வெள்ளி, 28 அக்டோபர், 2011

‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ - விகடன் விமர்சனம்

ஆனந்தவிகடனில் வந்த விமர்சனம்:

உல்லாச உலகம் எனக்கே சொந்தம் என விட்டேத்தியாக அலையும் கணவனாக தங்கர்பச்சான்; அவரை வழிக்குக் கொண்டுவர தவிதவிக்கும் பொறுப்பான மனைவியாக நவ்யா நாயர்; புரியாத வயசில் மணி மணியாக இரண்டு பெண் குழந்தைகள்... இவர்களுக்குள் நடக்கிற பாசப்போராட்டம்தான் படம்.

ஷிண்டா விஸ்டயாய ஷியாமளா என்கிற மளையாளப் படத்தை நேர்த்தியாகவே தழுவியிருக்கிறார் தங்கர்.

கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியாராக இருந்து கொண்டு, ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு, தண்ணி-சீட்டாட்டம் என செட் சேர்த்துக்கொண்டு அலைகிற தங்கர்பச்சானைத் திருத்த, அவரைப் பெற்றவர்களும், மாமனாரும் முட்டி மோதுகிற காட்சிகளில் காமெடியும் கண்ணீரும் சரிவிகிதக் கலவை.

இவரைத் தருத்த நினைக்கிற ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டலாக அட்வைஸ் தர... அதன்படி, வேண்டா வெறுப்பாக சபரிமலைக்கு மாலை போடுகிறார் தங்கர். திருந்திட்டானப்பா எனக் குடும்பமே சந்தோஷம் அடைகிறது. ஆனால் கொண்டதே கோலம் என்று ஒரேயடியாக தங்கர், தீவிர சாமி பக்தராக மாறிவிடுவது எதிர்பாராத திருப்பம்.

குத்திக் காட்டுகிற உலகத்திலிருந்து தப்பிக்கிற யுக்தியாக ஒரேயடியாக ஆன்மிக போர்வை போர்த்திக்கொள்ளும் மனுஷர், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி, ஊர் ஊராக சுற்றித்திரிகிறார்.

இங்கே பரிதவித்து நிற்கும் நவ்யாவையும் அங்கே கால் போன போக்கில் நடக்கிற தங்கரையும் மாறி மாறிக் காட்டிக்கொண்டே வருகிற ஒரு பாடலில், வெறும் காட்சிகளாலேயே இரண்டு மூன்று தடவை நம் கண்களைக் கசிய வைத்துவிடுகிறார்கள்.

பின்னர் பொறுப்பை உணர்ந்து திருந்தி, குடும்பத்தைத் தேடிவரும் தங்கரை, பழுக்க காய்ச்சிய இரும்பாக மாற்றி சுற்றங்கள் சுட்டெரிக்க... அன்பை மட்டுமே பொழிந்த மனைவி கூட மனதைக் கல்லாக மாற்றிக்கொண்டு அம்பாகக் குத்த... தொடர்ந்து அரங்கேறுகிற கிளைமாக்ஸில் பதை பதைப்பு, பரிதவிப்பு, பரவசம் என உணர்ச்சிகள் மாறி மாறி வீசுகின்றன.,


தேனு... தேனு... என நவ்யாவிடம் குழையும் போதும், உண்மை உணர்ந்து கதறும் போதும் நடிகர் தங்கர், நம் மனசில் இடம் பிடிக்கிறார். ஆனால் 60-களில் தமிழ் சினிமா பாத்திரங்கள் பேசிய பாணியில் இழுத்து இழுத்து அவர் வசனம் பேசுவதுதான் லேசாக நெருடுகிறது.

ரொம்ப நாளைக்குப் பிறகு ஸ்கூலுக்குப் போகிற தங்கர்பச்சானை வழியில் நண்பர்கள் வசியம் பண்ண, சட்டென மூடு மாறி சரக்கடிக்க அவர் கிளம்புவதும், போகிற இடம் சுடுகாடு என்றுகூடத் தெரியாமல் ஜமுக்காளம் விரித்து பாட்டிலைத் திறந்துவிட்டு அவஸ்தைப்படுவதுமாக முன்பாதி காமெடி ஜில்லாக் கூத்து.

அய்யப்பன் கோயிலில் பொசுக்கென்று அவர் முழுநேர ஆன்மிகவாதியாக மாறுவதற்கு வலுவான காரணம் காட்டப்படவில்லை. அதே போல் இரண்டாம் பாதியில் காட்சிகளாலேயே விளக்கியிருக்கக் கூடிய சில இடங்களில் வளவள வசனங்கள்.

துலக்கி வைத்த குத்துவிளக்காக நடிப்பிலும் தோற்றத்திலும் ஜொலிக்கிறார் நவ்யா நாயர். கனன்ற் வரும் கோபத்தைத் தொண்டைக் குழிக்குள்ளேயே புதைத்துக்கொண்டு  கணவனைத் திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையோடு அவர் தொடர்ந்து போராடுகிற காட்சிகளில் பிரமாதமான முகபாவங்கள்.

ஆபாச ஆக்ஷன் மசாலா இல்லை; வழக்கமான காதல் பழிவாங்கல் இல்லை! ஆனாலும் அழுத்தமான கதையிலேயே அசத்திவிட்டார்கள்.

மார்க் 100 / 44

இசை; இளையராஜா
இயக்கம்; தங்கர்பச்சான்
தயாரிப்பு; தங்கர்பச்சான்

திரைப்படம் வெளியான ஆண்டு; 2005.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!