Sunday, February 24, 2013

காசேதான் காதலிடா!?.‘இன்று ரொக்கம், நாளை கடன்’. ‘கடன் உடன் பகை’ என்று நம்மூரில் கடைக்குக் கடை அறிவிப்புப் பலகைகள் இருந்தாலும் கடன் கொடுக்கும் சமாசாரத்தில் நாம் அவ்வளவு உஷாரில்லை. ‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று பாடல் இருந்தாலும் நம்மூரைப் பொறுத்தவரை கடன் வாங்கியவர்கள் யாரும் கலங்குவது இல்லை. கட்ன் கொடுத்தவர்கள்தான் சமயத்தில் கதிகலங்கிக் கலகலத்துப் போக நேரிடுகிறது.

கடன் கொடுக்கலாமா…? கொடுக்கலாம் என்றால் யாருக்குக் கொடுக்கலாம்? எவ்வளவு கொடுக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கு விடைதேட யூதர்களிடமும், குஜராத்திகளிடமும்தான் நாம் பாடம் படிக்க வேண்டும்.

தங்களுக்கென்று தனியாக ஒரு நாடுகூட இல்லாத யூதர்கள், பன்னாட்டு நிறுவனங்களை மாத்திரமல்ல… அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் படைத்தவர்களாகத் திகழ்கிறார்கள். உலகம் இவர்களைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்கு ஒரு முக்கிய காரணம், இவர்களின் நிதி நிர்வாகத் திறமை. பணத்தைக் கையாள்வது பற்றி இவர்கள் பல கோட்பாடுகள் வைத்திருக்கிறார்கள். பணம் சம்பந்தமான முடிவுகள் எடுக்கும்போது அதில் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கமாட்டார்கள். குஜராத்திகளும் இந்த வகைதான்.
ஒருவருக்கு நாம் கடன் கொடுக்க விரும்பவில்லை என்றாலும்கூட, கடன் கேட்டு வருகிற நபர் கண்ணீர் வடித்தாலோ அல்லது ‘குழந்தைக்கு மருந்து வாங்க வேண்டும்’ என்பது மாதிரி நாடகம் போட்டாலோ உணர்ச்சி வசப்பட்டு சட்டென்று கையில் இருக்கும் காசை எடுத்து நீட்டிவிடுவோம்.
‘இந்தப் பணத்தை நீ எப்போது திருப்பிக்கொடுப்பாய்?’ என்றுகூட பல சமயங்களில் நாம் கேட்காமல் சென்டிமென்டில் விழுந்துவிடுவோம். 

ஆனால் குஜராத்திகள் அப்படியல்ல! ஒருவர் தன்னை நோக்கி நடந்து வரும் தோரணையில் இருந்தே அவர் தன்னிடம் கடன் கேட்கத்தான் வருகிறார் என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள். இவரிடம் பணம் கொடுத்தால் திரும்பி வராது என்று அவர்கள் முடிவெடுத்து விட்டால், அந்தர் பல்டி அடித்தால் கூட பணம் பெயராது.

‘கடன் கொடுக்க முடியாது!’ என்பதை எதிரில் இருப்பவர்களின் மனம் கோணாமல் சொல்வதில் மாக ஜித்தர்கள் அவர்கள். கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக்கூடாதா? ‘பொண்ணு கல்யாணச் செலவுக்கு வேணும்னு இப்பதான் நம்ம ராமசாமி ஐம்பதாயிரம் கேட்டு வாங்கிட்டுப்போறார்’ என்பார்கள். இல்லையென்றால் கடன் கேட்க வருகிறவர் பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பே, ‘நீங்க யாருக்கும் கடன் கொடுத்துடாதீங்க சார். காலம் கெட்டுக் கிடக்குது! என்று அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்.
‘இவருக்கு கடன் கொடுக்காவிட்டால் இவர் நம்மை தப்பாக எடுத்துக்கொள்வாரோ?’ ‘உறவு முறிந்துவிடுமோ?’ என்றெல்லாம் அவர்கள் மனதைப் போட்டு அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ‘பணத்தைக் கடனாகக் கொடுத்தால்தான் இவரின் உறவு நிலைக்கும் என்றால், அத்தகைய உறவு எனக்குத் தேவையில்லை!’ என்று முடிவெடுத்துவிடுவார்கள்.

