Tuesday, July 30, 2013

பனி விழும் மலர் வனம்.......

இயற்கையின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. காணக் கண் கோடி வேண்டும். அப்படி பார்க்க வேண்டிய ஆசை இருந்தாலும் உலகின் எல்லா மூலைகளுக்கும் நம்மால் பயணிக்க முடியாது. நம் பக்கத்தில் இருக்கும் ஊரையோ, கோவிலையோ, மலையையோ, இடத்தையோ பார்க்க முடியாத நம்மால் எப்படி வெளிநாடுகளில் இருக்கும் இயற்கை அழகை கண்டு களிக்கவோ ரசிக்கவோ முடியும்?

ஒரே வழிதான் உண்டு! அதுதான் புகைப்படத்திலோ அல்லது திரைப்படத்திலோ காண்பது! தெற்கு சீனாவின் ஒரு பகுதியில் 'பனி மழை'க்குப் பிறகான ஒரு ரம்மியமான நேரத்தில் ஒரு மலர் வனத்தில் எடுக்கப்பட்ட மனதைக் கொள்ளை கொள்ளும் புகைப்படங்கள் இவை!

இந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது 'பனி விழும் மலர் வனம், உன் பார்வை ஒரு வரம்', என்ற கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் நினைவுக்கு வராமல் போகாது இல்லையா?


Monday, July 29, 2013

முதல் கணிணி அனுபவம் - தொடர் பதிவு1992 என்று நினைக்கிறேன். அப்போதுதான் கம்ப்யூட்டரை நெருக்கத்தில் பார்க்கிறேன். எனது தோழியும் அவரது நண்பர்களும் கம்ப்யூட்டர் கற்க ஒரு சிறிய பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தனர். கணிணி கற்றுக்கொள்ள ஆர்வம் ஒரு புறமும், தோழியோடு சேர்ந்திருக்கும் சந்தோஷம் ஒருபக்கமுமாய் நானும் சேர்ந்தேன். சார்லஸ் பேபேஜ், அபாக்கஸ், பைனரி எண்கள் என்று சுவாரஸ்யமாய் வகுப்பு ஆரம்பமானது

ஏதோ ஒரு மணிநேரம் கணிணியில் உட்கார வைப்பார்கள். பிளாப்பி டிஸ்க்குகள் அப்போது பயன்பாட்டில் இருந்தன. மௌஸ் நிச்சயம் இல்லை. மற்றவை ஞாபகம் இல்லை. ஒருமாதம் கூட போயிருக்க மாட்டேன். தோழி ஏதோ ஒரு காரணத்திற்காக நின்று விட நானும்கேட்க வேண்டுமா மட்டம்தான்.

அப்புறம் வேலையில்லாத ஒரு காலகட்டத்தில் தெரிந்த கணிணி நிறுவனத்தில் விளம்பரப் பிரிவில் பணியாற்றிய போது சின்னச்சின்ன கணிணி விளையாட்டுக்களைக் கற்றுக்கொண்டேன். ஆனால் கணிணி பற்றிய அடிப்படை அறிவை மட்டும் கற்றுக்கொள்ளவே இல்லை. அங்கிருந்தவர்களும் கற்றுத்தர தயாராக இல்லை. கணிணி கற்றுக்கொள்ளும் ஆசை வெறுங் கனவாகவே போனது.

காரணம் எனது துறை வேறு. இயந்திரங்கள் சம்பந்தமான மெக்கானிக்கல் துறை. அதன் பின்பு சுமார் பத்து வருடங்கள் கணிணியைத் தொடவே இல்லை. கணிணியில் கற்றிருந்த ஏ.பி.சி.யும் மறந்து போனது. அதெல்லாம் மெத்தப் படித்தவர்களுக்கானது என்ற சமாதானமும் ஆர்வத்தைக் குறைத்தது.

திடீரென மனைவியின் உறவினர் மூலம் வெளிநாட்டு வாய்ப்பு வந்தது. வெளிநாடும் போயாயிற்று. குடும்பத்தாரிடம் தொடர்பு கொள்ள தொலைபேசிதான் ஒரே வழி. கைத்தொலைபேசி கலாச்சாரம் அப்போதுதான் நமது நாட்டில் அமர்க்களமாக ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. ஆனாலும் அது காசு விரயம் என்பதால் கடிதத்தில்தான் பெரும்பாலும் எனது தகவல் பரிமாற்றம் இருந்தது.

