அழகி! என்னை ரொம்பவும் பாதித்த திரைப்படம். பொதுவாக பெண்கள்தான் திரையில் துக்கமான காட்சிகள் வந்தால் உடனே தாமும் கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிடுவார்கள். காரணம் எதுவாகவும் இருக்கலாம். கதையோடு ஒன்றிப் போவதிலிருந்து அவர்களுக்கு ஏற்பட்ட மனத்தழும்புகள் வரை அதற்கு காரணம் சொல்லலாம்.
சோகத்தைப் பிழிந்தெடுக்கும் சிவாஜி கணேசனின் சினிமாக்களைப் பார்த்தபோது கூட நான் கண் கலங்கியதில்லை. ஆனால் இந்த அழகியைப் பார்த்ததும் கண்களில் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அப்படியொரு பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அதில் அழகியாய் உருமாறியிருந்த நந்திதா தாஸ். பார்த்திபனின் நடிப்பும் குறை சொல்வதற்கில்லை. தங்கர்பச்சானை ஒளிப்பதிவாளராக மட்டுமே அறிந்திருந்த நான் அவர் இயக்கிய அழகியைப் பார்த்ததும் அவரின் ரசிகனாகவே மாறிவிட்டேன்.
என் கிராமத்தின் பள்ளிக்கூடத்து வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருந்ததும் ஒரு காரணம். காதல், நட்பு, பிரிவு, பொறாமை, சந்தேகம், பரிதவிப்பு, பாசம், மனிதாபிமானம், குழந்தைத்தனம், விட்டுக்கொடுத்தல், போன்ற எல்லா குணாதிசியங்களையும் ஒருங்கே காட்ட எப்படி முடிந்தது இந்த தங்கர்பச்சானால்!? காதலித்தவர்களையும், காதலிக்கப்பட்டவர்களையும், நட்பை உயிராய் நினைத்தவர்களையும் நிச்சயம் இந்தத் திரைப்படம் பாதித்திருக்கும்.
ஒரு சமயம் இதன் டி.வி.டியை கையில் வைத்துக்கொண்டு என் வேற்று மொழி நண்பர்களுக்கெல்லாம் கொடுத்து பார்க்கச்சொல்லி அவர்களின் கருத்துக்களை ஆவலோடு கேட்டிருக்கிறேன். அப்படி ஒரு ஈர்ப்பு இருந்தது அந்தப்படத்தின் மேல். நான் இதுவரை சினிமா விமர்சனம் எழுதியதில்லை. இப்போது அந்தப் படத்தைப் பார்த்து வரிக்கு வரி விமர்சனம் எழுதுவதும் வீண் வேலை அல்லவா.
அதனால் 27.01.2002 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான ‘அழகி’ யின் சினிமா விமர்சனம் இங்கே உங்களுக்காக......
பண்ருட்டி என்றால் பலாப்பழம்தான் நினைவுக்கு வரும். இனி தங்கர்பச்சானின் ‘அழகி’யும்! அந்த அளவுக்கு இந்தப் படத்தின் முதல் பாதியில் நம்மை ஊரோடு ஒட்டி உறவாட வைத்துவிட்டார் பச்சான்!
அறியாப் பருவத்தில் தெரியாமலே நம் மனதுக்குள் குடிகொண்டுவிடுகிற காதலும் காலாகாலத்துக்கும் அது பண்ணுகிற அவஸ்தைகளும்தான் கதை.
பாடப்புத்தகத்தில் பதுக்கி வைத்த மயிலிறகு மாதிரி பால்யகால நினைவுகள்தான் ஒவ்வொரு ஜீவனையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்பதை சண்முகம் (பார்த்திபன்), தனலட்சுமி (நந்திதாதாஸ்) பாத்திரங்கள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் எண்ணெய் வழியும் தலைகளும், மூக்கொழுகுகிற முகங்களும், அழுக்கு உடுப்புகளுமாக சின்னஞ்சிறிசுகள் பெருக்கல் வாய்ப்பாட்டை தலையை ஆட்டி ராகமாகப் பாட ஆரம்பிக்கும்போது நாமும் அவர்களுடன் சேர்ந்து ‘மூவிரண்டு ஆறு’ சொல்கிறோம்! வகுப்பாசிரியரை அவர்கள் கோட்டா செய்யும் போது குதூகலிக்கிறோம்!
