுமாக மனசுக்குள் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் தங்கர். சன்யாச வாழ்க்கையில் குடும்பத்தையும், குடும்ப வாழ்க்கையில் சன்னியாசத்தையும் நினைத்து அவர் தடுமாறுவது இயல்பான சித்தரிப்பு.

தங்கரின் மனைவியாக நவ்யா. இந்த உயிரோட்டமுள்ள வேடத்திற்காக தன்னையே அற்பணித்திருக்கிறார். அற்புதமான நடிப்பு. குழந்தைகளின் உண்டியலை கூட விட்டு வைக்காமல் திருடிச்செல்லும் தங்கரை நினைத்து குமுறி, வீட்டில் உள்ள சாமி படங்களையெல்லாம் எடுத்து வெளியே எறிந்து சாமியாடுகிறாரே... பின்-டிராப் சைலண்டில் திகைத்து போனது நான் மட்டுமல்ல தியேட்டரில் இருந்த அத்தனை ஜனங்களுமே!

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி - ஆனந்த விகடனின் விமர்சனம் அடுத்த பதிவில்............

Tuesday, October 25, 2011

உயிர் உடைத்த புகைப்படம்... (உங்கள் மனமும் வலிக்கக் கூடும் ..)கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு க்ளிக்செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை நியூயார்க் டைம்ஸ்பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி  ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.


 ‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.


அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am  Really, Really Sorry.

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்

நன்றி; இராமன் பாண்டியன் & சம் இதழ்

Monday, October 24, 2011

ஏன் மயக்கம்?


பூக்களுக்கு சொல்லலாம் என்றிருந்தேன்
உனக்கு-
புன்னகையை கற்றுக்கொடுக்க!
பிறகுதான் தெரிந்தது – நான்
தூரத்தில் இருந்தால்தான் உனக்கு
புன்னகையே வரும் என்று!
படைத்தவனுக்குச் சொல்லலாம் என்றிருந்தேன்
உனக்கு பார்க்கக் கற்றுக்கொடுக்க!
பிறகுதான் தெரிந்தது – என்னைத்தவிர
எல்லோரையும் பார்க்கிறாய் என்று!
பைங்கிளிக்குச் சொல்லலாம் என்றிருந்தேன்
உனக்கு –
பேசக் கற்றுக் கொடுக்க!
பிறகுதான் தெரிந்தது – என்னைத்தவிர
எல்லோரிடமும் பேசுகிறாய் என்று!
ஏன்?
என்னைக் கண்டதால் மயக்கமா?
உன்னை இழந்து விடுவாய் என்ற
தயக்கமா?Saturday, October 22, 2011

அன்புள்ள ஐயா.......


மறக்க முடியாத பழைய நினைவுகளில் மிக முக்கியமானது பள்ளிக்கூட வாழ்க்கை. எதுவும் தெரியாத விடலைப் பருவம். எல்லாமே விளையாட்டு. படிப்பில் விளையாட்டில் ஆரோக்கியமான போட்டி. நண்பர்களுக்கிடையே இருந்த ஒற்றுமை. வகுப்புத் தோழிகளிடத்து சுதந்திரமாய்ப் பேசமுடியத வெட்கம், பிடித்த ஆசிரியர்கள் என்று எத்தனையோ பட்டியலிடலாம்.

என் கிராமத்தில் ஆரம்ப பாடசாலை மட்டுமே இருந்தது. உயர்நிலை பாடசாலைக்கு கிட்டத்தட்ட மூன்று கி.மீ. நடந்து போகவேண்டும். பெரும்பாலும் என்னோடு படித்த எல்லா மாணவர்களுமே நடந்துதான் போவோம். கிராமத்தில் அமைந்த பள்ளிக்கூடம் என்றாலும் மிகப்பரந்த பரப்பளவைக் கொண்டது அது. நன்கு வளர்ந்த புங்க மரங்களும், அது தரும் நிழலும் பள்ளி வளாகத்தையே குளுகுளு என்று வைத்திருக்கும்.

