வெள்ளி, 30 செப்டம்பர், 2011

கேப்டன் மடிப்பிச்சை கேட்கிறார்! மயங்காதீர்கள்!


கேப்டன் மடிப்பிச்சை கேட்கிறார். ஏமாந்து கொடுத்து விடாதீர்கள். கட்சி பார்க்காமல் நல்ல உள்ளங்களுக்கு மட்டுமே ஓட்டை வழங்குங்கள்.

எதிர் கட்சித்தலைவரே! தற்பெருமை அடிச்சா மட்டும் போதாது. சட்டசபைக்கு எத்தனை நாள் வந்தீங்க. அந்த அம்மாகிட்ட உள்ளாட்சி, பாராளுமன்றத் தேர்தலில் குளிர் காயலாமுன்னு நினைச்சீங்க. ஆனா அந்த அம்மா ஆப்பு அடிச்சாங்க. பின்ன உங்கள வளரவிட்டா....(குறிப்பு: ஆக்கலும், அழித்தலும் அம்மாதான் 1 . பிஜேபி 2 . பாமக 3 . மதிமுக இப்போ நீங்க... 2 கம்யூனிஸ்ட்டுங்களும் வந்துட்டாங்க பின்னாடியே. புரியுதா கேப்டன்)

சட்டசபை தேர்தலில் சந்தர்ப்பம் கொடுங்கள் என்று சொன்னீர்கள். இப்போது கிடைத்த அந்த சந்தர்ப்பத்தை வைத்து என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கூற இயலுமா? உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தவறு நடக்காது என்கிறீர்களே, அப்போது ‘சட்டசபை வெற்றி என்ன ஆனது. துரைமுருகன் பற்றி உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். நீங்கள் அதை அவர் மந்திரியாக உள்ள பொது கூறி இருந்தால்.... இப்போது யார் பொதுப் பணித்துறை அமைச்சர் என்று தெரியுமா உங்களுக்கு? சரி, சாதி வைத்து வெற்றி பெற்றவர்களை குறிப்பிடுகிறீர்களே , அந்தக் கட்சியை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் சபையில் தன் கடமையை செய்கிறார்கள். விவாதங்களில் பங்கேற்று ஆதரிக்கின்றனர், விவாதத்தைப் பொருத்து எதிர்த்து வெளிநடப்பும் செய்கின்றனர்.

முதல் முறையாக இவ்வளவு செல்வாக்குடன் நீங்கள் உள்ளே சென்று முகஸ்துதி பாடி, பின் முன்னாள் ஆட்சியர்களைப் பற்றி மட்டும் பேச காரணம் என்ன? தற்போது தமிழகத்தை பற்றி அறிந்து உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கேட்கும் நீங்கள், ஏன் இதனை தமிழகத்தின் எதிர் கட்சி என்ற பெரும் பொறுப்பில் இருந்து கேட்கவில்லை?

இன்னையோட சுமார் 120 நாட்கள் ஆகியுள்ளது எதிர்கட்சித் தலைவரா நீங்க செய்த சாதனைய பட்டியல் இடுங்க, அப்புறம் உங்களுக்கு ஒட்டுப் போடலாமா? வேண்டாமான்னு? நாங்க முடிவு பண்ணுகிறோம். பாவம்யா இந்த அப்பாவி மக்கள் எவனாவது நல்லது செய்வானான்னு ஏங்குறாங்க..
ஏன் சார் உங்க முன்னாடி (சட்டமன்றம்) மைக் இருந்தது நீங்க போகலே,பேசலே, ஓட்டு போட்ட மக்களை மறந்துட்டீங்க. இப்போ தேர்தல் வருவதினாலே ஊர் ஊரா மைக்கைப் புடிச்சிட்டு திரியரிங்களே வெட்கமா இல்ல. ஓ அது இருந்தா நீங்க்கல்லாம் அரசியலுக்கே வரமாட்டீங்களே!

இதிலும் வாய்ப்பு கொடுத்தால் என்ன ஆகும் ஒண்ணும் பெருசா மாற்றம் வராது. உங்கள் கட்சி ஆட்கள் அடாவடி செய்வது உள்ளாட்சி அளவிலும் நடக்கும். கிடைத்த எதிர் கட்சி வாய்ப்பை நீங்கள் சரியாக பயன் படுத்தி இருந்தால், இப்போது கூட்டணிக்காக நிக்க தேவையில்லை. தைரியமாக வாய்ப்பு கேட்கலாம். நீங்கள் அவைக்கு வருவது கூட கிடையாது பின் என்ன சொல்வது. எவ்வாறாயினும் உங்கள் மற்றும் அனைத்து கட்சி செல்வாக்கு தெரிந்துவிடும் கொஞ்சம் நாளில்.

இதே போல் தான் இனி தவறுகள் நடக்காது என்று ஒட்டு கேட்டீர்கள். நம்பி ஒட்டு போட்டோம் ! முன்பாவது தவறுகள் நடந்து கொண்டிருந்தன. இப்போது ஹெலிகாப்டரில் அல்லவா பறக்கிறது !!

