Tuesday, November 26, 2013

சமையலில் மனைவிக்கு உதவும் ஆண்களுக்காக….


 
இப்பொழுது முழுக்க முழுக்க சமையல் செய்வதில் பெண்கள் மட்டுமே ஈடுபடுகிறார்கள் என்ற காலம் மாறிவிட்டது. ஆணும் பெண்ணுமாய் வேலைக்குச் சென்றால் வீடு திரும்பியதும் ஒருவருக்கொருவர் சமையலில் உதவி செய்தாலும் விரைவாகவும் எந்தவித மனத்தாங்கலும் சோர்வும் இல்லாமல் சமையலை முடித்து உறங்கச் செல்லலாம். நிறைய பேர் உதவியும் வருகிறார்கள். இது உதவி மட்டுமில்லை. பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளலே. என்னப்போல சிலருக்கு தனியாக சமையல் செய்து சாப்பிடும் ஆண்களுக்கும் இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும் அல்லவா? 

சாதம் வடித்த அரிசி கலந்த நீரில் கொஞ்சம் மோர் கலந்து அதில் கருவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை கையால் கசக்கிவிட்டால் வாசனையான தீடீர் மோர் தயார்.

இரண்டு டம்ளர் பயத்தம் பருப்புக்கு ஒரு டம்ளர் பச்சரிசி என்ற விகிதத்தில் கலந்து உப்பு, பச்சை மிளகாய் பெருங்காயம் கலந்து அரைத்து தோசை வார்க்கலாம்.

வெண்டைக்காய் பொரியலை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் வேர்க்கடலையை சிறிது வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துப் போட்டு வதக்கினால் சுவையாக இருக்கும்.

அல்வா மிக்சுடன் ஜவ்வரிசியை கொஞ்சம் ஊறவைத்து அரைத்துக் கலந்தால் அல்வா நிறையவும், கண்ணாடி போல் மின்னவும் செய்யும்.
வடாம் போடும் பிளாஸ்டிக் ஷீட் பறக்காதிருக்க வைக்கிற கற்களை பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி வைத்தால் கல், மண் வடாமில் விழாது.

ஃபில்டரில் காபிப் பொடி போடுவதற்கு முன் அதிலுள்ள துளைகளின் மேல் பரவலாக சர்க்கரையைபோட்டால் துளை அடைத்துக்கொள்ளாது டிகாஷன் ஒரே சீராக இருக்கும்.

மைசூர்பாகு செய்து இறக்கும் பொழுது ஒரு சிட்டிகை சோடா உப்பைப் போட்டால் கலவை பொங்கி ‘’மொறுமொறு’’வென்றிருக்கும்.
வெண்டைக்காய், கத்திரிக்காய் பொரியல் மிச்சமாகிவிட்டால் தயிர் சேர்த்து பச்சடி செய்துவிடலாம்.

வேக வைத்த காரட் அல்லது பரங்கிக்காயையும் பாதி வறுத்த துவரம் பருப்பையும், நான்கு பச்சை மிளகாய் நறுக்கி வைத்த வெங்காயம் உப்பு ஆகியவற்றையும் சேர்த்தால் அரைக்கிற சட்டினி படு சூப்பராக இருக்கும்.

முட்டைகோஸ் பொரியல் மீதியாகிவிட்டால் வடை மாவு, அடை மாவுடன் கலந்துவிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

சமைத்த பொரியல் மீதமாகிவிட்டால் அவற்றுடன் காரம் சேர்த்து வதக்கி, மைதா மாவைப் பிசைந்து, வட்டமாக இட்டு நடுவே பொரியல் கலவையை வைத்து பொரித்து சாப்பிடலாம்.

மீதமான தேங்காய் சட்டினியை கெட்டியான புளிப்பு மோரில் கலந்து கொதிக்க வைத்தால் மோர்க்குழம்பு தயார்.

சப்ஜி, கூட்டு போன்றவைகளை சப்பாத்தி இல்லாத பட்சத்தில் ரொட்டித் துண்டுகளுக்கு நடுவே வைத்து சாண்ட்விச் போல சாப்பிடலாம்.

வாழைக்காய் கத்திரிக்காயை அரிந்ததும் உடனே தண்ணீரில் போட்டுவிட்டால் கருத்துப் போகாது.

வாழைக்காய் வாங்கியவுடன் பச்சைத் தண்ணீரில் போட்டுவைத்தால் பழுக்காது.