ஆறாம் வகுப்பில் புதிதாய்ச் சேர்ந்தவுடன் எங்களைப்பற்றி ஆசிரியர்களுக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லாத காரணத்தால் இன்னும் சரியாக அறிமுமாகாமலேயே இருந்தோம். சுற்றுபுற எல்லா ஊர்களிலிருந்தும் மாணவர்கள் வந்து சேர்வதால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமிருக்கும். அதனால் ஏ, பி, சி. டி. என பிரிவுகள் இருக்கும். எங்கள் ஊர் மாணவர்கள் எல்லோருமே ஒரே பிரிவில் (அதவது ‘ஏ’) இருந்தோம். முதல் மாதாந்திரத் தேர்வு வந்தது. நானும் என் (எங்களூர்) நண்பர்கள் மூன்று பேரும் முதல் நான்கு இடங்களைத் தக்கவைத்துக் கொண்டோம்.

இப்போது ‘ஏபிரிவு தவிர்த்த மற்ற வகுப்பாசிரியர்கள் தங்கள் வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்கள் இல்லை என்று வாதாடி ‘ஏ பிரிவில் இருந்த எங்களைப் பிரித்து ஆளுக்கொருவராக தங்கள் வகுப்பிற்கு எடுத்துக்கொண்டனர். நான் ‘சிபிரிவிற்கு மாற்றப்பட்டேன். அவர்களின் வாதம் சரியென்பதை அடுத்த காலாண்டுத்தேர்வு நிரூபித்தது. நானும் என் ஊர் நண்பர்களும் அவரவர்கள் வகுப்பில் முதல் ரேங்க்கை யாருக்குமே விட்டுக்கொடுக்கவில்லை.

இப்படித்தான் வகுப்பாசிரியர்களுக்கும் எங்களுக்கும் நெருக்கம் அதிகமானது. நான்றாகப் படிக்கும் பிள்ளைகள் என்றாலே ஆசிரியர்களுக்கும் பிடிக்கும் தானே! ஆறாம் வகுப்பில் எனது வகுப்பாசிரியர் எனது தமிழாசிரியை திருமதி. மனோன்மணி டீச்சர். ஏழாம் வகுப்பிலும் அவரே தமிழாசிரியை. எட்டு, ஒன்பதாம் வகுப்புகளில் இந்த தமிழாசிரியரின் கணவர்தான் எங்களுக்கு தமிழாசிரியர். இப்படி இவர்களின் அன்புக்கு பாத்திரமான நான் பிற்காலத்தில் அவர்களின் குடும்ப நண்பராகவும் ஆனேன்.

அந்தக்காலகட்டத்தில் அவர் என்க்கு எழுதிய கடிதம் இது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்பற்றுப் போயிருந்த நான் கடந்த மாதம் ஒரு திருமணத்திற்காக சொந்த ஊர் போனபோது அவரைச் சந்திக்கப் போனேன். அவர் மரணமடைந்து ஓராண்டாகி விட்டது என்ற துக்கச் செய்திதான் எனக்குக் கிடைத்தது. ஏதோ வேலை நிமித்தம் வெளியே சென்றிருந்த எனது ஆசிரியையையும் பார்க்க முடியவில்லை. எனக்கு மிகவும் நெருங்கிய தோழியாக இருந்த அவர்களின் மகளையும் பார்க்க முடியவில்லை.
வீட்டிற்கு வந்தபின் தொலைபேசியின் வாயிலாக உரையாடியபோது என்னை மீறிய துக்கத்தால் அழுதேவிட்டேன். பழைய நினைவுகளைக் கிளறியபோது அவர் எனக்கு 1995 ம் ஆண்டு எனக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. இதை அவரின் நினைவாக உங்களுடன் பகிர்ந்து என் நினைவுகளை மீட்டெடுக்கிறேன்.  

அன்புள்ள கவிப்ரியனுக்கு,

உன் கடிதம் கிடைத்தது. செய்திகள் அறிந்தோம். எல்லோரும் பெருமகிழ்ச்சி அடைந்தோம். வேலையின்றி வேதனையுற்ற உனக்கு விடியல் உண்டாகாதா என்று வருந்திய எங்களுக்கு உன் கடிதம் பாலை வார்த்து சந்தோஷத்தை அளித்தது. இப் பணியினை தட்டாமல் தொடர்ந்து செய்வதற்கு இறையருளை வேண்டுவதோடு, எங்கள் மனமார்ந்த ஆசியினையும் உன் மேல் பொழிகின்றோம். என்றும் மகிழ்ச்சி வளர, வாழ்வு வளம் பெற வாழ்த்துகின்றோம்.

