காலப்பேழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காலப்பேழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 டிசம்பர், 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது... கருணாநிதி



அப்போது நான் எஸ்.டி. சுந்தரத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். கோவையிலிருந்து என் உறவினர்கள் சென்னை வந்தவர்கள், படப்பிடிப்பு ஏதாவது பார்க்கவேண்டும் என்றனர். எஸ்.டி.எஸ். தயாரித்த படம் வாஹினியில் எடுக்கப்பட்டதால் அந்த அனுபவத்தை வைத்து என் உறவினர்களை வாஹினி ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றேன்.
 
அப்போது மக்கள் திலகம் ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ பட்ப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. மக்கள் திலகத்தின் காதல் காதல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. படப்பிடிப்பைப் பார்க்க என் உறவினர்களை அழைத்துச் சென்றேன். ‘எம்.ஜி.ஆர். காதல் காட்சியில் நடிக்கிறார். அதனால் படப்பிடப்பைப் பார்க்க வெளியார் யாரும் அனுமதிக்கக் கூடாது என்று நொல்லியிருக்கிறார். எனவே உள்ளை அனுமதிக்க முடியாது’ என்று தயாரிப்பு நிர்வாகி கூறிவிட்டார்.

துரதிஷ்டவசமாக அன்று வாஹினியில் வேற் எந்த படபிடிப்பும் இல்லை. புரட்சித்தலைவரின் படபிடிப்பு ஒன்றுதான் நடந்தது. அதிலும் அனுமதி இல்லை என்றவுடன் எனக்கு ஒருபக்கம் வேதனை, மறுபக்கம் அவமானம். என்ன செய்வது என்று புரியாமல் தவித்த சமயம் எம்.ஜி.ஆர். வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் ஓடிப்போய் வணக்கம் தெரிவித்தேன்.

அவரும் வணக்கம் தெரிவித்துவிட்டு என்னைத் தெரிந்தவர் போல ‘என்ன சௌக்கியமா? என்றார். ‘நல்லாயிருக்கேன்” என்றேன் நான். பின் என்னை அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். ஊரிலிருந்து தங்கள் படபிடிப்பைப் பார்க்க வந்திருக்கிறார்கள்’ என்று தெரிவித்தேன்.
‘’பார்க்கலாமே! உள்ளே கூட்டிப்போங்கள்’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். அவ்வளவுதான், என் உறவினர்களை உள்ளே கூட்டிச் சென்று படபிடிப்பைக் காட்டினேன். தயாரிப்பாளர் எனக்கும், என் உறவினர்களுக்கும் ஏகப்பட்ட மரியாதை காட்டினார். நான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருங்கியவன் என்ற நினைப்பு அவருக்கு.

அன்றுதான் நான் முதன் முதலில் புரட்சித்தலைவரை முதன் முதலாக சந்தித்துப் பேசியது. அதன் பின்னர் விஜயா கார்டனில் ஒரு விழா. ஒரே நட்சத்திரக்க்கூட்டம். நானும் போயிருந்தேன். அந்த விழாவிற்கு புரட்சித்தலைவரும் வந்தார். வழியில் நின்ற என் முதுகில் யாரோ தட்டுவது தெரிந்தது. திரும்பிப்பார்த்தேன். புரட்சித்தலைவர்தான் என் முதுகைத் தட்டியவாறே உள்ளே சென்றவர் என்னைப் பார்த்து, ‘’ என்ன சௌக்கியமா?’’ என்றார். அவரது நினைவாற்றலை யினைத்து என்னுள் நானே வியந்து கொண்டேன்.

அவர் அப்போது குடியிருந்த லாயிட்ஸ் சாலையில்தான் எஸ்.டி.எஸ். புரோடக்ஷன்ஸ் அலுவலகமும் இருந்தது. காலை நேரத்தில் நான் வெளியே நிற்பதுண்டு. அப்போது அவ்வழியே காரில் போகும்போதெல்லாம் கையை ஆட்டி என்னைப் பார்த்து சிரித்தவாறே செல்வார். அது சமயம் என் மெய் சிலிர்க்கும். நானோ மிகவும் சாதாரணமானவன், அவரோ மிகவும் பிகழ் பெற்றவர். மிக எளியவர்களிடம்கூட அவர் காட்டும் பரிவை எண்ணி நான் இன்று கூட வியப்பதுண்டு.

நாடோடி மன்னன் படம் வெளியிடுவதற்கு முன்பு; பெரிய தலைவர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கு அதை போட்டுக்காட்டினார் மக்கள் திலகம். என் குரு எஸ்.டி.எஸ். என்னையும் அந்தப் படத்தைப் பார்க்க கூட்டிச் சென்றார். படம் தொடங்குவதற்கு முன்னர் எஸ்.டி.எஸ்.ஸிடம் எம்.ஜி.ஆர். பேசிக்கொண்டிருந்தார். நான் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தேன். பின்னர் தலைவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் எஸ்.டி.எஸ்.

‘’அவரை எனக்குத் தெரியுமே!’’ என்றார் எம்.ஜி.ஆர். அப்போது அவரது உயர்ந்த பண்பை நினைத்து என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது.

சோ. கருணாநிதி.


வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மக்கள் திலகத்தை முதன்முதலாக பார்த்தபோது… டாக்டர் ம.பொ.சிவஞானம்.


நினைவிலுள்ளதை வைத்துச் சொல்கிறேன். 1956 ஜூன் 26 சென்னை சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் எனது ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவிலே நான் முதன் முதலாக புரட்சி நடிகரைச் சந்தித்தது நினைவில் இருக்கிறது.
அதற்கு முன்னே சந்தித்து இருக்கலாம். அது சரியாக நினைவில் இல்லை. அந்த ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவை பொன்விழாவாக தமிழரசு கழகத்தினர் நடத்தினர். கோலாகலமாக நடந்த அந்த விழாவிலே மக்கள் திலகம் அவர்கள் வந்து கலந்துகொண்டு எனக்கு வாழ்த்துக் கூறினார்கள். அந்த வாழ்த்திலே எனக்கு ஒரு பட்டத்தையும் எனக்குத் தந்தார். ம.பொ.சி. என்ற மூன்றெழுத்துக்கு வியாக்யானம் கூறினார்.

‘தமிழை மழை போல் பொழியும் சிவஞானம்’ என்று அவர் கூறிய போது அந்த மண்டபத்தில் இருந்த மக்கள் அவ்வளவு பேருடைய கரங்களும் ஒலித்து மண்டபத்தையே அதிரச் செய்தது இன்றும் என் கண் முன்னே காண முடிகிறது. காதுகளால் கேட்க முடிகிறது.

அவர் அப்படிச் சொன்ன பின்பு எல்லோரும் அப்படிச் சொல்வது வழக்கமா கிவிட்டது. பட்டம், பின்னே எனக்குப் பல கிடைத்திருந்தாலும், நம்முடைய முதல்வர் அவர்கள் அந்த நாளிலே தந்த மழை போல் பொழியும் சிவஞானம் என்பது எனக்கு ஒரு தனி சிறப்பைத் தந்தது என்பதில் ஐயமில்லை.

எனது பிறந்த நாள் விழாவிலே என் மனதைக் கவர்ந்த பல நிகழ்ச்சிகள் பல நடந்தன. அவற்றுள் ஒன்று, எனக்கு 33 ஆயிரம் ரூபாய் பண முடிப்பு தந்ததாகும். மற்றொன்று பல பேரறிஞர்கள் வாழ்த்துக் கூறியது.

இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் என்னுடைய பெயருக்குரிய தலையெழுத்துக்களுக்கு வியாக்யானம் கூறி நம்முடைய மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு இன்னும் என் மனதிலே பதிந்திருக்கிறது. 

அதன்பின் நாங்கள் அவருடைய ஸ்டுடியோவிலும் வேறு பல பொது நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி சந்தித்திருக்கிறோம். அவர் முதல்வராவதற்கு முன்பு நாங்கள் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரே இயக்கத்தைச் சார்ந்தவர்கள் போல ஒரே குடும்பத்தவர்கள் போலவே பழகிப் பேசி வந்திருக்கிறோம்.

நான் திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்த காலத்திலே கூட எங்கள் இருவரிடையே பகைமை தோன்றியதே கிடையாது. காரணம் கட்சி வெறிக்கு அப்பாற்பட்டவராக அவர் இருந்ததுதான்.
அதற்குப் பிறகு அவர் தனியாக ஒரு கட்சியைத் துவக்கிய போது, நான் அந்தக் கட்சிக்கு மாறுபட்டு பிரசாரம் செய்து வந்தேன். மிகக் கடுமையாகக் கூடச் செய்தேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அப்போது அவரை பத்திரிகை நிருபர்கள் சந்தித்து, ‘ம.பொ.சி. தங்கள் கட்சியைத் தாக்குகிறாரே’ என்று கேட்டபோது, ‘அவர் என் மதிப்பிற்குரிய தலைவர், அவரைப் பற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை’ என்ற அவர் சொன்னது அவருடைய பண்பாட்டைக் காட்டியது என்பதை நான் நன்றாக உணருகிறேன்.

இன்னொரு நிகழ்ச்சியும் எனக்கு அவர் ஒரு மாபெரும் கலைஞர் என்பதை மனதில் பதியச் செய்தது. நடிகர் எம்.ஆர்.ராதா அவர்கள் எம்.ஜி.ஆரைச் சுட்ட அந்த நேரத்திலே, ‘அண்ணே என்ன காரியம் செய்துவிட்டீர்கள்’ என்று கேட்டதாகப் பத்திரிகைகளிலே படித்தேன்.

அது எனக்கு மகிழ்ச்சியையும், மற்றொரு புறத்தில் வியப்பையும் தந்தது. பெரிய புராணத்திலே தன்னைத் தாக்கிய வஞ்சகனைப் பற்றி தன்னுடைய சீடனிடம் கூறிய போது, ‘தத்தா இவர் நமர்’ என்றாராம் 63 நாயன்மார்களில் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார்.

அதுபோல எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னைச் சுட்டுக்கொல்ல முயன்றவரையும் ‘அண்ணே’ என்று அழைத்த பண்பாடு என்னைக் கவர்ந்தது.
- அப்போதைய மேலவைத் தலைவர் டாக்டர் ம.பொ.சிவஞானம்.