Tuesday, August 30, 2011

சுவையான கடிதங்கள், சுவாரஸ்யமான பின்னனி!


மறக்க முடியாத நண்பர்கள் பதிவின் தொடர்ச்சி.....எனக்கு அறிமுகமான நண்பரின் செய்தியும், என்னுடைய செய்தியும் ஒரே பத்திரிகையின் அட்டைப் படத்திலேயே வெளிவந்தது என்றால் அது ஆச்சர்யம்தானே! அதுவும் நான் எழுதியது அவருக்குத் தெரியாது, அவர் எழுதியது எனக்குத் தெரியாது.
 
‘கல்கியின் முகப்பிலேயே எங்கள் ஊரின் பள்ளிக்கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆகியவை இடம் பெற்றிருந்தது. கூடவே எனுடைய நண்பர் சண்முகத்தின் போட்டோ, அப்போதைய மாவட்ட ஆட்சியர் திருமதி. மாலதி IAS, எல்லாமே அட்டைப் படத்தில்! சந்தோஷத்திற்குச் சொல்லவா வேண்டும். ஆனால் இந்த சந்தோஷத்திலும் வேதனையான விஷயம் இதற்கு காரணமான என் பெயர் எங்குமே இல்லை. இதில் என்ன ஆறுதல் என்றால் வேறு யார் பெயரையும் போடவில்லை என்பதே! நான் ஊரில் இல்லாமல் பெங்களூரில் பணிபுரிந்ததும் காரணமாக இருக்கலாம்.அப்படி என்னதான் எங்களூரில் பிரச்னை? 1. நகரப்பேருந்து வந்து செல்லும் எங்களூரின் தார் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. 2. ஊரின் பள்ளிக் கட்டிடம் வெகுநாட்களாக கட்டிமுடிக்கப்படாமல் இருந்தது. 3. பாலாற்றிலிருந்து குழாய்மூலம் கொண்டுவரப்படும் குடிநீர் பிரச்னை. 4. நிலத்தடி நீராதாரமான குளத்தை தூர்வாரி ஆழப்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளைத்தான் நான் ‘கல்கிக்கு எழுதி அனுப்பியிருந்தேன். ஆனால் நான் பணிபுரிவதோ பெங்களூரில்....

கல்கியின் நிருபர்கள் என்னைத்தேடி ஊருக்கு வந்ததும் தெரியாது, புகைபடம் எடுத்ததும் தெரியாது. யாரோ ஒருவர் என் சார்பில் ஊரில் விளக்கி இருகிறார்கள், அவ்வளவுதான். பத்திரிகையின் பலம் என்னவென்று எனக்கு அப்போதுதான் தெரிந்தது. ‘கல்கியில் செய்தி வந்த ஒரு மாதத்திற்குள் எங்களூரின் பிரச்னைகள் பாதிக்குமேல் தீர்க்கப்பட்டுவிட்டன. அதன் பிறகு சில மாதங்கள் கழித்து பத்திரிகையிலிருந்து பிரச்னைகள் நிலை குறித்து ரீவிசிட் செய்தும் செய்தியாக வெளியிட்டார்கள்.


இந்த நிகழ்விற்குப் பிறகுதான் பாலசண்முகம் அவர்களோடு கடிதம் மூலம் தொடர்பு கொள்ளுமளவுக்கு நெருக்கமானேன். இவரின் கடிதங்கள் எல்லாம் சமூக அரசியல் தொடர்பானவை. பெரும்பாலும் என் உணர்வுகளோடு ஒத்துப்போனவை. அப்போதெல்லாம் இந்தக் கடிதங்களின் முக்கியத்துவத்தை உணராமல் நிறைய கடிதங்களை குப்பைத் தொட்டியில் போட்ட சம்பவங்களும் உண்டு. எஞ்சியிருக்கும் கடிதங்களே உங்கள் பார்வைக்கு!
அப்போதைய நண்பர்கள், தோழிகள் எனக்கு எழுதிய கடிதங்களை ஆவணப்படுத்தும் முயற்சிதான் இது என்றாலும், சுவையான கடிதங்களை மட்டுமே தேர்வு செய்து சுவாரஸ்யமான பின்னனியையும் சேர்த்து சொல்லப் போவதால் நிச்சயம் பதிவுலக வாசகர்களால் வரவேற்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

கடிதங்கள் பற்றிய மிக அருமையான கவிதை ஒன்று.... 

