வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

முதன்முதலாக நான் வாங்கிய சம்பளம்?

அப்போதுதான் ஐ.டி.ஐ. முடித்து தொழில் பழகுனர் வேலைக்காக முயற்சி செய்துகொண்டிருந்தேன். என்னுடைய ஊருக்கு மிக அருகிலிருந்த தொழிற்பேட்டை ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் அமைந்திருந்தது. அங்குக் கிடைத்தால் தினமும் வீட்டிலிருந்தே போய்வரலாம். இல்லையென்றால் சென்னைக்குத்தான் போகவேண்டும். நல்லவேளை ராணிப்பேட்டை சிப்காட்டிலிருந்து ஒரு பாய்லர் கம்பனியில் தொழிற் பழகுனர் வேலை உறுதியாயிற்று. மாதம் உதவித்தொகையும் கொடுப்பார்கள். ஆனால் அது எனக்குச் சம்பளம்தானே. 

இருநூற்று அறுபது ரூபாய் சம்பளம். அதாவது ஒருநாளைக்குப் பத்து ரூபாய். அதற்காகத் தினமும் என்னுடைய ஊரிலிருந்து சுமார் 16 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணிக்க வேண்டும். போக பதினாறு கிலோ மீட்டர், வர பதினாறு கிலோ மீட்டர். ஆக, 32 கிலோ மீட்டர் ஒரு நாளைக்குச் சைக்கிளை மிதித்தாக வேண்டும். இளமை வேகத்தில் அதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. ஆனால் இரண்டு ஷிப்டுகளில் வேலை செய்ய வேண்டும். முதல் ஷிப்ட் காலை 7.15 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.15 மணிக்கு முடியும். இதற்காக நான் விடியற்காலை 5 மணிக்கு எழுந்து தயாராகி அம்மா கட்டிக்கொடுக்கும் சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு காலை 6 மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்புவேன். சரியாக 7 மணிக்குத் தொழிற்சாலையை அடைந்துவிடுவேன். எப்போதும் பத்து நிமிடம் முன்கூட்டியே போய்ச் சேர்ந்துவிடும் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. ஆனால் பணி முடிந்து திரும்பும்போது வெயில் முகத்திலடிக்கும். வியர்வை ஆறாய் வழியும். இருந்தாலும் வீட்டுக்குப் போகும் அவசரம் மட்டும் குறையாது.

இரண்டாவது ஷிப்ட் நேரம் பிற்பகல் 3.15 மணிக்கு ஆரம்பித்து இரவு 11.30 மணி வரை. இதில் மதியம் இரண்டு மணிக்கு உச்சி வெயிலில் கிளம்ப வேண்டும் அது ஒரு கொடுமை. அதே போல நள்ளிரவில் வீடு திரும்ப வேண்டும். இரவில் திரும்பும்போது தனியாகக் கிளம்புவதில்லை. அக்கம் பக்கத்து கம்பனிகளில் வேலை செய்யும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து கிளம்புவதுதான் வழக்கம். காரணம் ஒன்று திருட்டு பயம். இன்னொன்று வழியில் சைக்கிள் பங்ச்சர் ஆகிவிட்டால் மீதமிருக்கும் அத்தனை கிலோமீட்டரும் நடந்துதான் போகவேண்டும். இந்தக் காரணங்களுக்காக நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்துதான் போவது வழக்கம். சைக்கிளை நல்ல நிலையில் பராமரித்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் சமயத்தில் கழுத்தறுத்து விடும். எனக்குத் தெரிந்து இரவில் ஒன்றும் ஆகவில்லை. பகலில் சைக்கிள் ரிப்பேராகி பிரச்சினையைச் சந்தித்திருக்கிறேன்.

