நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 அக்டோபர், 2013

என் நண்பருக்கு நேர்ந்த அவலம்!

காவல் துறையின் மீது மக்களுக்கு இருக்கும் மதிப்பே தனிதான். எப்போதிலிருந்து என்பதுதான் தெரியவில்லை. இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்களின் கைக்கூலிக்கு அடிமைச் சேவகம் ஆரம்பித்தபோதே இந்த மரியாதைக்கு(!?) உரியவர்களாக ஆனார்களோ என்னவோ தெரியாது. 

ஆனாலும் மக்களுக்கு காவலனாக இருக்க வேண்டிய காவல் துறை மரியாதை இழந்து போனது கூட பரவாயில்லை. அதிகாரங்களில் இருக்கும் கட்சியின் வட்டம் மாவட்டத்துக்கெல்லாம் கூட அடிமைச் சேவகம் பார்ப்பதுதான் வேதனை. சாமான்யன் ஏதோ ஒரு காரணத்துக்காக (தவறு செய்திருந்தாலும் செய்திருக்காவிட்டாலும்) காவல் நிலையம் சென்று முழுசாய் திரும்பி வருவது என்பது நடக்காத காரியம்.

விபரம் தெரிந்த படித்தவர்கள் எனில் கொஞ்சம் வாதாடியோ அல்லது போராடியோ பார்க்கலாம். ஆனாலும் பொய் வழக்கு என்கிற ஆயுதம் எப்போது பிரயோகிக்கப்படுமோ என்று அஞ்சவேண்டிய நிலைதான் அவர்களுக்கும். கிடைக்கிற கொஞ்ச அவகாசத்திலேயே எதிர்த்துப் பேசுகிற (அவர்கள் மொழியில்) சட்டம் பேசுகிறவரை உண்டு இல்லை என்று ஆக்குவதில் மாகா கில்லாடிகள் இந்த காவல்காரர்கள்.

இதற்கு பயந்துதான் நல்லவர்கள் பலரும் காவல்நிலைய வாசலை மிதிப்பதையே இழுக்கு என்று எண்ணத் தொடங்கினார்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கோ இது ஒரு பிழைப்பின் ஒரு பகுதி. மான அவமானங்களுக்கு அங்கே இடமில்லை. இன்னும் சொல்லப்போனால் இது அவர்களுக்கு கிடைக்கிற விளம்பரம். அதனால்தான் காவலர்கள் கைது செய்து கொண்டுபோகும்போது கூட கவலையே இல்லாமல் கையசைத்து புன்சிரிப்போடு செல்ல முடிகிறது இவர்களால்!

ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காகவும், சமூக அவலங்களுக்காகவும் குரல் கொடுப்பவர்களுக்கு அப்படியில்லை. ஒரு முறை காவல் நிலையத்தின் பதிவேட்டில் பெயர் ஏறிவிட்டால்  வாழ்க்கை முழுவதும் போராட்டமாகக் கூடிய அபாயமுண்டு. அதனால்தான் குழுவாக அமைப்பாக போராடத் துவங்கியது. தனிமனித போராட்டங்கள் இப்படிப்பட்ட காவல்துறை இருக்கும் நாட்டில் அடக்கி ஒடுக்கப்படுவதில் ஆச்சர்யமேதுமில்லை.


என்னுடைய நண்பர் திரு. சண்முகம், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் குரிசிலாப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். 1986-லிருந்தே அறிமுகமானவர். சிறந்த அரசியல் விமர்சகர், சமூகப் போராளி, படிப்பாளி, வழக்குறைஞர், தொழில் நுட்ப வல்லுனர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவரது வாசகர் கடிதம் வராத பத்திரிகையே கிடையாது. பத்திரிகைகளில் இப்படி வாசகர் கடிதம் எழுதுவது என்பதை இவரைப் பார்த்துதான் நான் கற்றுக்கொண்டேன். 