நாம் சுதந்திரம் அடைந்து 65 வருஷங்கள் ஆகிவிட்டன .....'நிறுத்தும்... இதற்குத்தானே அம்மா பால பாடம் நடத்த வேண்டாம்' என்று செம டோஸ் விட்டார்கள் ! உன் எம்.எல்.ஏக்களை கொச்சைப் படுத்தியதற்கு மறு நாள் சட்டசபைக்குப் போய், அம்மாவை வாங்கு வாங்கென்று வாங்கி இருந்தால் நீர் வீரன் ! ஆனால் அதற்க்கு பின் சட்டசபை பக்கமே தலை காட்டாத நீர் , இன்று நான் யாருக்கும் பயப்படமாட்டேன் என்று மார் தட்டுவீர், அதை நாங்கள் நம்ப வேண்டும் ! தெய்வம் மனித ரூபத்தில் தான் வருவார் ரொம்ப சரி ! ஆனால் சாத்தான் அரசியல் வாதி ரூபதில்தானே வருகிறது வேறு வேறு ரூபத்தில் ! வரவனுக்கெல்லாம் சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்பதற்கு இது என்ன நாடா! இல்லை குப்பை மேடா?...

மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்றீர் .தெய்வத்துடன் கூட்டணி வைத்து எதிர் கட்சி தலைவர் ஆனீர் .தெய்வம் பிடரியை பிடித்து வெளியே தள்ளியதால் மறுபடியும் மக்களுடன் கூட்டணி வைக்க வருகிறீர். இந்த "கறுப்பு MGR"(ஆட்டுக்கு)..கண்டிப்பாக ஒரு சந்தர்பம் கொடுங்கள் ..

நீர் நடத்தும் கல்லூரியில் காசு வாங்கி கொண்டு தானே சீட் கொடுக்குறீர் ? என்ன ஒரு பித்தலாட்டம் ! சிவந்த கண்ணை மட்டும் நம்பி மோசம் போய்டாதீங்க மக்களே! எல்லாம் புருடா!

உங்கள் கட்சிக்காரர்களுக்கும், உங்களுக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. எதற்க்கெடுத்தாலும் திமுக, திமுக என்று உளறுகிறீர். தமிழகத்தை நல்வழிபடுத்துவதும், திருத்துவதும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இது சினிமா உலகம் என்று நினைத்துவிடாதீர் விஜயராஜ்!



கடிதம் குறித்தான சுவையான சிறுகதை ஒன்று இரா. வசந்த குமாரின் 'என் பயணத்தின் பிம்பங்கள்' என்ற வலைப்பதிவில் 'சில கடிதங்கள்' என்ற தலைப்பில்....

வியாழன், 29 செப்டம்பர், 2011

எனக்குச் சாதகமான பதில் இல்லை!

God is Love                                                                                      31.10.1995
அன்பின் பிரியமுள்ள நண்பருக்கு,

அன்புத்தோழி க்ளாரா எழுதுவது. இங்கு நான் நலம். உங்கள் நலன் காண ஆவல். உங்கள் அன்புக் கடிதம் கிடைத்தது. எனது கடிதங்களை இங்கு யாரும் பிரிக்க மாட்டார்கள். எனவே நீங்கள் அதைப் பற்றி எதுவும் நினைக்க வேண்டாம்.


உங்கள் கடிதத்தில் எனக்குச் சாதகமான பதில்தான் வரும் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் என்னை திருமணம் செய்துகொள் என்று சொல்கிறீர்கள். வீட்டில் நண்பர் ஓருவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றுதான் சொன்னேன். ஆனால் எனக்கு திருமணம் செய்து கொள்ள மனம் இல்லை. மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. எதுவும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை. பெங்களூரில் வேலை செய்கிறார். உங்கள் பதில் கடிதம் வந்ததும்தான் பிடிக்கவில்லை என்று கண்டிப்பாக சொல்லிவிட்டேன்.

மாப்பிள்ளை கொஞ்சம் முரண்பட்டவர் என்று நினைக்கிறேன். எங்க அக்காவிடம் உங்கள் தங்கையை கண்டிப்பாக இந்தப் புடவையிலிருந்து மாற்றிக்காட்டுகிறேன் என்று சவால் விட்டுப் போயிருக்கிறார். கண்டிப்பாக அவரால் என் மனது இல்லாமல் என்னை மாற்ற முடியாது. ஏன் தெரியுமா? நான் உங்கள் தோழி! மேலும் வரன் பிடிக்கவில்லை. காரணம் சொல்லத் தெரியவில்லை என்று எழுதினேன். கூச்சப்படாமல் எழுது என்றீர்கள். காரணங்கள் எழுதவா?

உங்கள் வாழ்வில் ஏதோ ஒரு சலிப்பு இருக்கிறது. அதை உங்கள் கடிதங்களிலிருந்து புரிந்து கொண்டேன். அப்போதே நான் எடுத்த முடிவு இதுதான். அதுமட்டுமல்ல திருமணத்திற்குப் பின்னால் நான் விரும்பும் பணியை நிச்சயமாக செய்ய அனுமதி கிடைக்காது. எனவே வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாது. அதைவிட முக்கியமானது, எனது இன்பத்திற்காக நான் உங்கள் நட்பையும், உங்களையும்  இழக்கத் தயாராயில்லை.
இதனால் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லை. உங்கள் மேல் உள்ள அன்பும் பாசமும் நாளுக்குநாள் அதிகரிக்கிறதே தவிர, எந்த சூழ்நிலையிலும் உங்களை மறக்க முடியவில்லை. எனது வாழ்வில் இடைஞ்சல் இல்லாதிருக்கும் வரை உங்கள் நட்பு நீடிக்கும் என்று எழுதியிருந்தீர்கள். ஆனால் அப்படி என் வாழ்வில் ஒருஇடைஞ்சல் வந்தாலும் என்னால் உங்களை மறக்க முடியாது. இதற்குமேல் என்னால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.

