Sunday, February 23, 2014

புரட்சித்தலைவரை முதன்முதலாக பார்த்தபோது - கே.பி.ஆர்.மறைந்த முதல்வரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமச்சந்திரன் 

அது சிறுகுடி கிராமம் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. சுய மரியாதை இயக்கத்தில் ஈடுபாடுடைய நண்பர் சேதுப்பிள்ளையின் திருமணத்தை சீர்திருத்த முறையில் நடத்தி வைக்க அறிஞர் அண்ணா, நாவலர், நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சிகளை அங்கும் இங்கும் ஓடி புரட்சித்தலைவர் படமெடுத்துவிட்டு என் பக்கத்தில் வந்தமர்ந்தார். அதுதான் நான் அவரை முதன்முதல் சந்தித்தது.

அடர்த்தியான முடியோடு சுருள் கிராப்பு. சில்க் கள்ளி ஜிப்பா அணிந்து கையைச் சுருட்டி இருந்தார். சிவந்த மேனியாய்க் காட்சியளித்தார். என் பக்கத்தில் அமர்ந்தது எனக்கு பெருமையாக இருந்தது. அவருக்கும் எனக்கும் ரோஸ் மில்க் கொடுக்கப்பட்டது. அந்த வருடம் வெளியான ‘மதுரை வீரன்’ சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில் அவருடைய நடிப்பு என்னைக் கவர்ந்திருந்தது. எனவே நான் அவரோடு பேசத்துடித்தேன்.

‘படத்தை இரண்டு முறை பார்த்தேன், நன்றாக இருந்தது’ என்று பேச்சுக் கொடுத்தேன். அவர் முக மலர்ச்சியோடு பதில் சொன்னார் – ‘அந்தப் படத்தில் எல்லோருமே கடுமையாக உழைத்தார்கள். அதுதான் வெற்றிக்குக் காரணம்.’ இது அவருடைய பரந்த மனப்பாங்கைக் காட்டியது. அவர் குடித்து முடித்ததும் அந்த டம்ளரை வாங்க முயன்றேன். தர மறுத்து அவராகவே பரிமாறியவரிடம் கொடுத்து விட்டார். 
 
16 வருடங்களுக்குப் பிறகு அவர் சிறுசேமிப்புத் திட்டத் துணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றோ நான் அவருக்கு மெய்க்காப்பாளனாக பணியாற்றுவேன் என்றோ அப்போது நான் நினைத்துப் பார்க்க வாய்ப்பிருக்கவில்லை. ஆனால் எனது பாக்கியம் அப்படி நடந்தது. தோட்டத்தில் அவரைச் சந்தித்து எலுமிச்சம் பழம் கொடுத்து மரியாதை செலுத்தி மெய்க்காப்பாளராக பதவியேற்றேன்.

அவர் சத்யா ஸ்டுடியோ செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தார். பிளைமவுத் காரில் அவர் அருகே பழம் பெரும் நடிகர் அவரது நிழலாக உட்கார்ந்தார். நான் முன் சீட்டில், கார் நகர்ந்தது. அன்னை சத்யா ஆலயத்தின் முன் வந்ததும் நின்றது. காருக்குள் இருந்தபடியே காலிலிருந்த செறுப்பை அகற்றிவிட்டு பயபக்தியுடன் தாயைக் கும்பிட்டார். என்னையும் அறியாமல் நானும் கும்பிட்டேன். வழியில் என்னை விசாரித்தார். திருமண வீட்டில் சந்தித்ததை நினைவூட்டினேன்.

