மறக்க முடியாத சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறக்க முடியாத சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 மார்ச், 2012

தவமாய் தவமிருந்து... - மறக்க முடியாத சினிமா

வாழ்க்கை ஒரு விசித்திரமான வாத்தியார்!
அது பாடம் நடத்திவிட்டு பரீட்சை வைப்பதில்லை. பரீட்சை முடிந்த பிறகே பாடம் கற்றுக்கொடுக்கிறது!’ – என்பார்கள். அப்படி இழந்த பிறகே உணர்கிற உறவுகளின் அருமையை, இருக்கிறபோதே மதிக்க, பாதுகாக்க, கொண்டாட வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசுகிற திரைப்படம் இது!
மன்னர்களின் கதைகளையும் மாவீரர்களின் கதைகளையும் சொல்லி வந்த சினிமாவில், முதல் முறையாக ஒரு பலவீனமான ஏழைத் தகப்பனின் கதை. தாயின் பெருமையை மட்டுமே பெரிதாகப் பேசும் உலகத்தில், ஒரு தகப்பனின் பேரன்பினைப் பதிவு செய்யும் முயற்சி, ‘தவமாய் தவமிருந்து’!
ஒரு சாதாரண மனிதனின் முப்பந்தைந்து வருட வாழ்க்கை… அதுவும் மூன்றரை மணி நேர சினிமா. காமெடி டிராக், அதிரடி ஆக்ஷன், திடீர்த்திருப்பங்கள், குத்துப்பாட்டு, குழு நடனங்கள் ஏதும் இல்லாத படம்.

கிராமத்து நடுத்தர வர்க்கத் தகப்பனாக ராஜ்கிரண். ஏகப்பட்ட கஷ்டநஷ்டங்களுக்கு நடுவே நகர்கிற குடும்பம். வாழ்க்கை முழுக்க மகன்களின் நல்வாழ்வுக்காக வட்டிக்குக் கடன்வாங்கிச் செலவழித்து, கடனுக்கு வட்டி கட்டவே வாழ்க்கையோடு போராடும் தகப்பன். தீபாவளிச் செலவு, பாலிடெக்னிக் ஃபீஸ் என ஒவ்வொரு கட்டத்திலும் அல்லாடுகிற, அவமானம் சுமக்கிற, கெஞ்சிக்கூத்தாடி கொண்டுவந்து கொட்டுகிற ஒரு மனிதன்.
மூத்த மகனுக்குத் திருமணமாகிறது. வருகிற மருமகளால் குடும்பத்தில் சிக்கல். மூத்த மகன் தனிக்குடித்தனம் போகிறார். இன்னொரு பக்கம் இன்ஜினியரிங் படிக்கும் சேரன், தன் சக மாணவி பத்மப்ரியாவுடன் காதலாகி, எசகுபிசகான ஒரு சந்தர்ப்பத்தால் கர்பமாகிற காதலியுடன் ஊரை விட்டே ஓடிவிடுகிறார்.
அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகே ராஜ்கிரணுக்குத் தெரியவர, அப்போதும் மகனை மன்னிக்கிறார். தங்களுக்காகவே வாழும் தாய்-தகப்பனுக்கு வாழ்வின் எல்லா சந்தோஷங்களையும் தர ஆசைப்படுகிறார் சேரன் என வாழ்வின் ஒவ்வொரு ப்பரிமாணத்தையும் விலாவரியாய் விவரிக்கிற கதை, ஒரு சுடுசொல் தாளாமல் உயிரை விடுகிற தனிமனிதனின் வரலாறாக முடிகிறது.
‘ஒரே ஒரு ஊருக்குள்ள’ பாடலில் கிராமத்து அப்பாவும் அம்மாவும் தங்களின் இரண்டு மகன்களுடன் பாசமாக சைக்கிளில் பயணிக்கும்போதே, நாமும் அவர்களின் வாழ்க்கைச் சைக்கிளில் தொற்றிக்கொண்டுவிடுகிறோம். 

‘உங்க பையன் நேத்து விபச்சாரக் கேஸ்ல மாட்டிக்கிட்டான்’ என்பதைக் கேட்கும்போது கனவுகள் நொறுங்கிக் கண்ணீர் விடும்போதும், அர்த்த ராத்திரியில் காதலியுடன் ஓடிப்போகக் கிளம்புகிறான் இளைய மகன் என்பது புரியாமல், ‘கோயம்புத்தூர்ல ஒரு இன்டர்வியூப்பா’ என அவன் சொல்லும் பொய்யை நம்பி, திருநீறு பூசி ஆசிர்வதித்து அனுப்பும் போதும், பிள்ளைகளுக்காகவே வாழும் அப்பாவிப் பெற்றோரின் உலகம் நம் நெஞ்சில் அறைகிறது!
வட்டிக்கடைக்காரரிடம் கூனிக் குறுகி நின்றுவிட்டு, பணத்துக்கு ரெடி பண்ணியதும் கண்ணீர் பொங்கக் கண்கள் சிரிக்க நடந்து வரும்போது, ஆயிரமாயிரம் ஏழைத்தகப்பன்களைக் கண்முன் கொண்டுவருகிற ராஜ்கிரணின் ‘வாழ்நாள் சாதனை’ இப்படம்! ஓடிப்போன மகனுக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிந்து தேடி வந்து அந்த வீட்டில் அமைதியாக உட்கார்ந்திருப்பாரே… அந்த ஒரு காட்சி போதும். பரிதவிக்கும் பார்வையுடன் ஒரு சித்தரைப் போல நிமிர்ந்து, ‘ஏம்ப்பா இப்படிப் பண்ணினே? எனக் கேட்கிற காட்சி, க்ளாஸ்!
‘எம் புள்ளைகளுக்கு நா ஏதோ குறை வெச்சுட்டேன் போலிருக்கு, அதான் ரெண்டுபிள்ளைகளுமே என்கிட்ட தங்கலை. நீயாவது உம் பிள்ளைக்கு அந்தக்குறை வராம பாத்துக்கோப்பா’ என்பது போன்ற இயல்பான வசனங்களைத்தான் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன தூணாக!
அப்பாவைப்பற்றின படம்தான் என்றாலும், அவரின் முதுகெலும்பாக வரும் அப்பாவி மனைவியாக அசத்தி இருக்கிறார் சரண்யா. ‘ஏம், உம் பொண்டாட்டி மட்டுந்தேன் அல்வா திம்பாளாக்கும்’ என மருமகளை எரிச்சலாகப் பார்ப்பது போலிருந்தாலும், வகுத்துப் பிள்ளைக்காரிக்குக் கடைப் பலகாரம் குடுத்தா ஒத்துக்காதுப்பா’ என முடிக்கும்போது, தாய்மையின் கரிசணமே மேலெழுகிறது.

