Monday, July 16, 2012

தீர்ப்பு!


ஒருவரை நம் பட்டியலிலிருந்து
நாம் நீக்கும் போது
அவருக்கு ஒரு தீர்ப்பை
எழுதவேண்டும்.
அந்த தீர்ப்பில் 
நம்மையும் மீறி 
ஒரு துளிக் கண்ணீர்
சிந்த நேரிடலாம்.
ஒரு முற்றுப்புள்ளியிலிலேனும்
நினைவு உறைந்து
நம்மைச் சற்றே
தடுமாற்றமடையச் செய்யலாம்.
நம்முடைய பட்டியலிலிருந்து
ஒருவரை நீக்கும் போது
ஒரு உறுப்பை நீக்குவது போல
சில சமயம் அதிக வலி இருக்கலாம்.
எந்த கட்டத்திலும்
திரும்பிப் பார்க்காமலிருப்பதுதான்
ஒரு தீர்ப்பை எழுதத்தொடங்கிவிட்டவரின்
முதல் பணி.
இல்லாவிடில்
நமக்கு நாமே உருவாக்கிக்
கொண்ட தன்னலம் தோய்ந்த
வைராக்கியங்களை
செலுத்த முடியாமல் போகும்.
அல்லது
நீக்கப்படும் மனிதனுக்கு
தேவையற்ற ஒரு பிடிமானத்தையோ
கடைசி நம்பிக்கையையோ
அது கொடுத்தது போலாகும்.
நம்மிடம் ஒரு தேர்வு இருப்பது
ஒரு பட்டியல் இருப்பது
அதில் அகற்றுவதற்கான
ஒரு பெயர் இருப்பது,
அது நம்மை
அவ்வளவு வசீகரிக்கிறது.
அது ஒரு புனிதக் கடைமை போல
கண்களை மூட முடியாத 
இறந்த ஒருவனின் கண்களைப்
போல!
- மனுஷ்யபுத்திரன்.


Friday, July 13, 2012

எப்படி அந்த முடிவை எடுப்பது? சிங்கப்பூர் ஜென்ஸியின் கடிதம்


                                                              God is Love                   02.05.2000
அன்புள்ள கவிப்ரியன் அவர்களுக்கு, ஜென்ஸி எழுதுவது. நான் நலமாக உள்ளேன். உங்களுடைய கடிதத்திற்காக ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன். 27-ம் தேதி உங்களுடைய கடிதம் கிடைத்தது. மிகவும் சந்தோஷம். கடிதம் வரவில்லை என்றதும் பயந்துவிட்டேன். காரணம் நான் ஏதாவது தவறாக எழுதிவிட்டேனா என்று!

உங்கள் கடிதம் படித்து உங்களின் சூழ்நிலைகளை அறிந்துகொண்டேன். கடவுள் கிருபையால் நான் நல்லபடியாக உள்ளேன். மற்றபடி நான் போன தடவை உங்களுக்கு கடிதம் அனுப்பியபோது கவிதாவிற்கும் லெட்டர் அனுப்பியிருந்தேன் அல்லவா? அந்த கடிதத்திற்கு கவிதா உடனே பதில் அனுப்பியிருந்தாள். நீங்கள் எழுதியபடியே கவிதா அவளது வீட்டு சூழ்நிலைக்காகத்தான் சரவணனை திருமணம் செய்துகொள்ளமுடியாது என்று சொல்லியிருக்கிறாள். எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