1988-ல் 'கல்கி' வார இதழில் மாவட்ட வாரியாக பிரச்னைகளை ஆராய்ந்து சிறப்பிதழாக வெளியிட்டுக்கொண்டிருந்த நேரம். வடார்க்காடு மாவட்ட பிரச்னைகள் குறித்து எழுதி அனுப்பலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன், நான் எங்களூரின் குடிநீர்ப்பிரச்னை, பள்ளிக்கட்டிட பிரச்னை, நூலகம் குறித்த பிரச்னை என முக்கியமான சிலவற்றை பட்டியலிட்டு அனுப்பி வைத்தேன். அதே நேரம் எனது நண்பரான சண்முகமும் எழுதியனுப்பியிருக்கிறார். 

சிறப்பிதழ் வெளிவந்தபோது நான் அடைந்த அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காரணம், நான் குறிப்பட்டிருந்த பிரச்னைகள் குறித்த புகைப்படம், ஊர்ப்பெயர் முதலானவை மேலட்டையிலேயே வெளியிட்டிருந்ததுதான். இன்னொரு ஆச்சர்யமும் அதில் இருந்தது. அது திரு. சண்முகம் அவர்களின் புகைப்படமும் மேலட்டையிலேயே இருந்ததுதான். அது முதற்கோண்டு 'தினமணி' துக்ளக் போன்ற பத்திரிகைகளில் எங்களது இருவர் வாசகர் கருத்துக்களும் தவறாது இடம் பிடிக்கும்.

இந்த 'மறக்க முடியாத நினைவுகளை' ஆரம்பித்த புதிதில் அவரது சில கடிதங்களையும் பதிவாக்கியிருந்தேன் (இணைப்புகள் கடைசியில்). ஏதோ சில காரணங்களால் அவரது தொடர்பு விட்டுப்போயிற்று. சமீபத்தில் பெங்களூர் சென்றிருந்தபோது என் நண்பன் சுப்பிரமணி மூலமாக மீண்டும் அவரது தொடர்பைப் பெற்றேன். இரண்டு நாளைக்கு முன்பு  திடீரென்று ஒரு குறுஞ்செய்தி. அதில் இந்த வார 'ஜூனியர் விகடனை'ப் பார்க்கவும் என்றிருந்தது. அடுத்த நாளில் மேலே உள்ள ஜூ.வி.யின் செய்தி தாங்கிய புகைப்பட நகலையும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.

செய்தியின் சாரம் இதுதான், முழு நேர மக்கள் பணியில் சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் இவரை கடந்த 1988 முதல் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் 'ரௌடிகள் மற்றும் கேடிகள்' லிஸ்டில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். நேரிடையாக மோதினால் நியாயம் கிடைக்காது என்பதானால் ஜூனியர் விகடனை அனுகியிருக்கிறார். இந்த விஷயம் 29.09.2013 ஜூ.வி.யில் வெளிவந்திருக்கிறது. மாவட்ட எஸ்.பி.யிடமும், உள்ளூர் காவல்துறையிடமும் ஜூ.வி. பேசியிருக்கிறது. விரைவில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

திரு. சண்முகம் எனக்கு கடந்த காலத்தில் எழுதிய கடிதங்களின் இணைப்பு;


சனி, 14 செப்டம்பர், 2013

விகடன் தந்த நட்பு


அன்புள்ள நண்பருக்கு,,
தோழி பாகீரதி எழுதிக்கொள்வது. தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி. ஆனந்தவிகடன் செய்தி நான் எதிர்பாராத, என்னை பல சங்கடங்களுக்கு உள்ளாக்கிய ஒன்று.

எனது வகுப்புத்தோழர் ஒருவர் ஆனந்த விகடனில் புகைப்படக்காரராக இருந்தார். ஒரு நாள் என்னிடம் வந்து உனது எதிர்கால கனவு என்னவென்று கேட்டார். பதிலளித்தவுடன் எனது சில புகைப்படங்களையும் வாங்கிச்சென்றார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.

ஆனால் இன்று தங்களைப் போன்ற ஒருவர், இருவர் அல்ல முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் கடிதம் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்கள். இதற்கு காரணம் எனது வகுப்புத்தோழர்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நான் என் குடும்பத்தில் பட்ட, பட்டுக்கொண்டிருக்கும் கஷ்டத்தினை நினைத்து வேதனையடையாத நாளில்லை. பணம் என்ற ஒரு காகிதம் செய்யும் லீலைகளுக்கு அளவே இல்லாது போய்விட்டது. அதனால் நாங்கள் படும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. அதனாலேயே என்னப்போல துன்பப் படுபவர்களின் நிலைபால் எனக்கு இரக்கம் உண்டு. நான் பார்த்துக்கொண்டிருக்கும் சில மனிதர்களின் தீராக் கஷ்டத்தினை என்னால் தீர்க்கவியலுமா என்று எண்ணி ஏங்குவதுண்டு.