தொலைந்து போன பொருள் ஒன்றைத்
தேடி கொண்டு இருக்கையில்..
என்றோ நான் எழுதிய கடிதமொன்று
என் கைகளில் சிக்கியது.. !!
கடைசியாக நான் கடிதம் எழுதியது
எப்போது..? என் நினைவில் இல்லை.. !!

மேலும் படிக்க பொன்னியின் செல்வன் என்ற இந்த வலைப்பக்கத்தில் கடிதங்கள் என்ற இடுகையைப் போய்ப் பாருங்கள். 

என்றும் நட்புடன்,


 Thursday, August 25, 2011

மறக்க முடியாத நண்பர்கள்


 மறக்க முடியாத நண்பர்கள் பட்டியல்ல என் நண்பன் சுப்பிரமணிக்கு முக்கிய இடம் உண்டு. ஏழ்மையிலிருந்து வந்ததால் மிகவும் எளிமையாக இருப்பான். நல்லா விவாதம் பண்ணுவான். எல்லார்கிட்டயும் பழகினாலும் என்கிட்ட பாசமா இருப்பான். விடுதியிலே தங்கி படிக்காம தனியா அறை எடுத்து தங்கி படிச்சதுனால, சாப்பாட்டு ருசிக்காக நான் வீட்டிலிருந்து கொண்டுவரும் டிபன் பாக்ஸை காலிபண்ணிடுவான். அப்பறம் நாங்க அவன் அறைக்கு போய் அவன் செஞ்சு வச்சிருக்கிற சாப்பாட்டை காலிபண்ணுவோம்.


ம்... அதெல்லாம் ஒரு காலம். இதுல ஒரு விஷயம் அவங்க ஊர்ல இருக்கிற நண்பரைப் பற்றி சதா சொல்லிக்கிட்டே இருப்பான். அவர் பேரு பாலசண்முகம். அவருதான் எனக்கு குரு. அவருதான் எனக்கு எல்லாமே அப்படின்னு செல்ல்லுவான். ஊர்ல எந்த பிரச்சனையானாலும் இவர் பெயர் அடிபடுமாம். எனக்குள்ளவும் அதே மாதிரி ஓரு துடிப்பு எப்பவும் இருந்துகிட்டே இருக்கும். நாமும் நம்ம ஊருக்கு ஏதாவது செய்யனும்னு நினைப்பேன்.ஆனாலும் படிக்கிற வயசில்லையா அடக்கி வாசிச்சேன்.

இந்த பாலசண்மும் என்பவரை பார்க்கனும்கிற ஆவல் நிறைய இருந்தாலும் படிப்பு முடியும் வரை சந்தர்ப்பம் கிடைக்கலை. என் நண்பன் சுப்பிரமணியோட கல்யாணத்துக்கு அவன் ஊருக்கு போன பிறகுதான் பார்க்க முடிஞ்சுது. அதோட சரி. நானும் மறந்தாச்சு. அவரும் மறந்தாச்சு. படிப்பு முடிஞ்சி, ட்ரெயினிங் முடிஞ்சு எங்க ஊர் நண்பர் கண்ணன் என்பவர் மூலமா முதன்முறையா பெங்களூருக்கு வேலைக்குப் போனேன்.


இந்தப் பத்திரிகைகளில் வாசகர் கடிதம்னு ஒண்ணு வருமே, அதுமேல எனக்கு ஒரு அலாதி ஈர்ப்பு அப்போ. ரொம்ப பெரிய மேதாவிங்களாட்டம் நாட்டு அரசியல் பத்தி, அரசியல் தலைவர்களைப் பத்தி, நாட்டு நடப்புகள் பத்தியெல்லாம் பலபேரு கருத்து சொல்வாங்க. ஏன் பத்திரிகை தலையங்கமே சரியில்லைன்னு கூட அதே பத்திரிகைக்கு எழுதுவாங்க. வேலூர் மாவட்டத்துல ஒரு சின்ன குக்கிராமத்துல பொறந்த எனக்கு, இதெல்லாம் அப்போ ஆச்சர்யமான விஷயம். எனக்கும் ஆசை துளிர்த்துச்சு. நாமளும் எழுதுனா என்ன?

