மாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஜூன், 2013

வயசுக்கு மீறின விஷயம்?!

(மயிலாடுதுறை மாலாவின் கடிதங்கள்)


அன்புடையீர்,                                          27.08.1999

வணக்கம். நலம் நலமா? உங்கள் தம்பியின் திருமணம் நல்லபடியாக முடிந்ததா? வீட்டில் அனைவரும் நலம்தானே!

தேர்தல் வந்துவிட்டது. ஆளுக்கு 10 டாடா சுமோ, 4 ஜீப், 5 வேன், 6 கார் சகிதம் வலம் வருகிறார்கள். உங்கள் சென்னையில் எப்படி? ஜெ ஒருவழியா தன்னோட பொய் மூட்டைகளையெல்லாம் ஏமாந்த மக்களிடம் அவிழ்த்து விட்டுட்டு, சென்னை மக்களிடம் புழுகிக்கொண்டிருக்கிறார்.  

எங்க ஊர்ல மரம்வெட்டி புகழ் பா.ம.க. வேட்பாளர் நிற்கிறார். இவனுங்களுக்கு ஓட்டுபோடறதவிட, பேசாம செல்லாத ஓட்டா போட்டுடலாம்னு பார்த்தா பி.ஜே.பி.க்காக பார்க்க வேண்டியதாயிருக்கு.
தமிழ்நாட்டுல கழக ஆட்சி ரெண்டுமே ஒழியனும்.  

மூப்பனார் ஏதாவது செய்வார்னு பார்த்தா, உருப்படாத கலவர கும்பலுடன் சேர்ந்திருக்கிறார். இருக்கிற குப்பைகள்ல எது பெஸ்ட்டுன்னு பார்த்தா, தி.மு.வைத்தான் சொல்லணும். கலைஞர் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி (ஊழலையும் சேர்த்துத்தான்).

அரை நூற்றாண்டுவரை ஒரே மாதிரி இருந்துவிட்ட இந்தியா, இனியாவது வளருமா? ஸ்திரமான ஆட்சி இல்லாததுனாலதான் பாகிஸ்தான் கூட வாலாட்டியது. எனக்கென்னவோ பி.ஜே.பி.யை செலக்ட் பண்ணலாம்னு தோணுது. என்னதான் மதவாதம் என்றாலும், அஞ்சு வருஷம் கழித்து அதே மக்களிடம் வந்துதானே ஆகவேண்டும்.

நாட்டில் சிறுபான்மையினர் ஓட்டு பெருமளவில் முக்கியம் என்பதால்தான், அனைத்து அரசியல்வாதிகளும் அவர்களை அரவணைத்துக் கொள்கிறார்கள். அதனால, பி.ஜே.பி. ஒண்ணும் பெருமளவில் அராஜகம் செய்துவிட முடியாது என்று நான் கருதுகிறேன்.

வரதட்சணை பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கீங்க. நிறைய விரிவாகவே எழுதுங்க. என் வயசுக்கு மீறின விஷயமா ஒதுக்க முடியுமா இதை? இன்னிக்கு சமுதாயத்துல ஆணிவேர்ல இருந்து சல்லிவேர் வரைக்கும் சகல இடத்திலும் புரையோடிப் போயிருக்கிற ‘புற்றுநோய்’ மாதிரி இருக்கிறது இந்த வரதட்சணை.

அதனை குணமாக்க முடியலைன்னாலும், அட்லீஸ்ட்… என்னை, என்னைச் சார்ந்தவர்களையாவது இந்த நோய் பீடிக்காமலிருக்க என்ன செய்யலாம்னு யோசிப்பேனே! So, நிறைய எழுதுங்க. நீங்க பத்து பக்கம் எழுதினா நான் ஒரு பக்கம் எழுதுற அளவுக்காவது என்னோட சிந்தனைகள் இருக்கும்னு நம்பறேன்.

