திங்கள், 31 டிசம்பர், 2012

புத்தாண்டு வாழ்த்து! 2013



பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வாழ்ந்து காட்ட வேண்டும்! – சிங்கப்பூர் ஜென்ஸியின் கடிதம்



ஹலோ ஃபரண்ட்,                                         28.12.1999
உங்கள் கடிதம் கிடைத்தது. மிகவும் சந்தோஷம். பதில் எழுத தாமதமாகிவிட்டது, மன்னிக்கவும். கடவுள் கிருபையால் நான் நல்லபடியாக உள்ளேன். அதுபோலவே நீங்களும் நலம் என்று நம்புகிறேன்.

மற்றபடி என் கணவருடன் பேசினேன். அவர் என்னை மார்ச் மாதம் கட்டாயம் மெட்ராஸ் வரவேண்டும், மறபடியும் சிங்கப்பூர் போகவேண்டாம் தற்சமயம் ஆட்டோ உள்ளது. அதை வைத்து சமாளித்து விடலாம். கண்டிப்பாக ஊருக்கு வா என்கிறார். காரணம் மகளைப் பார்க்கவும் ஆளில்லை. நான் உங்களுக்கு முன்னமே எழுதியபடி தற்சமயம் என் சொந்தமல்லாத ஒரு ஆன்டிதான் அவளைப் பார்த்துவருகிறார்கள்.

என்னுடைய லட்சியம் நான் நல்ல நிலைமைக்கு வந்த பிறகுதான், அதாவது இன்னும் 2 வருடம் வேலை செய்த பிறகு சென்னை வந்துவிடலாம் என்று நினைக்கிறேன். எப்படியும் நான் முயற்சி செய்கின்ற வேலை எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அது கிடைத்தால் நான் யாரையும் எதிர்பார்க்காமல் வாழலாம். காரணம் என் தாய், சகோதரர்கள், சகோதரிகள் முன்னிலையில் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியத்தில் உள்ளேன். ஆனால் என் ஆசைகள் நிறைவேறுமா தெரியவில்லை?!

காரணம், என் கணவர் அங்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அப்படி நான் வரவில்லை என்றால் அவர் இஷ்டத்துக்கு நடப்பாராம். நான் முன்பே இங்கு இன்னும் 2 வருடம் வேலை செய்வதைப்பற்றி எழுதியிருந்தேன். அதற்கு கோபப்பட்டுத்தான் எனக்கு கடிதமே போடாமல் இருந்தார். அவர் அவரது வீட்டில் தாய் தந்தையுடன் இருக்கிறார். என்ன செய்வது என்று புரியவில்லை. மொத்தத்தில் குழம்பிப்போய் உள்ளேன்.

இனி கவிதா விஷயத்துக்கு வருவோம். 21 -ம் தேதி அவளும் சரவணனும் ஃபோனில் பேசினார்கள். உண்மையில் கவிதாவிடம் பேசியதில் சந்தோஷப்பட்டேன். கடைசியாக 1998 மார்ச் 18 ம் தேதி நான் வருகின்ற சமயம் ஏர்போர்ட்டில் பேசியதோடு சரி, அப்புறம் பேசவேயில்லை. அதனால்தான் அந்த சந்தோஷம். நான் அவளுடைய விருப்பத்தைக் கேட்டேன். அவளுக்குள் ஆசை உள்ளது. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக முடியாது என்று சொல்கிறாள் என்று நினைக்கிறேன். சரவணனும் கவிதா ஒத்துக்கொண்டால் நான் காத்திருக்கிறேன் என்கிறார். அவள் வீட்டில் இதைப்பற்றிச் சொல்ல பயப்படுகிறாள். பொறுத்திருந்து பார்ப்போம். எப்படியோ நீங்கள் சொல்வது போலவே அவரவர் இஷ்டத்துக்கு விட்டுவிடுவோம். காலம் பதில் சொல்லட்டும்.

மற்றபடி, நம்முடைய MEPZ -ல் உள்ள கம்பெனிகள் எல்லாம் முதலில் பெரிய அளவில் செயல்படுவார்கள். திடீரென ஒட்டுமொத்தமாக மீடிவிட்டு ஓடிவிடுவார்கள். J.T.S. கம்பெனியின் அனுபவம் ஒன்றே சான்று. இது பற்றி உங்களுக்கும் தெரியும்தானே! அதனால்தான் அதைப்பற்றி அதிகம் எழுதவில்லை. இந்தியாவில் இப்படி நிறைய கம்பெனிகள். என்ன செய்வது?

புதிய வருடம் பிறக்க இன்னும் இரண்டே நாட்கள்தான் உள்ளது. என்னைப் பொருத்தவரை நாட்கள் வெகு சீக்கிரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த 1999 -ம் ஆண்டு பல துயர சம்பவங்கள், பல பயங்கர விபத்துக்கள் எல்லாம் நடந்துள்ளன. இனி 21-ம் நூற்றாண்டு பிறக்கப்போகிறது. ஹூம்... இன்னும் என்னென்ன சம்பவங்கள் எல்லாம் நடக்கப்போகிறதோ நாம் அறியோம். இனி வருகின்ற நாட்களாவது நல்லபடியாக நடக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்வோம்.

இப்படிக்கு,
என்றும் நட்புடன்,

திங்கள், 24 டிசம்பர், 2012

வந்தார் எம்.ஜி.ஆர்!


