Monday, October 3, 2011

முதலில் ‘திருஷ்டி’ சுற்றிப் போட்டுக் கொள்ளுங்கள்'

மயிலாடுதுறை மாலா! இவர் எனது தோழிகளில் முக்கியமானவர். இவரது ஆர்வமும் துடிப்பும் அசாத்தியமானவை.எழுத்தார்வமும், சமூக அக்கறையும் கொண்டவர். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக கடிதத்தொடர்பில் இருந்தார். அப்புறம் கடிதத்தொடர்பு நின்றுபோய் கைத்தொலைபேசியில் எப்போதாவது பேசிக்கொண்டோம். இப்போது அதுவும் கிடையாது.

என்னோடு அறிமுமானபோது அவருக்கு வயது 21. எப்படி அறிமுகமானார் என்பதும் சுவாரஸ்யமானது. ஒரு பிரபல வாரப்பத்திரிகை 'கட்டுரைப்போட்டி' ஒன்றை அறிவித்திருந்தது. நான் அதில் கலந்து கொள்வதாகவும், முதல் பரிசை வெல்வதாகவும் நண்பர்களிடையே சவால்விட்டு கட்டுரையை எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். அப்புறம் வழக்கமாக மறந்தும் போனேன்.

விடுமுறையில் ஊருக்குப் போய்  திரும்புகையில் சென்னை மின்சார ரயிலில் பயணிக்கும் போது, பக்கத்து இருக்கையில் இருந்தவர் அந்தப் பத்திரிகையின் அந்த வாரத்தின் இதழை படித்துக்கொண்டிருந்தார். எனக்கோ நம்முடைய கட்டுரை வந்திருக்குமா என்ற ஆர்வமும் குறுகுறுப்பும் மனதில் ஓட அவரிடம் சார்! ஒரே ஒரு நிமிடம் பத்திரிகையைக் கொடுங்கள் என்று கேட்டுவாங்கி, அவசரவசரமாகப் புரட்டிப் பார்த்தபோது ஆம்! என் கட்டுரைக்கு இரண்டாம் பரிசு கிடைத்திருந்தது. ஆனால் முதல் பரிசு கிடைக்கவில்லையே என்ற வருத்தமும் இருந்தது. ஆனால் நண்பர்கள் எல்லாரும் பத்திரிகையில் வெளியானதே பெரிய விஷயம். நீ சவாலில் வெற்றி பெற்றுவிட்டாய் என்று மனமார வாழ்த்தினார்கள்.

முதல் பரிசு மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கும், மூன்றாம் பரிசு மயிலாடுதுறையைச் சேர்ந்த மாலாவிற்கும் கிடைத்திருந்தது. பத்து பதினைந்து நாட்கள் ஆகியிருக்கும். அந்தப் பத்திரிகையிலிருந்து எந்தத்தகவலும் வரவில்லை. நாம் கடிதம் எழுதி பரிசுத்தொகை பற்றி கேட்பதும் அசிங்கம் எனக் கருதி, இதில் மூன்றாம் பரிசு பெற்ற மாலாவிற்கு ஒரு அஞ்சலட்டையில் உங்களுக்குப் பரித்தொகை கிடைத்துவிட்டதா எனக் கேட்டு ஒரு கடிதம் எழுதினேன்.

உடனே பதில் வந்தது. பரிசுத்தொகை கிடைத்துவிட்டதாகவும் உங்களுக்கும் வரும் என்றும் 'உங்கள் கையெழுத்து முத்து முத்தாக அழகாக உள்ளது. உங்கள் கட்டுரையும் அருமை. என்னை உங்கள் பேனா நண்பராக ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேட்டும் எழுதியிருதார். இதுதான் எங்கள் நட்பின் தொடக்க வரலாறு. அப்புறம்  பத்திரிகையிலிருந்தும் பரிசுக்கான சான்றிதழும், காசோலையும் வந்து சேர்ந்தது தனிக்கதை. இவரின் கடிதங்கள் பெரும்பாலும் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்தவை. அரிதாக குடும்பப் பிரச்னைகளைப் பற்றியும் சில கடிதங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

கீழே அவரின் இரண்டாவது கடிதம்.