வேறொண்ணும் விஷயமில்லை. கோயில் குளம்னு போனேன். அதான் உடனே லெட்டர் எழுதலை. மற்றவை பிறகு. நிறைய விஷயங்கள் எழுதுங்க. அதை நான் அனுபவமா மாத்திக்கறேன்.

அன்புடன்,

மாலா. மயிலாடுதுறை.



அன்புடையீர்,                                          24.12.1999

வணக்கம். நலம். நாடுவதும் அதுவே. மனைவி மற்றும் குழந்தைகள் நலமா?

தங்கள் கடிதம் கிடைத்தது. நான் எழுதியது முற்றிலும் சரியென்றோ, தவறென்றோ நான் கூறவில்லை. என் மனதிற்கு தோன்றிய விஷயங்கள் அவை. அதில் தவறும் இருக்கலாம். ஒத்துக்கொள்கிறேன், சுட்டிக்காட்டினால்.

சிங்க்கப்பூர் தோழி ‘ஜெஸி’யிடமிருந்து தங்கள் வேலைக்காக ஏதாவது தகவல் வந்ததா?

பெண் விடுதலை என்று கோஷம் போடும் கும்பல்கள் பெருகித்தான் விட்டன. அவர்களது நோக்கம் ஆண்களை அவதூறு பேசுவது மட்டும்தான் என்று செயல்படுகின்றனர்.

எது விடுதலை? விடுதலை என்றால் என்ன? எதற்கு விடுதலை… ஹூம்… எந்தவித பதிலும் இல்லை, தெளிவும் இல்லை. ஆனால் கூட்டத்தோடு கோஷம் போடுகின்றனர்.

என் நண்பர் ஒருத்தர் சொன்னார், அவங்க காலேஜ் பொண்ணுங்க பேசினாங்களாம். கல்யாணமாயிடுச்சின்னு காட்ட நாம மட்டும் கழுத்துல தாலி கட்டணுமாம். ஆண்களுக்கு எதுவுமுல்லை. இது மாறணும். அவங்களும் ஒரு அடையாளமா கழுத்துல கயிறு கட்டணும்னு பேசினாங்களாம்.

இதை படிச்சா உங்களுக்கு என்ன தோணுது? இப்படித்தான் தாறுமாறாய் சிந்திக்கின்றனர். அதுவும் சிந்திப்பதுன்னு கூட சொல்லமுடியாது. ஏதோ அந்த கூட்டத்துல கைதட்டல் வாங்க உணர்ச்சிகரமா பேசறதோட முடிஞ்சிடறது அவங்க வேலை.

சுதந்திரம் என்பது சண்டை போட்டு மேடையில் பேசி வாங்கும் விஷயமில்லை. எங்களுக்கு சுதந்தரம் கொடுக்க நீங்க யார்னு ஒரு கேள்வி? மனிதகுல ஆரம்பத்திலிருந்தே ஆண் பெண் சுதந்திரத்தைக் கையகப்படுத்திக்கொண்டது உண்மை. இந்த நிலை மாற கோஷங்கள் ஒருபோதும் உதவப்போவதில்லை. விட்டுக்கொடுத்தலும், பரஸ்பர புரிந்துகொள்ளுதலுமே இதற்கு சரியான தீர்வு.

அப்புறம் மில்லினிய கொண்டாட்டம் எப்படியிருக்கிறது சென்னையில்? எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனியொரு வாய்ப்பு இதுபோல் கிடைக்காது என்பதாலோ என்னவோ தெரியலை. மிலினியம் கிராஸ் பண்றப்போ நாம உயிரோட இருக்கோம் எனும் நினைப்பே அவ்ளோ சந்தோஷத்தைக் கொடுக்குது.

2000 வருஷம் மக்களுக்கு எந்தவித குறையுமில்லாம, போட்டி, பொறாமை, நயவஞ்சக எண்ணங்கள் மனிதனை விட்டு அகன்று, பொறுமையும் அன்பும் கருணையும் மனிதர்களை ஆட்கொள்ளட்டும் என்று பிரார்த்திப்போம்.

