பாலகுமாரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலகுமாரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 நவம்பர், 2013

ஜெயிக்கனும், எப்படியாவது ஜெயிக்கனும்... (பாலகுமாரன் பக்கம்)



ஜெயிக்கிறதும் தோக்கறதும் அவனவன் தலையெழுத்து. நான் ஜெயிச்சேன்னு, நான் தோத்தேன்னு குருடன்தான் சொல்லுவான். செய்யற வேலையை ஒழுங்கா கவனமா செய்துட்டுப் போறதுதான் நமக்கு நல்லது.
ஜெயிக்கிறதோட முதல் விஷயம் மூஞ்சி மாறாமல் இருக்கிறது. என்ன நடந்தாலும் சரி, சந்தோஷமோ துக்கமோ மூஞ்சில காட்டாது இருக்கிறது நல்லது. புத்தி இரும்பா இருந்து, மனசு கல்லா இருந்தால்தான் முகம் அமைதியாய் இருக்கும்.
 
ஜெயிப்பதற்கு பறப்பவன் வெற்றி தேட அலைபவன் உயிர், மானம், பொருள் இழப்பு எல்லாவற்றையும் துச்சமாய் மதித்து பெரிய களத்தில் இறங்குபவன் இப்படித்தான் அலைகிறான். எச்சில் சோறு திண்கிறான்.
ஜெயிக்கனும், எப்படியாவது ஜெயிக்கனும். பினி, பசி, பட்டினிங்கிறதே இருக்கக் கூடாது. காசுதான் வாழ்க்கை. காசுதான் உலகம் காசுதான் சந்தோஷம். காசுதான் கர்வம், காசுதான் மனுஷன், மனுஷன்தான் காசு. என்னவேணா செய்து காசு சம்பாதிக்கலாம்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பல முகங்கள் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு முகம் வெளிவரும். வாழ்க்கையில் அதிகம் நடிப்பவருக்கு தன் உண்மையான முகம் எதுவென்று தெரியாமலே போகும். தன் உண்மையான முகத்தை தெரிந்துகொள்ள ஆவல் இல்லாமல் போகும்.
இப்ப வாங்குற காசுக்கு நன்றியோட இருக்கணும்ல? என்ன நன்றி? பூ வித்தோம் காசு தராங்க. இதுல எங்க நன்றி வந்தது?
இடையறாது பொய் சொல்ல எல்லாராலும் முடியாது. வெகு சிலரால்தான் முடியும். அப்படி பொய் சொல்ல தனி வளர்ப்பும் வருடக் கணக்கில் பயிற்சியும் வேண்டும். அதிகமாக அவமானப்பட்டவர்களால்தான், அவமானமடைந்த குடும்பத்தில் பிறந்தவர்கள்தான் இப்படி இடைவிடாது பொய் சொல்ல முடியும். வாழ்ந்தே காட்ட வேண்டும் என்கிற நிர்பந்தம் இந்த மனிதர்களை எல்லா எல்லைக்கும் இட்டுச் செல்கிறது.

இப்ப என்ன நடந்துபோச்சுன்னு புலம்பற. அழகான ஒரு பொம்பறைய பார்த்தா எல்லா ஆம்பிளையும் ஆடிப்போய் நிக்கறதில்லையா? அதே விதமா அழகான ஆம்பிளையைப் பார்த்தா பொம்பளைக்கு இருக்காதா? இருந்தா என்னா தப்பு?
ஒரு வயதிற்குப் பிறகு காமத்தை அனுபவிக்க காதல் இடைஞ்சலாகி விடுகிறது. வெறும் உடம்பு ஆட்டத்தோடு பெண்ணை விட்டு விலக முடியாமல் போகிறது. காமம்தான் காதல் செய்யத் தூண்டுகோல். காமம்தான் காதலின் மறைபொருள். காமம் என்பது ஆரவாரம். காதல் என்பது மொழி. காமம் என்பது ஒரு செய்தி எனில் காதல் என்பது கவிதை.
கவிதை தெரிந்துவிட கவிதையில் நாட்டம் விழ கவிதை செய்து செய்து புத்திக்கு அந்த ருசி பழக்கமாகிவிட வெறுமே நயமின்றி பேசமுடியாது. பெண் போகம்தான். உலகின் எல்லா விஷயங்களும் போகம்தான். உணவு உறைவிடம், உடை, வாசனைக் குவியல், தொழுகை, படிப்பு பயணம் எல்லாமே போகம்தான்.
காமத்திலிருந்து தப்பித்துக் கொள்வது எளிதே அல்ல. கணவன்-மனைவி சண்டைகளை பல்வேறு நேரங்களில் காமம்தான் தீர்த்து வைக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பரஸ்பர ஈர்ப்பு காதலுக்கு அடித்தளமாக அமைகிறது. இந்தக் காதல் எனும் வாகனம்தான் வாழ்க்கைப் பயணத்தைச் சொகுசாக்கும் விஷயம்.
வயதுக்கு மீறின புத்திசாலித்தனம் என்பது எல்லோருக்கும் இருப்பதில்லை. இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. நேசிப்போடு பழக்கப்பட்டவர்களுக்குத்தான் நேசிப்பைப் புரிந்து கொள்ள முடியும்.
நட்பை யார் வேண்டுமானாலும் யாருக்கும் கொடுக்கலாம். நட்பு என்பது விரிவுபடுத்தப்பட்ட அன்பு. உலகம் தழுவிய காதல். நட்பில் உறவுச் சங்கிலி இல்லை. அன்புச்சுமை இல்லை. முடிந்தபோது முடிந்த வரையில் உதவி செய்வதே நட்பு.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கோபத்தை எப்படி அடக்குவது? (பாலகுமாரன் பக்கம்)



கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா?

கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்கிற கெட்ட குணம் அடித்து சாய்த்துவிடும். கோபம் என்ற விஷயத்தைக் கூட அடக்காத மனிதன் கோபத்தைவிட பல நூறு மடங்கு பெரிதான காமத்தையும், காமத்தைவிட பல நூறு மடங்கான பொறாமையையும் எப்படி அடக்குவான்? தன் கோபம் பற்றி தானே பெருமைப் பட்டுக்கொள்கிறவரை நான் பரிதாபமாகத்தான் பார்க்கிறேன்.

கோபத்தை எப்படி அடக்குவது? 

எல்லாவற்றிற்கும் அடிப்படையில் ஒரு வெஞ்சினம் இருக்கிறது. அந்த வெஞ்சினத்தை வெளியில் காட்டாமல் மனசுக்குள்ளே தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தேக்கிவைத்த வெஞ்சினத்தை வெறியாய் மாற்ற ஒரு ரசவாதம் (உறுதி) தேவைப்படுகிறது. அதற்குப் பெயர் பொறுமை! கோபத்தை பொறுமையில் ஊற வைக்க வேண்டும். அதாவது பொறுமையாய் கோபப்பட வேண்டும். 

கோபத்தில் பதட்டப் படுபவன் மிருகம். மிருகத்துக்கு வெற்றி தோல்வி முக்கியமில்லை. மனிதனுக்கு முக்கியம். வெற்றி வேண்டுபவன் தன் கோபத்தை உள்ளடக்கி பொறுமையாய் பதனம் செய்து தன் கோபம் முழுவதும் தன் வேலைத் திறமையில் காட்ட வேண்டும். யார் அவமானப் படுத்தினார்கள்? எப்போது அவமானப் படுத்தினார்கள்? மறக்கவே கூடாது.
அதுபற்றி அடிக்கடி யோசிக்க ஏன் அவமானப் பட்டோம் என்று தெரியவரும். தனது குறையும் நிறையும் தெளிவாய்ப் புரியும். தன்னுடைய குறைகள் தெரியும்போது அதனை நிறையாக்கிக் கொள்ளும் வழியும் தெரியும்.

எந்நேரமும் வேலை மீதே புத்தி இருக்கும். வேறு சுகங்களை மனம் தேடாது. வெற்றுப் பாராட்டுகளை மனம் விரும்பாது. நான் ஜெயித்துவிடுவேன், கிழித்துவிடுவேன் என்று அலட்டாது. ஜெயித்தவனைப் பார்த்து பொறாமைப் படாது. என்ன செய்தால் ஜெயிக்கலாம் என்பதே இடைவிடாத சிந்தனையாக, உறக்கத்திலும் இதே சிந்தனையாக இருக்கவேண்டும்.



இப்பொழுதுள்ள இளம் பெண்களைப் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?

இப்போதுள்ள இளம் பெண்களோடு எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை. அவர்கள் நினைப்புகளை போக்குகளைப் பற்றி எனக்கு தகவல் தர ஆட்கள் இல்லை. நிறைய பேர் குதூகலமாகத்தான் இருக்கிறார்கள் என்று படுகிறது. தலையை விரித்துப் போட்டிருக்கிற காரணத்தை கேட்கும்போது ஒரு மத்திய வயது பெண்மணி பதில் அளித்தார். தலையை இறுக்கி இறுக்கி பின்னிப் பின்னி கொண்டை போட்டு தொந்தரவு செய்வதால் மத்திம வயதிலேயே அதிகம் முடி உதிர்ந்து விடுகிறது. அப்படி முடி உதிராமல் இருக்க தலையை வெறுமே சீவி விட்டு விடுவது நல்லது என்கிற எண்ணம் உண்டாகி இருக்கிறது. எனவே தான் இப்படி இருக்கிறார்கள் என்று சொன்னார்.