எனவே இதற்குமேல் தயவுசெய்து என்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்த வேண்டாம்.

இங்கு ஊர் மக்கள் நல்ல அன்பாகப் பழகுகிறார்கள். இங்கு என்னோடு இருப்பவர்கள் இரண்டு பேர். இருவரும் பெரியவர்கள். அதில் ஒருவர் அடிக்கடி நான் அப்பா அம்மா இல்லாத்தைப் பற்றி அனாதை என்ற தொணியில் குத்திப் பேசுவார். அப்படிப்பட்ட நேரங்களில் உங்கள் நினைப்பு வரும். உங்கள் கவிதை நினைப்பு வரும். இருநிதாலும் அம்மா நினைவும் என்னை வாட்டுகிறது.

மனதில் உள்ளவற்றைச் சொல்லி ஆறுதல் அடைய இங்கு யாரும் இல்லை. எனக்கு எல்லாமே நீங்கள்தான். இந்தக் கடிதத்தோடு மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுப்பதற்காக எடுத்த என்னுடைய ஃபோட்டோ ஒன்று வைத்திருக்கிறேன். பார்த்துவிட்டு அடுத்த கடிதத்தில் அனுப்பி வையுங்கள். ஃபோட்டோதான் எடுத்தேன். மாப்பிள்ளை வீட்டாரிடம் கொடுக்கவில்லை. கடிதம் உடன் எழுதினால் 17-ம் தியதிக்கு முன்னால் எழுதுங்கள். இல்லையென்றால் 28-ம் தியதிக்குப் பின்னால் எழுதுங்கள்.

நீங்கள் கேட்ட யோபு ஆகமம் இன்னும் கொஞ்சம் எழுதவேண்டும். அடுத்த கடிதத்தில் நிச்சயம் அனுப்புகிறேன்.

என்றும் பிரியமுடன்,
க்ளாரா.
குறிப்பு: ஏதாவது தவறாக இருந்தால் மன்னித்து அடுத்த கடிதத்தில் எழுதுங்கள்.


புதன், 28 செப்டம்பர், 2011

வெளிநாட்டு மோகம்!

நம் எல்லோருக்கும் வெளிநாட்டு மோகம் இருப்பதை மறுக்க முடியாது. அது வேலைக்காகவும் இருக்கலாம். சுற்றிப் பார்க்கவும் இருக்கலாம். ஆனால் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை யாரும் உணர்வதே இல்லை. 


நானும் கூட கொஞ்சநாள் இப்படிப்பட்ட வெளிநாட்டு மோகத்தில் இருந்தேன். இரண்டு மூன்று முறை அந்த வாய்ப்பு வந்து கை நழுவிப் போனது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்களே அதுபோல.



பல விதங்களில் முயன்று கொண்டிருந்தேன். பத்திரிகைகளில் பார்த்து விண்ணப்பிப்பது மட்டுமல்லாது தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லாரிடத்தும் சொல்லி வைத்திருந்தேன். ஒருமுறை ‘மார்க்யூப் என்ற ஒரு அமெரிக்க நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் தங்களின் கிளையை அமைக்க விரும்பி அதற்கான பணிகளைத் துவங்கி ஆட்களையும் தேர்வு செய்யத் தொடங்கியிருந்தார்கள். 


நானும் விண்ணப்பித்து இறுதி நிலை வரை போய் கடைசியில் தேர்வு செய்யப்பட்டேன். அடுத்த பதினைந்து நாட்களில் அமெரிக்காவிற்கு ஆறு மாதம் பயிற்சிக்காக அனுப்பப்போவதாகவும் அதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்துகொள்ளுமாறும் அறிவித்துவிட்டர்கள்.


மகிழ்ச்சிக்கு சொல்ல வேண்டுமா? அமெரிக்கக் கனவுகளில் நான் மூழ்கியிருந்த நேரம் வாஜ்பாயியின் (13 நாள் அரசோ அல்லது 13 மாத ஆட்சியோ சரியாக நினைவில்லை) அரசு போக்ரானில் அணுவெடிச் சோதனையை நடத்தியது. அமெரிக்காவிற்குத் தாங்குமா?! இந்தியா மிது பொருளாதாரத் தடையை விதித்தது. நான் தேர்வு செய்யப்பட்ட அந்த அமெரிக்க நிறுவனம் இங்கு தொடங்குவதும் தடைபட்டது. என் ஆசை நிராசையானது.


இப்படி பல சமயங்களில் வாய்ப்புகள் கை நழுவிப்போயிருக்கிறது. என்றாலும் முயற்சியை விட்டுவிடவில்லை. நான் குடியிருந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் காவியா என்ற பெண் எங்களோடு நன்றாக பழகிவந்தாள். ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது அவளுக்கு சிங்கப்பூரில் ஒரு தோழி இருப்பதாக சொன்னாள். நான் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வதைக் கூறி அவரை அறிமுகப்படுத்துமாறு கேட்டேன். இரண்டு பேரும் சேர்ந்து சிங்கப்பூர் தோழிக்கு கடிதம் எழுதினோம். அங்கிருந்து காவியாவிற்குப் பதிலாக எனது முகவரிக்கு பதில் வந்தது. நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். காவியா அப்புறம் லைனிலேயே இல்லை.