அதுபோலவே, ‘இந்த ஆளை நம்பிக் கடன் கொடுக்கலாம்!’ என்று ஒரு குஜராத்தி முடிவெடுத்துவிட்டால், ‘இந்தா பணம்’ என்று உடனே எடுத்து நீட்டிவிடமாட்டார். ‘கடன் கேட்டு வந்தவருக்கு உண்மையிலேயே பணம் தேவையா?’ என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாக, ஒரு இடத்திலிருந்து நாளை பணம் வரவேண்டியிருக்கிறது. நீங்கள் நாளைக்கு வந்து பாருங்கள்!’ என்று சொல்லி அனுப்பிவைப்பார்கள். கடன் கேட்டு வந்தவருக்கு உண்மையிலேயே பணத்தேவை இருந்தால் அடுத்தநாள் வருவார். 

ஆனால், அப்போதும் அந்த குஜராத்தி அவர் கேட்ட முழு பணத்தையும் எடுத்துக் கொடுத்து விடமாட்டார். பணத்தின் அருமை புரியவேண்டும் என்பதற்காக, அவர் நூறு ரூபாய் கேட்டிருந்தால் என்பது ரூபாய்தான் கடன் கொடுப்பார்!
ஆனால் நம்மூரில் என்ன நடக்கிறது என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். யாராவது ஒருவர் நம்மிடம் கடன் கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் பணம் ‘இல்லை’ என்று எப்படிச் சொல்வது?... அப்படிச்சொன்னால் அது நமக்கு கௌரவக் குறைச்சல் ஆகிவிடுமோ…? என்று ஏதேதோ வேண்டாத கற்பனைகள் எல்லாம் வரும். எனவே பணம் விஷயத்தில் ‘நோ’ சொல்லத் தயங்கக்கூடாது.

'சுரேஷ் பத்மநாபன்' ஆ.வி.யில்

Thursday, February 14, 2013

அபாயத்தின் ஓசைகள்கூடங்குளம் ஒரு முடிவுறாத போராட்டமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசு எதையுமே கண்டுகொள்ளவில்லை. மாநில அரசோ மௌனம் காக்கிறது. இதில் பொய்யான தகவல்கள்வேறு பரப்பப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் துவங்கிவிட்டால் மின்வெட்டில்லா மாநிலமாக தமிழகம் மாறிவிடுமாம்?! இந்த படித்த முட்டாள்களை என்னவென்று சொல்வது? 

அரசியல்வாதிகள் தங்களின் ஆதாயத்திற்காக நாட்டையே அடகு வைக்கிறார்கள். ஆனால் இந்த படித்த மேதாவிகள் எதற்காக இப்படி இதற்கெல்லாம் ஆதரவளிக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. மேலோட்டமாக அல்லது அரசுக்கு ஜால்ரா போடும் பத்திரிகைகளின் செய்திகளைப் படித்துவிட்டுத்தான் இந்த அரைவேக்காடுகள் அவசரகதியில் உளறுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.
ஆனால் அணு உலைகள் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமலேயே பேசுகிறார்கள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம். கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துக்களைக் கூட கருத்தில் கொள்ளாமல், பாதுகாப்பு பற்றிய எந்தக்கேள்வியையுமே எழுப்பாமல் பல தலைமுறைகளை காவு வாங்க இவர்கள் ஆயத்தமாவது எதனால்?.... வெறும் கட்சி விசுவாசம்! தாம் சார்ந்த அரசியல்கட்சிகளின் நிலைப்பாட்டை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் போக்கு இங்கு மட்டுமே சாத்தியம்!

