மயிலாடுதுறை மாலாவின் கடிதங்கள்
வணக்கம்! நான் மலா! தங்கள் கடிதம் கண்டேன். எனக்கு பரிசுத்தொகை இன்றுதான் கிடைத்தது. தங்கள் கடிதம் 25.03.1998 அன்று கிடைத்தது. இன்று காலையில் பரிசுத்தொகை கிடைக்கவில்லை என்று ஒரு கடிதம் எழுதி அதை போஸ்ட் பண்ணுவதற்குள் பணவிடை வந்துவிட்டது. தங்களுக்கும் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். கிடைத்துவிட்டதா எனக்குத்தெரியப்படுத்துங்கள். நான் இந்த பத்திரிகையை எப்போதும் வாங்குவதில்லை. யதார்த்தமாக எழுதி அனுப்பினேன். ரெகுலராக வாங்காததால் தங்களது கட்டுரையை படிக்கவில்லை. SORRY, ANYWAY வாழ்த்துக்கள். என்னைப் பாராட்டியதற்கு நன்றி!
உங்களது கையெழுத்து மிகவும் அழகாக உள்ளது. 'அச்சில் கோர்த்தது போல' என்பார்களே அதுபோல். ரியலி சூப்பர்ப். போட்டி 7 ற்கு அனுப்பியுள்ளீர்களா? நான் ஏதோ கிறுக்கி அனுப்பியுள்ளேன். தங்களுக்கு விருப்பமிருந்தால் என்னை 'PEN FRIEND' ஆக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கடிதம் எழுதுங்களேன். பரிசுத்தொகை கிடைத்ததும் தெரியப்படுத்துங்கள். மற்றவை பிறகு....
என்றும் நட்புடன்,
மாலா.
மயிலாடுதுறை.
முதன் முதலாக ஒரு போஸ்ட் கார்டில் ஆரம்பித்த இந்த நட்பு கடிதப்போக்குவரத்து இல்லாவிட்டாலும் இன்றுவரை தொடர்கிறது. எப்போதோ ஒரு முறை கைப்பேசியில் பேசிக்கொண்டுதானிருக்கிறோம். முகம்
தெரியாமல் ஆரம்பித்த நட்பு,
குடும்ப விஷயங்களையும் பரிமாறிக்கொள்வது வரை
தொடர்ந்தது. 1998 ல் ஆரம்பித்த போது மாலா எனக்கு எழுதிய கடிதம்
மேலேயும், நண்பர்களான பின்பு 2006- ல் எனக்கு எழுதிய கடிதம் கீழேயும் இருக்கிறது.
அன்புடையீர், 28.01.2006
எப்படியிருக்கிறீர்கள்? நலமா? உங்கள் கடிதம் கிடைத்தது. சம்பிரதாயமா
நலம் விசாரிச்சிகூட லெட்டர் எழுதாம ஒரு வருஷத்துக்கும் மேல இருந்திருக்கேன். என் மேல கோபமே வரலயா?!
ஆனா எனக்கே என் மேல கோபம்தான், ஏனிப்படி ஒருவருடனும் கடிதத்தொடர்பில்லாம விட்டேத்தியா இருக்கோம்னு.
காரணம்
சொல்லனும்னா நிறைய அடுக்கிக்கிட்டே போகலாம்… ஆனா நான் சொல்லப்போறதில்ல! பாபுகிட்டக்
கூட எப்பவாவது போன்ல பேசறதோட சரி. பஹ்ரைனில்
இருக்கும் பஹ்ருதீன்கூட என்மேல பயங்கர கோபத்துல இருக்கு. போன வருஷம் ரம்ஜான் அப்போ எங்க வீட்டுக்கு வந்து நிறைய பொருட்கள்
கொடுத்துட்டுப்போச்சு. அப்போ நான்
வீட்ல இல்லை. பிறகு போன்ல பேசினேன். அவங்க வீட்டுக்கு வரச்சொன்னார். பல வேலைகள்ல 10 நாள் கழிச்சி, அன்னிக்கு
போலாம்னு அவங்க வீட்டுக்கு போன் பண்றேன். முதல் நாளே ஃபிளைட் பிடிச்சிடுச்சாம். என் போன் நம்பரைத் தொலைச்சிட்டு ரொம்ப தவிச்சான்னு அவங்க அக்கா சொன்னாங்க. என் மேல கோபம் இருக்கிறது நியாயம்தானே! ஆனா இன்னிக்குவரைக்கும் மனசுக்குள்ள ஆயிரம்
தடவை 'சாரி'
கேட்கறேன். லெட்டர்
எழுதலை!?
உண்மையைச்
சொல்லனும்னா…. பணத்தை
துரத்திகிட்டிருக்கேன். ஏனிப்படி
படிச்சி, நாலெழுத்து தெரிஞ்சிகிட்டு
வேலை காசுன்னு ஓடறோம்னு இருக்கு. இப்படி
உட்கார்ந்து புலம்பக்கூட நேரமில்லாம ஓடவேண்டியிருக்கு? நமக்கான கடமைகள்னு வரும்போது…. அதுக்கு கொடுக்கக்கூடிய
விலைகள் அதிகம்தான் போலிருக்கு.