இந்த சிங்கப்பூர் தோழியின் பெயர் ஜெஸி. மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். சென்னயிலேயே பிறந்து வளர்ந்ததால் தமிழ் எழுத, படிக்கத் தெரியும். அப்புறம் எங்களுக்குள் கடிதப் போக்குவரத்து கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. அப்புறம் என்ன காரணத்தினாலோ நின்று போய்பிட்டது. இப்போது எங்கே எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் எனக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.


இதற்கு முன்பே வெளிநாட்டிலிருந்து இருவர் அறிமுகம் ஆகிமாயிருந்தனர். ஒருவர் இலங்கையிலிருந்து யாழினி. இன்னொருவர் அமெரிக்காவிலிருந்து சுப்பிரமணியம். இதே காலகட்டத்தில் எனக்கு மயிலாடுதுறையிலிருந்து அறிமுகமானவர் மாலா என்கிற தோழி. இவர்களின் கடிதங்களையெல்லாம் இன்றுவரை பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறேன். ஒரே வருத்தம் என்னவென்றால் என் கடிதங்களின் கதி என்னவாயிற்று என்பதுதான். எல்லோரும் என்னைப்போல பைத்தியக்காரத்தனமாய் குப்பைகளைச் சேர்த்து வைத்திருப்பார்களா என்ன?!

அந்த என் கடிதங்களையும் பதிவு செய்ய மனம் ஏங்குகிறது. என்னுடைய எழுத்தும்,சிந்தனையும் எண்ணமும் அப்போது எப்படியிருந்தது என்று பார்க்க ஆசையிருக்காதா? எந்த நண்பர்களையும் இப்போது தொடர்பு கொள்ள முடியவில்லை. கல்யாணம் வரை இருக்கும் காதலைப் போல, உயிருக்குயிரான நட்பு என்பதெல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான் என நினைக்கிறேன். கடிதம் எழுதுதில் இருந்த ஆத்ம திருப்தியும், காத்திருத்தலும் இந்த நவீன யுகத்தில் இல்லாமற் போனது வருத்தமளிப்பதாய் இருக்கிறது 


தோழர்களே! உங்களுக்கும் இருந்தால் இங்கே வந்து அதைப் பகிரலாமே!


செவ்வாய், 27 செப்டம்பர், 2011

விழியில் விழுந்து .. உயிரில் கலந்த …

தாண்டவமூர்த்தி இவன் பால்ய காலத்தோழன். ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரொண்டாம் வகுப்புவரை ஒன்றாய்ப் படித்தவர்கள் நாங்கள். நல்ல புத்திசாலி. தேர்வு காலங்களில் அதற்காக மெனக்கெட்டு படிக்கவே மாட்டான். வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தியதை மனதில் வைத்தே தேர்வை எதிர்கொள்வான். பள்ளிப் படிப்பிற்குப்பின் எந்தவித இலக்கும் சரியான வழிகாட்டுதலும் இன்றி இராணுவத்தில் சேர்ந்துவிட்டான்.


நான் திருமணம் செய்துகொண்டபின், நான் செய்துவந்த தொழிலில் நட்டம் ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நேரத்தில் என்னைச் சந்தித்த இவன் (ராணுவத்திலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்த நேரம்) என் நிலைமை தெரியாமல், ‘உனக்கென்னப்பா தொழிலதிபர் என்கிற ரீதியில் கிண்டலடிக்க, ஆற்றாமையில் நான் பொறிந்து தள்ளிவிட, மிகவும் சங்கடப்பட்ட அவனோ மௌனமாய் என் சட்டைப்பையில் நூறு ரூபாய்த் தாளை செருகிவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விட்டான்.


குழந்தைக்குப் பால் வாங்கக்கூட பணமில்லாமல், பொங்கல் பண்டிகையை எதிர்கொள்ள இருந்த எனக்கு அந்தப் பணம் எனக்கு பேருதவியாய் இருந்த போதிலும், அதுவரை யாரிடமும் என் நிலைமையைச் சொல்லி கையேந்தாத எனக்கு, அன்றைய நிகழ்வு மிகப்பெரும் சங்கடத்தைக் கொடுத்தது. வாங்க மறுக்கும் சந்தர்ப்பத்தைக் கூட எனக்குக் கொடுக்காமல் பணத்தைச் சட்டைப் பையில் திணித்துவிட்டு அவன் விருட்டென சைக்கிளில் பறந்து போனது இன்னும் என் நினைவில் நிழலாடுகிறது.


விடுமுறை முடிந்து அவன் போனவுடன் எனக்கு ஒரு கடிதமும் போட்டிருந்தான். அந்தக் கடிதம்தான் இது:

இறைவன் துணை             04/11

அன்பு நண்பா!
திரண்டு வரும் அன்பை
திரட்டி, மையாக ஊற்றி
இதயத்தையே காகிதமாக்கி
எழுதுகிறேன் நான் – இதை
விழியில் விழுந்து
உயிரில் கலந்து
உதட்டிலே நிற்காமல்
உயிரில் கலந்தது
நம் அன்பு!

புதிய வாழ்க்கை,
புதிய பாதை
பூத்துக் குலுங்குகிறது
கண் முன்னே!
பூபாளம் பாடுகிறது
இளந் தென்றல்!
புன்னகை புரிகின்றன

பூக்கள் எல்லாம்
பூரித்துப் போகிறது
என் மனம் – உன்
பாதங்கள் படும்
பாதை எல்லாம்
பரணி பாடுவதைக்
கேட்கின்றேன்.

