மறக்க முடியாத ஆசிரியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறக்க முடியாத ஆசிரியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 செப்டம்பர், 2020

மறக்க முடியாத ஆசிரியர்கள்

வாழ்க்கையில் நாம் அடைந்த உயரங்களுக்குக் காரணமானவர்களில் நமக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. ஒவ்வொருவரும் பல கட்டங்களைக் கடந்துதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். இலக்கே இல்லாத வாழ்க்கையில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, இலட்சியம் குறித்தான பார்வையை விசாலப்படுத்தியவர்கள் நமது ஆசிரியர்கள்தான். நகர்ப்புற மாணவர்களுக்கு எப்படியோ, கிராமப்புற மாணவர்களுக்கு இன்று வரை ஆசிரியர்களே அவர்களின் வழிகாட்டி!

முற்றிலும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவனான எனக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் அதிகம். ஒழுக்கமான பிள்ளைகளிடத்தும், நன்றாக படிக்கும் பிள்ளைகளிடத்தும் ஆசிரியரின் அன்பு கூடுதலாக இருக்கும். கொஞ்சம் சுமாராகப் படிக்கும் எனக்கு ஆசிரியர்களின் அன்பு நிறையவே கிடைத்தது.

நான் தொடக்கப் பள்ளியில் பயின்ற நாட்கள் இன்றும் என் நினைவை விட்டு அகலவில்லை. மரத்தடி பள்ளிக்கூடம் இன்று பார்ப்பதற்கு மிகவும் அரிது. நான் 2-ஆம், 3-ஆம் வகுப்புகளில் மரத்தடியில் உட்கார்ந்து பாடம் படித்திருக்கிறேன். ஆசியர்களுக்கு நாற்காலியைத் தவிர ஒன்றும் இருக்காது.

கர்மவீரர் காமராஜர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டம் அமுலிலிருந்த நேரம். ஒரு மூன்று சக்கர மோட்டார் வண்டி பெரிய சத்தத்தோடு கருப்பு நிற பிளாஸ்டிக் ‘கேன்’களில் கோதுமையால் செய்யப்பட்ட ஒரு உணவை எடுத்து வரும். அது எங்கிருந்து தயார் செய்யப்பட்டு வருகிறது என்பது தெரியாது. ஆனால் மிகவும் சுடச்சுட இருக்கும். சாப்பாட்டு மணி அடித்ததும் எல்லோரும் வரிசையில் உட்காருவோம். 5-ஆம் வகுப்பு படிக்கும் திடகாத்திரமான மாணவர்களே எல்லோருக்கும் பரிமாறுவார்கள்.

அப்படி ஒருமுறை வரிசையில் உட்கார முண்டியடித்தபோது அப்போதைய தலைமையாசிரியர் பீதாம்பரம் என்முதுகில் கொடுத்த அறை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை.

புளியமரத்தடியில் எங்களை உட்காரவைத்து எங்களுக்கு வகுப்பெடுத்த 'மனோன்மணி' ஆசிரியையை நன்றாக நினைவிருக்கிறது. 5-ஆம் வகுப்புக்கு மாறிய போது கணிதப் பாடம் மாதாந்திரத் தேர்வில் முழு வெள்ளைத்தாளில் எழுத வேண்டியவற்றை குட்டிக்குட்டியாய் நுணுக்கி, நுணுக்கி எழுதி அரைப் பக்கத்திலேயே முடித்திருந்தேன். இந்த காரணத்துக்காக 100க்கு 100 கிடைக்க வேண்டிய எனக்கு 98 மதிப்பெண்கள் போட்டு என்னைக் கண்டித்துத் தேர்வு எழுதும் முறையைக் கற்பித்தவர் இந்த மனோன்மணி ஆசிரியைதான். அப்புறம் திருமூர்த்தி சார், கோபால் சார் என ஒரு சிலரே ஞாபகத்தில் இருக்கின்றனர்.

