MADRAS 21.12.1992.
அன்புள்ள சகோதரனுக்கு உன் அன்பை என்றும் மறவாத சகோதரி எழுதிக்கொள்வது. உன்னுடைய கடிதம் வந்து சேர்ந்தது. அப்பப்பா எவ்வளவு எழுதியிருக்கிறாய். படிக்கப் படிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. ஆனால் உடனே பதில் எழுதாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.
மகளுக்கு தேர்வு ஆரம்பமாகி விட்டதால் அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கவும், வீட்டிலுள்ள வேலைகளைக் கவனிக்கவுமே நேரம் சரியாக இருந்தது. அதனால்தான் உடனே பதில் எழுத முடியவில்லை.
மற்றும் உன் கடிதத்திற்கு பதில் மட்டும் எழுதுவதாயிருந்தால் உடனே எழுதி இருப்பேன். ஆனால் நீ உன் கவிதைத் தொகுப்பைப் பற்றியும் எழுதுமாறு கேட்டிருந்தாய். கவிதைகளைப்பற்றி குறை நிறை கூற வேண்டுமென்றால் சிந்திக்க வேண்டும். சிந்திக்க நேரமும் வேண்டும்.
உன்னைப்போல் கவிஞர்களாய், எழுத்தாளர்களாய் பிறந்தவர்களுக்கு அது மிகவும் சுலபம். நீங்கள் எழுத உட்கார்ந்து, பேனாவை கையில் எடுத்தாலே உங்கள் பேனாவும், கையும், சிந்தனையும் சேர்ந்து, ஒரு கதையை, கவிதையை ஏன் ஒரு காவியத்தையே கூட உருவாக்கிவிடும். அதற்காக தனி நேரம் ஒதுக்கத் தேவையில்லை.
ஆனால் என்னைப்போல் உள்ளவர்களுக்கு ஏன் எனக்கு அதிக நேரம் தேவை. மேலும் கடிதம் எழுதவே தடுமாறுமாற்றமாக இருக்கிற எனக்கு கவிதைகளைப் பற்றியும், கவிஞர்களைப் பற்றியும் எழுதவேண்டும் என்றால் என்ன தகுதி இருக்கிறது, இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
உன்னுடைய கவிதைகள் ஒவ்வொன்றும் மிகவும் அற்புதம். அவற்றைப் பாராட்டும் அளவிற்கு கவிதை அறிவு இன்னும் எனக்கு வளர்ச்சி அடையவில்லை. ஆனால் நிறைய புகழவேண்டும் போல் இருக்கிறது. படிக்கப்படிக்க மிகவும் இனிமையாக இருக்கின்றது. சில விரக்திகளும், வேதனைகளும், தோல்விகளும் உன்ன்னுள் (கவிதைகளுக்குள்) ஒளிந்திருப்பதும் தெரிகிறது.சில மகிழ்ச்சிகளும், உண்மைகளும் கலந்திருப்பது தெரிகிறது.
கம்ப்யூட்டர் படிப்பதாக எழுதியிருந்தாய் மகிழ்ச்சி தொடரவும். பெண் பார்க்கும் விஷயம் பற்றியும் விரிவாக எழுதவும். என் கடிதங்கள் தாமதமாக வரும் அதற்காக வருந்த வேண்டியதில்லை. ஏன்னா மூளை சீக்கிரம் ஒர்க்கவுட் ஆவதில்லை. மன்னிக்கவும். நிறைய பிழைகள் இருக்கும், திருத்திக் கொள்ளவும். புத்தகங்களை முடிந்தபோது கொண்டு வரவும்.
அன்புடன்,
உன் சகோதரி.
4 கருத்துகள்:
கவிப்பிரியனே உம் கடிதங்கள் கடிதங்கள்மீது காதலை உண்டுபண்ணுகிறதே. கடிதங்கள் எழுதியதெல்லாம் கனாக்காணும் காலங்களாகிவிட்டதே.
வருக அம்பலத்தாரே! கடிதங்கள் எதழுதுவதிலும் வரும் பதில் கடிதங்களைப் படிப்பதிலும் உள்ள ஆனந்தம் அலாதியானது நண்பரே! ஆம் கனாக்காணும் காலங்கள்தான். ஆனால் கலைந்து போகும் மேகங்கள் இல்லை.
கடிதங்கள் எல்லாமே அற்புதம். எங்களுக்கும் படிக்கப்படிக்க ஆவலாய் இருக்கிறது.
வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி ஞானசேகரன் அவர்களே!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!