ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 நவம்பர், 2014

அன்புள்ள சகோதரி… ஜெயலலிதாவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

பெறுநர்;
செல்வி ஜெயலலிதா,
முன்னாள் எம்.எல்.ஏ.,
சென்னை.

அன்புள்ள சகோதரி…
வணக்கம். முன்னாள் எம்.எல்.ஏ., என்று உங்களைக் குறிப்பிட்டதைக் கண்டு ஒரு வேளை நீங்கள் முகம் சுளிக்கக்கூடும். ஆனால் அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல, உங்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்ற ஆசையினாலேயே அப்படிக் குறிப்பிட்டிருக்கிறேன். அதுதானே உங்கள் பாணி?! கலைஞருக்கு அனுப்பிய உலகத்தமிழ் மாநாட்டு அழைப்பிதழில் அப்படித்தானே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்?! 
 

தேர்தல் முடிவுகளைக் கண்டு மிரண்டு போய் ஒட்டு மொத்தமாக அத்தனை தலைவர்களும் உங்கள் பாணியைக் கைவிட்டு ஓடுகிற நேரத்தில் உங்கள் பாணியைப் பின்பற்ற ஒருவன் இருக்கிறான் என்பது உங்களுக்கு ஆறுதலாகத்தானே இருக்கும்?

ஆனால் தேர்தல் தோல்விகளைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. அண்ணா, காமராஜர், இந்திரா போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம் தேர்தலில் தோற்றுப் போயிருக்கிறார்கள். அப்படித் தோற்றுப் போனவர்கள் மீண்டும் வெற்றியின் பாதையில் வீறுநடை போட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் மக்கள் மனங்களை ஏற்கனவே வென்றிருந்தார்கள் என்பதுதான். ஆனால் நீங்கள்?

ராஜிவ் காந்தியின் மரணம் ஒரு மிகப் பெரிய வெற்றியை உங்களுக்குப் பரிசாகத் தந்தது. நீங்கள் அதற்கு நன்றி செலுத்துவதற்கு ஆயிரம் வாய்ப்புகள் வந்தன. ஒரு பல்கலைக் கழகத்துக்கு அல்லது ஒரு மாவட்டத்திற்கு அல்லது ஒரு அரசாங்க கட்டிடத்திற்கு அவ்வளவு ஏன், குறைந்த பட்சம் ஒரு தெருவிற்கு அவரது பெயரைச் சூட்டியிருக்கலாம். ஆனால் கனவுகளோடு மரித்துப் போன அந்த இளைஞனின் கல்லறைக்குப் பூ வைப்பதற்குக் கூட நீங்கள் போகவில்லை.

நீங்கள் எம்.ஜி.ஆரின் வாரிசு என்றெண்ணியே மக்கள் வாக்களித்தார்கள். நீங்கள் ராஜிவ் காந்தியை மட்டுமல்ல எம்.ஜி.ஆரையும் மறந்து போனீர்கள். சின்ன ரோஜாப்பூவிற்குக் கூட உங்கள் பெயரைச் சூடி மகிழ்ந்த நீங்கள் ஒரு திரைப்பட நகரம் உருவானபோது கூட அந்தப் பொன்மனச் செம்மலின் பெயரை ஒதுக்கித் தள்ளினீர்கள். நன்மை செய்யாதவர்களைக் கூட மன்னித்து விடுகிற நம் தமிழ் மக்கள் நன்றி மறந்தவர்களை தண்டித்து விடுகிறார்கள்.

அந்த அப்பாவித் தமிழ் மக்கள், அன்று நீங்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில் உங்கள் மீது மனப்பூர்வமாக நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் நீங்களோ மனங்களை விடப் பணத்தின் மீது நம்பிக்கை வைத்தீர்கள். அன்று பத்திரிகைகள் எல்லாம் உங்கள் மீது அன்பைப் பொழிந்தன. ஆனால் அவர்கள் மீது அலட்சியம் என்ற வெந்நீரை வீசித் துரத்தினீர்கள்.

