Thursday, May 30, 2013

அந்தரங்கம் புனிதமானதா?

அந்தரங்கம் அப்படின்னா என்ன? யாருக்கிட்டயும் சொல்லக்கூடாத விஷயம்தானே? அதை பகிர்ந்துக்க கூடாதா? நெருக்கமானவங்க கிட்ட சில விஷயங்களைப் பகிருவோம். ஆனா பெரும்பாலும் மனசுக்குள் ரகசியமாகத்தான் வைத்திருப்போம். சிலரோ நாள்குறிப்பில் எழுதி வைப்பதுண்டு. ஆனா அதுல மாட்டிக்க நிறைய வாய்ப்பிருக்கு. எதை எழுதலாம் எதை எழுதக்கூடாதுன்னு மனசுக்குள்ள ஒரு போராட்டமே இருக்கும். 

அதுவும் காதல் சம்பந்தப்பட்டதுன்னா ஏதோ தத்துப்பித்துன்னு இருக்கும். பேரெல்லாம் எழுதாம பொதுப்படியா இருக்கும். அப்படி நான் கிறுக்கி வைத்த டைரிக் குறிப்புகள்தான் இவை. கிட்டத்தட்ட பதினேழு வருடங்களுக்கு முன் (02.02.1996) எழுதியவை. ஆனா இது அந்தரங்கமா இல்லியான்னு நீங்கதான் சொல்லனும்.

ஒரு முடிவு எடுக்கும்போது நினைவுகள் பின்னோக்கிச் செல்வது அவசியம். அனுபவம் இப்போது கைகொடுக்கும். சறுக்கல் ஏற்பட்டிருந்தால் எச்சரிக்கை தோணும். என் நிலைமை இப்போது அப்படித்தான். இந்த வேலை பிடிக்கவில்லை என்று போனால் அடுத்து... 

பெங்களூரிலேயே வேலை நிரந்தரமாகியிருந்தால் இங்கு வந்திருக்கவே மாட்டேன். கடையும் ஆரம்பித்திருக்க மாட்டேன், என்று அவளிடம் சொன்னபோது 'எல்லாம் நல்லதுக்குத்தான்' என்றாள்.

புரியவில்லையே என்றேன் நான்.


நீங்க இங்கே வரலைன்னா நம்ம சந்திப்பும் பழக்கமும் ஏற்பட்டிருக்காது இல்லையா?

மனசு சந்தோஷத்தில் ஆடிப்போனது. பதிலுக்குப் புன்னகைத்தேன்.

சந்தோஷம் தரும் எதையுமே, எவருமே அப்போதைக்கு மட்டுமே அனுபவிக்க கற்றுக்கொள்கிறார்கள். பின் விளைவுகள் பற்றியோ, எதற்கு இந்த சந்தோஷம் என்கிற சிந்தனையோ, இது நிலைத்திருக்குமா என்ற ஐயப்பாடோ எழுவதே இல்லை.

ஆனால் எனக்கு இந்த உறவு இன்னும் எத்தனை நாளைக்கு என்று ஏங்கும். அந்த ஏக்கத்தலேயே சந்தோஷம் காணாமல் போய்விடும். அந்தரத்தில் மனம் வெறுமனே நிற்கும்.

பெண் ஆணுக்கு துணை மட்டுமில்லை. அவள் உற்சாகம் எனும் மாமருந்தை வைத்திருக்கும் வைத்தியரும் கூட. ஆண் பெண் சார்ந்த ஒரு ஜீவி. ஆணுக்கு ஒரு பெண்ணால் மட்டுமே உடல், மன சாந்தி அளிக்க முடியும். ஆண் ஆணுக்கு இப்படி எந்த வகையிலும் உதவ முடியாது. அது இயற்கை மனித வாழ்வுக்கு அளித்த நியதி!

இதை இப்போது என்னால் உணர முடிந்தது. இப்போது அவள் எங்கிருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? அறிய முடியவில்லை. அறியமுடியாமலிருப்பதே நல்லது. அறிய முற்படின் பேச ஆவல் வரும். பின் ஏக்கமாகி மனச்சபலம் அதிகமாகும். அவளை பார்த்த சந்தோஷம் போய் வேதனைதான் மிஞ்சும்.

திடீரென்று  நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்தாகிவிட்டது. பெண் பார்க்க வந்தவர்கள் நிச்சயம் செய்துவிட்டுப் போய்விட்டார்கள். இவள் ஒத்துக்கொண்டு விட்டாள். என்னிடம் மறைத்தும் விட்டாள். நான் தெரிந்து கேட்டபோது 'வேதனைப் படுவேன்' என்றுதான் சொல்லவில்லையாம்!?