குடும்பத்தினர் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தை சொல்லிவிடுங்கள். BEST WISHES FOR A HAPPY MILLENNIUM YEAR 2000.
BY
மாலா, மயிலாடுதுறை.

வியாழன், 13 டிசம்பர், 2012

போர்க்களமான வீடு!

வாழ்க்கைப் போராட்டங்கள் என்பது ஒவ்வொருவருக்கும் தரும் அனுபவம் விசித்திரமானது. எத்தனையோ படிப்பும் பதவியும் இருந்தாலும் கூட மனசுக்குள் புதைந்து கிடக்கும் ஆசைகள் என்பது யாராலும் அறியமுடியாத ஒன்று. ஒருவருக்கு சரி என்று படுகிற விஷயம் அடுத்தவருக்கு தவறாகப் படுகிறது. பெற்றோர்கள் அவர்களின் கடமையைச் செய்ய தவறும்போது, எவ்வளவு நாள்தான் மனசுக்குள் புழுங்கித் தவிப்பது? ஆறுதலான ஒருவன் கிடைக்கும்போது அவன் அயோக்கியனாக இருந்தாலும் அவன் மீது நம்பிக்கை வந்துவிட்ட பிறகு இதில் யார்தான் என்ன செய்துவிட முடியும்?

கடிதத்தை தொடர்ந்து படியுங்கள், உங்களுக்கும் விஷயம் புரியும்!

சரி… வீட்டுப் பிரச்னைக்கு வரேன். முடிஞ்ச வரைக்கும் சுருக்கிடறேன். போன வருட மே மாசம். என் பி.பி.ஏ பரீட்சைக்காக பத்து நாள் லீவ் போட்டுட்டு படிக்க ஆரம்பிச்சேன். முதன்முதலா அன்னிக்குதான் புக் எடுத்தேன். பத்து மணி இருக்கும். சாந்தி பக்கத்துல வந்து உட்கார்ந்தா (மூத்த சகோதரி - ஆசிரியரா பணி செய்யறவங்க). அப்பா மெட்ராஸ்ல இருந்தாங்க. வீட்ல அம்மா, தம்பி, புவனா, நான்.

'இந்தா மாலு…. நீ என்ன சொல்றன்னா?

எதுக்குன்னு நான் கேட்டேன். ஒண்ணுமே புரியலை எனக்கு.

'அடுத்த மாதம் அது ஃபாரின் போகுதாம்…

அதுக்கென்ன?

கல்யாணம் பண்ணனும்ங்குது!

யாரை?.....

………………………. பதிலில்லை.

என்ன சொல்ற? புரியற மாதிரி சொல்லு.

ஸ்கூல்ல எல்லாரும் எப்ப கல்யாணம்னு கேட்டுட்டேயிருக்காங்க. அதுக்கும் விசா வந்திடுச்சி. அதுக்குள்ள முடிக்கனும்னு தான்…………

ஆர்.டி.எக்ஸ் குண்டைத் தலைல போட்ட மாதிரி உட்கார்ந்திருந்தேன்.
நல்லா யோசிச்சுதான் பேசறியா?


'ஆமாம், எனக்கும் வயசு அதிகமாயிருக்கு. வீட்ல சொல்றாங்கன்னு யாரையாச்சும் கல்யாணம் பண்ணி, நாளைக்கு குழந்தை குட்டி இல்லன்னு பிரச்னை வந்தா என்ன பண்றது? இவருக்கு எல்லா விவரமும் தெரியும். ஜாதிப் பிரச்னையைத் தவிர வேறோன்னுமில்ல' அப்படின்னு சொன்னா.

இதுதான் உன் கடைசி முடிவுன்னா இதை ரெண்டு வருஷம் முன்னாடியே செஞ்சிருக்கலாமே! பட்ட அவமானங்களாவது குறைஞ்சிருக்கும்.