கல்பாக்கத்திற்கும், தாராப்பூருக்கும் என்ன கேடு வந்துவிட்டது என்பது இவர்களின் கேள்வியாக இருக்கக்கூடும். கல்பாக்கத்தில் 1983 மற்றும் 1985 ல் இரு 220MW அணு உலைகள் கனடா நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டன. அது அமைத்தது முதல் சரிவர இயங்கவில்லை. அதனால் சிலகாலம் நிறுத்திவைத்து பின்னர் பல சோதனைகளுக்குப் பின் அதன் திறன் 170 MW  ஆக குறைக்கப்பட்டு அது இயங்கி வருகிறது.

அணு உலை தொடங்கியது முதல் கடலில் கொட்டப்படும் அதன் கழிவுகளால் அந்தப்பகுதிகளில் தொடர் பிரச்னை ஆரம்பமானது. இரண்டு உலைகளின் கழிவுகள் அந்தப்பகுதியின் கடல் வெப்பத்தை 8 டிகிரி அதிகரித்தது. இதனால் மீன்வளம் வெகுவாக பாதிக்கப்பட்டது. நாம் உண்ணக்கூடிய மீன் வகைகளான ராட்டு, சிங்கராட்டு, நண்டு வகைகள் அழிந்து, நட்சத்திர மீன்களைப் போன்ற வகைகள் பெருகின. மீனவர்கள் கடலுக்குள் இருக்கும்போது அவர்கள் மீது தெரிக்கும் கடல் நீரால் உடல் முழுவதும் அரிப்புகளும் வெடிப்புகளும் மிகக் கொடிய அளவில் உண்டாகிறது. இவை அணு உலைக்கழிவுகளின் விளைவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 
 அங்கு வசிக்கும் மருத்துவர் புகழேந்தி சுகாதாரம், உடல்நலம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டு கதிரியக்கத்தின் பாதிப்புகளுக்கு எப்படி உலையைச் சுற்றியுள்ள மக்கள் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை, அடிப்படைத் தரவுகள் ஆய்வுகளுடன் நிறுவுகிறது. ஆனால் அவரது வாதங்களை, ஆய்வுகளை கல்பாக்கம் அணு உலை நிர்வாகம் எப்பொழுதும் அலட்சியப்பட்டுத்தியே வந்துள்ளது. கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள 5 கி.மீ. பகுதியில் மட்டும் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

2004 சுனாமியின் பொழுதும் கல்பாக்கத்தில் பல ஆபத்தான சம்பவங்கள் நிகழ்ந்தன. அணு உலையின் சுற்றுச்சுவர் அடித்துச்செல்லப்பட்டது. சுனாமி தாக்கியதில் அங்கு இருக்கும் தொலைபேசி மையம் வெள்ளத்தில் மூழ்கி மொத்த தொலைத்தொடர்பும் ஸ்தம்பித்தது. அன்று தண்ணீர் இன்றி, மின்சாரம் இன்றி, தொலைத்தொடர்புகள் இன்றி ஒரு துண்டிக்கப்பட்ட நிலமாக அது காட்சியளித்தது. அப்போது 65 முதல் 80 பேர் வரை அடித்துச்செல்லப்படதாகத் தகவல்கள் வெளியாயின. 

கல்பாக்கம் அணு உலை கட்டும்போது சுனாமி அலைகளின் அபாயங்கள் கணக்கில் எடுக்கப்படதா என்ற கேள்விக்கு, இந்திரா காந்தி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர். L.V. கிருஷ்ணன் அவர்களிடம் பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் தந்த பதில்…. இல்லை. சுனாமி அலைகள் சாரந்து எந்த தற்காப்பும் அங்கு இல்லை. இந்தியாவில் எவரும் சுனாமி அலைகள் வந்து நம் கரைகளைத் தாக்கும் என்று கற்பனை செய்துகூட பார்த்திருக்கவில்லை. புயல் மட்டுமே கணக்கில் எடுக்கப்படது. அதுவம் 6 மீட்டர் அலைகள்தான் அதன் கணக்கு, என்றார்.