மற்றபடி என் கணவர் இதுவரை எனக்கு ஒரு லெட்டர் கூட போடவில்லை. அவருக்கு பணம் அனுப்பிக்கொடுக்கவில்லை என்று கோபம். மாதம் 3000 ரூபாய் வண்டிக்கு கட்டவேண்டும். அதைக்கூட ஒழுங்காக கட்டுவதில்லை. வண்டியில் வருகிற வருமானத்தை என்னதான் செய்கிறார் என்று தெரியவில்லை. என் மகளிடம் ஒருநாள் ஃபோனில் பேசியபோது, வண்டிக்கு இன்னும் DUE  கட்டவில்லையாம், அப்பா உங்களிடம் சொல்லச்சொன்னார் என்றாள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். நான் இப்படி சிங்கப்பூர் வராமலிருந்திருந்தால் இவர் எப்படி வண்டிக்கும் தவணை கட்டி எங்களையும் காப்பாற்றுவார்? எல்லோர் முன்னாலும் வேஷம் போட்டார். அந்த சமயத்தில் நான் மட்டும் அங்கேயே இருந்திருந்தால் என் நிலைமை என்னவாயிருக்கும். இதெல்லாம் தெரிந்துதான் நான் மறுபடியும் சிங்கப்பூர் வந்தேன்.

இன்னும் இவருக்கு ஒரு பொறுப்பும் வரவில்லை. நான் இவரைத் திருத்த எவ்வளவோ முயற்சி செய்தேன். எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. இனி அந்த மனிதனை நம்பினால் வேஸ்ட்தான். என் மேல் பாசம் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்துகொள்ள மாட்டார். கடவுள்தான் இவரை திருத்தவேண்டும். நீங்கள் எழுதினபடியே என் அண்ணன்மார்கள் எல்லோரும் சொன்னார்கள். அவரை விவாகரத்து செய். உன்னையும் உன் மகளையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால் காதல் திருமணம் செய்த நான் எப்படி அந்த முடிவை எடுப்பது என்றுதான் குழம்பிப்போய் உள்ளேன்.

என் மகளுக்காகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். போனமுறை நான் இந்தியா வந்தபோது, என் கணவரிடம் உங்களுக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், எனக்கு அதற்கு முழு சம்மதம். நானும் என் மகளும் எப்படியாவது வாழ்ந்துகொள்கிறோம் என்று சொன்னேன். அதற்கு அவர் விவாகரத்துக்கு ஒத்துக்கொள்ளமாட்டாராம். என் மகளையும் கொடுக்கமாட்டாராம். என்னை வாழவும் விடமாட்டாராம், சாகவும் விடமாட்டாராம். நீ சிதரவத்தைப்படவேண்டும் என்று சொல்கிறார். இதற்குமேல் நான் என்ன செய்ய முடியும்?


உணமையிலேயே என் வாழ்க்கை நரகமாகிவிட்டது. இதைவிட நல்ல வசதியானவர்கள், படித்தவர்கள் எல்லாம் என்னை விரும்புவதாகச் சொன்னார்கள். அதற்க்கெல்லாம் நான் ஒத்துக்கொள்ளவில்லை. கடைசியில் எப்படியோ இவரிடம் வந்து மாட்டிக்கொண்டேன். சிலவேளை நினைப்பேன்... என் சொந்த மாமாவின் மகன் என்னை அதிகமாக நேசித்தான். என்னைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தான். ஆனால் நான்தான் சம்மதிக்கவில்லை. அவனை மட்டும் திருமணம் செய்திருந்தால் என் வாழ்க்கை சந்தோஷமாக இருந்திருக்கும். என் தலையெழுத்து இவரை திருமணம் செய்துகொண்டு கஷ்டப்படவேண்டும் என்று உள்ளது! என்ன செய்வது அவரவர் விதியை மாற்ற முடியுமா?


அதனால் என் வாழ்க்கை இனி சந்தோஷமாக மாறுமா என்று சொல்ல முடியாது. என் மகளுக்காக வாழ்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் இனி என் கணவருக்கு லெட்டரோ, பணமோ அனுப்ப மாட்டேன். கடவுள் அவரை திருத்தட்டும், அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும். மற்றபடி உங்கள் கடிதம் வந்ததில் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். அதாவது எனக்கு நல்ல ஆலோசனையும் ஆறுதலும் சொல்ல உங்களைப் போன்ற ஒரு நண்பர் கிடைத்ததில் சந்தோஷப் படுகிறேன். உங்களுடைய ஒரு லெட்டர் வந்து, அடுத்த லெட்டர் வரும்வரை வந்த அந்த பழைய லெட்டரை எடுத்து படித்துக்கொண்டே இருப்பேன். மனதிற்கு உண்மையிலேயே ஆறுதல் அளிக்கிறது உங்கள் கடிதம்.

