மயிலாடுதுறை மாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மயிலாடுதுறை மாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஜூன், 2013

காதலை நட்புச்சாயம் பூசி மறைக்கலாமா?



 

அன்புள்ள நண்பருக்கு,                                 22.02.2000

எப்படி இருக்கிறீர்கள்? நலமா? மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் நலமா? நான் மற்றும் வீட்டில் அனைவரும் நலமே!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எளிமையாக இருந்தது. நன்றாக எழுதி உள்ளேன். அறுவடைக் காலம் என்பதால் அப்பாவுடன் சேர்ந்து நெல் பிடிப்பதில் பிஸியாக உள்ளேன். சீசன் முடிஞ்சதும் நீ மெட்ராஸ் போறத வெச்சுக்கோன்னு சொன்னாங்க. அதனால இப்போதைக்கு அப்பாவோட வொர்க்கிங் பார்ட்னரா (!) இருக்கேன். அதனாலதான் உடனே லெட்டர் எழுத முடியலை.

என்ன! இலங்கையிலிருந்து கடிதம் வந்ததா? எவ்வளவு ஆச்சர்யமான விஷயம். என்ன எழுதியிருக்கிறார் யாழினி? நீங்கள் பதில் கடிதம் போட்டுவிட்டீர்களா?

எனது தங்கையைப் பார்த்தால் பேசுங்களேன்! இதிலென்ன தயக்கம்? நல்லா படிக்கச்சொல்லுங்க. அதெல்லாம் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டா.

அப்புறம் உங்கள் தோழியைப் பற்றி எழுதியிருந்தீர்கள். நான் எதுவும் தப்பா நினைக்கல. உங்களோட அனுபவங்கள என்னுடன் பகிர்ந்துக்கறீங்க. எல்லாருடைய அனுபவமுமே நமக்கு ஒரு வாழ்க்கைப் பாடம் என்பது என் கருத்து. அதனால நீங்க எழுதுங்க.

எனக்குத் தோணும் கருத்துக்களையும் சொல்லலாம்தானே?! புரட்சியாய் பேசிய, அறிவாளியாய் இருந்த உங்கள் தோழி இரட்டை வேடம் போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். உள்ளுக்குள் உங்கள் மேல் இருந்த காதலை, நட்புச் சாயம் பூசி மறைத்திருக்கிறார்.

நண்பராக நினைத்திருந்தால் திருமண பத்திரிகையைக் கொடுத்துவிட்டு, என் வாழ்க்கையை கெடுத்துடாதீங்கன்னு சொல்லமாட்டார். அப்புறம் உங்களை வேறு பெண்ணுக்கு விட்டுக்கொடுக்கிறத தாங்க முடியலைன்னு அழுது அரற்றவும் மாட்டார்.

அதானலதான் காதலிப்பவர்களுக்கு துணிவு வேணும்னு சொல்றாங்க போலிருக்கு!?

அதே சமயம், இந்த தலைமுறைல நம்ம வரைக்கும்கூட ஜாதி என்பது பிரிக்க முடியாத பெரிய சக்தியாதான் இருக்கு இந்த சமூகத்துல. நம்மைப் போன்றவர்கள் அதை ஒழிக்க நினைத்தாலும் நடக்காத விஷயமாகத்தான் இருக்கிறது அது.

எங்க அக்காவுக்கு வரன் பார்க்கிறோம். Msc., B.Ed., படிச்சிருக்காங்க. படிப்புக்கேத்த வரன் எங்க ஜாதில கிடைக்கிறது கஷ்டம். நான் சொல்றேன், “Cast” வேண்டாம்னு சொல்லுங்க ஒரே மாசத்துல கல்யாணமே முடிச்சிடலாம்னு. ஆனா எங்க வீட்ல யாரும் ஒத்துக்கலை. அப்படி இருக்க எழுத்தளவுல எழுதறதாலயோ, பேசறதாலேயோ ஒண்ணும் மாறிடப் போறதில்ல இது.

வேணும்னா நாம நம்ம சந்ததிகள் மேல இந்த ஜாதிச் சாயம் பரவ விடாம தடுத்து அவங்கள உருவாக்கலாம்.