ஆனால் ஐந்தாம் வகுப்பு வரை எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் யார் என்று எவ்வளவு முயற்சி செய்தும் நினைவுக்கு வரவில்லை.

ஏனென்றால் தமிழாசிரியர்களுக்கென்றே ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்' என்பது இவர்களுக்கு முழுவதும் பொருந்தும். தாய்மொழியில் எழுதப் படிக்க கற்றுக்கொண்டபின்தான் மற்ற பாடங்களையே படிக்க ஆரம்பிக்கின்றோம். நாம் பிறந்தது முதல் உணர்ந்து, கேட்டு, பேசி வந்தாலும் ஒரு மொழியை முற்றிலுமாக கற்பது என்பது வாசித்தலையும், பிழையற எழுதுவதையும் உள்ளடக்கியது. இதற்கான முதல் வித்து ஊன்றப்படுவது ஆரம்பப்பள்ளித் தமிழாசிரியர்களால்தான். 

உயர்நிலைப்பள்ளிக்கு என் கிராமத்திலிருந்து 3 கி.மீ. நடந்துபோக வேண்டும். அங்கும் எனக்கு வழிகாட்டியாகத் திருமதி. துர்கா, தமிழாசிரியை மனோன்மணி, தமிழாசிரியர்கள் திரு. தங்கராசு, திரு. அமரன், திரு. நாராயணசாமி ஆகியோர்களும், 8-வது 9-வது படிக்கும்போது, திரு.கண்ணபிரான், திரு. ஜான் மனோகர், திரு. அப்பாசாமி, திரு. ராஜரத்தினம் ஆகியோர்களும் முக்கியமானவர்கள்.

அங்கும் கூட 'மனோன்மணி' என்ற பெயருடைய ஆசிரியையே தமிழாசிரியராகவும் வகுப்பாசிரியராகவும் இருந்தார். ஏழாம் வகுப்பு போனபோது திருமதி. மனோன்மணி ஆசிரியரின் கணவர் திரு.ஜி. நாராயணசாமி ஐயா அவர்கள் தமிழாசிரியராக இருந்தார். படிப்பில் சுட்டியாக இருந்த காரணத்தால் மனோன்மணி ஆசிரியையிடம் நல்ல பெயர் எடுத்தபடியால் சுலபமாக அவரது கணவரான நாராயணசாமி ஐயா அவர்களிடமும் நல்ல பெயர் வாங்க முடிந்தது.

ஆனால் எட்டாம் வகுப்பில் திரு. தங்கராசு ஐயா தமிழாசிரியராக வந்த பின்பு தமிழாசிரியர் என்றால் மென்மையானவர்கள் மட்டுமில்லை இவரைப் போலக் கண்டிப்பானவர்களும் உண்டு என்பதை அறிந்துகொண்டேன். நல்ல மாணவர்களிடத்தில் அன்பும், சரியில்லாத மாணவர்களிடத்தில் கண்டிப்பும் என்பதே அவரது பாணி.

பெரும்பாலும் அவரிடம் அடி வாங்காதவர்களே கிடையாது. அதிலும் காதில் கிள்ள ஆரம்பித்தால் அது ஜென்மத்துக்கும் மறக்காது. அத்தனை கண்டிப்பானவர்.

ஒன்பதாம் வகுப்புக்குப் போனபோது திரு. அமரன் ஐயா அவர்கள் தமிழாசிரியர். அவரது கையெழுத்து அச்சில் வார்த்தது போல இருக்கும். பள்ளியில் இலக்கியப் போட்டிகள் எது நடந்தாலும் அது கட்டுரைப் போட்டியோ, கையெழுத்து போட்டியோ அல்லது ஓவியப் போட்டியோ எது நடந்தாலும் என்னை கேட்காமலேயே என் பெயரைச் சேர்த்து விடுவார். இதிலிருந்து பின்வாங்கவே முடியாது. எப்படியோ மன்றாடி பேச்சுப் போட்டியிலிருந்து தப்பித்து விடுவேன்.