சென்னை வாழ்க்கையில் சிரமமான பொருளாதாரத்தில் கர்பம் சுமந்து கஷ்டப்படும் பெண்ணாக வரும்போது, கலங்கடிக்கிறார் பத்மப்ரியா. படத்தில் காமெடி இல்லாத குறையைத் தீர்ப்பது மூத்த மருமகளாக வரும் புதுமுகம் மீனா. முகச்சுழிப்பும், எதற்கெடுத்தாலும் சண்டைக் கோழியாக மல்லுக்கு நிற்கும் வேகமும், முணுக்கென்றால் ஹஸகி வாய்சில் முனங்குகிற குரலும்… செம முறுக்கு! ராஜ்கிரணின் அச்சகத் தொழிலாளி அப்பாவி அழகராக பாசமும் விசுவாசமுமாக வளையவரும் இளவரசுவின் காரெக்டர், சமூக அமைப்பில் பாடப்படாத நாயகர்களின் அடையாளம்!
படம் முழுக்க உணர்வுகளின் புயல் மழையாகக் காட்சிக்குக் காட்சி நம்மை நனைத்தெடுக்கிற விதத்தில் கம்பீரமாக ஜெயித்திருக்கிறார் இயக்குனர் சேரன். ஆனால் நடிகர் சேரன், முதல் வகுப்பில் பாஸாக போராடவேண்டும். அழுகிற போதெல்லாம் முகத்தை மூடிக்கொள்வது, எம்.ஜி.ஆர். காலத்து ஃபார்முலாங்கோவ்! இன்ஜினியரிங் படித்த மாணவர் சென்னையில் பிழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. முக்கால் காலுக்கு மடித்து விடப்பட்ட பேன்ட்டும், கரச்சீஃப் கட்டிய தலையுமாகக் கைவண்டி இழுப்பதும்கூட அதே எம்.ஜி.ஆர். காலத்து சினாமா!

கால மாற்றங்களைப் பதிவி செய்ய இயக்குனருடன், மேக்கப் மேன், காமிரா மேன், ஆர்ட் டைரக்டர் என ஒரு கும்பலே கூடி மிகக் கடுமையாக உழைத்திருக்கிறது. நகரத்தில் சேரன்-பத்மப்ரியாவின் வாழ்க்கையைக் காட்டும்போது அரை இருளிலேயே பயணிக்கிற எம்.எஸ்.பிரபுவின் கேமராவே பாதி கதையைச் சொல்கிறது. ஒரு அச்சகம் ஒவ்வொரு காலத்திலும் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதைக் காட்டுவதில் சபாஷ் பெறுவது ஆர்ட் டைரக்டர் ஜே.கே!
‘ஒரை ஒரு ஊருக்குள்ளே’ பாடலில் ஸ்கோர் பண்ணுகிற சபேஷ்-முரளி, இடைவேளைக்குப் பிறகு வருகிற எட்டு நிமிட ‘திரன திரன தீம்திரன’ எபிசோடின் பின்னனி இசையும், அந்தக் குதூகலக் காட்சிகளும் சிலிர்ப்பூட்டும் சுக ராகம்.
வழக்கமான தமிழ் சினிமாவின் கதை சொல்லும் பாணி இதில் இல்லை. துள்ளவைக்கிற முடிச்சுகளோ, தூக்கிவாரிப்போடும் திருப்பங்களோ கொண்ட காட்சி அமைப்புகள் எதுவும் இல்லவே இல்லை. ஒரு மென்மையான நீரோடை மாதிரி அதன் போக்கில் மிக மெள்ளப் பயணிக்கிறது படம். அடுத்தடுத்து அடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அத்தனையும் யதார்த்த வகை. கூடவே படம் நீளமோ என்கிற அலுப்பும் அவ்வப்போது ஏற்படுகிறது.


இருந்தாலும்… சிதையும் கூடாக, சிதறடிக்கப்படும் கனவாக, நிறைவேறாத பிரார்த்தனையாக… இப்படித்தானே இருக்கிறது இங்கே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எனத் திரையரங்கில் இருந்து வெளியேறுகிற கசிந்த விழிகள் சொல்கின்றன, இந்தப் படைப்பின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும்.
இதுதான் சேரனின் தவத்திற்குக் கிடைத்திருக்கும் நல்வரம்!
நன்றி; ஆனந்தவிகடன் 18.05.2005       


வெள்ளி, 28 அக்டோபர், 2011

‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ - விகடன் விமர்சனம்

ஆனந்தவிகடனில் வந்த விமர்சனம்:

‘உல்லாச உலகம் எனக்கே சொந்தம்’ என விட்டேத்தியாக அலையும் கணவனாக தங்கர்பச்சான்; அவரை வழிக்குக் கொண்டுவர தவிதவிக்கும் பொறுப்பான மனைவியாக நவ்யா நாயர்; புரியாத வயசில் மணி மணியாக இரண்டு பெண் குழந்தைகள்... இவர்களுக்குள் நடக்கிற பாசப்போராட்டம்தான் படம்.

‘ஷிண்டா விஸ்டயாய ஷியாமளா’ என்கிற மளையாளப் படத்தை நேர்த்தியாகவே தழுவியிருக்கிறார் தங்கர்.

கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியாராக இருந்து கொண்டு, ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு, தண்ணி-சீட்டாட்டம் என செட் சேர்த்துக்கொண்டு அலைகிற தங்கர்பச்சானைத் திருத்த, அவரைப் பெற்றவர்களும், மாமனாரும் முட்டி மோதுகிற காட்சிகளில் காமெடியும் கண்ணீரும் சரிவிகிதக் கலவை.

இவரைத் தருத்த நினைக்கிற ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டலாக அட்வைஸ் தர... அதன்படி, வேண்டா வெறுப்பாக சபரிமலைக்கு மாலை போடுகிறார் தங்கர். ‘திருந்திட்டானப்பா’ எனக் குடும்பமே சந்தோஷம் அடைகிறது. ஆனால் ‘கொண்டதே கோலம்’ என்று ஒரேயடியாக தங்கர், தீவிர சாமி பக்தராக மாறிவிடுவது எதிர்பாராத திருப்பம்.