என் வீட்டிற்கு அருகில் உள்ள ஒருவரின் மகள் வயது 13-இருக்கும். மனவளர்ச்சி குன்றிய பெண். அவளால் அவள் தாய்-தந்தையர் படும் துன்பம் அதிகம். பருவமடைந்த எந்தவித உடல் மன வளர்ச்சியில்லாத அந்தப் பெண்ணை பாதுக்காக்கவும், மருத்துவத்திற்காக்கவும், கல்விக்காகவும் அவர்கள் படும் அல்லல் அதிகம். அதைப் பார்க்கும் போதெல்லாம் நான் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றேன்.

இது தவிர, பெற்ற தாய்-தந்தையரை வயது முதிர்ந்த பின் பிள்ளைகள் அவமதிக்கின்ற மன்னிக்கமுடியாத செயல், கணவன் சரியில்லாத காரணத்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கூலி வேலைக்கு அனுப்பும் நிலை. இதெல்லாம் நான் நாள்தோறும் பார்த்து மனதுக்குள் வருந்தி, என்னால் முடிந்த அவர்கள் மகிழ்ச்சியடையக் கூடிய சின்னச்சின்ன உதவிகளை செய்ய ஆசைப்படுபவள். இதைத்தான் என் வகுப்புத் தோழரிடம் ‘மற்றவர்க்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தேன். இந்த ஒரு வரிதான் நான் சொன்னது.
உண்மையில், என் பேட்டியில் ‘அன்னை தெரசா’ பற்றி நான் சொல்லாததை சேர்த்து எழுதி என்னை பெருமைப் படுத்தியிருக்கின்றனர். நான் சொல்லாத ஒரு செய்திக்காக எனக்கு கிடைத்த இந்த புகழ்ச்சியை என் மனம் ஒத்துக் கொள்ளவே இல்லை. அன்னையின் மூச்சுக் காற்றுக்கு ஈடாக ஒருவர் பிறக்க இயலுமா என்பது கூட சந்தேகம். சாதாரண பேட்டியை இந்த அளவுக்கு ஏன் பத்திரிகை மிகைப் படுத்தியது என்று என் நண்பன் மேலேயே எனக்கு கோபம்தான்.

தாங்கள் இப்போது என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என் குடும்பம் நடுத்தர வர்க்க நிலையைத் தொட தருமாறும் குடும்பம்தான். பொருளாதார நிலையை பெருக்கிக் கொள்ள முயற்சியை மேற்கொண்டுள்ளேன். மனசாந்திக்காக என் வருமானம் மூலம் மற்றவருக்கு உதவ நினைக்கும் பெண் அவ்வளவுதான். 

நான் எல்லோரிடமும் நன்றாக பழகுவேன். அதே சமயம் ரோம்பவும் இரக்கப்படுவேன். இப்படி யாராக்காவது உதவலாமே என்று ஒரு தொண்டு நிறுவனத்தில் இணைந்தேன். ஆனால் அதிலோ பணக்காரர்களிடமிருந்து பணம் வசூலிப்பதையை சேவை மனப்பான்மையாக கொண்டிருந்ததால் அதிலிருந்து விலகிவிட்டேன். உண்மையான அன்பு, இரக்கம் உள்ளவர்களையே நான் அங்கு எதிர்பார்த்தேன். அது அங்கு யாரிடமும் இல்லை.

எனது அம்மா உங்கள் கடிதம் படித்து மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனந்த விகடனில் வந்த ‘என் கனவு’ என்ற சிறிய பேட்டி மூலம் தங்களைப் போன்ற நட்புகள் கிடைத்ததே மிகப்பெரிய வரம். அதற்கு காரணமான விகடனுக்கும் கோடி நன்றியினை தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறேன்.

அன்புடன் பாகீரதி.

திங்கள், 17 ஜூன், 2013

காதலை நட்புச்சாயம் பூசி மறைக்கலாமா?