பார்த்துக் கொண்டே
இருப்பேன் தொலைவிலிருந்து
என் பிரார்த்தனை எல்லாம்
உன் வெற்றிக்காகத்தான்.
வளமுடன் வாழ்க என்றே
நாளும் வாழ்த்துவேன்.

நேரிலே வந்து சொல்ல
நாட்களே சில இருப்பினும்
வடித்து அனுப்புகிறேன்
வார்த்தைகளை.

கவிதை எழுத நான்
கவிஞனும் இல்லை
கற்பனையும் அவ்வளவு இல்லை
என்ன செய்ய?

விழி வாசலைத் திறந்து என்
வரவுக்காக காத்திரு.
வந்துவிடுவேன் சில நாளில்.
வாழ்த்துக்களை நம் நண்பர்கள்
அனைவருக்குமே!

இவன்,
தாண்டவமூர்த்தி

இப்பொது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று சென்னைப் பக்கம்தான் எங்கோ வேலை செய்கிறானாம். ரொம்ப நாளைக்குப் பிறகு ஏதேச்சையாக பேருந்தில் பார்த்துப் பேசினேன். என் கைத்தொலைபேசி எண்ணைக் கொடுத்த நான், இறங்கும் அவசரத்தில் அவன் தொலைபேசி எண்ணை வாங்க மறந்து போனேன். இன்றுவரை அவனிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.


கடிதங்கள் குறித்த அருமையான வலைப்பதிவு ஒன்று 'மகிழம்பூச்சரம்', சாகம்பரி என்பவர் எழுதுகிறார். 'கடிதம்' என்ற தலைப்பில் உள்ள கடிதங்களைப் படியுங்கள் எத்தனை இனிமையாய் இருக்கிறது.


திங்கள், 26 செப்டம்பர், 2011

எனக்கு இந்தியாவில் இருக்கிற நண்பர்கள் வேண்டாம்!

ஆங்கில வழியில் படித்த என் அண்ணன் மகள் எனக்கு எழுதிய கடிதம் இது. எனக்கு இருக்கிற பேனா நட்புகளைப் பார்த்து அவளுக்கும் ஆர்வம் பிறக்க எனக்கும் சில நட்புகளை அறிமுகப் படுத்துங்களேன் சித்தப்பா என்றாள். நானும் எனது மயிலாடுதுறைத் தோழி மாலாவை அறிமுகப்படுத்தி வைத்தேன். மாலாவும் அவருக்கு கடிதம் எழுதினார். 

ஆனால் என்ன காரணத்தினாலோ என் அண்ணன் மகள் மாலாவிற்கு பதிலே எழுதவில்லை. நான் ஏன் பதில் எழுதவில்லை என்று விசாரித்தபோது, போங்க சித்தப்பா எனக்கு இந்தியாவில இருக்கிற நண்பர்கள் வேண்டாம். ஃபாரின்ல இருக்கிறவங்கள அறிமுகப்படுத்துங்க, அப்பதான் கிஃப்ட்டுங்க, கிரீட்டிங்ஸ் எல்லாம் வரும். அதோட எனக்கு இங்லீஷ்லதான் லெட்டர் எழுத வரும். தமிழ்ல என்னால எழுதமுடியாதுன்னு சொன்னாள்.


பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு போகவேண்டிய தருணம் வரும்வரை தமிழிலே எனக்கு எழுத வராது என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி? இந்தத் தலைமுறையை என்ன சொல்வது? எப்படி மாற்றுவது? ஆனல் இவள் என் அண்ணன் மகளாயிற்றே! எப்படியாவது தமிழில் எழுத பயிற்சி கொடுக்க எண்ணி, எனக்கு தமிழிலேயே கடிதம் எழுதச் சொன்னேன்.


21.12.1996 – ல் இவள் எனக்கு எழுதிய கடிதம்.


அன்புள்ள சித்தப்பாவிற்கு,
சரண்யா எழுதும் முதல் கடிதம். நான், அம்மா, தங்கை, தம்பி அனைவரும் நலம். நீங்கள் தொத்தா, குழந்தை அனைவருடைய நலத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். அப்பாவுக்கு வைத்து வலியால் இருந்தார். Thursday அப்பாவுக்கு வைத்து வலி இருந்தது. அதானல் ஆஸ்பிட்டலுக்கு போய் வந்தார். எதுவும் இல்லை என்று Doctor கூறினார். Tuesday இரவு நன்றாகத்தான் இருந்தார். ஆனால் புதன் கிழமை காலையில் ரெம்ப வைத்து வலியால் துடித்தார். அப்பாவுக்கு வைத்து வளியை தாங்க முடியவில்லை.


அம்மாவும் பக்கத்து வீட்டில் உள்ள Uncle, aunty –யும் அப்பாவை ஆஸ்பிட்டலுக்குச் சென்றனர். அப்பொழுது Operation செய்ய வேண்டும் என்று Doctor கூறினார். அதனால் Operation செய்தனர். இப்பொழுது நன்றாக இருக்கிறார். தாத்தா, பாட்டி, அத்தை, மாமி, மாமா அனைவரும் வந்து அப்பாவைப் பார்த்தனர். அப்பாவை நான்கு நாட்கள் Hospital லில் இருக்கும்படி கூறினார். எங்களுக்கு 21.12.1996 அன்றுதான் எங்களுக்கு EXAM முடிந்தது. எங்களுக்கு 02.01.2007 வரை விடுமுறை. அம்மா Hospital லில் இருக்கிறார்கள்.


உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. 22.12.96 or 23.12.96 க்கு அப்பாவை வீட்டிற்கு அனுப்புவதாக Doctor கூறினார். உங்கள் வரவை எதிர்பார்க்கறோன். Pongal - லுக்கு leave இருந்தால் அவசியம் வரவும். Advance Happy New Year and Happy Pongal to சித்தப்பா, தொத்தா and குட்டிப் பாப்பா.


இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள,
சரண்யா.

இப்போது படித்தாலும் இதிலுள்ள பிழை, எழுத்துநடையைக் கண்டால் சிரிப்புதான் வருகிறது. கோபித்துக் கொள்ளாதே சரண்யா!

கடிதம் குறித்த ஒரு பதிவு வேடந்தாங்கல் என்ற வலைத்தளத்தில் 'நன்றி மறந்தோமா நாம்... அன்புள்ள கடிதத்திற்கு' போய்ப்பாருங்கள்.


ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பதவி வெறியர்கள் - மறக்க முடியாத கடிதங்கள்

24.12.1996                                       பெங்களூர்
அன்புள்ள நண்பருக்கு இனிய வணக்கம். நானும், ஊரில் எனது குடும்பத்தினர்களும்  நலம். உங்கள் நலன் குடும்பத்தினர் நலன் காண பேரவா! உங்களது மடல் கிடைத்து படித்து விபரமறிந்தேன். எனது தேர்தல் முடிவுகள் குறித்து நீங்கள் எழுதியிருந்த கருத்துக்களைப் படித்தறிந்தேன். 


1986-ல் மிக எளிதாக ஜாதி, பண பலத்தை எதிர்த்து வெற்றி பெற்ற என்னால் இப்போது அவ்வாறு வெற்றி பெற இயலாமற் போனதில் சிறிது வருத்தமே!
கவிக்குயில் சரோஜினி நாயுடு கூறியது போல ‘ காசு கொடுத்து ஓட்டு வாங்குவதும், குடும்பப் பெண்களை சோரம் போகச் செய்வதும் ஒன்றே என்ற கூற்றை பதவி வெறியர்கள் உணர்ந்தாலே பாதி வெற்றி நியாயத்திற்குக் கிடைத்துவிடும்.


பா.ம.க. நண்பனின், எனக்கு எதிரான மாற்றத்தை என்னால் சராசரி மனித இயல்பாக கருத முடியவில்லை. இந்த துரோகத்தை என்னால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. இத்தகைய துரோகிகளை என்னால் அடையாளம் கண்டு கொள்வதற்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு வாய்ப்பாக உண்மையில் மனதில் ஒருவித மகிழ்ச்சியும் உள்ளது.


ஜாதீய ஆதிக்கம் என்பது வன்னியர் இனத்தில் மட்டுமில்லை. எந்த ஒரு ஜாதியும் ஒரு ஊரில் அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது, அது பிற ஜாதிகளுக்கு ஆதிக்க ஜாதியாக விளங்குகிறது என்பதே உண்மை. வெகுஜன அமைப்பாக உள்ள பெரும்பாலான கட்சிகளில் (கம்யூனிஸ்டில் குறைவாக) உள்ள நீக்கு, போக்குத் தன்மைதான் பா.ம.க.வில் உள்ளது. தீவிர கம்யூனிஸ்ட்டுகள் கூறுவது போல ஓட்டுக் கட்சிகள் எல்லாமே ஒன்றுதான் என நான் நினைத்தாலும் கூட, இருப்பதில் எது மேலானது என கவனிக்கும் போது எனக்கு பா.ம.க. பிடிக்கிறது.


பா.ம.க. பற்றி உங்கள் கருத்துக்கள் எனக்கு உடன்பாடானது என்றாலும், ஈழப் பிரச்சனை விஷயத்தில் பா.ம.க. அணுகுமுறை குறித்த உங்களின் கருத்துக்கு நான் மாறானவன். உங்களைப் போலத்தான், பொதுவாக எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கும் நிலையிலும், கொள்கைகளை முழுதாக அணுசரித்துப் போக இயலாத காரணத்தாலும் நானும் ஒரு விமர்சகனாகத்தான் இருந்து வருகிறேன். இல்லாதிருந்தால் பா.ம.க.வில் என்றோ இணைந்திருப்பேன். பா.ம.க. மற்றும் ம.தி.மு.க.வில் இணைய எனக்கு ஊரில் நிறைய வலியுறுத்தல் இருந்தாலும் என்னால் அதில் இணையவும் முடியவில்லை.


ஊரில் எனது போராட்ட உணர்வைப் போல ஒரு வன்னியர் அல்லது தாழ்த்தப்பட்டவரில் ஒருவர் தலையெடுத்திருந்தால், அல்லது என்னை கருவேப்பிலையாக கருதாமல், ஆணித்தரமாக, உறுதியாக மேற்கண்ட இனப்பிரிவில் சிலர் என் பின் அணிவகுத்திருந்தால், எனது செயல்கள் நிச்சயம் விழலுக்கு இரைத்த நீராகியிருக்காது என்றே கருதுகிறேன். ஒரு சமயம் இவர்களைத் தயார்படுத்த பல வருடங்களாக நான் முனைந்ததில் சரியான அணுகுமுறை இல்லையோ எனக் கருதுகிறேன்.