மேரேஜ் பண்றதுன்னு இப்பதான் முடிவு பண்ணேன்.

இப்ப திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

……………………….. பதிலில்லை.

ஐந்து நிமிடம் யோசனை பண்றமாதிரி திகிலடிச்சி உட்கார்ந்திருந்தேன். அதுக்குள்ள அம்மாவும், என்ன பேசிக்கறோம்னு புரியாம அலைபாயறாங்க!

உனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் அனுபவசாலி இல்ல. இருந்தாலும் சொல்றேன். இது உன்னோட மட்டும் போற விஷயமில்ல. எல்லோரையும் பாதிக்கும். அடுத்தடுத்து மானம் போகிற சம்பவங்கள் நம்ம வீட்ல நடந்துகிட்டேதான் இருந்திருக்கு. அதுக்கும் மேல நீயும் இப்படின்னா ஜீரணிக்க கஷ்டமாயிருக்கு. சுதா சொல்லாமப் போச்சு. நீ சொல்லிட்டுப் போற, அதான் வித்தியாசம்னேன். கடகடன்னு... அழுதா!

நீ கல்யாணம் பண்றத நான் வேணாம்னு சொல்லலை. உனக்குன்னு ஒரு வாழ்க்கை கண்டிப்பா வேணும். ஆனா ஆளை கரக்ட்டா செலக்ட் பண்ணு. அவன் பேஸிக்கலா ஒரு அடியாள். கூலி கொடுத்தா கொலையும் பண்ற மாதிரி. நாளைக்கே உன் காசுதான்னு முக்கியம்னு எல்லாத்தையும் பிடுங்கிட்டு உன்னைக் கொன்னுட்டா… என்ன பண்றது?

'அப்படியெல்லாம் கிடையாது'.

அப்புறம் உன் இஷ்டம். மேரேஜ் எப்படி பண்ணனும்? சிம்பிளாவா….? மண்டபத்திலா?

மண்டபத்தில. எல்லோருக்கும் சொல்லித்தான். ஒரு வாரத்துல கூட முடிச்சிடலாம். எல்லாத்துக்கும் ஆளிருக்கு.

நான் எதுவும் பேசலை. அம்மாவைக் கூப்பிட்டு சொன்னேன். ரியாக்ஷனைக் கேக்கனுமா? அழுகையும் சத்தமுமா இருந்தாங்க! பாட்டில் விஷம் வாங்கி எல்லோருக்கும் கொடுத்துட்டுப் போன்னாங்க. நான் அம்மாவை சமாதானப்படுத்தினேன். அவ தீர்க்கமா முடிவு பண்ணிட்டா.  நம்மகிட்ட பர்மிஷன் கேக்கலை. நியூஸ்தான் சொல்றா. நீ என்ன சொல்றேம்மான்னேன்.

நீ என்ன அவளுக்கு உடந்தையான்னு கேட்டாங்க! எனக்கு ரொம்ப கோபம் வந்துட்டு, கன்ட்ரோல் பண்ணிகிட்டு... ஆமாம்னு வச்சுக்க. என்ன சொல்ற?

நாங்க செத்தாக் கூட முகத்துல முழிக்கக்கூடாது. இந்த தெருவுல இருந்து காலி பண்ணிட்டு ஒரேயடியா போகச்சொல்லுன்னு சொல்லிட்டுப் போய்ட்டாங்க. அவ யோசனை என்னன்னா... கல்யாணம் பண்ணியும் இங்கேயே இருக்கிற மாதிரி. அந்த ஆள் ஃபாரின் போற மாதிரி.

அதுக்கு எதுக்கு இப்படி ஒரு அவசரமான கல்யாணம்? நிதானமா யோசிச்சு முடிவெடுன்னு சொல்லிட்டேன்.