அந்த ஆரம்ப நாட்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் உங்களைத் தங்கள் உடன் பிறவாச் சகோதரியாக வரித்திருந்தார்கள். ஆனால் நீங்களோ ஒரே ஒருவரை மட்டும் அங்கீகரித்து அழகு பார்த்தீர்கள்.

நீங்கள் காலில் விழுந்தவர்களை கணக்கெடுத்துக் கொண்டிருந்தீர்கள். மக்களோ நீங்கள் கை தூக்கி விடுவீர்கள் என்றெண்ணிக் காத்திருந்தார்கள். உங்களைத் தெய்வமாகச் சித்தரிக்கும் கட் அவுட்களைக் கண்டு பூரித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் விலைவாசி ஏற்றத்தால் கௌரவமான மக்களாக வாழவே தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.

நீங்கள் கல்யாணச் சாப்பாடு போடுவதாக எண்ணி வைத்த விருந்துகளைக் கூட அவர்கள் பிச்சைச் சோறு புசிப்பதாகவே எண்ணிப் புழுங்கினார்கள். ஏனெனில் அதில் அன்பு எனும் தேனை விட ஆடம்பரம் என்ற உப்பே தூக்கலாக இருந்தது.

தேர்தல் பிரசாரத்தின் போது கூட நீங்கள் மகாபாரதக் கதைதான் சொன்னீர்கள். அரசியல் பிழைத்தாருக்கு அறம் கூற்றாகும் என்ற சிலப்பதிகாரத்தை மறந்து போனீர்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மாத்திரமே உட்காருவதற்கு உரிமையுள்ள சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் நாற்காலியில் அன்று ஒரு முறை உங்கள் தோழியை உட்கார்த்தி வைத்தீர்கள். இன்று மக்கள் உங்கள் நாற்காலியைப் பறித்து விட்டார்கள்.

தங்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் தங்களை ஆள்வதை மக்கள் ஒரு போதும் சகித்துக் கொண்டதில்லை. இந்திரா காந்தியின் ஆட்சியில் சஞ்சய் காந்தி, உங்களது ஆட்சியில் இன்னொரு சக்தி. ராஜிவ் மரணத்தால் உங்களைப் பதவியில் அமர்த்தி வைத்த மக்கள் எமர்ஜென்ஸி காலத்திய இந்திரா காந்தியைப் போல் நீங்கள் நடந்து கொள்ளத் தலைப்பட்ட போது, அவருக்கு கொடுத்த பரிசையே உங்களுக்கும் தந்து விட்டார்கள்.

தவறுகள் குற்றங்கள் அல்ல. ஆணவம் அகன்ற மனம் இருந்தால், குப்பைகளே உரமாக மாறுவதைப் போல், தவறுகளைப் பாடமாக ஆக்கிக் கொள்ள முடியும். அது இருக்கிறதா உங்களிடம்?

உங்களுக்கு இருந்த நற்பெயர் நாசமாவதற்கு காரணமாக இருந்த சக்திகளை இனியேனும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அவற்றை அகற்றுவதன் மூலமே மீண்டும் நீங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். களை எடுத்தால்தான் பயிர் செழிக்கும். அப்புறம் உங்கள் இஷ்டம்.

1996 ம் ஆண்டு தமிழக மக்கள் ஜெயலலிதாவுக்கு தேர்தலில் பாடம் புகட்டிய சமயத்தில் ‘குமுதம்’ வார இதழில் தமிழன் என்ற பெயரில் (மாலன் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்) எழுதப்பட்ட தலையங்கம் இது. அது அப்படியே இன்றும் பொருந்துகிறது இல்லையா?

பதினெட்டு ஆண்டுகள் ஆன பின்பும் கொஞ்சமும் திருந்தாதவர்தான் இவர். முன்பு மக்கள் தண்டித்தார்கள். இப்போது சட்டம் தண்டித்திருக்கிறது. இவரைப் போன்ற தலைவரையும் இவர் வழிநடத்தும் கட்சியையும் நிரந்தரமாக மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஆனால் இந்த மக்களைத்தான் புரிந்து கொள்ளவே முடியாதே. சாதாரண நமச்சலுக்கெல்லாம் கொள்ளிக்கட்டையை எடுத்து சொறிந்து கொள்பவர்கள் ஆயிற்றே!


எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் இவர் அரசியலில் நுழைந்த கால கட்டத்தில் 1989-ல் நான் தினமணியில் வாசகர் கருத்துக்கள் பகுதியில் எழுதிய கருத்து இதோ! 

‘’மற்ற அணித் தலைவர்களை விட (ஜானகியோ,மூப்பனரோ) ஜெயலலிதாதான் எதிர்கட்சித் தலைவாரகச் செயல்பட தகுதியானவர். சட்டப்பேரவையில் தனது எதிர்ப்பாற்றலைக் காண்பித்து மக்களைக் கவருவாரேயானால் அடுத்த பொதுத் தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெறக்கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவர் மமதையையும் அகம்பாவத்தையும் எந்த அளவில் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வார் என்றுதான் சந்தேகமாக இருக்கிறது.’’ 
 
எத்தனை தீர்க்க தரிசணம் பாருங்கள் எனக்கு.

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

சுப்ரமண்யம் சுவாமியின் சோதிடம்!



தனது கட்சி ஆட்சியிலிருக்கும்போதே முன்னாள் முதல்வாரகியிருக்கிற ஜெயலலிதாவின் தண்டனை குறித்த எனது கருத்துக்களை பதிவிடலாம் என்று எண்ணியிருந்தேன். அந்த நேரத்தில்முடியவில்லை. ஆனாலும் தினம் தினம் பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம்தான் இருக்கிறது. பதிவுலகம் மந்தமாக இருந்தாலும் முகநூலில் கலந்து கட்டி அடிக்கிறார்கள். 

நம்முடைய பதிவுகள் பழையவைகளை நினைவு படுத்தும் மறக்க முடியாத நினைவுகள்தானே! ஜெயலலிதா அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளாகி பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் படு தோல்வி அடைந்த தருணத்தில் ஜெயலலிதா பற்றி சுப்ரமண்யம் சுவாமி 1991-1996 காலகட்டத்தில் சொன்னவற்றிலிருந்து சில துளிகள்….

இப்போது ஆட்சியில் இருப்பது (ஜெயலலிதா) ஒரு பிசாசு. ராட்சசி. இவரை நான் பதவியில் உட்கார வைத்தேன். எத்தனை அடி அடித்தாலும் அவரை சிறையில் போடாமல் விடமாட்டேன்.   1992-ல்.

ஜெயலலிதாவுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே ரகசியத்தொடர்பு உள்ளது. ராஜிவ் காந்தியைக் கொலை செய்யப்போவதாக விடுதலைப் புலிகள் ஏற்கனவே தெரிவித்து இருந்ததால்தான் தமிழ்நாட்டில் ராஜிவ் காந்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. 22.07.1995-ல் ஜெயின் கமிஷனில் கூறியது.

ஜெயலலிதா என்னிடமிருந்து தப்பவே முடியாது. அவரை அகற்றாமல் நான் தூங்க்கப் போவது இல்லை. ஜெயலலிதாவிடமிருந்து ரூ.2000 கோடியைப் பிடுங்கி அரசிடம் ஒப்படைத்து விட்டுத்தான் நான் தூங்கப் போவேன். சந்திரலேகா மீது திராவகம் வீசப்பட்ட வழக்கு போன்றவற்றில் ஜெயலலிதா கிடுக்கிப் பிடி போல மாட்டிக்கொண்டிருக்கிறார்.. அதிலிருந்து ஜெயலலிதா தப்பிக்கவே முடியாது… சினிமா கலாச்சாரம் மாற வேண்டும். 30.11.1995- மாலை முரசில்.