புரட்சிப் பெண் போல பேசும் பெண்கள் செயல்முறையில் அல்லது நடைமுறையில் வாய் பேசாத ஊமைகளாய், கணவனுக்கு அடங்கிய மனைவியாய் அதுவே வாழ்க்காய் மாற்றிக்கொண்டு முற்றிலும் மாறிவிட்டிருப்பார்கள். இவளும் அப்படித்தானோ என்னவோ?!

பதினெட்டு வயசு பெண்ணுக்கு காதல்னா என்னென்னோ, ஆண் ஸ்நேகம் எப்படிப்பட்டதுன்னோ புரியாது. ஆனா 25 வயசு தாண்டினா பெண் புத்திசாலியாயிடறா. மனிதனை எடை போடத் தெரிஞ்சிக்கிறா. நல்லவன் யார் கெட்டவன் யார், எதுவரை பழகலாம் என்று கற்றுத்தேர்ந்துவிடுகிறாள்.

ஆனால் நான் தெளிவாய் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குழம்பிக் கொண்டிருந்தேன். அவள் இழப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஏனோ தனிமைப் படுத்தப்பட்டதாய்  ஒரு உணர்வு. அவள் இல்லாத என் நிலைமையை எண்ணி துடித்தது மனசும் உடம்பும்.

Wednesday, May 29, 2013

தண்ணீர் துளிகள்...

சாதனை;

1947-ல் ரஷ்யாவில் பாலைவனத்தையே சோலைவனமாக்கிய வரலாறு நிகழ்த்திக் காட்டப்பட்டிருக்கிறது! சோவியத் நாட்டின் துர்க்மேனியக் குடியரசில் 3,50,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஒரு பாலைவனம். அதற்குப் பக்கத்திலேயே அமுதாரியா என்ற ஜீவநதி. அதைத் திருப்பினால் பாலைவனம் சோலைவனமாக பூத்துக் குலுங்கும். திட்டம் தீட்டப்பட்டது. சுமார் 1400 கி.மீ. நீள கால்வாய் வெட்டப்பட்டது.

ஐந்தே ஆண்டுகளில் அமுதாரியா ஆற்றுநீர் கால்வாயில் பாய்ந்து 25 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. பாலைவனத்தில் திராட்சைத் தோட்டங்கள் பொங்கிப் பூத்தன. இதற்காக ஆன மொத்த செலவு இந்திய ரூபாய் மதிப்பில் 187 கோடி ரூபாய்.

கிட்டத்தட்ட கங்கை காவிரி இணைப்பிற்கான கால்வாய் தூரமும் இதே 1400 கிலோ மீட்டர்தான். திட்டம் நிறைவேறினால் நீர்வழிப்பாதையும் கிடைக்கும் என்பது கூடுதல் பலன்.

வேதனை;

ஒடிஸாவில் மகாநதி நீரில் 600 டி.எம்.சி. பயன்றறு கடலில் கலக்கிறது. கோதாவரி நதி நீரில் 2000 டி.எம்.சி அளவு வீணாகக் கடலில் கலக்கிறது. மகாநதி, கோதாவரி, காவிரி இம்மூன்றும் இணைக்கப்பட்டால் தமிழகத்திற்கு நிரந்தரமாக 300 டி.எம்.சி. நீர் கிடைக்கும்.

கோதாவரி, கிருஷணாவிலிருந்து கிடைக்கும் உபரி நீரை, இணைப்புக் கால்வாய் மூலம் காவிரி மேலணைக்கு கொண்டு வரலாம். எப்படி? கோதாவரியிலிருந்து 40,000 கோடி கடடி நீரை இழப்பு அதிகமில்லாமல் கிருஷ்ணா ஆற்றின் ஸ்ரீசைலம் அணைக்கு கொண்டு வரலாம். பின்னர் அந்த கோதாவரி நீரோடு கிருஷ்ணாவிலுள்ள மிகுதி நீர் 20,000 கோடி கன அடி நீரையும் சேர்த்து இணைப்புக் கால்வாய் மூலம் கிருஷ்ணாவிலிருந்து காவிரி மேலணைக்கு கொண்டு வரலாம்.

இன்னொன்று கங்கைத் தண்ணீரை ஸ்ரீசைலம் கொண்டு சென்று அங்கிருந்து மேட்டூர் நீர்த்தேக்கதிற்கு அனுப்பவேண்டும் என்றால் மின் ஏற்றிகள் மூலம்தான் செய்ய முடியும். ஏனென்றால் கடல் மட்டத்திலிருந்து ஸ்ரீசைலம் கால்வாய் கீழ்மட்டம் 885 அடி அளவாகும். மேட்டூர் கால்வாய் மட்டம் 800 அடி அளவாகும். இவ்விரண்டிற்கும் இடையே உள்ள தூரம் சுமார் 800 கிலோ மீட்டர். இதிலும் புதிய கால்வாய் செல்வதற்கு வேண்டிய நிலச்சரிவு இல்லை.