புரட்சியாய் செய்த எத்தனையோ திருமணங்கள் புஸ்வாணமாகிக் கொண்டிருக்கின்றன. காதல்ன்ற பேர்ல ஒருத்தரை ஒருத்தர் நம்பி, பெத்தவங்கள எதிர்க்க முடியம தப்பியோடி, சில காலம் வாழ்ந்து பிறகு அதுவும் வெறுத்துப்போய் பரஸ்பரம் குறைகூறிக்கொண்டு ஏனோ தானோவென்று வாழ்ந்து (பிரிந்து) வருகின்றனர்.

காதலில் இருக்கும் வேகம் இவர்களுக்கு வேறெதிலும் இல்லை. இப்படி விட்டேற்ற்றியாய் வாழ்வதைவிட, பேசாமல் பெற்றோர் பார்க்கும் அந்த ‘ஜாதி’ வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம்?!

அதற்கும் மேல் நமது கலாச்சாரம் காலங்காலமாய் உபயோகித்து வரும் வார்த்தை கற்பு. கற்புன்னா என்ன? அது உடல்ல இருக்கிற ஒரு வஸ்துவா? இல்ல டி.என்.ஏ. ஜீன் போன்ற சமாச்சாரங்களா?

ஏன் அப்படின்னா அது ஆணுக்கு கிடையாதா? திருமணம் கற்பை பாதுகாக்கிறதா? விபத்தா நடந்தா கூட கற்பை பறிகொடுத்தாட்டான்னு சொல்றவங்க திருமணமானவங்களை சுமங்கலின்னு சொல்லுவதேன்?!

‘ஒருவனுக்கு ஒருத்தி’ன்ற கொள்கைதான் தடம் புரண்டு கற்புன்னு மாறி இருக்கணும். ராஜேஷ்குமார் சொல்வார் – இந்த உலகத்துல காற்றை சுவாசிக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய விஷயம் கற்புன்னு. ஒழுக்கம், நேர்மைன்னு எல்லாத்தையும் சேர்த்து கற்புன்னு ஒரு வார்த்தையைச் சொல்லி பெண்களுக்குன்னு முத்திரையும் குத்திட்டாங்க.!

பெண்களா இதை புரிஞ்சிகிட்டு வெளில வந்தாதான் இதுக்கு விடிவு காலம்.

அதுக்கும் மேல நம் மக்களோட சிந்தனை எப்போதும் உடலைப் பற்றியதாகவே இருப்பது. அதுல முக்கிய பங்கு தமிழ் சினிமாவுக்குத்தான். ஆதி காலத்திலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் இப்படியே தொடர்கிறது.

இதனால்தான் ஆண்-பெண் நட்பு கூட இங்கு அன்னியமாய், வித்தியாசமாய் பார்க்கப்படுகிறது. அடிமட்டத்திலிருந்து மாறணும். வாழ்க்கைல செக்ஸ் ஜஸ்ட் சாதாரணம்தான் எனும் எண்ணம் வரணும். அதன் பிறகே நல்ல சிந்தனைகள் எழும்பும். மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.

விடுதலை உணர்வை விரும்புகிற பெண்களுக்கு அவர்களது கணவர்கள் தடையாய் இருப்பதாலேயே அவர்கள் தனித்தே வாழலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர் போலிருக்கிறது.

சுய சம்பாத்தியம் இருக்கும்போது பெண்ணுக்கு ஒரு தைரியமும், எதையும் எதிர்கொள்ளும், சமாளிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.
அப்படி இல்லாதபோது ஆணை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும், அதனாலேயே எதையும் எதிர்க்க முடியாமல், அவனுக்கு பயந்து அடிமையாய் வாழ்தலும் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.

நான் ஆனந்தவிகடன் படிப்பதில்லை. ஏற்கனவே காசை பேப்பராக்கியே வீண்டிக்கறேன்னு திட்டறாங்க. பட்ஜட் பற்றாக்குறை வேறு. அதனால்தான் வேறு புத்தகங்கள் எதையும் சேர்க்கவில்லை என் லிஸ்டில்.

இன்னும் கொஞ்ச நாள்ல மெட்ராஸ் வந்துடுவேன். நல்ல லைப்ரரியா சொல்லுங்க, அங்க வந்து என் படிப்பு ஆசைக்கு தீனி போட்டுக்கிறேன். எனக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் படைப்பை (ஜெயகாந்தனுடையதுன்னு நினைக்கிறேன்) படிக்க ரொம்ப நாளா ஆசை. நீங்க படிச்சிருக்கீங்களா?

