Wednesday, March 12, 2014

அறிவியல் அறிவோம் - சுஜாதாபிரபஞ்சம், பூமி, சூரியன் போன்றவைகளைப் பற்றி பள்ளிக்கூட பாடத்தில் எத்தனைதான் படித்திருந்தாலும் சுஜாதாவின் நூல்களை வாசிக்கத் தொடங்கிய போதுதான் அதனை முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தது. பால்வீதி காலக்ஸி பற்றியெல்லாம் இவ்வளவு தெளிவாக தமிழில் யாரும் விளக்க முடியாது என்றே நினைக்கிறேன். அவரின் விளக்கத்திலிருந்து சில துளிகள்.
பிரபஞ்சத்துக்கு ஆரம்பம் இருந்தால், அதற்கு முன் என்ன இருந்தது என்ற கேள்வி தானாகவே வருகிறது. ஒன்றுமே இல்லை என்றால், சூனியம் என்றால் அதை கற்பனை செய்துகொள்ள முடியவில்லை. காலம் கூட இல்லாத சூனியம் எப்படிச் சாத்தியம் என யோசிக்க முடிகிறதா பாருங்கள்! கற்பனை செய்துகொள்ள முடியாத ஒன்றுமில்லாததில் இருந்து திடப்பொருள்கள் தோன்றின என்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும்? முடியும் என்று சொல்கிறது நவீன க்வாண்டம் அறிவியல்.

ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்து திடப்பொருள் (MATTER) தோன்ற முடியும். எப்போது…? தோன்றும். அதே சமயம், அதன் எதிர்ப்பொருளான ANTI MATTER தோன்றி அவை இரண்டும் சேரும்போது ஒன்றையொன்று ரத்து செய்துகொண்டு ஒன்றுமில்லையாகலாம். ஒரு மணற்பரப்பில் ஒரு பிடி மணலை எடுத்துப் பக்கத்தில் குவித்தால் ஏற்படும் பள்ளம் ANTI MATTER. மீண்டும் மணலை நிரப்பி விட்டால் பரப்பு சூனியம்!

இது போலத்தான் பிரபஞ்சத்தில் அவ்வப்போது பொருளும் எதிர்ப்பொருளும் சூனியத்திலிருந்து தோன்றி அழிந்து கொண்டிருக்கின்றன.

நாமிருப்பது சூரியக்குடும்பம். ‘மில்கி வேஎன்னும் பால்வீதி காலக்ஸியில். இதில் ஒரு ஓரத்தில் உள்ள நடுவாந்திர சைஸ் நட்சத்திரம் சூரியன். சூரியனைச் சுற்றி பூமி மணிக்கு 66,000 மைல் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமி சூரியனைச் சுற்றிவர ஒரு வருஷம் ஆகிறது. சூரியன் பால்வீதியில் ஒரு சுற்றுவர 22.5 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இத்தனைக்காலமாக சுற்றுவதால் மெல்லத்தானே சுற்றும் என்று எண்ணாதீர்கள்

ஆகாச கங்கை என்னும் பால்வீதியை ஒரு சுற்று முடிக்க எத்தனை மைல் போகவேண்டும் தெரியுமா? நூறாயிரம் ஒளி வருஷங்கள். அதாவது 5865696-க்கு அப்புறம் 12 பூஜ்ஜியங்கள். அத்தனை மைல். எனவே சூரியன் ஒரு வினாடிக்கு 135 மைல் வேகத்தில் பயணம் செய்கிறது. இது ஒரு காலக்ஸியின் ஒரு நட்சத்திரத்தின் சரித்திரம் மட்டுமே!

இப்படி பல கோடிக்கணக்கான காலக்ஸிகள், பலகோடிக்கணக்கான நட்சத்திரங்கள்இதனாலெல்லாம் பயனேயில்லையா? இந்த அண்ட பேரண்டத்தில் நாம் மட்டும்தான் உயிருள்ளவர்களா? இதையெல்லாம் யோசித்தால் ராத்திரி தூக்கம் வருமா?

Friday, March 7, 2014

மகளிர் முன்னேற்றம் - களப்பணி அவசியம்மகளிர் தினவிழா இப்போதெல்லாம் சம்பிரதாயமாக மாறிவிட்டது. மகளிர் அமைப்புகள் இதை பெரிய அளவில் முன்னெடுக்கவில்லை. வாய்ப்பும் வசதியும் உள்ள பெண்களைத் தவிர்த்து, ஏழை மற்றும் கிராமப்புற பெண்களைப் பற்றிய அக்கறை யாருக்கும் துளியும் இல்லை. உள்ளாட்சி மன்றங்களில் பங்கெடுக்க பெரும் வாய்ப்புக்களைப் பெற்றிருந்த போதிலும் ஆண்களின் கைப்பாவைகளாகத்தான் இன்னமும் செயல்படுகின்றனர்.