அதற்கு அவர் ‘உலகம் உருண்டை பார்த்தீர்களா?’ எங்கேயோ சந்தித்த நாம் மீண்டும் இங்கே சந்திக்கிறோம் என்றார். நான் பெயரைச் சொன்னபோது இருவர் பெயரும் ஒன்றாக இருப்பதால், நான் கே.பி.ஆர். என்று அழைத்தால் ஆட்சேபனை இல்லையே என்று கேட்டார். நான் சரி என்றேன். இதற்கு முன் எங்கே இருந்தீர்கள் என்றார். ‘’கக்கன்ஜி அவர்களுக்கு மெய்க்காப்பாளனாக இருந்தேன்’’ என்றேன். அவரைப் பற்றிக் கேட்டார். அவர் ‘நேர்மையானவர், எளிமையானவர், அடக்கமானவர்’ என்றேன். புரட்சித்தலைவர் சிரித்துக் கொண்டே என்னுடைய அபிப்ராயமும் அதுவே என்றார்.

மாற்றுக் கட்சித் தலைவரைப் பற்றி நான் உயர்வாகச் சொன்னதை, சிறிதும் மனக்கசப்பு இல்லாமல் ஏற்றுக்கொண்டார். அது அவரது பண்புள்ளத்தைக் காட்டியது. கார் ராஜ்பவனைக் கடந்தபோது போலிஸ் கான்ஸ்டபிள் உடையில் ஒருவர் கைவண்டி இழுத்துச் செல்வதைக் கவனித்துவிட்டு, காரை நிறுத்தி என்னை விசாரிக்கச் சொன்னார். கீழிறங்கி ஓடி அந்த நபரை விசாரித்தேன். விசாரித்ததில் ஒரு போலிஸ்காரருக்கு உறவினர் என்று தெரிய வந்தது. மனநிலை சரியில்லாதவராம். போலிஸ்காரரின் வீட்டுக்குப் போனபோது உடையையும் தொப்பியையும் எடுத்துப் போயிருக்கிறார்.

நான் நம்பரையும் தொப்பியையும் வாங்கிக்கொண்டு வந்தேன். அது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிக்குத் தெரிவித்து, அந்தத் தொப்பியையும் நம்பரையும் உரியவரிடம் கொடுக்கச் சொன்னார். அப்போது செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த கே.வி. சுப்பிரமணியம் ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் பண்ணி விபரம் சொன்னேன். அவர் தாமதிக்காமல் உடுப்புக்குரிய கான்ஸ்டபிளுடன் வந்து தலைவரைச் சந்தித்துப் பேசினார். கான்ஸ்டபிளும் தவறு நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.

இது எனக்கு அச்சத்தைக் கொடுத்தது. தலைவர் எவ்வளவு கண்டிப்பானவர், கடமை உணர்வு உள்ளவர் என்பதைப் பார்த்தபோது நான் மிகவும் எச்சரிக்கையாகவும் கடமை உணர்வோடும் பணியாற்றினேன். அப்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சியிலிருந்தார். புரட்சித்தலைவர் அவர்கள் சிறுசேமிப்புத் துணைத்தலைவராக இருந்தார். அவரால் அப் பதவிக்கு பெருமை ஏற்பட்டது. அவருக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு கொடுக்கப் பட்டது. கைகளில் துப்பாக்கி ஏந்தி போலிஸ் மரியாதை செலுத்துவார்கள். அந்த மரியாதையை ‘வேண்டாமே’ என்று அடக்கமாகக் கூறினார்.

‘வேண்டாம்’ என்று கூறுவது உகந்ததாகாது, போலிஸை அவமதிப்பது போலாகும் என்று நான் பணிவோடு எடுத்துக் கூறியதும் ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதற்கு அவர் நடை போட்டு வரும் பாணியும், ஏற்றுக்கொள்ளும் முறையும் மிடுக்காகவும், கம்பீரமாகவும் இருக்கும். உயர் மட்ட இராணுவ - போலிஸ் அதிகாரிகளையும் அது மிஞ்சிவிடும்.

Friday, February 14, 2014

அவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை!நிதானமாக குடிக்கத்

தெரியவில்லை.

அவசரப் படாமல்

அனுபவிக்கத்தெரியவில்லை.

வேண்டாம் என்பதைச்

சொல்லத்தெரியவில்லை.

