Tuesday, October 4, 2011

சேற்றில் சிக்கிய யானை


அன்புள்ள நண்பர் திரு. கவிப்ரியனுக்கு என்றும் அன்புடன் இனிய நண்பன் பாலசண்முகம் எழுதும் மடல். நீண்ட காலமாக நம்மிடையே கடிதத் தொடர்பு இல்லாமலிருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. கடந்த சில மாதங்களாக கடிதம் எழுத நினைத்தாலும் அதற்கான மனநிலை வரவில்லை.


கடந்த வருடம் ஒரு ப்ரமோஷன் வாங்கி அதனைத் தொடர்ந்து வேறு மெஷினுக்கு மாற்றப்பட்டேன். இந்த மாற்றத்திற்குப் பிறகு எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்கள் மிகுதி. என்னுடைய தனிப்பட்ட குணத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. எனது சுயமரியாதை, தன்மானத்திற்கு இழுக்கு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை.


பிறருக்கு அநீதி இழைக்கப்பட்டாலே குமுறும் என்னால், எனக்கு இழைக்கப்படும் அநீதிகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ரூபாய் 100/- க்கு மாதம் ரூ.5/- வட்டி வீதம் விட்டு தொழிலாளிகளைச் சுரண்டிக் கொண்டிருந்த சிலர், தொழிலாளிகள் என்ற போர்வையிலேயே குட்டி முதலாளித்துவ சிந்தனைகளுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
இவர்களிடம் சிக்கி கடனில் மீள முடியாத சிலரை என் ஊருக்கு அழைத்துச் சென்று ரூ.2/- வட்டி தரும் ஒரு கல்வி அறக்கட்டளையில் பணம் வாங்கிக் கொடுத்து, அவர்களைக் கடனிலிருந்து மீட்டேன். இதனால் வட்டித் தொழில் நடத்தியவர்களுக்கு என் மீது காழ்ப்பு, கோபம். இதனை பல வழிகளில் கடந்த ஓராண்டு காலமாக பழி தீர்த்து வருகிறார்கள். 


இதற்கு நமது ஆள்காட்டித் தமிழர்கள் சிலர் உடந்தையாக இருந்ததும் எனது துரதிஷ்டம்தான்.இது மித மிஞ்சிய நிலையில் நான் தொழிற்சாலைக்கு வெளியே தாக்கப்பட்டேன். போலீஸில் புகார் கொடுக்கப்படு (எனது அதிர்ஷ்டம் ஒரு நியாயமான ஆய்வாளர் அங்கிருந்து, எனது சட்டப் படிப்பிற்கு அவர் சற்று மிகையாக மரியாதை கொடுத்து) நடவடிக்கை மேற்கொண்டதில் எதிரிகளின் பிரதிநிதியை மண்டியிடச் செய்த பிறகு, கடந்த இருமாதமாக எந்தவிதப் பிரச்னையும் இல்லை.

காவல் நிலையம் என்றதுமே தொடை நடுங்கிப்போன இந்த நாய்கள்தான் என்னை, சேற்றில் சிக்கிய யானையை தவளைகள் கூட எட்டி உதைப்பதைப் போல வதைத்து அவ்வப்போது அவமானப்படுத்தி வந்தார்கள். நான் பட்ட இன்னல்கள் என்னை ஒரு முடிவுக்கு வரச்செய்துள்ளது. இன்னும் 4 வருட பணிக்குப் பிறகு இங்கிருந்து ஓய்வு பெறுவதென முடிவு செய்துவிட்டேன். என் மனச் சுமைகளைத்தான் இங்கு எழுத்தாக்கியிருக்கிறேன். இதனை வேறு வகையில் கருத வேண்டாம்.
எனது சட்டப்படிப்பு 99 வருட அக்டோபர் தேர்வுடன் நிறைவடைந்தது. இம்மாத இறுதியில் பார் கவுன்ஸிலில் பதிவு செய்ய இருக்கிறேன். 

கட்டுரைத் தொகுப்பை முடித்துவிட்டிருந்தால் அதனை பிரசுரிக்க முயற்சி செய்யவும். உங்கள் சகோதரர் கலப்புத் திருமணத்தை அறிந்தேன். மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வர்த்தமானன் பதிப்பகம் உனக்கு அறிமுகம் உள்ளதல்லவா? எனக்கு கீழ்க்கண்ட வரலாற்றுப் புகழ் பெற்ற புத்தகங்கள் தேவைப்படுகிறது. சலுகை விலை அறிவித்துள்ளனர். இச்சலுகை குறைந்த நாட்களுக்கு மட்டும்தான்.
  1. பொன்னியின் செல்வன்
  2. சிவகாமியின் சபதம்
  3. அலை ஓசை
மேற்கண்ட மூன்று புத்தகங்களையும் வாங்கி எனக்கு அனுப்ப வேண்டுகிறேன். இந்தப் புத்தகங்கள் என் வீட்டில் இருக்கும்போது இதனை சிரமம் பாராமல் வாங்கி அனுப்பிய உனது நினைவுகள் என் நெஞ்சத்தில் நிழலாடிக் கொண்டிருக்க வேண்டும். பணம் MO செய்கிறேன். வி.பி.பி. யில் வரவழைத்தால் புத்தகங்கள் சில களவாடப்படுகிறது என்பதால் உனது உதவியை எதிர்பார்க்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
பாலசண்முகம்.
 
மற்றொரு மனதை உலுக்கிய கடிதம் உங்களுக்காக... நிலாரசிகன் பக்கத்தில்...


2 comments:

அம்பலத்தார் said... [Reply]

மனிதநேய பாலசண்முகா வாழ்த்துக்கள்.

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி அம்பலத்தாரே!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!