நண்பர் திரு. கவிப்ரியன் அவர்களுக்கு,                    15.04.1998

வணக்கம். நான் மாலா. உங்கள் கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். முதலில் ‘திருஷ்டி சுற்றிப் போட்டுக் கொள்ளுங்கள்' உங்கள் கையெழுத்திற்காக! தலையெழுத்து நன்றாக இருக்காது என்று ஏன் சொல்கிறீர்கள்? அதனைப் பார்த்திருக்கிறீர்களா? நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். தலையெழுத்தும் உங்கள் கையெழுத்தைப் போல ‘அருமையாய்இருக்கும்.

பெயர் - மாலதி, நானாக வைத்துக்கொண்ட பெயர்உதயா, பொதுவாக அழைக்கப்படும் பெயர் - மாலா, வயதுஇப்போதைக்கு நீங்கள் எனக்கு    பிறந்தநாள் வாழ்த்து கூற   முடியாது. ஏனெனில் இப்போதுதான் பிறந்திருக்கிறேன் 21 வயதில். படிப்பு - கம்ப்யூட்டர் படிப்பில் டிப்ளமோ,
வேலை - தேடிக்கொண்டே இருக்கிறேன். மிகவும் பிடித்தவர்கள் - மகாத்மா காந்தி, எனது அம்மா, அப்பா.  வெறுப்பவர்கள் - எவருமில்லை.  ஆசைபி.ஈ. படிக்கவேண்டும் என்பது. ஆனால் அது நிறைவேறாத ஆசையாகிவிட்டது. அதனால் வேறெதற்கும் ஆசைப்படுவதேயில்லை. பிடித்ததுலேசாக மழைத்தூறும்போது நனைந்து கொண்டே சைக்கிளில் வேகமாகப் போகப்பிடிக்கும்.

உங்கள் வீட்டிற்கு நேரெதிராக எங்கள் வீட்டில் நாங்கள் எல்லோரும் பெண்கள். நீங்கள் எக்கச்சக்கமான ‘சிந்தனைவாதி போலிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நட்பிற்கு பேதம் பார்ப்பதில்லை. எனக்கு எங்க அம்மாவும் அப்பாவும்தான் முதல் தெய்வம். ஏன் சொல்றேன்னா எங்களை ஆளாக்க அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ஊரையே எதிர்த்துக்கொண்டு எங்கப்பா எங்களை படிக்க வெச்சாங்க. இன்னிக்கு ‘தன்னம்பிக்கையோட இருக்கோம். எங்களுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தார்கள். அதன் எல்லையை நாங்கள் புரிந்து கொண்டோம்.

So, மற்ற பெண்களைப் போல இல்லை என் நிலை. எனக்கு இன்னொரு பென் ஃப்ரண்ட் இருக்கார். எனக்கென்று எந்த பர்சனலும் இல்லை. எனக்கு வர்ற லெட்டர்ஸை வீட்டுல எல்லோரும் படிப்பாங்க. ஏன்னா, படிச்சா அவங்க சொல்றது, ம்..கூம்... இதுக்கும் வேலை இல்லை, இதோட ஃப்ரண்டுக்கும் வேலை இல்லை. ஏதாச்சும் இஷ்டத்துக்கு உளறிக்கொட்டிக்கிட்டிருக்கும் இது. அதைக் கேக்கறதுக்கு ஒரு ஆளு... ஐயோ பாவம் என்பார்கள்.

நான் நல்லா அரட்டை அடிப்பேன். நிறைய புக்ஸ் படிப்பேன். நான் வாங்கும் புக்ஸ்... ‘க்ரைம், ‘கண்மணி’, ‘கல்கி, ‘பாக்யா. நிறைய படிக்க ஆசை. பொருளாதாரம் இடிக்கும். வேறொண்ணுமில்லை.

எங்க வீட்டு வெளியுறவுத் துறையும், நிதித்துறையும் என்னோடது. மயிலாடுதுறைக்கும் எங்க வீட்டுக்கும் 5 கி.மீ. தூரம். எத்தனை தடவை போகச்சொன்னாலும் ஜாலியா போவேன்.

பிடித்த எழுத்தாளர். ராஜேஷ்குமார். எல்லோருடையதும் (கிடைத்தால்) படிப்பேன். ‘சில நேரங்களில் சில மனிதர்கள் இதை எழுதியது யார்? ஜெயகாந்தனா? நீங்கள் படித்திருக்கிறீர்களா? தலைப்பு வித்தியாசமா இருக்கேன்னு தோணும். ஆனா படிச்சதில்லை. நான் படிக்கிற புக்ஸ்களுக்கு விமர்சனம் எழுதுவேன். கதை, கவிதை எழுதப் பிடிக்கும். ஆனால் எதுவும் வெளிவந்ததில்லை.