குத்திக் காட்டுகிற உலகத்திலிருந்து தப்பிக்கிற யுக்தியாக ஒரேயடியாக ஆன்மிக போர்வை போர்த்திக்கொள்ளும் மனுஷர், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி, ஊர் ஊராக சுற்றித்திரிகிறார்.

இங்கே பரிதவித்து நிற்கும் நவ்யாவையும் அங்கே கால் போன போக்கில் நடக்கிற தங்கரையும் மாறி மாறிக் காட்டிக்கொண்டே வருகிற ஒரு பாடலில், வெறும் காட்சிகளாலேயே இரண்டு மூன்று தடவை நம் கண்களைக் கசிய வைத்துவிடுகிறார்கள்.

பின்னர் பொறுப்பை உணர்ந்து திருந்தி, குடும்பத்தைத் தேடிவரும் தங்கரை, பழுக்க காய்ச்சிய இரும்பாக மாற்றி சுற்றங்கள் சுட்டெரிக்க... அன்பை மட்டுமே பொழிந்த மனைவி கூட மனதைக் கல்லாக மாற்றிக்கொண்டு அம்பாகக் குத்த... தொடர்ந்து அரங்கேறுகிற கிளைமாக்ஸில் பதை பதைப்பு, பரிதவிப்பு, பரவசம் என உணர்ச்சிகள் மாறி மாறி வீசுகின்றன.,


‘தேனு... தேனு...’ என நவ்யாவிடம் குழையும் போதும், உண்மை உணர்ந்து கதறும் போதும் நடிகர் தங்கர், நம் மனசில் இடம் பிடிக்கிறார். ஆனால் 60-களில் தமிழ் சினிமா பாத்திரங்கள் பேசிய பாணியில் இழுத்து இழுத்து அவர் வசனம் பேசுவதுதான் லேசாக நெருடுகிறது.

ரொம்ப நாளைக்குப் பிறகு ஸ்கூலுக்குப் போகிற தங்கர்பச்சானை வழியில் நண்பர்கள் வசியம் பண்ண, சட்டென மூடு மாறி சரக்கடிக்க அவர் கிளம்புவதும், போகிற இடம் சுடுகாடு என்றுகூடத் தெரியாமல் ஜமுக்காளம் விரித்து பாட்டிலைத் திறந்துவிட்டு அவஸ்தைப்படுவதுமாக முன்பாதி காமெடி ஜில்லாக் கூத்து.

அய்யப்பன் கோயிலில் பொசுக்கென்று அவர் முழுநேர ஆன்மிகவாதியாக மாறுவதற்கு வலுவான காரணம் காட்டப்படவில்லை. அதே போல் இரண்டாம் பாதியில் காட்சிகளாலேயே விளக்கியிருக்கக் கூடிய சில இடங்களில் வளவள வசனங்கள்.

துலக்கி வைத்த குத்துவிளக்காக நடிப்பிலும் தோற்றத்திலும் ஜொலிக்கிறார் நவ்யா நாயர். கனன்ற் வரும் கோபத்தைத் தொண்டைக் குழிக்குள்ளேயே புதைத்துக்கொண்டு  கணவனைத் திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையோடு அவர் தொடர்ந்து போராடுகிற காட்சிகளில் பிரமாதமான முகபாவங்கள்.

ஆபாச ஆக்ஷன் மசாலா இல்லை; வழக்கமான காதல் – பழிவாங்கல் இல்லை! ஆனாலும் அழுத்தமான கதையிலேயே அசத்திவிட்டார்கள்.

மார்க் – 100 / 44

இசை; இளையராஜா
இயக்கம்; தங்கர்பச்சான்
தயாரிப்பு; தங்கர்பச்சான்

திரைப்படம் வெளியான ஆண்டு; 2005.

வியாழன், 27 அக்டோபர், 2011

‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ - மறக்க முடியாத சினிமா

உங்கள் தந்தை ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்து, அரைகுறை ஆடைகளுடன் அல்லது கோவணத்துடன் நீங்கள் படிக்கும் பள்ளியில் சக மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் பார்க்க உங்களிடம் வந்து பேசினால் உங்கள் நிலை என்னவாயிருக்கும்?

குடும்பத்தை நிர்வகிக்க வக்கில்லாமல், சம்பாதிக்க துப்பில்லாமல், உழைப்பதற்கு உடலை வளைக்காமல் வெட்டியாய் எத்தனை நாளைக்கு வீட்டில் உட்கார்ந்து சாப்பிட முடியும்? பாட்டன் சம்பாதித்த நிலத்தில் பாடுபட்டாலே போதும். ஆனால் எது தடுத்தது?

இன்றுவரை அதன் காரணம் தெரியவில்லை. ஆறு பிள்ளைகள் வரிசையாக. உடுக்க துணி இல்லை. வயிறார உண்ண உணவில்லை. படிக்க புத்தகங்கள் இல்லை. எதைப்பற்றியுமே கவலைப்படாமல் ஒரு மனிதரால் இருக்க முடியுமா என்ன?

வீட்டில் எந்த நேரமும் சதா சண்டை. மனைவியைப் போட்டு அடித்தல், தடுக்கப்போகும் பிள்ளைகளுக்கும் அடி. இரவிலே வயலுக்கு நீர்பாய்ச்ச செல்லவேண்டியிருந்தால் சின்னஞ்சிறு பிள்ளைகளை துணைக்கு அழைத்துப் போவது! வர மறுத்தால் அடி. அப்படியே தனியே போனாலும் கதவை வெளிப்புறம் பூட்டிவிட்டுப் போவது! இரவில் சிறுநீர் கழிக்க அவஸ்தைப்பட்ட குடும்பத்துக்கு விடிவுகாலம்?

எப்படியோ மனம் வந்து வாங்கிக்கொடுத்த புதுச்செருப்பை பள்ளியில் யாரோ ஒருவனிடம் திருட்டு கொடுத்துவிட்டு வீட்டிற்கு பயந்து பயந்து போய் நிலைமையைச் சொல்லியும், தலைகீழாய் கட்டிவைத்து அடித்த கொடுமையும் உங்களில் யாருக்காவது நடந்தது உண்டா?

