இருக்கலாம்
இன்றைக்கு
உனக்கு என்னை
எந்த ஞாபகமுமில்லாமல்
இருக்கலாம்
சௌந்தர்ய வண்ணங்கள்
உனக்கு விரித்திருக்கும்
ஷாமியானாப் பந்தலின்
சரிகைச் சிலுப்பில்
நீ சயனித்திருக்கும்போது
அதோ..
அந்தச் சூடுதகிக்கும்
பாலைவன மணற்பரப்பில்
தனித்த கனவுகளோடு
தொடுவானுக்கருகில்
நிற்கும் என்னை
உனக்கு இன்று
எந்த ஞாபகமுமில்லாமல்
இருக்கலாம்.
என்றேனும் ஒரு
இலையுதிர் காலத்தில்
வெறுமையில்
புழுங்கிப்போன உன் இதயம்
தொன்றலைத்தேடி
தவிக்கும் போது
நமது பழைய நந்தவனத்தின்
அசோக மரக்கிளையில்
அமர்ந்தபடி
ஜீவன் கரைந்து கூவுகிற
ஒரு ஒற்றைக் குயிலின்
உயிர் பிரியும் பாடல் வந்து
என்னை யாரென்று
உனக்கு ஞாபகப்படுத்தாமலா
போகும்!?