அப்போதுதான் சிலர் இன்டர்நெட் மூலம் மிகக் குறைந்த செலவில் பேசிக் கொள்கிறார்கள் என்று கேள்விப் பட்டேன். திடீரென ஆவல் வந்தது. தனியாக இன்டர்நெட் மையங்களுக்கு அதுவரை நான் சென்றதில்லை. அதுவும் வெளிநாட்டில். அரபு நாடு என்பதால் மொழிப் பிரச்னையும் கூட. அரை குறை ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்த சமயம் அது. தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து ஒரு கணிணியில் அமர்ந்தும் விட்டேன். ஆனால் அதற்கு மேல் என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.  

அப்போது கூகுள் ஆண்டவரைப் பற்றிக் கூட நான் தெரிந்திருக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் நிறைய இருந்ததினால் அதிலுள்ள சில முகவரிகளை குறிப்பெழுதிக் கொண்டு அதை அட்ரஸ் பாரில் தட்டச்சு செய்து கொஞ்சம் கொஞ்சமாக சில ஆங்கில தளங்களை பார்க்கத் துவங்கினேன். நான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இன்டர்நெட் மையத்திற்கு போவதைப் பார்த்த என்னுடைய நண்பர் கண்ணன் என்பவர் அன்று என்னோடு வந்தார். கணிணியில் தமிழ் தெரியுமா? என்ற சந்தேகம் அவருக்கு! நான் தெரியும். ஆனால் முயற்சித்துப் பார்க்கவில்லை, இன்று பார்த்து விடுவோம் என்றேன்.

தினமலரோ அல்லது குமுதமோ தான் அன்று (2002–ல்) முயற்சி செய்த தமிழ் தளங்கள். தலைப்பு மட்டும்தான் தெரிந்தது. தளத்தினுள்ளே போக முடியவில்லை. பயனர் பெயர், கடவுச்சொல் என்று வந்ததும் பயந்துபோய் அப்படியே எழுந்து வந்துவிட்டேன். அப்போது ஒரு மணிநேரத்திற்கு அரை தினார்’ (இந்திய மதிப்பில் 60 ரூபாய்) கட்டணம் வசூலித்தார்கள். இரண்டு மணி நேரம் உபயோகித்தால் ஒரு மணி நேரம் இலவசம் வேறு. மூன்று மணிநேரம் முயற்சி செய்தும் உருப்படியாய் எதுவும் கற்றுக்கொண்ட பாடில்லை.

எனது தோழி மயிலாடுதுறை மாலாவிற்கு கடிதம் எழுதி எப்படி கணிணியை உபயோகிப்பது என்று கேட்டிருந்தேன். அவரும் விளக்கமாய் எழுதியும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. அந்த இன்டர்நெட் மையங்களில் இன்னொன்றையும் கவனித்தேன். அபூர்வமாய் சில தமிழர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் கணிணி வழியே பேசிக் கொண்டிருந்தது தான் அது. அவர்களிடம் போய்க் கேட்கவும் தயக்கம். சில நாட்களில் பெண்கள் குரலும் கேட்பதுண்டு. இங்கு வேலைக்கு வரத்துடிக்கும் தனது உறவுகளிடம் தங்களது அவஸ்தைகளை விவரிக்கும் துயரமான நிகழ்வு அது!

ஒரு நாள் என் வெளிநாட்டு வேலைக்கு உதவி செய்த என் மனைவியின் உறவினர் அவருடைய வீட்டுக்கு அழைத்தார். அப்போதுதான் அவருடைய வீட்டில் கணிணி இருப்பதைப் பார்த்தேன். தயக்கத்தை விட்டு அவரிடம் கேட்டேன். அவரும் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சொல்லிக் கொடுத்தார். இருந்தாலும் தொடர்ச்சியான பயிற்சியும் பழக்கமும் இல்லாத காரணத்தால் கற்றவையும் மறந்து போனேன்.

