Sunday, September 29, 2013

பரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு

மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். நாங்கள் சென்ற நேரம் ஒரு வீட்டில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மலைவாழ் மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எட்டிப் பார்த்தபோது, இரண்டு சிறுவர்கள் ஒரு அலுமினியக் கிண்ணத்தில் நூடுல்ஸ் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். என்னால் நம்பவே முடியவில்லை.
 
திகைப்புடன் இந்த உணவு எப்படிப் பழக்கமானது என்று கேட்டபோது, “விலை மலிவாக இருக்கிறது, அத்துடன் அடிக்கடி டி.வி-யில் காட்டப்படுவதால் பிள்ளைகள் சாப்பிட ஆசைப்படுகிறார்கள்என்று அந்த வீட்டுப் பெண் சொன்னாள். குடிக்கத் தண்ணீர் தாருங்கள்என்று கேட்டதும் வெளிறிப்போன பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில் தண்ணீர் கொண்டுவந்து தந்தார்.
 
மண் குவளை, மரக் குவளை, வெண்கல, அலுமினிய டம்ளர், சில்வர் டம்ளர் என்று இருந்த காலம் போய், இன்று பிளாஸ்டிக் பாட்டில் இல்லாத வீடுகளே இல்லை. இவை தண்ணீர் அடைத்து விற்கப்படும் பாட்டில்கள், குடித்து முடித்தவுடன் நசுக்கித் தூக்கி எறியப்பட வேண்டியவை. ஆனால், அதை அன்றாடம் தண்ணீர் குடிக்கும் டம்ளராகப் பயன்படுத்துகிறோம். எனக்குத் தெரிந்து, எந்த நாட்டிலும் இப்படி பிளாஸ்டிக் பாட்டிலில் விருந்தினருக்குத் தண்ணீர் தரும் பண்பாடு கிடையாது. பிளாஸ்டிக் பூக்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பொம்மைகள், பிளாஸ்டிக் பழங்கள், பிளாஸ்டிக் கோப்பைகள்... பிளாஸ்டிக் இல்லாத வீடுகளே இல்லை. இதுதான் நமது பண்பாட்டின் அடையாளம் என்றால் வெட்கப்பட வேண்டியிருக்கிறது.
பண்படுதலே பண்பாடுஎன்பார் டி.கே.சி. பண்பாடு என்னும் சொல்லே 1937க்குப் பிறகுதான் பயன்பாட்டுக்கு வந்தது. டி.கே.சி-தான் பண்பாடு என்ற சொல்லை உருவாக்கினார்என்கிறார் பிரபஞ்சன்.
 
இன்று நுகர்வுக் கலாச்சாரமே நமது பண்பாட்டினைத் தீர்மானிக்கிற சக்தியாக மாறியிருக்கிறது. அதைத் தனது சுயலாபத்துக்குரியதாக மாற்றிக் கொண்டிருக்கின்றன வணிக நிறுவனங்கள். அதற்குத் துணை நிற்கின்றன ஊடகங்கள்.
 
பண்பாட்டின் சிறப்பியல்புகளை, முதன்மைக்கூறுகளை, நம்பிக்கைகளை முன்னிறுத்தும் எழுத்தும், இலக்கியமும் சமூக தளத்தில் இரண்டாம் நிலையில் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. நாம் பண்பாட்டு நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகிறோம்.
 
பண்பாடு என்பது ஓர் இனக் குழுவின் வரலாறு. புரிந்துணர்வு, வாழ்வியல் வழிமுறைகள், தொழில்சார் தேர்வுகள், நம்பிக்கைகளை உள்ளடக்கியது. மொழி, உணவு, இசை, நுண்கலைகள், சமய நம்பிக்கைகள், தொழில் கருவிகள் போன்ற காரணிகள் பண்பாட்டு உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
 
இரண்டாயிரம் வருடப் பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ச் சமூகம் அதன் வேரில் இருந்து, மரபில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ள எதற்காக இத்தனை அவசரப்படுகிறது?
இன்றையப் பண்பாட்டு மாற்றங்களுக்கு முக்கியக் காரணம், சந்தைக் கலாச்சாரம். அது உருவாக்கிய பொய்கள், அந்தப் பொய்களை முன்னிறுத்திக் கொண்டாடும் ஊடகங்கள், அதன் வழி உருவான கட்டுக்கதைகள்... இவையே பண்பாட்டு மாறுதல்களை உருவாக்குகின்றன.
பண்பாட்டின் தேவை என்பது சக மனிதனுடன் அன்பு செலுத்தவும், இருப்பதைப் பகிர்ந்துகொள்ளவும், இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கு முயற்சிக்கவும், தான் வாழும் சமூகம் மேம்பட உதவி செய்வதுமே ஆகும்.
 