யாருமில்லாமல் அனாதையாக வாழ்ந்துகொண்டிருக்கும் எனக்கும் அன்பு காட்ட ஒரு குடும்பம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றபடி தற்சமயம் தலைவலி பராவாயில்லை. மருத்துவமனைக்குச் சென்றுவந்தேன். அதன் பிறகு தலைவலி இல்லை. ஆனாலும் தனிமையில் உட்கார்ந்து ஏதாவது நினைத்து அழுதுவிட்டால் உடனே தலைவலி வந்துவிடும். மாத்திரை வாங்கி வைத்துள்ளேன். உங்கள் ஃபேமிலி ஊருக்கு போனதாக எழுதியிருந்தீர்கள். தனிமையில் எப்படி சமாளிக்க முடிகிறது. காரணம் இரண்டு இடத்தில் வேலை செய்து களைத்துப் போய் வரும் உங்களுக்கு வீட்டில் ஆள் இல்லை என்றால் இன்னும் கஷ்டம் இல்லையா? எல்லாவற்றையும் சமாளிக்க தைரியம் உள்ளது அப்படித்தானே! நான் எழுதியது சரிதானே! மற்றபடி ஊருக்குப் போனால் அவர்களையும் கேட்டதாகச் சொல்லவும்.

மற்றபடி உங்கள் வேலை விஷயம்.... தொடர்ந்து ஜகந்நாதன் அவர்களிடமே முயற்சி செய்யுங்கள். நிச்சயம் ஒரு நல்ல வழி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருப்போம். நான் இங்கு பல இடங்களில் விசாரித்துவிட்டேன், பணம் இல்லாமல் யாரிடமும் நெருங்க முடியாது. என்ன செய்வது தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். கடவுள் நிச்சயம் ஒரு வழி காட்டுவார் என்று நம்பிக்கையோடு இருப்போம்.

கவிதா உங்கள் வீட்டிற்கு வரும்போது அவளிடம் என் விபரங்களைச் சொல்லுங்கள். மற்றபடி உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது கடிதம் எழுதுங்கள். நானும் கண்டிப்பாக கடிதம் எழுதுகிறேன்.

தற்சமயம் இந்த மடலை முடித்துக்கொள்கிறேன். மீண்டும் அடுத்த மடலில் என் சோகக் கதையைத் தொடர்கின்றேன்.

By,
Jensy Singapore
Tuesday, July 10, 2012

என்னை ஞாபகமிருக்கிறதா?
இருக்கலாம்
இன்றைக்கு
உனக்கு என்னை
எந்த ஞாபகமுமில்லாமல்
இருக்கலாம்
சௌந்தர்ய வண்ணங்கள்
உனக்கு விரித்திருக்கும்
ஷாமியானாப் பந்தலின்
சரிகைச் சிலுப்பில்
நீ சயனித்திருக்கும்போது
அதோ..
அந்தச் சூடுதகிக்கும்
பாலைவன மணற்பரப்பில்
தனித்த கனவுகளோடு
தொடுவானுக்கருகில்
நிற்கும் என்னை
உனக்கு இன்று
எந்த ஞாபகமுமில்லாமல்
இருக்கலாம்.
என்றேனும் ஒரு
இலையுதிர் காலத்தில்
வெறுமையில்
புழுங்கிப்போன உன் இதயம்
தொன்றலைத்தேடி
தவிக்கும் போது
நமது பழைய நந்தவனத்தின்
அசோக மரக்கிளையில்
அமர்ந்தபடி
ஜீவன் கரைந்து கூவுகிற
ஒரு ஒற்றைக் குயிலின்
உயிர் பிரியும் பாடல் வந்து
என்னை யாரென்று
உனக்கு ஞாபகப்படுத்தாமலா
போகும்!?