நறுக்கிய ஆப்பிள், பேரிக்காய் ஆகியவற்றை உப்புத் தண்ணீரில் போட்டு வைத்தால் கருக்காது.

வெங்காயத்தை பாதியாக வெட்டி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைத்து பின் நறுக்கினால் கண்ணில் நீர் வராது.

முட்டைக்கோஸை காரட் சீவும் கட்டரில் சீவி வதக்கினால் சீக்கிரம் வதங்கிவிடும்.

கத்தியால் தக்காளியின் மேல்புறத்தில் ஒரு பிளஸ் குறி போடவும். சிறிது நேரம் பச்சைத் தண்ணீரில் ஊறவைத்து பிளஸ் குறியிலிருந்து தோலை சுலபமாக உரிக்கலாம்.

அதே போல தக்காளிப் பழத்தை கொதிக்கும் நீரில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் பச்சைத் தண்ணீரில் சிறிது நேரம் போட்டு எடுத்தாலும் தோலை சுலபமாக உரிக்கலாம்.

கையில் நல்லெண்ணையைத் தடவிக்கொண்டு சேனைக்கிழங்கை நறுக்கினால் கையில் அரிப்பு உண்டாகாது.

நறுக்கிய பாகற்காயை அரிசி கழுவிய தண்ணீரில் ஊறவைத்தால் அதன் கசப்பு போய்விடும்.

நிறம் மாறாத காய்கறிகளை முதல் நாளே மறுநாள் சமையலுக்கு அரிந்து வைத்துக்கொள்ளலாம்.

கீரை வகைகளை அரிவதற்கு முன்பே கழுவி விடவேண்டும். நறுக்கிய பிறகு கழுவினால் அதிலுள்ள சத்துக்கள் போய்விடும்.

பாலிதீன் கவரில் பச்சைத் தக்காளியுடன் ஒரு பழுத்த தக்காளியையும் போட்டு வைத்தால் எல்லாம் பழுத்து விடும்.

Friday, November 22, 2013

ஒடிஸா - கலிங்கநகர் - காளி பூஜை

ஒடிஸாவில் அதுவும், ஜாஜ்பூர் பத்ரக் மாவட்டங்களில் தீபாவளி கொண்டாட்டங்களின் போது காளி பூஜை மிகவும் பிரபலம். கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஜெகத்ஜோதியாக இருக்கும். மேலே உள்ளது ஆரம்ப கட்டத்தில் உள்ள காளியின் சிலை. அப்புறம் கீழே உள்ளது எல்லாம் காளி பூஜை கொண்ட்டட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.


Wednesday, November 20, 2013

பிலிபைன்ஸ் - ஹயானின் கோர தாண்டவம் - புகைப்படங்கள்

ஏழாயிரம் தீவுகள் கொண்ட நாடு என்ற பெயர் பெற்ற ஃபிலிபைன்ஸில் கடந்த 11 ஆம் தேதி ஹயான் என்ற பெயர் கொண்ட சூறாவளி தாக்கியதில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் மாண்டு போனார்கள். இந்தியாவில் ஒடிஸா மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி ஃபைலின் புயல் தாக்கிய பிறகு சரியாக ஒரு மாதம் கழித்து இந்தப்புயல் ஃபிலிப்பைன்ஸை தாக்கியிருக்கிறது. புகைப்படங்களைப் பார்த்தால் இங்கே ஒடிஸாவில் இத்தனை பாதிப்பு இல்லை என்றே தோன்றுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மாண்டு போனவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.


Tuesday, November 19, 2013

ஜெயிக்கனும், எப்படியாவது ஜெயிக்கனும்... (பாலகுமாரன் பக்கம்)ஜெயிக்கிறதும் தோக்கறதும் அவனவன் தலையெழுத்து. நான் ஜெயிச்சேன்னு, நான் தோத்தேன்னு குருடன்தான் சொல்லுவான். செய்யற வேலையை ஒழுங்கா கவனமா செய்துட்டுப் போறதுதான் நமக்கு நல்லது.
ஜெயிக்கிறதோட முதல் விஷயம் மூஞ்சி மாறாமல் இருக்கிறது. என்ன நடந்தாலும் சரி, சந்தோஷமோ துக்கமோ மூஞ்சில காட்டாது இருக்கிறது நல்லது. புத்தி இரும்பா இருந்து, மனசு கல்லா இருந்தால்தான் முகம் அமைதியாய் இருக்கும்.
 