2006–ல் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்புறம் நடந்தவைகளை இந்த ‘வேலூர் மாவட்டம்’ என்ற பதிவில் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஆர்வம் வெறியாக மாற ஓய்வே இல்லாமல் கணிணியில் உட்கார ஆரம்பித்தேன். தழிழ் தொழில்நுட்ப வலைத் தளங்களிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பொதுக் கணிணியிலோ அல்லது அலுவலக் கணிணியோலோ நமது விருப்பம் போல எதுவுமே செய்ய முடிவில்லை. மென்பொருட்களை நிறுவவோ அல்லது நிறுவியதை அகற்றவோ முடியவில்லை

முக்கியமாய் தமிழ் தட்டச்சு செய்வதற்குரிய மென்பொருளை (NHM Writer) நிறுவ வேண்டியிருந்தது. அலுவலகக் கணிணியை நமது தனிப்பட்ட பயன் பாட்டிற்கு பயன்படுத்த சங்கடமாக இருந்தது. மற்றும் பணி முடிந்து வீட்டிற்கு போனதும் கணிணி பற்றிய சிந்தனையிலேயே மனசு பரபரத்தது.


மடிக்கணிணி (2009-ல்) வாங்க முடிவு செய்தேன். ஆனால் கையில் காசில்லாமல் தவணை முறையில் வாங்கினேன். அப்புறம் கணிணி என் கைவசமாயிற்று. இப்போது கணிணியில் நான் செய்யாத வேலைகளில்லை. மெத்தப் படித்தவர்கள் சாமாச்சாரம் என்று ஒதுங்கிய நான் இன்று மெத்தப் படித்தவர்களை விட பல மடங்கு வேலைகளை இதன் மூலம் செய்கிறேன்.

என்னளவில் இது பெரிய சாதனைதான். அவரவர் துறை சார்ந்து கணிணியை உபயோகிப்பதில் வல்லமை என்பது வேறு விஷயம். சம்பந்தமே இல்லாத ஒரு துறையிலிருந்து கணிணியை ஆர்வத்தின்பால் கற்றுக்கொண்டு அவர்களைவிட அதிகமாக இதை பயன்படுத்துவது என்பதும் ஒரு சாதனை தானே?!  

என்னுடைய உயரதிகாரிகள் பலருக்கும் நான்பிளாக்கில் எழுதுவது தெரியாது. கணிணி சம்பந்தமான எந்த வேலை கொடுத்தாலும், அது தொடர்பான மற்றவர்களைக் காட்டிலும் விரைவாக முடிப்பேன் என்பதும் தெரியாது

வங்கிப் பரிமாற்றங்கள், ஆயுள் காப்பீடு கட்டணம், மின் கட்டணம், இரயில் மற்றும் பேருந்துகளின் இருக்கை முன்பதிவு, ஆன்லைனில் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்வது, பங்குப் பரிவர்த்தனை என ஆன்லைன்  தொடர்பான அனைத்து வேலைகளையும் கணிணி கற்றுக்கொள்ளத் தொடங்கிய 2009-ஆம் ஆண்டிலிருந்தே செய்து வருகிறேன்.

இருப்பினும் வலைப்பதிவு ஆரம்பித்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பலராலும் அறியப்படும் நிலைக்கு வந்திருக்கிறேன். இன்னும் சிறப்பாக வலைப் பதிவில் எழுதும் ஆர்வம் இருந்தாலும் நேரம் ஒதுக்குவதிலுள்ள சிரமம் காரணமாக இயலவில்லை

என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்து கடந்த கால கணிணி தொடர்பான நிகழ்வுகளை மீட்டெடுக்க உதவிய தென்றல் திருமதி. சசிகலா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தொடர் பதிவுக்கு இன்னும் யாரை அழைப்பது?! விருப்பம் உள்ளவர்கள் அவர்களாகவே எழுதலாமே! 

Saturday, July 27, 2013

கேமரா பொய் சொல்லுமா?

கேமரா பொய் சொல்லுமா? அப்படி சொல்லாதெனில் கீழே உள்ள புகைப்படங்கள் எப்படி சாத்தியம். தொழில்நுட்பம் தரும் வசதிகள் வியப்பைத்தான் தருகின்றன.


 

Wednesday, July 24, 2013

அவர் (இதயக்)கனி, இவர் (கருணா)நிதி


திராவிடர் கழகம் காலம் தொட்டு அண்ணாவுடன் தொடர்பு கொண்டிருப்பவர் கலைஞர்! அண்ணா நடத்திய பத்திரிகையில் கலைஞர் எழுத்தோவியம் ஒன்றைத் தீட்டினார். அந்த எழுத்தின் எழில் கண்டு மகிழ்ந்தார் அண்ணா.