அந்த தலை முடியை ஒரு நிமிடத்திற்கு குறைந்த பட்சம் ஆறு முறையாவது கோதிக்கொள்கிற அந்த அவஸ்தையைப் பார்க்கும் போதுதான் அவர்கள் மீது பரிதாபம் வருகிறது. மற்றபடி அவர்கள் நெறிகள் நீதிகள் பற்றி நான் எதுவும் அறியேன். அவசியமும் இல்லை.

புதன், 10 ஜூலை, 2013

பாலகுமாரன் பக்கம் (கேள்வி-பதில்)



 

பட்டப் படிப்பை முடித்திருக்கிறேன். மேற்கொண்டு என்ன செய்ய?

ஏனேனும் தனியார் கம்பனியில் உங்கள் படிப்புக்கேற்ற வேலை தேடுங்கள். அல்லது சுயமாய் வியாபாரம் செய்யுங்கள்.

மறந்து போயும் அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து விடாதீர்கள்! அரசாங்கத்தில் கடுமையாய் உழைப்பவர்கள் மிகச்சிலரே. டீ குடித்துவிட்டு, பேப்பர் படித்துவிட்டு ஒரு மெத்தனமான வாழ்க்கை உங்களைச் சுற்றிக் கொண்டுவிடும். வேலை செய்தாலும் செய்யா விட்டாலும் மாதச் சம்பளம் வந்து விடும் என்று இருந்தால் குறைவான சம்பளம், குறுகிய புத்தியையும் தான் கொடுக்கும்.

வயதான பிறகு அரசாங்கம் போடுகிற பிச்சைக் காசு பென்ஷனை நம்பிக் கொண்டு தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். அந்த இரண்டரையணா காசு மிகப்பெரிய கர்வத்தைக் கொடுத்து உங்களை எந்த முனைப்பும் இல்லாமல் மழுங்கடித்து விடும். சுய தொழில் செய்கின்ற சவாலோ, தனியார் கம்பனியில் காட்ட வேண்டிய ஒழுக்கமோ, வீர்யமோ இங்கு காட்ட வேண்டிய அவசியம் இருக்காது.

எப்போது வேண்டுமானாலும் வேறு கம்பனிக்குத் தாவலாம் என்கிற சுறுசுறுப்போடும், மதர்ப்போடும், கம்பீரத்தோடும் இருங்கள். அம்மாதிரி இளைஞர்கள் பலபேர் இப்போது வளர்கிறார்கள். ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்து ஐந்து வருடத்தில் நாற்பதாயிரம் என்று சம்பாதிக்கிறார்கள்.

உழைப்பு மறந்துபோய் சோம்பலுடன் உயிரோடு இருப்பதை விட இல்லாமல் இருத்தலே உத்தமம்.

சென்னையிலுள்ள டிராக்டர் கம்பனி, அங்கு கற்றுக் கொண்ட வேலை, அங்கு காட்டிய சுறுசுறுப்பு, இடைவிடாத உழைப்பு, உழைப்புக்கு கைமேல் கிடைத்த பலன்கள், ஆங்கில அறிவு, மனிதர்களை அறியும் புத்தி, நல்லதும் கெட்டதும் முகத்திற்கு நேரே வந்து நிற்க அவைகளை ஏற்று சமாளித்த விதம் போன்றவைதான் என் சிறப்புக்குக் காரணம்.

என் உற்றார் உறவினர்கள் எவ்வளவு வற்புறுத்திய போதும் அரசாங்க வேலையில் சேரமாட்டேன் என்று நான் அப்பொழுதே திடமாக மறுத்தேன். எனக்கு வயது அறுபதைத் தாண்டிவிட்டது. இன்னும் துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு குருவருளும், அந்த டிராக்டர் கம்பனியில் கற்றுக் கொண்டதும் காரணம்.

ஒருவேளை அரசாங்க வேலையில் ஈடுபட்டிருந்தால் எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் செய்யாத தற்குறியாய் போயிருப்பேன்.

காசு சம்பாரிப்பது கடினமாக இருக்கிறதே!?