மூன்று மாதங்களுக்குப் பின் முதல்வர் கடந்த சனிக்கிழமை தமிழகம் திரும்பினார். அவரை வரவேற்க வழக்கம்போல ஜனசமுத்திரம்! மீனம்பாக்கம் ஏரியாவே கோலாகலமாயிருந்தது. அப்போது நேரில் கண்ட விஷயங்கள்……

  • வழக்கமான நேரத்தைவிட ஒன்றேகால் மணி நேரம் தாமதமாக வந்தது விமானம். (என்னவோ எப்பவுமே கரக்ட்டா வர மாதிரி…)
                       
  • ஏர் இந்தியா அதிகாரி சத்தியநாராயணராவிடம் தாமதத்துக்கான காரணம் கேட்டபோது, 'இன்று (சனிக்கிழமை) 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலமாயிற்றேஅதனால் பைலட்டிடம் சொல்லித் தாமதப்படுத்தி 10.31 -க்குச் சென்னையை வந்தடையச் செய்தேன்…. நாலரைக் கோடி மக்கள் நாயகனின் நலனுக்கு என்னால் முடிந்த பணி…' என்று சொன்னார்.
                       (அப்பவே அதிகாரிகள்ல கூட ஜால்ராக்கள் இருந்திருக்காங்க போல)

  • முதல்வர் தாமதமாக வருகிறார் என்ற செய்தியை ஃபோன் மூலம் அறிந்துகொண்ட பல்வேறு அமைச்சர்கள் கூடத் தாமதமாகவே வந்தார்கள்…. (இதுவே அம்மாவாக இருந்திருந்தால் முடியுமா….? ஹூம் குளிர் விட்டுப்போச்சி)

  • ஆனால் பி.எச்.பாண்டியன், .பொ.சி., ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் ஒன்பது மணியிலிருந்தே காத்திருந்தனர். (இவங்க மட்டும்தான் உண்மையான விசுவாசிங்களோ…!)

  • நடிகர்கள் பாக்யராஜூம், பாண்டியராஜனும் சேர்ந்து வந்திருந்தார்கள். பாண்டியராஜன், 'தனியா வந்தா 'பாஸ்' அது இதுன்னு கேட்டு உள்ளே விடமாட்டாங்களேஅதான் டைரக்டர் கூட(பாக்யராஜ்) வந்துட்டேன்…' என்றார். (பாவம் 'கலையுலக வாரிசு' என்ற  பட்டத்தோட சரி. எம்.எல்.., எம்.பி.,         பதவிகளுக்கு கொடுத்து வைக்கல…)
                   
  • இருவருக்கும் அமைச்சர்கள் இரு சேர்கள் ஒதுக்கப்பட்டன. .பொ.சி., பாக்யராஜிடம், ஏன் தம்பி அடுத்த படம் என்னது…? என்றார். 'காவடிச்சிந்து' ஐயா…' என்று பாக்யராஜ் சொன்னதும், அது இன்னும் முடியலையா? அப்ப அதுல நமக்கு வேஷம் இருந்தா குடேன் என்று தமாஷாகக் கேட்டார்.
    (மந்திரிங்க கூட நெருக்கமா இருந்த மப்புலதான் அப்புறமா தனியா கட்சிய ஆரம்பிச்சாரோ….?)

  • உடனே அருகில் இருந்த பி.எச்.பாண்டியன், .பொ.சி-யிடம், 'நீங்க கதாநாயகனா நடிக்கத்தயார்னா நானே ஒரு படம் எடுக்கறேன்நடிக்கறீங்களா…?' என்று கேட்கபடு ஜாலியாக இருந்தார்கள்!.
    (இவங்க தலைவரே சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்த்துட்டாரு. அரசியல்ல இருக்கிற இவங்கள பாருங்க சினிமாவுல நடிக்கப்போறாங்களாம், ஹூம்ஆசை யாரை விட்டது.)

  • நிறைய எம்.எல்.-க்கள் நிருபர்களைத் தேடித் தங்கள் பெயரைப் பதிவு செய்து, 'நாளைக்கு பேப்பர்ல வந்துடுமில்ல…' என்று கேட்டுவிட்டுப்போனார்கள். (ஒருவேளை இவங்கெல்லாம் அம்மா விசுவாசிகளா இருந்திருப்பாங்களோ?!)


  • வரவேற்பு மேடைக்கு முதல்வர் வந்ததும் பாண்டியராஜன் எமோஷனலாகி, 'புரட்சித்தலைவர்...' என்று கத்த, சில அமைச்சர்கள் உட்பட பலரும் 'வாழ்க!' கோஷம் போட்டார்கள். (சினிமாவுல முதல் சீன்ல தலைவரைப் பார்த்ததும் விசிலடிச்சி கத்தின ஞாபகம் வந்திடுச்சி போல பாண்டியராஜனுக்கு!)

  • நிரம்பச் சோர்வாய்த் தோற்றமளித்த முதல்வரை, .வெ..வள்ளிமுத்து வரவேற்றுப் பெரிய மாலையைப்போட்டதும், வள்ளிமுத்துவின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டார் முதல்வர்.
    ( பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சோ என்னவோ…)


  • சில அமைச்சர்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னேற, பின்னாலிருந்த பி.எச்.பாண்டியன், 'ஏம்ப்பாப்ரோட்டாகால் முறைப்படி சபாநாயகர்தானே முன்னாடி மாலை போடணும்…' என்று குரல் கொடுத்தார். (தலைவர் படம் ரிலீஸ் அப்போ முண்டியடிச்சி டிக்கட் வாங்குன அனுபவம் இங்கே கைகொடுக்குதுன்னு நினைக்கிறேன்)

  • ராஜாராம், 'அடப்பாவமே…! நீ இங்கே தொண்டனப்பா…' என்று சொல்லியபடி அவருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார். (இல்லாட்டி அவர் தன் வானளாவிய அதிகாரத்தைக் காட்டியிருப்பாரோ என்னவோ…)

  • பாக்யராஜ் மாலை போடும்போது அவரின் இளம் தொப்பையை முதல்வர் சுட்டிக்காட்டி, 'ஏன் இப்படி? என்று உரிமையுடன் கேட்க, பாக்யராஜ் 'ரொம்ப நாளா ஒரு டிஸ்கஷன்உட்கார்ந்துஉட்கார்ந்துஅதான்…' என்று நெளிந்தார். (கட்சியில சேரப்போற டிஸ்கஷனா இல்ல தலைவருக்கப்புறம் புதுசா கட்சி ஆரம்பிக்கிற டிஸ்கஷனா?)


  • நீண்ட பயணம் காரணமோ என்னவோ, வழக்கமான தெம்போ கையசைப்போ இல்லாத முதல்வர், திடீரென தன் பி..பரமசிவத்திடம் ஏதோ கேட்க, தன் பாக்கட்டிலிருந்து ஒரு மாத்திரை (?) எடுத்துக்கோடுத்தார். அதை மென்று கொண்டேயிருந்தார் முதல்வர். (பாவம்! ரெஸ்ட் எடுக்க வீட்டுக்கு அனுப்பாம இதென்னப்பா இப்படி படுத்தறாங்களேன்னு நினைச்சிருப்பாரோ?)