எனவே கால்வாயை மேட்டூருக்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக காவிரி மேலணைக்கு கொண்டு போகலாம். இதற்கு காரணம் இருக்கு. மேலணையின் மட்டம் 200 அடி. புதிய கால்வாய் எடுத்துச் செல்ல (போதிய) வேண்டிய நிலச்சரிவு உள்ளது. ஆகவே கோதாவரித் தண்ணீரை போச்சம்பாடு அருகிலிருந்து விரைவாக, எளிதாக காவிரி மேலணைக்கு கொண்டு வந்துவிடலாம்.

ஸ்ரீசைலத்திலிருந்து இணைப்புக் கால்வாய் கடப்பாவிற்கு அருகில் வடபெண்ணையைக் கடந்து மேல் திருப்பதி, புத்தூர், சோளிங்கர், காட்பாடிக்கு வடக்கு வழியாக விரிஞ்சிபுரம் அருகே பாலாற்றில் கலந்து பின்னர் பாலாற்றின் வழியே புதுப்பாடி மேலணைக்கு வருகிற மாதிரி கால்வாயை அமைக்கலாம்.

பாலாற்றின் அணையிலிருந்து செய்யாறு அணைக்கட்டு வழியாகவும் பின்னர் செஞ்சி வழியாக திருக்கோவிலூர் அருகே தெண்பெண்ணையைக் கடந்து, பெரம்பலூர், அரியலூர் வழியாக காவிரி மேலணைக்கு தண்ணீரை கொண்டு வந்துவிடலாம்.

முடிவாக கோதாவரி-காவிரி இணைப்புக் கால்வாய் தெலுங்கானா, ராயலசீமா, வேலூர், திருவண்ணாமலை, விருப்புரம், திருச்சி மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் நீர்ப்பாசனம் பெற்று ஏறக்குறைய 20 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். அதோடு திருத்தணி, திருப்பதி, அரக்கோணம், வேலூர், ஆரணி, செஞ்சி, திருக்கோவிலூர், விழுப்புரம், அரியலூர் போன்ற நகரங்களுக்கு குடிநீர் வசதியும் கிடைக்கும்.

இதெல்லாம் நடக்கிற காரியமா? அதுவும் இந்த ஜனநாயக நாட்டில்! அரசியல் கட்சிகள் இதை ஏன் தேர்தல் வாக்குறுதிகளாய் சொல்லமாட்டேன் என்கிறார்கள்? வழக்கம் போல இதிலும் கோடி கோடியாய் சம்பாதிக்க முடியும் இல்லையா? நமக்கோ பாதி வேலை தொடங்கிவிட்டால் எப்படியும் முடிந்துவிடும் என்ற அற்ப ஆசைதான்.

போதனை; 

காலங்கள் மாறலாம். இன்றுள்ள மனித சமுதாயம் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் இந்த சமுதாய மக்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த திட்டம் நிறைவேற்றினால் உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். இதற்கு முயற்சி எடுக்கும் தலைவர்களும் காலம் காலமாக நினைக்கப்படுவார்கள். கரிகாலன் கட்டிய கல்லணையை இன்றுவரை நினைவுகூறுகிறோம் இல்லையா அதேபோல!

குட்டித்தகவல்;

எங்கெல்லாம் பூமியில் வேகமாக நீர் உறிஞ்சப்படுகிறதோ அங்கெல்லாம் நிலத்தடி நீர்வளம் அதிகமாக உள்ளது!

இந்தியா முழுமையும் ஓராண்டில் பெய்யும் மழையளவு ஏறத்தாழ நாலாயிரம் கியூபிக் கிலோ மீட்டர். நாம் பயன்படுத்தும் அளவு 700 கியூபிக் கிலோ மீட்டர்.

Tuesday, May 28, 2013

மனசே மனசே கதவைத்திற!

 (பாலகுமாரன் பக்கம்)காதல் என்பது காமத்தின் நாகரிகமான வெளிப்பாடு. காதல் என்ற வார்த்தைக்கு காமம்தான் அடிப்படை. உடம்புதான் முதற்பொருள். சுவரை வைத்துதான் சித்திரம். உடம்பை வைத்துதான் உறவுகள். உடம்பு என்பது உணர்வுகளின் மூட்டை. உணர்வுகளை மதிக்க உடம்பையும் மதிக்கவேண்டும்.

என் காதல் தெய்விகமானது என்று எவரும் சொன்னால் அவர் உடம்பு பற்றி எந்த சிந்தனையும் இல்லாது பேசுகிறார் என்று இங்கே சொல்லப்படுகிறது. இது வெறும் பொய். உடம்பில்லா மனிதனுக்கு எந்த அடையாளமும் இல்லை. காமம் அத்தகைய முக்கியமில்லை என்று சொல்லவே பெரியவர்கள் தெய்விகக்காதல் என்றெல்லாம் சொல்ல முற்பட்டிருக்கிறார்கள்.

