Saturday, March 17, 2012

கற்புகைப்பிடித்த கணவனைத்தவிர தெய்வம் வேறில்லை என்று எண்ணி, அவனை வழிபட்டு வாழ்வதுதான் கற்பு. நாள்தோறும் வீடு பெருக்கி, பசுவின் சாணத்தைக் கரைத்து மெழுகிக் கோலமிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தும் செய்து, கணவனுக்கு உணவு சமைத்து, அவன் உண்டபின் உண்டு, அவன் உறங்கியபின் உறங்கி, அவன் எழுவதற்குமுன் எழுந்து, அவனிட்ட கட்டளைகளை இன்முகத்தோடு நிறைவேற்றி, அவனுக்காகவே வாழ்வதுதான் கற்புடைய பெண்ணுக்கு அழகு, என்கிறது அபிதான சிந்தாமணி.
ஆதி மனிதர்கள் கூட்டமாகச் சென்று விலங்குகளை வேட்டையாடினர். வேட்டை உணவை அங்கேயே பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு கூட்டமும் ஒரு இனக்குழுவாக உருவெடுத்தது. அந்த இனக்குழுவுக்கு ரத்த உறவே அடித்தளமானது. ‘ஒவ்வொருவரும் அனைவருக்குமாக, அனைவரும் ஒவ்வொருவருக்குமாகஎன்னும் வாழ்க்கை முறையே ஒழுக்கமானது. குழுமணங்களும், பொதுமைப் பாலுறவும் நியதியாயின. பெற்றவள் பெருமைப் படுத்தப்பட்டாள். தாய் வழிச்சமுதாயம் மலர்ந்தது. இப்போதைய கற்பு குறித்த பிரக்ஞை அப்போது இல்லை.
கால ஓட்டத்தில் நாகரிக மாற்றம் நிகழ்ந்தது. வேட்டைச்சமுதாயம் வேளாண்மைச் சமுதாயமானது. கால்நடை வளர்ப்பில் ஆடவர் ஆதிக்கம் தலையெடுத்தது. ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயம் அழிந்து, தனிச்சொத்துரிமைச் சமுதாயம் அமைந்தது.
தான் உழைத்துச் சேர்த்த சொத்து, தனக்கு மட்டுமே உடன்பட்டவளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற உடைமை விருப்பம், ஆணின் உள்ளத்தில் உருவெடுத்தபோதுதான் கற்பு என்ற கருத்தொற்றத்துக்கு கால் முளைத்தது. பெண்ணை அடிமைப்படுத்திய நிலவுடைமைச் சமுதாயத்தின் சிந்தனையில் விளைந்ததுதான் கற்பெனும் சித்தாந்தம்.
தனிச் சொத்துரிமை வேரூன்றிய சமுதாயத்தில் தலைவன், தலைவி, மகன், மகள் என்று சேர்ந்து வாழும் குடும்பம் பிறந்தது. திருமணம் என்ற வாழ்க்கை ஒப்பந்தம் தனி மனித வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றது. ஒருத்தி ஒருவனோடு மட்டுமே காலம் முழுவதும் உடன்பட்டு வாழ்வதே பெண் கற்பு என்று வரையறுக்கப்பட்டதே தவிர, ஒருவன் ஒருத்தியோடு மட்டும் உயிராகக் கலந்து இறுதி வரை வாழ்வதே ஆண் கற்பு என்று எந்த வரையறையும் தொன்று தொட்டு இன்றுவரை கடைபிடிக்கப்படவில்லை!

