Saturday, December 15, 2012

முதிர்கன்னிகே.பாலசந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' என்னை மிகவும் பாதித்த திரைப்படங்களில் ஒன்று. கிட்டத்தட்ட சுஜாதாவின் கதாபாத்திரம்தான் இந்தக் கடிதக் கதாநாயகியின் சகோதரிக்கு. மொத்தம் 6 பெண்கள். ஆறு பெண்களைப் பெற்றால் அரசன் கூட ஆண்டியாவான் என்று சொல்வார்கள். ஆனால் இந்தக்குடும்பத்தில் தந்தையோடு தோள் கொடுத்து அத்தனை பேரையும் குறைந்த பட்சம் பட்டப்படிப்பு வரை படிக்கவைத்திருக்கிறார் இவர். இரண்டாவது சகோதரியான இவருக்கு கீழே மூன்று சகோதரிகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஐந்தாவது சகோதரியான மாலாவிற்குதான் மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.

'ஆட்டோகிராப்' படத்தில் வரும் ஒரு பாடலில், ஸ்நேகா பாடுவதைப்போல 'யாருக்கில்லை போராட்டம், கண்ணில் என்ன நீரோட்டம்' என்ற பாடல்வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு குடும்பங்களுக்குள்ளும் எத்தனை எத்தனை பிரச்னைகள், போராட்டங்கள்? அதிலும் இந்தப் பெண்கள் படுகின்ற பாடு இருக்கிறதே சொல்லி மாளாது.

இத்தனை நாள் திருமணத்தை மறுத்து குடும்பத்துக்காக உழைத்தவர், திடீரென ஒருவரை எனக்குப் பிடித்திருக்கிறது. அவரை எனக்கு திருமணம் செய்துவையுங்கள் என்று கேட்டால், சந்தோஷமாக செய்து வைப்பதில் என்ன குடி மூழ்கிவிடப்போகிறது? வளரிளம் பருவம் என்றால், காதல் என்ன என்பது தெரியாது. நல்லவர் கெட்டவர் தெரியாது. மனிதர்களை எடை போடும் திறனில்லாது ஏமாந்து போகும் வயசும் கிடையாது. இவரோ படித்தவர். உயர்வான ஆசிரியப்பணி பார்ப்பவர். ஒருவகையில் இவர் முதிர்கன்னி. இவரது முடிவு தெளிவாகத்தானே இருக்கும் என ஏன் நம்ப மறுக்கிறார்கள்? குடும்பத்தினர் இதை ஏன் உணரவில்லை? எது குறுக்கே நிற்கிறது?

தொடர்ந்து கடிதத்துக்கு வருவோம்.....


எனக்கும் ஈஸ்வரிக்கும், பெரியக்காவுக்கும் அவ விருப்பம் அதுதான்னா செஞ்சிடுவோம். அவளாலதான் நம்ம குடும்பமே இன்னிக்கு இந்த அளவுக்கு வந்திருக்கு. அவ ஆசையை நாம வேணாம்னு சொல்லக்கூடாதுன்னு, சொல்றோம். அப்பா-அம்மா, அத்தான் மூவருக்கும் ஜாதி, குடும்பம், உறவுகள் பத்தின பயம்.

சீக்கிரம் எனக்கு முடிச்சிட்டா... பிறகு பிரச்னையில்லைன்னு முடிவு பண்ணியிருக்கோம். இப்பவும் கூட அவ நினைச்சா போயிருக்கலாம். நாங்களும் வேணும்னுதான் இருக்கா! அது இவர்களுக்குப் புரியமாட்டேங்குது. என்னதான் நடக்கும்னு ஒண்ணும் புரியலை. இப்ப இந்த தீபாவளிக்குப் பிறகுதான் கொஞ்சம்... கொஞ்சமா பேச ஆரம்பிச்சி... இப்போ ஓரளவு சகஜமாயிருக்கா. இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு பயம் ஓடிகிட்டேயிருக்கு. நமக்குப் புரியறத அவங்களுக்குப் புரியவச்சு, ஒத்துக்க வைக்க முடியலை. என்னா வாழ்க்கைடா இதுன்னு.... ரொம்ப சலிப்பா இருக்கு!