தினமும் அடி உதைகளுக்கிடையே ஒவ்வொரு வேளையும் பிள்ளைகளின் பசி போக்க எப்படியோ சமாளித்து, நாள் முழுக்கவேலை செய்து, பிள்ளைகளைப் படிக்க வைத்து ஆளாக்கிய தாயின் தியாகத்தை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

இருக்கலாம்! நிறைய இருக்கலாம். பொறுப்பற்ற ஆண்வர்க்கத்தினால் சீரழிந்து போன குடும்பங்கள் எத்தனையோ இருக்கலாம். குழந்தைகளைப் பெற்றுவிட்டால் மட்டும் போதுமா? அவர்களை வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்க வேண்டிய கடமையிலிருந்து ஆண்வர்கம் விலகிப்போனால் அந்தக் குடும்பத் தலைவி படும்பாட்டை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறீர்களா? பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறீர்களா?

இன்னும் நிறைய சொல்ல்லாம். இதையெல்லாம் அனுபவித்தவன் நான்தான். உயிரோடு எதற்கு செத்துத் தொலைத்தாலே நிம்மதி என்று ஒட்டு மொத்த குடும்பமே நினைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! மறைந்து போனவர்கள் பற்றி தவறாகப் பேசக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் என்னால் தவிர்க்க முடியவில்லை. என் தாய்க்குத் தெரிந்தால் தடுப்பாரோ என்னவோ!?


தந்தைப் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தோம் நானும் என் சகோதரர்களும். 'அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு', ஆனால் எங்களுக்கு....? படிப்பைக்கூட பள்ளிக்கூட வாழ்க்கைக்கு மேல் தொடர முடியவில்லை. உறவுகள் எல்லாம் எள்ளி நகையாட எப்படியெல்லாமோ துன்பங்களை அனுபவித்தோம். சந்தோஷமான குடும்பங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏக்க்கமும் பொறாமையும் மேலோங்கும்.

கையில் காசுத்தட்டுப்பாடு வரும்போதேல்லாம் வீட்டிலுள்ள எதையாவது விற்பது... வீடுகட்ட சொந்த நிலத்தில் செங்கல் சூளைபோட்டு வைத்திருக்க, அதையெல்லாம் விற்று ராஜவாழ்க்கை. காலையில் டவுனுக்குப் பொனால் சிற்றுண்டி பிறகு ஒரு சினிமா, பின் மதிய உணவு அப்புறம் ஒரு சினிமா, இரவு சாப்பாட்டையும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து நிம்மதியான உறக்கம்.

எங்களைப்ற்றி கிஞ்சித்தும் கவலையே படாத மனிதரை எப்படி தந்தை என்று அழைப்பது? எதுவுமே முடியாத போது கடைசியாய் அகப்பட்டதுதான் மனநிலை பாதித்தவர் வேடம். எங்கள் குடும்பத்திற்கு மட்டும்தான் அவரின் வேடம் தெரியும். ஆனால் ஊரிலோ மற்றவர்களுக்கோ அவர் மனநிலை பிறழ்ந்தவர். கொஞ்சநாள் சாமியார் வேடமும்!

ஊர் ஊராக சுற்றி, தெரிந்தவர்களிடத்தெல்லாம் பிச்சை கேட்டு, வீட்டு சாப்பாட்டில் விஷம் இருக்கிறதென்று மறுத்து, முடியாது போனபோது ஒடுங்கி தனியான ஒரு இடத்தில் அடங்கி கொடுப்பதைத் தின்று அப்படியே செத்தும் போனார். அந்த நிலைமையில் என் தாய் எங்களை வளர்க்க பட்டபாடு சொல்லிமாளாது. ஊர் உறவுகளுக்கு மத்தியில் நாங்கள் பட்ட வேதனையும் அவமானமும் அளவிடற்கரியது.

எல்லாம் ஆழ்மனதில் அமிழ்ந்து போன நிலையில், இந்த நினைவுகள் எல்லாம் ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’யைப் பார்க்கும் போது எனக்கு ஏற்பட்டது. ‘அழகி’யிலிருந்து தங்கர்பச்சானின் ரசிகனாகிவிட்டபடியால் இந்த படத்தை பார்த்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு சாராசரி குடும்ப வாழ்க்கையை எதார்த்தமாகக் காட்டியிருந்தார் தங்கர்பச்சான்.

எக்குதப்பாக நடந்து கொள்வதும், பிறகு மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதையும்  அச்சு அசலாக பொருத்தமாக செய்திருக்கிறார் தங்கர். அதிலும், "உள்ளே வா" என்று ஒரு வார்த்தை சொல்ல மறுக்கும் மனைவியை கெஞ்சுவதும், அப்பா மாமனார் என்று முக்கிய உறவுகளாவது தன்னை குடும்பத்தோடு சேர்த்து வைக்காதா என்று கதறுவதுமாக மனசுக்குள் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் தங்கர். சன்யாச வாழ்க்கையில் குடும்பத்தையும், குடும்ப வாழ்க்கையில் சன்னியாசத்தையும் நினைத்து அவர் தடுமாறுவது இயல்பான சித்தரிப்பு.

தங்கரின் மனைவியாக நவ்யா. இந்த உயிரோட்டமுள்ள வேடத்திற்காக தன்னையே அற்பணித்திருக்கிறார். அற்புதமான நடிப்பு. குழந்தைகளின் உண்டியலை கூட விட்டு வைக்காமல் திருடிச்செல்லும் தங்கரை நினைத்து குமுறி, வீட்டில் உள்ள சாமி படங்களையெல்லாம் எடுத்து வெளியே எறிந்து சாமியாடுகிறாரே... பின்-டிராப் சைலண்டில் திகைத்து போனது நான் மட்டுமல்ல தியேட்டரில் இருந்த அத்தனை ஜனங்களுமே!

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி - ஆனந்த விகடனின் விமர்சனம் அடுத்த பதிவில்............

வெள்ளி, 7 அக்டோபர், 2011

அழகி! - மறக்க முடியாத சினிமா!

அழகி! என்னை ரொம்பவும் பாதித்த திரைப்படம். பொதுவாக பெண்கள்தான் திரையில் துக்கமான காட்சிகள் வந்தால் உடனே தாமும் கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிடுவார்கள். காரணம் எதுவாகவும் இருக்கலாம். கதையோடு ஒன்றிப் போவதிலிருந்து அவர்களுக்கு ஏற்பட்ட மனத்தழும்புகள் வரை அதற்கு காரணம் சொல்லலாம். 