  • ஒரு எம்.எல்.. மாலையோடு, ஏதோ ஒரு கோரிக்கை மனுவைக் கொடுக்க, அதை வாங்காமலேயே 'நகர்ந்து போ…' என்று கோபமாக சைகைச் செய்தார். ( எதை, எப்போ, எங்கே செய்யனும்னு தெரியாத எம்.எல்.. போலிருக்கு, ம்என்னத்தைச் சொல்ல…)

எம்.ஜி.ஆர். உடல் நலமில்லாமல் இருந்து சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று, நலமுடன் திரும்பி வந்தபோது அவருக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று சென்னை விமான நிலையத்தில் நடத்தப்பட்டது. அப்போது அதைப்பற்றி ஆனந்தவிகடன் வார இதழில் வெளிவந்த செய்திதான் இது. (அடைப்புக்குறிக்குள் வேறு வண்ணத்தில் இருப்பதேல்லாம் நம்ம கைங்கர்யமுங்க….)

எம்.ஜி.ஆரின் நினைவு நாளுக்காக

கவிப்ரியன்





சனி, 22 டிசம்பர், 2012

பாலகுமாரன் - பதில்கள்



இந்தியாவில் எது செய்வது மிகவும் தவறானது?

அதிகப் பணம் சம்பாரிப்பது இந்தியாவில் தவறானது! பணம்தான் சந்தோஷம் என்று அதிகப் பணம் சம்பாதித்து பலபேர் சந்தோஷத்தை முற்றிலுமாய் இழக்கிறார்கள். ரௌடிகளாலும், ஆரசியல்வாதிகளாலும் எந்தக்காரணமுமின்றி மிரட்டப்படுகிறார்கள். பிச்சை எடுப்பவர்களும், தானம் கேட்பவர்களும் பணக்காரர்கள் காசு தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தராது போனால் இழிவாகப் பேசுகிறார்கள். எல்லோராலும் எளிதாக பணம் சம்பாதித்துவிட முடியவில்லை. கடும் உழைப்பு பணம் சம்பாதிக்கத் தேவையாக இருக்கிறது. பல்வேறு தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. மத்திய தர, மேல் மத்திய தர வாழ்க்கையே இந்தியாவில் இப்போதைக்குச் சிறந்தது. அமேரிக்கா போன்ற நாடுகளில் பணக்காரர்களை மனிதர்களாக மதிக்கின்ற தன்மை உண்டு. பணக்காரர்களுக்கும் மற்றவர்களை மனிதர்களாக பார்க்கும் எண்ணம் உண்டு. இங்கு அது இல்லாமல் போகிறது.

இப்போழுது தமிழ் இலக்கியத்தின் தேவைகள் என்ன?

நல்ல கட்டுரைகள். உலகளாவிய சிந்தனைகள் பற்றிய விளக்கங்கள். அடுத்தடுத்த தேசங்கள் பற்றிய அரசியல் சரித்திர வரலாறுகள். நண்பர் பா.ராகவன் இம்மாதிரி விஷயங்களை அற்புதமாகச் செய்து வருகிறார். வாரப்பத்திரிகையில் அவர் எழுதுகின்ற 'நிலமெல்லாம் ரத்தம்' என்கிற இஸ்ரேல் நடத்திய சண்டையும், அராபியர்கள் குணங்களும், ஒரு புது ஜன்னலை நமக்குத் திறந்து விட்டிருக்கின்றன. நம்மூர் அரசியல்வாதிகள் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரைத்தொடர். எந்தவித ஆரவாரமுமில்லாமல், எந்தவிதமான கட்சியையும் சாராமல், எந்தவிதமான இயக்கத்தையும், மதத்தையும் நம்பியிராமல், ஒரு இந்து என்கிற காழ்ப்புணர்ச்சியில்லாமல் பல விஷயங்களை மிகத்தெளிவாகப் பேசுகிறார்.

ஆனால் இங்குள்ள பண்டிதர்கள் தேவையற்ற விவாதங்களில், தேவையற்ற காழ்ப்புக் கட்டுரைகளில் மனம் செலுத்தி பத்திரிகையின் பக்கங்களை வீண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்டை நாட்டு இலக்கியமும், தேசம் பற்றிய அரசியல் சமூக வராலாறு கட்டுரைகளும் அதிகம் தேவைப்படுகிற நேரம் இது. மக்கள் படிக்கத்தயாராய் இருக்கிறார்கள். இதற்கு பா. ராகவனின் கட்டுரையே சாட்சி. அது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து பலரும் முயற்சி செய்ய வேண்டிய இந்த விஷயத்தில் இவர் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

சனி, 15 டிசம்பர், 2012

முதிர்கன்னி



கே.பாலசந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' என்னை மிகவும் பாதித்த திரைப்படங்களில் ஒன்று. கிட்டத்தட்ட சுஜாதாவின் கதாபாத்திரம்தான் இந்தக் கடிதக் கதாநாயகியின் சகோதரிக்கு. மொத்தம் 6 பெண்கள். ஆறு பெண்களைப் பெற்றால் அரசன் கூட ஆண்டியாவான் என்று சொல்வார்கள். ஆனால் இந்தக்குடும்பத்தில் தந்தையோடு தோள் கொடுத்து அத்தனை பேரையும் குறைந்த பட்சம் பட்டப்படிப்பு வரை படிக்கவைத்திருக்கிறார் இவர். இரண்டாவது சகோதரியான இவருக்கு கீழே மூன்று சகோதரிகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஐந்தாவது சகோதரியான மாலாவிற்குதான் மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.

'ஆட்டோகிராப்' படத்தில் வரும் ஒரு பாடலில், ஸ்நேகா பாடுவதைப்போல 'யாருக்கில்லை போராட்டம், கண்ணில் என்ன நீரோட்டம்' என்ற பாடல்வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு குடும்பங்களுக்குள்ளும் எத்தனை எத்தனை பிரச்னைகள், போராட்டங்கள்? அதிலும் இந்தப் பெண்கள் படுகின்ற பாடு இருக்கிறதே சொல்லி மாளாது.