பெண்களிடம் புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர அருமையான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அப்படி இருந்தும் ஊடகங்கள் சில, போலியான வாழ்க்கை முறைக்கு பெண்களை திசை திருப்புகின்றன. இது விஷயத்தில் பெண்கள் மிகுந்த கவனத்துடனும் விழிப்புடனும் இருப்பதற்குப் பதிலாக விட்டில் பூச்சிகளைப் போல் விழுந்து பலியாவதுதான் வேதனை தரக்கூடிய விஷயம். 

மாறி வரும் சூழலுக்கு ஏற்ப பெண்கள் தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்தான். அதே சமயம் மாற்றங்களை சுவாசமாக்கி வீறுநடை போட்டு களம் இறங்கும் பெண்களே தேசத்தின் இன்றைய தேவை. இதற்கு பெண்கள் அமைப்புகள் என்ன செய்கின்றன? வெறுமனே கூட்டம் கூட்டி மைக் பிடித்து பேசிவிட்டுப் போனால் அதனால் என்ன பயன்? களப்பணியின் அவசியம் பற்றி யாரும் அக்கறை கொள்வதில்லை. இயற்கையாகவே அதிக திறனும் பன்முக வேலைகளைச் செய்யும் குணமும் படைத்தவர்கள் பெண்கள். அதைக் காலத்துக்கேற்றவாறு பயன்படுத்த வேண்டுமாயின் அவர்களுக்கு வழிகாட்டுதல் அவசியம்.

ஆண்களுக்கு நிகராக சகல துறைகளிலும் பெண்கள் சாதித்துக் கொண்டிருப்பதை எல்லோரும் அறியுமாறு அவர்கள் தங்களை வெளிப்படுத்தியாக வேண்டும். அப்போதுதான் இதர பெண்கள் மத்தியிலும் தன்னம்பிக்கையும் தைரியமும் வளரும். அச்சம் அறியாமை, அடிமைத்தனம் இவற்றைக் கடாசிவிட்டு, தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி இவற்றைக் கைக்கொண்டு காலத்தோடு இசைந்து செயல்பட்டால் அவர்கள் முன்னேற்றத்தைத் தடுக்க யாராலும் முடியாது.

பிறரைச் சார்ந்திருக்காமல் சுயமாக வாழமுடிவது என்பது நகர்ப்புற பெண்களுக்கு மட்டுமே வாய்த்த ஒன்றில்லை. கணவனை இழந்த கிராமத்து உழைக்கும் பெண்கள்கூட சுயமாக வாழ்வதை காலங்காலமாக பார்க்கிறோம். இன்று மகளிர் சுய உதவிக்குழுக்கள் கிராமத்துப் பெண்களுக்கு புது நம்பிக்கையையும், தெளிவையும் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. ஆனாலும் கிராமப் பொருளாதாரத்திலும், வீட்டு முன்னேற்றத்திலும் அது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியவில்லை.

தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதில் கழிக்கும் பெண்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகமாகிக் கொண்டு வருவது வேதனையான விஷயம் என்பதை பெண்களே கூட மறுக்க மாட்டார்கள்.
சங்க காலத்தில் பெண்கள்தான் முன்னிலை வகித்தனர். ஔவையார், காக்கைப் பாடினியார், வெண்ணிக்குயத்தியார் போன்றோர் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்தனர். உற்பத்தி சக்திகளும், உறவுச்சிக்கல்களும் தலையெடுத்தபோது பெண் தன் தலைமைப் பண்பை இழந்தாள். இன்று இழந்ததை மீட்கும் போராட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறாள்.

ஒரு பெண் வேலைக்குப் போவது தன் குடும்பத்தின் போருளாதாரத் தேவைகளுக்காக என்பது மாறி, சமுதாயத்தில் சுயத்தோடு வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்பதாக இருக்கவேண்டும். பணியிடங்களில் பாதுகாப்புக்காக ஆண்களையே நம்பியாராமல், ஆளுமையையும், அறிவுத்திறனையும் வெளிப்படுத்தும்போது ஒரு பயம் கலந்த மரியாதை ஆண்கள் மத்தியில் தன்னாலே ஏற்படும். ஆனால் சில பலவீனங்களுக்கு ஆளாகிப்போனால் தானும் கெட்டு தன் குடும்பமும் நடுத்தெருவில் நிற்க நேரிடும் என்பதையும் உணரவேண்டும். 