 

அன்புள்ள நண்பருக்கு,                                 22.02.2000

எப்படி இருக்கிறீர்கள்? நலமா? மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் நலமா? நான் மற்றும் வீட்டில் அனைவரும் நலமே!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எளிமையாக இருந்தது. நன்றாக எழுதி உள்ளேன். அறுவடைக் காலம் என்பதால் அப்பாவுடன் சேர்ந்து நெல் பிடிப்பதில் பிஸியாக உள்ளேன். சீசன் முடிஞ்சதும் நீ மெட்ராஸ் போறத வெச்சுக்கோன்னு சொன்னாங்க. அதனால இப்போதைக்கு அப்பாவோட வொர்க்கிங் பார்ட்னரா (!) இருக்கேன். அதனாலதான் உடனே லெட்டர் எழுத முடியலை.

என்ன! இலங்கையிலிருந்து கடிதம் வந்ததா? எவ்வளவு ஆச்சர்யமான விஷயம். என்ன எழுதியிருக்கிறார் யாழினி? நீங்கள் பதில் கடிதம் போட்டுவிட்டீர்களா?

எனது தங்கையைப் பார்த்தால் பேசுங்களேன்! இதிலென்ன தயக்கம்? நல்லா படிக்கச்சொல்லுங்க. அதெல்லாம் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டா.

அப்புறம் உங்கள் தோழியைப் பற்றி எழுதியிருந்தீர்கள். நான் எதுவும் தப்பா நினைக்கல. உங்களோட அனுபவங்கள என்னுடன் பகிர்ந்துக்கறீங்க. எல்லாருடைய அனுபவமுமே நமக்கு ஒரு வாழ்க்கைப் பாடம் என்பது என் கருத்து. அதனால நீங்க எழுதுங்க.

எனக்குத் தோணும் கருத்துக்களையும் சொல்லலாம்தானே?! புரட்சியாய் பேசிய, அறிவாளியாய் இருந்த உங்கள் தோழி இரட்டை வேடம் போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். உள்ளுக்குள் உங்கள் மேல் இருந்த காதலை, நட்புச் சாயம் பூசி மறைத்திருக்கிறார்.

நண்பராக நினைத்திருந்தால் திருமண பத்திரிகையைக் கொடுத்துவிட்டு, என் வாழ்க்கையை கெடுத்துடாதீங்கன்னு சொல்லமாட்டார். அப்புறம் உங்களை வேறு பெண்ணுக்கு விட்டுக்கொடுக்கிறத தாங்க முடியலைன்னு அழுது அரற்றவும் மாட்டார்.

அதானலதான் காதலிப்பவர்களுக்கு துணிவு வேணும்னு சொல்றாங்க போலிருக்கு!?

அதே சமயம், இந்த தலைமுறைல நம்ம வரைக்கும்கூட ஜாதி என்பது பிரிக்க முடியாத பெரிய சக்தியாதான் இருக்கு இந்த சமூகத்துல. நம்மைப் போன்றவர்கள் அதை ஒழிக்க நினைத்தாலும் நடக்காத விஷயமாகத்தான் இருக்கிறது அது.

எங்க அக்காவுக்கு வரன் பார்க்கிறோம். Msc., B.Ed., படிச்சிருக்காங்க. படிப்புக்கேத்த வரன் எங்க ஜாதில கிடைக்கிறது கஷ்டம். நான் சொல்றேன், “Cast” வேண்டாம்னு சொல்லுங்க ஒரே மாசத்துல கல்யாணமே முடிச்சிடலாம்னு. ஆனா எங்க வீட்ல யாரும் ஒத்துக்கலை. அப்படி இருக்க எழுத்தளவுல எழுதறதாலயோ, பேசறதாலேயோ ஒண்ணும் மாறிடப் போறதில்ல இது.

வேணும்னா நாம நம்ம சந்ததிகள் மேல இந்த ஜாதிச் சாயம் பரவ விடாம தடுத்து அவங்கள உருவாக்கலாம்.