இத்தனை நாள் திருமணத்தை மறுத்து குடும்பத்துக்காக உழைத்தவர், திடீரென ஒருவரை எனக்குப் பிடித்திருக்கிறது. அவரை எனக்கு திருமணம் செய்துவையுங்கள் என்று கேட்டால், சந்தோஷமாக செய்து வைப்பதில் என்ன குடி மூழ்கிவிடப்போகிறது? வளரிளம் பருவம் என்றால், காதல் என்ன என்பது தெரியாது. நல்லவர் கெட்டவர் தெரியாது. மனிதர்களை எடை போடும் திறனில்லாது ஏமாந்து போகும் வயசும் கிடையாது. இவரோ படித்தவர். உயர்வான ஆசிரியப்பணி பார்ப்பவர். ஒருவகையில் இவர் முதிர்கன்னி. இவரது முடிவு தெளிவாகத்தானே இருக்கும் என ஏன் நம்ப மறுக்கிறார்கள்? குடும்பத்தினர் இதை ஏன் உணரவில்லை? எது குறுக்கே நிற்கிறது?

தொடர்ந்து கடிதத்துக்கு வருவோம்.....


எனக்கும் ஈஸ்வரிக்கும், பெரியக்காவுக்கும் அவ விருப்பம் அதுதான்னா செஞ்சிடுவோம். அவளாலதான் நம்ம குடும்பமே இன்னிக்கு இந்த அளவுக்கு வந்திருக்கு. அவ ஆசையை நாம வேணாம்னு சொல்லக்கூடாதுன்னு, சொல்றோம். அப்பா-அம்மா, அத்தான் மூவருக்கும் ஜாதி, குடும்பம், உறவுகள் பத்தின பயம்.

சீக்கிரம் எனக்கு முடிச்சிட்டா... பிறகு பிரச்னையில்லைன்னு முடிவு பண்ணியிருக்கோம். இப்பவும் கூட அவ நினைச்சா போயிருக்கலாம். நாங்களும் வேணும்னுதான் இருக்கா! அது இவர்களுக்குப் புரியமாட்டேங்குது. என்னதான் நடக்கும்னு ஒண்ணும் புரியலை. இப்ப இந்த தீபாவளிக்குப் பிறகுதான் கொஞ்சம்... கொஞ்சமா பேச ஆரம்பிச்சி... இப்போ ஓரளவு சகஜமாயிருக்கா. இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு பயம் ஓடிகிட்டேயிருக்கு. நமக்குப் புரியறத அவங்களுக்குப் புரியவச்சு, ஒத்துக்க வைக்க முடியலை. என்னா வாழ்க்கைடா இதுன்னு.... ரொம்ப சலிப்பா இருக்கு!

அதனாலதான் என்னை சீக்கிரம் 'பேக்கப்' பண்ணனும்கறாங்க. கல்யாண செலவுக்கு சென்னைல இருக்கிற வீட்டை விற்க ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கோம். இந்த மாபெரும் குழப்பத்தாலதான், ஆமாம் போன்னு ஒரு சலிப்புலதான் யாரோடயும் தொடர்பேயில்லாம திரிஞ்சிகிட்டு இருந்தேன். சமீபத்துல 'ரெப்'பா இருக்கிற 'போஸ்' என்பவர் பிரண்ட்லியா இருக்கார். ரொம்ப ஜாலியான ஆள். ஊர் கும்பகோணம். திருமணமாகி ஒரு மகன் உள்ளான். ஏதோ ஒரு ரூபத்துல 'நட்பு'-னாலதான் என் வாழ்க்கையும் ஓடிக்கிட்டிருக்கு.

வேலை அதேதான் சம்பளம், அலவன்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு ஏயாயிரம் வரும். சாந்தியிடம் பணம் வாங்க வேண்டாம்னு வீட்டு செலவு எல்லாம் நான்தான் பார்க்கறேன். அவளும் விடாம 2000/- குடுத்துகிட்டேதான் இருக்கா.
அவளுக்கும் குடும்பத்தை விட மனசில்லை. எங்களுக்கும் அவளை விட்டா வழியில்லை. ஏதோ வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு! பாப்போம், எங்கதான் போய் நிக்குதுன்னு!

03.02.2006

எப்பவும் மாசத்துல கடைசி நாட்கள்ல கொஞ்சம் பரபரப்பா அலைய வேண்டிவரும். இன்னிக்குதான் ப்ரீ ஆனேன். கிட்டத்தட்ட 8 பக்கம் எழுதிட்டு படிச்சி பாக்கறேன்.ஒண்ணுமே புரியலை. அட்ஜஸ்ட் பண்ணி படிச்சிக்கோங்க.

எங்க பெரியம்மா மகளின் மகன் கூட ஒரு வருடம் முன்னால் அரபு தேசத்துக்கு (கொத்தனார்) வந்தான். உங்க அட்ரசெல்லாம் கூட கொடுத்தனுப்பினேன். கிட்டத்தட்ட அடிமை மாதிரி, சரியான சாப்பாடில்லாம, சம்பளமில்லாம வேலை பார்த்திருக்கான். விட்டால் போதும்னு ஒரு வாரம் முன்னால ஓடிவந்துட்டேன்னு சொல்றான். ரொம்ப பாவமாயிருந்தது.

இந்தியனுக்கு மட்டும் ஏனிந்த வாழ்க்கை? மிகப்பெரிய ஜனநாயகம்னு சொல்லிக்கிட்டு, மத்த எல்லா தேசத்திலும் இந்த மாதிரி எத்தனையோ லட்சம் பேர் பணய வாழ்க்கை வாழறாங்க. இதெல்லாம் இங்கே குரைச்சிகிட்டிருக்கிற அரசியல் நாய்களுக்கு ஏன் தெரியலை? என்னதான் இருக்கு பதவி சுகத்துல? 'மே' மாசம் நடக்கப்போற தேர்தலுக்கு இப்பவே பேரம் பேச ஆரம்பிச்சிட்டாங்க! இதான் சாக்குன்னு யாராவது பொதுக்கூட்ட மேடைகள்ல குண்டைப் போட்டு பெரிய தலைகளையெல்லாம் காலி பண்ணிட்டா தேவலாம்னு தோணுது. பத்தாததுக்கு விஜயகாந்த் வேற ஏகப்பட்ட வசனங்களை அள்ளிவிட்டுகிட்டிருக்கார். யார் வந்தாலும் தமிழனின் சராசரி வாழ்க்கையில் துளியும் முன்னேற்றம் இருக்கப்போவதில்லை!