அப்புறம் உங்க சிங்கப்பூர் தோழி ஜென்ஸி வீட்டுக்கு வந்தாங்களா? உங்களுக்கு வேலை விஷயமா என்ன சொன்னாங்க? எண்ணம் போல வாழ்க்கைன்னு சொல்வாங்க, அதனாலதான் உங்களுக்கு நல்ல நட்புகள் கிடைத்திருக்கிறது.

என் நண்பர் கோபு நிறைய சின்னச்சின்ன பரிசுகள் வாங்கியிருக்கார். கவிதை, விமர்சனம், துணுக்கு… என்று நிறைய படைப்புகள் வெளியகியிருக்கு. வாசகர் வட்டத்தில் நன்கு அறிமுகமான நபர். ‘பாக்யா’தான் அவரோட ஆஸ்தான பத்திரிகை. பெரிய விஷயமா இப்போதான் கவிதை நூல் எழுதி அதை அச்சுக்கு கொண்டுவர முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறார்.

பெற்ற தாய் இறந்தால் கூட அதிலும் அரசியல் கலந்து அசிங்கம் பண்ணுவார்கள் போலிருக்கிறது நம் அரசியல்வாதிகள். தரும்புரி பஸ் எரிப்பு சம்பவத்தில் கழக கட்சிகள் ஒன்றையொன்று சாடிக்கொண்டிருக்கிறதே தவிர, அய்யோ… கண்ணு முன்னாடி உயிரோட எரிஞ்சாங்களேங்கிற ஒரு மனிதாபிமானம் எவருக்கும் இல்லை.

இன்னிக்கு பார்லிமெண்ட்ல மொராக்கோ பிரதமரை வச்சுகிட்டு நம்ம எம்.பி.ங்க குழாயடி சண்டை போட்டுக்கிட்டத பார்த்தா இங்க ஒரு ‘முஷாஃரப்’ இருக்கலாமோன்னு தோணுது.

வேறென்ன… நிறைய எழுதுங்கள். எனக்குள் தெளிவு வர உங்கள் எழுத்து உதவியாய் இருக்கும். உங்கள் மகள்களை நல்லா ‘ஷேப்’ பண்ணுங்க. இந்த வயசிலேயே ஆரம்பிச்சாதான் அவங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்.

வேறொன்றும் விஷயமில்லை. மற்றவை தங்கள் பதில் கண்டு.

மாலா, மயிலாடுதுறை.
24.02.2000

சனி, 15 டிசம்பர், 2012

முதிர்கன்னி



கே.பாலசந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' என்னை மிகவும் பாதித்த திரைப்படங்களில் ஒன்று. கிட்டத்தட்ட சுஜாதாவின் கதாபாத்திரம்தான் இந்தக் கடிதக் கதாநாயகியின் சகோதரிக்கு. மொத்தம் 6 பெண்கள். ஆறு பெண்களைப் பெற்றால் அரசன் கூட ஆண்டியாவான் என்று சொல்வார்கள். ஆனால் இந்தக்குடும்பத்தில் தந்தையோடு தோள் கொடுத்து அத்தனை பேரையும் குறைந்த பட்சம் பட்டப்படிப்பு வரை படிக்கவைத்திருக்கிறார் இவர். இரண்டாவது சகோதரியான இவருக்கு கீழே மூன்று சகோதரிகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஐந்தாவது சகோதரியான மாலாவிற்குதான் மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.

'ஆட்டோகிராப்' படத்தில் வரும் ஒரு பாடலில், ஸ்நேகா பாடுவதைப்போல 'யாருக்கில்லை போராட்டம், கண்ணில் என்ன நீரோட்டம்' என்ற பாடல்வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு குடும்பங்களுக்குள்ளும் எத்தனை எத்தனை பிரச்னைகள், போராட்டங்கள்? அதிலும் இந்தப் பெண்கள் படுகின்ற பாடு இருக்கிறதே சொல்லி மாளாது.

