முதல்வர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல்வர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மக்கள் திலகத்தை முதன்முதலாக பார்த்தபோது… டாக்டர் ம.பொ.சிவஞானம்.


நினைவிலுள்ளதை வைத்துச் சொல்கிறேன். 1956 ஜூன் 26 சென்னை சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் எனது ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவிலே நான் முதன் முதலாக புரட்சி நடிகரைச் சந்தித்தது நினைவில் இருக்கிறது.
அதற்கு முன்னே சந்தித்து இருக்கலாம். அது சரியாக நினைவில் இல்லை. அந்த ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவை பொன்விழாவாக தமிழரசு கழகத்தினர் நடத்தினர். கோலாகலமாக நடந்த அந்த விழாவிலே மக்கள் திலகம் அவர்கள் வந்து கலந்துகொண்டு எனக்கு வாழ்த்துக் கூறினார்கள். அந்த வாழ்த்திலே எனக்கு ஒரு பட்டத்தையும் எனக்குத் தந்தார். ம.பொ.சி. என்ற மூன்றெழுத்துக்கு வியாக்யானம் கூறினார்.

‘தமிழை மழை போல் பொழியும் சிவஞானம்’ என்று அவர் கூறிய போது அந்த மண்டபத்தில் இருந்த மக்கள் அவ்வளவு பேருடைய கரங்களும் ஒலித்து மண்டபத்தையே அதிரச் செய்தது இன்றும் என் கண் முன்னே காண முடிகிறது. காதுகளால் கேட்க முடிகிறது.

அவர் அப்படிச் சொன்ன பின்பு எல்லோரும் அப்படிச் சொல்வது வழக்கமா கிவிட்டது. பட்டம், பின்னே எனக்குப் பல கிடைத்திருந்தாலும், நம்முடைய முதல்வர் அவர்கள் அந்த நாளிலே தந்த மழை போல் பொழியும் சிவஞானம் என்பது எனக்கு ஒரு தனி சிறப்பைத் தந்தது என்பதில் ஐயமில்லை.

எனது பிறந்த நாள் விழாவிலே என் மனதைக் கவர்ந்த பல நிகழ்ச்சிகள் பல நடந்தன. அவற்றுள் ஒன்று, எனக்கு 33 ஆயிரம் ரூபாய் பண முடிப்பு தந்ததாகும். மற்றொன்று பல பேரறிஞர்கள் வாழ்த்துக் கூறியது.

இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் என்னுடைய பெயருக்குரிய தலையெழுத்துக்களுக்கு வியாக்யானம் கூறி நம்முடைய மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு இன்னும் என் மனதிலே பதிந்திருக்கிறது. 

அதன்பின் நாங்கள் அவருடைய ஸ்டுடியோவிலும் வேறு பல பொது நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி சந்தித்திருக்கிறோம். அவர் முதல்வராவதற்கு முன்பு நாங்கள் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரே இயக்கத்தைச் சார்ந்தவர்கள் போல ஒரே குடும்பத்தவர்கள் போலவே பழகிப் பேசி வந்திருக்கிறோம்.

நான் திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்த காலத்திலே கூட எங்கள் இருவரிடையே பகைமை தோன்றியதே கிடையாது. காரணம் கட்சி வெறிக்கு அப்பாற்பட்டவராக அவர் இருந்ததுதான்.
அதற்குப் பிறகு அவர் தனியாக ஒரு கட்சியைத் துவக்கிய போது, நான் அந்தக் கட்சிக்கு மாறுபட்டு பிரசாரம் செய்து வந்தேன். மிகக் கடுமையாகக் கூடச் செய்தேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அப்போது அவரை பத்திரிகை நிருபர்கள் சந்தித்து, ‘ம.பொ.சி. தங்கள் கட்சியைத் தாக்குகிறாரே’ என்று கேட்டபோது, ‘அவர் என் மதிப்பிற்குரிய தலைவர், அவரைப் பற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை’ என்ற அவர் சொன்னது அவருடைய பண்பாட்டைக் காட்டியது என்பதை நான் நன்றாக உணருகிறேன்.

இன்னொரு நிகழ்ச்சியும் எனக்கு அவர் ஒரு மாபெரும் கலைஞர் என்பதை மனதில் பதியச் செய்தது. நடிகர் எம்.ஆர்.ராதா அவர்கள் எம்.ஜி.ஆரைச் சுட்ட அந்த நேரத்திலே, ‘அண்ணே என்ன காரியம் செய்துவிட்டீர்கள்’ என்று கேட்டதாகப் பத்திரிகைகளிலே படித்தேன்.