திருவாரூருக்கு சென்றிருந்தபோதுமு.கருணாநிதி என்பவர் இங்கே இருக்கிறாரா? அழைத்து வாருங்கள் பார்க்க வேண்டும்என்று கூறினார் அண்ணா.

பெரிய எழுத்தாளர் வரப்போகிறார் என்று எதிர்பார்த்திருந்த அண்ணாவுக்கு அரைக்கால் சட்டை நிலையிலுள்ள கருணாநிதிதான் முன்னே நின்றார்.
படிக்கிறாயா பள்ளியில்?’

ஆமாம் அண்ணா!’

நன்றாக படித்து முடி, பிறகு கதை கட்டுரை எழுதலாம்!’ – இப்படி அறிஞர் அண்ணா அறிவுரை கூறினார். ஆனால் அந்த அறிவுரையை கலைஞர் ஏற்றாரா? இல்லை.

அண்ணா சொல்லி நான் கேட்காதது அது ஒன்றுதான்!’ என்று கலைஞரே பிற்காலத்தல் எழுதினார்.

புரட்சித் தலைவர் வளரும் புகழ் நிலையில் உள்ளபோதுஅண்ணாவின் நாடகத்தில் நடிப்பதற்காக அழைக்கப்பட்டார். அந்த நாடகத்தின் பெயர்சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்.’

ஆனால் புரட்சித் தலைவர் அந்த நாடகத்தில் நடிக்கவில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்த நாடகத்தில் நடித்தார். ‘சிவாஜிஎன்ற பெயர் பெரியாரால் கணேசனுக்குச் சூட்டப்பட்டது.

தி.மு.கழகத்தில் புரட்சித் தலைவர் சேர்ந்த பிறகு அண்ணாவின் மதிப்பிற்குரிய நண்பர் ஆனார்! அண்ணா அவர்கள் மற்றவர்களை எல்லாம்தம்பிஎன்று மேடையில் அழைப்பார். புரட்சித்தலைவரை மட்டும் நண்பர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்று அழைப்பார்.

அண்ணாவை எதிர்த்து சொல்லின் செல்வர் சம்பத் போர்க்கொடி உயர்த்திய ’60-ஆம் ஆண்டுகளில்கலைஞரும் புரட்சித் தலைவரும் ஓரணியில் இருந்தார்கள். நல்லுறவோடு இருந்தார்கள்!

தமிழக மேலவை உறுப்பினராக புரட்சித் தலைவரை உயர்த்தி பெருமை சேர்த்தார் அண்ணா. அடுத்து நடந்த மேலவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.கழகத்திற்குள்போட்டிஏற்பட்டது. அண்ணாவின் அணுக்க நண்பர் சி.வி. ராஜகோபால் எம்.எல்.சி. ஆவதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்தது. சி.வி. ராஜகோபால் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.

இதைக் கண்டு மனம் நொந்த புரட்சித் தலைவர் தனது எம்.எல்.சி. பதவியை விட்டு விலகினார். அப்போது அண்ணா அவர்கள் சிறையில் இருந்தார்.
இன்று காலைப் பத்திரிகைகளில் எம்.ஜி.ஆர். மேலவை உறுப்பினர் பதவியைத் துறந்து விட்டார். அந்த நிலையை மாற்ற நாவலரும் மற்றவர்களும் எடுத்துக் கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை என்ற செய்தி கண்டு திடுக்கிட்டுப் போனேன்.

கழகத்துக்கும் எம்.ஜி.ஆருக்கும் அமைந்துவிட்ட பாசம் சொல்லிக் கொடுத்து ஏற்பட்டதல்ல. தூண்டி விட்டுக் கிளம்பியதுமல்ல! தானாக மலர்ந்தது!