அப்போது அவர் தந்த ஊக்கம்தான் இந்த அளவுக்காவது என்னால் எழுத முடிவதற்கான காரணம். கட்டுரைப்போட்டி எந்த தலைப்பில் எப்போது கொடுத்தாலும் அதில் நான் கலந்து கொண்டால் முதல் பரிசு எனக்குத்தான். இந்த தன்னம்பிக்கைதான்  பிற்காலத்தில் ஒரு பிரபல வார இதழ் (இப்போது ‘அறிவாளிகள்’ மட்டுமே படிக்கும் இதழ்) ஒரு கட்டுரைப்போட்டியை அறிவித்தபோது நண்பர்களிடம் சவால் விட்டு அந்தப்போட்டியில் ஜெயித்தும் காட்டினேன். என் அழகான கையெழுத்துக்கும் காரணம் அவரே! பின்னாளில் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், துணுக்குகள், விமர்சனங்கள் என என் பன்முகத்தன்மை வெளிப்பட அவரே காரணமானவர்.

எட்டாம் வகுப்பிலேயே மாற்றலாகிப்போன தங்கராசு ஐயா எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அமரன் ஐயாவும் வேலூரில் தான் இருக்கிறார் என்று நம்புகிறேன். இதில் திரு. நாராயணசாமி ஐயா சில வருடங்களுக்கு முன்பு மறைந்துவிட்டார்.

அவரது துணைவியார் திருமதி. மனோன்மணி ஆசிரியை அவர்களை எப்போதாவது சென்று பார்ப்பது உண்டு. என் இந்த தமிழறிவுக்குக் காரணமான தமிழாசிரியர்களை எப்போதுமே என்னால் மறக்க முடிந்ததில்லை.

மேல்நிலை வகுப்புக்குப் போனபோது ஆசிரியர்களும் நாங்களும் மிகவும் நெருக்கமானோம். தமிழாசிரியர் திரு. சைலவாசன், ஆங்கில ஆசிரியை திருமதி. கோமதி, தாவரவியல் துறை ஆசிரியர் திரு. ராமகிருஷ்ணன், விலங்கியல் துறை ஆசிரியை திருமதி. சாந்தி, வேதியியல் துறை ஆசிரியை திருமதி. மங்களம், இயற்பியல் துறை ஆசிரியர்களான திரு. மாசிலாமணி, திரு. சுந்தர்ராஜன் என இவர்கள் எல்லோருமே நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் போதித்தவர்கள். தனிப்பட்ட முறையிலும் அன்பு செலுத்தியவர்கள். கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு கல்வி போதித்தவர்கள் என்பதால் இவர்கள் மட்டும் அடிக்கடி ஞாபகத்தில் வந்து போவார்கள்.

மேல்நிலைக்கல்வி பயிலும் போது எனக்குத் தமிழாசிரியர் திரு. சைலவாசன் ஐயா அவர்கள். எந்தப் பேச்சுப்போட்டியிலும் பங்கெடுக்காத நான் இவரின் வகுப்பெடுக்கும் அழகால், பேச்சாற்றலால் மிகவும் கவரப்பட்டேன். இவர் சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும் கூட. பட்டிமன்றம் என்றால் என்ன என்பதையே இவரால்தான் நான் அறிந்துகொண்டேன். இவர் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் என்றால் அது எவ்வளவு தொலைவிலிருந்தாலும் நண்பர்களுடன் சைக்கிளில் கிளம்பிச் சென்றிருக்கிறேன்.

நாளடைவில் எங்களூரில் நடைபெற்ற ஊர் கோவில் திருவிழாவில் இவரின் பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்ய அவர் வீடு தேடிச்சென்று ஒப்புதல் வாங்கி எல்லா ஏற்பாடுகளும் செய்தபின் அவரால் அதில் கலந்துகொள்ளாமல் போனது எங்கள் துரதிட்டமே! பின்னர் இவர் எங்களூரிலிருந்து மாற்றலாகி வேலூருக்கு அருகில் உள்ள ‘பள்ளிகொண்டா’விற்கு தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றதாக அறிந்தேன்.