காமத்தோடு இருக்கிறவர்களுக்குத்தான் காதல் பற்றிய சிந்தனை வரும். காமத்தைத் தீர்த்துக்கொள்ளத்தான் காதல் பற்றிய எண்ணங்கள் ஏற்படும். தன்னுடைய வேலை பற்றி அதிக கவனமுள்ளவர்களுக்கு காமம் பற்றிய சிந்தனை எழாது. அப்படி காமம் பற்றிய சிந்தனை எழாது போனால் காதல் பற்றிய தாபங்கள் இல்லாது போகும்.


இந்த உடம்பு எத்தனை அழகு. அந்த உடம்பு எத்தனை வெறியை உள்ளே தூண்டிவிடுகிறது. உடம்பையும், மனசையும் அவ்வப்போது படிக்கிற ஆபாசக்கதைகள் முறுக்கேற வைத்து குதியாட்டம் போட பெண்ணைப் பார்க்கும் வரை காதல், காமம் பற்றிய பிரக்ஞையே இல்லாத மனம் நாலா திசைகளிலிருந்தும் நாய்களால் விரட்டப்படும் ஆடுகள்போல் அவஸ்தைப்படுகறது.

எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவள் கலைந்த உடையோடு என்ற நினைப்பு ஏற்படுகிறது. தனம் அமைதி இழந்து, சருமத்தில் வறட்சி தோன்றி, முகம் களையிழந்து போய்விடுகிறது.

பெண் கொடுக்கிற உரிமையும், அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பும், மனசுக்குள் பொங்குகிற காமமும், அதை காதலாக்குகிற புத்திசாலித்தனமும் அதிகமாக மேலெழும்பி பெண்ணை தன்வயப்படுத்த தந்திரம் செய்ய ஆரம்பித்து விடுகிறது.

வாழ்க்கையில் எல்லா நட்புகளும், எல்லா உறவுகளும் ஒன்றை ஒன்று எப்படி திண்பது என்பதில்தான் ஆரம்பிக்கின்றன.
- பாலகுமாரன்.


Thursday, May 23, 2013

வேலையை மட்டும் விட்டுடாதேடா…

"டாலர் நகரம்" எனது பார்வையில்....தொடர்ச்சி


இழப்பதற்கு ஒன்றுமில்லையில் ஆறுமுகத்தின் வாழ்க்கை எல்லோருக்குமே ஒரு பாடம். படிப்பறிவு இருப்பவனைவிட பட்டறிவுடன் உழைப்பும் அதிர்ஷமும் இருந்தால் கோடீஸ்வரனாவது (திருப்பூரில்) சாத்தியமே என்ற செய்தி வியப்பைத்தான் ஏற்படுத்தியது. ஏனென்றால் இந்தக் காலத்தில் அரசியல்வாதியினால்தான் (அதிகாரத்திலிருக்கும்) கோடீஸ்வரனாவது சாத்தியம். மற்றவர்கள்…………….?

பெண்களில் பலர் உழைக்கவே தயாராயில்லாமல், உல்லாச வாழ்க்கையை அனுபவிக்க உடலை மூலதனமாக்கிய வாழ்க்கைக்கு நகரத்தொடங்கியிருப்பது சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. ‘பணத்துக்குப் பணம், சுகத்துக்கு சுகம்இந்த வார்த்தையை இத்தனை வருடசென்னைவாழ்க்கையில் பலரிடம் கேட்டிருக்கிறேன்

பணம் என்கிற பலவீனத்துக்கு இவர்கள் சகலத்தையும் இழக்கத்துணிகிறார்களா இல்லைஉடல்என்ற ஒன்றைக்காட்டி ஆண்களின் பலத்தை பலவீனமாக்குகிறார்களா என்று பட்டிமன்றம்தான் நடத்தவேண்டும். இப்படித்தான் இருக்கிறது இன்றைய வாழ்க்கை முறை.

அட்டையைப்போல ஒட்டிக்கொண்டு சகலத்தையும் உறிஞ்சியபின் வேறொருவரைத் தேடிப்போகும் மனசாட்சியற்றவர்களை என்ன சொல்வது? இருதரப்பிலும் தவறு உண்டென்றாலும், இங்கே இது தொழில் தர்மமாக மாறிவிடுகிறது. காசு இருந்தபோது கம்பனி கொடுத்தேன். இப்போ இல்லியா ஆளைவிடு. நான் யார்கூட போனா உனக்கென்ன? இந்த உரையாடல் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. இவர்கள்தான் சாதனைப் பெண்மணிகளாய்………. 