ஓர் ஆடவன் பல பெண்களுடன் வாழ்ந்ததைப் போன்றே, ஒரு பெண் பல ஆண்களுடன் சேர்ந்து வாழ்ந்ததை மாகாபாரதம் சொல்கிறது. துருபதனிடம் தர்மன், ‘உடன்பிறந்த நாங்கள் ஐவரும் உங்கள் மகள் திரௌபதியை மணந்து வாழ விரும்புகிறோம்’, என்று தெரிவித்ததும், அதிர்ச்சியுற்ற துருபதன், ‘ஒரு பெண் பல ஆண்களை மணந்து வாழ்ந்ததை இதுவரை நான் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை. ஒருத்தி பலருக்கு மனைவியாவது அதர்மமான பாவ காரியம். இதை என்னால் ஏற்க முடியாதுஎன்று கோபத்துடன் மறுக்கிறான்.
நீண்ட காலத்துக்கு முன் ஜடிலை என்பவள், ஏழு ஆண்களை மணந்து வாழ்ந்தாள். வார்ஷி என்பவள் ஒரே நேரத்தில் பத்து சகோதரர்களுடன் இல்லறத்தில் ஈடுபட்டாள். அதனால் நாங்கள் ஐவரும் திரௌபதியை மணப்பது தவறாகாதுஎன்று தன் பக்க நியாயத்தை நிறுவ முயல்கிறான் தர்மன். அப்போது வியாசர் குறுக்கிட்டு, மானிட மகளிர் ஒருவரை மணப்பதே நியதி. ஆனால் திரௌபதி இலக்குமியின் அம்சம். அவள் ஐவரை மணக்க வேண்டும் என்பது சிவன் விதித்த விதி. அதனால், தர்மன் சொல்வதை ஏற்கலாம். ஆனாலும் சாதாரண மனிதர்களுக்கு இது தர்மமாகாதுஎன்கிறார். அதன்பின் பாண்டவர் திரௌபதி திருமணம் நடந்ததாக பாரதம் சொல்கிறது.
ஒருத்தி ஒருவனை மணந்து வாழ்வதே மானுட தர்மம்என்று விளக்கிய வியாசர், ஒருவன் ஒருத்தியோடு மட்டுமே வாழ வேண்டும் என்று வேதம் சொன்னதாக விதி எழுதவில்லை. பெண் கற்பு குறித்து பெருமையுடன் பேசும் தமிழர் சமுதாயமும், ஆண் கற்பைப் பற்றி அதிகம் சொல்லவில்லை. தொல்காப்பியர் காலத்திலேயே, ஒருவன் பல பெண்களுடன் தொடர்பொ கொண்டிருந்தது பற்றிய குறிப்பு காணக்கிடைக்கிறது.

சிலப்பதிகாரத்தில் தன் கணவன் குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்குக் கையில் சிலம்புடன் கண்ணில் நீர் வழிய, அரசவைக்குள் நுழைந்து, பாண்டியனிடம் தன் வரலாற்றை விளக்கும் கண்ணகி, ஏழு கற்புடை மகளிரைப் பற்றி குறிப்பிடுகிறாள். கணவன் பிரிந்து சென்றதும், தன் முக அழகில் மாற்றான் ஈடுபாடு கொள்ளக் கூடாது என்பதற்காக தன் முகத்தை குரங்கு முகமாக மாற்றிக்கொண்டவளையும், கணவன் வரும் நாள்வரை கல்லுருவில் காத்துக் கிடந்தவளைப் பற்றியும் பெருமிதமாகப் பேசுகிறாள் கண்ணகி.
ஆனால், மனைவியின் பிரிவில், அவளையே நினைந்து உருகி, அவளுக்காகவே கரைந்துபோன கற்பார்ந்த ஆண்கள் பட்டியலை இளங்கோ அடிகளால் வெளிப்படுத்த முடியவில்லை.
கற்புள்ள பெண் என்பதற்கு அடையாளம், அவளைப் பார்க்கும் எந்த ஆணின் நெஞ்சிலும் தவறான எண்ணம் தோன்றாமலிருப்பதுதான்என்கிறது மணிமகலை. மருதி என்ற பார்ப்பனப் பெண் நீராடிய நிலையில், இளவரசன் சுகந்தன் அவளைக் காமத்துடன் நோக்குகிறான். ‘மண்ணுக்கு மழைவளம் தரும் பெண்ணாக இருந்தால், அவள் பிறர் நெஞ்சு புகமாட்டாள். ஒரு ஆணின் இதயத்தில் காமம் கிளர்ந்து எழுவதற்கு நான் காரணம் ஆனதால், என் கற்பு களங்கம் உடையது’ என்று மருதி மனம் கலங்குவதாக மணிமேகலை கூறுகிறது. பெண்ணுக்கு கற்பின் பெயரால் இழைக்கப்பட்ட பெருங்கொடுமை அல்லவா இது!