சோகத்தைப் பிழிந்தெடுக்கும் சிவாஜி கணேசனின்  சினிமாக்களைப் பார்த்தபோது கூட நான் கண் கலங்கியதில்லை. ஆனால் இந்த அழகியைப் பார்த்ததும் கண்களில் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அப்படியொரு பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அதில் அழகியாய் உருமாறியிருந்த நந்திதா தாஸ். பார்த்திபனின் நடிப்பும் குறை சொல்வதற்கில்லை. தங்கர்பச்சானை ஒளிப்பதிவாளராக மட்டுமே அறிந்திருந்த நான் அவர் இயக்கிய அழகியைப் பார்த்ததும் அவரின் ரசிகனாகவே மாறிவிட்டேன். 

என் கிராமத்தின் பள்ளிக்கூடத்து வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருந்ததும் ஒரு காரணம். காதல், நட்பு, பிரிவு, பொறாமை, சந்தேகம், பரிதவிப்பு, பாசம், மனிதாபிமானம், குழந்தைத்தனம், விட்டுக்கொடுத்தல், போன்ற எல்லா குணாதிசியங்களையும் ஒருங்கே காட்ட எப்படி முடிந்தது இந்த தங்கர்பச்சானால்!? காதலித்தவர்களையும், காதலிக்கப்பட்டவர்களையும், நட்பை உயிராய் நினைத்தவர்களையும் நிச்சயம் இந்தத் திரைப்படம் பாதித்திருக்கும்.

ஒரு சமயம் இதன் டி.வி.டியை கையில் வைத்துக்கொண்டு என் வேற்று மொழி நண்பர்களுக்கெல்லாம் கொடுத்து பார்க்கச்சொல்லி அவர்களின் கருத்துக்களை ஆவலோடு கேட்டிருக்கிறேன். அப்படி ஒரு ஈர்ப்பு இருந்தது அந்தப்படத்தின் மேல். நான் இதுவரை சினிமா விமர்சனம் எழுதியதில்லை. இப்போது அந்தப் படத்தைப் பார்த்து வரிக்கு வரி விமர்சனம் எழுதுவதும் வீண் வேலை அல்லவா.

அதனால் 27.01.2002 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான ‘அழகி’ யின் சினிமா விமர்சனம் இங்கே உங்களுக்காக......


பண்ருட்டி என்றால் பலாப்பழம்தான் நினைவுக்கு வரும். இனி தங்கர்பச்சானின் ‘அழகி’யும்! அந்த அளவுக்கு இந்தப் படத்தின் முதல் பாதியில் நம்மை ஊரோடு ஒட்டி உறவாட வைத்துவிட்டார் பச்சான்!
அறியாப் பருவத்தில் தெரியாமலே நம் மனதுக்குள் குடிகொண்டுவிடுகிற காதலும் காலாகாலத்துக்கும் அது பண்ணுகிற அவஸ்தைகளும்தான் கதை.

பாடப்புத்தகத்தில் பதுக்கி வைத்த மயிலிறகு மாதிரி பால்யகால நினைவுகள்தான் ஒவ்வொரு ஜீவனையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்பதை சண்முகம் (பார்த்திபன்), தனலட்சுமி (நந்திதாதாஸ்) பாத்திரங்கள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் எண்ணெய் வழியும் தலைகளும், மூக்கொழுகுகிற முகங்களும், அழுக்கு உடுப்புகளுமாக சின்னஞ்சிறிசுகள் பெருக்கல் வாய்ப்பாட்டை தலையை ஆட்டி ராகமாகப் பாட ஆரம்பிக்கும்போது நாமும் அவர்களுடன் சேர்ந்து ‘மூவிரண்டு ஆறு’ சொல்கிறோம்! வகுப்பாசிரியரை அவர்கள் கோட்டா செய்யும் போது குதூகலிக்கிறோம்!

இடுப்பிலிருக்கும் பட்டுப்பாவாடை மாதிரியே ரவிக்கையின் இரண்டு கைகளிலும் வட்டமாக பூண் மாதிரி பட்டு மின்ன, எட்டு வயது தனலட்சுமி முதன்முறையாக வகுப்புக்குள் நுழையும்போது பசங்களின் கண்களில் பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறப்பது பரவசம்!

அதென்ன ஆசையா, பாசமா, மயக்கமா, கிறக்கமா என்று எந்தத் தெளிவுமில்லாத சின்னஞ்சிறு வயதில் சண்முகமும் தனலட்சுமியும் பழகுவதில் துவங்கி அடுத்த முப்பது வருடங்களில் அவர்களின் வாழ்க்கையை வெவெவேறு திசைகளில் எப்படியெல்லாம் கிளைவிட்டுப் பிரிகிறது என்பதை மூன்று பகுதிகளாகத் தொகுத்திருக்கிற விதம் அழகு!

பத்தாம் வகுப்பில் தனலட்சுமி ஃபெயிலாகி விட, சண்முகம் மேலே படித்து, ஊர்மாறிச் சென்று, கால்நடை மருத்துவராகி, வளர்மதியை (தேவதானி) மணம்புரிந்து, இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகிவிட்ட பின்னரும் தனலட்சுமியுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த பால்ய நாட்களின் பசுமை நினைவுகளால் தாக்கப்படுவது படு இயற்கையாக விவரிக்கப்படுகிறது.


கிழிந்த புடவையும் கலைந்த தலையுமாக பொலிவிழந்த விதவையாக நந்திதா தாஸ் நாலையோரத்தில் விபத்தில் அடிபட்ட தன் மகனுடன் உட்கார்ந்திருந்ததைப் பார்ததும் பதற்றப்படும் பார்த்திபன், தன் வீட்டுக்கே அவரை அழைத்து வந்து பணியில் அமர்த்திக்கொள்வதே கூட நெருடல் இல்லாமல் சொல்லப்படுகிறது.

உச்சகட்டம் ஓர் உணர்ச்சிக் குவியல்! கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகனை அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு ந்நதிதா தாஸ் காணாமல் போய்விட, அந்த இல்லம் தேடிச்சென்று அந்த பாலகனை பார்த்திபனும் தேவயானியும் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவதும், மகனைப் பார்ப்பதற்காகவாவது நந்திதா தாஸ் திரும்பி வருவார் என்று பார்த்திபன் நம்பிக்கையோடு காத்திருப்பதாகவும் படத்தை முடித்திருப்பது நிறைவு!


வாழ்க்கையின் அத்தனை வலிகளையும் முழுங்கிவிட்டு இளம் விதவையாக, கூலித் தொழிலாளியாக, வீட்டு வேலைக்காரியாக வளைய வருகிற நந்திதா தாஸின் கண்களும் புன்னகையும் இன்னமும் மனசைப் பிசைகின்றன.