தொழிற்கல்வி படித்த போது இன்றைய வேலைக்கும், வாழ்க்கைக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த ஆசிரியர்கள், திரு. கதிர்வேலு, திரு. செல்வராஜ், திரு. பாலசுப்பிரமணியன் ஆகியோர்களும் மிக முக்கியமானவர்கள். காலமாற்றத்தில் நானே ஒரு தொழிற்பயிற்சி ஆசிரியராக ஆனபோது எனக்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக வழகாட்டி இன்றைய முன்னேற்றத்திற்கு காரணமான திரு. எஸ்.ராமச்சந்தின் சார் அவர்களும் முக்கயமானவர்களில் ஒருவர்.

நட்புடன்,

எம்.ஞானசேகரன்.

சனி, 22 அக்டோபர், 2011

அன்புள்ள ஐயா.......


மறக்க முடியாத பழைய நினைவுகளில் மிக முக்கியமானது பள்ளிக்கூட வாழ்க்கை. எதுவும் தெரியாத விடலைப் பருவம். எல்லாமே விளையாட்டு. படிப்பில் விளையாட்டில் ஆரோக்கியமான போட்டி. நண்பர்களுக்கிடையே இருந்த ஒற்றுமை. வகுப்புத் தோழிகளிடத்து சுதந்திரமாய்ப் பேசமுடியத வெட்கம், பிடித்த ஆசிரியர்கள் என்று எத்தனையோ பட்டியலிடலாம்.

என் கிராமத்தில் ஆரம்ப பாடசாலை மட்டுமே இருந்தது. உயர்நிலை பாடசாலைக்கு கிட்டத்தட்ட மூன்று கி.மீ. நடந்து போகவேண்டும். பெரும்பாலும் என்னோடு படித்த எல்லா மாணவர்களுமே நடந்துதான் போவோம். கிராமத்தில் அமைந்த பள்ளிக்கூடம் என்றாலும் மிகப்பரந்த பரப்பளவைக் கொண்டது அது. நன்கு வளர்ந்த புங்க மரங்களும், அது தரும் நிழலும் பள்ளி வளாகத்தையே குளுகுளு என்று வைத்திருக்கும்.

ஆறாம் வகுப்பில் புதிதாய்ச் சேர்ந்தவுடன் எங்களைப்பற்றி ஆசிரியர்களுக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லாத காரணத்தால் இன்னும் சரியாக அறிமுமாகாமலேயே இருந்தோம். சுற்றுபுற எல்லா ஊர்களிலிருந்தும் மாணவர்கள் வந்து சேர்வதால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமிருக்கும். அதனால் ஏ, பி, சி. டி. என பிரிவுகள் இருக்கும். எங்கள் ஊர் மாணவர்கள் எல்லோருமே ஒரே பிரிவில் (அதவது ‘ஏ’) இருந்தோம். முதல் மாதாந்திரத் தேர்வு வந்தது. நானும் என் (எங்களூர்) நண்பர்கள் மூன்று பேரும் முதல் நான்கு இடங்களைத் தக்கவைத்துக் கொண்டோம்.

இப்போது ‘ஏ’ பிரிவு தவிர்த்த மற்ற வகுப்பாசிரியர்கள் தங்கள் வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்கள் இல்லை என்று வாதாடி ‘ஏ’ பிரிவில் இருந்த எங்களைப் பிரித்து ஆளுக்கொருவராக தங்கள் வகுப்பிற்கு எடுத்துக்கொண்டனர். நான் ‘சி’ பிரிவிற்கு மாற்றப்பட்டேன். அவர்களின் வாதம் சரியென்பதை அடுத்த காலாண்டுத்தேர்வு நிரூபித்தது. நானும் என் ஊர் நண்பர்களும் அவரவர்கள் வகுப்பில் முதல் ரேங்க்கை யாருக்குமே விட்டுக்கொடுக்கவில்லை.