ஆனால் நடந்தது என்ன? நாடே அறியும்! இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் அரசின் உதவிகளைப் பெறும் எல்லா விஞ்சானிகளும் ஒன்றுபோல அணுஉலையை ஆதரிக்கிறார்கள். மக்கள் சார்ந்த விஞ்சானிகள் அனைவரும் அணு உலையை தொடர்ந்து எதிர்க்கிறார்கள்.  
இன்று நாட்டின் மின்சரத்தேவைகளில் சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றிலிருந்து 11.05% பெறுகிறோம். அதே வேளையில் அணு உலைகளில் இருந்து 2.36% மட்டுமே பெறுகிறோம். அப்படி இருக்க, எப்படி இங்குள்ள நடுத்தர வர்க்கத்திற்க்கு அணுவின் மேல் அத்தனை பாசமும், சூரிய ஒளி, காற்றாலை மதிப்பற்ற ஒருவித நையாண்டியும் உருவானது. உலக அளவில் இந்த அணுத்துறைதான் சூரிய ஒளி மற்றம் காற்றாலை சார்ந்த ஆய்வுகளை முடக்கிவைத்துள்ளது.

எப்படி பெட்ரோலிய நிறுவனங்கள் மாற்று எரிபொருள் அல்லது ஹைட்ரஜனில் இயங்கும் கார்கள் சார்ந்த அனைத்து ஆய்வுகளையும், பரிசோதனைகளையும் முடக்கிவைத்துள்ளதோ அதே பாணிதான் இங்கும் செயல்படுகிறது. இதுவரை எல்லா சூரிய ஒளி நிறுவனங்களுக்கும் வங்கிகள் தொழில் முறையாகத்தான் கடன்கள் வழங்குகின்றன. ஆனால் இந்த வெள்ளை யானை கடந்த 65 ஆண்டுகளாக நம் வரிப்பணத்தை எத்தனை லட்சம் கோடிகள் தின்று செரித்துள்ளது என்கிற கணக்குகளை அரசு முன்வைக்குமா?  


Saturday, February 2, 2013

மறக்க முடியாத தமிழாசிரியர்கள்தமிழாசிரியர்களுக்கென்றே ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்' என்பது இவர்களுக்கு முழுக்கப் பொருந்தும். தாய்மொழியில் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டபின்தான் மற்ற பாடங்களையே படிக்க ஆரம்பிக்கிறோம். நாம் பிறந்தது முதல் உணர்ந்து, கேட்டு, பேசி வந்தாலும் ஒரு மொழியை முற்றிலுமாக கற்பது என்பது வாசித்தலையும், பிழையற எழுதுவதையும் உள்ளடக்கியது. இதற்கான முதல் வித்து ஊன்றப்படுவது தமிழாசிரியர்களால்தான். 

ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நான் பயின்ற நாட்கள் பெரும்பாலும் நினைவில்லை என்றுதான் சொல்லவேண்டும். புளிய மரத்தடியில் எங்களை உட்காரவைத்து எங்களுக்கு வகுப்பெடுத்த 'மனோன்மணி' ஆசிரியையை நன்றாக நினைவிருக்கிறது. மதிய உணவுத் திட்டத்தில், மூன்று சக்கர வண்டியில் கருப்பு பிளாஸ்டிக் டப்பாக்களில் கோதுமையால் செய்த ஒரு வகை உணவை அடைத்து எங்கிருந்தோ சுடச்சுட கொண்டு வருவார்கள். எல்லோருக்கும் கிடைக்கும்தான் என்றாலும் வரிசையில் உட்காருவதற்கே சிறுவர்களுக்கேயான ஒரு தள்ளுமுள்ளு போட்டி இருக்கும். அப்போது வரிசையில் உட்காரவில்லை என்பதற்காக 'பீதாம்பரம்' என்ற எனது தலைமை ஆசிரியர் என்னை குனியவைத்து முதுகில் அடித்ததை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை. ஆனால் ஐந்தாம் வகுப்பு வரை எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் யார் என்று எவ்வளவு முயற்சி செய்தும் நினைவுக்கு வரவில்லை.