கனி என் கரத்தில் வந்து விழுந்தது என்று பெருமிதத்துடன்நாடோடி மன்னன்வெற்றி விழாக் கூட்டத்தில் நான் பேசியது என் நினைவுக்கு வந்தது. அவர் கழகத்தைத் துறந்து விடுவதோ, கழகம் அவரை இழந்து விடுவதோ நினைத்துக் கூட பார்க்கக் கூடாது!
எம்.ஜி.ஆர். போன்ற நட்புக்குப் பொருத்தமானவர் மனச் சங்கடம் கொண்டு விலக முனையும் போது, சங்கடம் வேதனை ஆகிறது.
-         அண்ணாவின் சிறைக் கடிதம்’ (14.03.1964)

1967 தேர்தலின் போது தேர்தல் நிதி திரட்ட அன்றையப் பொருளாளர் கலைஞர் பெரு முயற்சி எடுத்தார். பதினோரு வட்சம் சேர்த்துத் தந்தார். சென்னை விருகம்பாக்கம் தி.மு..மாநாட்டில் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை அறிவித்த அண்ணா, சைதாப்பேட்டை தொகுதியில் நிற்கும் கழக வேட்பாளர் கலைஞரின் பெயரை புதுமையான முறையில் அறிவித்தார்.

சைதாப்பேட்டை… 11 லட்சம்என அண்ணா அறிவித்த போது மகிழ்ச்சி ஆராவாரம் எழுந்தது.

அதே மாநாட்டில் கழக நிதிக்காக ஒரு லட்ச ரூபாய் நன்கொடை தர புரட்சித் தலைவர் முன் வந்தார். அதை ஏற்க மறுத்துவிட்டார் அண்ணா. அப்போது கூறினார், ‘அந்த ஒரு லட்சத்தை விட தேர்தல் நேரத்தில் உன் முகத்தைக் காட்டு; கழகத்திற்கு பல லட்சம் வாக்குகள் விழும்!’

அண்ணா அவர்கள் இந்த இரு தலைவர்களிடமும் அணை கடந்த அன்பு வெள்ளத்தைப் பாய்ச்சினார். தனது தம்பிமார்களை தண்பர்களைப் புகழ்ந்து பணியாற்றச் செய்வதில் அண்ணாவுக்கு நிகர் அண்ணாதான்.
என் இதயக்கனி எம்.ஜி.ஆர்என்று அவரைப் புகழ்ந்துரைப்பார்; கழகத்தின் ஒரே நிதி கருணாநிதிஎன்று இவரைப் புகழ்ந்துரைப்பார்!

என் பிறந்த நாளிலும் எம்.ஜி.ஆருக்கு ஏழைகளின் நினைவுதான்!’ என்று அவரை ஏற்றிப் போற்றுவார். ‘நான் எழுதிய அத்தியாயத்தைத் தொடர்ந்து எழுதுவார் கருணாநிதிஎன்று இவரை மெச்சிப் புகழ்வார்!

அண்ணா அவர்கள் தம் வாழ்நாளில் அதிகமாக புகழ்ந்த இருவர் உண்டு என்றால்அவர்கள் இந்தஇருவரும்தான்.                   -       அடியார்.

Monday, July 22, 2013

காணக் கிடைக்காத புகைப்படங்கள்

நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைவர்களின்  அந்தரங்கமான நேரங்களில் எடுக்கப்பட்ட அபூர்வ புகைப்படங்கள் உங்களுக்காக ....Thursday, July 18, 2013

கவிஞர் வாலி – எம்.ஜி.ஆர். ஒரு தீர்க்கதரிசி!(அமரர் கவிஞர் வாலிக்கு அஞ்சலி)


தனிப்பாடல்களாயினும் சரி, திரைப்படப் பாடல்களானாலும் சரி… அவைகளில், அறிந்தோ அறியாமலோ, அறச்சொற்கள் அமைந்துவிடில், பைந்தமிழ் பாடிய புலவனின் வாக்கு பலித்துவிடும் என்பது நெடுங்காலமாக நிலவி வருகின்ற நம்பிக்கையாகும்.

சிலேடைப் பெருங்கவிஞன் காளமேகம் சினங்கொண்டு அறம்பாடிய சேதிகள் ஏராளம் உண்டு. தொண்டை மண்டலத்து மாமன்னன் காளிங்கராயனின் பட்டத்துப் புரவியை – பொய்யாமொழி என்னும் புலவன் அறம்பாடி வீழ்த்திய வரலாறு பழந்தமிழ் நூல்களில் காணப்படுகிறது.