ஜெயிப்பதற்கு பறப்பவன் வெற்றி தேட அலைபவன் உயிர், மானம், பொருள் இழப்பு எல்லாவற்றையும் துச்சமாய் மதித்து பெரிய களத்தில் இறங்குபவன் இப்படித்தான் அலைகிறான். எச்சில் சோறு திண்கிறான்.
ஜெயிக்கனும், எப்படியாவது ஜெயிக்கனும். பினி, பசி, பட்டினிங்கிறதே இருக்கக் கூடாது. காசுதான் வாழ்க்கை. காசுதான் உலகம் காசுதான் சந்தோஷம். காசுதான் கர்வம், காசுதான் மனுஷன், மனுஷன்தான் காசு. என்னவேணா செய்து காசு சம்பாதிக்கலாம்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பல முகங்கள் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு முகம் வெளிவரும். வாழ்க்கையில் அதிகம் நடிப்பவருக்கு தன் உண்மையான முகம் எதுவென்று தெரியாமலே போகும். தன் உண்மையான முகத்தை தெரிந்துகொள்ள ஆவல் இல்லாமல் போகும்.
இப்ப வாங்குற காசுக்கு நன்றியோட இருக்கணும்ல? என்ன நன்றி? பூ வித்தோம் காசு தராங்க. இதுல எங்க நன்றி வந்தது?
இடையறாது பொய் சொல்ல எல்லாராலும் முடியாது. வெகு சிலரால்தான் முடியும். அப்படி பொய் சொல்ல தனி வளர்ப்பும் வருடக் கணக்கில் பயிற்சியும் வேண்டும். அதிகமாக அவமானப்பட்டவர்களால்தான், அவமானமடைந்த குடும்பத்தில் பிறந்தவர்கள்தான் இப்படி இடைவிடாது பொய் சொல்ல முடியும். வாழ்ந்தே காட்ட வேண்டும் என்கிற நிர்பந்தம் இந்த மனிதர்களை எல்லா எல்லைக்கும் இட்டுச் செல்கிறது.

இப்ப என்ன நடந்துபோச்சுன்னு புலம்பற. அழகான ஒரு பொம்பறைய பார்த்தா எல்லா ஆம்பிளையும் ஆடிப்போய் நிக்கறதில்லையா? அதே விதமா அழகான ஆம்பிளையைப் பார்த்தா பொம்பளைக்கு இருக்காதா? இருந்தா என்னா தப்பு?
ஒரு வயதிற்குப் பிறகு காமத்தை அனுபவிக்க காதல் இடைஞ்சலாகி விடுகிறது. வெறும் உடம்பு ஆட்டத்தோடு பெண்ணை விட்டு விலக முடியாமல் போகிறது. காமம்தான் காதல் செய்யத் தூண்டுகோல். காமம்தான் காதலின் மறைபொருள். காமம் என்பது ஆரவாரம். காதல் என்பது மொழி. காமம் என்பது ஒரு செய்தி எனில் காதல் என்பது கவிதை.
கவிதை தெரிந்துவிட கவிதையில் நாட்டம் விழ கவிதை செய்து செய்து புத்திக்கு அந்த ருசி பழக்கமாகிவிட வெறுமே நயமின்றி பேசமுடியாது. பெண் போகம்தான். உலகின் எல்லா விஷயங்களும் போகம்தான். உணவு உறைவிடம், உடை, வாசனைக் குவியல், தொழுகை, படிப்பு பயணம் எல்லாமே போகம்தான்.
காமத்திலிருந்து தப்பித்துக் கொள்வது எளிதே அல்ல. கணவன்-மனைவி சண்டைகளை பல்வேறு நேரங்களில் காமம்தான் தீர்த்து வைக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பரஸ்பர ஈர்ப்பு காதலுக்கு அடித்தளமாக அமைகிறது. இந்தக் காதல் எனும் வாகனம்தான் வாழ்க்கைப் பயணத்தைச் சொகுசாக்கும் விஷயம்.
வயதுக்கு மீறின புத்திசாலித்தனம் என்பது எல்லோருக்கும் இருப்பதில்லை. இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. நேசிப்போடு பழக்கப்பட்டவர்களுக்குத்தான் நேசிப்பைப் புரிந்து கொள்ள முடியும்.
நட்பை யார் வேண்டுமானாலும் யாருக்கும் கொடுக்கலாம். நட்பு என்பது விரிவுபடுத்தப்பட்ட அன்பு. உலகம் தழுவிய காதல். நட்பில் உறவுச் சங்கிலி இல்லை. அன்புச்சுமை இல்லை. முடிந்தபோது முடிந்த வரையில் உதவி செய்வதே நட்பு.