இத்தனை நாள் திருமணத்தை மறுத்து குடும்பத்துக்காக உழைத்தவர், திடீரென ஒருவரை எனக்குப் பிடித்திருக்கிறது. அவரை எனக்கு திருமணம் செய்துவையுங்கள் என்று கேட்டால், சந்தோஷமாக செய்து வைப்பதில் என்ன குடி மூழ்கிவிடப்போகிறது? வளரிளம் பருவம் என்றால், காதல் என்ன என்பது தெரியாது. நல்லவர் கெட்டவர் தெரியாது. மனிதர்களை எடை போடும் திறனில்லாது ஏமாந்து போகும் வயசும் கிடையாது. இவரோ படித்தவர். உயர்வான ஆசிரியப்பணி பார்ப்பவர். ஒருவகையில் இவர் முதிர்கன்னி. இவரது முடிவு தெளிவாகத்தானே இருக்கும் என ஏன் நம்ப மறுக்கிறார்கள்? குடும்பத்தினர் இதை ஏன் உணரவில்லை? எது குறுக்கே நிற்கிறது?

தொடர்ந்து கடிதத்துக்கு வருவோம்.....


எனக்கும் ஈஸ்வரிக்கும், பெரியக்காவுக்கும் அவ விருப்பம் அதுதான்னா செஞ்சிடுவோம். அவளாலதான் நம்ம குடும்பமே இன்னிக்கு இந்த அளவுக்கு வந்திருக்கு. அவ ஆசையை நாம வேணாம்னு சொல்லக்கூடாதுன்னு, சொல்றோம். அப்பா-அம்மா, அத்தான் மூவருக்கும் ஜாதி, குடும்பம், உறவுகள் பத்தின பயம்.

சீக்கிரம் எனக்கு முடிச்சிட்டா... பிறகு பிரச்னையில்லைன்னு முடிவு பண்ணியிருக்கோம். இப்பவும் கூட அவ நினைச்சா போயிருக்கலாம். நாங்களும் வேணும்னுதான் இருக்கா! அது இவர்களுக்குப் புரியமாட்டேங்குது. என்னதான் நடக்கும்னு ஒண்ணும் புரியலை. இப்ப இந்த தீபாவளிக்குப் பிறகுதான் கொஞ்சம்... கொஞ்சமா பேச ஆரம்பிச்சி... இப்போ ஓரளவு சகஜமாயிருக்கா. இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு பயம் ஓடிகிட்டேயிருக்கு. நமக்குப் புரியறத அவங்களுக்குப் புரியவச்சு, ஒத்துக்க வைக்க முடியலை. என்னா வாழ்க்கைடா இதுன்னு.... ரொம்ப சலிப்பா இருக்கு!

அதனாலதான் என்னை சீக்கிரம் 'பேக்கப்' பண்ணனும்கறாங்க. கல்யாண செலவுக்கு சென்னைல இருக்கிற வீட்டை விற்க ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கோம். இந்த மாபெரும் குழப்பத்தாலதான், ஆமாம் போன்னு ஒரு சலிப்புலதான் யாரோடயும் தொடர்பேயில்லாம திரிஞ்சிகிட்டு இருந்தேன். சமீபத்துல 'ரெப்'பா இருக்கிற 'போஸ்' என்பவர் பிரண்ட்லியா இருக்கார். ரொம்ப ஜாலியான ஆள். ஊர் கும்பகோணம். திருமணமாகி ஒரு மகன் உள்ளான். ஏதோ ஒரு ரூபத்துல 'நட்பு'-னாலதான் என் வாழ்க்கையும் ஓடிக்கிட்டிருக்கு.

வேலை அதேதான் சம்பளம், அலவன்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு ஏயாயிரம் வரும். சாந்தியிடம் பணம் வாங்க வேண்டாம்னு வீட்டு செலவு எல்லாம் நான்தான் பார்க்கறேன். அவளும் விடாம 2000/- குடுத்துகிட்டேதான் இருக்கா.
அவளுக்கும் குடும்பத்தை விட மனசில்லை. எங்களுக்கும் அவளை விட்டா வழியில்லை. ஏதோ வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு! பாப்போம், எங்கதான் போய் நிக்குதுன்னு!

03.02.2006

எப்பவும் மாசத்துல கடைசி நாட்கள்ல கொஞ்சம் பரபரப்பா அலைய வேண்டிவரும். இன்னிக்குதான் ப்ரீ ஆனேன். கிட்டத்தட்ட 8 பக்கம் எழுதிட்டு படிச்சி பாக்கறேன்.ஒண்ணுமே புரியலை. அட்ஜஸ்ட் பண்ணி படிச்சிக்கோங்க.