தன் மகன் அம்பிகாபதியின் தலை வாங்கிய காரணத்திற்காக, தயரதனுக்கு நிகரான துயரத்தை அடைந்த கம்பநாடன்---------- சோழ குலமே பூண்டற்றுப் போகவேண்டி, அறம் பாடியதாகவும், அதன் காரணமாக மண்மாரி பொழிந்ததாகவும், அந்த இடமே இன்றும் தஞ்சை மாவட்டத்தில் ‘மணல்மேடு’ என்னும் ஊராக திகழ்கிறது என்பதாகவும், கர்ண பரம்பரைக் கதைகள் பேசுகின்றன.

இசைபாடி எவரையும் வாழ்த்துதல் அல்லாது --- வசைபாடி வீழ்த்துதல் தமிழுக்குத் தகாது என்று சான்றோரும் ஆன்றோரும் சொல்லக் கேட்டிருக்கிறேன் நான்.

எனது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் பெரிதும் காரணமாய்த் திகழ்ந்த பொன்மனச் செம்மல் என்பால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அன்பு பாராட்டி வரும் அருமை நண்பர் டாக்டர் புரட்சித்தலைவர் அவர்கள.

நான் அவருக்காக எழுதும் பாடல்களில் அறச்சொற்கள் விழுந்துவிடாமல் என்னை எவ்வளவோ முறைகள் எச்சரித்திருக்கிறார்கள். அதை ஓர் அன்புக் கட்டளையாகவே ஏற்று நான் செயல்பட்டிருக்கிறேன்.

‘உங்க வாயால, நீங்க யாரையும் எந்த ஸ்தாபனத்தையும், வாழ்த்தித்தான் பாடணுமே தவிர – வசையாப் பாடிடக்கூடாது!’ என்று எம்.ஜி.ஆர். அவர்கள் மென்மையாக என்னிடம் எடுத்துச் சொன்னது இன்னமும் என் நெஞ்சில் பசுமையாக நிற்கிறது.

‘என் பாட்டுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதாக, நான் நினைக்கல்லே அண்ணே!’ என்று புன்னகைத்தவாறே நான் சொன்னபோதெல்லாம் கூட—
‘உங்க தமிழின் சக்தி எனக்குத் தெரியும்’ என்று பாசத்தோடு என் தோளில் தட்டிக் கொடுத்திருக்கிறார்.

வரும் பொருள் உரைக்கின்ற வல்லமை எனக்கிருப்பதாக, நான் என்றைக்குமே எண்ணுவதில்லை. அடுத்த வினாடியை, ஆண்டவன் தன் கைவசத்தில் வைத்திருக்கிறான் என்பதும் நான் அறியாததல்ல.

இருப்பினும் , என் பாடல்களோடு நான் சில நிகழ்ச்சிகளை சம்பந்தப்படுத்தி பார்க்கும்போது அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் எவ்வளவு தீர்க்கதரிசி என்பதை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

‘நினைத்தேன் வந்தாய்; நூறு வயது’ என்ற பாடலை நான் காவல்காரன் படத்தின் பூஜை நாளன்று எழுதினேன். அந்தப் பாடலை நான் எழுதிய நாளில் எம்.ஜி.ஆர். முழு ஆரோக்கியத்தோடும், காலத்தை வென்ற இளமையோடும் இருந்தார்கள்.

ஆனால் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட பொழுது, எம்.ஜி.ஆர். அவர்கள் மரணத்தின் வாயிலிலிருந்து மீண்டு வந்திருந்தார்கள்.

ஆம்! துப்பாக்கியால் சுடப்பட்ட துர்பாக்கிய நிகழ்ச்சிக்குப் பின் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட பாடல் காட்சி அதுதான்.

‘அண்ணே உங்க உடம்பு இப்ப பூரணமாகக் குணமாயிருக்கா? என்று அப்போது நான் அவரைக் கேட்டேன்.

‘நீங்கதான் எழுதிட்டீங்களே – நினைத்தேன் வந்தாய்; நூறு வயசு அப்படின்னு, என்று அவருக்கே உரித்தான புன்முறுவலோடு என் கைகளைப் பற்றிக் கொண்டு சொன்னார்.