ஆரம்பப் பள்ளியிலிருந்து 5-ம் வகுப்பு முடித்து 6 வது படிக்க, எங்கள் ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து எனக்கு வகுப்பெடுத்த அத்தனை ஆசிரியர்களையும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அங்கும் கூட 'மனோன்மணி' என்ற பெயருடைய ஆசிரியையே தமிழாசிரியராகவும் வகுப்பாசிரியராகவும் இருந்தார். ஏழாம் வகுப்பு போனபோது திருமதி. மனோன்மணி ஆசிரியரின் கணவர் திரு.ஜி. நாராயணசாமி ஜயா அவர்கள் தமிழாசிரியராக இருந்தார். படிப்பில் சுட்டியாக இருந்த காரணத்தால் மனோன்மணி ஆசிரியையிடம் நல்ல பெயர் எடுத்தபடியால் சுலபமாக அவரது கணவரான நாராயணசாமி ஜயா அவர்களிடமும் நல்ல பெயர் வாங்க முடிந்தது.
ஆனால் எட்டாம் வகுப்பில் திரு. தங்கராசு ஜயா தமிழாசிரியராக வந்த பின்பு தமிழாசிரியர் என்றால் மென்மையானவர்கள் மட்டுமில்லை இவரைப்போல கண்டிப்பானவர்களும் உண்டு என்பதை அறிந்துகொண்டேன். நல்ல மாணவர்களிடத்தில் அன்பும், சரியில்லாத மாணவர்களிடத்தில் கண்டிப்பும் என்பதே அவரது பாணி. பெரும்பாலும் அவரிடம் அடி வாங்காதவர்களே கிடையாது. அதிலும் காதில் கிள்ள ஆரம்பித்தால் அது ஜென்மத்துக்கும் மறக்காது. அத்தனை கண்டிப்பானவர்.

ஒன்பதாம் வகுப்புக்குப் போனபோது திரு. அமரன் ஐயா அவர்கள் தமிழாசிரியர். அவரது கையெழுத்து அச்சில் வார்த்தது போல இருக்கும். பள்ளியில் இலக்கியப் போட்டிகள் எது நடந்தாலும் அது கட்டுரைப் போட்டியோ, கையெழுத்துப் போட்டியோ அல்லது ஓவியப் போட்டியோ எது நடந்தாலும் என்னைக் கேட்காமலேயே என் பெயரைச் சோர்த்துவிடுவார். இதிலிருந்து பின்வாங்கவே முடியாது. எப்படியோ மன்றாடி பேச்சுப் போட்டியிலிருந்து தப்பித்துவிடுவேன். அப்போது அவர் தந்த ஊக்கம்தான் இப்போது இந்த அளவுக்காவது என்னால் எழுதமுடிகிறது. கட்டுரைப்போட்டி எந்த தலைப்பில் எப்போது கொடுத்தாலும் அதில் நான் கலந்து கொண்டால் முதல் பரிசு எனக்குத்தான். இந்த தன்னம்பிக்கை பிற்காலத்தில் ஒரு பிரபல வார இதழ் ஒரு கட்டுரைப்போட்டியை அறிவித்தபோது நண்பர்களிடம் சவால் விட்டு அந்தக்கட்டுரைப்பொட்டியில் ஜெயித்தும் காட்டினேன். என் அழகான கையெழுத்துக்கும் காரணம் அவரே!

பின்னாளில் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், துணுக்குகள், விமர்சனங்கள் என என் பன்முகத்தன்மை வெளிப்பட அவரே காரணமானவர். அடுத்து பத்தாம் வகுப்பிலும், மேல்நிலைக்கல்வி பயிலும் போதும் எனக்கு தமிழாசிரியர் திரு. சைலவாசன் ஐயா அவர்கள். எந்தப் பேச்சுப்போட்டியிலும் பங்கெடுக்காத நான் இவரின் வகுப்பெடுக்கும் அழகால், பேச்சாற்றலால் மிகவும் கவரப்பட்டேன். இவர் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளரும் கூட. ஏன் பட்டிமன்றம் என்றால் என்ன என்பதையே இவரால்தான் நான் அறிந்துகொண்டேன். இவர் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் என்றால் அது எவ்வளவு தொலைவில் இருந்தாலும் நண்பர்களுடன் சைக்கிளில் கிளம்பிவிடுவேன்.