எங்க பெரியம்மா மகளின் மகன் கூட ஒரு வருடம் முன்னால் அரபு தேசத்துக்கு (கொத்தனார்) வந்தான். உங்க அட்ரசெல்லாம் கூட கொடுத்தனுப்பினேன். கிட்டத்தட்ட அடிமை மாதிரி, சரியான சாப்பாடில்லாம, சம்பளமில்லாம வேலை பார்த்திருக்கான். விட்டால் போதும்னு ஒரு வாரம் முன்னால ஓடிவந்துட்டேன்னு சொல்றான். ரொம்ப பாவமாயிருந்தது.

இந்தியனுக்கு மட்டும் ஏனிந்த வாழ்க்கை? மிகப்பெரிய ஜனநாயகம்னு சொல்லிக்கிட்டு, மத்த எல்லா தேசத்திலும் இந்த மாதிரி எத்தனையோ லட்சம் பேர் பணய வாழ்க்கை வாழறாங்க. இதெல்லாம் இங்கே குரைச்சிகிட்டிருக்கிற அரசியல் நாய்களுக்கு ஏன் தெரியலை? என்னதான் இருக்கு பதவி சுகத்துல? 'மே' மாசம் நடக்கப்போற தேர்தலுக்கு இப்பவே பேரம் பேச ஆரம்பிச்சிட்டாங்க! இதான் சாக்குன்னு யாராவது பொதுக்கூட்ட மேடைகள்ல குண்டைப் போட்டு பெரிய தலைகளையெல்லாம் காலி பண்ணிட்டா தேவலாம்னு தோணுது. பத்தாததுக்கு விஜயகாந்த் வேற ஏகப்பட்ட வசனங்களை அள்ளிவிட்டுகிட்டிருக்கார். யார் வந்தாலும் தமிழனின் சராசரி வாழ்க்கையில் துளியும் முன்னேற்றம் இருக்கப்போவதில்லை!

அப்புறம், வேற ஏதாவது புக்ஸ் படிச்சீங்களா? மெட்ராஸ்ல 'புக்பேர்' போகலாம்னு நினைச்சேன். முடியலை. கடினமான வேலைன்னு சொன்னீங்க. வேறெந்த சிந்தனையுமில்லாம வேலை பாருங்க. வேறெங்காவது முயற்சி பண்ண முடியாதா? முக்கியத் தேவைகள் முடிஞ்சிடுச்சின்னா பேசாம சென்னைக்கே வந்து வேலை தேடிக்கப் பாருங்க. உங்கள் கடைசி தம்பி கல்யாணத்துக்கு கண்டிப்பா வரேன். சூழ்நிலை எப்படி இருக்குமோ தெரியலை. இருந்தாலும் உங்களை வந்து கண்டிப்பா பார்க்கணும். உங்க வீட்டு போன் நம்பர் கொடுங்க. அட்லீஸ்ட் போன்லயாவது  எல்லோர் கிட்டயும் பேசறேன்.

எழுதினா போய்க்கிட்டே இருக்கும். இதோட முடிக்கிறேன்.
மற்றவை உங்கள் பதில் கண்டு.

By
மாலா,
மயிலாடுதுறை.
 

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

என்னைக் கல்யாண கோலத்துல பார்க்கணுமா?


மயிலாடுதுறை மாலாவின் கடிதங்கள்


 வணக்கம்! நான் மலா! தங்கள் கடிதம் கண்டேன். எனக்கு பரிசுத்தொகை இன்றுதான் கிடைத்தது. தங்கள் கடிதம் 25.03.1998 அன்று கிடைத்தது. இன்று காலையில் பரிசுத்தொகை கிடைக்கவில்லை என்று ஒரு கடிதம் எழுதி அதை போஸ்ட் பண்ணுவதற்குள் பணவிடை வந்துவிட்டது. தங்களுக்கும் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். கிடைத்துவிட்டதா எனக்குத்தெரியப்படுத்துங்கள். நான் இந்த பத்திரிகையை எப்போதும் வாங்குவதில்லை. யதார்த்தமாக எழுதி அனுப்பினேன். ரெகுலராக வாங்காததால் தங்களது கட்டுரையை படிக்கவில்லை. SORRY, ANYWAY  வாழ்த்துக்கள். என்னைப் பாராட்டியதற்கு நன்றி!