அன்னிக்கு நைட் நானும் அம்மாவும் கிளம்பி பெரியக்கா வீட்டுக்குப்போய் அத்தானிடம் சொன்னோம். அவர் வந்து பேசினார். ரெண்டு பேருக்கும் பெரிய சண்டை. நான் அவரை தடுத்து அனுப்பிட்டேன். இழவு வீடு மாதிரி இருந்தது. பதினைஞ்சு நாள் கழிச்சு பார்த்தா, அந்த ஆள் ஃபாரின் போய்ட்டான். இவ யாரோடும் பேசாம.... கிட்டத்தட்ட போர்க்களம் மாதிரி இருந்தது வீடு!

கடிதக் கனவுகள் தொடரும்....

புதன், 12 டிசம்பர், 2012

இயற்கைக்கு முரணா வாழறதில் எனக்கு விருப்பம் இல்லை!


இயற்கைக்கு முரணா வாழறதில் எனக்கே விருப்பம் இல்லை! கல்யாணம், குடும்பம் எல்லாம் வாழ்வின் ஜஸ்ட் லைக் தாட் ஒரு பகுதிதான். அதை வேணாம்னு சொல்லிட்டு என்ன சாதிக்கப்போறோம் சொல்லுங்க! முதல்ல பேச்செடுத்தப்போ, இன்னும் ஒரு வருஷம் ஆகட்டுமேன்னு சொன்னேன். ஈஸ்வரிதான் 'அப்பாக்கு உடம்புக்கு முடியலை. எவ்ளோ பேர் இருந்தாலும், 'அப்பா-அம்மா' செஞ்சு வச்சாதாண்டி அது நிறைவா இருக்கும்னு சொன்னா. சரின்னுட்டேன். இன்னும் சொல்லப்போனா அத்தான் கூட தரகரைப் பார்க்க, அம்மா கூட ஜோசியம் பார்க்கன்னு நானேதான் போய்க்கிட்டு இருக்கேன். சில சமயம் எனக்கே சிரிப்பு வரும். நாம இப்படி மாப்பிள்ளை தேடி அலையறதை பார்க்கிற 'மாப்பிள்ளைகள்' என்ன நினைப்பாங்கன்னு!

தீவிரமா யோசிச்சா இதிலொண்ணும் தப்பிருக்கிறதா எனக்குப்படலை. நீங்க என்ன நினைக்கிறீங்க?  ஈஸ்வரி சொல்றா… நீ அதுக்குன்னு அநியாயத்துக்கு தெளிவா இருக்கடி. ஆனா இந்தத் தெளிவும் இப்போ ரொம்ப அவசியம்தாண்டின்னு சொன்னா.

அதானால உங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்… உங்களுக்கு தெரிந்த வரனிருந்தால் இந்த முகவரிக்கு அனுப்பவும்… திருச்சி சந்துருவிடம் எனக்கு மாப்பிள்ளை பாருன்னு சொன்னேன். ஐயோ… அம்மா உன்னை காட்டிவிட்டுட்டு அவன்கிட்ட உதை வாங்க என்னால முடியாதும்மான்னு அலர்றான். ஏன்னு கேட்டா உன்னை மாதிரி அநியாய விவரம்லாம் கட்டிட்டு வாழறது கஷடம்ங்கிறான். நிஜமா அவன் சொல்றது?

என் கண்டிஷன்னு சிலதை வீட்ல சும்மா ஜாலிக்காக சொல்லிட்டிருந்தேன். தம்பி உடனே, நீ சொல்றத பார்த்தா பில்கேட்ஸ் பையனைக்கூட வேணாம்னுதான் சொல்லுவ போலிருக்கு. ஹூம் எங்க பாடு கஷ்டம்தான்னு சொல்றான்.