சத்தம் போடாமல்

பேசத் தெரியவில்லை

அவசியத்துக்குக் கூடக்

கோபப்படத் தெரியவில்லை.

பயப்படாமல்

இரண்டாம் மனுஷியை

சிநேகிக்கத் தெரியவில்லை.

ஹரிக்கேன் லைட்டைப்

பொருத்தத் தெரியவில்லை.

அடைகிற குருவிகளைப்

பார்க்கத் தெரியவில்லை.

வாழ்வும் கவிதையும்

தெரியும் என்ற

வாய்ச் சவடாலில் மட்டும்

குறைச்சலே இல்லை.

-
கல்யான்ஜியின் முன்பின்கவிதைத் தொகுப்பிலிருந்து.

படித்ததில் பிடித்தவை !

உங்களை நிந்தித்தவரை பதிலுக்கு நிந்திக்க
புத்திசாலித்தனம் தேவையில்லை.
அமைதியாக இருக்கத்தான்
புத்திசாலித்தனம் தேவை

Wednesday, February 12, 2014

வலைத்தளம் வைத்திருப்பது குற்றமா?


நான் ஒடிஸா கிளைக்கு வந்தபோது இங்கே ஏற்கனவே ஒரு தமிழர் இருந்தார். கணிணி பிரவைச் சேர்ந்தவர். ஆனாலும் பிளாகர் பற்றியோ வலைத்தளங்கள் பற்றியோ எதுவும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. எப்படி பிளாகரில் வலைப்பதிவை ஆரம்பிப்பது, தமிழில் தட்டச்சு செய்வது, திரட்டிகள் என்று பலவும் சொல்லிக் கொடுத்தேன். கணிணி தொழில்நுட்பம் பற்றி ஏற்னவே அறிந்திருந்ததனால் எளிதாக கற்றுக்கொண்டு வலைப்பதியவும் ஆரம்பித்து விட்டார்.
ஆனால் ஒன்று மட்டும் அவரால் முடியவில்லை. அது தமிழில் தட்டச்சு செய்வது! பழகிக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்கூட இல்லை. பின்னே எப்படி வலைப்பக்கத்தில் எழுகிறார் என்கிறீர்களா? சொந்த சரக்கு எதுவும் இல்லை. மற்றவர்களின் பதிவுகளிலிருந்து திருடி அதைத் தன்னுடையது போல பதிவிடுவதுதான் அவர் வழக்கம். பெயருக்குக்கூட இது இன்னாருடையது, இந்த பதிவிலிருந்து எடுக்கப்பட்டது என்கிற நாகரிகமெல்லாம் கிடையாது.


அவருக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தமறக்க முடியாத நினைவுகள்தளம். சற்றேறக்குறைய ஒரே நாளில் ஆரம்பிக்கப்பட்டதுதான். ஆனால் பக்கப்பார்வையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகிக்கொண்டே போனது. அதைப்பற்றி நான் ஒன்றும் கவலைப்படவில்லை. நாமெல்லாம் மாங்கு மாங்கென்று தமிழில் தட்டச்சு செய்து வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ பதிவுகளைப் போடும்போது இவர் மட்டும் ஓரே நாளில் மூன்று, நான்கு பதிவுகள் போடுவார். இதைப்பற்ற்றி ‘’ஓரே நாளில் மூன்று, நான்கு பதிவுகளைப் போடுவது எப்படி?’’ என்றுகூட ஒரு பதிவைப் போட்டிருந்தேன். வருடத்திற்கு நூறு பதிவுகள் என்று மூன்று பதிவுகளைக்கூட தொடமுடியாத நிலையில் அவருடைய பதிவுகளோ ஆயிரத்திற்கும் மேலே போய்விட்டது.