பண்பாட்டுக் கலப்புகளை எதிர்கொள்ளும்போது புதிய பண்பாட்டு மாற்றங்கள் பிறக்கின்றன. இன்று தமிழகத்தில் பரோட்டா அன்றாட உணவுகளில் ஒன்றாக மாறிப்போயிருக்கிறது. பரோட்டா கடைகள் இல்லாத ஊர்களே இல்லை. ஒரு நாள் பரோட்டா தயாரிப்பதை நிறுத்திவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுவிடும்போல் இருக்கிறது.
ஆனால், பரோட்டா சாப்பிடுகிற எவருக்கும் அது எங்கிருந்து தமிழகத்துக்கு வந்தது, அதை ஏன் வீட்டில் பெண்கள் சமைக்க மறுக்கிறார்கள், இவ்வளவு புகழ்பெற்ற பரோட்டாக்கள் ஏன் கடவுளின் உணவாக இன்றும் மாறவில்லை என யோசனை செய்வதில்லை. பண்பாட்டின் ஆதார அம்சங்களில் ஒன்றான உணவு சீர்கெட்டுப் போனதே இன்றைய ஆரோக்கியக் கேடுகளுக்கு முக்கியக் காரணம்.
 
தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய அடையாளங்களாக காதல், வீரம், கொடை, பக்தி விருந்தோம்பல் ஆகிய ஐந்தினையும் குறிப்பிடுகிறார்கள். இன்று இந்த ஐந்தும் சீரழிந்துபோன நிலையில், புரையோடி நோய்க்கூறென மாறியிருக்கிறது.
 
இலக்கியங்களில் காதலைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகம், இன்று சாதியை முதன்மைப்படுத்தி, காதலர்களைத் துரத்திக் கொல்லத் துடிக்கிறது. யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் என்பதெல்லாம் வெறும் இலக்கிய உளறல்கள் என்று சொல்லும் அளவு தமிழ்ச் சமூகத்தில் சாதிய உணர்வு தலை தூக்கியுள்ளது.
 
இன்னொரு பக்கம் கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்று வீரம் பேசிய தமிழ்ச் சமூகத்தில் இன்று மிஞ்சியிருப்பது கூலிப்படைக் கலாச்சாரம் மட்டுமே. குற்றம் தனி நபரின் செயலாக இல்லாமல் தொழிலாக மாறிவிட்டது நம் காலத்தின் அபாயம்.
 
காலனியம் துவங்கிவைத்த பண்பாட்டு அழிப்பு இன்று பன்னாட்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு உலகம் தழுவிய ஒற்றைப் பண்பாடு என ஒரு பொய்வாதமாக உருவெடுத்துள்ளது. இது முற்றிலும் வணிகர்கள், வணிக லாபங்களுக்காக உருவாக்கும் ஒரு தந்திரம்.
 
தமிழகப் பண்பாட்டுச் சீரழிவில் வெட்கித் தலை குனிய வேண்டிய அம்சமாக நான் கருதுவது குடியே. கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் குடி ஒரு கொடிய நோயாகப் பற்றிப் படர்ந்துவருகிறது. குடிப்பவர்கள் தன்னை அழித்துக்கொள்வதுடன் பொதுவெளியில் ஆபாசம் பேசி, வாந்தி எடுத்து, சண்டையிட்டு, சாலை விபத்துகளை உருவாக்கி, தன்னையும் சமூகத்தையும் சீரழித்துவருகிறார்கள். 

குடிவெறி கொலை களவு செய்யவும், பெண்களை வன்பாலுறவு கொள்ளவும் தூண்டுகின்றன. தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படாவிட்டால் குடிநோயில் இருந்து தமிழ் மக்களை யாராலும் காப்பாற்றவே முடியாமல் போய்விடும்.
 
பண்பாட்டுப் பெருமை பேசும் நாம் சுத்தமான ஒரு பொதுக் கழிப்பறையைக் கூடப் பேண முடியாத சமூகமாக ஏன் இருக்கிறோம். மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வண்ணம் ஒரு கழிப்பறை எந்த நகரிலாவது அமைக்கப்பட்டிருக்கிறதா? பார்வையற்யோர் பேருந்து நிலையப் பொதுக் கழிப்பறைக்குள் கால் வைக்க முடியுமா? நினைக்கவே அவமானமாக இருக்கிறது.
 
ஜாக் லண்டனின் கதை ஒன்றில், “ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால், முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும். பின்பு, அந்த இனத்தின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். மூன்றாவது, அவர்களை இருப்பிடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். நான்காவது, அவர்கள் நினைவுகளை அழித்து ஒழிக்க வேண்டும்என்பார்.
இந்த நான்கும்தான் இன்று தமிழகத்தில் நடந்துவருகிறது.

எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said... [Reply]

இன்று பல பொய்கள் மெய்யாகி விட்டது - பொய் என்பதே தெரியாமல்...!

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

அருமையான வரிகள். மாய உலகில் வாழப்போகிறது நமது தலைமுறைகள்! வருகைக்கு நன்றி திரண்டுக்கல் தனபாலன்!

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

பதிவை திறந்தவுடன் ஹிந்தி காதல் இசை வழிந்தோடுகின்றதே?

ராஜி said... [Reply]

போலியான வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்ன்னு மட்டும் நல்லா புரியுது!!

Jayadev Das said... [Reply]

பாராட்டா நம் பண்பாட்டில் விழுந்த அடி!! சரியான சவுக்கடி!!