அப்புறம், வேற ஏதாவது புக்ஸ் படிச்சீங்களா? மெட்ராஸ்ல 'புக்பேர்' போகலாம்னு நினைச்சேன். முடியலை. கடினமான வேலைன்னு சொன்னீங்க. வேறெந்த சிந்தனையுமில்லாம வேலை பாருங்க. வேறெங்காவது முயற்சி பண்ண முடியாதா? முக்கியத் தேவைகள் முடிஞ்சிடுச்சின்னா பேசாம சென்னைக்கே வந்து வேலை தேடிக்கப் பாருங்க. உங்கள் கடைசி தம்பி கல்யாணத்துக்கு கண்டிப்பா வரேன். சூழ்நிலை எப்படி இருக்குமோ தெரியலை. இருந்தாலும் உங்களை வந்து கண்டிப்பா பார்க்கணும். உங்க வீட்டு போன் நம்பர் கொடுங்க. அட்லீஸ்ட் போன்லயாவது  எல்லோர் கிட்டயும் பேசறேன்.

எழுதினா போய்க்கிட்டே இருக்கும். இதோட முடிக்கிறேன்.
மற்றவை உங்கள் பதில் கண்டு.

By
மாலா,
மயிலாடுதுறை.
 

வியாழன், 13 டிசம்பர், 2012

போர்க்களமான வீடு!

வாழ்க்கைப் போராட்டங்கள் என்பது ஒவ்வொருவருக்கும் தரும் அனுபவம் விசித்திரமானது. எத்தனையோ படிப்பும் பதவியும் இருந்தாலும் கூட மனசுக்குள் புதைந்து கிடக்கும் ஆசைகள் என்பது யாராலும் அறியமுடியாத ஒன்று. ஒருவருக்கு சரி என்று படுகிற விஷயம் அடுத்தவருக்கு தவறாகப் படுகிறது. பெற்றோர்கள் அவர்களின் கடமையைச் செய்ய தவறும்போது, எவ்வளவு நாள்தான் மனசுக்குள் புழுங்கித் தவிப்பது? ஆறுதலான ஒருவன் கிடைக்கும்போது அவன் அயோக்கியனாக இருந்தாலும் அவன் மீது நம்பிக்கை வந்துவிட்ட பிறகு இதில் யார்தான் என்ன செய்துவிட முடியும்?

கடிதத்தை தொடர்ந்து படியுங்கள், உங்களுக்கும் விஷயம் புரியும்!

சரிவீட்டுப் பிரச்னைக்கு வரேன். முடிஞ்ச வரைக்கும் சுருக்கிடறேன். போன வருட மே மாசம். என் பி.பி.ஏ பரீட்சைக்காக பத்து நாள் லீவ் போட்டுட்டு படிக்க ஆரம்பிச்சேன். முதன்முதலா அன்னிக்குதான் புக் எடுத்தேன். பத்து மணி இருக்கும். சாந்தி பக்கத்துல வந்து உட்கார்ந்தா (மூத்த சகோதரி - ஆசிரியரா பணி செய்யறவங்க). அப்பா மெட்ராஸ்ல இருந்தாங்க. வீட்ல அம்மா, தம்பி, புவனா, நான்.

'இந்தா மாலு…. நீ என்ன சொல்றன்னா?

எதுக்குன்னு நான் கேட்டேன். ஒண்ணுமே புரியலை எனக்கு.

'அடுத்த மாதம் அது ஃபாரின் போகுதாம்

அதுக்கென்ன?

கல்யாணம் பண்ணனும்ங்குது!

யாரை?.....

………………………. பதிலில்லை.

என்ன சொல்ற? புரியற மாதிரி சொல்லு.

ஸ்கூல்ல எல்லாரும் எப்ப கல்யாணம்னு கேட்டுட்டேயிருக்காங்க. அதுக்கும் விசா வந்திடுச்சி. அதுக்குள்ள முடிக்கனும்னு தான்…………

ஆர்.டி.எக்ஸ் குண்டைத் தலைல போட்ட மாதிரி உட்கார்ந்திருந்தேன்.
நல்லா யோசிச்சுதான் பேசறியா?


'ஆமாம், எனக்கும் வயசு அதிகமாயிருக்கு. வீட்ல சொல்றாங்கன்னு யாரையாச்சும் கல்யாணம் பண்ணி, நாளைக்கு குழந்தை குட்டி இல்லன்னு பிரச்னை வந்தா என்ன பண்றது? இவருக்கு எல்லா விவரமும் தெரியும். ஜாதிப் பிரச்னையைத் தவிர வேறோன்னுமில்ல' அப்படின்னு சொன்னா.

இதுதான் உன் கடைசி முடிவுன்னா இதை ரெண்டு வருஷம் முன்னாடியே செஞ்சிருக்கலாமே! பட்ட அவமானங்களாவது குறைஞ்சிருக்கும்.

மேரேஜ் பண்றதுன்னு இப்பதான் முடிவு பண்ணேன்.

இப்ப திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

……………………….. பதிலில்லை.

ஐந்து நிமிடம் யோசனை பண்றமாதிரி திகிலடிச்சி உட்கார்ந்திருந்தேன். அதுக்குள்ள அம்மாவும், என்ன பேசிக்கறோம்னு புரியாம அலைபாயறாங்க!

உனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் அனுபவசாலி இல்ல. இருந்தாலும் சொல்றேன். இது உன்னோட மட்டும் போற விஷயமில்ல. எல்லோரையும் பாதிக்கும். அடுத்தடுத்து மானம் போகிற சம்பவங்கள் நம்ம வீட்ல நடந்துகிட்டேதான் இருந்திருக்கு. அதுக்கும் மேல நீயும் இப்படின்னா ஜீரணிக்க கஷ்டமாயிருக்கு. சுதா சொல்லாமப் போச்சு. நீ சொல்லிட்டுப் போற, அதான் வித்தியாசம்னேன். கடகடன்னு... அழுதா!

நீ கல்யாணம் பண்றத நான் வேணாம்னு சொல்லலை. உனக்குன்னு ஒரு வாழ்க்கை கண்டிப்பா வேணும். ஆனா ஆளை கரக்ட்டா செலக்ட் பண்ணு. அவன் பேஸிக்கலா ஒரு அடியாள். கூலி கொடுத்தா கொலையும் பண்ற மாதிரி. நாளைக்கே உன் காசுதான்னு முக்கியம்னு எல்லாத்தையும் பிடுங்கிட்டு உன்னைக் கொன்னுட்டாஎன்ன பண்றது?

'அப்படியெல்லாம் கிடையாது'.

அப்புறம் உன் இஷ்டம். மேரேஜ் எப்படி பண்ணனும்? சிம்பிளாவா….? மண்டபத்திலா?

மண்டபத்தில. எல்லோருக்கும் சொல்லித்தான். ஒரு வாரத்துல கூட முடிச்சிடலாம். எல்லாத்துக்கும் ஆளிருக்கு.

நான் எதுவும் பேசலை. அம்மாவைக் கூப்பிட்டு சொன்னேன். ரியாக்ஷனைக் கேக்கனுமா? அழுகையும் சத்தமுமா இருந்தாங்க! பாட்டில் விஷம் வாங்கி எல்லோருக்கும் கொடுத்துட்டுப் போன்னாங்க. நான் அம்மாவை சமாதானப்படுத்தினேன். அவ தீர்க்கமா முடிவு பண்ணிட்டா.  நம்மகிட்ட பர்மிஷன் கேக்கலை. நியூஸ்தான் சொல்றா. நீ என்ன சொல்றேம்மான்னேன்.

நீ என்ன அவளுக்கு உடந்தையான்னு கேட்டாங்க! எனக்கு ரொம்ப கோபம் வந்துட்டு, கன்ட்ரோல் பண்ணிகிட்டு... ஆமாம்னு வச்சுக்க. என்ன சொல்ற?

நாங்க செத்தாக் கூட முகத்துல முழிக்கக்கூடாது. இந்த தெருவுல இருந்து காலி பண்ணிட்டு ஒரேயடியா போகச்சொல்லுன்னு சொல்லிட்டுப் போய்ட்டாங்க. அவ யோசனை என்னன்னா... கல்யாணம் பண்ணியும் இங்கேயே இருக்கிற மாதிரி. அந்த ஆள் ஃபாரின் போற மாதிரி.

அதுக்கு எதுக்கு இப்படி ஒரு அவசரமான கல்யாணம்? நிதானமா யோசிச்சு முடிவெடுன்னு சொல்லிட்டேன்.

அன்னிக்கு நைட் நானும் அம்மாவும் கிளம்பி பெரியக்கா வீட்டுக்குப்போய் அத்தானிடம் சொன்னோம். அவர் வந்து பேசினார். ரெண்டு பேருக்கும் பெரிய சண்டை. நான் அவரை தடுத்து அனுப்பிட்டேன். இழவு வீடு மாதிரி இருந்தது. பதினைஞ்சு நாள் கழிச்சு பார்த்தா, அந்த ஆள் ஃபாரின் போய்ட்டான். இவ யாரோடும் பேசாம.... கிட்டத்தட்ட போர்க்களம் மாதிரி இருந்தது வீடு!

கடிதக் கனவுகள் தொடரும்....

புதன், 12 டிசம்பர், 2012

இயற்கைக்கு முரணா வாழறதில் எனக்கு விருப்பம் இல்லை!


இயற்கைக்கு முரணா வாழறதில் எனக்கே விருப்பம் இல்லை! கல்யாணம், குடும்பம் எல்லாம் வாழ்வின் ஜஸ்ட் லைக் தாட் ஒரு பகுதிதான். அதை வேணாம்னு சொல்லிட்டு என்ன சாதிக்கப்போறோம் சொல்லுங்க! முதல்ல பேச்செடுத்தப்போ, இன்னும் ஒரு வருஷம் ஆகட்டுமேன்னு சொன்னேன். ஈஸ்வரிதான் 'அப்பாக்கு உடம்புக்கு முடியலை. எவ்ளோ பேர் இருந்தாலும், 'அப்பா-அம்மா' செஞ்சு வச்சாதாண்டி அது நிறைவா இருக்கும்னு சொன்னா. சரின்னுட்டேன். இன்னும் சொல்லப்போனா அத்தான் கூட தரகரைப் பார்க்க, அம்மா கூட ஜோசியம் பார்க்கன்னு நானேதான் போய்க்கிட்டு இருக்கேன். சில சமயம் எனக்கே சிரிப்பு வரும். நாம இப்படி மாப்பிள்ளை தேடி அலையறதை பார்க்கிற 'மாப்பிள்ளைகள்' என்ன நினைப்பாங்கன்னு!

தீவிரமா யோசிச்சா இதிலொண்ணும் தப்பிருக்கிறதா எனக்குப்படலை. நீங்க என்ன நினைக்கிறீங்க?  ஈஸ்வரி சொல்றாநீ அதுக்குன்னு அநியாயத்துக்கு தெளிவா இருக்கடி. ஆனா இந்தத் தெளிவும் இப்போ ரொம்ப அவசியம்தாண்டின்னு சொன்னா.

அதானால உங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்உங்களுக்கு தெரிந்த வரனிருந்தால் இந்த முகவரிக்கு அனுப்பவும்திருச்சி சந்துருவிடம் எனக்கு மாப்பிள்ளை பாருன்னு சொன்னேன். ஐயோஅம்மா உன்னை காட்டிவிட்டுட்டு அவன்கிட்ட உதை வாங்க என்னால முடியாதும்மான்னு அலர்றான். ஏன்னு கேட்டா உன்னை மாதிரி அநியாய விவரம்லாம் கட்டிட்டு வாழறது கஷடம்ங்கிறான். நிஜமா அவன் சொல்றது?