இரவிலும் பெண்கள் சுதந்தரமாக நடமாடும் பொற்காலம் வாய்க்க இன்னும் பலகாலம் நாம் பயணிக்கவேண்டும். அதுவரை இடம் பொருள், காலம் அறிந்து தன்னைப் பாதுகாப்பதில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சுற்றுப்புற மனிதர்களோடு நட்பு ரீதியில் பழகுவதும், எதிராளிகளை வலிந்து உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பதும் தங்கள் பாதுகாப்புக்கு கவசமாக இருக்கும். அது கோழைத்தனம் இல்லை. வக்கிரமனிதர்கள் மட்டுமே நிரம்பியதில்லை இந்த பூமி. நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆண்களாகிய நாம் பெண்ணை வெறும் சதைப்பிண்டமாகப் பார்க்காமல் சக மனிதராகப் பார்த்தாலே பல சிக்கல்கள் தீர்ந்துபோகும். நமக்கென இருக்கும் அத்தனை விருப்பு வெறுப்புக்களும் அவர்களுக்கும் இருக்கும் என்று நினைப்பதும், சமமாக நடத்துவதும், அதை வீட்டிலிருந்தே தொடங்குவதும்தான் பெண்களின் முன்னேற்றத்திற்கு உண்மையாகவே உதவி செய்யும்.Thursday, March 6, 2014

எழுதாதே படி!வர வர பல வலைப்பதிவர்கள் பதிவெழுதுவதை விட்டுவிட்டு முகநூல் பக்கம் நகர்ந்திருக்கிறார்கள். பதிவுலகம் சற்று தேக்கநிலையில்தான் காணப்படுகிறது. தீவிரமாக இயங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு பக்கம் பிரபல எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் வலைப்பதிவு எழுத்தாளர்களை மொக்கையாக தினசரி டைரிக்குறிப்பு போல எழுதுகிறார்கள் என்று வசைபாடுவதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. வலைத்தளம் வைத்திருப்பவர்களில் இந்த பிரபலங்களும் அடக்கம் என்பதை ஏனோ மறந்துபோகிறார்கள். அல்லது அவர்களுக்கு மட்டும் எழுத உரிமை இருக்கிறது போல பேசுகிறார்கள்.

எழுதுவது என்பது ஒரு ஆத்ம திருப்தி. தன் மனவோட்டங்களை எழுத்தாக்குகின்ற ஆர்வம் எல்லோருக்கமே இருப்பதில்லை. ஆர்வம் இருப்பவருக்கு எழுத்து கைவரப்பெறுவதில்லை. சமுதாயத்தில் அடிமட்டத்து மக்களின் வேதனைகளையும் வலிகளையும் வெறுமனே கேட்டும் பார்த்தும் பதிவு செய்யும் எழுத்தாளனின் படைப்பைவிட அந்த சூழலில் வாழ்பவனின் நிஜமான அனுபங்களின் பதிவு என்பது வீச்சு கொண்டதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

இப்படி சாதாரணமானவர்களும் தங்களது அனுபவங்களை இணையத்தின் வாயிலாக வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்தது என்பது ஒரு புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல எழுத்து என்பது எப்படியும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே தீரும். இந்த சாதாரணமானவர்கள் பிரபலமடைவதைத் தாங்கிக்கொள்ள முடியாத பிரபலங்களே வலைப்பதிவர்களை மொக்கையாக எழுதுகிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள்.

