நான் என் ஊரில் சொந்தமாக தொழில் செய்தபோது அறிமுகமானவர் க்ளாரா என்கிற தோழி! பக்கத்தில் அனாதைப் பிள்ளைகளுக்கென இருக்கும் ஆதரவு இல்லத்தில் வேலை பார்த்து வந்தார். தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர் கன்னியாஸ்திரியாக மாறி இப்படி சேவை செய்வதற்காக இந்தப்பக்கம் வந்தவர். தற்செயலாக அவர் எனக்கு அறிமுமான போது சின்னச்சின்ன உதவிகளைச் செய்து கொடுத்தேன். பின்னால் அது எனக்கும் அவரால் உதவிகளைப் பெற உபயோகமாய் இருந்தது. தொழில் ரீதியாய் எனக்கு சில வேலைகளும் கிடைத்தது. அப்புறம் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அங்கு போய் கிளாராவைப் பார்ப்பது வழக்கம். அங்குள்ள ஆதரவற்ற பிள்ளைகளும் எனக்கு பரிச்சயமானார்கள்.
ஏன் அவர் கன்னியாஸ்திரி ஆனார் என்பதற்கு சரியான விளக்கமே கடைசிவரை அவரால் தரமுடியவில்லை. ‘சேவை’ செய்வதற்கு என்ற ஒற்றை வார்த்தைதான் பதிலாகக் கிடைக்கும். கிராமங்களுக்குப் போய் மூளைச் சலவை செய்து இப்படி மக்களை மதம் மாற்றி, அவர்களிடமிருந்து இளம் பெண்களை கன்னியாஸ்திரிகளாக மாற்றி குடும்பத்தைவிட்டுப் பிரித்து அழைத்து வந்துவிடுவார்கள்.
பின்பு அவர்களுக்குப் பயிற்சியும், கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். அப்படி வந்தவர்தான் இந்தத் தோழி. எவ்வளவு பழகியும் அங்கு நடப்பவைகள் பற்றி வாயே திறக்க மாட்டார். அப்புறம் அவர் வேறு இடங்களுக்கு மாறுதலாகிப் போனார். நானும் வேலை தேடி வெளியூர்களுக்கு அலைய ஆரம்பித்துவிட்டேன். ஆனால் கடித்ததொடர்பு மட்டும் நிறகவில்லை. அவரின் கடிதங்கள் சிலவற்றைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அன்பின் இனிய நண்பருக்கு, 19.08.1996
உங்கள் அன்புத்தோழி எழுதுவது. இங்கு நான் நலம். உங்கள் நலன் உங்களின் தாமத கடிதம் மூலம் அறிந்தேன். உங்கள் அன்புக்கடிதம் 5-ம் தேதி இங்கு வந்திருக்கிறது. ஆனால் நான் திண்டுக்கல் சென்று இன்றுதான் திரும்பி வந்தேன்.
உங்கள் கடிதத்தைப் பார்த்ததும் ஒரு இன்ப அதிர்ச்சி. நிஜமா என்று என்னையே கிள்ளிப் பார்த்துவிட்டு நிஜம் என்று தெரிந்ததும் கடிதத்திற்கு ஒரு அன்பு முத்தம் கொடுத்துவிட்டு அதன்பிறகுதான் படித்தேன். தெரிந்துகொள்ளுங்கள், உங்கள் கடித காலதாமதத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? நீங்கள் என்னை மறந்து விட்டதாகவே நினைத்தேன். நான் நேசித்த, மிகவும் அன்பு செய்த என் நண்பரே என்னை மறந்துவிட்டாரே, காரணம் என்ன என்று மிகவும் குழம்பிப் போய் இருந்தேன்.
நான் கடிதம் போடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் மாறிவிட்டீர்களோ என்னவோ என்றுதான் போடாமல் இருந்தேன். ஆனால் என்னை நீங்கள் மறக்கவில்லை என்பதை உங்கள் கடிதம் கண்டதும் புரிந்து கொண்டேன். அப்படி நினைத்ததற்காக என்னை மன்னிக்கவும்.
உங்கள் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது. உங்கள் உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பம் பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நினைத்து சந்தோஷமாக இருக்கவும். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என்ற நம்பிக்கையில் இருங்கள். இந்த உலகமே நம்பிக்கையில்தான் இருக்கிறது.
நானும் எப்படியாவது ஒரு நாள் உங்களைப் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்தான் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். அந்த நாள் என்று வரும், நினைக்கவே நெஞ்சம் சிலிர்க்கிறது. ஆனால் கடிதத்தில் பேசுவது கூட நேரில் நாம் பேசமாட்டோம். இருந்தாலும் நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது என்பது சந்தோஷமே! பொறுத்திருப்போம்.
மேலும் நரசிங்கபுரத்தில் உள்ள ஆதரவுஇல்லம் நன்றாகவே இருக்கிறது. நிறைய பிள்ளைகள் இருக்கிறார்கள். கட்டிட வேலை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. சென்ற மாதம்தான் அங்கு போய்வந்தேன். தற்போது அங்கு வேலை செய்பவர்கள் அவ்வளவு திருப்தியோடு இல்லை. நீ இருக்கும்போது நன்றாக இருந்தது என்று குறைபட்டுக் கொண்டார்கள். இது எல்லோரும் சொல்வதுதான் என்று நினைத்து, இரண்டு நாட்கள் அந்தப் பிள்ளைகளோடு இருந்துவிட்டு பின் வந்துவிட்டேன்.