கீழ்த்தட்டு மக்கள் அனைவரும் படும் அல்லல்களையும், அவர்களின் இயந்திர வாழ்க்கையையும் படிக்க படிக்க வேதனைதான் மிஞ்சுகிறது. ஒரு ஜான் வயிற்றுக்காக, நிர்வாணத்தை மறைக்கும் ஆடைக்காக, போராட்டமே ஆகிப்போன வாழ்க்கைக்காக மனிதர்கள் எதைஎதையெல்லாமோ இழக்கவேண்டியிருக்கிறது!

யார் ஆள்கிறார்கள்? எவர் என்ன செய்கிறார்கள்? பதவியை வைத்துக்கொண்டு எத்தனை கோடி அடித்தார்கள்!... எதுகுறித்தும் அக்கறை இல்லை’. ஏனென்றால் அடுத்தவேளை உணவுக்காக உழைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் மற்ற எதுவுமே முக்கியமாகத் தெரியாத அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினால்தான் உண்டு கொழிக்கும் அதிகார வர்க்கத்தின் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை?!

வேலையை மட்டும் விட்டுடாதேடா…’ ‘மூணும் பொட்டப்புள்ளையா பெத்திருக்கே….’. இதில் மூணுக்கு பதிலாக ரெண்டு இதே வார்த்தையைத்தான் நானும் இன்றுவரை என் அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இதே அனுபவங்களைத்தான் நானும் பெற்றிருக்கிறேன்.  

என்னோடு படித்தவர்கள் எல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத அளவில் பணக்காரர்களாய் மாறிவிட்டிருக்க, நான் மட்டும் ஏதோ ஒரு வேலையில் கொடுத்ததை வாங்கிக் கொண்டிருக்க முடியாமல் அல்லது உழைப்புக்கு மரியாதை இல்லாத இடத்தில் தொடர்ந்து வேலை பார்க்கமுடியாமலோ வேலையை உதறிவிட்டு வீடு வரும் எண்ணத்தில் இருக்கும்போதெல்லாம் என் அம்மாவும் இப்படித்தான் கூறுவார்கள். என் நிலைமையை எப்படி இவருக்கு புரியவைக்க முடியும்?


இந்த வயதிலும் சான்றிதழ்களை தூக்கிக்கொண்டு நிறுவனங்களின் படியேறிசொந்த ஊருக்குப் பக்கத்தில் வேலை கிடைத்து விடாதாஅல்லது சுயதொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்ளலாமா என்ற கேள்வியோடு இருக்கும் என்னை, அம்மாவின்வேலையை மட்டும் விட்டுடாதேடாஎன்ற வார்த்தைகள்தான் இந்த வேலையிலும் தொடர வைத்துக் கொண்டிருக்கிறது.

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த விஷயங்களை ஏற்கனவே படித்திருந்தாலும் காலத்திற்கு தகுந்தமாதிரி வேறொரு வடிவம் எடுத்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. புதிய பொருளாதாரக் கொள்கையின் அவதாரங்கள் இன்றைய சூழலில் திருப்பூரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற அவலத்தை எந்த அரசியல்வாதியும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

இயற்கை விவசாயம், மரபணு விதைகள், விளம்பரயுகம், உள்ளூர் சந்தை, உலக சந்தை, அவைகளின் சட்டதிட்டங்கள், போட்டி போடும் சீனா, தரகர்கள், உழைக்கும் தொழிலாளர்கள், அவர்களின் வாழ்க்கை முறை, சாயப்பட்டறைகள், அது உருவாக்கியிருக்கும் மாசு என எல்லாவற்றையும் அலசியிருக்கிறார்.


தண்ணீரில் விளையாடிய நாடுடா!’ என்ற தலைப்பில் தனியே பதிவுகூட எழுதியிருக்கும் இவர், தண்ணீரைப் பற்றி தாராளமாகவே விவரிக்கின்றார். எனக்கென்னவோ இதில் குழப்புகிறார் என்றுதான் தோன்றுகிறது. அதாவது சாயத்தொழில் நடக்கத் தண்ணீரை பயன்படுத்தியே தீரவேண்டும். இதனால் நிச்சயமாக நீர் மாசுபடும். சாயக்கழிவுகள் ஆற்றில் கலப்பதையும், அது எவ்வளவு விஷத்தன்மை உடையது எனபதையும், விவசாயமும் குடிநீரும் இதனால் எத்தனை பாதிப்புக்குள்ளாகிறது என்பதையும் இவரே விவரிக்கிறார். அதே சமயத்தில் ஸீரோ டிஸ்சார்ஜ் சாத்தியமில்லை என்கிறார். வேறு என்னதான் வழி?