உங்கள் கவிதை, உங்களுக்குப் பிடித்த கவிதை இரண்டுமே சூப்பர்ப். நீங்கள் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி அமெரிக்கா போக இப்போதே எனது ‘அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அரசியல் பற்றி அப்படியெல்லாம் பெரிசா ஒண்ணும் தெரியாது. உங்க கட்டுரையைப் படித்ததும் ஒரே வியப்பு. இவ்ளோ விஷயம் தெரிந்து வைத்திருக்கிறீர்களே என்று! தேர்தல் பயத்துல எங்கப்பா என்னிடம் ‘நீ பாட்டுக்கு எங்கியாச்சும் போய் ஏதாவது உளறி வைக்காதே. ஒரு வாரம் எதுவும் பேசாதே. அவனவன் வெறியில இருப்பான்னு சொன்னாங்க. நானாவது கேட்கறதாவது? ஆனா எங்கயும் உதை வாங்கலை.

நான் ஏதாச்சும் வித்தியாசமா பேசுவேன். மற்றவர்கள் பார்வைக்கு பித்துக்குளித்தனமாய்த் தெரியும். உதாரணமா இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடந்தப்போ இந்தியா ஜெயிக்குமா, ஜெயிக்காதான்னு அவ்ளோ டென்ஷன். பார்த்தேன், இது நமக்கு சரிப்பட்டு வராது. இப்படியே போனால் ரசிகன் என்ற நிலை மாறி வெறியன் என்ற நிலை வந்துவிடும், மாத்திக்க வேண்டியதுதான்னு நினைச்சேன். இப்போ எந்த நாடானாலும் சரி அந்த டீம் ஒழுங்கா விளையாடினா அதுதான் ஜெயிக்கனும்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன். நேற்று (14.04.98) நடந்த பெப்ஸி கோப்பையை ஆஸ்திரேலியா ஜெயிச்சது கூட எனக்கு சந்தோஷமே!

எங்க ஆஃபிஸ்ல தினமும் சண்டை நடக்கும். அவங்க எல்லோரும் முஸ்லீம்ஸை திட்டுவாங்க. எனக்கு கோபம் வரும். சண்டை போடுவேன். காந்தியை திட்டுவாங்க அதுக்கும் சண்டை என சண்டை மயமாகத்தான் இருப்பேன்.

எப்பவும் உடனடியா பதில் கடிதம் எழுதிடுவேன். இந்த தடவை லேட்டகிவிட்டது.  சென்ற வாரம் எங்க அக்காவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அதுக்காக அலைஞ்சிகிட்டிருந்தேன். இனி உடனடியா லெட்டர் எழுதிடுவேன்.

எனக்கு ஏதாவது பிஸினஸ் செய்யணும்னுதான் ஆசை. கஷ்டப் படுகிறவங்களுக்கு ஏதாச்சும் உதவி செய்யணும்னு நினைப்பேன். என்னால முடிந்தவரை செய்வேன்.

அப்புறம் பேச்சுத்தமிழ்ல எழுதுவேன். உங்களுக்கு படிக்க கஷ்டமா இருக்குமா? ஆமாம்னா சொல்லுங்க மாத்திக்கிறேன். உங்களோட பிறந்த நாளை மட்டும் செல்லாம விட்டுட்டீங்களே ஏன்? வீட்டுக்கு எப்படி மாதாமாதம் போவிங்களா இல்லை விஷேஷம்னா மட்டுமா? மெட்ராஸ்ல நீங்க மட்டும் தங்கியுள்ளீர்களா? அல்லது நண்பர்களோடா?
அப்புறம் நிறைய அறுத்திட்டேன்னு நினைக்கிறேன். மீதி அறுவையை அடுத்த கடிதத்தில் தொடர்கிறேன்.

அன்புடன்,
மாலா.

வித்தியாசமாக ஒரு சுவையான அரசியல் கடிதம் (முன்னாள் முதல்வருக்கு எழுதியது) ஜாக்கி சேகரின்பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் என்ற வலைப்பக்கத்தில்... ‘முதல்வருக்கு ஒரு கடிதம் என்ற பதிவில்...

