ஞாயிறு, 9 அக்டோபர், 2011

சில கடிதங்கள்


17.02.1998
அன்பின் இனிய நண்பருக்கு க்ளாரா எழுதுவது.


நான் நலம் உங்கள் நலன் அறிய ஆவல். எப்படி இருக்கிறீர்கள். ஏன் இந்த நீண்ட மௌனம்? காரணம் தெரியாமல் கலங்குகிறேன். என் மீது ஏதாவது வருத்தமா? என்னவாயிருந்தாலும் எனக்கு உடன் கடிதம் எழுதவும். நான் ஜனவரியில் இரண்டு கடிதங்கள் போட்டேன். ஏன் பதில் இல்லை? தினமும் உங்கள் கடிதம் வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம்தான் மிச்சம். எனக்கு கடிதம் எழுத பிடிக்கவில்லையா? அல்லது ஏதாவது பிரச்னையா?

நான் மார்ச் 10-ம் தியதி ஆர்க்காடு வருகிறேன். அங்கிருந்து 13-ம் தியதி சென்னை வருகிறேன். நான் மட்டுமல்ல, நாங்கள் 9 பேர் வருகிறோம். 2 மாதம் சென்னையில் ஒரு பயிற்சிக்காக வருகிறோம். நான் சென்னை வந்ததும் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். நீங்கள் ஏன் என் இரண்டு கடிதங்களுக்கும் பதில் எழுதவில்லை என்று மார்ச் 10-ம் தியதிக்குள் எனக்கு கடிதம் எழுதுங்கள். தயவு செய்து என்னை ஏமாற்ற வேண்டாம்.

என்றும் அன்புடன்,
க்ளாரா.

         02.05.1998
இனிய நண்பருக்கு பால சண்முகம் எழுதுவது.


உங்களின் 19.04.1998 தேதிய மடல் கிடைத்தது. விரம் அறிந்தேன். 08.05.1998 இரவு இங்கிருந்து சென்னை மெயிலில் புறப்படுகிறேன். மறுநாள் திருவல்லிக்கேணியில் பம்பாயைத் தலைமையிடமாகக் கொண்ட Indian Pen pal League என்ற அமைப்பின் சந்திப்பு மற்றும் கருத்தரங்கு (ரஹமத் மன்ஜில் திருமண மண்டபம்) நடக்க உள்ளது. 

இன்னமும் அழைப்பிதழ் வரவில்லை.உள்ளது. மதியம் சரவணா ஸ்டோரில் சில பொருட்கள் வாங்க வேண்டும். மாலை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ‘நந்தன் பத்திரிகை ஓராண்டு நிறைவி விழா நடைபெற உள்ளது. நான் இந்த விழாவைக் காணத்தான் முக்கியமாகச் சென்னை வருகிறேன். அதாவது மாலை அங்கிருப்பேன். நீங்கள் என்னைச் சந்திக்க தேனாம்பேட்டை நிகழ்ச்சி திடலுக்கு வந்துவிடுங்கள். நேரில் மற்ற விஷயங்களைப் பேசிக்கொள்வோம். 

நான் அன்று இரவே ஊர் திரும்ப வேண்டிய நிலை. முடிந்தால் காலை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் வாருங்கள். இது நமது சந்திப்புக்கு வசதியாக இருக்கும். மாலை நக்கீரன் கோபால் மூலமாக கருத்தரங்க மலர் வெளியீடும் நடைபெற உள்ளது. மற்றவை நேரில்.

இப்படிக்கு,
என்றும் அன்புடன்,
பால சண்முகம்.


அன்புடையீர்,                                    06.11.1998


வணக்கம். நான் மாலா. எப்படியிருக்கிறீர்கள்? நலமா? வீட்டில் மனைவி, குழந்தைகள் நலமா? இவ்ளோ நாளா லெட்டரே போடமுடியலை. BSRB Exam க்குப் படிச்சிகிட்டிருந்தேன். அடுத்ததா AMIE EXAM க்குப் படிக்கிறேன். 

காலைல அலுவலகம் போயிட்டு, இரவு வீட்டுக்கு வந்து படிக்கத்தான் நேரம் சரியா இருக்கு. புக்ஸ் படிக்கக்கூட நேரம் இல்லை. புக்ஸ் வாங்கி அப்படியே வச்சிருக்கேன். EXAM-முடிஞ்சதும்தான் படிக்க முடியும். அதனால உடனே லெட்டர் போட முடியலை, சாரி.

அப்புறம் உங்க வேலை எப்படி போகுது? எந்தப் பிரச்னையும் இல்லையே? சென்னையில் எப்படி? நல்ல மழையா? இங்கே நிறைய பேர் புண்ணியம் செஞ்சிருக்காங்க போலிருக்கு. அதுக்காக ‘மழை எக்கச்சக்கமா நன்றி செலுத்துது. மழையை வேடிக்கை பார்க்கவும், அதுல நனையவும் ரொம்பப் பிடிக்கும். அதானால மழையை ஜாலியா அனுபவிக்கிறேன்.

என் தங்கை கூட அங்கு Government Interview Attend பண்ணியிருக்கா. இன்னும் ரிசல்ட் தெரியலை. வீட்டுக்கு வந்ததும் (உங்களையெல்லாம் பார்த்துட்டு வந்ததும்) இவளுக்கு மட்டும் எப்படி சூப்பர் ஃப்ரண்ட்ஸா அமையராங்க தெரியலைம்மா. அவரோட பொண்ணுகூட இவகிட்ட ஈஸியா ஒட்டிகிச்சு, அப்படின்னு சொன்னா. குழந்தைகளை மழையில நனையாம பத்திரமா பார்த்துக்கோங்க.

வேறொன்றும் விஷயமில்லை. மற்றவை பிறகு.
By
மாலா.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
PUNCH BALA – வின் வலைப்பக்கத்தில் கடிதம் குறித்த இன்னொரு வலைப்பதிவு ஒரு கடிதம் என்ற தலைப்பில்.....

4 கருத்துகள்:

Unknown சொன்னது… [Reply]

Kaditham patri oru katturai http://atheetham.com/story/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் தங்கள் இணையப் பக்கத்தை அறிமுகம் செய்தமைக்கும் நன்றி அதீதம்!

Unknown சொன்னது… [Reply]

இந்த அளவுக்கு நண்பர்களா? எனக்கும் ஏக்கமாய் இருக்கிறது. ஆனால் கடித சகாப்தம் முடிந்து போயிற்றே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி ஞானசேகரன்.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!