மற்றபடி உங்களைப் பற்றியும் அடுத்த மடலில் எழுதுங்கள். பணிபுரியும் நிறுவனம், சம்பளம், எதிர்காலம், குடும்பம் பற்றியும் எழுதுங்கள். ஞாயிறு வீட்டில் இருப்பீர்களா? நேரில் வந்தால் உங்களை எப்போது சந்திக்க இயலும் என எழுத வேண்டுகிறேன்.


எனது குடும்பம் இப்போது ஊரில்தான் இருக்கிறது. அங்கு ஒரு காலி மனையை விற்றுள்ளேன். இந்தப் பணத்தில் ஓசூர் புறநகர்ப் பகுதியில் ஒரு இடம் வாங்க நினைக்கிறேன். PF, LIC -லோன் மூலமாக குறைந்த பட்ஜெட்டில் சில மாதங்களுக்குள் ஒரு வீடும் கட்டி எதிர்காலத்தில் ஓசூரில் குடியேறலாம் என்ற யோசனை மனதில் உள்ளது.


உமது விசாரிப்பை இங்கு நண்பர்களுக்குக் கூறினேன். பதில் எழுதும்போது அவர்களின் விசாரிப்பையும் எழுதச் சொன்னார்கள். எனது வழக்கறிஞருக்கான படிப்பு இன்னும் முடியவில்லை. இன்னும் 8 பேப்பர்கள் உள்ளது. 10 பேப்பர்கள் முடித்துள்ளேன். இந்த 8 பேப்பர் முடிக்கும் வரை வேறு சிந்தனைகள் செயல்கள் இல்லாதிருந்தால் நலமாக இருக்கும். மற்றவை உங்கள் அன்பு மடல் கண்டு. தொடர்ந்து மடலிட அன்புடன் கோருகின்றேன்.


இப்படிக்கு, 
என்றென்றும் அன்புடன், 
இனிய நண்பன் 
பாலசண்முகம்.


சனி, 24 செப்டம்பர், 2011

1996 உள்ளாட்சித் தேர்தலில் எவர்சில்வர் தட்டு... இப்போது???

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி அது சம்பந்தமான விஷயம் என்பதால்... இது ஒரு மீள் பதிவு
அன்புள்ள நண்பருக்கு இனிய வணக்கம்!

எனது முந்தைய கடிதம் கிடைக்காதது குறித்து வருத்தமடைகிறேன்.
நான் தேர்தலில் 20 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.
உன் நண்பன் 61 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தான். இந்த தேர்தல் எனக்கு தந்த படிப்பினைகள் ஏராளம்.
  •       ஜாதி, பணபலம் இல்லாத எனக்கு தேர்தல் பணிக்கு ஆள் இல்லை. 
  •   ஆண்கள் வாக்குச்சாவடிக்கு ஏஐன்ட் நியமிக்க இயலாததால் 60 க்கும்   மேலான கள்ள ஓட்டுக்களைத் தடுக்க முடியவில்லை. 
  •           வயதான கண் பார்வை மங்கியவர்களின் ஓட்டுக்கள் சுமார் 20 இருந்தும் இவர்களை அழைத்து வந்து ஓட்டு போடவைக்க ஆள் பலம் இல்லை. 
  •   ஓசூரிலிருந்து தம்பிகளை மூன்று தினங்கள் முன்னதாக வரச் சொல்லியும் வந்து ஓட்டு போட்டதும் சென்றுவிட்டனர்.
  •      வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி, மல்டி ஓட்டுக்களை எப்படி கணக்கிடுவது என்று அதிகாரிகளுக்கு தெரியாத காரணம்...  

இந்தக்காரணங்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் விதிமீறல்களை ஆதாரங்களுடன் திரட்டி மாவட்ட தலைமை நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். வழக்கு முடிவு இடைத்தேர்தலாக இருக்கும்.

மற்றபடி 20 ஓட்டுக்கள் என்னைவிட கூடுதலாகப் பெற்ற பா.ம.க. வேட்பாளர் ஜாதியபலம் இருந்தும் கூட, ஒரு ஓட்டுக்கு ஒரு எவர்சில்வர் தட்டு கொடுத்ததால்தான் வெற்றி பெற முடிந்தது.

ஜாதிபலம் இல்லாத நான் 20 வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும்கூட இது ஆச்சரியமில்லை. இந்த நபர் 26 ஆண்டுகாலமாக என் நெருங்கிய நண்பன். பா.ம.க.வுக்கு நான் ஊரில் நல்ல ஆலோசகனாக இருந்து இவனை வழிநடத்திச் சென்றேன்.

                                                

கூட்டுறவுத் தேர்தலில் இவனும், உள்ளாட்சித் தேர்தலில் நானும் போட்டியிடுவதாக நண்பர்கள் மத்தியில் முடிவு செய்தோம். 96 கூட்டுறவு தேர்தலில் இவன் வெற்றிபெற முதுகெலும்பாக செயல்பட்டேன். கூட்டுறவு தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே எனக்கே தெரியாமல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டான்.

கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெற்றும் கூட உள்ளாட்சித்தேர்தலில் போட்டியில் இருந்து விலகவில்லை. இந்த துரோக நிகழ்ச்சி எந்நாளும் நான் மறக்க முடியாத ஒன்றாகும்.