இதுக்கு முன்னோடி நிச்சயமா திரு. சண்முகம்தான். பெங்களூருல வேலை பார்த்துக்கிட்டு ஊருக்கும் மாசத்துக்கு ஒருவாட்டி வந்து போய்க்கிட்டிருந்தேன். அப்பதான் கல்கில எங்க வடார்க்காடு மாவட்டத்து பிரச்சனைகள் பற்றி நாம தெரிவிச்சா, அவங்க அதை பத்திரிகைல வெளியிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்கிட்டயும் அதுபற்றி கேட்டு வெளியிடப்போறதா அறிவிப்பு வந்துச்சு. இதுதான் நமக்கு கிடைச்ச சான்ஸ். இதை விடக்கூடாதுன்னு தோணுச்சு. எங்க ஊர்ல இருக்கிற நாலு பிரச்சனையை கல்கிக்கு எழுதிப்போட்டுட்டு என் வேலைய பார்க்க பெங்களூருக்குப் போயிட்டேன்.


அந்த பெங்களூர் கம்பெனில நூலகம் மாதிரி ஒரு அமைப்பு உண்டு. தமிழ் பத்திரிகைகள் எல்லாம் வரும். நாம ரெஜிஸ்டர்ல என்ட்ரி பண்ணிட்டு புக்கை வீட்டுக்கு எதுத்துகிட்டு போகலாம். புதுசா வர்ற வாரப்பத்திரிகைகளை எதுத்துட்டுப் போக போட்டி கூட இருக்கும். அதுல கல்கியும் உண்டு. 

நான் கல்கிக்கு எழுதிப்போட்ட மேட்டர மறந்து போனதால கல்கி புக்குக்கு ஆர்வம் காட்டல. ஆனா யாரும் சீண்டாம கிடந்த புக்கை நாம எடுத்துக்கிட்டு போகலாம்னு கைல எடுத்தா ஆச்சர்யம் தாங்க முடியல. எங்க ஊர் பேரும், போட்டோவும் அட்டையிலே!!!

மறக்க முடியாத நண்பர்கள்னு ஆரம்பிச்சிட்டு எங்க ஊரப்பத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டேன் இல்ல. கரணம் இருக்கு, இந்த கல்கி விஷயத்துல இருந்துதான் திரு. பாலசண்முகம் அவர்களும், நானும் ரொம்ப நெருக்கமா ஆனோம். என் நண்பன் லைன்லேயே இல்ல.

இப்படியான சம்பவம் பல நட்பு வட்டங்கள்ல நடந்திருக்கு. நம்மள அறிமுகப் படுத்தினவங்கள ஓரங்கட்டிவிட்டு மத்த ரெண்டுபேரும் க்ளோஸாயிடறது. ஆண்-பெண் நட்பு வட்டத்துல இதனாலேயே பெண்கள் தன் ஸ்நேகிதனை யாருக்கும் அறிமுகப்படுத்தறதே இல்லை.

தொடர்ந்து வாங்க, நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு.

Monday, August 22, 2011

அன்புள்ள மன்னவனே.. ஆசையில் ஓர் கடிதம்...

கடிதம் எழுதுவது ஒரு கலை. அது எல்லோருக்கும் கை வந்துவிடுவதில்லை. வார்த்தை ஜாலங்கள் விளையாட எழுதுவோரும் உண்டு. நீ சௌக்கியமா, நான் சௌக்கியமே போன்ற நலம் விசாரித்தலோடு நின்று விடுவோரும் உண்டு.

தூரத்தைக் கணக்கில் கொண்டுதான் கடிதங்கள் எழுதப்பட்டன. இதில் பிரிவுத்துயர் முக்கியமான இடத்தைப் பிடித்து விடுகிறது. காதலன் காதலிக்கு மட்டுமல்ல, கணவன்-மனைவி, தாய்-பிள்ளை, சகோதரர்களுக்குள், நண்பர்களுக்குள் என்று மிகப்பரந்த எல்லை கொண்டது இந்த கடிதப் பறிமாறல்கள்.


பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை STD CALL போட்டுப்பேசுவதே அரிது. அதிலும் ISD CALL -லோ கேட்கவே வேண்டாம். எனவே அப்போதைக்கு விரிவாய் எல்லா விஷயங்களையும் பறிமாறிக்கொள்ள ஒரே வழி கடிதம் மட்டுமே!

நமக்கு நெருக்கமானவர்கள் மீதுதான் அன்பு, வெறுப்பு, கோபம் என எல்லாவற்றையும் ஒருசேரக் காண்பிக்கிறோம். இதிலேயே கூட முகத்துக்கு நேரே காண்பிக்க விருப்பமில்லாமல் கடிதம் மூலம் தெரிவிப்பதும் ஒரு வகை. நேரிலே பேசத்தயங்கும் எல்லா விஷயங்களையும், பகிர்ந்து கொள்ள கடிதம் ஓர் உற்ற துணைவன் போல செயல்பட்டிருக்கிறது. வார்த்தை வீச்சுகளின் உக்கிரத்தால் அதே கடிதங்களினாலே பிரிந்து போனவர்களும் இருக்கக்கூடும்.

கடிதம் எழுதும்போது இருக்கும் அந்த மனோநிலை கிட்டத்தட்ட தியானம் போல. எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்து விடவேண்டும் என்கிற மனோநிலை அது. அனுபவப்பட்டவர்களுக்கு இது தெரியும். எழுத்தாளர்களுக்கும், இப்படி கடிதம் எழுதுபவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை. எழுத்தாளர்கள் அடுத்தவர்களைப் பற்றி எழுதுகிறார்கள். கடிதம் எழுதுபவர்கள் தங்களைப்பற்றி எழுதிக்கொள்கிறார்கள் அவ்வளவே!

எழுதிமுடித்து அதை படித்துப் பார்க்கிறபோதுதான் நம் மனசிலிருந்து எத்தனை விஷயங்கள் வெளிவந்திருக்கிறது என்பது புரியும். இதற்கப்புறமும் குழப்ப நிலையே! இதை அனுப்புவதா வேண்டாமா? சிந்தனையே செய்யாமல் மடித்து ஒட்டி அனுப்புவோரும் உண்டு.மனநிலை மாறி கடிதத்தைக் கிழித்துப்போடுவோரும் உண்டு. இது எல்லாருக்கும் நேர்ந்த அனுபவமே!


இதில் காதல் கடிதங்கள் அலாதியானது. பண்டைய காலங்களில் ஓலைச் சுவடிகளில் எழுதிப் பாதுகாத்த மாதிரி இந்தக் காதல் கடிதங்களைச் சேகரித்திருந்தால் அவையும் பிற்காலத்தில் இலக்கியமாகலாம் யார் கண்டது?! அந்தரங்கம் என்கிற போர்வையில் எல்லா கடிதங்களும் கிழித்தோ, எரித்தோ போடப்பட்டு வருகின்றன. மனித மனம் எப்போது வக்கிரமாக மாறும் என்பது யாரும் அறியாத ஒன்று. உருகி உருகிக் காதலித்தவர்களும் சரி, நட்பாய் பழகியவர்களும் சரி, தங்களுக்குள்ளே பிரச்சனை என்று வந்துவிட்டால் பரம எதிரியாய் மாறி விடுவதுண்டு. அந்த நேரத்தில் அவர்களின் முதல் இலக்கு கடிதங்கள்தான். இதனாலேயே பல கடிதங்கள் அழிக்கட்டுவிடுகின்றன.

அடுத்தவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களில் ஆர்வம் காட்டுவது அநாகரிகம் என்றாலும் இப்படிப்பட்ட கடிதங்களில்தான் அவர்களின் சுயரூபங்களும், குணாதிசியங்களும், ஆசாபாசங்களும் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 'வளைத்தலும் வளைதலுமே காதல்' என்பார் எழுத்தாளர் பாலகுமாரன். ஒன்று சரணாகதி, இன்னொன்று சரண்டைய வைப்பது. இந்த்தப் போட்டா போட்டியை கடிதங்களின் வாயிலாக அறியும்போதுதான் எத்தனை சுவாரஸ்யம். மனிதகுலமே சுயநலங்களால் நிரம்பியதுதானோ என்கிற சந்தேகம் கூட வந்துவிடும்.