நாளடைவில் எங்களூரில் நடைபெற்ற ஒரு விழாவில் இவரின் பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்ய அவர் வீடு தேடிச்சென்று ஒப்புதல் வாங்கி எல்லா ஏற்பாடுகளும் செய்தபின் அவரால் அதில் கலந்துகொள்ளாமல் போனது எங்கள் துரதிஷடமே!

பின்னர் இவர் எங்களூரிலிருந்து மாற்றலாகி வேலூருக்கு அருகில் உள்ள ‘பள்ளிகொண்டாவிற்கு தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று சென்றதாக அறிந்தேன். எட்டாம் வகுப்பிலேயே மாற்றலாகிப்போன தங்கராசு ஐயா எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அமரன் ஐயாவும் வேலூரில் தான் இருக்கிறார் என்று நம்புகிறேன். இதில் திரு. நாராயணசாமி ஐயா கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார். அவரது துணைவியார் திருமதி. மனோன்மணி ஆசரியை அவர்களை எப்போதாவது சென்று பார்ப்பது உண்டு. என் இந்த ஓரளவு தமிழறிவுக்கு காரணமான இந்த தமிழாசிரியர்கள் எப்போதுமே என்னால் மறக்க முடிந்ததில்லை.
இது தவிர நூலகங்கள் எனது தமிழை மேம்படுத்த மிகவும் உறுதுணையாய் இருந்திருக்கின்றன. வேலூர் தலைமை நூலகத்தில் உறுப்பினராகி காலை முதல் மாலை வரை சாப்பிடக்கூடச் செல்லாமல் அங்கேயே கிடந்த நாட்கள் அதிகம். வீட்டிற்கு எடுத்துச்செல்லும் புத்தகங்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தாமல் அபராதம் கட்டியதும் அதிகம். இப்படி நூலக வாசிப்புக்கு அடிகோலியது நான் படித்த பூட்டுத்தாக்கு அரசு மேல்நிலைப்பள்ளியே மிக முக்கிய காரணமாகும். பின்னாளில் நான் பயணம் போகும் இடமெல்லாம் நூலகம் எங்கே என்று தேடியலைந்து உறுப்பினரானது வேறு விஷயம்.

இப்படி புத்தக வாசிப்பிற்கு அடிமையாகிப் போனதற்கு எனது இளம் பிராயத்து கதைப்புத்தக வாசிப்பின் ஆர்வம் கூட காரணமாக இருந்திருக்கலாம். எனது பெரியப்பா வீடுகளில் அவர்கள் வாசிக்கும் எந்தப் புத்தகத்தையும் எப்படியாவது கெஞ்சிக்கேட்டு வாங்கிவந்து படிப்பது எனது வாடிக்கையான வழக்கம். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே கலைஞரின் ‘புதையல் என்கிற மிகப்பெரிய நாவலை வாசித்திருக்கிறேன். அப்புறம் குமுதம், கல்கி,  ராணி போன்ற இதழ்களும் சிறுவயதிலேயே வாசிக்கத்தொடங்கியிருந்தேன். தமிழ்வாணனின் பல புத்தகங்களும், டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி, மெர்வின் போன்றவர்களின் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தது அப்போதுதான்.

அந்த பழக்கங்கள்தான் என் இன்றைய இணைய வாசிப்பிற்கும் ஊன்றுகோலாயிருந்து பதிவு உலகம் வரை என்னை அழைத்து வந்திருக்கிறது. இவைகள் எல்லாம் என் நினைவில் இருந்தாலும் எழுத்திலே நினைவு கூற வைத்த 'தமிழ்ச்செடி'க்கும், 'தமிழ்ச்செடி'யை எனக்கு அறிமுகப் படுத்திய ‘தேவியர் இல்லம் திருப்பூர்ஜோதிஜி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி!
 
தொடர்புடைய இடுகை; அன்புள்ள ஐயா!