பல பரத்தையருடன் ஓர் ஆண்மகன் உறவு கொண்டதை எதிர்த்து இலக்கியம் படைத்த முதல் மனிதர் வள்ளுவர். ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பைப் பொதுவாக்கிப்பார்த்த முதல் புரட்சியாளர் அவர். அன்றைய ஆணாதிக்க சமூகத்தின் செல்வாக்கில், கணவனை மட்டுமே கடுவுளாக வணங்கிய ‘தெய்வக்கற்பு’ பற்றி அவர் பேசினாலும், அடுத்தவர் மனைவியை நாடும் மனிதர்களை நல்வழிப்படுத்த ‘பிறனில் விழையாமை’யும், பரத்தையர் தொடர்பைக் கட்டறுக்க ‘வரைவின் மகளிரை’யும் அழுத்தமாக எடுத்துரைத்தார்.
ஆணின் கற்பை அறத்துடன் நெறிப்படுத்த அவர்தான் முதலில் முயன்றார், அவருடைய வழியில் பின்பு வந்து சேர்ந்தான் கம்பன். மருத நிலத்தையும், மக்கள் வாழ்க்கை முறையையும் 14 பாடல்களில் விரிவாக விளக்கும் கம்பன், மறந்தும் மருதத் தினைக்குரிய பரத்தையர் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை.
ஆணுக்கும் பெண்ணுக்கும் புலனடக்கம் போதிப்பதற்காகவே ராமாயணத்தைத் தமிழில் தந்தவன் அவன். அறுபதாயிரம் மனைவியரோடு வாழ்ந்த தசரதனுக்கு மகனாகப் பிறந்த ராமன், ஒருத்திக்கு ஒருவனாக வாழ்ந்த சிறப்பைச் சொல்ல எழுத்தாணியைக் கையில் எடுத்தான் கம்பன். அசோக வனத்தில் ஆற்றமுடயாத சோகத்தைச் சுமந்தபடி… அமர்ந்திருந்த சீதையின் நெஞ்சில் நினைவலைகள் மோதுகின்றன. ராமனின் நற்பண்புகளை மனதில் அசை போடுகிறாள். கைப்பிடித்த மணநாளில், ‘இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்’ என்று அவன் அளித்த செவ்வரத்தை அவள் சிந்தித்து சிலிர்க்கிறாள். ஒருவனும் ஒருத்தியுமாக வாழும் வாழ்க்கையை வலியுறுத்தவே கம்பன் காப்பியம் படைத்தான். ஆண் கற்பைக அழுத்தமாகப் பேசியவன் அவன்.
‘கற்பு நிலை என்று சொல்ல வந்தால், இருபாலருக்கும் அதை பொதுவில் வைப்போம்’ என்ற பாரதி, பெண்ணுக்கு கற்பு விலங்கு பூட்டி, ஆண் மக்கள் பிற மாதருடன் நெஞ்சழிந்து நிற்பதை காணச் சகியாமல், கடுமையான விமர்சனம் செய்தான்.
ஆணாதிக்கம் சுயநலமாக பெண்ணுக்குக் கற்பெனும் விலங்கு பூட்டி அடிமைப்படுத்தியது. அந்த விலங்கை உடைந்நெரியும் வேகத்தில், ஒழுக்கச்சிதைவுக்கு வாசற்கதவைத் திறந்து வைக்க பெண்ணியம் பேசுவோர் முனைதல் தகாது. ‘ பெண்கள் திருமணமாகும்போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கக் கூடாது’ என்பது பெண்ணியத்தின் போர்க்குரல் அன்று. அது பண்பாட்டுப் பேரழிவின் பிரகடனம். வரம்பற்ற காமத்துக்கு வரவேற்புவிழா நடத்தும் திட்டம். இந்த மலினமான சீரழிவுச் சதிவலையில் இளைஞர் கூட்டம் சரிந்து விழலாகாது.

பெண்ணுரிமைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெருமகன் பெரியார் கூட, தாம் எழுதிய புரட்சிகரமான ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலில், மணமாவதற்கு முன்பே பெண் கன்னித்தன்மையை இழக்கலாம் என்று பரிந்துரைக்கவில்லை.
திருத்தப்படாத நிலம் களை மண்டிக்கிடக்கும். தடுக்கப்படாத வெள்ளம் தாளாத துன்பம் தரும். இரண்டு கரைகளுக்குள் அடங்கி நடக்கும் ஆறுதான் நாட்டுக்கு நன்மை பயக்கும். இறுக்கமாக கட்டப்பட்ட வீணையின் நரம்புகளிலிருந்துதான் இனிமையான இசை பிறக்கும். சுயக்கட்டுப்பாடுதான் நாகரிகத்தின் நல் அடையாளம். புலனடக்கம் கொண்ட ஆணும் பெண்ணும் உருவாக்கும் குடும்பத்தில்தான் இன்பமும் அமைதியும் இறுதிவரை நிலைக்கும். கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்வதற்குப் பெயர்தான் கற்பு.
கற்பு பெண்ணுக்கு மட்டும் என்பது, ஆணாதிக்கம் பூட்டிய அடிமை விலங்கு. அதையே ஆணுக்கும் சேர்த்து வரையறுத்து, ஒழுக்கப் பயிர் காக்கும் வேலியாக்குவோம்!
- தமிழருவி மணியன்


கற்பு பற்றிய சுவாரஸ்யமான இடுகை 'வினவு' தளத்தில்... மற்றும்'புதிய பெண்ணியம்' தளத்திலும்.