இனியாவது வேறு வேலையில் நாட்டம் கொள்ளாமல் செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து தொழில் செய்து வாழ்வில் முன்னேற முயற்சி செய். மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிறுவனம் எனில் பிற்காலத்தில் நல்ல பல பலன், பயன்கள் உண்டாகும். ஆதலால் கவனமாக இருக்கவும். பணியில் தன்னிலை ஏற்பட்டபின் குடும்பத்தை அமைத்தல் நல்லது. அதுவரை சிரமத்தைப் பொறுத்தல் சாலச்சிறந்தது.
உன் தம்பி வந்திருந்தான். அவன் மூலமும் உன் நிலையை அறிந்தேன். அவனும் நாங்கள் விசாரித்ததைச் சொல்லியிருப்பான் என்று எண்ணுகிறோம்.

மற்றபடி இங்கு வீட்டில் அனைவரும் நலம். அதியனின் நண்பர்களும் சுகமே. லட்சுமி 12.04.1995 ம் நாளன்று தென்னார்க்காடு மாவட்டம் சங்கராபுரத்தில் வேலையில் சேர்ந்துள்ளான். அரசுப் பணிதான். சந்துருவுக்கு இன்னும் EB ல் வேலை கிடைக்கவில்லை. அன்றியும் 05.05.1995 வெள்ளிக்கிழமையன்று வேலூர் வாசவி கல்யாண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது. காஞ்சனாவின் அண்ணன்களும் பத்திரிகை கொடுத்தனர். உனக்கும் கொடுத்திருப்பார்கள் என நம்புகிறேன். நேரம் காலை 9 -10 மணி.

மேலும் உன் ஆசிரியை அவர்கள் S.S.L.C. விடைத்தாள் திருத்த திருவண்ணாமலை சென்றுள்ளார். தொரப்பாடியில் சுந்தர், தேன், சந்தான கிருஷ்ணன் அவர்கள் வீட்டில் அனைவரும் நலம். மற்றபடி விசேடம் இருப்பின் அறிவிக்கவும்.
பிறபின்,

இன்னணம்
உனது ஆசிரியர்.

உங்களுக்காக ஒரு வித்தியாசமான வலைப்பூ சின்னு ரேஸ்ரி  போய்த்தான் பாருங்களேன்!


Thursday, October 20, 2011

பேனா நண்பர்கள்


அன்புள்ள நண்பர் கவிப்ரியனுக்கு,

பாலசண்முகம் எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தினர்களும் இனிது நலம். உமது குடும்பத்தினர் நலன் அறிய ஆவலாய் உள்ளேன்.

நீர் அனுப்பிய புத்தகப் பார்சலைப் பெற்றுக் கொண்டேன். மிக்க மகிழ்ச்சியுடன் என் சார்பாகவும், என் துணைவியார் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக உம்மை மட்டும் மறக்கவில்லை. நட்பின் இலக்கணத்திற்குரிய விளக்கம் தெரியாதவர் மூலம் கிடைத்த உமது நட்பு இன்றுவரை நீடித்து, பிற்காலத்திலும் தொடரும் இந்த நட்புக்காக உன் நண்பனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

குடியிருக்க சொந்தமாக வீடு கட்டிக்கொண்ட செய்தி எனக்கு மிக்க மகிழ்ச்சியினை அளித்தது. புத்தகத்தை காலதாமதமாக வாங்கி அனுப்பினாலும் அது எனக்குக் குறையில்லை. புத்தகங்களுக்காக செலவழிப்பதில் நான் எப்போதும் தயக்கம் காட்டியதில்லை. இனிமேலும் அப்படியே! நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பன் அல்லவா?

உங்களின் பேனா நண்பர்கள் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்! பொதுவாக பெண் பேனா நண்பர்களின் நட்பு நீடிப்பதில்லை என்ற அனுபவம் எனக்கும் உண்டு. ஆனால் இதற்காக நாம் ஆதங்கப்படுவதில் அர்த்தம் இல்லை. பொதுவாக எதிரின ஈர்ப்பு என்ற அடிப்படையில்தான் பெண் பேனா நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை கடிதத் தொடர்பு கொள்கிறார்கள் என்பது என் கருத்து.