இப்படித்தான் வகுப்பாசிரியர்களுக்கும் எங்களுக்கும் நெருக்கம் அதிகமானது. நான்றாகப் படிக்கும் பிள்ளைகள் என்றாலே ஆசிரியர்களுக்கும் பிடிக்கும் தானே! ஆறாம் வகுப்பில் எனது வகுப்பாசிரியர் எனது தமிழாசிரியை திருமதி. மனோன்மணி டீச்சர். ஏழாம் வகுப்பிலும் அவரே தமிழாசிரியை. எட்டு, ஒன்பதாம் வகுப்புகளில் இந்த தமிழாசிரியரின் கணவர்தான் எங்களுக்கு தமிழாசிரியர். இப்படி இவர்களின் அன்புக்கு பாத்திரமான நான் பிற்காலத்தில் அவர்களின் குடும்ப நண்பராகவும் ஆனேன்.

அந்தக்காலகட்டத்தில் அவர் என்க்கு எழுதிய கடிதம் இது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்பற்றுப் போயிருந்த நான் கடந்த மாதம் ஒரு திருமணத்திற்காக சொந்த ஊர் போனபோது அவரைச் சந்திக்கப் போனேன். அவர் மரணமடைந்து ஓராண்டாகி விட்டது என்ற துக்கச் செய்திதான் எனக்குக் கிடைத்தது. ஏதோ வேலை நிமித்தம் வெளியே சென்றிருந்த எனது ஆசிரியையையும் பார்க்க முடியவில்லை. எனக்கு மிகவும் நெருங்கிய தோழியாக இருந்த அவர்களின் மகளையும் பார்க்க முடியவில்லை.
வீட்டிற்கு வந்தபின் தொலைபேசியின் வாயிலாக உரையாடியபோது என்னை மீறிய துக்கத்தால் அழுதேவிட்டேன். பழைய நினைவுகளைக் கிளறியபோது அவர் எனக்கு 1995 ம் ஆண்டு எனக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. இதை அவரின் நினைவாக உங்களுடன் பகிர்ந்து என் நினைவுகளை மீட்டெடுக்கிறேன்.  

அன்புள்ள கவிப்ரியனுக்கு,

உன் கடிதம் கிடைத்தது. செய்திகள் அறிந்தோம். எல்லோரும் பெருமகிழ்ச்சி அடைந்தோம். வேலையின்றி வேதனையுற்ற உனக்கு விடியல் உண்டாகாதா என்று வருந்திய எங்களுக்கு உன் கடிதம் பாலை வார்த்து சந்தோஷத்தை அளித்தது. இப் பணியினை தட்டாமல் தொடர்ந்து செய்வதற்கு இறையருளை வேண்டுவதோடு, எங்கள் மனமார்ந்த ஆசியினையும் உன் மேல் பொழிகின்றோம். என்றும் மகிழ்ச்சி வளர, வாழ்வு வளம் பெற வாழ்த்துகின்றோம்.

இனியாவது வேறு வேலையில் நாட்டம் கொள்ளாமல் செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து தொழில் செய்து வாழ்வில் முன்னேற முயற்சி செய். மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிறுவனம் எனில் பிற்காலத்தில் நல்ல பல பலன், பயன்கள் உண்டாகும். ஆதலால் கவனமாக இருக்கவும். பணியில் தன்னிலை ஏற்பட்டபின் குடும்பத்தை அமைத்தல் நல்லது. அதுவரை சிரமத்தைப் பொறுத்தல் சாலச்சிறந்தது.
உன் தம்பி வந்திருந்தான். அவன் மூலமும் உன் நிலையை அறிந்தேன். அவனும் நாங்கள் விசாரித்ததைச் சொல்லியிருப்பான் என்று எண்ணுகிறோம்.