புதிய பார்த்திபன் இதில் தெரிகிறார். ‘இன்னாங்கடா டேய்!’ டைப் ரவுசுகள் இல்லாமல், நக்கல் வசனங்கள் இல்லாமல் ஒரு பக்கவப்பட்ட மனிதனாக வருகிறார்.

கணவனை நேசிக்கும் மனைவிக்குரிய இயல்பான ‘பொஸ்ஸ்ஸிவ்னஸ், அதனால் வரும் சந்தேகம் அவற்றையெல்லாம் மிக இயல்பாக வெளிப்பட்டுத்தியிருக்கிறார் தேவயானி.

ஏற்கனவே சற்று பலவீனமான பின்பாதியை மேலும் சோகையாக்குகிறது விவேக்-பாண்டுவின் காமெடி மற்றும் அந்த கரகாட்ட டான்ஸ். விநியோகஸ்தர்கள் கேட்டுக்கொண்டதால் இதை சேர்த்துக்கொண்டார்களோ!?

பாடல்களைவிட பின்னனி இசையில் பின்னி எடுக்கிறார் இளையராஜா. பார்த்திபனின் கைக்குழந்தையை முதல் தடவையாக மடியிலிட்டு குளிப்பாட்டும்போது, பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’வை மென்மையாக இசைப்பது ராஜ ரசனை!

‘கல்வெட்டு’ என்கிற தலைப்பில் தங்கர்பச்சான் எழுதிய சிறுகதையே ‘அழகி’ வடிவம் பெற்றிருக்கிறது.
முதல் பாதியில் அந்தச்சிறுகதை கவிதையாகி இருக்கிறது. பின்பாதியில் அதுவே சினிமாவாகிவிடுகிறது.
மார்க் 100 க்கு 48.

‘திண்ணை’யில் 2002 ஜூனில் யமுனா ராஜேந்திரன் எழுதிய விமர்சனம்.

‘பால்ய கால நட்பு என்றுமே அமரத்துவம் வாய்ந்தது. அதுபோலவே பள்ளிக்கூடக் காதலும் அமரத்துவம் வாய்ந்தது. இந்த அமரத்துவம் தான் அழியாத கோலங்களையும் அழகியையும் அமரத்துவமான கதைகளாக்குகிறது. அழகி அழியாத கோலங்களின் நீட்சியான சமகாலக் கதை. ஆண் பெண் உறவில் நட்பு, காதல், உடல் உறவு, தோழமை போன்றவற்றுக்கு இடையிலான எல்லைகள் உருகிவழிந்துவிடும் இடங்களில் தங்கர்பச்சான் கத்திமுனைப் பயணம் செய்திருக்கிறார். 

காதலுக்கும் நட்புக்கும் இடையிலான கூடார்த்தம் படத்தில் மிக நுட்பமாகச் சொல்லப்படுகிறது. இன்றைய சமூக நெருக்கடியில் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருக்கும் மனசாட்சியின் அடிப்படையில் அமைந்த மனிதநேயத்தை துளிர் போன்று நமக்குள் கிளர்த்தியிருக்கும் படம் அழகி.
படத்தின் பின்பகுதி அபததங்களை, ரிக்கார்ட் டான்ஸ், தோட்டத்தில் நடக்கும் பாட்டும் கூத்தும், விவேக்கின் விட்டு விலகிய அரசியல் நகைச்சுவை என்பனவற்றை விட்டுவிடுவது நல்லது. அதைக் கழித்துவிட்டால் கூட கதையும் கருத்தும் நிற்கிறது.  

காட்சிகளும் உறவும் சித்தரிக்க்ப்ட்ட விதம்தான் படத்தின் அழகு. காட்சிகளை ஒவ்வொன்றாகச் சொல்லி மாளாது. தேர்ந்த கலைஞனிள் மேதைமை கொண்டவை சில காட்சிகள். சிறுவனுக்கு நேர்ந்த விபத்தைத் தொடர்நது வரும் காட்சிகள், மழை பெய்து முடிகிற வரையிலான காட்சிகள் கவிதை மயமான காட்சிகள். இளையராஜா கிராமத்துப் புழுதியை, அன்று பெய்த மழையில் குழைத்துத் தந்திருக்கிறார். உலகமயமாதல், கலப்பிசையை உன்னதம் என்று முன்வைக்கிறது. ஆனால் மண்ணின் இசைதான் மனித மனதுக்கு ஆன்மாவின் இசை. கலப்பிசை காதுக்குத்தானேயொழிய மனசுக்கு அல்ல. படத்திற்கு பினன்ணி இசை என்பது மன அவசங்கள் வாழ்வுக்குத் தரும் மானுட அர்த்தம் போன்றது.   

இப் படத்திற்கு முன்னோடிகள் தமிழ் சினிமாவில் இருக்கிறதுதான். பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், மகேந்திரனின் பெண் சித்தரிப்புகள் என அழகிக்கு முன்னோடிகள் இருக்கிறதுதான் என்பதில் சந்தேகமில்லை.

அழகி இன்று எவ்வகையில் முக்கியமான படம் ? விடலைப் பையன்களின் காதல் படங்கள், தமிழ் திரைவெளியை ஆக்கிரமித்திருக்கிற சூழலில், சங்கரின் வழித்தோன்றல்களாக சின்னச்சங்கர்கள், தில் மாதிரி ஜெமினி மாதிரி பேட்டை ரவுடிப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் வந்ததால்தான், இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. அலட்டிக் கொள்ளாத நந்திதா தாஸ், பார்த்திபன், அவரது குழந்தைகள், நந்திதாவின் மகன் போன்றோரின் நடிப்பினால்தான் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.  

சோகத்தைப் பிழியும் காட்சிகள் இருக்கிறது என்பது உண்மைதான். சிவாஜி கணேசன் தோன்றிய தமிழ் சினிமாவில் இவையில்லாமல் எப்படி உணரச்சிகளைச் சொல்லிவிடமுடியம் ? அல்லது மக்களுக்குப் பிற்பாடு துயரம் என்பதை¢ எப்படித்தான் தொற்றவைக்க முடியும் ?. அழகி நம் காலத்தின் அழியாத கோலமாக ஆகிவிட்டவள்.