ஒரு சில நேரங்களில் துணிந்து தனியாகவும் இரவு நேரங்களில் பயணித்திருக்கிறேன். உள்ளூர பயம் இருக்கும். திருட்டு பயத்தைத்தவிர, அடர்ந்த காட்டின் வழியே போகும்போது பேய் பிசாசு கதைகளும் கொலைச் சம்பவங்களும் ஞாபகம் வந்து தொலைக்கும். எங்கள் ஊரிலிருந்து ராணிப்பேட்டை சிப்காட் செல்வதானால் இரண்டு வழிகளில் செல்லலாம். ஒன்று ஆர்க்காடு சென்று அங்கிருந்து முத்துக்கடை நிறுத்தம் பின் அங்கிருந்து சிப்காட் பிறகு அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். இன்னொரு வழி பூட்டுத்தாக்கு என்னும் ஊரின் வழியாகப் பாலாற்றைக் கடந்து பாலாற்றங்கரையிலிருக்கும் காட்டைக் கடந்து அம்முண்டி, திருவலம் என்ற ஊர்களைக் கடந்து சிப்காட்டை அடையவேண்டும். முதல் வழியில் பேருந்து வசதி உண்டு. ஆனால் இறங்கி, ஏறி, காத்திருந்து நடந்து என எல்லாம் கணக்கிட்டால் 3 மணி நேரமாகிவிடும். இரவு ஷிப்டில் வாய்ப்பே இல்லை. அங்கேயேதான் தூங்க வேண்டும்.

இரண்டாவது வழியில் ஒரே ஒரு பேருந்து மட்டும் ஓடும். அது நம்முடைய நேரத்துக்கு ஒத்து வராது. அதனால்தான் சைக்கிளைத் தேர்ந்தெடுக்கக் காரணம். மழை, வெயில் என்ற பிரச்சினைகளையும் சமாளித்துத்தான் அந்த ஒரு வருடத்தையும் ஓட்டவேண்டியதாக இருந்தது. அப்போதைய காலகட்டத்தில் மறக்க முடியாத ஒரு சம்பவம். பிரதமர் இந்திரா காந்தி படுகொலை நிகழ்வு. பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு வீட்டுக்குத் திரும்பியது.

தொழிற் பழகுனர் பயிற்சி முடித்தும் சரியான வேலை கிடைக்காமல் சென்னை அம்பத்தூரில் தினம் 8 ரூபாய்க்கு கூட ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறேன். சாப்பாட்டுச் செலவுக்கே சமாளிக்க முடியாமல் சொந்த ஊர் திரும்பிக் கொஞ்ச நாளில் நண்பரின் உதவியால் பெங்களூர் போய்ச் சேர்ந்து முதன்முதலாக முறையாக நான் வாங்கிய சம்பளம் மாதம் 600 ரூபாய்.

புதன், 12 ஆகஸ்ட், 2020

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - கிண்டில் நூல் விமர்சனம்

தலைப்பைப் பார்த்துத்தான் இந்த நூலைத் தேர்ந்தெடுத்தேன். இது ஒரு அருமையான சிறுகதைத் தொகுப்பு. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒடிஸா, மத்தியப்பிரதேசத்தில் பணிபுரிந்தவன் நான். புத்தகங்களில்லாத இரயில் பயணங்களே இல்லை எனலாம். தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள பழைய புத்தகக்கடைகளிலிருந்து கணிசமான புத்தகங்களை வாங்கிக் கொள்வது வழக்கம். கூடவே அன்றைய செய்தித்தாள்கள், வாரப்பத்திரிகைகளும் வாங்கிக் கொண்டுதான் பயணிப்பேன்.

அதே போல இதன் முதல் கதையில் பழைய புத்தகக் கடையில் கிடைத்த ஒரு டைரியோடு துவங்குகிறது ஒரு ரயில் பயணம். டைரியில் எழுதப்பட்டுள்ள வரிகளைப் படிக்கும்போதே அந்தச்சிறுமி மனதுக்குள் புகுந்து விடுகிறாள். வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மும்பையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதைக்கூட அறியாத அந்தச் சிறுமியின் வாக்குமூலம் போல விரியும் அந்த டைரிக்குறிப்புகளைத் தேதி வாரியாகப் பக்கங்களைப் படிக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. என்ன ஆனது அந்தச்சிறுமிக்கு? மும்பையில் நடந்த சம்பவம். சென்னையில் கிடைத்த டைரி. பல வருடங்களுக்குப் பிறகு தில்லி ரயிலில் சந்தித்த ஒரு பெண்ணின் பையிலிருந்து விழுந்த டைரி. முதல் கதையே அசத்தல்.

சங்கமித்திரை – கிராமத்து வீட்டையும் அந்த மனிதர்களையும் அழகாகப் படம்பிடிக்கிறது. சங்கமித்திரை காதல் தோல்வியினால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயல அவள் எதிர்வீட்டு செல்வராசின் அப்பா காப்பாற்றுவதிலிருந்து தொடங்குகிறது கதை. வாழ்க்கை யாருக்கு எதை நிர்ணயித்திருக்கிறது என்று கணிக்க முடிவதேயில்லை. பழைய உறவுகளைப் பார்க்கிறபோது ஏற்படும் உணர்வுகளை வார்த்தையால் சொல்ல முடியாது. அது சகோதரி உறவாகவோ அல்லது வேறு என்ன உறவாகவோ இருந்தால் என்ன? அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...