இதற்கு மாறாக திருவண்ணாமலையிலிருந்து 58 வயது பானுமதி என்ற சகோதரி கடந்த 20 ஆண்டுகளாகவும், ஆர். வாசுகி (வயது 26) கடந்த 16 ஆண்டுகளாகவும் என்னுடன் கடிதத்தொடர்பு கொண்டு வருகிறார்கள். ஆர். வாசுகி கோவில்பட்டியைச் சேர்ந்தவர். கடந்த மே மாதம் ஒரு இராணுவ வீரருக்குத் துணைவியாகியும் என்னுடன் கடிதத்தொடர்பை நீடித்து வருகிறார்.

அதாவது நமது நல்ல எண்ணங்கள், சிந்தனைகளுக்கு உகந்த பேனா நட்பு என்பது ஆண், பெண் இருவரிடமும் எந்நாளும் நீடிக்கும். திருவள்ளூரில் குடியிருக்கும் ஆர்.வாசுகியின் அக்கா மணிமேகலை குடும்பத்தினர் கடந்த ஆகஸ்ட் மாதம் எனது இல்லம் வந்து சென்றனர். இவர்கள் திருமணம் கடந்த 97 ஆகஸ்டில் கோவில்பட்டியில் நடந்தபோது குடும்பத்துடன் சென்று வந்தேன்.

பணத்தை மட்டுமே குறியாக கொண்டவர்களுக்கு உண்மை நட்பின் அர்த்தம் விளங்காது. பேனா நண்பர்களை நேரில் சந்தித்தது, அவர்கள் என்னை சந்திக்க வருவது போன்ற விஷயங்களில் நான் பணச்செலவை எப்போதும் ஒருபொருட்டாக கருதியதில்லை. மார்க்சிய சிந்தனையாளர் முகவை ஜெகன் என்பவரும், ஜூ.வி.ஆசிரியர் குழுவில் ஜெ.வி.நாதனும் என் மீது தனி மதிப்பு கொண்ட நண்பர்கள்.

போராட்டமே வாழ்க்கை எனப் பழகிப்போன எனக்கு சில சமயம் ஏற்படும் மன உளைச்சல்கள், குமுறல்களுக்கு அளவே இல்லை. போராட்டத்திற்கான சூழ்நிலைகள் என்பதை எப்போதும் என் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். சில சமயம் அதிகமாக உணர்ச்சிவசப்படுவதென்பது எனது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. எந்த அளவுக்கு பொறுமையைக் கடைபிடிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு பொறுமையைக் கடைபிடித்தே வருகிறேன். அதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா?

கடந்த இரு வருடகாலமாக பேசாமலிருந்த உன் நண்பன் தொழிற்சங்க தேர்தலுக்கு இருவாரம் முன்பு, இரு நண்பர்களுடன் அணுகி, என்னிடம் செய்த தவறுகளுக்கு மன்னிக்க வேண்டுமேனக் கூறினான். இது தேர்தல் ஸ்டண்ட் எனத் தெரியவந்ததும், நான் மன்னிப்பதாக் கூறினேன். கடந்தமுறை இவனது வெற்றியை நிர்ணயித்தது எனது நட்புதான் என்பதை உணர்த்துவது போல இந்தத் தேர்தல் அவனுக்கு தோல்வியைக் கொடுத்தது.

தொழிற்சங்க ஈடுபாடு என்பது வாழ்பவனுக்கு வசதியைத் தேடித்தருவது. ஆனால் வாழ வழியில்லாதவனுக்கு எதையும் செய்ய வக்கற்ற தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தவிர்த்து, நமது கிராம அடித்தள மக்களின் உரிமைப் போராட்டங்களில் உன்னை ஈடுபடுத்திக்கொள் என்று மட்டும் அவனுக்கு அறிவுறை கூறினேன். அடிக்கடி அவனாக வந்து என்னிடம் பேசினாலும், அவன் தவறுகளை உண்மையாக உணரும் காலம் வரை இவனுடன் முகஸ்துதியாகத்தான் நான் பேசியாக வேண்டும்.

கொட்டினால்தான் தேள் என பயப்படுகிறார்கள், இல்லையென்றால் பிள்ளைப்பூச்சியென மிதிக்க நினைக்கிறார்கள். என் தன்மானம், சுயமரியாதைக்கு இழுக்கென்றால் எனது உயிரே போனாலும் கூட, பின்வாங்காமல் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள அஞ்சமாட்டேன். மற்றவை உன் மடல் கண்டு! முருகேசனுக்கு எனது விசாரிப்பினைத் தெரிவிக்கவும்.