காரணமே இல்லாமல் பிரிந்து போன நட்புகளும் உண்டு. தொடர்பே இல்லாமல் வேறு இடங்களில் குடி பெயர்ந்து போய்விடும்போது அல்லது பல்வேறு காரணங்களால் தொடர்பு தானாகவே அறுந்து போய்விடுவதுண்டு. ஒத்துவரவில்லையென்றால் விலகிவிடுவதும், ஏதும் காரியம் ஆகவில்லை என்றாலும் விட்டுப்போன நட்புகளும் உண்டு.


புதிய இடம், புதிய பணிச்சூழல், புதிய நட்புகள் என்ற பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் கடித்தொடர்பு என்பது அறவே இல்லாமற் போய்விட்டது. எல்லாமே கைத்தொலைபேசியில் நிமிடத்தில் முடிந்து விடுகிறபோது கடிதம் என்பது இன்று அநாவசியமாகிப் போய்விட்டது. இணையமும் இப்படிப்பட்ட நட்புப் பறிமாறல்களில் முக்கிய அங்கமாய்ப் போய்விட்டது அல்லது வேறு ரூபம் எடுத்துவிட்டது என்றும் சொல்லலாம்.

நான் சிறுவனாக இருந்தபோது வீட்டின் ஒரு மூலையில் கம்பியைக் கட்டிவைத்து படித்து முடித்த கடிதங்களை அதில் குத்தி கோர்த்து வைப்பது வழக்கம். என் சித்தப்பா, பெரியப்பா வீடுகளிலும் இந்த வழக்கம் இருயந்தது. நானும் பின்பு இதே முறையில் கடிதங்களைக் கோர்த்து வந்தேன். ஆனால் இதில் ஒரு சங்கடம் இருந்தது. ஏதாவது பழைய கடிதங்களை மீண்டும் படிக்கவோ இல்லை அதில் உள்ள முகவரியைத் தேடவோ வேண்டுமென்றால், கடிதத்தின் நடுவில் குத்தி வைத்திருப்பதால் அதை எடுக்கும் போது கிழிந்து போக வாய்ப்புண்டு. எனவே ஒரு அட்டைப் பெட்டியில் சேகரிக்கத் தொடங்கினேன்.

நாளாக நாளாக அதிகம் சேர்ந்துவிட்ட காரணத்தால் முக்கியத்துவமில்லா கடிதங்கள், வாழ்த்து அட்டைகளைக் களைவதும் வாடிக்கையாய் இருந்தது. சரி இப்படி எத்தனை நாளைக்குத்தான் பாதுகாப்பது? அதன் முக்கியத்துவம்தான் என்ன? என் மனத்திருப்திக்காகவும், மறக்கமுடியாத அந்த பழைய நினைவுகளுக்காகவும் சில கடிதங்களை பாதுகாக்க நினைத்தாலும் என் மரணத்திற்குப் பிறகு அவை என்னவாகும்?! நிச்சயம் சபித்தலோடு அத்தனை கடிதங்களும் குப்பைக்கூடைக்குத்தான் போகும். அதைப் பிரித்துப் படிக்கக்கூட எதிர்காலத் தலைமுறையினருக்கு பொறுமை இருக்காது என்றே நினைக்கிறேன்.

எனவேதான் இந்த வலைப்பதிவு. இந்தக் கடிதங்கள் என் வாழ்வோடு பிணைந்த அந்தக் காலக்கட்டத்தின் வரலாறு. பெரிய மனிதர்களுக்கு மட்டுமே வரலாறு இருக்க வேண்டுமா என்ன? நான் சாமான்யன். ஆனாலும் என் இருப்பும் வாழ்வும் வரலாறாக்கப்படவேண்டும் என்று விரும்புபவன். அதன் சிறு முயற்சியே இது. இதற்கு ஊக்கமும் உற்சாகத்தையும் கொடுக்க எல்லா வலைப்பதிவர்களிடமும் வேண்டுகோள் வைக்கிறேன்.