புரட்சியாய் செய்த எத்தனையோ திருமணங்கள் புஸ்வாணமாகிக் கொண்டிருக்கின்றன. காதல்ன்ற பேர்ல ஒருத்தரை ஒருத்தர் நம்பி, பெத்தவங்கள எதிர்க்க முடியம தப்பியோடி, சில காலம் வாழ்ந்து பிறகு அதுவும் வெறுத்துப்போய் பரஸ்பரம் குறைகூறிக்கொண்டு ஏனோ தானோவென்று வாழ்ந்து (பிரிந்து) வருகின்றனர்.

காதலில் இருக்கும் வேகம் இவர்களுக்கு வேறெதிலும் இல்லை. இப்படி விட்டேற்ற்றியாய் வாழ்வதைவிட, பேசாமல் பெற்றோர் பார்க்கும் அந்த ஜாதிவாழ்க்கையை வாழ்ந்துவிடலாம்?!

அதற்கும் மேல் நமது கலாச்சாரம் காலங்காலமாய் உபயோகித்து வரும் வார்த்தை கற்பு. கற்புன்னா என்ன? அது உடல்ல இருக்கிற ஒரு வஸ்துவா? இல்ல டி.என்.. ஜீன் போன்ற சமாச்சாரங்களா?

ஏன் அப்படின்னா அது ஆணுக்கு கிடையாதா? திருமணம் கற்பை பாதுகாக்கிறதா? விபத்தா நடந்தா கூட கற்பை பறிகொடுத்தாட்டான்னு சொல்றவங்க திருமணமானவங்களை சுமங்கலின்னு சொல்லுவதேன்?!

‘ஒருவனுக்கு ஒருத்தி’ன்ற கொள்கைதான் தடம் புரண்டு கற்புன்னு மாறி இருக்கணும். ராஜேஷ்குமார் சொல்வார் – இந்த உலகத்துல காற்றை சுவாசிக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய விஷயம் கற்புன்னு. ஒழுக்கம், நேர்மைன்னு எல்லாத்தையும் சேர்த்து கற்புன்னு ஒரு வார்த்தையைச் சொல்லி பெண்களுக்குன்னு முத்திரையும் குத்திட்டாங்க.!

பெண்களா இதை புரிஞ்சிகிட்டு வெளில வந்தாதான் இதுக்கு விடிவு காலம்.

அதுக்கும் மேல நம் மக்களோட சிந்தனை எப்போதும் உடலைப் பற்றியதாகவே இருப்பது. அதுல முக்கிய பங்கு தமிழ் சினிமாவுக்குத்தான். ஆதி காலத்திலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் இப்படியே தொடர்கிறது.

இதனால்தான் ஆண்-பெண் நட்பு கூட இங்கு அன்னியமாய், வித்தியாசமாய் பார்க்கப்படுகிறது. அடிமட்டத்திலிருந்து மாறணும். வாழ்க்கைல செக்ஸ் ஜஸ்ட் சாதாரணம்தான் எனும் எண்ணம் வரணும். அதன் பிறகே நல்ல சிந்தனைகள் எழும்பும். மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.

விடுதலை உணர்வை விரும்புகிற பெண்களுக்கு அவர்களது கணவர்கள் தடையாய் இருப்பதாலேயே அவர்கள் தனித்தே வாழலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர் போலிருக்கிறது.

சுய சம்பாத்தியம் இருக்கும்போது பெண்ணுக்கு ஒரு தைரியமும், எதையும் எதிர்கொள்ளும், சமாளிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.
அப்படி இல்லாதபோது ஆணை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும், அதனாலேயே எதையும் எதிர்க்க முடியாமல், அவனுக்கு பயந்து அடிமையாய் வாழ்தலும் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.

நான் ஆனந்தவிகடன் படிப்பதில்லை. ஏற்கனவே காசை பேப்பராக்கியே வீண்டிக்கறேன்னு திட்டறாங்க. பட்ஜட் பற்றாக்குறை வேறு. அதனால்தான் வேறு புத்தகங்கள் எதையும் சேர்க்கவில்லை என் லிஸ்டில்.

இன்னும் கொஞ்ச நாள்ல மெட்ராஸ் வந்துடுவேன். நல்ல லைப்ரரியா சொல்லுங்க, அங்க வந்து என் படிப்பு ஆசைக்கு தீனி போட்டுக்கிறேன். எனக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் படைப்பை (ஜெயகாந்தனுடையதுன்னு நினைக்கிறேன்) படிக்க ரொம்ப நாளா ஆசை. நீங்க படிச்சிருக்கீங்களா?