30.01.2006

அப்புறம் சமீபத்துல எதாவது சினிமா பார்த்தீங்களா?  ச்சான்ஸ் கிடைச்சா 'தவமாய் தவமிருந்து' பாருங்க. நல்ல திரைக்காவியம். சமீபமா எனக்கு சினிமாத்துறையில நுழையற எண்ணம் வந்திருக்கு. (பயப்படாதீங்க ஹீரோயின் வேஷமெல்லாம் இல்ல) எடிட்டிங், கேமரா… இப்படி எதாவது டெக்னிக்கலா செய்தா நல்லாயிருக்குமேன்னு தோணுது. பிராக்டிகலா ரொம்ப கஷ்டம்னு தெரியும். இருந்தாலும் ஜஸ்ட் ஒரு ஆசை. ஒருவேளை நிறைய சினிமா பாரக்கறதாலயோ என்னமோ தெரியலை!

இங்கே குளிர் ரொம்ப வாட்டி எடுக்குது. நாலு மணியிலிருந்து குளிர ஆரம்பிச்சா காலைல ஒன்பது மணிவரைக்கும் ஓவர் பனி.

சரி, வீட்டுப்பிரச்னைக்கு வர்றேன்………

இந்த கடிதத்தை தொடர்வதற்குமுன் என் மனதில் உள்ளவற்றை கொஞ்சம் சொல்லலாம்னு நினைக்கிறேன். 'படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்' என்ற பழமொழி எல்லருக்கும் தெரிந்த ஒன்றுதான் இல்லையா? இதன் நேரிடையான பொருள் என்று நான் புரிந்துகொண்டிருப்பது, எல்லா நியாய அநியாயங்களைப் பற்றியெல்லாம் பேசுவோம். ஜாதி, மதம், காதல், கற்பு என்பதைப்பற்றியெல்லாம் மிகுந்த முற்போக்குவாதிகளைப் போல வாதிடுவோம். ஆனால் நமக்கென்று வரும்போது நத்தை தலையை தன் கூட்டுக்குள் இழுத்துக்கொள்வதைப்போல வேறு ஒரு முகத்தைக் காட்டுகிறோம். இது அனைவருக்குமே பொருந்தும்.

நம் அளவில் இதை கடைபிடிக்க விருப்பமிருந்தாலும் சமூகம், உறவுகள் என்ற பிடி நம்மை இறுக்கும்போது நம்மால் எதுவுமே செய்யமுடிவதில்லை. ஏனென்றால் நம்மைச் சுற்றியிருக்கிற உறவுகள் நமக்கு முக்கியம். தாய், தந்தையின் விருப்பம் முக்கியம் என்ற நிலை அவசியமாகிவிடுகிறது. சுயநலத்தோடு என் வாழ்வு, என்விருப்பம் என்பது மனசாட்சியே இல்லாதவர்கள் எடுக்கக்கூடிய முடிவாகத்தான் எனக்குப்படுகிறது. இதனால் நம்முடைய விருப்பு வெறுப்புகளை சமன் செய்துகொள்ள வேண்டியதாகி விடுகிறது. சில நேரங்களில் நிர்பந்தங்கள் வெற்றி பெறலாம். ஆனால் அதே சமயத்தில் மகிழ்ச்சி அங்கே காணாமல் போகலாம்.

இந்தக் கடிதங்களின் கதாநாயகி, பெற்றோரின் அன்புக்கு கட்டுப்படவர். பலதும் யோசித்து முடிவெடுக்கும் திறன் படைத்தவர். ஜாதி மதம் குறித்த விசாலமான பார்வை கொண்டவர். மதங்கள் என்பது மனிதனை நல்வழிப்படுத்தவே என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர். கடிதம் எழுதும்போது சிலர் கடிதத்தின் மேல் பகுதியில் கடவுள் துணை என்றோ, அன்பே கடவுள் என்றோ, சிலர் பிள்ளையார் சுழி போட்டோதான் எழுதத் தொடங்குவர் இல்லயா? ஆனால் இவரோ ஒரு சிலுவைக்குறி, ஒரு பிள்ளையார் சுழி, அப்புறம் 786 இம்மூன்றையும் போட்டுத்தான் கடிதம் எழுதுவார். எம்மதமும் சம்மதமே என்பது அதன் பொருள்.