பா.ம.க. நான் விரும்பும் கட்சி. புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் துணிவாக ஆதரவு தரும் ராமதாஸ் அவர்கள் மீது எனக்குள்ள ஈடுபாடு ஆழமானது. இந்தக்கட்சி வளரவேண்டும் என்பதே எனது பேரவா! இதற்குத் தடையாக கீழ்மட்டக் கிராமங்களில் வன்னிய ஜாதி உணர்வுடன் செயல்படும் கட்சிக்காரர்கள் இருப்பதற்கு எடுத்துக்காட்டு மேற்கூறிய சம்பவமாகும்.

பா.ம.க. ஊரில் என்னை எதிர்த்து போட்டியிடாமல், ஆதரவு தெரிவித்திருந்தால், பா.ம.க. ஜாதிக்கு அப்பாற்பட்ட வெகுஜன அமைப்பு என, எங்கள் ஊரில் பிற ஜாதியினருக்கு உணர்த்தும் வாய்ப்பு இருந்திருக்கும். என் சொந்தச் செலவில் தந்தை பெரியாருக்கு எங்களூரில் சிலை நிறுவி, அதனை அஞ்சாத சிங்கம் நிகர் தமிழின ஒப்பற்ற ஒரே தலைவன் தம்பி பிரபாகரனை உறுதியுடன் ஆதரிக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களின் கையால் திறந்து வைக்கவேண்டும் என்ற எனது நீண்ட நாளைய ஆசைக்குக்கூட எங்களூர் பா.ம.க. வினர் இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதில் எனக்கு பெயரும் புகழும் கிடைத்து விடுமாம்.
.
  .                      
பெயருக்காக புகழுக்காக நான் கடந்த காலத்தில் ஆதிக்க எதிர்ப்பு குணத்தில் செயல்படவில்லை. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக, சிறுமைகளைக் கண்டு சீற்றம் கொண்டு, உயிரை துச்சமாக மதித்து நான் செயல்பட்டதெல்லாம் பெயருக்காகவா? புகழுக்காகவா?

எனது குடும்ப சுய தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ளாமல், எனது சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை கடந்த காலத்தில் செலவழித்து செயல்பட்டது புகழுக்காகவா? பெயருக்காகவா?

அநீதிகளை எதிர்த்ததால் நான் மட்டுமின்றி என்னை பெற்றெடுத்த ஒரே காரணத்திற்காக எனது பெற்றோர்களையும் பொய் வழக்குகளுக்கு ஆளாக்கி எங்களூர் ஆதிக்க சக்திகள் செயல்பட்டதில் நான் சந்தித்த இடையூறுகள் எல்லாம் கேவலம் இந்த பதவிக்கும் புகழுக்காகத்தானா?

                                             

மார்க்சிய எண்ணங்களை மனதில் கொண்டு, புரட்சியை நேசிக்கும் நான் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு போட்டியிடவில்லை. காலத்தின் கட்டாய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நான் தேர்தலில் பங்கெடுத்தது பதவி சுகத்திற்காகவா?

சராசரி அரசியல் கட்சிகளிலிருந்து மாறுபாடான செயல்பாடுகளைக் கொண்டுள்ள பா.ம.க. வளர்ச்சி என்பது என் வருங்கால ஆசைகளில் ஒன்றாகும். எங்களூரில் இந்தக்கட்சிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துவிட்டதாக நான் கருதியது பகற்கனவு என்றுதான் உணர முடிகிறது. இந்தக்கட்சிக்கு மூளையாக செயல்பட்ட எனக்கு எங்களூர் பா.ம.க.வினர் ஜாதிய கண்ணோட்டத்தில் கொடுத்த பரிசுதான் கடந்த தேர்தல் முடிவு.

எனது தோல்வி என்பது எங்களூரில் ஆதிக்க சக்திகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதை என்னை நன்குணர்ந்த உங்களுக்குப் புரியும் என்று கருதுகிறேன். அந்த அநீதி, ஆதிக்க சக்திகளுக்கு ஒரு புத்துணர்வை எங்களூர் பா.ம.க. வினர் எளிதாக வழங்கிவிட்டார்கள்.

இந்த அநீதி, ஆதிக்க சக்திகளை எதிர்த்து போரிட என்னிடமிருந்த ஆயுதமாகிய மக்கள் சக்தியை தற்காலிக சபலத்திற்கு அடிமையாக்கி (தேர்தல் விதிமுறை மீறலாகிய எவர்சில்வர் தட்டு கொடுத்து) எனக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததைப் போன்ற ஒரு மாயத்தோற்றத்தை எங்களூர் பா.ம.க.வினர் ஏற்படுத்திவிட்டார்கள்.

இந்தக்கடிதத்தை ஒரு சராசரி மனிதனின் கடிதமாக் கருதாமல், ஒரு சமூக உணர்வாளனின் மனக்குமுறல் என்று கருதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளதால் உங்களின் விரிவான கருத்தை அறிய விரும்புகிறேன்.
நீங்கள் சென்னையிலிருந்து ஊருக்கு அடிக்கடி வந்து செல்கிறீர்களா? மற்றவை உங்கள் மடல் கண்டு!

இப்படிக்கு,
என்றென்றும் மாறாத அன்புடன்,
இனிய நண்பன்.
பாலசண்முகம்