இடுப்பிலிருக்கும் பட்டுப்பாவாடை மாதிரியே ரவிக்கையின் இரண்டு கைகளிலும் வட்டமாக பூண் மாதிரி பட்டு மின்ன, எட்டு வயது தனலட்சுமி முதன்முறையாக வகுப்புக்குள் நுழையும்போது பசங்களின் கண்களில் பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறப்பது பரவசம்!
அதென்ன ஆசையா, பாசமா, மயக்கமா, கிறக்கமா என்று எந்தத் தெளிவுமில்லாத சின்னஞ்சிறு வயதில் சண்முகமும் தனலட்சுமியும் பழகுவதில் துவங்கி அடுத்த முப்பது வருடங்களில் அவர்களின் வாழ்க்கையை வெவெவேறு திசைகளில் எப்படியெல்லாம் கிளைவிட்டுப் பிரிகிறது என்பதை மூன்று பகுதிகளாகத் தொகுத்திருக்கிற விதம் அழகு!
பத்தாம் வகுப்பில் தனலட்சுமி ஃபெயிலாகி விட, சண்முகம் மேலே படித்து, ஊர்மாறிச் சென்று, கால்நடை மருத்துவராகி, வளர்மதியை (தேவதானி) மணம்புரிந்து, இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகிவிட்ட பின்னரும் தனலட்சுமியுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த பால்ய நாட்களின் பசுமை நினைவுகளால் தாக்கப்படுவது படு இயற்கையாக விவரிக்கப்படுகிறது.
கிழிந்த புடவையும் கலைந்த தலையுமாக பொலிவிழந்த விதவையாக நந்திதா தாஸ் நாலையோரத்தில் விபத்தில் அடிபட்ட தன் மகனுடன் உட்கார்ந்திருந்ததைப் பார்ததும் பதற்றப்படும் பார்த்திபன், தன் வீட்டுக்கே அவரை அழைத்து வந்து பணியில் அமர்த்திக்கொள்வதே கூட நெருடல் இல்லாமல் சொல்லப்படுகிறது.
உச்சகட்டம் ஓர் உணர்ச்சிக் குவியல்! கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகனை அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு ந்நதிதா தாஸ் காணாமல் போய்விட, அந்த இல்லம் தேடிச்சென்று அந்த பாலகனை பார்த்திபனும் தேவயானியும் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவதும், மகனைப் பார்ப்பதற்காகவாவது நந்திதா தாஸ் திரும்பி வருவார் என்று பார்த்திபன் நம்பிக்கையோடு காத்திருப்பதாகவும் படத்தை முடித்திருப்பது நிறைவு!
வாழ்க்கையின் அத்தனை வலிகளையும் முழுங்கிவிட்டு இளம் விதவையாக, கூலித் தொழிலாளியாக, வீட்டு வேலைக்காரியாக வளைய வருகிற நந்திதா தாஸின் கண்களும் புன்னகையும் இன்னமும் மனசைப் பிசைகின்றன.
புதிய பார்த்திபன் இதில் தெரிகிறார். ‘இன்னாங்கடா டேய்!’ டைப் ரவுசுகள் இல்லாமல், நக்கல் வசனங்கள் இல்லாமல் ஒரு பக்கவப்பட்ட மனிதனாக வருகிறார்.
கணவனை நேசிக்கும் மனைவிக்குரிய இயல்பான ‘பொஸ்ஸ்ஸிவ்னஸ், அதனால் வரும் சந்தேகம் அவற்றையெல்லாம் மிக இயல்பாக வெளிப்பட்டுத்தியிருக்கிறார் தேவயானி.