நரசிங்கபுரம் போனாலே அங்கு உங்கள் நினைவுகள்தான் அதிகம் தாக்குகிறது. உங்கள் நிறுவனம், நாம் அங்கிருந்து பேசியவைகள், எங்களின் ஆதரவு இல்லத்திற்கு நீங்கள் வருகை தந்தது எதையும் மறக்கவே முடியவில்லை. அங்கு போனால் நீங்கள் அங்கு இல்லையே என்பதால் எல்லாமே பூஜ்ஜியமாகவே தெரிகிறது.
மேலும் இங்கு அந்த ஆதரவு இல்லம் போல் எதுவும் இல்லை. ஆனால் இங்கு வந்து பார்த்தீர்கள் என்றால் என்னைச்சுற்றி எப்போதும் சிறு பிள்ளைகள்தான் இருப்பார்கள். எனக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்காக நான் இனி பெத்துக்கப் போவதும் இல்லை. தத்து எடுக்கப் போவதும் இல்லை. ஏன் உங்கள் குழந்தையும் என் குழந்தைதான். அந்தக் குழந்தையை நான் இன்னும் பார்க்கவில்லை. போட்டோ இருந்தால் அனுப்பி வைக்கவும்.
நீங்கள் என்னுடன் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஏடாகூடாமாக ஏதாவது நடந்திருக்கும் என்று எழுதி இருந்தீர்கள். ஏடாகூடம் MEANS நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்களோ தெரியாது, ஆனால் உங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் எதிலும் அவசரப்படுபவர் இல்லை. எனவே நாம் ஒரே அறையில், ஒரே படுக்கையில் படுத்தாலும் பயம் இல்லை. இனி நரசிங்கபுரம் வந்தால் கண்டிப்பாக தெரியப்படுத்துவேன். என்னைப் பார்க்க நீங்கள் வரவேண்டும்.
நீங்களே சமைத்து ஏன் கஷ்டப்படுகிறீர்கள். உங்கள் மனைவியை அங்கு வைத்துக் கொள்வதுதானே! அறை வசதியாய் இல்லையா? எனக்கென்னவோ இப்போதே உங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகவே உள்ளது. என்ன செய்வது? கற்பனையில் உங்களோடு பேசி மகிழ்கிறேன். இங்கு போன் இல்லை. உங்களுக்கு STD –யில்தான் பண்ணவேண்டும்.
அப்புறம் ஒரு முக்கியமான சந்தோஷமான விஷயம். என்னைத்தான் கட்டிப்பேன் என்று இருந்தவருக்கு அடுத்த மாதம் திருமணம். எங்க அக்கா கடிதம் போட்டிருந்தார்கள். திருமணத்திற்கு வா என்று எழுதியிருந்தார்கள். ஆனால் போகப்போவதில்லை. நம் முதிர்ந்த அன்பு காதலாகி விடுமோ என்று பயப்படுகிறீர்களா? எனக்குப் பயம் இல்லை. உங்களை நிறையவே பிடித்திருக்கிறது. எனக்கு உங்களோடு இருந்த நட்பு கொஞ்ச நாட்கள்தான். நான் அப்போதே நினைத்தேன். என்ன தெரியுமா? உங்களைக்கு மனைவியாக வருபவர்கள் நிச்சயம் கொடுத்து வைத்தவர்கள் என்று! உங்கள் மனைவிக்கு உங்கள் ரசனை புரியவில்லை. அதை நினைத்து கவலைப் படவேண்டாம். எல்லோருக்கும் நினைப்பது போல் நடப்பது இல்லை.
EXAM சுமாராக எழுதியிருக்கிறேன். முடிவு எப்படி என்று தெரியவில்லை. EXAM நேரத்தில்தான் உதாரப்புலி கிராமத்தில் தங்கிவிட்டேன். எனது நாட்டம் முழுவதும் அதிலே இருந்ததால் படிப்பை கொஞ்சம் மறந்துவிட்டேன். இனி கவனமுடன் படிக்கிறேன். மேலும் உதாரப்புலி கிராமத்திற்கு ஒரு பள்ளிக்கூடம், மருத்துவமனை உடனடியாக கட்ட ஏற்பாடாகியிருக்கிறது. குடிதண்ணீர் மற்றும் சாலை வசதி கோரி கோடுத்த விண்ணப்பம் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. என்னமோ அந்த மக்கள் மேல் எனக்கு ஒரு தனிப்பட்ட பாசம். இப்போதும் 15 நாட்களுக்கு ஒரு முறை அங்கு சென்று வருவேன்.
உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மிகவும் நன்றி. எனக்கு பத்திரிகைகள், புத்தகங்கள் நிறைய படிக்க ஆசைதான். ஆனால் இது கிராமமாக இருப்பதால் நியூஸ் பேப்பர் கூட கிடைக்காது. ரேடியோ மூலம்தான் நியூஸ் கேட்கிறேன். மற்றபடி வெளியில் போகும்போது சி புத்தகங்கள் வாங்குவேன். பாடப்புத்தகங்களும் படிப்பதால் பத்திரிகைகள் அதிகம் படிப்பதில்லை. ஆனால் எந்த கதைப்புத்தகம் கிடைத்தாலும் அதை விடுவதில்லை. எப்படியாவது அதை படித்து முடித்துவிடுவேன்.
உங்கள் பழைய தோழியைப்பற்றி ஏதாவது தகவல் உண்டா? நான் அங்கு வந்தபோது பார்த்தேன். தெரிந்தவர் என்பதால் பார்த்துப் புன்னகைத்தேன். ஆனால் அவர்கள் தெரியாதவர்கள் போல போய்விட்டார்கள். நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இத்தோடு முடித்துக்கொள்கிறேன். மறக்காமல் கடிதம் போடவும்.
அன்புடன்,
க்ளாரா.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!