Wednesday, November 11, 2015

இந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா?


எத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது? கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து! பிள்ளைகளின் படிப்பும், ஒரே இடத்தில் பணியில்லாத காரணத்தாலும் இப்படி ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாகவே பணியிட மாறுதல் குறித்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எனது மேலிடத்தில் கோரிக்கை வைத்தபடிதான் இருந்தேன். அதை எதையும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. நான் கோரிக்கை வைத்த எனது மேலதிகாரியே மாறுதலாகி போய்விட்ட பிறகு இனி எதற்கு இங்கு வேலை செய்ய வேண்டும் என்ற சலிப்பு வந்துவிட்டது. 

 

காரணம், நம்மை இத்தனை வருடங்களாக புரிந்து கொண்டவர்களாலேயே நமக்கு மாறுதல் கிடைக்க வழியில்லாத போது புதிதாய் வருபவரிடம் வேலை செய்து அவரின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் கோரிக்கை வைத்து ‘என்ன பொழப்புடா’ இது என்றுதான் தோன்றுகிறது. புதிய புதிய இடங்களையும் மனிதர்களையும் பார்க்கும் ஆவல் இருந்தாலும் சில மாதங்களில் ‘எப்படா சொந்த ஊருக்குப்போய் நிரந்தரமாக குடும்பத்தோடு வாழ்வது’ என்ற ஏக்கம் வர ஆரம்பித்து விடுகிறது.

என்னதான் வசதிகள் செய்து கொடுத்தாலும், மனைவி மக்களோடு இருக்கும் சந்தோஷத்திற்கு ஈடாகுமா? வெளிநாட்டில் வேலை செய்தபோது வருடத்திற்கு ஒரு முறையும், இந்தியாவில் பிற மாநிலங்களில் வேலை பார்க்கும்போது குறைந்த பட்சம் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும்தான் ஊருக்குப்போய் வரமுடிகிறது.

இதற்குத் தீர்வுதான் என்ன? இந்த வேலையை விட்டுவிட வேண்டும். வேலையை விட்டுவிட்டு ஊருக்குப்போய் என்ன செய்வது? அடுத்த வேலைக்கு முயற்சி செய்வது… அல்லது சுயதொழில் ஆரம்பிப்பது. இப்படித்தான் கொஞ்ச நாளாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணும், கல்லூரிக்குள் காலடி வைக்கத் தயாராய் இன்னொரு பெண்ணும் இருக்கும்போது அவர்களுக்கு வழிகாட்ட தந்தையின் அருகாமை அவசியம் என்பது அனைவரும் அறிந்ததுதான். சென்னைக்கு அருகாமையில் அல்லது பெங்களூரில் கிடைத்தால்கூட வேலை மாறிவிடலாம் என்றுதான் முடிவெடுத்திருக்கிறேன்.

நான்கு வருடங்களுக்கு முன்புகூட இதே மாதிரி மாற்று வேலைக்கு முயற்சித்து பன்னாட்டு நிறுவனம், வாரத்திற்கு ஐந்து நாட்கள்தான் வேலை, சம்பளமும் அதிகம் என்று ஆசைப்பட்டு இருக்கிறதை விட்டு அங்கு தாவினேன். யாருடைய ஒத்துழைப்பும் இல்லாத அந்த நிறுவனத்தில் ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவதைப்போல மூன்று மாதம் வேலையில்லாமல் அமர்ந்திருந்தேன். பொறுத்தது போதுமென்று ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு கிளம்பிப் போய்விட்டேன். அவர்கள் கைப்பேசியில் தொடர்பு கொண்டபோது வேலையில் தொடர விருப்பமில்லை என்று சொல்லி மின்னஞ்சலிலேயே என்து ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன்.