அதனாலதான் என்னை சீக்கிரம் 'பேக்கப்' பண்ணனும்கறாங்க. கல்யாண செலவுக்கு சென்னைல இருக்கிற வீட்டை விற்க ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கோம். இந்த மாபெரும் குழப்பத்தாலதான், ஆமாம் போன்னு ஒரு சலிப்புலதான் யாரோடயும் தொடர்பேயில்லாம திரிஞ்சிகிட்டு இருந்தேன். சமீபத்துல 'ரெப்'பா இருக்கிற 'போஸ்' என்பவர் பிரண்ட்லியா இருக்கார். ரொம்ப ஜாலியான ஆள். ஊர் கும்பகோணம். திருமணமாகி ஒரு மகன் உள்ளான். ஏதோ ஒரு ரூபத்துல 'நட்பு'-னாலதான் என் வாழ்க்கையும் ஓடிக்கிட்டிருக்கு.

வேலை அதேதான் சம்பளம், அலவன்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு ஏயாயிரம் வரும். சாந்தியிடம் பணம் வாங்க வேண்டாம்னு வீட்டு செலவு எல்லாம் நான்தான் பார்க்கறேன். அவளும் விடாம 2000/- குடுத்துகிட்டேதான் இருக்கா.
அவளுக்கும் குடும்பத்தை விட மனசில்லை. எங்களுக்கும் அவளை விட்டா வழியில்லை. ஏதோ வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு! பாப்போம், எங்கதான் போய் நிக்குதுன்னு!

03.02.2006

எப்பவும் மாசத்துல கடைசி நாட்கள்ல கொஞ்சம் பரபரப்பா அலைய வேண்டிவரும். இன்னிக்குதான் ப்ரீ ஆனேன். கிட்டத்தட்ட 8 பக்கம் எழுதிட்டு படிச்சி பாக்கறேன்.ஒண்ணுமே புரியலை. அட்ஜஸ்ட் பண்ணி படிச்சிக்கோங்க.

எங்க பெரியம்மா மகளின் மகன் கூட ஒரு வருடம் முன்னால் அரபு தேசத்துக்கு (கொத்தனார்) வந்தான். உங்க அட்ரசெல்லாம் கூட கொடுத்தனுப்பினேன். கிட்டத்தட்ட அடிமை மாதிரி, சரியான சாப்பாடில்லாம, சம்பளமில்லாம வேலை பார்த்திருக்கான். விட்டால் போதும்னு ஒரு வாரம் முன்னால ஓடிவந்துட்டேன்னு சொல்றான். ரொம்ப பாவமாயிருந்தது.

இந்தியனுக்கு மட்டும் ஏனிந்த வாழ்க்கை? மிகப்பெரிய ஜனநாயகம்னு சொல்லிக்கிட்டு, மத்த எல்லா தேசத்திலும் இந்த மாதிரி எத்தனையோ லட்சம் பேர் பணய வாழ்க்கை வாழறாங்க. இதெல்லாம் இங்கே குரைச்சிகிட்டிருக்கிற அரசியல் நாய்களுக்கு ஏன் தெரியலை? என்னதான் இருக்கு பதவி சுகத்துல? 'மே' மாசம் நடக்கப்போற தேர்தலுக்கு இப்பவே பேரம் பேச ஆரம்பிச்சிட்டாங்க! இதான் சாக்குன்னு யாராவது பொதுக்கூட்ட மேடைகள்ல குண்டைப் போட்டு பெரிய தலைகளையெல்லாம் காலி பண்ணிட்டா தேவலாம்னு தோணுது. பத்தாததுக்கு விஜயகாந்த் வேற ஏகப்பட்ட வசனங்களை அள்ளிவிட்டுகிட்டிருக்கார். யார் வந்தாலும் தமிழனின் சராசரி வாழ்க்கையில் துளியும் முன்னேற்றம் இருக்கப்போவதில்லை!

அப்புறம், வேற ஏதாவது புக்ஸ் படிச்சீங்களா? மெட்ராஸ்ல 'புக்பேர்' போகலாம்னு நினைச்சேன். முடியலை. கடினமான வேலைன்னு சொன்னீங்க. வேறெந்த சிந்தனையுமில்லாம வேலை பாருங்க. வேறெங்காவது முயற்சி பண்ண முடியாதா? முக்கியத் தேவைகள் முடிஞ்சிடுச்சின்னா பேசாம சென்னைக்கே வந்து வேலை தேடிக்கப் பாருங்க. உங்கள் கடைசி தம்பி கல்யாணத்துக்கு கண்டிப்பா வரேன். சூழ்நிலை எப்படி இருக்குமோ தெரியலை. இருந்தாலும் உங்களை வந்து கண்டிப்பா பார்க்கணும். உங்க வீட்டு போன் நம்பர் கொடுங்க. அட்லீஸ்ட் போன்லயாவது  எல்லோர் கிட்டயும் பேசறேன்.