கடிதம் குறித்த இன்னொரு இடுகை 'சார் போஸ்ட்'. கோவை அ.ராமநாதன் அவர்களின் 'இது ஒரு தமிழ் உலகம்' என்கிற வலைப்பதிவில் பார்க்க நேர்ந்தது. அதையும் படித்துப் பாருங்களேன்.

Saturday, August 20, 2011

காதல் உணரும் தருணங்கள்இரண்டு பெஞ்சுகளின் 
இடைவெளியில் எதிரெதிர்
வரும்போது என்னை உரசலாம் 
கொஞ்சம்
நெருக்கும் பஸ்ஸில் 
கூட்டத்தில் அலைக்கழித்து
ததும்பும் போது என் மீது படலாம்
காற்று படுத்திருக்கும் 
காரிடாரில் நடக்கையில்
வீசி நடக்கும் கையை 
என் மேலே வீசலாம்
இருண்ட நாலகத்தில் 
புத்தகங்களைமேலடுக்கில் தேடுகையில் 
என் தோளை இடிக்கலாம்
எக்ளேர்ஸோ பாப்பின்ஸோ 
என்கெனத் தருகையில்
உரிமையெடுத்து உள்ளங்கையில் அழுத்தலாம்
சட்டையில் ஏதோ பூச்சி எனக் கத்தும்
பயந்தாங்க்கொள்ளியே, நீயே தட்டலாம்
வெள்ளை பேசினில் 
டெஸ்ட் ட்யூப் கழுவும்போது
உன் கைகள் என்னோடு கலக்கலாம்
கோயில் பிரசாதத்தைத் 
தாமரை உள்ளங்கையில்
ஏந்தி நீட்டி சிரிக்காமல் 
என் நெற்றியில் இடலாம்
கேலி பேசி உன்னை 
நான் அழவைக்கும்போது
செல்லமாய்க் கண்டித்து 
என் நெஞ்சில் குத்தலாம்
தோழிகளிடம் முகப்படுத்தி 
வைக்கையில்
மணிக்கட்டைத் தொட்டு 
உரிமையுடன் சொல்லலாம்
இத்தனை வாய்ப்புகள் இருந்தும்
இதையெல்லாம் விடுத்து
எங்கோ இருக்கும் என் இதயத்தை
அழுத்தமாய்த் தொட்டது 
ஏனடி தோழி…?

கவிதைக்கு சொந்தம் கொண்டாடக் கூடியவர் -  கிருஷ்ணன்.

Friday, August 19, 2011

மக்கள் சக்தியும், மாயத்தோற்றமும்

                                                                                  09.11.1996 பெங்களூர்
அன்புள்ள நண்பருக்கு இனிய வணக்கம்! நானும் குடும்பத்தினர்களும், நண்பர்களும் நலம். உங்கள் நலன், குடும்பத்தினர்கள் நலன் அறிய அவா. எனது முந்தைய கடிதம் கிடைக்காதது குறித்து வருத்தமடைகிறேன்.
நான் தேர்தலில் 20 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.
உன் நண்பன் 61 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தான். இந்த தேர்தல் எனக்கு தந்த படிப்பினைகள் ஏராளம்.
  •       ஜாதி, பணபலம் இல்லாத எனக்கு தேர்தல் பணிக்கு ஆள் இல்லை. 
  •   ஆண்கள் வாக்குச்சாவடிக்கு ஏஐன்ட் நியமிக்க இயலாததால் 60 க்கும்   மேலான கள்ள ஓட்டுக்களைத் தடுக்க முடியவில்லை. 
  •           வயதான கண் பார்வை மங்கியவர்களின் ஓட்டுக்கள் சுமார் 20 இருந்தும் இவர்களை அழைத்து வந்து ஓட்டு போடவைக்க ஆள் பலம் இல்லை. 
  •   ஓசூரிலிருந்து தம்பிகளை மூன்று தினங்கள் முன்னதாக வரச் சொல்லியும் வந்து ஓட்டு போட்டதும் சென்றுவிட்டனர்.
  •      வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி, மல்டி ஓட்டுக்களை எப்படி கணக்கிடுவது என்று அதிகாரிகளுக்கு தெரியாத காரணம்...  