வேட்கையின் நிறங்கள் – அப்பாவைப் பார்த்து ஆண்களையே வெறுக்கும் வேதா மாதவன் பால் மனம் மயங்குகிறாள். அவனின் அதிரடி செய்கையால் ஆண்களே இப்படித்தான் என்று அவனையும் வெறுக்கிறாள். வளர்ந்ததும் மாதவனுக்கே அவளை மணமுடிக்க ஏற்பாடு செய்ய, தன் தோழி நதியாவுடன் ஓடிப்போகிறாள். ‘திரியின்றி எரிந்து சாம்பலாகி, நாங்கள் மீண்டபோது’ என்ற ஒற்றை வரியில் இருவருக்குமுள்ள தன்பாலுறவைச் சொல்லாமல் சொல்லி விரசமில்லாமல் விவரிக்குமிடம் அருமை. முடிவு எதிர்பாராதது. ஏதோ ஒன்றைத் தேடிப்போய் மீண்டும் பாழுங்கிணற்றில் விழுவதுதான் பலரது வாழ்க்கையில் நடக்கிறது. வேட்கை யாரையும் விட்டு வைக்காது, சகலவிதங்களிலும் ருசி பார்த்துவிட்டுத்தான் ஓயும்.

வேலியோர பொம்மை மனம் – ஈழத்துக்கதை என்றுதான் நினைக்கிறேன். குண்டுவெடிப்புகளும் மரணங்களும் நிரம்பிய போர்ச்சூழலில் வாய் பேசாத, காது கேளாத ஜெயாவுக்கு வெடிச்சத்தம் காதில் விழாமலேயே ‘ரத்தம் தோய்ந்த உடையுடன் அவளது அறைக்குள் வந்து விழுந்த அம்மாவின் கைகள்’ இந்த வரிகளில் தெரிந்து போகிறது ஜெயாவின் நிலைமை. முள் வேலியிட்ட அகதி முகாமில் அவளின் சோகமும் இருந்த ஒரு துணையான கரடி பொம்மையைப் பறிகொடுத்தும் மனிதநேயம் மாறா செயலையும் விவரிக்கிறது இந்தக் கதை. அந்த இராணுவ வீரன் பொம்மையைப் பிடுங்கி கருணையே இல்லாமல் பிய்த்துப் போட்டும், மறுநாள் தன் அன்பால் அதே வீரனை வீழ்த்துவதாய்க் கதை முடிகிறது.   

ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு A பிரிவு – ப்ரியாக்குட்டி என் மனசிலும் நீங்கா இடம் பிடித்துவிட்டாள். அணையப்போகும் விளக்கு பிரகாசமாய் எரிவதைப்போல ப்ரியாக்குட்டியின் விளையாட்டுக்கள் சுவாரசியமானவை. உடனிருக்கும் உறவுகளின் இழப்பு, அதுவும் வாழ வேண்டிய வயதிலிருப்பவர்களுடைய இழப்பு வாழ்நாள் முழுவதும் வருத்திக்கொண்டே இருக்கும். அருணுக்கும் அப்படித்தானிருக்கும்.

சேமியா ஐஸ் – பால்ய காலத்தில் சைக்கிளில் தெரித்தெருவாய் வரும் சேமியா ஐஸை ருசிக்காத கிராமத்தான்கள் குறைவு. காசுக்குப் பதில் கிராமங்களில் என்ன விளைகிறதோ அதை அந்தந்த பருவ காலங்களில் வாங்கிக்கொண்டு ஐஸைக் கொடுப்பது வழக்கம். எங்கள் பக்கத்தில் வேர்க்கடலை பிடுங்கும் சமயத்தில் வீட்டுக்குத் தெரியாமல் பாக்கட்டில் நிரப்பி வந்து ஐஸ்காரணிடம் கொடுத்து சேமியா ஐஸை வாங்கிச் சாப்பிட்டது இன்றும் நினைவிலிருக்கிறது. இந்தக் கதையில் சித்தியின் பழைய பிளாஸ்டிக் செருப்பு. அடி வாங்கியது மறக்கவில்லை என்றாலும் ஆசை யாரை விட்டது. அடுத்த புது செருப்பும் அவனது இலக்காகிவிட்டதுதான் நகைச்சுவை.

