Friday, October 4, 2013

“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”

ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம்.ஜி.ஆர். மனதை மிகவும் நோகச் செய்துள்ளன. எம்.ஜி.ஆரே பலமுறை தோட்டத்துக்கு வரச் சொல்லியும் ஜெயலலிதா சரியாக ரெஸ்பான்ஸ்செய்யவில்லை. ஒரே ஒருமுறை தோட்டத்துக்குப் போனபோது எம்.ஜி.ஆரோடு தகராறு செய்து மேலும் அவர் கோபத்தை அதிகப் படுத்தினார்.

தவிர, எம்.ஜி.ஆர். தலைமைக் கழகத்திற்கு வரும்போது ஜெயலலிதா வேண்டுமென்றே அங்கு வராமல் தவிர்த்தார். கட்சிக்காரர்கள் முன்னிலையில் தன்னை ஜெயலலிதா அவமதிப்பதாகத் தோன்றியது எம்.ஜி.ஆருக்கு. எனவே ஜெயலலிதாவுக்கு ஒரு அதிர்ச்சி தந்தால்தான் சரிப்பட்டு வருவார் என்று தீர்மானித்தார் எம்.ஜி.ஆர்.

இது போல ஒரு ஷாக்கை ஆர்.எம்.வீ. முன்பு வாலாட்டியபோது தந்தார் எம்.ஜி.ஆர். அவர் மந்திரி பதவி பறிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் இதர அமைச்சர்களிடமும் ஆர்.எம்.வீ. செய்யும் எந்த சிபாரிசுகளையும் ஏற்கக் கூடாது, அதோடு கட்சிக் கூட்டங்களில் அவரைச் சேர்க்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார். இதனால் பதிவி இழந்த ஆர்.எம்.வீ. அரசியல் ரீதியாகவும் செயல்பட முடியாமல் முடக்கப்பட்டார்.

இப்போது அதைவிட பெரிய நெருக்கடியை ஜெயலலிதாவுக்கு ஏற்படுத்தியுள்ளார் எம்.ஜி.ஆர். சட்டமன்றக் கூட்டம் முடிய ஒருநாள் இருக்கையில் எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் இருந்த அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களையும் ராமாவரம் தோட்டத்திற்கு வரும்படி எம்.ஜி.ஆரின் பி.ஏக்கள் தொலைபேசியில் அழைத்தார்கள். உடனே அங்கிருந்த எம்.எல்.ஏக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள்.

அவர்கள் தோட்டத்தை அடைந்தவுடன் வந்திருந்தவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்டர்காம் மூலமாக எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு எம்.ஜி.ஆரின் அந்தரங்க உதவியாளர்கள் வந்திருந்த எம்.எல்.ஏக்களிடம் ஜெயலலிதாவுக்கு எந்த விதமான முக்கியத்துவமும் அவர்கள் அளிக்கக் கூடாது என்றும், அல்லது அவரோடு தொடர்பு கொள்வதோ, தொலைபேசியில் பேசுவதோ கூடாது என்றும் அதுபோல அவரது படத்தை கட்சியின் வால்போஸ்டர்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டுள்ளதாக் கூறினார்கள். இது மட்டுமல்லாமல் தலைமைக் கழகத்துக்கு அவர் வந்திருந்தாலும், அவரிடம் மனுக்களோ, இதர தகவல்களோ தரக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டது.

உடனே அங்கு வந்திருந்த எம்.எல்.ஏக்கள் அப்படியே நடக்கிறோம் என்று உறுதி அளித்தார்கள். அன்று கூட்டத்திற்கு வரமுடியாத எம்.எல்.ஏக்கள் மறுநாள் காலை தோட்டத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

ஆர்.எம்.வீரப்பனுக்காவது மந்திரிகள் மட்டத்தில்தான் இத்தகைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனல் ஜெயலலிதாவுக்கு எம்.எல்.ஏக்களின் மட்டத்திலேயே இத்தகைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவை கட்சியிலிருந்தே தூக்கி எறிய எம்.ஜி.ஆர். தீர்மானித்துவிட்டார் என்று தெரிகிறது.

ஆனால் எப்போதும் போல அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்குப்போய் வருகிறார் ஜெயலலிதா, அங்கு கட்சித் தொண்டர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அதுவும் எத்தனை நாளைக்கு நிலைக்கப் போகிறது என்று தெரியவில்லை. அநேகமாக கட்சித் தொண்டர்களோடு அவருக்கு இருக்கும் உறவையும் எம்.ஜி.ஆர். அறுத்து விடுவார் என்றே தோன்றுகிறது.

அதற்குப் பிறகு வேறு வழியே இல்லை. ஜெயலலிதா கட்சியை விட்டு தானே வெளியேறியாக வேண்டும். இதை வைத்துப் பார்த்தால், ஆர்.எம்.வீக்குத் தந்தது போல ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தராமல் ஒரே நெத்தியடியாக கட்சியிலிருந்தே ஓடச்செய்ய திட்டமிடுகிறார் என்றே தோன்றுகிறது.

(17.07.1987 தராசு இதழில் வெளிவந்த செய்தி இது! யாரை வெளியேற்ற நினைத்தார்களோ அவர் இன்று விசுவரூபமாய் வளர்ந்து நிற்கிறார். அவரை வளரவிடாமல் தடுத்தவர்களோ அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள். இதுதான் காலத்தின் கோலம் என்பதோ?!)

9 comments:

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

ஆர் எம் வி எதிர்ப்பு அரசியலில் இருந்த போது அவரின் மதிப்பு வளர்ந்தது. அவரே திமுக உடன் சேர்ந்த போது கலைஞரை ஆதரிக்கத் தொடங்கிய போது அரசியல் அனாதையாக மாறி விட்டார்.