உங்களது கையெழுத்து மிகவும் அழகாக உள்ளது. 'அச்சில் கோர்த்தது போல' என்பார்களே அதுபோல். ரியலி சூப்பர்ப். போட்டி 7 ற்கு அனுப்பியுள்ளீர்களா? நான் ஏதோ கிறுக்கி அனுப்பியுள்ளேன். தங்களுக்கு விருப்பமிருந்தால் என்னை 'PEN FRIEND' ஆக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கடிதம் எழுதுங்களேன். பரிசுத்தொகை கிடைத்ததும் தெரியப்படுத்துங்கள். மற்றவை பிறகு....

என்றும் நட்புடன்,
மாலா.
மயிலாடுதுறை.


 முதன் முதலாக ஒரு போஸ்ட் கார்டில் ஆரம்பித்த இந்த நட்பு கடிதப்போக்குவரத்து இல்லாவிட்டாலும் இன்றுவரை தொடர்கிறது. எப்போதோ ஒரு முறை கைப்பேசியில் பேசிக்கொண்டுதானிருக்கிறோம். முகம் தெரியாமல் ஆரம்பித்த நட்பு,  குடும்ப விஷயங்களையும் பரிமாறிக்கொள்வது வரை தொடர்ந்தது. 1998 ல் ஆரம்பித்த போது மாலா எனக்கு எழுதிய கடிதம் மேலேயும், நண்பர்களான பின்பு 2006- ல் எனக்கு எழுதிய கடிதம் கீழேயும் இருக்கிறது.

அன்புடையீர்,                                                                                                  28.01.2006

எப்படியிருக்கிறீர்கள்? நலமா? உங்கள் கடிதம் கிடைத்தது. சம்பிரதாயமா நலம் விசாரிச்சிகூட லெட்டர் எழுதாம ஒரு வருஷத்துக்கும் மேல இருந்திருக்கேன். என் மேல கோபமே வரலயா?! ஆனா எனக்கே என் மேல கோபம்தான், ஏனிப்படி ஒருவருடனும் கடிதத்தொடர்பில்லாம விட்டேத்தியா இருக்கோம்னு.

காரணம் சொல்லனும்னா நிறைய அடுக்கிக்கிட்டே போகலாம்… ஆனா நான் சொல்லப்போறதில்ல! பாபுகிட்டக் கூட எப்பவாவது போன்ல பேசறதோட சரி. பஹ்ரைனில் இருக்கும் பஹ்ருதீன்கூட என்மேல பயங்கர கோபத்துல இருக்கு. போன வருஷம் ரம்ஜான் அப்போ எங்க வீட்டுக்கு வந்து நிறைய பொருட்கள் கொடுத்துட்டுப்போச்சு. அப்போ நான் வீட்ல இல்லை. பிறகு போன்ல பேசினேன். அவங்க வீட்டுக்கு வரச்சொன்னார். பல வேலைகள்ல 10 நாள் கழிச்சி, அன்னிக்கு போலாம்னு அவங்க வீட்டுக்கு போன் பண்றேன். முதல் நாளே ஃபிளைட் பிடிச்சிடுச்சாம். என் போன் நம்பரைத் தொலைச்சிட்டு ரொம்ப தவிச்சான்னு அவங்க அக்கா சொன்னாங்க. என் மேல கோபம் இருக்கிறது நியாயம்தானே! ஆனா இன்னிக்குவரைக்கும் மனசுக்குள்ள ஆயிரம் தடவை 'சாரி' கேட்கறேன். லெட்டர் எழுதலை!?

உண்மையைச் சொல்லனும்னா…. பணத்தை துரத்திகிட்டிருக்கேன். ஏனிப்படி படிச்சி, நாலெழுத்து தெரிஞ்சிகிட்டு வேலை காசுன்னு ஓடறோம்னு இருக்கு. இப்படி உட்கார்ந்து புலம்பக்கூட நேரமில்லாம ஓடவேண்டியிருக்கு? நமக்கான கடமைகள்னு வரும்போது….    அதுக்கு கொடுக்கக்கூடிய விலைகள் அதிகம்தான் போலிருக்கு.