அது எனக்கு மகிழ்ச்சியையும், மற்றொரு புறத்தில் வியப்பையும் தந்தது. பெரிய புராணத்திலே தன்னைத் தாக்கிய வஞ்சகனைப் பற்றி தன்னுடைய சீடனிடம் கூறிய போது, ‘தத்தா இவர் நமர்’ என்றாராம் 63 நாயன்மார்களில் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார்.

அதுபோல எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னைச் சுட்டுக்கொல்ல முயன்றவரையும் ‘அண்ணே’ என்று அழைத்த பண்பாடு என்னைக் கவர்ந்தது.
- அப்போதைய மேலவைத் தலைவர் டாக்டர் ம.பொ.சிவஞானம்.

வெள்ளி, 28 ஜூன், 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது.....நெல்லை முத்தையா



பாவேந்தர் நூல்களை வெளியிடுவதற்காக 1944 ல் முல்லைப் பதிப்பகம் தொடங்கப் பெற்றது. சென்னைக்கு வரும்போது அறிஞர் அண்ணா அவர்கள் பதிப்பகத்துக்கு வருவது வழக்கம். பாவேந்தர் அவர்களும் அடிக்கடி வருவார்கள்.

பாவேந்தரும், அறிஞர் அண்ணாவும் ஒரு முறை கூட பதிப்பகத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை. 

பாவேந்தரைக் காண இலக்கிய நண்பர்களும் ரசிகர்களும் வருவார்கள்.

அண்ணா அவர்களைக் காண அரசியல் நண்பர்களும், கட்சித் தோழர்களும் அதிகமாக வருவார்கள்.

எஸ்.வி. லிங்கம், நடிகமணி டி.வி. நாராயணசாமி, அரங்கண்ணல், ஆர்.எம்.வீ., பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், டி.எம். பார்த்தசாரதி, சொல்லின் செல்வர் சம்பத், திருமதி சத்தியவாணிமுத்து, முன்னாள் மேயர் முனுசாமி முதலானோர் அண்ணா அவர்களைக் காண பதிப்பகத்துக்கு வருவார்கள்.

முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி, என் உள்ளத்தில் பசுமையாகத் திகழ்கிறது.

1945-ல் ஒரு நாள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பதிப்பகத்துக்கு வந்தார்கள். பார்த்ததும் நான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன் நான் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை.

சிவந்த மேனி, சுருண்ட முடி, வெள்ளைக் கதர் ஜிப்பா, கை சுருட்டி விடப்பட்டிருந்தது. கவர்ச்சி மிகுந்த தோற்றம்.

நான் வணக்கம் தெரிவித்தேன். 

பதில் வணக்கம் கூறி, புன்முறுவலுடன், ‘அண்ணா வந்திருக்கிறார்களா?’ என்று கேட்டார்.



‘வருவார்கள். உட்காருங்கள்.’ என்று கூறி உபசரித்தேன். 

சிறிது நேரம் இருந்துவிட்டு, எழுந்து புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பீரோவைப் பார்த்து, ‘அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, காதல் நினைவுகள்’ ஆகிய நூல்களை எடுத்து, ‘இதற்கு பில் போடுங்கள்’ என்று கூறி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் எடுத்து என்னிடம் நீட்டினார் புரட்சி நடிகர்.

(அப்போது நூறு ரூபாய் நோட்டைக் காண்பதே அரிது.) நான் பிரமித்து விட்டேன். 

‘ரூபாய் வேண்டாம் புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.

‘இது வியாபாரம். மூலதனம் போட்டு அச்சிட்டிருக்கிறீர்கள். வருகின்றவர்களுக் கெல்லாம் பணம் வாங்காமல் புத்தகங்களைக் கொடுத்தால் தொழில் என்ன ஆகும்?’ என்று கூறி நோட்டை நீட்டியவாறு இருந்தார்.

அவர் கூறிய சொற்களும், நடந்து கொண்ட பெருந்தன்மையும் என் உள்ளத்தை நெகிழச் செய்துவிட்டது. அதன் பின் என்னால் மறுக்க இயலவில்லை. பணத்தை அந்தச் சிவந்த கரங்களிலிருந்து பெற்றுக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் அண்ணா அவர்கள் வந்து விட்டார்கள். புரட்சி நடிகரும் அண்ணாவும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்கள்.

அப்போது அவர் புன்னகை தவழ எனக்கு வணக்கம் தெரிவித்து விட்டுப் புறப்பட்ட காட்சியும், அவரது பெருந்தகைமையையும் என் உள்ளத்தில் பசுமையாய் பதிந்து விட்டது.