மற்றபடி இங்கு வீட்டில் அனைவரும் நலம். அதியனின் நண்பர்களும் சுகமே. லட்சுமி 12.04.1995 ம் நாளன்று தென்னார்க்காடு மாவட்டம் சங்கராபுரத்தில் வேலையில் சேர்ந்துள்ளான். அரசுப் பணிதான். சந்துருவுக்கு இன்னும் EB ல் வேலை கிடைக்கவில்லை. அன்றியும் 05.05.1995 வெள்ளிக்கிழமையன்று வேலூர் வாசவி கல்யாண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது. காஞ்சனாவின் அண்ணன்களும் பத்திரிகை கொடுத்தனர். உனக்கும் கொடுத்திருப்பார்கள் என நம்புகிறேன். நேரம் காலை 9 -10 மணி.

மேலும் உன் ஆசிரியை அவர்கள் S.S.L.C. விடைத்தாள் திருத்த திருவண்ணாமலை சென்றுள்ளார். தொரப்பாடியில் சுந்தர், தேன், சந்தான கிருஷ்ணன் அவர்கள் வீட்டில் அனைவரும் நலம். மற்றபடி விசேடம் இருப்பின் அறிவிக்கவும்.
பிறபின்,

இன்னணம்
உனது ஆசிரியர்.

உங்களுக்காக ஒரு வித்தியாசமான வலைப்பூ சின்னு ரேஸ்ரி  போய்த்தான் பாருங்களேன்!


ப

திங்கள், 5 செப்டம்பர், 2011

மறக்க முடியாத ஆசிரியர்கள்


நம் வாழ்க்கையின் சில முக்கியமான முடிவுகளில் நமக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. ஒவ்வொருவரும் பல கட்டங்களைக் கடந்துதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். இலக்கே இல்லாத வாழ்க்கையில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, இலட்சியம் குறித்தான பார்வையை விசாலப்படுத்தியவர்கள் நமது ஆசிரியர்கள்தான். நகர்ப்புற மாணவர்களுக்கு எப்படியோ, கிராம்பபுற மாணவர்களுக்கு இன்று வரை ஆசிரியர்களே அவர்களின் வழிகாட்டி!

முற்றிலும் கிராம்பபுறத்தைச் சேர்ந்தவனான எனக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் அதிகம். ஒழுக்கமான பிள்ளைகளிடத்தும், நன்றாக படிக்கும் பிள்ளைகளிடத்தும் ஆசிரியரின் அன்பு கூடுதலாக இருக்கும். கொஞ்சம் சுமாராகப் படிக்கும் எனக்கு ஆசிரியர்களின் அன்பு நிறையவே கிடைத்தது.

நான் தொடக்கப் பள்ளியில் பயின்ற நாட்கள் இன்றும் என் நினைவை விட்டு அகலவில்லை. மரத்தடி பள்ளிக்கூடம் இன்று பார்ப்பதற்கு அரிது. நான் 2-ஆம், 3-ஆம் வகுப்புகளில் மரத்தடியில் உட்கார்ந்து பாடம் படித்திருக்கிறேன். ஆசியர்களுக்கு நாற்காலியைத் தவிர ஒன்றும் இருக்காது. கர்மவீரர் காமராஜர் காலத்தில் அறிமுகப்பட்டுத்தப்பட்ட மதிய உணவு திட்டம் அமுலில் இருந்த நேரம். ஒரு மூன்று சக்கர மோட்டார் வண்டி பெரிய சத்தத்தோடு கருப்பு நிற ‘கேன்’களில் கோதுமையால் செய்யப்பட்ட ஒரு உணவை எடுத்து வரும். அது எங்கிருந்து தயார் செய்யப்பட்டு வருகிறது என்பது தெரியாது. ஆனால் மிகவும் சுடச்சுட இருக்கும். சாப்பாட்டு மணி அடித்ததும் எல்லோரும் வரிசையில் உட்காருவோம். 5-ஆம் வகுப்பு படிக்கும் திடகாத்திரமான மாணவர்களே எல்லோருக்கும் பறிமாறுவார்கள். அப்படி ஒருமுறை வரிசையில் உட்கார முண்டியடித்தபோது அப்போதைய தலைமையாசிரியர் என்முதுகில் அறை கொடுத்ததை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. அவரின் பெயர் பீதாம்பரம். 