ஒன்று சாயப்பட்டறைகளை மூடி விளைநிலங்களையும், குடிநீரையும் இனியாவது பாதுகாக்கவேண்டும். அல்லது திருப்பூரை தொடர்ந்து டாலர் நகரமாக தக்கவைத்துக்கொள்ள குடிநீரையும், விளைநிலங்களையும் நிரந்தரமாக விஷத்தன்மையுள்ளதாக மாற்றி, தண்ணீருக்காக தனியாரிடம் தொடர்ந்து கையேந்த வேண்டும். மற்ற நாடுகளில் இதற்காக என்ன செய்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாம். இவரே சொல்வது போலஅத்தனையும் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் வினைகள்’.


எங்கள் வேலூர் மாவட்டமும் இதே போன்ற பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம். ஆம்பூர், வாணியம்பாடி, இராணிப்பேட்டை என இங்குள்ள தோல் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் முற்றிலும் பாழாகி உவர்ப்பாகி உப்பாகி பல வருடங்களாகிறது. ஒரே ஆறுதல் பாலாறு. அங்கிருந்து பெறப்படும் நீரால்தான் மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் ஏதாவது பிரச்னை என்றால்…. தண்ணீர் தண்ணீர் படத்திலுள்ளது போலத்தான். ஆனால் பாலாறோ தண்ணீர் பார்த்து பல வருடம் ஆகிறது. நல்ல மழையும் இல்லை. ஆற்றிலே தண்ணீரும் இல்லை. இப்போதே இப்படி என்றால் எதிர்காலத்தில்….

பெண்களின் உழைப்புதான் பெரும்பாலான இந்தியக் குடும்பங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. பொறுப்பற்ற ஆண்களைக் கொண்ட குடும்பங்களில் எல்லாப் பொறுப்பும் பெண்கள் மீதே விழுகிறது. வீட்டிலும் உழைப்பு, வெளியிலும் உழைப்பு. முடியாமல் போகும் பட்சத்தில் வலை விரிக்கவோ அல்லது வலையில் விழவோ தயாராகிவிடுகிறார்கள்


பொருளாதாரச் சுதந்திரம் கொடுக்கும் விடுதலை இவர்களை எல்லை தாண்ட வைக்கிறது. இது திருப்பூரில் மட்டுமல்ல எல்லா தொழில் நகரங்களிலும் வேரூன்றி பல வருடங்களாகிறது. சென்னை தாம்பரத்தில் உள்ள ஏற்றுமதி வளாக மண்டலத்தில் இதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். புதிய நட்பும், புதிய உறவுகளும் அதனால் ஏற்படக்கூடிய அனுகூலங்களாலும், வசதிவாய்ப்புகளாலும் மனம் சலனமடைந்து வீட்டுப்பிரச்னைகளிலிருந்து விடுபட தவறான கள்ள உறவுகளில் வீழ்ந்து சீரழிகிறார்கள்.  

இதை ஜோதிஜி நயமாக, ‘காமம் கடத்த ஆட்கள் தேவைஎன்ற தலைப்பில் அலசியிருக்கிறார். ‘இவ்வாறான மாற்றங்கள் எதிர்கால சமூகத்தில் ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறவர்களுக்கு விடப்படும் அச்சுறுத்தல்என்ற இவரின் வரிகள் நூறு சதவிகிதம் உண்மையே!

இன்னும் மனதில் தோன்றுபவைகளையெல்லாம் எழுத விமர்சனம் என்ற இந்த எல்லை போதாது. தவிர ஜோதிஜியின் பதிவுகளைப் போல நீளமாகப் போகக்கூடிய(?) அபாயமும் உண்டு. மொத்தத்தில் திருப்பூரின் வரலாற்றைச் எதிர்காலத் தலைமுறைக்குச் சொல்லப்போகிற மிக முக்கியமான நூல் இந்தடாலர் நகரம்’.
நட்புடன்,

Monday, May 20, 2013

'டாலர் நகரம்' எனது பார்வையில்…….
இது டாலர் நகரத்தைப் பற்றிய நூலா? ஜோதிஜி அவர்களின் வாழ்க்கை வரலாறா?....அல்லது இரண்டும் கலந்த கலவையா?

பிரித்தறிய முடியாத அளவிற்கு தன் வாழ்க்கை அனுபவங்களை திருப்பூர் நகர பின்னணியில், தனக்கே உரித்தான எழுத்து நடையில், அழகான பிண்னலாடையைப் போல பிண்ணியெடுத்திருக்கிறார் ஜோதிஜி!

பின்னலாடைக்குப் பின்னால் இருக்கும் கடும் உழைப்பைப் போலவேடாலர் நகரத்தின்உருவாக்கத்தில் உள்ள உழைப்பையும் புரிந்து கொள்ளமுடிகிறது.