அடுத்து என்ன செய்வது என்று ஒரே யோசனை? மீண்டும் வேலை தேடும் படலமா? பிள்ளைகள் கல்லூரிப்படிப்பைத் தொடங்கும் காலத்தில் அப்பன் வேலை தேடுவதில் உள்ள சிக்கலும் நிலைமையும் எத்தனை பேருக்கு வாய்த்திருக்குமோ தெரியவில்லை. நான் அனுபவித்திருக்கிறேன். அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நல்லவேளை பழைய நிறுவனத்தில் நல்ல பெயர் சம்பாதித்து, நல்லபடியாய் வெளியே வந்ததினால் தொடர்பு விட்டுப் போகாமலிருந்தது. எங்கிருக்கிறாய்?... என்ன செய்கிறாய்?... என்று வினவியபோது வேலை தேடிக்கொண்டிருப்பதைச் சொல்ல மீண்டும் வந்து சேரச்சொல்லி விட்டார்கள்.

பொதுவாக ஒரு நிறுவனத்திலிருந்து போனபின் அதே நிறுவனத்தில் மீண்டும் வேலை கொடுக்க மாட்டார்கள். நாம் போய் சேர்ந்தாலும் அத்தனை மதிப்பிருக்காது. ஆனால் சேர்த்து வைத்து நற்பெயரால் அந்த மாதிரி தர்மசங்கடங்கள் எதுவும் எனக்கு நிகழவில்லை. இன்றுவரை அங்குதான் இருக்கிறேன். இங்கிருந்து வெளியேறத்தான் தற்போது சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நிறுவனத்தைப் பிடிக்காமல் போகவில்லை. கடைசி காலத்தில் குடும்பத்தோடு வாழ ஆசைப்படுகிறேன் அவ்வளவுதான்.

அதனால் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் மீண்டும் இன்டர்வியூக்களுக்கு போய்வந்து கொண்டிருக்கிறேன்.


அப்படித்தான் போன வாரம் ஊருக்குப் போயிருந்தபோது சென்னையில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தின்  நேர்காணலுக்கும் போயிருந்தேன். இப்போதெல்லாம் இன்டர்வியூக்குப் போகும்போது எந்தவித எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்வதில்லை. கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் வருத்தமில்லை என்ற மனநிலையில்தான் சென்றிருந்தேன். 30 வருட அனுபவம் என்பதால் அதிகம் கேள்விகள் கேட்கவில்லை. முதல் கட்டமாக தெரிவு செய்து கடிதம் கொடுத்திருக்கிறார்கள். சம்பளமும் பரவாயில்லை. மிகப்பெரிய சந்தோஷம் சென்னையிலேயே வேலை. அடுத்தது மருத்துவ சோதனையிலும் பிரச்னை ஏதுமில்லாமல் இருந்தால்தான் பணி வாய்ப்பு கிடைக்கும்.

அதையும் முடித்துவிட்டு வந்திருக்கிறேன். என்ன ஆகும் என்று தெரியவில்லை. இத்தனை வயதுக்கு அப்புறமும் இப்படி வேலை தேடி இன்டர்வியூக்களுக்குப் போவது எனக்கென்னவோ அசிங்கமாக இருக்கிறது. ஐம்பதை நெருங்கும் வயதில் வேலை தேடுவது கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது.

23 comments:

குவைத் தமிழ்நேசன் said... [Reply]

உங்களுக்காவது பரவாயில்லை சொந்த நாட்டில். இங்கே வெளிநாட்டில் நாங்கள் படும் பாடு. அப்பப்பா.... சொல்லி மாளாது. இருந்தாலும் மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள்.

www.kuwaittamilnesan.com

Anonymous said... [Reply]

Good luck

Koil Pillai said... [Reply]

வேலூர் கவிப்பிரியனே,

எந்த வயதிலும் மாற்று வேலைக்காக விண்ணப்பிப்பது, எந்த விதத்திலும் இழுக்கல்ல.

வேலைக்கு தகுதி இல்லாமல் நீக்கப்பட்டு நீங்கள் வேறு வேலை தேடவில்லையே, மனிதனின் சூழ்நிலை, தேவை, மாறும்போது அதற்கேற்ப வேலையையும் வாழ்க்கை தரத்தையும் மாற்றி கொள்ளத்தானே வேண்டும்.

எங்கு வேலை செய்தலும் உண்மையும் உத்தமுமாக செய்ய வேண்டும் என்பது நீங்கள் மீண்டும் பழைய நிறுவனத்திலேயே வேலைக்கு அமர்த்தபட்டதில் இருந்து எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய பாடம்.