ஆனால் இது எல்லாம் வெறும் நட்புக்கு மட்டுமே. சக மனிதர்களாக அவர்கள் எல்லாருடனும் நான் பழகத்தயார். அது எல்லாம் ஒரு எல்லை வரை மட்டுமே. அதே சமயத்தில் காதல் கல்யாணம் என்றெல்லாம் வந்துவிட்டால் என் மதத்துக்குள் மட்டும்தான் அதிலும் குறிப்பாக என் ஜாதிக்குள் மட்டும்தான் என்பதில் உறதியாக இருந்தார். இதை நாம் எப்படி புரிந்து கொள்வது? எனக்கு இன்று வரை இருக்கும் கேள்வி இது. இதைப்பற்றி நான் விவாதிக்கும் போதெல்லாம் ஒரு பழைமைவாதியாகத்தான் தன்னைக் காட்டிக்கொள்வார். புதுமைப்பெண்ணாய் நான் நினைத்த சில பேர் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் இப்படி இருப்பது இயல்பே என்று எனக்கு இப்போது புரிகிறது.

இப்படித்தான் என்னை யாரும் காதலிக்கமாட்டார்கள் என்று நம்பிக்கொண்டிருந்த வேளையில், என் மீது அன்பு, நட்பு பாராட்டிய ஒரு பெண்மீது ஈர்ப்பு வருவது இயல்புதானே! நட்பு என்ற போர்வையில் பழகிவிட்டு திடீர் என்று காதல் என்று சொன்னால் அசிங்கமாயிருக்காதா?...  என்றாலும் என்னால் காதலைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதற்கான தருணம் பார்த்து தனியே அழைத்து என் விருப்பத்தைச் சொல்ல தயங்கியவாறு எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனையில் இருந்தபோதே, அவள் என்னைக் கேட்ட கேள்வி……. என்ன தெரியுமா? 

நீங்க என்னை 'லவ் பண்றீங்களா?'  என்னை லவ் பண்ணி ஏமாறாதீங்க, எங்கப்பா அம்மா சொல்ற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதா அவங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கேன், என்றாள். ஏன் எனக்கென்ன குறைச்சல், நான் அழகாயில்லையா என்ற என் அசட்டுத்தனமான கேள்விக்கு, நீங்க 'என் ஜாதியில்லை' என்று சிரித்தவாறே சொன்னாள். இதுதான் எதார்த்தம்.

நீங்கள் அழகாயில்லை என்றோ, உங்கள் வருமானம் போதாது என்றோ, குடும்பம் சரியில்லை என்றோ அல்லது அடிப்படையிலே நல்லவன் இல்லை என்றோ சொல்லவில்லை. 'நீங்கள் என் ஜாதியில்லை' என்று கூறித்தான் என் காதலை நிராகரித்தாள். சமூக நிர்பந்தம் அப்படி. அவளின் தந்தை எனது ஆசிரியரும்கூட என்பதால் அவரிடம் ஜாடை மாடையாகப் பேசிப் பார்த்ததிலிருந்து மிகத்தீவிரமான ஜாதிப்பற்றாளர் என்பது தெரிந்தது. எனவே படிப்பு கூட அல்லது படிப்பு கொடுக்கும் அறிவு கூட இங்கே மழுங்கிப்போவது ஆச்சர்யம்தான். எதிர்காலம், சந்ததிகள் அவர்களின் வாழ்க்கைமுறை என எல்லாமே மாறிப்போகும் என பயம் அவரின் பேச்சில் தெரிந்தது. ஆனால் உலகம் ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை எனக்குக் கற்பித்த ஆசிரியருக்கே நான் எப்படி போதிப்பது?