ஏற்கனவே சற்று பலவீனமான பின்பாதியை மேலும் சோகையாக்குகிறது விவேக்-பாண்டுவின் காமெடி மற்றும் அந்த கரகாட்ட டான்ஸ். விநியோகஸ்தர்கள் கேட்டுக்கொண்டதால் இதை சேர்த்துக்கொண்டார்களோ!?
பாடல்களைவிட பின்னனி இசையில் பின்னி எடுக்கிறார் இளையராஜா. பார்த்திபனின் கைக்குழந்தையை முதல் தடவையாக மடியிலிட்டு குளிப்பாட்டும்போது, பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’வை மென்மையாக இசைப்பது ராஜ ரசனை!
‘கல்வெட்டு’ என்கிற தலைப்பில் தங்கர்பச்சான் எழுதிய சிறுகதையே ‘அழகி’ வடிவம் பெற்றிருக்கிறது.
முதல் பாதியில் அந்தச்சிறுகதை கவிதையாகி இருக்கிறது. பின்பாதியில் அதுவே சினிமாவாகிவிடுகிறது.
மார்க் 100 க்கு 48.
‘திண்ணை’யில் 2002 ஜூனில் யமுனா ராஜேந்திரன் எழுதிய விமர்சனம்.
‘பால்ய கால நட்பு என்றுமே அமரத்துவம் வாய்ந்தது. அதுபோலவே பள்ளிக்கூடக் காதலும் அமரத்துவம் வாய்ந்தது. இந்த அமரத்துவம் தான் அழியாத கோலங்களையும் அழகியையும் அமரத்துவமான கதைகளாக்குகிறது. அழகி அழியாத கோலங்களின் நீட்சியான சமகாலக் கதை. ஆண் பெண் உறவில் நட்பு, காதல், உடல் உறவு, தோழமை போன்றவற்றுக்கு இடையிலான எல்லைகள் உருகிவழிந்துவிடும் இடங்களில் தங்கர்பச்சான் கத்திமுனைப் பயணம் செய்திருக்கிறார்.
காதலுக்கும் நட்புக்கும் இடையிலான கூடார்த்தம் படத்தில் மிக நுட்பமாகச் சொல்லப்படுகிறது. இன்றைய சமூக நெருக்கடியில் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருக்கும் மனசாட்சியின் அடிப்படையில் அமைந்த மனிதநேயத்தை துளிர் போன்று நமக்குள் கிளர்த்தியிருக்கும் படம் அழகி.
படத்தின் பின்பகுதி அபததங்களை, ரிக்கார்ட் டான்ஸ், தோட்டத்தில் நடக்கும் பாட்டும் கூத்தும், விவேக்கின் விட்டு விலகிய அரசியல் நகைச்சுவை என்பனவற்றை விட்டுவிடுவது நல்லது. அதைக் கழித்துவிட்டால் கூட கதையும் கருத்தும் நிற்கிறது.
காட்சிகளும் உறவும் சித்தரிக்க்ப்ட்ட விதம்தான் படத்தின் அழகு. காட்சிகளை ஒவ்வொன்றாகச் சொல்லி மாளாது. தேர்ந்த கலைஞனிள் மேதைமை கொண்டவை சில காட்சிகள். சிறுவனுக்கு நேர்ந்த விபத்தைத் தொடர்நது வரும் காட்சிகள், மழை பெய்து முடிகிற வரையிலான காட்சிகள் கவிதை மயமான காட்சிகள். இளையராஜா கிராமத்துப் புழுதியை, அன்று பெய்த மழையில் குழைத்துத் தந்திருக்கிறார். உலகமயமாதல், கலப்பிசையை உன்னதம் என்று முன்வைக்கிறது. ஆனால் மண்ணின் இசைதான் மனித மனதுக்கு ஆன்மாவின் இசை. கலப்பிசை காதுக்குத்தானேயொழிய மனசுக்கு அல்ல. படத்திற்கு பினன்ணி இசை என்பது மன அவசங்கள் வாழ்வுக்குத் தரும் மானுட அர்த்தம் போன்றது.