Sunday, July 8, 2012

பாராட்டு மழை!எனது சில பழைய கவிதைகள் சிலவற்றைப் பதிவிட்டிருந்தேன். அது குறித்து எனது நண்பர்கள் இருவர் எழுதிய பாராட்டுக் கடிதங்கள் இரண்டு கண்ணில் பட்டது. மறக்க முடியாத நண்பர்களின் கடிதம் அல்லவா? அதையும்தான் பதிவில் கொண்டுவரலாமே!


எனது சகோதரி ஜெயந்தியைப் பற்றி இந்த இடுகையைப் படித்தவர்கள் அறிந்திருப்பீர்கள். எனது கவிதைகளைப் படித்துவிட்டு அவர் எழுதிய சிறு விமர்சனத்தையும், என் பால்யகால நண்பன் ஈஸ்வரன் எழுதிய சிறு கடிதத்தையும் இங்கு பதிவிடுகிறேன்.

 
கல்லிலே உளி கொண்டு சிலை வடிக்கும் அற்புதக் கலைஞன் போல் சொல்லிலே ஒளி கொண்டு கவி படைக்கும் கவிஞன் இவரைப் பாராட்டுகின்றேன். பல விதமான துறைகளில் முன்னேறியிருக்கும் நமது நாட்டில் ஆண்-பெண் நட்பு என்றாலே அது ஒரு கிசு கிசு. அன்பிற்காக ஏங்கும் இதயத்திற்கு நல்லதொரு நம்பிக்கை வேண்டும். மனதிற்கு தெளிவான அறிவுறை கூறும் நட்பு யாருடையதாக இருந்தால் என்ன?

நல்ல கருத்துப் பரிமாறல்கள் தோழக்கு தோழன், தோழிக்கு தோழி என்றில்லாமல் தோழனுக்கு தோழியுமாக கலந்து பேசலாம். பேசுவதெல்லாம் காதலாகிவிடாது. ‘இளமைக்குச் சாபமோஎன்று கவிதை அமைத்திருக்கும் இவருக்கு நல்லதொரு நட்பை ஆண்-பெண் பேதமில்லாமல் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறி முடிக்கிறேன்.
இங்ஙனம்,
ஆர்.ஜெயந்தி.


அன்புள்ள நண்பனுக்கு, உன்னுடைய இரண்டு கடிதமும் அழைப்பிதழும் கிடைக்கப் பெற்றேன். பதில் எழுதாமல் விட்டதற்கு மன்னிக்கவும். கவிதை எழுதுவதில் உனக்குள்ள ஆர்வம் எனக்கு பொறாமையாகவும், பெருமையாகவும் இருக்கிறது. உனக்கு வீட்டிலும் சரி, அக்கம் பக்கத்திலும் சரி எந்தவொரு ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் இல்லாமல், தன்னைத்தானே ஊக்குவித்துக்கொண்டு தான் சிறந்த கவியாக வேண்டும், எழுத்தாளனாக வேண்டும் என்ற முயற்சி உன்னைத்தவிர நம்மவர்களில் யாருக்குமே கிடையாது. I felt extremely happy, when I received your Invitation.

அம்மா உங்க வீட்டிற்கு வராத காரணம் நீ என்ன நினைத்துக் கொண்டிருந்தாயோ அது சரியாகிவிட்டது. உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். யார் என்ன சொன்னாலும் சரி, என்ன பேசினாலும் சரி எக்காரணம் கொண்டும் நம்முடைய நட்பு பிரியக் கூடாது. அது தொடர வேண்டும். Under any circumstances, whatever the cause be, I need your friendship, I want your friendship because I like your friendship.

இப்படிக்கு,
ஈஸ்வரன்.

தொடர்புடைய கவிதைகளின் இடுகைகள் -
சொல் நிலவே!

நட்புடன்,

Friday, July 6, 2012

உடல் ஓவியம் - 2

இவை எல்லாமே மனித ( நிர்வாண ) உடல்களால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள். உற்று நோக்கினால்தான் உங்களால் உணரமுடியும்.