மேலும், மாற்று வேலை கிடைக்கும் வரை இருக்கின்ற வேலையை எந்த காரணமும் கொண்டு விட்டு விடகூடாது என்பதும் உங்கள் பதிவு தரும் மற்றொரு பாடம்( உங்களுக்கும் சேர்த்து)

கூழானாலும் குளித்து குடி என்பதற்கீடாய், கூழானாலும் குடும்பத்தோடு சேர்ந்து குடி என்பதுவும் உங்கள் ஆதங்கத்தில் பளீச்சிடுகின்றது.

விரைவில் குடும்பத்துடன் சேர்ந்து சந்தோஷமாக வாழும் நாள் வெகுதூரத்தில் இல்லை , எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என்று நம்புங்கள்,நடக்கும்.

வாழ்த்துக்கள்.

கோ

bandhu said... [Reply]

அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக வயதில் வேலை தேடுவது சகஜம். 62 வயதில் என் நண்பர் வேலைக்கு நேற்றுகூட இண்டர்வியு சென்று வந்தார்!

குடும்பத்துடன் இருப்பது மிக முக்கியம். உங்கள் மனதிற்கு பிடித்த வேலையில் அமர வாழ்த்துக்கள்

Nagendra Bharathi said... [Reply]

உண்மை

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@குவைத் தமிழ்நேசன் நண்பரே! நாணும் வளைகுடா நாடுகளான பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு நாட்டிலும் பணிபுரிந்தவன்தான். எனக்கும் அந்த அனுபவங்கள் உண்டு. இங்கு நான் நண்பர்களிடம் பேசும்போது வேடிக்கையாக இப்படி குறிப்பிடுவது உண்டு, 'வெளிநாட்டுல இருந்து ஊருக்குப்போக 4 அல்லது 5 மணி நேரம்தான். ஆனால் இங்கிருந்து நான் சென்னை போக 27 மணி நேரம் ஆகிறது' என்று...

தவிர, வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குப் போகும்போது குறைந்த பட்சம் ஒரு மாதமாவது விடுமுறையை அனுபவிக்கலாம். ஆனால் சொந்த நாடாகிலும் வட மாநிலங்களிலிருந்து மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை எனும்போது அதே விடுமுறை ஒரு வாரகாலம்தான். அந்த ஒரு வார காலத்தில் என்ன சாதித்து விட முடியும்? கண்மூடி கண் திறப்பதற்குள் ஒரு வாரம் கரைந்துபோய் விடுகிறது.

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@Anonymous தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே.

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@Koil Pillai உண்மைதான் கோயில் பிள்ளை அவர்களே. திறமையும், எந்த இடத்திலும் அனுசரித்துப் போகும் தன்மையும், புதியன கற்றுக்கொள்ளும் ஆவலும் இருந்தால் தாராளமாக வேறு வேலைக்கு முயற்சிக்கலாம்தான். பணி செய்கின்ற நிறுவனத்தில் உண்மைக்கும் உழைப்புக்கும் மரியாதை இல்லை என்றாலும் வெளியேறலாம். அப்படி ஒரு நிறுவனத்திலுருந்தும் வெளியேறி இருக்கிறேன்.

ஆனாலும் மாற்று வேலை உறுதியாக பட்சத்தில் இருக்கின்ற வேலையை விடக்கூடாது என்பது நான் அனுபவத்தில் கற்ற பாடம. இரண்டு முறை அப்படி வேலையை விட்டுவிட்டு அவஸ்தை பட்டிருக்கிறேன்.

குடும்பத்தோடு வாழவேண்டும் என்ற ஆதங்கத்தின் விளைவே இந்தப் பதிவு. பணத்துக்காக மனிதன் எதை எதையோ இழக்க வேண்டியிருக்கிறது இல்லையா?