அ.தி.மு.க.வோடு சேர்வது ஒரு அரசியல் தற்கோலை ஆகும். அதனுடன் காங்கிரசு மட்டுமல்ல, வேறு எந்தக் கட்சியும் சேரக்கூடாது, ஏனென்றால் ஜெயலலிதா ஒரு அரசியல் கிரிமினல்… சந்திரலேகா மீது திராவகம் வீசப்பட்டது. வக்கீல் விஜயன், சண்முக சுந்தரம் ஆகியோர் பயங்கரமாக தாக்கப்பட்டனர். இப்படிப்பட்ட ஜெயலலிதாவோடு கூட்டு சேர்வதை தார்மீக அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள இயலாது. 15.03.1996 மாலைமுரசில்.

ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு பயங்கரக் காடாகி விட்டது. அந்தக் காட்டில் உள்ள கொள்ளைக்காரி ராணி போல ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார். இப்பட்டிப்படவரோடு காங்கிரஸ் கூட்டு சேரவே கூடாது. 24.03.1996 மாலை முரசில்.
 
தமிழக சட்டசபை, பாராளுமன்ற தேர்தலில் பெருமளவு தில்லு முல்லு நடந்ததாக ஜெயலலிதா கூறியுள்ளார். இது தமிழக மக்களை அவமதிப்பதாகும். தனது எந்த தவறுக்கும் ஜெயலலிதா வருந்தவில்லை. தினகரன் 13.05.1996 ல்.

நாற்பது திருடர்களான சசிகலாவின் உறவினர்களைப் பிடித்து சிறையில் அடைத்து விட்டாலும், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பவர் அலிபாபா என்ற ஜெயலலிதாதான். அவர் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாலை முரசு 05.07.1996-ல்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக ராட்சஸியான ஜெயலலிதாவின் ஆட்சியை ஒழிப்பதற்காகவே நான் தமிழகத்தில் தங்கியுள்ளேன். ஜெயலலிதாவின் ஆட்யை ஒழிக்க பாடுபட்டவன் நான்தான். நான் சமைத்தேன், அதை கலைஞர் சாப்பிட்டு விட்டார். ஜெயலலிதாவிடம் 2000 கோடி உள்ளது. அதை வைத்து அவர் அதிகாரிகளை, அரசியல்வாதிகளை சுலபமாக விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சி செய்வார். ஆனால் நான் அதற்கு விடமாட்டேன். ஜெயலலிதா ஆட்சியை விட்டுப்போனது மட்டுமல்லாமல் ஜெயிலுக்கும் செல்ல வேண்டும். போக வைப்பேன். ஒரு ரூபாய் சம்பளம் வால்கிய ஒருவர் எப்படி இத்தனை கோடிகள் சேர்த்தார்..? ‘சுப்ரமண்யம் சுவாமி ஒரு கொசு’ என்று ஜெயலலிதா சொன்னார். இப்போது சசிகலாவை அந்தக் கொசுதான் கடித்து துன்புறுத்துகின்றன. அது விரைவில் ஜெயலலிதாவையும் கடிக்கும். மாலைமுரசு 12.07.1996-ல்.

ஜெயலலிதாவை விரைவில் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். அதற்குத்தான் மக்கள் ஓட்டுப்போட்டு கருணாநிதியை தேர்ந்தெடுத்து உள்ளனர். அவர் நல்லவர் என்பதாலோ, பாசங்கொண்டோ தேர்ந்தெடுக்க வில்லை. ஆகவே கருணாநிதி ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க. ஆட்சியில் இருக்க அருகதை இல்லை. எனவே ஜெயலலிதாவை விரைவில் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். மாலை முரசு 22.07.1996-ல்.

வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா அளித்துள்ள விளக்கம் ஒன்றே போதும், ஜெயலலிதாவை ஜாமீனில் வெளிவர முடியாதபடி சிறையில் தள்ளலாம். இதற்காக ஆதாரங்களை தேடியலைய வேண்டியதில்லை. மாலை முரசு 24.07.1996-ல்.


ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு மௌனம் சாதித்து வருகிறது. எனவே பொது மக்கள் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளதோ என்று சந்தேகப் படுகிறார்கள். மாலை முரசு 04.08.1996-ல்.
 
ஆதாரம்; 1996 ஆகஸ்ட் மாத துக்ளக் வார இதழ்.