என் கண்டிஷன்னு சிலதை வீட்ல சும்மா ஜாலிக்காக சொல்லிட்டிருந்தேன். தம்பி உடனே, நீ சொல்றத பார்த்தா பில்கேட்ஸ் பையனைக்கூட வேணாம்னுதான் சொல்லுவ போலிருக்கு. ஹூம் எங்க பாடு கஷ்டம்தான்னு சொல்றான்.

30.01.2006

அப்புறம் சமீபத்துல எதாவது சினிமா பார்த்தீங்களா?  ச்சான்ஸ் கிடைச்சா 'தவமாய் தவமிருந்து' பாருங்க. நல்ல திரைக்காவியம். சமீபமா எனக்கு சினிமாத்துறையில நுழையற எண்ணம் வந்திருக்கு. (பயப்படாதீங்க ஹீரோயின் வேஷமெல்லாம் இல்ல) எடிட்டிங், கேமராஇப்படி எதாவது டெக்னிக்கலா செய்தா நல்லாயிருக்குமேன்னு தோணுது. பிராக்டிகலா ரொம்ப கஷ்டம்னு தெரியும். இருந்தாலும் ஜஸ்ட் ஒரு ஆசை. ஒருவேளை நிறைய சினிமா பாரக்கறதாலயோ என்னமோ தெரியலை!

இங்கே குளிர் ரொம்ப வாட்டி எடுக்குது. நாலு மணியிலிருந்து குளிர ஆரம்பிச்சா காலைல ஒன்பது மணிவரைக்கும் ஓவர் பனி.

சரி, வீட்டுப்பிரச்னைக்கு வர்றேன்………

இந்த கடிதத்தை தொடர்வதற்குமுன் என் மனதில் உள்ளவற்றை கொஞ்சம் சொல்லலாம்னு நினைக்கிறேன். 'படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்' என்ற பழமொழி எல்லருக்கும் தெரிந்த ஒன்றுதான் இல்லையா? இதன் நேரிடையான பொருள் என்று நான் புரிந்துகொண்டிருப்பது, எல்லா நியாய அநியாயங்களைப் பற்றியெல்லாம் பேசுவோம். ஜாதி, மதம், காதல், கற்பு என்பதைப்பற்றியெல்லாம் மிகுந்த முற்போக்குவாதிகளைப் போல வாதிடுவோம். ஆனால் நமக்கென்று வரும்போது நத்தை தலையை தன் கூட்டுக்குள் இழுத்துக்கொள்வதைப்போல வேறு ஒரு முகத்தைக் காட்டுகிறோம். இது அனைவருக்குமே பொருந்தும்.

நம் அளவில் இதை கடைபிடிக்க விருப்பமிருந்தாலும் சமூகம், உறவுகள் என்ற பிடி நம்மை இறுக்கும்போது நம்மால் எதுவுமே செய்யமுடிவதில்லை. ஏனென்றால் நம்மைச் சுற்றியிருக்கிற உறவுகள் நமக்கு முக்கியம். தாய், தந்தையின் விருப்பம் முக்கியம் என்ற நிலை அவசியமாகிவிடுகிறது. சுயநலத்தோடு என் வாழ்வு, என்விருப்பம் என்பது மனசாட்சியே இல்லாதவர்கள் எடுக்கக்கூடிய முடிவாகத்தான் எனக்குப்படுகிறது. இதனால் நம்முடைய விருப்பு வெறுப்புகளை சமன் செய்துகொள்ள வேண்டியதாகி விடுகிறது. சில நேரங்களில் நிர்பந்தங்கள் வெற்றி பெறலாம். ஆனால் அதே சமயத்தில் மகிழ்ச்சி அங்கே காணாமல் போகலாம்.

இந்தக் கடிதங்களின் கதாநாயகி, பெற்றோரின் அன்புக்கு கட்டுப்படவர். பலதும் யோசித்து முடிவெடுக்கும் திறன் படைத்தவர். ஜாதி மதம் குறித்த விசாலமான பார்வை கொண்டவர். மதங்கள் என்பது மனிதனை நல்வழிப்படுத்தவே என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர். கடிதம் எழுதும்போது சிலர் கடிதத்தின் மேல் பகுதியில் கடவுள் துணை என்றோ, அன்பே கடவுள் என்றோ, சிலர் பிள்ளையார் சுழி போட்டோதான் எழுதத் தொடங்குவர் இல்லயா? ஆனால் இவரோ ஒரு சிலுவைக்குறி, ஒரு பிள்ளையார் சுழி, அப்புறம் 786 இம்மூன்றையும் போட்டுத்தான் கடிதம் எழுதுவார். எம்மதமும் சம்மதமே என்பது அதன் பொருள்.

ஆனால் இது எல்லாம் வெறும் நட்புக்கு மட்டுமே. சக மனிதர்களாக அவர்கள் எல்லாருடனும் நான் பழகத்தயார். அது எல்லாம் ஒரு எல்லை வரை மட்டுமே. அதே சமயத்தில் காதல் கல்யாணம் என்றெல்லாம் வந்துவிட்டால் என் மதத்துக்குள் மட்டும்தான் அதிலும் குறிப்பாக என் ஜாதிக்குள் மட்டும்தான் என்பதில் உறதியாக இருந்தார். இதை நாம் எப்படி புரிந்து கொள்வது? எனக்கு இன்று வரை இருக்கும் கேள்வி இது. இதைப்பற்றி நான் விவாதிக்கும் போதெல்லாம் ஒரு பழைமைவாதியாகத்தான் தன்னைக் காட்டிக்கொள்வார். புதுமைப்பெண்ணாய் நான் நினைத்த சில பேர் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் இப்படி இருப்பது இயல்பே என்று எனக்கு இப்போது புரிகிறது.