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@bandhu அமெரிக்காவில் இருக்கலாம் நண்பரே! ஆனால் நம் ஊரில் கேலியும் கிண்டலுமாகத்தான் பார்ப்பார்கள். இந்த வயசிலேயும் ஒரே கம்பனியில வேலை செய்யாம வேலை தேடிக்கிட்டு இருக்கான் என்பது போலத்தான் பார்ப்பார்கள். இந்த தேடல் குடும்பத்தோடு வாழ்வதற்காக மட்டுமே. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@Nagendra Bharathi தங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

இதில் வருத்தப்படுவதற்கு வெட்கப்படுவதற்கு என்ன இருக்கின்றது. எழுபது என்பது வயதாகியும் ஊரை அடித்து உலையில் போட்டு திங்க அலையும் அரசியல்வாதிகள் அவர்கள் அடைய விரும்பும் பதவிகள் போன்று இல்லாமல் நீங்க உங்க வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைக்க்காகத்தானே முயற்சிக்குறீங்க. வாழ்த்துகள்.

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@ஜோதிஜி திருப்பூர் தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஜோதிஜி அவர்களே.

J P Josephine Baba said... [Reply]

இந்த வயதிலும் வேலை தேடுவது என்று நீங்கள் அலுத்து கொள்ள தேவை இல்லை. உங்கள் திறமை மேல் நம்பிக்கை இருப்பதால் உங்கள் வசதிகளை கருதி வேலை தேடுவதில் என்ன அசிங்கம்.. எல்லாம் நம் மனநிலை சார்ந்த விடயமே. நான் என்னுடைய மும்பதுகளில் முதுகலைப்பட்டம் பெற்று பல நேர்முக தேர்வுகள் சந்தித்து வேலைக்கு சேர்ந்தேன். பெருமைப்படுங்கள். இயல்பான தம்பட்டா மில்லா எழுத்தை ரசித்து வாசித்தேன்.

தி.தமிழ் இளங்கோ said... [Reply]

நண்பரே! எல்லாம் நல்லவிதமாக அமையும் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள். வாழ்த்துக்கள்.

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@J P Josephine Baba தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜோஸபின் அவர்களே. செட்டில் ஆகாத வாழ்க்கை என்பதுதான் கவலை, வேறேன்ன?

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@தி.தமிழ் இளங்கோ தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா.

ராஜி said... [Reply]

சென்னையிலேயே வேலை கிடைக்க வாழ்த்துகள். இந்த வயசுல இண்டர்வியூக்கு போலாமான்னு யோசிக்குறதை விட்டு, இந்த வயசுலகூட இண்டர்வியூக்கு போகும் வாய்ப்பு கிடைக்குதேன்னு சந்தோசப்படுங்க சகோ

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@ராஜி நீங்கள் சொல்வதும் சரிதான் ராஜி. இந்த வயசுலயும் என்னுடைய வேலைக்கு வாய்ப்பிருக்கிறது என்பதும் நல்ல விஷயம்தான். வாய்ப்பு இருப்பதால்தானே அழைக்கிறார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சக்தி S said... [Reply]

வணக்கம்..நான் சக்தி.http://sakthiinnisai.blogspot.in/. இப்போ தான் கல்லூரியின் வாசலில் அடி எடுத்து வைத்துள்ளேன். உங்களை ஒரு இணைப்பில் இணைத்துள்ளேன். என் வலை தளமும் வாருங்கள் நன்றி

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@சக்தி S வருகைக்கும் எனது தளத்தின் இணைப்பிற்கும் நன்றி சக்தி. அவசியம் தங்களது தளத்திற்கு வருகிறேன்.

காரிகன் said... [Reply]

Welcome back. Live your moments...

கவிப்ரியன் வேலூர் said... [Reply]

@காரிகன் வருகைக்கு மிக்க நன்றி காரிகன் அவர்களே.

Kiran Khan said... [Reply]

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

Today Funnies | Largest Collection of Latest Funny Videos, Funny Pictures, Funny Girls, Funny Babies, Funny Wife, Funny Husband, Funny Police, Funny Students And Cartoon Plus Bizarre Pics Around The World.
Just Visit 2 My Site...
http://todayfunnies.com

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

~*~ Free Online Work At Home ~*~
Here's Everything You Need to Know About Online Working At Home, Including Where to Find Work At Home Job Listings,
The Best Sites For Finding Work At Home Jobs And How to Avoid Work From Home Scams.
Visit...
http://SooperOnlineJobs.blogspot.com/

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!