என்றும் அன்புடன்,
பாலசண்முகம்.

Tuesday, October 18, 2011

கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் முதல்வர்‘சாத்தான் வேதம் ஒதுகிறதுஎன்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அந்த வார்த்தைகளை முதல்வர் நிஜத்தில் நிரூபித்திருக்கிறார். வழக்குகளை சந்திக்க பயந்து ஓடுகிறார்கள் என்று தி.மு.க.வினரைப்பார்த்து எள்ளி நகையாடும் முதல்வர் தனது வழக்குக்காக இதுவரை எத்தனை முறை வாய்தா வாங்கியிருக்கிறார்? எத்தனை சாக்கு சொல்லியிருக்கிறார்? எப்படியெல்லாம் தப்பித்து வருகிறார் என்பதைப் பார்த்து வியப்புதான் மேலிடுகிறது. எப்படியும் கின்னஸ் சாதனை பெற்றே தீருவது என்று முடிவு செய்துவிட்டார் போலும்.

மக்கள் ஏமாளிகள் என்று மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. மறதி மிக்கவர்கள் மக்கள் என்பதை எல்லா அரசியல் கட்சிகளுமே புரிந்து வைத்திருக்கின்றன. முதலில் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுப்பார்த்தார். நடக்கவில்லை. நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப்பின் முதல்வரின் விருப்பத்துக்கே தேதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியும், பின் தேதியை முதல்வர் தரப்பு அறிவித்ததும், இப்போது பாதுகாப்பு இல்லை என்ற சப்பைக் காரணங்களைக் கூறி நழுவப் பார்ப்பதும் முதல்வருக்கு அழகா என்ன? நீதி மன்றத்துக்கு கட்டுப்படாத இவர் எப்படி தி.மு.க.வினரை விமர்சிக்கிறார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. தன் முதுகில் அழுக்கை வைத்துக்கொண்டு எப்படி இவர் ஊழல் பற்றி வாய் கிழியப் பேசுகிறார்?

இன்றைய தினமலரின் செய்தியைப் பாருங்கள்................

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பாதுகாப்பு தொடர்பான பிரச்னை முடியும் வரை தான் ஆஜராக வேண்டிய தேதியை ஒத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான உத்தரவு நாளை ( புதன்கிழமை ) பிறப்பிக்கப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அனைத்து சாட்சிகளையும் விசாரித்து முடித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வலியுறுத்தினார். இதையடுத்து, ஜெயலலிதா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், ஜெயலலிதா தரப்பில், வீடியோ கான்பரன்ஸ் அல்லது ஸ்டேட்மென்ட் மூலம் பதிலளிப்பதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை கோர்ட் நிராகரித்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் சென்ற ஜெயலலிதாவுக்கு, அக்., 20ம் தேதி கண்டிப்பாக பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும். "இசட்' பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனை தொடர்ந்து பெங்களூரூ கோர்ட்டில் நடந்த விசாரணைகளில், ஜெயலலிதா பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெ., வழக்கறிஞர் கந்தசாமி, கர்நாடகா போலீஸ் டி.சி.பி., ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரப்பன அக்ரஹார சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் அனைத்து வசதிகளும் உள்ளன என நீதிபதி உத்தரவிட்டார். 

இதற்கிடையில் இன்று ஜெ,, தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் தமது பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் முழு அறிக்கை வந்ததும் நான் ஆஜராகிறேன். பாதுகாப்பு தொடர்பான விஷயம் குறித்து தமிழக அரசுக்கு இதுவரை எந்தவொரு விவரமும் வந்து சேரவில்லை. இதுவரை இந்த விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கோரியுள்ளார். கர்நாடக அரசின் வக்கீலிடம் விளக்கம் கேட்டு இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கிறோம் என நீதிபதிகள் கூறி விட்டனர். நாளை இந்த மனுமீதான உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜெ., வரும் 20 ம் தேதி (நாளை மறுநாள் ) ஆஜராவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோர்ட்டில் கோரிய போது இது வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.