இப்பொழும் அதை நினைத்துப் பார்க்கிறேன். ‘ இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறி (பணம் கொடுக்காமல்) எடுத்துச் சென்றவர்களைப் பார்த்திருக்கிறேன். சொல்லாமலேயே எடுத்துக் கொண்டவர்களையும் கண்டிருக்கிறேன்.

ஆனால் வற்புறுத்தி பணத்தைக் கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட புரட்சி நடிகரை நினைக்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது.
                -  நூல் பதிப்பாசிரியர் திரு. முல்லை முத்தையா. (1982-ல்)


செவ்வாய், 18 அக்டோபர், 2011

கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் முதல்வர்



‘சாத்தான் வேதம் ஒதுகிறது’ என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அந்த வார்த்தைகளை முதல்வர் நிஜத்தில் நிரூபித்திருக்கிறார். வழக்குகளை சந்திக்க பயந்து ஓடுகிறார்கள் என்று தி.மு.க.வினரைப்பார்த்து எள்ளி நகையாடும் முதல்வர் தனது வழக்குக்காக இதுவரை எத்தனை முறை வாய்தா வாங்கியிருக்கிறார்? எத்தனை சாக்கு சொல்லியிருக்கிறார்? எப்படியெல்லாம் தப்பித்து வருகிறார் என்பதைப் பார்த்து வியப்புதான் மேலிடுகிறது. எப்படியும் கின்னஸ் சாதனை பெற்றே தீருவது என்று முடிவு செய்துவிட்டார் போலும்.

மக்கள் ஏமாளிகள் என்று மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. மறதி மிக்கவர்கள் மக்கள் என்பதை எல்லா அரசியல் கட்சிகளுமே புரிந்து வைத்திருக்கின்றன. முதலில் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுப்பார்த்தார். நடக்கவில்லை. நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப்பின் முதல்வரின் விருப்பத்துக்கே தேதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியும், பின் தேதியை முதல்வர் தரப்பு அறிவித்ததும், இப்போது பாதுகாப்பு இல்லை என்ற சப்பைக் காரணங்களைக் கூறி நழுவப் பார்ப்பதும் முதல்வருக்கு அழகா என்ன? நீதி மன்றத்துக்கு கட்டுப்படாத இவர் எப்படி தி.மு.க.வினரை விமர்சிக்கிறார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. தன் முதுகில் அழுக்கை வைத்துக்கொண்டு எப்படி இவர் ஊழல் பற்றி வாய் கிழியப் பேசுகிறார்?

இன்றைய தினமலரின் செய்தியைப் பாருங்கள்................

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பாதுகாப்பு தொடர்பான பிரச்னை முடியும் வரை தான் ஆஜராக வேண்டிய தேதியை ஒத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான உத்தரவு நாளை ( புதன்கிழமை ) பிறப்பிக்கப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அனைத்து சாட்சிகளையும் விசாரித்து முடித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வலியுறுத்தினார். இதையடுத்து, ஜெயலலிதா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், ஜெயலலிதா தரப்பில், வீடியோ கான்பரன்ஸ் அல்லது ஸ்டேட்மென்ட் மூலம் பதிலளிப்பதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை கோர்ட் நிராகரித்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் சென்ற ஜெயலலிதாவுக்கு, அக்., 20ம் தேதி கண்டிப்பாக பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும். "இசட்' பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனை தொடர்ந்து பெங்களூரூ கோர்ட்டில் நடந்த விசாரணைகளில், ஜெயலலிதா பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெ., வழக்கறிஞர் கந்தசாமி, கர்நாடகா போலீஸ் டி.சி.பி., ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரப்பன அக்ரஹார சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் அனைத்து வசதிகளும் உள்ளன என நீதிபதி உத்தரவிட்டார். 

இதற்கிடையில் இன்று ஜெ,, தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் தமது பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் முழு அறிக்கை வந்ததும் நான் ஆஜராகிறேன். பாதுகாப்பு தொடர்பான விஷயம் குறித்து தமிழக அரசுக்கு இதுவரை எந்தவொரு விவரமும் வந்து சேரவில்லை. இதுவரை இந்த விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கோரியுள்ளார். கர்நாடக அரசின் வக்கீலிடம் விளக்கம் கேட்டு இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கிறோம் என நீதிபதிகள் கூறி விட்டனர். நாளை இந்த மனுமீதான உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜெ., வரும் 20 ம் தேதி (நாளை மறுநாள் ) ஆஜராவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோர்ட்டில் கோரிய போது இது வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.