தாழ்த்தப்பட்ட அல்லாதவர்களுக்கு ஒரு ஓட்டுக்கு மேல் போட்டால் செல்லாதாம். (மூன்று உறுப்பினரில் 1- பொது, 1-தாழ்த்தப்பட்ட பொது, 1-தாழ்த்தப்பட்ட பெண்).
 
இதனால் வேட்பாளர்கள் தாழ்த்தப்பட்ட அல்லாதோர் மற்ற மூவரில் இருவர் செய்த குழப்பத்தால் 986 வாக்குகளில் 403 வாக்குகள் செல்லாததாக அறிவித்து விட்டார்கள்.

மூன்று நாட்களுக்குப் பிறகு தேர்தல் விவர அறிக்கையைப் பார்த்தபிறகு வாக்கு எண்ணிக்கை தினம் அறிவித்ததைவிட முரணாக அனைவருக்கும் வாக்குகள் கூடுதலாக இருந்தது.

இந்தக்காரணங்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் விதிமீறல்களை ஆதாரங்களுடன் திரட்டி மாவட்ட தலைமை நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். வழக்கு முடிவு இடைத்தேர்தலாக இருக்கும்.

மற்றபடி 20 ஓட்டுக்கள் என்னைவிட கூடுதலாகப் பெற்ற பா.ம.க. வேட்பாளர் ஜாதியபலம் இருந்தும் கூட, ஒரு ஓட்டுக்கு ஒரு எவர்சில்வர் தட்டு கொடுத்ததால்தான் வெற்றி பெற முடிந்தது.

ஜாதிபலம் இல்லாத நான் 20 வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும்கூட இது ஆச்சரியமில்லை. இந்த நபர் 26 ஆண்டுகாலமாக என் நெருங்கிய நண்பன். பா.ம.க.வுக்கு நான் ஊரில் நல்ல ஆலோசகனாக இருந்து இவனை வழிநடத்திச் சென்றேன்.

                                                

கூட்டுறவுத் தேர்தலில் இவனும், உள்ளாட்சித் தேர்தலில் நானும் போட்டியிடுவதாக நண்பர்கள் மத்தியில் முடிவு செய்தோம். 96 கூட்டுறவு தேர்தலில் இவன் வெற்றிபெற முதுகெலும்பாக செயல்பட்டேன். கூட்டுறவு தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே எனக்கே தெரியாமல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டான்.

கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெற்றும் கூட உள்ளாட்சித்தேர்தலில் போட்டியில் இருந்து விலகவில்லை. இந்த துரோக நிகழ்ச்சி எந்நாளும் நான் மறக்க முடியாத ஒன்றாகும்.

பா.ம.க. நான் விரும்பும் கட்சி. புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் துணிவாக ஆதரவு தரும் ராமதாஸ் அவர்கள் மீது எனக்குள்ள ஈடுபாடு ஆழமானது. இந்தக்கட்சி வளரவேண்டும் என்பதே எனது பேரவா! இதற்குத் தடையாக கீழ்மட்டக் கிராமங்களில் வன்னிய ஜாதி உணர்வுடன் செயல்படும் கட்சிக்காரர்கள் இருப்பதற்கு எடுத்துக்காட்டு மேற்கூறிய சம்பவமாகும்.

பா.ம.க. ஊரில் என்னை எதிர்த்து போட்டியிடாமல், ஆதரவு தெரிவித்திருந்தால், பா.ம.க. ஜாதிக்கு அப்பாற்பட்ட வெகுஜன அமைப்பு என, எங்கள் ஊரில் பிற ஜாதியினருக்கு உணர்த்தும் வாய்ப்பு இருந்திருக்கும். என் சொந்தச் செலவில் தந்தை பெரியாருக்கு எங்களூரில் சிலை நிறுவி, அதனை அஞ்சாத சிங்கம் நிகர் தமிழின ஒப்பற்ற ஒரே தலைவன் தம்பி பிரபாகரனை உறுதியுடன் ஆதரிக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களின் கையால் திறந்து வைக்கவேண்டும் என்ற எனது நீண்ட நாளைய ஆசைக்குக்கூட எங்களூர் பா.ம.க. வினர் இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதில் எனக்கு பெயரும் புகழும் கிடைத்து விடுமாம்.
.
  .                      
பெயருக்காக புகழுக்காக நான் கடந்த காலத்தில் ஆதிக்க எதிர்ப்பு குணத்தில் செயல்படவில்லை. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக, சிறுமைகளைக் கண்டு சீற்றம் கொண்டு, உயிரை துச்சமாக மதித்து நான் செயல்பட்டதெல்லாம் பெயருக்காகவா? புகழுக்காகவா?