அழகி படத்தின் அதி வெற்றிக்கு முக்கியமாக இருப்பது அதனது பாத்திரங்களுக்கேற்ற அதியற்புதமான நடிகர் தேர்வாகும். பால்ய வயதுத் தோற்றமும், இளைய வயதுத் தோற்றமும் பிற்பாடு நந்திதா தாஸ் பார்த்திபன் குணசேகரன் ஆனபிறகு ஆன தோற்றமும், உடல் மொழி, உச்சரிப்பு, முக அமைப்பு என்று எவ்வளவு நேர்த்தியாகவும் பிரக்ஞையுடனும் தர்க்கபூர்வமாகவும் இயக்குனர் தேர்ந்து கொண்டிருக்கிறார் என நினைக்கிபோது மலைப்பாக இருக்கிறது. 

அழகியின் முக்காலத்திலான அந்த மூன்று அழகான பெண் முகங்களும் நம் கண்ணிலிருந்து அகல்வது இனி நடக்கவே நடக்காது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
"சினிமா: திரை விலகும்போது" என்ற புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் ‘வெண்ணிற இரவுகள்’ என்ற வலைப்பக்கத்தில் காண நேர்ந்தது.
//‘அற்பவாதம் என்பது மனிதனை முன்னேற விடமால் இருக்கும் சிந்தனை ...............இந்த காதல் படங்கள் எண்ணங்களை தூண்டி விட்டு போகின்றன .................அதுவே அற்பவாதம் ....இதனால் சமூகத்திற்கு என்ன பயன் இதன் சமூக மதீப்பீடு என்ன .......மனதை வீழ்த்தும் இம்மாதிரி படைப்புகள் தேவையா என்ன??’//
இந்தப் பதிவரின் விமர்சனமும் வாசகர்களின் கருத்தும் என் கவனத்தைக் கவர்ந்தன.

புதன், 14 செப்டம்பர், 2011

காதல் கோட்டை - மறக்க முடியாத சினிமா


மறக்க முடியாத சினிமாக்களில் காதல் கோட்டை முதன்மையானது. இந்தத் திரைப்படம் வெளியானபோது நான் பார்க்கவில்லை. சினிமா பார்ப்பதின் மோகம் குறைந்து போய் தியேட்டர் பக்கமே போகாதிருந்த காலம் அது. அப்புறம் எங்கு பார்த்தேன் இந்த படத்தை என்று நினைவில்லை. தொலைக்காட்சியில்தான் பார்த்திருக்கவேண்டும். 

பார்த்தவுடன் பிடித்துப் போய்விட்டது இந்தப்படம். காரணம் தெரியவில்லை. இயல்பிலேயே பேனா நட்புகளில் மிகுந்த ஆர்வமுடையவன் என்பதால் இருக்கலாம். நமக்கும் இந்த மாதிரி நட்பு இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைக் கோட்டையாக இருக்கலாம். நானும் சில தோழிகளோடு கடிதத் தொடர்பு கொண்டிருந்ததாலும் இருக்கலாம். கல்யாணமாகிய பிறகு இப்படியெல்லாம் பேனா நட்பை கண்டிக்காத மனைவியினாலும் இருக்கலாம். எது எப்படியோ ஃபிரேம் பை ஃபிரேம் எனக்கு பிடித்திருந்தது. 


படம் வெளியான ஆண்டு 1997 ஜூலை மாதம் என நினைக்கிறேன். ஒரு திரைப்படம் நமக்கு ஏன் பிடித்துப்போகிறது? நாம் அந்தக் கதையோடு ஒன்றிப்போய்விடுவது இல்லையென்றால் நமக்கு நடந்த நிகழ்வாகவோ, நடக்காமல் போன நிகழ்வின் ஏமாற்றம் திரைப்படத்தில் வெற்றிகரமாக காண்பிக்கப்படுவதாலோ கூட இருக்கலாம். நம்முடைய வாழ்க்கையின் சோகத்தின் பிரதிபலிப்பாக உணர்வதாலும் இருக்கலாம்.

எனக்கும் அடுத்த சில ஆண்டுகளிலேயே ஒரு தோழி கிடைத்தாள். சகலத்தையும் என்னோடு பகிர்ந்து கோண்டாள். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த கௌரவங்களில் மிக முக்கியமானது இது. முகம் தெரியாமலேயே என்னை நம்பியது, மதித்தது, நட்பு பாராட்டியது, சகல விஷயங்களையும் பரிமாறிக்கொண்டது என இந்த நட்பில், காதலில் நான் பரவசமடைந்ததும், கற்றுக்கொண்டதும் ஏராளம். 

காதல் கோட்டையில் கடைசியில் காதலர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள். ஆனால் என் வாழ்க்கையில் இன்றுவரை நாங்கள் ஒன்று சேரவில்லை. முகத்தைக்கூட பார்க்கவில்லை என்பதே மிகப்பெரிய சோகம். நீ இங்கு நலமே... நான் அங்கு நலமா?... நலம் நலமறிய ஆவல்...... மனசுக்குள்ளேதான் விசாரித்துக்கொள்ள முடிகிறது! யார் எங்களுக்குத் தூது போவார்கள்?! நான் இறப்பதற்கு முன்போ இல்லை அவள் இறப்பதற்கு முன்போ நாங்கள் சந்திக்கமுடியுமா???

இதுதான் வாழ்க்கையின் விசித்திரம் போலும். பரஸ்பரம் அவரவர் வாழ்க்கையில் பிரச்னைகளைத் தவிர்க்க நாங்களாகவே எடுத்துக்கொண்ட முடிவு இது! இப்போது புரிந்திருக்கும் காதல் கோட்டை எனக்கேன் பிடித்த படம் என்று!

காதல் கோட்டை

‘நீ இங்கு நலமே.... நான் அங்கு நலமா?!’
சில சமயம் ஆர்ப்பாட்டமான வாணவேடிக்கைகளைவிட, மிக எளிமையாக ஒளிவீசும் ஒரு மெழுகுவத்தி நம் மனதை அள்ளிக்கொண்டு போய்விடுவது உண்டு. அந்த வகையில் அவ்வப்போது தென்றலாக வந்து வருடிவிட்டுப் போகிற திரைப்படங்களும் உண்டு. காதல் கோட்டை மெழுகுவத்தி வகை!
காதல் என்கிற மகத்தான சக்தியால் பின்னிப் பிணைந்து கட்டுண்ட இருவர் கடைசிவரை தங்களுக்குள் நேரில் அறிமுகமாகாமலே இருப்பது என்பது ஆச்சர்யமான ஒரு கரு. அந்தக் கருவுக்கு வெற்றிகரமாக ஒரு உருவம் கொடுத்து உயிரோட்டத்துடன் நடமாடவிட்டால் நாம் ஆர்வத்தோடு ஆர்ப்பரிக்காமல் என்ன செய்ய?