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

வருகைக்கு நன்றி ஜோதிஜி! பதிவைத் திறந்தவுடன் ஹிந்தி காதல் இசை வழிந்தோடுகிறதா அப்படியொன்றும் இல்லையே!?

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

ஆம் போலியான வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ராஜி அவர்களே! தவர்க்கவே முடியவில்லை. நம் தலைமுறைகளும் அப்படியே....

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயதேவ் தாஸ் அவர்களே!

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

இன்று கேட்கவில்லை.

Anonymous said... [Reply]

பதிவில் பகிரபட்டுள்ள அத்தனை அம்சங்களும் மிக முக்கியமாய் கவனிக்கப் பட வேண்டிய விடயங்களே. கால மாற்றம் மிக அவசியமானது, அதை தடுக்க முடியாது, ஜட்டிக்குப் பதில் கோவணம் கட்டுவேன் என யாரும் சொல்லப் போவதில்லை. ஆனால் மாற்றங்கள் மிக மிக மெதுவாய் உள்வாங்கப்பட்டு, நன்மை தீமைகளை அலசி ஆய்ந்து, நன்மைகளைப் பெற்று அந் நன்மைகள் ஏற்கனவேற் உள்ள தீமைகளை விரட்டி, நன்மைகளோடு இணைந்து நன்மை தர வேண்டும். மாற்றங்கள் இன்று ஊடகம், சந்தை மயமாக்கல் ஊடாய் திணிக்கப்படுகின்றன, நன்மை தீமையை ஆராய விடாமல் திணித்து அதனைப் பழக்கப்படுத்தி விட்டுள்ளன. குடிக்காதவன் வாயில் குடி மதுவை திணித்து ஊற்றி ஊற்றி பழக்கப் படுத்தினால் சிறிது காலம் கழிய அவனே மதுவை வாங்கி குடிக்கத் தொடங்குவான், இதனைத் தான் நம் வாழ்வின் சகல மட்டங்களிலும் அரசின் துணையோடு, ஊடகங்கள் வழியாக முதலாளித்துவம் செய்து வருகின்றன, இதன் பக்க விளைவுகளை உணரத் தொடங்கும் முன் நம் அடிப்படை வாழ்வியல் சிதைக்கப் பட்டு நிர்மூலமாக்கப்பட்டு இருக்கும், வேதனையான உண்மை அதுவே.

உஷா அன்பரசு said... [Reply]

// இந்த நான்கும்தான் இன்று தமிழகத்தில் நடந்துவருகிறது.//- கால மாற்றங்கள் ஆரோக்கியமான சூழலை தராமல் காணமல் போய்கொண்டிருப்பது வேதனையான விஷயம்....

அமுதா கிருஷ்ணா said... [Reply]

படிக்கவே பயமாக இருக்கிறது.உண்மை முகத்தில் அறைகிறது. ஒரு இனத்தை அழிக்க அந்த இனமே பயன்படுகிறதே.

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

ஜோதிஜி! அதானே, நான் எந்த இணைப்பையும் கொடுக்கவில்லையே, எப்படி உங்களுக்கு மட்டும் ஹிந்தி இசை கேட்கிறது என்று குழம்பிப் போனேன்.

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

விவரணன்! தங்களின் வருகைக்கும், விரிவான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி! சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மனிதனையே மாற்றக்கூடிய மாற்றங்கள் விரைவில் அழிவைத்தான் தரும். பார்ப்போம் என்னதான் ஆகுமென்று!

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

உஷா அன்பரசு! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

அமுதா கிருஷ்ணா! தமிழனுக்கு எதிரி தமிழன்தான் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்தானே! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Anonymous said... [Reply]

மிக அருமையான கருத்துக்கள்.இது போன்ற சிந்தனைகளை ஒவ்வொருவரும் நண்பர்களோடு உரையாடும்போது பகிர்ந்து கொள்ள வேண்டும்.பழக்க வழக்கத்தை மாற்ற முடியா விட்டாலும் இது நம் பண்பாட்டுக்கு எதிரானது என்ற எண்ணத்தையாவது எல்லோர் மனதிலும் விதைக்க வேண்டும்.

Zonia Islam said... [Reply]

To Find All Types Of Images,Wallpapers,Photos and much more... in Wide Screen.
Just Visit 2 My Blog

http://imagezhouse.blogspot.com/

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

Online Captcha Work Free Registration
Now Register yourself for free with Perfect Money Account Number
And Start your work And Get Your Payment in your own account.
Download Software For Free...
Use Our Software By Using Our Invitation Code
Just Visit...

http://captcha4onlinework.blogspot.com/

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

Funny Poon | Largest Collection of Latest Funny Pictures, Funny Images, Funny Photos, Funny Jokes

And Cartoon Plus Bizarre Pics Around The World.
Just Visit 2 My Blog

http://funnypoon.blogspot.com/

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

~*~ Free Online Work At Home ~*~
Here's Everything You Need to Know About Online Working At Home, Including Where to Find Work At Home Job Listings,
The Best Sites For Finding Work At Home Jobs And How to Avoid Work From Home Scams.
Visit...
http://SooperOnlineJobs.blogspot.com/ .

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!