அப்புறம் உங்க சிங்கப்பூர் தோழி ஜென்ஸி வீட்டுக்கு வந்தாங்களா? உங்களுக்கு வேலை விஷயமா என்ன சொன்னாங்க? எண்ணம் போல வாழ்க்கைன்னு சொல்வாங்க, அதனாலதான் உங்களுக்கு நல்ல நட்புகள் கிடைத்திருக்கிறது.

என் நண்பர் கோபு நிறைய சின்னச்சின்ன பரிசுகள் வாங்கியிருக்கார். கவிதை, விமர்சனம், துணுக்கு… என்று நிறைய படைப்புகள் வெளியகியிருக்கு. வாசகர் வட்டத்தில் நன்கு அறிமுகமான நபர். ‘பாக்யா’தான் அவரோட ஆஸ்தான பத்திரிகை. பெரிய விஷயமா இப்போதான் கவிதை நூல் எழுதி அதை அச்சுக்கு கொண்டுவர முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறார்.

பெற்ற தாய் இறந்தால் கூட அதிலும் அரசியல் கலந்து அசிங்கம் பண்ணுவார்கள் போலிருக்கிறது நம் அரசியல்வாதிகள். தரும்புரி பஸ் எரிப்பு சம்பவத்தில் கழக கட்சிகள் ஒன்றையொன்று சாடிக்கொண்டிருக்கிறதே தவிர, அய்யோ… கண்ணு முன்னாடி உயிரோட எரிஞ்சாங்களேங்கிற ஒரு மனிதாபிமானம் எவருக்கும் இல்லை.

இன்னிக்கு பார்லிமெண்ட்ல மொராக்கோ பிரதமரை வச்சுகிட்டு நம்ம எம்.பி.ங்க குழாயடி சண்டை போட்டுக்கிட்டத பார்த்தா இங்க ஒரு ‘முஷாஃரப்’ இருக்கலாமோன்னு தோணுது.

வேறென்ன… நிறைய எழுதுங்கள். எனக்குள் தெளிவு வர உங்கள் எழுத்து உதவியாய் இருக்கும். உங்கள் மகள்களை நல்லா ‘ஷேப்’ பண்ணுங்க. இந்த வயசிலேயே ஆரம்பிச்சாதான் அவங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்.

வேறொன்றும் விஷயமில்லை. மற்றவை தங்கள் பதில் கண்டு.

மாலா, மயிலாடுதுறை.
24.02.2000

வியாழன், 6 ஜூன், 2013

என் இனிய ஸ்நேகிதிக்கு....


இது அன்பா? அடிமைத்தனமா? எனக்கு உன்னைத் தவிர வேறு ஸ்நேகிதிகள் இருந்தால் பொறாமைப்படுவியா? உனக்கு என்னைத் தவிர வேறு ஆண் நண்பர்கள் இருந்தால் காழ்ப்புணர்ச்சி வருமா? நான் சாதாரண நலம் விசாரிக்கும் பல தோழிகளைப் பெற்றிருந்தாலும் உன்னுடன் மட்டுமே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் அந்தரங்கமான நெருங்கின நண்பனாக இருக்க விரும்புகிறேன்.

இது அன்புக்கட்டுப்பாடா? இல்லை என்னுடன் மட்டுமே நெருக்கமாக இருக்கவேண்டும் என்ற அடிமைத்தனமா? புரியவில்லை. பெண்கள் பொதுவாய் தன்னுடையவனை அடுத்தவருக்கு விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. அதுபோல நாங்களும் இருக்கக்கூடாதா என்ன?

பெண் அண்மை, பெண் வாசனை என்னவென்று 27, 28 வயதில் எனக்கு உணர்த்திய அந்த முதல் தோழியைப் பற்றி சொல்லவா? என் அந்த வயது வரை என் நிலைமை என்ன தெரியுமா? இப்போது உன் புலம்பலைப் போலத்தான் அன்று என் நிலைமை!

என்னடா செய்யனும் உன்னை? ப்ளீஸ் அது மட்டும் வேண்டாம். என்னக் கட்டிக்கோ. இறுகித் தழுவிக்கோ! உனக்கு இந்த அளவுக்காவது நான் ஆறுதல் கொடுக்கலேன்னா நான் என்ன நெருங்கிய தோழி?