சிம்புள் said... [Reply]

எம்.ஜி.ஆர் மட்டும் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் அம்மா எல்லாம் சும்மா!

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

ஆம் ஜோதிஜி! ரஜினியின் பாட்சா படத்தின் மூலம் கொஞ்சம் வெளியே தெரிந்தார். அப்புறம் தன் விசுவாசி ஜெகத்ரட்சகனுக்காக எம்.பி.பதவியையும், மந்திரி பதவியையும் வாங்கிக் கொடுத்துவிட்டு அரசியலிலிருந்தே ஒதுங்கிக் கொண்டார். தி.மு.க.வில் சேர்ந்த அத்தனை அ.தி.மு.க தலைகளும் காணாமல் போய்விட்டன என்பதே உண்மை!

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

சிம்புள்! எம்.ஜி.ஆர். கடைசி காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவருக்குத் தெரியாமலேயே எல்லா அரசியல் காய்களும் நகர்த்தப்பட்டன. ஜானகி, ஜெயா என எல்லோருமே விளையாடினார்கள். ஜெயாவின் கைகளில் கட்சி போகும் என்று எம்.ஜி.ஆர். கனவிலும் நினைத்திருக்கமாட்டார். அப்படி ஒரு சூழ்நிலை வந்திருந்தால் கட்சியை கலைத்திருப்பார். சினிமாவும் இல்லாமல், ஆதரிப்போர் யாரும் இல்லாமல் இருந்த 'ஜெ' வுக்கு கட்சியில் அடைக்கலம் கொடுத்ததால்தான் அவர் இத்தனை தூரம் வளரக் காரணம். அதுவுமில்லாமல் எம்.ஜி.ஆரை எதிர்த்துக்கொண்டு அவரை வளர்த்து விட்டவர்களும் காரணம். ஆனால் வளந்த்து விட்டவர்கள் ஒருவர் கூட இன்று அவர் அருகில் இல்லை என்பதுதான் வேடிக்கையான விஷயம்!

Anonymous said... [Reply]

//தி.மு.க.வில் சேர்ந்த அத்தனை அ.தி.மு.க தலைகளும் காணாமல் போய்விட்டன என்பதே உண்மை! //

இப்படிப் பாருங்கள். திமுக எனும் உள்ளூர் திமிங்கலங்கள் நிறைந்த கடலில் எதிர்நீச்சலிட்டு வென்றவர்களும் இருக்கிறார்கள். சாத்தூர் ராமச்சந்திரன், எ.வ. வேலு, ஜெகத்ரட்சகன், கருப்பசாமி பாண்டியன் போன்றோர். போட்டியை சமாளிக்க முடியாதோர் பின்தங்கி மங்கிவிடுகிறார்கள். என்ன போட்டியா? முதல் குடும்பத்தின் உள்வட்டத்தின் நம்பிக்கையைப் பெறுவதுதான்.

Anonymous said... [Reply]

//ஆனால் வளந்த்து விட்டவர்கள் ஒருவர் கூட இன்று அவர் அருகில் இல்லை என்பதுதான் வேடிக்கையான விஷயம்! //

KKSSR, திருநாவுக்கரசு, SD.சோமசுந்தரம், அரங்கநாயகம், நாவலர், பன்ருட்டி ராமச்சந்திரன், நால்வர் அணி என ஆதரித்தோர் யாவரும் உதிர்ந்த ரோமம் ஆயினர். 87ல் 27 எம்மெல்லேக்களை அகில இந்தியா டூர் கூட்டிச் சென்றவரெல்லாம் இன்று சென்ற இடம் தெரியவில்லை.

gg samy said... [Reply]

சொல்வதர்க்கு என்ன இருக்கு ? அண்ணா,நாவலர்,அன்பழகன் மற்றும் பலரில் ஒருவராக போஸ்டர்களில் வந்த கருணாநிதி, தி.மு.க வை கபளீகரம் செய்யும் போது, ஜெ..அ.தி.மு.க வை தாங்க வேண்டும் என்பது விதி

Anonymous said... [Reply]

திருநாவுக்கரசர் அகில இந்திய காங்கிரஸின் செயலர் ஆஹ இருக்க்கிறார். போனமுறை ஜெயலலிதா முதலவராக காவேரி பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடத்த டெல்லி சென்றபோது, வாஜ்பாயீயுடன் அமர்ந்து இருந்த அன்றைய மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரிடமும் ஜெயலலிதா பேச வேண்டியது ஆயிற்று. எனவே, புரட்சித்தலைவருடன் இருந்தவர்களில் இன்றும் திருநாவுக்கரசர் மட்டுமே மதிக்க தகுந்த பதவியிலும், தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார்.

Zonia Islam said... [Reply]

To Find All Types Of Images,Wallpapers,Photos and much more... in Wide Screen.
Just Visit 2 My Blog

http://imagezhouse.blogspot.com/

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

Online Captcha Work Free Registration
Now Register yourself for free with Perfect Money Account Number
And Start your work And Get Your Payment in your own account.
Download Software For Free...
Use Our Software By Using Our Invitation Code
Just Visit...

http://captcha4onlinework.blogspot.com/

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

Funny Poon | Largest Collection of Latest Funny Pictures, Funny Images, Funny Photos, Funny Jokes

And Cartoon Plus Bizarre Pics Around The World.
Just Visit 2 My Blog

http://funnypoon.blogspot.com/

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

~*~ Free Online Work At Home ~*~
Here's Everything You Need to Know About Online Working At Home, Including Where to Find Work At Home Job Listings,
The Best Sites For Finding Work At Home Jobs And How to Avoid Work From Home Scams.
Visit...
http://SooperOnlineJobs.blogspot.com/ .

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!