எழுதினா போய்க்கிட்டே இருக்கும். இதோட முடிக்கிறேன்.
மற்றவை உங்கள் பதில் கண்டு.

By
மாலா,
மயிலாடுதுறை.
 

6 comments:

கவியாழி கண்ணதாசன் said... [Reply]

பெரும்பாலும் அறியாமையே பலபேரை முதிர்கன்னியாக்கி விடுகிறது .பருவத்தே பயிர்செய் என்பதை அறிந்த நாம் பெண்களுக்கு திருமண ஏற்பாடை செய்வதில் சுணக்கம் இருக்கிறது உற்றாரும் பெற்றோரும்தான் எடுத்துரைத்து சொல்ல வேண்டும்

ஆத்மா said... [Reply]

பிரபல எழுத்தாளர்களின் சாயலில் இருக்கிரது உங்கள் எழுத்து..
தொடர்ந்து படிக்கிறேன்

புரட்சித் தமிழன் said... [Reply]

//கவியாழி கண்ணதாசன் said...

பெரும்பாலும் அறியாமையே பலபேரை முதிர்கன்னியாக்கி விடுகிறது .பருவத்தே பயிர்செய் என்பதை அறிந்த நாம் பெண்களுக்கு திருமண ஏற்பாடை செய்வதில் சுணக்கம் இருக்கிறது உற்றாரும் பெற்றோரும்தான் எடுத்துரைத்து சொல்ல வேண்டும்//

இதில் ஒரு முக்கிய காரணம் பெற்றோரின் இயலாமை, அவர்கள் தங்கள் சுயநல ஆசையின் காரணமாக அவர்கள் இயலாமைக்குறைக்கும் பொருட்டு ஆண் பிள்ளைபேறுக்கு முயற்சித்து 6 பெண்களை பெற்றிருக்கிறார்கள் அதில் ஒரு பெண் பிள்ளையை மற்றவர்களை கரையேற்ற திருமணம் செய்யாமல் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு குழந்தையைமட்டுமே வளர்க்க திராணியுள்ளவன் இரண்டாவதாய் ஒரு குழந்தைக்கு ஆசைப்படுவதே குற்றம். குழந்தையை வளர்க்க திராணியற்றவர்கள் குழந்தையை பெற்றுக்கொள்வதே குற்றம்.

கவிப்ரியன் said... [Reply]

அறியாமை என்பதே கிடையாது நண்பரே! இயலாமை என்று சொல்லலாம். வரதட்சனை கொடுக்க இயலாமை, வசதி இல்லாமை, அழகு இல்லாமை என்று எத்தனையோ அடுக்கிக்கொண்டே போகலாம். வறுமையானால் உழலும் பல குடும்பங்களில் வேலைக்குப்போய் சம்பாதித்துக் கொடுக்கும் பணம் காய்ச்சி மரங்களாய் இருக்கிறார்கள் இந்த முதிர்கன்னிகள்!

கவிப்ரியன் said... [Reply]

ஆத்மா! எந்த பிரபலம் என்று சொல்லாமல் விட்டீர்களே அதுவரை சந்தோஷம்! முதல் மூன்று பத்திகள்தான் என்னுடையது. மற்றவை என் சிநேகிதியின் கடிதம்! உங்கள் பாராட்டு அவருக்குத்தான் போகும் என நினைக்கிறேன் சரியா?!

கவிப்ரியன் said... [Reply]

புரட்சித்தமிழன்! உங்கள் பதில் கவியாழி கண்ணதாசனுக்குத்தான் என்றாலும், நானும் உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன். ஆனாலும் கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருக்கிறது. (உண்மை உறுத்தத்தான் செய்யும்) 1970 களுக்குப் பிறகுதான் குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரங்களும், நாமிருவர், நமக்கிருவர் போன்ற வாசகங்களும் பழக்கத்துக்கு வர ஆரம்பித்தன. ஆண் வாரிசு மோகத்தில் அடுத்து, அடுத்து என்று குழந்தை பெற்றுக்ககொள்வது அப்போதைய சமூகத்தில் நிலவி வந்த மூடத்தனம். அதற்கு பெற்றோர்கள் மட்டுமே காரணமில்லை. அதற்கு எதிர்மறையாய் என் வீட்டில் பெண் குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆண் பிள்ளைகள்!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!