புத்தகத்தைத் திறந்தவுடன் தொடக்கத்திலே உள்ள வரிகளைப் போலவேநீங்கள் வாசிக்க விரும்பும் புத்தகம் இதுவரை எழுதப்படவில்லை எனில் அதை நீங்களே எழுதத் தொடங்குங்கள்என்ற அழுத்தமான வரிகள்தான் வரவேற்கிறது. வாசிப்பு பழக்கம் உள்ள அனைவருக்கும் இயல்பாகவே ஒரு கனவு மனதிற்குள் குடி வந்துவிடும். நாமும் எழுத்தாளனாவது என்கிற கனவுதான் அது. எழுத எண்ணம் வரும்போதெல்லாம், ‘எழுதுவது எப்படி?’ என்ற எனது கேள்விக்குசுஜாதாஅவர்கள்சொந்தக் கதையை எழுதாதீர்கள்என்று சொன்னதுதான் ஞாபகத்திற்கு வரும்.

நமக்கு நேர்ந்தவைகளையும், நமது வாழ்க்கை அனுபவங்களையும் எழுதாமல் வேறு எதைத்தான் எழுதுவது? எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையை ஜோதிஜியிடம் இருந்துதான் கற்றுக் கொள்ளவேண்டும். சமூக பொறுப்புணர்வு என்பது அறவே இல்லாமற் போய்விட்ட இந்தக் காலத்தில், மிகப் பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு ஓய்வில்லாத உழைப்புக்கிடையிலும் வற்றாத ஆர்வம் காரணமாக சமூக அவலங்களை தணியாத தாகத்துடன் பதிவுலகில் மெகா பதிவுகளாக எழுதிவரும் இவரை வியப்புடனே கவனித்து வருகிறேன். எப்படி முடிகிறது இவரால்?... என எனக்குள்ளே கேள்விகள் ஆயிரம்!

புத்தகத்தை வரவழைத்துவிட்டு நான் பணி நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டபடியால் உடனடியாக புத்தகத்தைப் படிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால் புத்தகம் கைக்கு கிடைத்த பின்பும் என்னால் படிக்க முடியவில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவசர கோலத்தில் படிக்கக் கூடாது. பொறுமையாக ரசித்துப் படிக்கவேண்டும். விமர்சனமும் எழுதி அனுப்பவேண்டும் என்ற ஆசையினால் ஆழ்ந்து படிக்க திட்டமிட்டேன். ஆனாலும் ஒரு இரயில் பயணம்தான் இதை முடிவுக்கு கொண்டு வந்தது.

எழுத்தாளர் ஆகவேண்டும், புத்தகம் போடவேண்டும் என்று  ஆசைப்பட்ட என்னைப் போன்றவர்களுக்கு வலைப்பதிவு உலகம்தான் வடிகாலாக அமைந்தது. என்னைப் போல பெயருக்கு வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டு அதை சரியாக பயன்படுத்தாதவர்கள்தான் அதிகம். ஆனால் பதிவுலகில் அசைக்க முடியாத இடத்தையும், அருமையான நண்பர்களையும் பெற்று, டாலர் நகரத்தை நம் கைகளில் தவழ விட்ட ஜோதிஜிக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள். இனி புத்தகத்திற்கு வருவோம்….

வாலிப வயதில் பிழைப்பிற்காக அல்லது வேலைக்காக ஊரை விட்டு வெளியேறி திருப்பூர் நகர வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த இளைஞனின் கதையாக டாலர் நகரம் தன் பயணத்தைத் துவங்குகிறது. சூது வாது நிறைந்த நகர வாழ்க்கையின் நீர்த்துப்போன குணாதிசியங்களையும், பல்வேறுபட்ட மனிதர்களையும் படம் பிடித்துக்காட்டும் இவர், இதற்குப் பின்னால் சொல்லும் ஒரே விஷயம்உழைப்பு, உழைப்பு, உழைப்பு’.

எல்லா இளைஞர்களுமே கிராமத்து வாழ்க்கை அல்லது பள்ளிப்படிப்பை முடித்தவுடன் மேல்படிப்பிற்காகவோ அல்லது வேலை தேடியோ நகர்ப்புறம் நோக்கி நகர்வது வாடிக்கைதான் என்றாலும் இந்த அனுபவங்களை எழுத்தில் கொண்டுவருவது சற்று சிரமமான காரியம்தான். ஆனந்த விகடனில் ராஜூமுருகன் எழுதுவதைப்போல இது ஒரு அலாதி அனுவம். நினைக்க நினைக்க, நம் நினைவுகள் கடந்தகால நிகழ்வுகளில் மூழ்கிவிடும். அதை மீட்டெடுத்து எழுத்தாக்குவது சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கிறது. நானும் கூட இப்படித்தான் நண்பனிடம் 100 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு சென்னைக்கு முதன்முதலில் பயணமானேன்.