இப் படத்திற்கு முன்னோடிகள் தமிழ் சினிமாவில் இருக்கிறதுதான். பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், மகேந்திரனின் பெண் சித்தரிப்புகள் என அழகிக்கு முன்னோடிகள் இருக்கிறதுதான் என்பதில் சந்தேகமில்லை.
அழகி இன்று எவ்வகையில் முக்கியமான படம் ? விடலைப் பையன்களின் காதல் படங்கள், தமிழ் திரைவெளியை ஆக்கிரமித்திருக்கிற சூழலில், சங்கரின் வழித்தோன்றல்களாக சின்னச்சங்கர்கள், தில் மாதிரி ஜெமினி மாதிரி பேட்டை ரவுடிப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் வந்ததால்தான், இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. அலட்டிக் கொள்ளாத நந்திதா தாஸ், பார்த்திபன், அவரது குழந்தைகள், நந்திதாவின் மகன் போன்றோரின் நடிப்பினால்தான் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.
சோகத்தைப் பிழியும் காட்சிகள் இருக்கிறது என்பது உண்மைதான். சிவாஜி கணேசன் தோன்றிய தமிழ் சினிமாவில் இவையில்லாமல் எப்படி உணரச்சிகளைச் சொல்லிவிடமுடியம் ? அல்லது மக்களுக்குப் பிற்பாடு துயரம் என்பதை¢ எப்படித்தான் தொற்றவைக்க முடியும் ?. அழகி நம் காலத்தின் அழியாத கோலமாக ஆகிவிட்டவள்.
அழகி படத்தின் அதி வெற்றிக்கு முக்கியமாக இருப்பது அதனது பாத்திரங்களுக்கேற்ற அதியற்புதமான நடிகர் தேர்வாகும். பால்ய வயதுத் தோற்றமும், இளைய வயதுத் தோற்றமும் பிற்பாடு நந்திதா தாஸ் பார்த்திபன் குணசேகரன் ஆனபிறகு ஆன தோற்றமும், உடல் மொழி, உச்சரிப்பு, முக அமைப்பு என்று எவ்வளவு நேர்த்தியாகவும் பிரக்ஞையுடனும் தர்க்கபூர்வமாகவும் இயக்குனர் தேர்ந்து கொண்டிருக்கிறார் என நினைக்கிபோது மலைப்பாக இருக்கிறது.
அழகியின் முக்காலத்திலான அந்த மூன்று அழகான பெண் முகங்களும் நம் கண்ணிலிருந்து அகல்வது இனி நடக்கவே நடக்காது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"சினிமா: திரை விலகும்போது" என்ற புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் ‘வெண்ணிற இரவுகள்’ என்ற வலைப்பக்கத்தில் காண நேர்ந்தது.
//‘அற்பவாதம் என்பது மனிதனை முன்னேற விடமால் இருக்கும் சிந்தனை ...............இந்த காதல் படங்கள் எண்ணங்களை தூண்டி விட்டு போகின்றன .................அதுவே அற்பவாதம் ....இதனால் சமூகத்திற்கு என்ன பயன் இதன் சமூக மதீப்பீடு என்ன .......மனதை வீழ்த்தும் இம்மாதிரி படைப்புகள் தேவையா என்ன??’//
இந்தப் பதிவரின் விமர்சனமும் வாசகர்களின் கருத்தும் என் கவனத்தைக் கவர்ந்தன.
4 கருத்துகள்:
இந்த அழகி எனக்கும் கூட பிடித்தமானவள் கவிப்ரியன். பகிர்வுக்கு நன்றி!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஞானசேகரன்!
Enter your comment... அதிக தாக்கத்தை ஏற்படுத்திய படம்.நந்திதாதாஸ். பார்த்திபன். இளையராஜா. தங்கர் பச்சான் இவர்களின் பங்களிப்பு மிகவும் அருமை.2002ன் சிறந்த படம் அழகி!
அழகி,இது படம் அல்ல இது சினிமா அல்ல
********அழகி ஒர் காவியம்*********
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!