‘கற்பு பற்றி எனக்கு கவலையில்லை. அதனால எனக்கு கற்பு போயிட்டுதா நான் நினைக்கலை. ரொம்ப கஷ்டமாயிருந்தா "அந்த மாதிரி" பொண்ணுங்க கிட்ட போயிட்டுவா. ஆனா இதுக்கு மட்டும் என்னக் கூப்பிடாதே! என் புருஷனுக்கு நான் முழுசா போகணும்’. ஏனோ இது மட்டும் ஒப்பலைடா. அப்படி கண்டிப்பா நான் வேணும்னா ஜடமாய்த்தான் நான் வருவேன். அன்னிக்கே என் மனசிலே இருந்து உங்களை தூக்கி எறிஞ்சிடுவேன்.

என்னவோ எனக்கு அது அசிங்கமா படுது. அந்த அசிங்கம் என் புருஷனோட போகட்டும். இந்த தமிழ்ப்பண்பாடு உம்புல மனசுல ஊறிப்போய்க் கிடக்கு. ப்ளீஸ்… என்னைக் கம்பல் பண்ணாதீங்க. ஒரு வேளை என் வாழ்க்கை பாழாப்போச்சின்னா நிச்சயமா உன்கிட்ட வருவேன். அப்போ என்னை ஏத்துக்குவியா?!

என் தவிப்பு தெரிந்து  இந்த அளவுக்காவது எனக்கு ஆறுதல் கொடுக்கிற அவள் தேவதையாய்த் தெரிந்தாள். தவிப்பு அடங்க கட்டிக்கப்போய் எரிகின்ற கொள்ளியில் எண்ணை வார்த்தது போல நான் கொதித்து அடங்கி நொந்து போனேன்.

என் வேகம் தெரிந்து தன்னையும் காத்துக்கொண்டு என்னையும் முழுசாய் அனுப்பிவைத்தாள். இந்த போக்கிஷம் எனக்கில்லையோ என்று பல நாள் அழுதிருக்கிறேன். ஏங்கியிருக்கிறேன். சில நேரங்களில் என்னை எரிச்சலூட்டியிருக்கிறாள். என்னுடன் முரண்பட்டிருக்கிறாள். ஆனால் அதே சமயம் தான் காதலித்தவனோடு விரல் நகம்கூட படாமல் பழகியவள் என்னைக் கட்டிப்பிடித்து ஆறுதல் படுத்தியிருக்கிறாள்.

அப்படி ஒருநாள் ‘இந்த’ ஆறுதலுக்கு நான் "நன்றி" சொன்னப்போ, எதுக்குன்னு கேட்டாள்.

எனக்காகவா? என் அன்புக்காகவான்னு நான் கேட்டப்போ….

இல்லை…. ‘எனக்கும் தேவையாயிருந்திச்சின்னு’ ஒளிவு மறைவில்லாமல் சொல்லி அதிர்ச்சி வைத்தியமும் செய்திருக்கிறாள்.

‘உணர்ச்சிகளே மரத்துப்போச்சின்னு நினைச்சிருந்ததை நீங்க புதுப்பிச்சிருக்கீங்கன்னு’… என்று சொல்லி என்னை யோசிக்க வைத்திருக்கிறாள். அவளை நேசித்ததின் விளைவுதான் இன்று சகலரையும் நேசிக்க வைக்கிறது. காதல் உணர்வுகள் என்ன என்பதும், பெண்ணை புரிந்து கொள்ள ஆரம்பித்ததும் அப்போதுதான். அது முதலே ஒவ்வொரு பெண்ணையும் அவர்கள் கோணத்திலேயே என்னைப் பார்க்கச்செய்தது.

அவளை நான் மதித்ததும், அவள் என்னை மதித்ததும் இன்றும் நினைத்தால் மனதில் பசுமையாய் இருக்கிறது. அவள் தோழிகளையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தி, என்னைப் பற்றி உயர்வாய்ச் சொல்லி… ‘நீ கொடுத்து வச்சவடி’ உனக்கு நல்ல நண்பர்களாகவே அமையறாங்கன்னு சொன்னதையும் வந்து சொன்னாள்.