பிற்பாடு ஒரு சந்தர்ப்பத்தில் நான் எம்.ஜி.ஆர். அவர்களோடு அவரது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னேன்;

அண்ணே நீங்க தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டாலும் திண்டுக்கல் தேர்தல்லே மாயத்தேவர் ஜெயிச்சுட்டதாலே, மக்கள் உங்கள் பக்கம்தான் இருக்காங்கறது, இப்ப நாடு பூராப் பேச்மெபடியாப் போச்சு!’ என்று நான் சொன்னதற்கு, உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் –

‘நீங்கதான் அப்பவே எழுதிட்டீங்களே – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் – அப்படீன்னு! என்று மூன்றெழுத்துக்கு விளகமாக தி.மு.க.வைச் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினார்கள்.

எப்போதோ நான் ஒளிவிளக்கு படத்தில் எழுதிய – இறைவா! உன் மாளிகையில்…’ என்ற பாடல், இன்று எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் தேறுவதற்காக மக்களின் பிரார்த்தனைப் பாடலாக பயன்பட்டதை எண்ணி, நான் கற்ற தமிழுக்கு வணக்கம் சொல்லுகிறேன்.

அப்பல்லோ மருத்துவ மனையில் திருமதி.ஜானகி ராமச்சந்திரன் அவர்களை நான் சந்தித்துப் பேசியபோது அம்மையார் சொன்னார்கள்.

‘வாலி! உங்க பாட்டுதான் இன்னிக்கு ஜனங்களெல்லாரும் பாடிப் பாடி, அந்தப் பிரார்த்தனை பலிக்க உங்க அண்ணன் ஆபத்திலிருந்து பிழைச்சிட்டாங்க…!

அம்மையாரின் இந்தப் பாராட்டுரையை விட, என்க்குப் பிறவிப் பயன் வேறென்ன வேண்டும்?

இவ்வளவு வாழ்த்துச் சொற்களை எழுதிய நான் கூட ஒரு முறை கவனப் பிசகாக ஒரு பாடல் எழுதப்போக – அதுவே அந்தப் படம் தாமதிக்கக் காரணமாகிவிட்டது.

தலைவன் என்ற படத்திற்காக பூஜை நாளன்று ஒரு பாடலை எழுதினேன்.
‘நீராழி மண்டபத்தில் – தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் – தலைவன் வராமல் காத்திருந்தாள்! – என்பதுதான் அந்தப் பாடல்.

எம்.ஜி.ஆர். அவர்கள் எவ்வளவோ ஒத்துழைத்து நடித்தும் கூட, காரணகாரியமின்றி அந்தப் படம் நெடுநாட்கள் தாமதிக்கப்பட்டு பிறகு வெளியாயிற்று. அந்தப் படம் வெளிநான பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள், ‘வாலி! நீங்கதான் இந்தப் படம் தாமதாமானதற்குக் காரணம்! கவனிக்காம பாட்டுல ‘தலைவன் வராமல் காத்திருந்தாள்! அப்படின்னு எழுதிட்டீங்க! அந்த வரியில் அறம் விழுந்துடதால் தான் அந்தப் படம் இவ்வளவு நாள் தாமதப் பட்டது என்றார்கள்.

நடிப்பிசைப் புலவர் திரு.கே.ஆர். ராமசாமி அவர்கள் பகுத்தறிவுப் புடம்போட்ட தங்கம் என்பது நாமும் இந்த நாடும் அறிந்த செய்தி. அவர் திரு.ஏ.எல்.எஸ். தயாரித்த ‘செந்தாமரை’ படத்தில் ஒரு பாடலைப் பாடினார்.
‘நான் பாடமாட்டேன்! இனி மேல் பாட மாட்டேன்!’ – என்று அவர் பாடிய இந்தப் பாடலுக்குப் பிறகு, திரைப்படங்களில் இறுதி வரை அவர் பாடவே இல்லை.

நமது பகுத்தறிவுக்கு எட்டாத எவ்வளவோ விஷயங்கள், நாம் ஜரணிக்க முடியாத உண்மைகளாக இருப்பது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நாளை பொழுதை
இறைவனுக்களித்து,
நடக்கும் வாழ்வில்
அமைதியைத்தேடு! 

என்னும் கண்ணதாசனின் வரிகளைத்தான் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும்.
--------  கவிஞர் வாலி.