எனது குடும்ப சுய தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ளாமல், எனது சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை கடந்த காலத்தில் செலவழித்து செயல்பட்டது புகழுக்காகவா? பெயருக்காகவா?

அநீதிகளை எதிர்த்ததால் நான் மட்டுமின்றி என்னை பெற்றெடுத்த ஒரே காரணத்திற்காக எனது பெற்றோர்களையும் பொய் வழக்குகளுக்கு ஆளாக்கி எங்களூர் ஆதிக்க சக்திகள் செயல்பட்டதில் நான் சந்தித்த இடையூறுகள் எல்லாம் கேவலம் இந்த பதவிக்கும் புகழுக்காகத்தானா?

                                             

மார்க்சிய எண்ணங்களை மனதில் கொண்டு, புரட்சியை நேசிக்கும் நான் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு போட்டியிடவில்லை. காலத்தின் கட்டாய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நான் தேர்தலில் பங்கெடுத்தது பதவி சுகத்திற்காகவா?

சராசரி அரசியல் கட்சிகளிலிருந்து மாறுபாடான செயல்பாடுகளைக் கொண்டுள்ள பா.ம.க. வளர்ச்சி என்பது என் வருங்கால ஆசைகளில் ஒன்றாகும். எங்களூரில் இந்தக்கட்சிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துவிட்டதாக நான் கருதியது பகற்கனவு என்றுதான் உணர முடிகிறது. இந்தக்கட்சிக்கு மூளையாக செயல்பட்ட எனக்கு எங்களூர் பா.ம.க.வினர் ஜாதிய கண்ணோட்டத்தில் கொடுத்த பரிசுதான் கடந்த தேர்தல் முடிவு.

எனது தோல்வி என்பது எங்களூரில் ஆதிக்க சக்திகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதை என்னை நன்குணர்ந்த உங்களுக்குப் புரியும் என்று கருதுகிறேன். அந்த அநீதி, ஆதிக்க சக்திகளுக்கு ஒரு புத்துணர்வை எங்களூர் பா.ம.க. வினர் எளிதாக வழங்கிவிட்டார்கள்.

இந்த அநீதி, ஆதிக்க சக்திகளை எதிர்த்து போரிட என்னிடமிருந்த ஆயுதமாகிய மக்கள் சக்தியை தற்காலிக சபலத்திற்கு அடிமையாக்கி (தேர்தல் விதிமுறை மீறலாகிய எவர்சில்வர் தட்டு கொடுத்து) எனக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததைப் போன்ற ஒரு மாயத்தோற்றத்தை எங்களூர் பா.ம.க.வினர் ஏற்படுத்திவிட்டார்கள்.

இந்தக்கடிதத்தை ஒரு சராசரி மனிதனின் கடிதமாக் கருதாமல், ஒரு சமூக உணர்வாளனின் மனக்குமுறல் என்று கருதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளதால் உங்களின் விரிவான கருத்தை அறிய விரும்புகிறேன்.
நீங்கள் சென்னையிலிருந்து ஊருக்கு அடிக்கடி வந்து செல்கிறீர்களா? மற்றவை உங்கள் மடல் கண்டு!

இப்படிக்கு
என்றென்றும் மாறாத அன்புடன்
இனிய நண்பன்.
பாலசண்முகம்
09.11.1996
குறிப்பு; என் நண்பன் மூலமாக அறிமுகமான இந்த நண்பர் மூலம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். மிக நீண்டநாட்களாக கடிதத்தொடர்பில் இருந்தார். இப்போது..............? காலம்தான் மாறிவிட்டதே!