பிரபலமானவர்கள் இலக்கியப்பணி செய்தாலும் அதன் வியாபாரமாக்கும் உத்தியோடுதான் செயல்படுகிறார்கள். ஆனால் சாதாரணமானவர்களோ பிரதிபலன் எதிர்பாராமல் எழுதுகிறார்கள் என்பதுதான் உண்மை. சொல்லப்போனால் கொஞ்சம் புகழை எதிர்பார்க்கிறார்கள் அவ்வளவுதான். வெகுஜன ஊடகங்கள் இவர்களை தூக்கிவிடத் தயாராக இல்லாதபோது கிடைத்த வரப்பிரசாதம்தான் இந்த வலையுலகம்.இந்த வலையுலகத்தில் பிரபலமானால் தன்னலேயே ஊடகங்களும் இவர்களை தாங்கிப் பிடிக்க வந்துவிடுகின்றன. அதே சமயத்தில் தமது எழுத்திற்கு அங்கீகாரம் வேண்டுவோர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. வேலைக்குச் செல்பவர் எனில் வேலை நேரம் தவிர்த்த மற்ற எல்லா நேரங்களையும் இதற்காக தியாகம் செய்யவேண்டியிருக்கிறது. நள்ளிரவு வரை கூட எழுதுவோர் உண்டு. இப்படி எல்லோருமே எழுதுவதில்லை. முடிந்த போது முடிந்தவரை என்பதாகத்தான் பலரும் இருக்கிறார்கள்.

எது எப்படியோ இந்தக் காலகட்டத்தின் நிகழ்வுகள் முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு பலரால் பலவிதங்களில் பதிவு செய்யப்படுகிறது. பிரபல எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், நாளிதழ்கள், கட்டுரையாளர்கள் என இவர்களால் மட்டுமே அந்தந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடிந்த காலம் போய் சாதாரணமானவர்களும் பதிவு செய்யக்கூடிய காலம் வாய்த்திருப்பது நமது அதிர்ஷ்டம்தானே.

மேலும் இதில் பிரபலங்கள் வயிற்றெறிச்சல் பட என்ன இருக்கிறது? இவனுங்க எல்லாம் இலக்கியம் எழுத வந்துட்டானுங்க என்கிற அங்காலாய்ப்பு எதற்கு? எழுத்தும் தவம் போலத்தான். தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் செய்தால் கைகூடுவது இயல்புதானே. சமீப காலங்களில் நான் விரும்பி வாசிக்கும் தளங்களில் ஜோதிஜியின் பதிவுகளும், வா. மணிகண்டனின் பதிவுகளுமே இதற்கு முக்கியமான சாட்சிகள்.

இவர்களின் மற்றுமொரு குற்றச்சாட்டுஎதையும் யாரையும் வாசிக்காமல் வந்துவிடுகிறார்கள் என்பதுதான். இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுதான் என்றாலும், பொத்தாம் பொதுவாக இப்படிச் சொல்வது சரியல்ல. உண்மையில் வாசிப்பு பழக்கமோ, விஷய ஞானமோ இல்லாமல் யாராலும் தொடர்ந்து எழுத முடியாது. அதே போல தங்களின் அனுபவங்களை எழுத்தாக்குவதில் தவறென்ன?

பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் வாழ்ந்து வரும் சூழலில் பொருளாதாரத் தேவைகளுக்காக பணி செய்வது ஒரு புறமும், இலக்கிய மற்றும் எழுத்தார்வத்த்திற்காக இப்படி வலையுலகில் இயங்குவதுமாகத்தான் நம்மில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். வலைப்பதிவில் இயங்குபவர்கள் எல்லோருமே நுனிப்புல் மேய்கிறவர்கள் அல்லர். அவர்களும் வாசிப்பவர்களே!

வாசிப்பவர்கள் குறைந்து போய்விட்டார்கள் என்பது உண்மையில்லை. புத்தகங்களை வாசித்தவர்கள் இப்போது இணையங்களில் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் சதவிகிதம் மிகக்குறைவு. இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். காசு செலவழிப்பதில் தமிழர்கள் கஞ்சத்தனமானவர்கள். அதுவும் புத்தகத்திற்காக செலவழிப்பதென்றால் சொல்லவே வேண்டாம்.

இதற்கு தீர்வு வந்து பல நாட்களாகிவிட்டது. மின்னூல்கள் ஏராளமானவை இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. போதாக்குறைக்கு திரு. இரவி, திரு. சீனிவாசன் போன்றவர்களின் அரிய முயற்சியால் பல பதிவர்களின் பதிவுகளை, எழுத்துக்களை இலவச மின்னூலாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். (அந்த தளத்திற்கான சுட்டி). புத்தகங்களை பல்வேறு வகையான கையடக்க கருவிகளிலும் படிக்கும் வகையிலும் உருவாக்கி வருகிறார்கள். எனவே என்னைப்போல வாசிப்பு ஆர்வம் உள்ளவர்கள் எழுதுவதை குறைத்து படிக்கத்துவங்குங்கள். 

ஆம்! எழுதாதே! படி! இது எனக்கும் பொருந்தும்!?