இப்படித்தான் என்னை யாரும் காதலிக்கமாட்டார்கள் என்று நம்பிக்கொண்டிருந்த வேளையில், என் மீது அன்பு, நட்பு பாராட்டிய ஒரு பெண்மீது ஈர்ப்பு வருவது இயல்புதானே! நட்பு என்ற போர்வையில் பழகிவிட்டு திடீர் என்று காதல் என்று சொன்னால் அசிங்கமாயிருக்காதா?...  என்றாலும் என்னால் காதலைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதற்கான தருணம் பார்த்து தனியே அழைத்து என் விருப்பத்தைச் சொல்ல தயங்கியவாறு எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனையில் இருந்தபோதே, அவள் என்னைக் கேட்ட கேள்வி……. என்ன தெரியுமா? 

நீங்க என்னை 'லவ் பண்றீங்களா?'  என்னை லவ் பண்ணி ஏமாறாதீங்க, எங்கப்பா அம்மா சொல்ற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதா அவங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கேன், என்றாள். ஏன் எனக்கென்ன குறைச்சல், நான் அழகாயில்லையா என்ற என் அசட்டுத்தனமான கேள்விக்கு, நீங்க 'என் ஜாதியில்லை' என்று சிரித்தவாறே சொன்னாள். இதுதான் எதார்த்தம்.

நீங்கள் அழகாயில்லை என்றோ, உங்கள் வருமானம் போதாது என்றோ, குடும்பம் சரியில்லை என்றோ அல்லது அடிப்படையிலே நல்லவன் இல்லை என்றோ சொல்லவில்லை. 'நீங்கள் என் ஜாதியில்லை' என்று கூறித்தான் என் காதலை நிராகரித்தாள். சமூக நிர்பந்தம் அப்படி. அவளின் தந்தை எனது ஆசிரியரும்கூட என்பதால் அவரிடம் ஜாடை மாடையாகப் பேசிப் பார்த்ததிலிருந்து மிகத்தீவிரமான ஜாதிப்பற்றாளர் என்பது தெரிந்தது. எனவே படிப்பு கூட அல்லது படிப்பு கொடுக்கும் அறிவு கூட இங்கே மழுங்கிப்போவது ஆச்சர்யம்தான். எதிர்காலம், சந்ததிகள் அவர்களின் வாழ்க்கைமுறை என எல்லாமே மாறிப்போகும் என பயம் அவரின் பேச்சில் தெரிந்தது. ஆனால் உலகம் ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை எனக்குக் கற்பித்த ஆசிரியருக்கே நான் எப்படி போதிப்பது?

ஆனாலும் நான் கலப்புத்திருமணம் செய்துகொண்டேன். நான் இப்போது எந்தச்சாதியில் என் பிள்ளைகளை மணம் செய்துகொடுப்பது? நான் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை. காலம் முடிவு செய்யட்டும் என காத்திருக்கிறேன். அதற்குள்ளாகவே அவர்கள் காதலித்து ஓடிப்போனாலும் போகலாம். அல்லது எங்கள் விருப்பபடி நடந்தாலும் நடக்கலாம்.

இங்கு இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும். காதலித்தவர்கள், காதலித்துக்கொண்டிருப்பவர்கள், அல்லது காதலை ஆதரிப்பவர்கள் என எல்லாருக்குமே இன்னொரு முகம் கண்டிப்பாக இருக்கும். தன் வீட்டுப்பெண்கள் தடம்மாறும்போதோ அல்லது காதலிக்கிறேன் என்ற ஒரு வெடிகுண்டைப்போடும்போதோதான் அந்த முகம் தெரியவரும். இதை விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போம்.


திருமணங்களில் ஜாதி பார்க்கும்செயல்களால் (தவறுகளினால்) சிலர் முதிர்கன்னிகளாகவே காலம் தள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுறது. சமூகத்துக்கும் பெற்றோருக்கும் கட்டுப்பட்டு இருப்பவர்களுக்கு கிடைப்பதோ முதிர்கன்னியாகவே இருக்கும் தண்டனை. யாருமே தேவையில்லை, என் வாழ்வு முக்கியம் என்ற சுயநலத்தோடு காதலனோடு ஓடிப்போய் வாழ்கிறவர்களுக்ககோ இனிமையான இல்வாழ்க்கை! என்ன முரன்பாடு இது?

என் தோழியின் பிரச்னையும் அதுதான். இந்தக் கடிதம் எழுதும் காலகட்டத்தில் 'மாப்பிள்ளை' பார்க்கத்தொடங்கியவர், இன்றளவிலும் பார்த்துக் கொண்டேதானிருக்கிறார். நான், 'மாப்பிள்ளை செட்டாகிவில்லையா' என்று கேட்பதையே நிறுத்திவிட்டேன். பதினைந்து வருடங்களுக்கு முன் அனைவரையும் உதாசீனப்படுத்திவிட்டு ஓடிப்போன அவரின் தங்கையோ குழந்தை குட்டி என இல்வாழ்க்கையில். இவரின் இன்னொரு மூத்த சகோதரியின் கதையும் இதுதான். குடும்பத்துக்காகவே உழைத்து, ஓடாய்ப்போய் தன் திருமணம் பற்றியே யோசிக்காமலிருந்தவர், இப்போது காலம் கடந்த சூழ்நிலையில் தனக்கென்று ஒரு துணை வேண்டும் என்று முடிவெடுத்து தன் தாயிடமும், தங்கைகளிடமுமே வெட்கம்விட்டு கேட்கும் நிலையில்...  இத்தனை வயதாகிய பின் கல்யாண ஆசையா? அதுவும் வேறு ஜாதியிலா? அந்தக் குடும்பத்தினரின் பிரதிபலிப்பு என்னவாயிருக்கும்?

இது உண்மையான சம்பவங்களின் தொகுப்புதான் என்றாலும், என்னை நம்பி பகிர்ந்துகொண்ட குடும்ப விஷயங்களை இப்படி பொதுவில் பகிர்வதற்காக சங்கடமடைகிறேன். அதனால் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டிருக்கின்றன. இது தவறுதான் என்றாலும்,  என் வாழ்வின் நடப்புகளை, என்னோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வியலை பதிவுசெய்ய விருபம்பியே இந்த வலைப்பக்கத்தை ஆரம்பித்தேன் என்பது நான் ஆரம்பத்திலேயே சொன்னதுதான்.


கடிதக்கனவுகள் தொடரும்….