நம்ப மாட்டீங்க இந்த லெட்டர் எழுத ஆரம்பிக்கிறேன். மணி இரவு 12.00. எப்படியும் முடிக்க ஒரு வாரம் ஆகும்னு நினைக்கிறேன். டைரி மாதிரி தேதி போட்டு எழுதிடறேன். என் தம்பிதான் அன்னிக்கு போன் பண்ணினான். அடுத்தநாள் லெட்டர் எழுதிட்டியான்னு கேட்டான். இல்லைன்னேன். எங்கிட்டியாவது சொல்லேன். நானாவது எழுதறேன்னான்-ரொம்ப கடுப்பா! (அவங்க அப்பா அம்மாவுக்கு 2 வரி கார்டு எழுதச்சொன்னாக் கூட முடியாதுன்னு சொல்றவன்). இலவச இணைப்பா…  நீயெல்லாம் பிரண்ஷிப்புக்கு லாயக்கேயில்லாத ஆள்னு திட்டு வேற!

ஜூன் மாதம் உங்களுக்கு நான்கு பக்கம் எழுதி வச்சிருந்தேன். ரொம்ப கேப் விழுந்திருச்சி. அந்த பேப்பர்ஸை எங்கே வச்சேன்னு தெரியலை. இந்த லெட்டர்ல அந்த மேட்டர்சையும் சேர்த்து எழுதிடறேன்.

எங்க வீடு எப்போதும் போல சண்டையும் சமாதனமுமா நீருபூத்த நெருப்புமா போய்க்கிட்டிருக்கு. அப்பா உடல்நலம் பரவாயில்லை. பனிக்காலம் என்பதால் இருமலும் வீசிங்கும் அதிகம்தான். அடிக்கடி மெட்ராஸ் போயிட்டு வராங்க. அம்மா எப்பவும்போல நலம். சாந்தி ஓகே.  ஈஸ்வரி இப்போ அண்ணா நகரில் ஒரு ஸ்கூலில் வேலை பார்ப்பதால் ஜாகையும் அங்கேதான். குழந்தையையும் அங்கே சேர்த்துவிட்டாள். சுஜி பெண்ணை 3 மாசமா எங்க வீட்ல விட்டிருக்கா. புவனாவிற்கு இரண்டாவதா மகன் பிறந்திருக்கான்.

இந்த வருட தீபாவளிக்கு முதல் நாள், தீபாவளிக்கெல்லாம் மெட்ராஸ் ராமச்சந்திராவுல வாழ்க்கை வெறுத்து உட்கார்ந்திருந்தேன். புவனாவுக்கு அங்கதான் பிரசவம்.  சுதா கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்டாள்னு சொன்னா அது பொய். அடிக்கடி ஞாபகம் வர்றதில்ல. அப்பாதான் தவறுதலா அடிக்கடி சுதா சுதாங்கிறாங்க. அப்போ சுத்தியிருக்கிறவங்க எல்லாம் ரணப்படுறோம். அம்மா உடனே அழுவாங்க. சுஜி வீட்டுக்குப் போன எங்க ஊர்க்காரப்பையன் சுதாவையும் பார்த்துப் பேசியிருக்கான். ஆனா எனக்கு அது பிடிக்கல. அவனைக்கண்டிச்சேன். ஏனோ மனசு வெறுத்துப்போச்சு!

என்னைக் கல்யாண கோலத்துல பார்க்கணுமா? கவலைப்படாதீங்க. சீக்கிரம் பாரத்துடலாம். எஸ். ஜாதகக்கட்டு வெளில எடுத்து 2, 3 மாசமாச்சு. அங்கங்க விநியோகிச்சிட்டிருக்கோம். பெரிய அத்தான்தான் பார்க்கிறார். வூட்ல உள்ள ஒவ்வொருத்தரும் அவங்க அவங்களோட கனவு, ஆசை எதிர்பார்ப்பு, அக்கா எல்லாம் எதிர்பாரத்து கிடைக்காத வாழ்க்கை… இப்படி எல்லாருடைய விருப்பங்களையும் ஆளுக்கு ஒண்ணா வெளியிட்டுக்கிட்டிருக்காங்க. அப்படித்தான் மாப்பிள்ளை பார்க்கப்போறம்னு சொல்றாங்க. எனக்கான வாழ்க்கையை எல்லாரும் ரொம்ப ஆசையா கனவு கண்டுக்கிட்டிருக்கிறதுனால, எனக்குன்னு பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்லை.