வால் பாண்டி சரித்திரம் – நமக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்க அவர்கள் பெயரை நாய்க்கும் பூனைக்கும் வைக்கும் பழக்கம் தெரியும்தானே. சில வருடங்களுக்கு முன்பு ஷாருக்கான் தன் நாய்க்கு அமீர்கான் பெயரை வைத்ததைப் படித்திருக்கிறேன். ஆனால் கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் பிடிக்காத ஆசிரியருக்கும், அடிக்கின்ற ஆசிரியருக்கும்கூட பட்டப்பெயர் வைப்பது வழக்கம்தான். அந்த மாதிரி பள்ளிக்கூட நினைவுகளை விவரிப்பதும், காடைக்கறி வாங்கி வரச்சொன்னா காக்கா கறியைக் கொண்டு வரும் வால் பாண்டியின் கதை இது. தான் பிடித்த அனில் குட்டியை கொடுக்காததால், டேவிட் கொடுத்த சாபத்தினால்தான் தான் பெயிலானதாக தன் வரலாற்றைப் பெருமையாக நினைக்கும் பாண்டியின் சரித்திரம் இது.

சைக்கிள் – மாணவப் பருவத்தில் ஒவ்வொருவருக்கும் சைக்கிள்தான் சொத்து பெருமை எல்லாம். ஒரு காலத்தில் கிராமங்களில் சைக்கிள் அத்தியாவசியத் தேவையாக இருந்தது. 2014 வரை கூட என் வீட்டில் இரண்டு சைக்கிள் இருந்தது. படித்து முடித்து வெளியூருக்கு வேலைக்குப் போன பிறகு கவனிக்க ஆளில்லாமல் போன சைக்கிளுக்கு உயிர் கொடுத்து வைத்திருந்த அப்பா என்றைக்கும் ஓட்டாமல் அன்று எடுத்துக்கொண்டு வெளியே போக எமன் அவரை அழைத்துக்கொண்ட கதை இது. நிச்சயம் 80 காலத்தவர்களின் சொர்கத்தை நினைவு படுத்தும் கதை.

தனலட்சுமி டாக்கீஸ் – கிராமத்து டெண்ட்டு கொட்டாய் நினைவுகள். இந்தக்காலத்து பிள்ளைகளுக்கு இந்த அனுபவம் இல்லாமலேயே போய்விட்டது. என்னுடைய பிள்ளைகளைக் கடைசியாக 2014-ல் அழைத்துப் போனது நினைவுக்கு வருகிறது. டிக்கட் கொடுக்கும் கட்டையனின் பொழப்பு புஸ்வானமாய்ப் போன கதைதான் இது. படிக்கும் போது நிச்சயம் பழைய நினைவுகளைக் கிளறிவிடும். ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த 2020-ல் கூட எங்களூர் டெண்ட் கொட்டாய் (கணேஷ் திரையரங்கம்) உயிர்ப்போடு இருப்பதுதான்.

தாய்மை கதையும், பட்டாணியின் கதையும் கூட கிராமத்து வாடையுடன் கூடிய சுவாரசியமான கதைகள்தான். ஒன்று சந்தேகத்தின் அடிப்படையிலானது. அடுத்தது கள்ளக்காதலை மறைக்கப் பட்டாணி என்ற மனிதன் மீது பழி போடுவது. படித்ததும் மனசு பாரமாகிப்போனது. தூவல் கதையும் அதே மாதிரிதான்.

கடைசி இரண்டு கதைகள் சம்யுக்தையும், அப்பா சொன்ன நரிக்கதையும். வாழ்க்கையின் எதார்த்தங்களை இப்படிக்கூடச் சொல்ல முடியுமா என்று வியக்க வைத்தவை. காதல் வாழ்க்கையில் ஒருவரை எப்படியெல்லாமோ மாற்றிவிடுகிறது. ஆனால் பிரிவு வாழ்க்கையையே உருக்குலைத்து விடுகிறது. எத்தனை படித்தும் என்ன பயன்? மயக்கத்தில் இருப்பவனிடமோ அல்லது துயரத்தில் இருப்பவனிடமோ எந்த ஆலோசனையும் அல்லது ஆறுதலும் எடுபடாது இல்லையா?

கட்டாயம் வாசிக்க வேண்டிய அருமையான சிறுகதைகள். நன்றி நிலாரசிகன். 

நட்புடன்,

எம்.ஞானசேகரன்