ஆனாலும் நான் கலப்புத்திருமணம் செய்துகொண்டேன். நான் இப்போது எந்தச்சாதியில் என் பிள்ளைகளை மணம் செய்துகொடுப்பது? நான் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை. காலம் முடிவு செய்யட்டும் என காத்திருக்கிறேன். அதற்குள்ளாகவே அவர்கள் காதலித்து ஓடிப்போனாலும் போகலாம். அல்லது எங்கள் விருப்பபடி நடந்தாலும் நடக்கலாம்.

இங்கு இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும். காதலித்தவர்கள், காதலித்துக்கொண்டிருப்பவர்கள், அல்லது காதலை ஆதரிப்பவர்கள் என எல்லாருக்குமே இன்னொரு முகம் கண்டிப்பாக இருக்கும். தன் வீட்டுப்பெண்கள் தடம்மாறும்போதோ அல்லது காதலிக்கிறேன் என்ற ஒரு வெடிகுண்டைப்போடும்போதோதான் அந்த முகம் தெரியவரும். இதை விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போம்.


திருமணங்களில் ஜாதி பார்க்கும்செயல்களால் (தவறுகளினால்) சிலர் முதிர்கன்னிகளாகவே காலம் தள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுறது. சமூகத்துக்கும் பெற்றோருக்கும் கட்டுப்பட்டு இருப்பவர்களுக்கு கிடைப்பதோ முதிர்கன்னியாகவே இருக்கும் தண்டனை. யாருமே தேவையில்லை, என் வாழ்வு முக்கியம் என்ற சுயநலத்தோடு காதலனோடு ஓடிப்போய் வாழ்கிறவர்களுக்ககோ இனிமையான இல்வாழ்க்கை! என்ன முரன்பாடு இது?

என் தோழியின் பிரச்னையும் அதுதான். இந்தக் கடிதம் எழுதும் காலகட்டத்தில் 'மாப்பிள்ளை' பார்க்கத்தொடங்கியவர், இன்றளவிலும் பார்த்துக் கொண்டேதானிருக்கிறார். நான், 'மாப்பிள்ளை செட்டாகிவில்லையா' என்று கேட்பதையே நிறுத்திவிட்டேன். பதினைந்து வருடங்களுக்கு முன் அனைவரையும் உதாசீனப்படுத்திவிட்டு ஓடிப்போன அவரின் தங்கையோ குழந்தை குட்டி என இல்வாழ்க்கையில். இவரின் இன்னொரு மூத்த சகோதரியின் கதையும் இதுதான். குடும்பத்துக்காகவே உழைத்து, ஓடாய்ப்போய் தன் திருமணம் பற்றியே யோசிக்காமலிருந்தவர், இப்போது காலம் கடந்த சூழ்நிலையில் தனக்கென்று ஒரு துணை வேண்டும் என்று முடிவெடுத்து தன் தாயிடமும், தங்கைகளிடமுமே வெட்கம்விட்டு கேட்கும் நிலையில்...  இத்தனை வயதாகிய பின் கல்யாண ஆசையா? அதுவும் வேறு ஜாதியிலா? அந்தக் குடும்பத்தினரின் பிரதிபலிப்பு என்னவாயிருக்கும்?

இது உண்மையான சம்பவங்களின் தொகுப்புதான் என்றாலும், என்னை நம்பி பகிர்ந்துகொண்ட குடும்ப விஷயங்களை இப்படி பொதுவில் பகிர்வதற்காக சங்கடமடைகிறேன். அதனால் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டிருக்கின்றன. இது தவறுதான் என்றாலும்,  என் வாழ்வின் நடப்புகளை, என்னோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வியலை பதிவுசெய்ய விருபம்பியே இந்த வலைப்பக்கத்தை ஆரம்பித்தேன் என்பது நான் ஆரம்பத்திலேயே சொன்னதுதான்.


கடிதக்கனவுகள் தொடரும்….