Sunday, December 30, 2012

வாழ்ந்து காட்ட வேண்டும்! – சிங்கப்பூர் ஜென்ஸியின் கடிதம்ஹலோ ஃபரண்ட்,                                         28.12.1999
உங்கள் கடிதம் கிடைத்தது. மிகவும் சந்தோஷம். பதில் எழுத தாமதமாகிவிட்டது, மன்னிக்கவும். கடவுள் கிருபையால் நான் நல்லபடியாக உள்ளேன். அதுபோலவே நீங்களும் நலம் என்று நம்புகிறேன்.

மற்றபடி என் கணவருடன் பேசினேன். அவர் என்னை மார்ச் மாதம் கட்டாயம் மெட்ராஸ் வரவேண்டும், மறபடியும் சிங்கப்பூர் போகவேண்டாம் தற்சமயம் ஆட்டோ உள்ளது. அதை வைத்து சமாளித்து விடலாம். கண்டிப்பாக ஊருக்கு வா என்கிறார். காரணம் மகளைப் பார்க்கவும் ஆளில்லை. நான் உங்களுக்கு முன்னமே எழுதியபடி தற்சமயம் என் சொந்தமல்லாத ஒரு ஆன்டிதான் அவளைப் பார்த்துவருகிறார்கள்.

என்னுடைய லட்சியம் நான் நல்ல நிலைமைக்கு வந்த பிறகுதான், அதாவது இன்னும் 2 வருடம் வேலை செய்த பிறகு சென்னை வந்துவிடலாம் என்று நினைக்கிறேன். எப்படியும் நான் முயற்சி செய்கின்ற வேலை எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அது கிடைத்தால் நான் யாரையும் எதிர்பார்க்காமல் வாழலாம். காரணம் என் தாய், சகோதரர்கள், சகோதரிகள் முன்னிலையில் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியத்தில் உள்ளேன். ஆனால் என் ஆசைகள் நிறைவேறுமா தெரியவில்லை?!

காரணம், என் கணவர் அங்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அப்படி நான் வரவில்லை என்றால் அவர் இஷ்டத்துக்கு நடப்பாராம். நான் முன்பே இங்கு இன்னும் 2 வருடம் வேலை செய்வதைப்பற்றி எழுதியிருந்தேன். அதற்கு கோபப்பட்டுத்தான் எனக்கு கடிதமே போடாமல் இருந்தார். அவர் அவரது வீட்டில் தாய் தந்தையுடன் இருக்கிறார். என்ன செய்வது என்று புரியவில்லை. மொத்தத்தில் குழம்பிப்போய் உள்ளேன்.

இனி கவிதா விஷயத்துக்கு வருவோம். 21 -ம் தேதி அவளும் சரவணனும் ஃபோனில் பேசினார்கள். உண்மையில் கவிதாவிடம் பேசியதில் சந்தோஷப்பட்டேன். கடைசியாக 1998 மார்ச் 18 ம் தேதி நான் வருகின்ற சமயம் ஏர்போர்ட்டில் பேசியதோடு சரி, அப்புறம் பேசவேயில்லை. அதனால்தான் அந்த சந்தோஷம். நான் அவளுடைய விருப்பத்தைக் கேட்டேன். அவளுக்குள் ஆசை உள்ளது. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக முடியாது என்று சொல்கிறாள் என்று நினைக்கிறேன். சரவணனும் கவிதா ஒத்துக்கொண்டால் நான் காத்திருக்கிறேன் என்கிறார். அவள் வீட்டில் இதைப்பற்றிச் சொல்ல பயப்படுகிறாள். பொறுத்திருந்து பார்ப்போம். எப்படியோ நீங்கள் சொல்வது போலவே அவரவர் இஷ்டத்துக்கு விட்டுவிடுவோம். காலம் பதில் சொல்லட்டும்.

மற்றபடி, நம்முடைய MEPZ -ல் உள்ள கம்பெனிகள் எல்லாம் முதலில் பெரிய அளவில் செயல்படுவார்கள். திடீரென ஒட்டுமொத்தமாக மீடிவிட்டு ஓடிவிடுவார்கள். J.T.S. கம்பெனியின் அனுபவம் ஒன்றே சான்று. இது பற்றி உங்களுக்கும் தெரியும்தானே! அதனால்தான் அதைப்பற்றி அதிகம் எழுதவில்லை. இந்தியாவில் இப்படி நிறைய கம்பெனிகள். என்ன செய்வது?

புதிய வருடம் பிறக்க இன்னும் இரண்டே நாட்கள்தான் உள்ளது. என்னைப் பொருத்தவரை நாட்கள் வெகு சீக்கிரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த 1999 -ம் ஆண்டு பல துயர சம்பவங்கள், பல பயங்கர விபத்துக்கள் எல்லாம் நடந்துள்ளன. இனி 21-ம் நூற்றாண்டு பிறக்கப்போகிறது. ஹூம்... இன்னும் என்னென்ன சம்பவங்கள் எல்லாம் நடக்கப்போகிறதோ நாம் அறியோம். இனி வருகின்ற நாட்களாவது நல்லபடியாக நடக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்வோம்.

இப்படிக்கு,
என்றும் நட்புடன்,

2 comments:

semmalai akash said... [Reply]

உங்களுடைய இந்த கடிதம் இரண்டு மூன்று கதைகளை சொல்கிறது. மனதுக்கு கஷ்டமாகவும் இருந்தது.

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துகள்.

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கும் தங்களுடைய கருத்திற்கும் மிக்க நன்றி ஆகாஷ் அவர்களே!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!