நம்ப
மாட்டீங்க இந்த லெட்டர் எழுத ஆரம்பிக்கிறேன். மணி இரவு 12.00. எப்படியும்
முடிக்க ஒரு வாரம் ஆகும்னு நினைக்கிறேன். டைரி மாதிரி தேதி போட்டு எழுதிடறேன். என் தம்பிதான் அன்னிக்கு போன் பண்ணினான். அடுத்தநாள் லெட்டர் எழுதிட்டியான்னு கேட்டான். இல்லைன்னேன். எங்கிட்டியாவது
சொல்லேன். நானாவது எழுதறேன்னான்-ரொம்ப கடுப்பா! (அவங்க அப்பா அம்மாவுக்கு 2 வரி
கார்டு எழுதச்சொன்னாக் கூட முடியாதுன்னு சொல்றவன்). இலவச இணைப்பா…
நீயெல்லாம் பிரண்ஷிப்புக்கு லாயக்கேயில்லாத ஆள்னு
திட்டு வேற!
ஜூன்
மாதம் உங்களுக்கு நான்கு பக்கம் எழுதி வச்சிருந்தேன். ரொம்ப கேப் விழுந்திருச்சி. அந்த பேப்பர்ஸை எங்கே வச்சேன்னு தெரியலை. இந்த லெட்டர்ல அந்த மேட்டர்சையும் சேர்த்து எழுதிடறேன்.
எங்க
வீடு எப்போதும் போல சண்டையும் சமாதனமுமா நீருபூத்த நெருப்புமா போய்க்கிட்டிருக்கு. அப்பா உடல்நலம் பரவாயில்லை. பனிக்காலம் என்பதால் இருமலும் வீசிங்கும்
அதிகம்தான். அடிக்கடி மெட்ராஸ்
போயிட்டு வராங்க. அம்மா எப்பவும்போல
நலம். சாந்தி ஓகே. ஈஸ்வரி
இப்போ அண்ணா நகரில் ஒரு ஸ்கூலில் வேலை பார்ப்பதால் ஜாகையும் அங்கேதான். குழந்தையையும் அங்கே சேர்த்துவிட்டாள். சுஜி பெண்ணை 3 மாசமா எங்க வீட்ல விட்டிருக்கா. புவனாவிற்கு இரண்டாவதா மகன் பிறந்திருக்கான்.
இந்த
வருட தீபாவளிக்கு முதல் நாள், தீபாவளிக்கெல்லாம்
மெட்ராஸ் ராமச்சந்திராவுல வாழ்க்கை வெறுத்து உட்கார்ந்திருந்தேன். புவனாவுக்கு அங்கதான் பிரசவம். சுதா
கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்டாள்னு சொன்னா அது பொய். அடிக்கடி ஞாபகம் வர்றதில்ல. அப்பாதான் தவறுதலா அடிக்கடி சுதா சுதாங்கிறாங்க. அப்போ சுத்தியிருக்கிறவங்க எல்லாம் ரணப்படுறோம். அம்மா உடனே அழுவாங்க. சுஜி
வீட்டுக்குப் போன எங்க ஊர்க்காரப்பையன் சுதாவையும் பார்த்துப் பேசியிருக்கான். ஆனா எனக்கு அது பிடிக்கல. அவனைக்கண்டிச்சேன். ஏனோ மனசு வெறுத்துப்போச்சு!
என்னைக்
கல்யாண கோலத்துல பார்க்கணுமா? கவலைப்படாதீங்க. சீக்கிரம் பாரத்துடலாம். எஸ். ஜாதகக்கட்டு வெளில எடுத்து 2, 3 மாசமாச்சு. அங்கங்க
விநியோகிச்சிட்டிருக்கோம். பெரிய
அத்தான்தான் பார்க்கிறார். வூட்ல
உள்ள ஒவ்வொருத்தரும் அவங்க அவங்களோட கனவு, ஆசை எதிர்பார்ப்பு, அக்கா
எல்லாம் எதிர்பாரத்து கிடைக்காத வாழ்க்கை… இப்படி எல்லாருடைய விருப்பங்களையும் ஆளுக்கு ஒண்ணா
வெளியிட்டுக்கிட்டிருக்காங்க. அப்படித்தான்
மாப்பிள்ளை பார்க்கப்போறம்னு சொல்றாங்க. எனக்கான வாழ்க்கையை எல்லாரும் ரொம்ப ஆசையா கனவு கண்டுக்கிட்டிருக்கிறதுனால, எனக்குன்னு பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
கடிதக் கனவுகள்
தொடரும்…..
தொடர்புடைய இடுகைகள்
2 கருத்துகள்:
இது உண்மையா அல்லது கற்பனையா? உண்மை சம்பவம் என்றால் இப்படி ஒரு நட்பு இருப்பதுக்கு சந்தோசப்படுவேன். கற்பனை என்றால் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
தொடருங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
உண்மையா அல்லது கற்பனையா? இதில் என்ன சந்தேகம் நண்பரே! இது உண்மையான கடிதம்தான் சந்தேகம் வேண்டாம். ஒரு வார இதழ் அறிவித்த பரிசுப்போட்டியில் நான் இரண்டாம் பரிசும், இந்த மாலா மூன்றாம் பரிசும் பெற்றபோது பரிமாறிக்கொண்ட அஞ்சலட்டைக் கடிதத்தொடர்பே பிறகு பக்கம் பக்கமாக எழுதும் அளவிற்கு வளர்ந்தது. அவர் எனக்கு எழுதிய முதல் அஞ்சலட்டைக் கடிதமும், பல வருடங்கள் கழித்து விரிவாய் எழுதிய கடிதமும் தேதியோடுதான் வெளியிட்டிருக்கிறேன் நண்பரே!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!