Thursday, October 20, 2011

பேனா நண்பர்கள்


அன்புள்ள நண்பர் கவிப்ரியனுக்கு,

பாலசண்முகம் எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தினர்களும் இனிது நலம். உமது குடும்பத்தினர் நலன் அறிய ஆவலாய் உள்ளேன்.

நீர் அனுப்பிய புத்தகப் பார்சலைப் பெற்றுக் கொண்டேன். மிக்க மகிழ்ச்சியுடன் என் சார்பாகவும், என் துணைவியார் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக உம்மை மட்டும் மறக்கவில்லை. நட்பின் இலக்கணத்திற்குரிய விளக்கம் தெரியாதவர் மூலம் கிடைத்த உமது நட்பு இன்றுவரை நீடித்து, பிற்காலத்திலும் தொடரும் இந்த நட்புக்காக உன் நண்பனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

குடியிருக்க சொந்தமாக வீடு கட்டிக்கொண்ட செய்தி எனக்கு மிக்க மகிழ்ச்சியினை அளித்தது. புத்தகத்தை காலதாமதமாக வாங்கி அனுப்பினாலும் அது எனக்குக் குறையில்லை. புத்தகங்களுக்காக செலவழிப்பதில் நான் எப்போதும் தயக்கம் காட்டியதில்லை. இனிமேலும் அப்படியே! நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பன் அல்லவா?

உங்களின் பேனா நண்பர்கள் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்! பொதுவாக பெண் பேனா நண்பர்களின் நட்பு நீடிப்பதில்லை என்ற அனுபவம் எனக்கும் உண்டு. ஆனால் இதற்காக நாம் ஆதங்கப்படுவதில் அர்த்தம் இல்லை. பொதுவாக எதிரின ஈர்ப்பு என்ற அடிப்படையில்தான் பெண் பேனா நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை கடிதத் தொடர்பு கொள்கிறார்கள் என்பது என் கருத்து.


இதற்கு மாறாக திருவண்ணாமலையிலிருந்து 58 வயது பானுமதி என்ற சகோதரி கடந்த 20 ஆண்டுகளாகவும், ஆர். வாசுகி (வயது 26) கடந்த 16 ஆண்டுகளாகவும் என்னுடன் கடிதத்தொடர்பு கொண்டு வருகிறார்கள். ஆர். வாசுகி கோவில்பட்டியைச் சேர்ந்தவர். கடந்த மே மாதம் ஒரு இராணுவ வீரருக்குத் துணைவியாகியும் என்னுடன் கடிதத்தொடர்பை நீடித்து வருகிறார்.

அதாவது நமது நல்ல எண்ணங்கள், சிந்தனைகளுக்கு உகந்த பேனா நட்பு என்பது ஆண், பெண் இருவரிடமும் எந்நாளும் நீடிக்கும். திருவள்ளூரில் குடியிருக்கும் ஆர்.வாசுகியின் அக்கா மணிமேகலை குடும்பத்தினர் கடந்த ஆகஸ்ட் மாதம் எனது இல்லம் வந்து சென்றனர். இவர்கள் திருமணம் கடந்த 97 ஆகஸ்டில் கோவில்பட்டியில் நடந்தபோது குடும்பத்துடன் சென்று வந்தேன்.

பணத்தை மட்டுமே குறியாக கொண்டவர்களுக்கு உண்மை நட்பின் அர்த்தம் விளங்காது. பேனா நண்பர்களை நேரில் சந்தித்தது, அவர்கள் என்னை சந்திக்க வருவது போன்ற விஷயங்களில் நான் பணச்செலவை எப்போதும் ஒருபொருட்டாக கருதியதில்லை. மார்க்சிய சிந்தனையாளர் முகவை ஜெகன் என்பவரும், ஜூ.வி.ஆசிரியர் குழுவில் ஜெ.வி.நாதனும் என் மீது தனி மதிப்பு கொண்ட நண்பர்கள்.

போராட்டமே வாழ்க்கை எனப் பழகிப்போன எனக்கு சில சமயம் ஏற்படும் மன உளைச்சல்கள், குமுறல்களுக்கு அளவே இல்லை. போராட்டத்திற்கான சூழ்நிலைகள் என்பதை எப்போதும் என் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். சில சமயம் அதிகமாக உணர்ச்சிவசப்படுவதென்பது எனது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. எந்த அளவுக்கு பொறுமையைக் கடைபிடிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு பொறுமையைக் கடைபிடித்தே வருகிறேன். அதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா?

கடந்த இரு வருடகாலமாக பேசாமலிருந்த உன் நண்பன் தொழிற்சங்க தேர்தலுக்கு இருவாரம் முன்பு, இரு நண்பர்களுடன் அணுகி, என்னிடம் செய்த தவறுகளுக்கு மன்னிக்க வேண்டுமேனக் கூறினான். இது தேர்தல் ஸ்டண்ட் எனத் தெரியவந்ததும், நான் மன்னிப்பதாக் கூறினேன். கடந்தமுறை இவனது வெற்றியை நிர்ணயித்தது எனது நட்புதான் என்பதை உணர்த்துவது போல இந்தத் தேர்தல் அவனுக்கு தோல்வியைக் கொடுத்தது.

தொழிற்சங்க ஈடுபாடு என்பது வாழ்பவனுக்கு வசதியைத் தேடித்தருவது. ஆனால் வாழ வழியில்லாதவனுக்கு எதையும் செய்ய வக்கற்ற தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தவிர்த்து, நமது கிராம அடித்தள மக்களின் உரிமைப் போராட்டங்களில் உன்னை ஈடுபடுத்திக்கொள் என்று மட்டும் அவனுக்கு அறிவுறை கூறினேன். அடிக்கடி அவனாக வந்து என்னிடம் பேசினாலும், அவன் தவறுகளை உண்மையாக உணரும் காலம் வரை இவனுடன் முகஸ்துதியாகத்தான் நான் பேசியாக வேண்டும்.

கொட்டினால்தான் தேள் என பயப்படுகிறார்கள், இல்லையென்றால் பிள்ளைப்பூச்சியென மிதிக்க நினைக்கிறார்கள். என் தன்மானம், சுயமரியாதைக்கு இழுக்கென்றால் எனது உயிரே போனாலும் கூட, பின்வாங்காமல் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள அஞ்சமாட்டேன். மற்றவை உன் மடல் கண்டு! முருகேசனுக்கு எனது விசாரிப்பினைத் தெரிவிக்கவும்.

என்றும் அன்புடன்,
பாலசண்முகம்.

2 comments:

PCKaruppaiah said... [Reply]

நண்பரே இது பேனா நட்பல்ல பேனும் நட்பு

கவிப்ரியன் said... [Reply]

கருத்திற்கு நன்றி ஏற்றுமதி வழிகாட்டி கருப்பையா அவர்களே!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!