வாசகர்களின் வருகைக்கும் குறைவில்லை. சும்மா உப்பு சப்பில்லாத பதிவுகளுக்குத்தான் வாசகர்கள் வருவதில்லையே தவிர, காரசாரமான அரசியல், பாலியல் சார்ந்த பதிவுகளுக்கும், கவர்ச்சியான தலைப்புகளுக்கும் வாசகர் வரத்து எப்போதும் குறைவதே இல்லை. ஆனால் எல்லாமே ‘’காப்பி, பேஸ்ட்’’ வகைகள்தான். பாதிக்கப்பட்டவர்கள் சிலர் பொங்கி எழுந்தார்கள், சிலர் எச்சரிக்கை செய்தார்கள். அசரவில்லை இவர். அப்புறம்தான் ஒரு பதிவர் இவருக்கு ‘’காப்பி பேஸ்ட் மன்னன்’’ (இந்தப் பெயரை இப்போது கூகிலில் தேடினால்கூட முதலில் வருவது இவரது சங்கதிதான்) என்று பட்டப்பெயர் கொடுத்து இவருடைய எல்லா விபரத்தையும் தன்னுடைய வலைப்பதில் ஏற்றி நாறடித்தார்.


அப்போதும் நான் எச்சரிக்கை செய்தேன். கேட்கவில்லை. அவருடைய பணி தொடர்ந்துகொண்டிருந்தது. பக்கப்பார்வையாளர்களின் எண்ணிக்கை அவருடையது அறுபதாயிரம் என்றால் என்னுடையது முப்பதாயிரமாக இருக்கும். இது தேவையில்லாத ஒப்பீடுதான் என்றாலும் ஒரு குறுகுறுப்பிற்காக பார்த்துக் கொள்வதுண்டு. நான் எங்கே அவரை எட்டிப்பிடித்து விடுவேனோ என்று மேலும் மேலும் தவறுகளைச் செய்துகொண்டிருந்தார். நான் பெரும்பாலும் வீட்டிலிருக்கும் நேரத்தில்தான் வலைப்பதியத் தொடங்குவேன்.


ஆனால் அவர் கணிணி அறையில் இணைய இணைப்பில் எப்போதும் இருப்பதால் பணிசெய்வது குறைவாகவும், பதிவிடுவது அதிகமாகவும் இருக்கும். நான் எதைப்பற்றியும் கண்டுகொள்வதில்லை. பணிச்சூழலில் நான் வேறு இடத்திற்கு வந்துவிட்டேன். அவர் இங்கிருந்து தமிழ்நாட்டிற்கு மாற்றலாகிப் போனார். இடைப்பட்ட காலத்தில் ஆமை முயலை வென்ற கதையாக எனது பதிவின் பக்கப்பார்வைகள் சறசறவென்று மேலேறி அவர் என்னை எட்டமுடியாத அளவிற்கு மேலே போய்விட்டது. என்ன நினைத்தாரோ அலுவலகத்தில் அதே வேலையாக இருந்திருப்பார் போலிருக்கிறது.


இதுதான் கெட்ட நேரம் என்பதோ என்னவோ? ஒருநாள் மேலதிகாரியோ அல்லது உடன் பணிபுரிபவர்களாலோ அவரைப் பற்றிய புகார் மேலிடத்திற்கு சென்றிருக்கிறது! விசாரனையின் போது கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார். அவருடைய பதிவைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியாகிப் போயிருக்கிறார்கள். பாலியல் சமாச்சாரங்களும் அதில் இருக்கவே உடனே ராஜினாமா செய்யச்சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கின்றனர். இது அந்தக் கிளையிலிருந்த நண்பர் ஒருவரால் எனக்குக் கிடைத்த செய்தி.


இது எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அவர் இப்போது வேலையில் இல்லை. எனக்கொரு சந்தேகம்? வலைத்தளம் வைத்திருப்பது குற்றமா என்ன? அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் அதைச் செய்தார் என்பதைத் தவிர மற்றபடி அது அவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் நிர்வாகம் தலையிடலாமா? அதற்காக அவரை வேலையை விட்டு அனுப்பியது சரியா? நண்பர்களே கருத்து கூறுங்கள்.