உங்களுக்கு எதில் காசு இருக்கிறது, அதை எப்படி சம்பாதிக்க வேண்டுமென்று புரியவில்லை. வெறுமே கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. உழைப்புக்குண்டான பலனைப் பெறுவதிலும் சற்று கூர்மையாக இருக்க வேண்டும்.

எது முக்கியம்? ஓய்வா? உழைப்பா? எவ்வளவு ஓய்வு, எவ்வளவு உழைப்பு என்று உங்களுக்குள் நீங்களே தீர்மாணம் செய்துகொள்ள வேண்டும். உழைக்கின்ற நேரத்தையே ஓய்வு நேரமாக பல பேர் பயன் படுத்துகிறார்கள்.

உழைப்பு என்பது இடைவிடாத விஷயம். ஓய்வு நேரத்திலும் உழைப்பதற்கு ஒரு பக்குவம் இருக்க வேண்டும். முக்கிய விஷயம் எவ்வளவு காசு வேண்டும் என்பது? அதிக காசுக்கு ஆசைப்பட்டோமானால் அதற்கு முடிவே கிடையாது!

கற்பு நெறி தவறிய ஆண்களும் பெண்களும் அதிகமாகி வருகிறார்களே?

ஆமாம் இது இயல்பு. படிப்பும் படிப்பால் பொருளாதார விடுதலையும் ஏற்படுகிறபோது இம்மாதிரி எல்லைகள் உடைத்து வேறு எல்லைகள் போடப்படுவது வழக்கம்தான்.

செவ்வாய், 28 மே, 2013

மனசே மனசே கதவைத்திற!

 (பாலகுமாரன் பக்கம்)



காதல் என்பது காமத்தின் நாகரிகமான வெளிப்பாடு. காதல் என்ற வார்த்தைக்கு காமம்தான் அடிப்படை. உடம்புதான் முதற்பொருள். சுவரை வைத்துதான் சித்திரம். உடம்பை வைத்துதான் உறவுகள். உடம்பு என்பது உணர்வுகளின் மூட்டை. உணர்வுகளை மதிக்க உடம்பையும் மதிக்கவேண்டும்.

என் காதல் தெய்விகமானது என்று எவரும் சொன்னால் அவர் உடம்பு பற்றி எந்த சிந்தனையும் இல்லாது பேசுகிறார் என்று இங்கே சொல்லப்படுகிறது. இது வெறும் பொய். உடம்பில்லா மனிதனுக்கு எந்த அடையாளமும் இல்லை. காமம் அத்தகைய முக்கியமில்லை என்று சொல்லவே பெரியவர்கள் தெய்விகக்காதல் என்றெல்லாம் சொல்ல முற்பட்டிருக்கிறார்கள்.

காமத்தோடு இருக்கிறவர்களுக்குத்தான் காதல் பற்றிய சிந்தனை வரும். காமத்தைத் தீர்த்துக்கொள்ளத்தான் காதல் பற்றிய எண்ணங்கள் ஏற்படும். தன்னுடைய வேலை பற்றி அதிக கவனமுள்ளவர்களுக்கு காமம் பற்றிய சிந்தனை எழாது. அப்படி காமம் பற்றிய சிந்தனை எழாது போனால் காதல் பற்றிய தாபங்கள் இல்லாது போகும்.


இந்த உடம்பு எத்தனை அழகு. அந்த உடம்பு எத்தனை வெறியை உள்ளே தூண்டிவிடுகிறது. உடம்பையும், மனசையும் அவ்வப்போது படிக்கிற ஆபாசக்கதைகள் முறுக்கேற வைத்து குதியாட்டம் போட பெண்ணைப் பார்க்கும் வரை காதல், காமம் பற்றிய பிரக்ஞையே இல்லாத மனம் நாலா திசைகளிலிருந்தும் நாய்களால் விரட்டப்படும் ஆடுகள்போல் அவஸ்தைப்படுகறது.

எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவள் கலைந்த உடையோடு என்ற நினைப்பு ஏற்படுகிறது. தனம் அமைதி இழந்து, சருமத்தில் வறட்சி தோன்றி, முகம் களையிழந்து போய்விடுகிறது.

பெண் கொடுக்கிற உரிமையும், அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பும், மனசுக்குள் பொங்குகிற காமமும், அதை காதலாக்குகிற புத்திசாலித்தனமும் அதிகமாக மேலெழும்பி பெண்ணை தன்வயப்படுத்த தந்திரம் செய்ய ஆரம்பித்து விடுகிறது.

வாழ்க்கையில் எல்லா நட்புகளும், எல்லா உறவுகளும் ஒன்றை ஒன்று எப்படி திண்பது என்பதில்தான் ஆரம்பிக்கின்றன.
- பாலகுமாரன்.