6 comments:

மாய உலகம் said... [Reply]

நண்பரே வணக்கம்! பதிவைப்படித்தேன்... உங்களது தோழியைப்பற்றி எழுதியிருந்தீர்கள்... அவர்களது நல் உள்ளம் தெரிகிறது.. மறுப்பதிற்கில்லை... ஆனால் உங்களுக்கு எழுதிய கடிதத்தை இப்படி பகிரங்கமாக அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டுமா.... இதனால பிரச்சனை இல்லை என்றாலும் சிறிதாக நெருடல் தோன்றுகிறது.. கருத்தில் பிழை இருந்தால மன்னிக்கவும் ... வாழ்த்துக்கள்

நிரூபன் said... [Reply]

இனிய காலை வணக்கம் நண்பா,

உண்மையான கௌரவிப்பு என்பது ஒரு படைப்பாளிக்கு எப்போது கிடைக்கின்றது என்றால், அவனது படைப்பு முழுமையாக விமர்சிக்கப்பட்டு நல்ல கருத்துப் பரிமாற்றத்திற்கு உள்ளாகின்ற போது.

அதனை உங்கள் தோழி செய்திருக்கிறார். உங்கள் படைப்பினைப் புரிந்து கொண்டு நட்பிற்கும் பாலம், அமைத்துள்ளார்கள்.

ரசித்தேன்.

எம்.ஞானசேகரன் said... [Reply]

மாய உலகம் கருத்தையே நானும் பிரதிபலிக்கிறேன். தனிப்பட்ட கடிதங்களை இப்படி அவரின் அனுமதி இல்லாமல் பகிரலாமா? மற்றபடி கடிதம் சுவாரஸ்யமாய் இருக்கிறது. அன்றைய நிகழ்வுகளும் கடிதங்களினூடே அருமையாய் பதிவாகியிருக்கிறது.

கவிப்ரியன் said... [Reply]

வருக மாய உலகம் அவர்களே! எனக்கும் சங்கடமும் நெருடலும் இல்லாமல் இல்லை. ஆனால் இது பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாய் எனக்குப்படுகிறது. வெறுமனே ஸ்கேன் செய்து எங்காவது கணிணியில் சேமித்து வைக்கலாம். அதானால் என்ன பிரயோஜனம். கடிதம் எழுதியவர்களின் எல்லா பெயர்களையும் மாற்றியிருக்கிறேன். வேறு என்ன செய்யலாம். யோசனை கூறுங்கள் நண்பர்களே! இந்தத்தளம் ஆரம்பிக்கப்பட்டதே கடிதங்களை வெளியிடத்தான். கூடவே என் பழைய நினைவுகளையும் மீட்டெடுக்கத்தான்.

கவிப்ரியன் said... [Reply]

இனிய மாலை வணக்கம் நிரூபன் அவர்களே!
அசத்திவிட்டீர்கள். மிக அருமையான என் வலைப்பக்கத்தைப் பற்றி நானே கூட எழுதவியலாத அறிமுகம்.
//கவிதைகள், சமூக நலன் சார் கருத்துக்கள், பதிவரசியல் பற்றிய குறும்பான விடயங்கள் எனப் பல அம்சங்களைத் தன் "மறக்க முடியாத நினைவுகள்" வலைப் பதிவில் பகிர்ந்து வருகிறார் கவிப்ரியன் அவர்கள்//
பல வாசகர்கள் இன்று உங்கள் தளத்திலிருந்து வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐந்து பேர் பின் தொடர்பவர்களாக சேர்ந்திருக்கிறார்கள். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. மகிழ்ச்சியிலும், நெகிழ்ச்சியிலும் உறைந்துபோய் இருக்கிறேன்.
தங்களின் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி!

கவிப்ரியன் said... [Reply]

வருக ஞானசேகரன் அவர்களே! வலையுலக நண்பர்கள் ஆலோசனை கூறுங்கள். தவறு எனில் கடிதங்கள் வெளியிடுவதை நிறுத்திவிடுகிறேன். இந்தக் கடிதங்களைப் பார்க்கும் போதெல்லாம் கர்வமும், பெருமையும் மேலிடுகிறது. எனவேதான் இதை அனைவரிடமும் பகிர முனைந்தேன்.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!