ஜெய்ப்பூரில் தனக்கு கிடைத்த புது வேலையில் சேர, சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து கிளம்புகிற அஜீத்திற்கு ரயிலில் கிடைக்கிறது அந்தக் கைப்பை. வேலை தேடும் யாரோ ஒரு பெண்ணின் சர்ட்டிஃபிகேட்டுகள் அதில் இருப்பதைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அந்த முகவரிக்கு பார்சலில் அனுப்பி வைக்கிறார்.

நம்பிக்கை இழந்த தேவயானி, பத்திரமாக வந்துவிட்ட தன் சர்ட்டிஃபிகேட்டுகளைப் பார்த்துக் கண்ணீர் தளும்ப பரவசம் அடைகிறார். முகம் தெரியாத அஜீத் மீது அவருக்கு இனம்புரியாத பற்றுதல் உண்டாக இதுவே போதுமானதாக இருக்க, கடிதத் தொடர்பு வளர... படிப்படியாக அது காதலாக பிரமாண்ட வடிவம் எடுக்கிறது.

‘இது என்ன கதை... இப்படியெல்லாம் கூட நடக்குமா?’ என்ற கேள்வியை தியேட்டரில் யாரேனும் எழுந்து கேட்டால் தர்ம அடி விழும் ஆபத்துகூட உண்டு. ‘பரவசமான சஸ்பென்ஸ்’ என்கிற உணர்வு ஆடியன்ஸைத் தொற்றிக் கொண்டுவிடுவதுதான் காரணம்!

இந்தப் படத்தில் வரும் எல்லாரும் நல்லவர்கள். சராசரி மனிதர்கள். இதனால் அவ்வப்போது தலைதூக்கும் நமது ஃபார்முலா ஊகங்களை இந்தப்படம் உடைத்துக்கொண்டு போகும்போதெல்லாம் ஏற்படுவது இன்ப அதிர்ச்சிகளே!

ஹோல்டரில் பல்பு பொருத்துவது போல் கச்சதமாகப் பொருந்துகிற ரோல் அஜீத்துக்கு. இயக்குனர் ‘ஸ்விட்சை’த் தட்டியவுடன் படம் முழுக்கப் பிரகாசிக்கிறார் அவர். இறுதிக் காட்சியில், ‘நடப்பது என்ன?’ என்று எதுவும் புரியாமல் சற்றே குழப்பத்தை அவர் காட்டி அடக்கி வாசித்திருப்பது மிருதுவான நடிப்பு!
மனதில் உறுதியும் முகத்தில் அப்பாவித்தனமுமாக வரும் தேவயானி காரெக்டரைப் பார்க்கும்போது, நாமும் வீட்டிலிருந்து எழுந்து சென்று இந்தப் பெண்ணின் காதலுக்கு ஏதாவது உதவ வேண்டும்’ என்ற தவிப்பு எழுகிறது.
அஜீத்தின் கோடீஸ்வர முதலாளியாக ஹீராவைப்போட்டு, அஜீத்தை விடாப் பிடியாகத் துரத்த வைத்திருக்கிறார்கள். தனது அன்பை ஹிஸ்டீரிக்கலாக அஜீத்திடம் வெளிப்படுத்தும் இடத்தில் ‘ஒலிம்பிக் சாம்பியனா’க வெல்கிறார் ஹீரா.

இப்படிப்பட்ட ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு ஆரம்ப காட்சிகளை அமைக்கும்போது எச்சரிக்கையான ‘நகாசு’ வேலைகள் தேவைப்படுகின்றன. இதெல்லாம் வரப்போகிற கதைக்கு ‘முன்னுரை’தான் என்று புரிந்து விடுவதால், இருப்பதை ரசிப்பதைவிட வரப்போவதை நாம் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவது ஒரு முக்கிய குறை! இதனால்தான், ரொம்ப அக்கறையாக போடப்பட்ட பாடல் காட்சிகள்கூட நம்மை பொறுமை இழக்கச் செய்கின்றன.

சின்னச்சின்ன குறைகள் இந்தப்படத்தில் இருக்கலாம். அவற்றையெல்லாம் புத்திசாலித்தனமாக பட்டியல் போட்டு மெனக்கெடுவது அவசியமில்லாத வேலை. ஏனென்றால் காதல் சன்னதிக்கு ஒரு தனி மரியாதையும் சக்தியும் (திரையுலகிலும்) உண்டு. அந்த சக்தியை இந்தப்படம் மிகப்பெரிய அளவில் காட்டியிருக்கிறது.

தங்கர்பச்சானின் கேமரா-இத்தனை நாள் பார்க்காத ஜெய்ப்பூரின் அழகை, ஒட்டுமொத்த அழகோடு அள்ளிக்கொண்டு வருகிறது... ஆட்டோக்களின் நடுவில் நடக்கும் ஆக்ரோஷ சண்டையில் துள்ளிக்கொண்டும் பயணிக்கிறது! 

தேவா இசையில் மூன்று பாடல்கள் தென்றலான இன்னிசை!

மணிவண்ணன், விஜய், கரன், ராஜீவ் மற்றும் பாண்டு இந்தக் காதல் கதையை வெற்றிகரமாக தூக்கிவிட கச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் எஸ்கலேட்டர்கள். கிளைமாக்ஸில் வரும் மகத்தான மழையும்தான்!

கொட்டுகிற மழையில் – ஆட்டோவில் – ஒருவரையொருவர் யாரென்றே தெரிந்து கொள்ளாமல் டிரைவரும், பாஸஞ்சருமாகக் காதலர்கள் பயணிக்க... முதல் தர சஸ்பென்ஸ் படங்களுக்கு இருக்கிற பரபரப்பை இந்தக் காதல் கதையின் உச்சகட்ட நிமிடங்களில் கொண்டுவந்திருப்பதன் மூலம் அனாயாசமாக ஒரு காதல் கோட்டையை எழுப்பி அதன் மேல் வெற்றிக்கொடியை அழுத்தமாக நாட்டியிருக்கிறார் இளம் டைரக்டர் அகத்தியன்.
ஆ.வி. விமர்சனம்.                     28.07.1996