ஆண் கம்பீரமானவானாக இருக்கலாம். பெண்ணைவிட வலிவு மிகுந்தவனாக இருக்கலாம். அவளைக்காட்டிலும் வாழ்வின் அனுபவம் பரந்துபட்டதாக இருக்கலாம். ஆனால் பெண் துணிந்துவிட்டால் அவனால் எதுவும் செய்ய இயலாது! – பாலகுமாரன்.


Thursday, July 5, 2012

எனக்குப் பிடித்த காதல் கவிதைகள்!

(எனது நூறாவது பதிவு)


விடிந்த பின்பும்
இமைக் கதவைத் திறக்க
மனம் வரவில்லை!
என்ன செய்வது?
கனவுக்குள் நீயும் நானும்!

உன் பார்வை
என்னைத்
தீண்டிய போது
உன்னை வென்றேன்!

உன் விரல்கள்
என்னைத்
தீண்டிய போது
என்னை வென்றேன்!

உன் இதயம்
என்னைத்
தேடிய போது
உலகை வென்றேன்!

கலைந்து போகிறது மேகம்
என் கனவிலும்
கலையாது உன் முகம்!
உதிர்ந்து போகின்றன
மலர்கள்
என் உள்ளத்திலிருந்து
என்றும் உதிராதவை
உன் நினைவுகள்!
தொலைந்து போனது
சோகம் – தினம்
தொடர்ந்து வருகிறது
உன் நினைவுகளின் சுகம்!


Wednesday, July 4, 2012

உலக சரித்திரத்தில் இந்தியா!  1. இந்தியா தனது பல்லாயிரமாண்டு சரித்திரத்தில் எந்த நாட்டின் மீதும் ஆக்ரமிப்பு செய்ததில்லை
  2. எண்கள் முறையை கண்டுபிடித்தவர் நம் இந்தியர்தான். ‘பூஜ்ஜியம்’ ஆர்யபட்டா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது
  3. உலகின் முதல் பல்கலைக்கழகம் கி.மு.100-ல் ‘தக்ஷசீலா’ என்ற இடத்தில் நிறுவப்பட்டது. உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் 10,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 60 விதமான பாடங்களை அதில் படித்தனர்.
  4. கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் சாதனை புரிந்தது ‘நாலந்தா’ பல்கலைக்கழகம்
  5. உலகிலேயே மிகப்பழமையான மருத்துவம் ஆயுர்வேதம்தான். 2500 வருடங்களுக்கு முன்னரே ஆயுர்வேதத்தின் தந்தையாக விளங்கியவர் ‘சரகர்’ என்பவர்.
  6. Smart என்ற வானியல் அறிஞருக்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே பாஸுகராச்சார்யா என்பவர் சூரியனைச் சுற்றிவர பூமி எடுத்துக்கொள்ளும் நேரத்தை துல்லியமாகக் கணித்துள்ளார். இதை அவர் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு கண்டுபிடித்தார். (365.258756484 நாட்கள்)
  7. ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு உலகின் பல நாடுகளில் ஆதிவாசிகள் வாழ்ந்து வந்தபோது இந்தியாவில்தான் சிந்துச் சமவெளி நாகரிகம் செழித்தோங்கியிருந்தது.  
முதல்.............
முதல் பெண் ஆளுநர்             ; சரோஜினி நாயுடு
முதல் பெண் முதல்வர்           ; சுசேதா கிருபாளனி
முதல் பெண் மருத்துவர்          ; முத்துலட்சுமி ரெட்டி
முதல் பெண் ஷெரீப்             ; கிளப் வாலா ஜாதவ்
முதல் பெண் தலைமைச் செயலர் ; அஞ்சலி தயானந்து
முதல் பெண் அறிவியலாளர்      ; அபலா போன்குன்னா
முதல் பெண் இசையமைப்பாளர்   ; உஷா கன்னா
முதல் பெண் இயக்குனர்          ; டி.பி.ராஜலட்சுமி
முதல் பெண் நீதிபதி              ; பத்மினி சேதுரை