என் திருமண நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் தன் குடும்பத்தோடு தோழிகளையும் மறக்காமல் அழைத்து வந்திருந்தாள். திருமணத்திற்கு முதல் நாள் இவள் மட்டும் எல்லோரையும் அனுப்பிவிட்டு என்னுடன் பேச காத்திருந்தாள். சற்று முன்பு வரை கலகலப்பாக பேசியவள் என்னிடம் பேச வந்ததும் ஓவென்று அழத் தொடங்கி விட்டாள்.

அழுகையை நிறுத்தி, சமாதானப்படுத்தி என்னவென்று கேட்டால்… அவளோட ஆள யாரோ ஒரு பொண்ணு வந்து கல்யாணம் பண்ணி சொந்தமாக்கிக்கப் போறாளாம். 

நான் சிரிப்பதா? அழுவதா? என்ன செய்திருப்பேன் சொல் பார்க்கலாம்?

இப்பக்கூட சரின்னு ஒரு வார்த்தை சொல்லு… நான் ரெடிப்பான்னு… நான் நிஜத்தையே ஜோக்காகாகச் சொல்லித்தான் அவளைச் சிரிக்க வைக்க முடிந்தது.

உண்மையில் அவளைக் கல்யாணம் பண்ணிக்க எவ்வளவோ முறை கெஞ்சிப்பார்த்தாயிற்று! என்ன பண்றது? ஜாதி குறுக்கே நிக்குதே?! அதுவுமில்லாம அவள் அவளுடைய பெற்றோரிடத்தில், நீங்க பார்க்கிற மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதா வாக்கு கொடுத்திருக்காளாம்.!???



நம்ம நட்பு என்னைக்கும் தொடருமா?

எனக்கு நம்பிக்கை இல்லை! நட்போ காதலோ எல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான். பின்னாளில் பாத்துக்கவும் முடியாது. பார்த்தா அதிகம் பேசவும் முடியாது. கணவன் சந்தேகப்படுவான் என்பது ஒரு காரணமா இருந்தாலும், நேரம் இருக்காது.

வாழ்க்கையே யந்திரமாய் மாறிப்போய், கணவன், குழந்தை, வீடு, வேலைன்னு சிந்தனை அதைச் சுற்றியே இருக்கும்போது பழைய காதலையோ, நட்பையோ நினைச்சு அப்போ பூரிச்சி போகவும் முடியாது. ஒண்ணஓட்டலுக்குப் போய் காஃபி சாப்பிடவும் முடியாது.

ஆனா நட்பு மறக்காது. எப்பவாது நினைச்சுக்குவேன். நீங்க செஞ்ச உதவி, எனக்கு கொடுத்த மதிப்பு, சந்தோஷம் எல்லாத்தையும்….

வாழ்க்கை எனும் சூறாவளி நம்மை சுழற்றிச் சுழற்றி அடிக்கிறது. இன்று யார் யாரோ நம் அருகில். ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு வேறு உறவுகளும் நண்பர்களும். இவர்களும் நாளை காணாமல் போகலாம். மீண்டும் புதிய உறவுகள்…..


கல்யாணம் பெண்களை மட்டும் ஏன் கட்டுப்படுத்துகிறது? என்னைப்போன்ற ஆண்களை கட்டுப்படுத்துவதில்லையே ஏன்? இந்த தோழி இல்லை என்றால் வேறு ஆள் தேடுவேனா? இல்லை குடும்ப பிரச்னையில் மூழ்கிவிடுவேனா?

என்னைத் தோலுறித்துக் காட்டுவதிலும், சமூகத்தை இந்த வயது வரை உற்று நோக்கி வந்ததன் விளைவாக நான் தெரிந்துகொண்டவைகளை, படித்தவைகளை, அனுபவித்தவைகளை உன்னோடு பகிர்ந்து கொள்வதில் உனக்கேதும் சங்கடமில்லைதானே தோழி?....


தேனை மறந்திருக்கும் வண்டும்
ளி சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிறும்
இந்த வையக முழுதுமில்லை தோழி!
என்னை மறந்துவிட்ட நீயும்
என்னால் நம்ப முடியவில்லை தோழி!


இன்னும் இருக்கு….