5-ஆம் வகுப்புக்கு மாறிய போது கணிதப்பாடம் மாதாந்திரத் தேர்வில் முழு வெள்ளைத்தாளில் எழுத வேண்டியவற்றை குட்டிக்குட்டியாய் நுணுக்கி, நுணுக்கி எழுதி அரைப்பக்கத்திலேயே முடித்திருந்தேன். இந்த காரணத்துக்காக 100க்கு 100 கிடைக்க வேணைடிய எனக்கு 98 மதிப்பெண்கள் போட்டு என்னைக் கண்டித்து தேர்வு எழுதும் முறையைக் கற்பித்தவர் திருமதி. மனோன்மணி டீச்சர். அப்புறம் திருமூர்த்தி சார், கோபால் சார் என ஒரு சிலரே ஞாபகத்தில் இருக்கின்றனர்.

உயர்நிலைப்பள்ளியில் என் கிராமத்திலிருந்து 3 கி.மீ. நடந்துபோக வேண்டும். அங்கும் எனக்கு வழிகாட்டியாக துர்கா டீச்சர், தமிழாசிரியை மனோன்மணி டீச்சர், தமிழாசிரியர்கள் திரு. தங்கராசு, திரு. அமரன், திரு. நாராயணசாமி ஆகியோர்களும், 8,9 வது படிக்கும்போது ,திரு.கண்ணபிரான், திரு. ஜான் மனோகர், திரு. அப்பாசாமி, திரு. ராஜரத்தினம் ஆகியோர்களும் முக்கியமானவர்கள்.

மேல்நிலை வகுப்புக்கு போனபோது ஆசிரியர்களும் நாங்களும் மிகவும் நெருக்கமானோம். தமிழாசிரியர் திரு. சைலவாசன், ஆங்கில ஆசிரியை திருமதி. கோமதி, தாவரவியல் துறை ஆசிரியர் திரு. ராமகிருஷ்ணன், விலங்கியல் துறை ஆசிரியை திருமதி. சாந்தி எமி, வேதியியல் துறை ஆசிரியை திருமதி. மங்களம், இயற்பியல் துறை ஆசிரியர்களான திரு. மாசிலாமணி, திரு. சுந்தர்ராஜன் என இவர்கள் எல்லோருமே நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் போதித்தவர்கள். தனிப்பட்ட முறையிலும் அன்பு செலுத்தியவர்கள். கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு கல்வி போதித்தவர்கள் என்பதால் இவர்கள் மட்டும் அடிக்கடி ஞாபகத்தில் வந்து போவார்கள்.

தொழில் கல்வி படித்த போது இன்றைய வேலைக்கும், வாழ்க்கைக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த ஆசிரியர்கள், திரு. கதிர்வேலு, திரு. செல்வராஜ், திரு. பாலசுப்பிரமணியன் ஆகியோர்களும் மிக முக்கியமானவர்கள்.

சென்னையில் படித்து வளர்ந்து, இந்தியாவின் மிக உயரிய தகுதியான ஜனாதிபதி பதவிவரை உயர்ந்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் இந்த வேளையில் நானும் ஒரு ஆசிரியன் (தொழில் கல்வி பயிற்றுனர்) என்ற வகையில் பெருமையடைகிறேன்.

இந்தப்பதிவை என்னை வார்த்தெடுத்த எல்லா ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றியோடு சமர்ப்பிக்கிறேன்.
என்றும் நட்புடன்,