போட்டி, பொறாமை, அதனால் உருவாகும் எதிரிகள், பெண்கள் சகவாசம், தலைக்கனம், பணம், பணம் கொடுக்கும் தைரியம், திமிர், பணத்திற்காக எதையும் செய்யும் துணிச்சல் என மனித வாழ்வில் மனித உணர்வுகளே இல்லாமல் போகும் சூழ்நிலையில் உழைப்பு அதுவும் கடினமான உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் (திருப்பூரில்) உயரலாம் என்ற இவரது ஒவ்வொரு அனுபவங்களையும் கோர்வையான சம்பவங்களில் நமக்குத் திரைப்படத்தைப் போலக் காட்டுகிறார். நண்பர்களைக் குறிப்பிடுவதைப் போலவே எதிரிகளையும் குறிப்பிடுகிறார்.

உழைப்பைப் பற்றி உயர்வாய்ச் சொல்லி கூடவே அதிர்ஷடத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். ஏனென்றால் நமது நாடு உழைப்புக்கு மரியாதை கொடுக்காத நாடாகி பல வருடங்கள் ஆகிறது. பணம், செல்வாக்கு, அதிகாரம் என இவையே எல்லா இடங்களிலும் கோலோச்சி உழைப்பை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. செல்வாக்கு உள்ளவனின் சின்னவீடு நினைத்தால் கூட உண்மையாய் இருப்பவனை, உழைப்பவனை எட்டி உதைத்து வெளியேற்ற முடியும் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.

பின்னலாடைத் தொழில் பற்றிய எல்லாவற்றையும் சொல்ல முயற்சித்திருக்கிறரார். ஆனால் என்னைப் போன்ற அந்தத் தொழில் பற்றி தெரியாத புதியவர்களுக்கு ஒரு முறை திருப்பூர் சென்று வந்தால்தான் அதன் முழு பரிமாணமும் விளங்கும் என நினைக்கிறேன். நிர்வாகத்திறன், நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளும் தன்மை, புதியன கற்றுக்கொள்ளல், வாய்ப்புகளை பற்றிக்கொள்ளல், எதிரிகளை சமாளித்தல், தவறான பாதைக்குத் திரும்பாமை என இவரின் எல்லா அனுபவங்களும் வரும் தலைமுறைக்கு பாடமாக இருக்கவேண்டிய விஷயங்கள்.

வெற்றி பெறும்வரை உழைப்பே கதியென்று இருப்பவர்கள் வெற்றி பெற்று உச்சாணிக்குப் போனபின் பின்னால் உழைத்துக் கொண்டிருப்பவர்களைத் திரும்பிப் பார்ப்பதேயில்லை. உதவுவதும் இல்லை. என் உழைப்பு, என் உழைப்பு என்கிற திமிர்த்தனமான கர்வமும், பணத்தின் மீதான அதீத வெறியும் அதிகமாகி கல்நெஞ்சக்காரர்களாய் மாறிப்போனவர்களையும் அடையாளம் காட்டியிருக்கலாம். இவர்களிடம் ஆலோசனைக்குப் போனால் வெற்று அறிவுறைகளும், சுய தம்பட்டமும்தான் பரிசாகக் கிடைக்கும்.

முதல் 5 அத்தியாயங்களில் திருப்பூரின் ஆரம்பகால அனுபவங்களையும், இவரின் படிப்படியான முன்னேற்றங்களையும் அசைபோட்ட இவர், அடுத்ததாக ‘ஆங்கிலப் பள்ளியும் அரைலூசுப் பெற்றொர்களும்’ என்ற ஆறாவது அத்தியாயத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டார். குறிப்பாய் இந்தப் பகுதியை என் மகள்கள் விரும்பிப் படித்தனர்.

உலகம் தெரியாத இளைஞனாய் இருக்கும்போது, இலட்சிய வேகங்கள் அதிகமிருக்கும். இப்படித்தான் தமிழ் மொழிப்பற்றினால் உள்ள வேகத்தால் எனது அண்ணியாரிடம் (அவர்கள் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வியில் படிப்பதை கிண்டலடித்து) என் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்ப்பேன் என்று சபதம் எல்லாம் செய்தேன். இப்போது அந்த சம்பவத்தை அவர்கள் மறந்தே போயிருப்பார்கள். ஆனால் என் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் நாள் வந்தபோது நான் தடுமாறித்தான் போனேன்.

சமூக நிர்பந்த்தத்திற்கு நானும் அடிபணிந்து போனேன். எனது சபதமெல்லாம் சரணாகதியாகி விட்டிருந்தது. நாளை என் பிள்ளைகள் வளர்ந்து ‘ஏனப்பா எங்களை அதுமாதிரி பள்ளியில் படிக்க வைக்கவில்லை?’ என்று கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது? என் லட்சியத்திற்கோ அல்லது என் இயலாமைக்கோ அவர்களை பலி கொடுப்பதா? இறுதியில் நானும் ஆங்கில வழிக்கல்வியில்தான் சேர்க்கவேண்டியதாகிவிட்டது.

டாலர் நகரம் எனது பார்வையில்…………. தொடரும்…