Sunday, September 25, 2011

பதவி வெறியர்கள் - மறக்க முடியாத கடிதங்கள்

24.12.1996                                       பெங்களூர்
அன்புள்ள நண்பருக்கு இனிய வணக்கம். நானும், ஊரில் எனது குடும்பத்தினர்களும்  நலம். உங்கள் நலன் குடும்பத்தினர் நலன் காண பேரவா! உங்களது மடல் கிடைத்து படித்து விபரமறிந்தேன். எனது தேர்தல் முடிவுகள் குறித்து நீங்கள் எழுதியிருந்த கருத்துக்களைப் படித்தறிந்தேன். 


1986-ல் மிக எளிதாக ஜாதி, பண பலத்தை எதிர்த்து வெற்றி பெற்ற என்னால் இப்போது அவ்வாறு வெற்றி பெற இயலாமற் போனதில் சிறிது வருத்தமே!
கவிக்குயில் சரோஜினி நாயுடு கூறியது போல ‘ காசு கொடுத்து ஓட்டு வாங்குவதும், குடும்பப் பெண்களை சோரம் போகச் செய்வதும் ஒன்றே என்ற கூற்றை பதவி வெறியர்கள் உணர்ந்தாலே பாதி வெற்றி நியாயத்திற்குக் கிடைத்துவிடும்.


பா.ம.க. நண்பனின், எனக்கு எதிரான மாற்றத்தை என்னால் சராசரி மனித இயல்பாக கருத முடியவில்லை. இந்த துரோகத்தை என்னால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. இத்தகைய துரோகிகளை என்னால் அடையாளம் கண்டு கொள்வதற்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு வாய்ப்பாக உண்மையில் மனதில் ஒருவித மகிழ்ச்சியும் உள்ளது.


ஜாதீய ஆதிக்கம் என்பது வன்னியர் இனத்தில் மட்டுமில்லை. எந்த ஒரு ஜாதியும் ஒரு ஊரில் அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது, அது பிற ஜாதிகளுக்கு ஆதிக்க ஜாதியாக விளங்குகிறது என்பதே உண்மை. வெகுஜன அமைப்பாக உள்ள பெரும்பாலான கட்சிகளில் (கம்யூனிஸ்டில் குறைவாக) உள்ள நீக்கு, போக்குத் தன்மைதான் பா.ம.க.வில் உள்ளது. தீவிர கம்யூனிஸ்ட்டுகள் கூறுவது போல ஓட்டுக் கட்சிகள் எல்லாமே ஒன்றுதான் என நான் நினைத்தாலும் கூட, இருப்பதில் எது மேலானது என கவனிக்கும் போது எனக்கு பா.ம.க. பிடிக்கிறது.


பா.ம.க. பற்றி உங்கள் கருத்துக்கள் எனக்கு உடன்பாடானது என்றாலும், ஈழப் பிரச்சனை விஷயத்தில் பா.ம.க. அணுகுமுறை குறித்த உங்களின் கருத்துக்கு நான் மாறானவன். உங்களைப் போலத்தான், பொதுவாக எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கும் நிலையிலும், கொள்கைகளை முழுதாக அணுசரித்துப் போக இயலாத காரணத்தாலும் நானும் ஒரு விமர்சகனாகத்தான் இருந்து வருகிறேன். இல்லாதிருந்தால் பா.ம.க.வில் என்றோ இணைந்திருப்பேன். பா.ம.க. மற்றும் ம.தி.மு.க.வில் இணைய எனக்கு ஊரில் நிறைய வலியுறுத்தல் இருந்தாலும் என்னால் அதில் இணையவும் முடியவில்லை.


ஊரில் எனது போராட்ட உணர்வைப் போல ஒரு வன்னியர் அல்லது தாழ்த்தப்பட்டவரில் ஒருவர் தலையெடுத்திருந்தால், அல்லது என்னை கருவேப்பிலையாக கருதாமல், ஆணித்தரமாக, உறுதியாக மேற்கண்ட இனப்பிரிவில் சிலர் என் பின் அணிவகுத்திருந்தால், எனது செயல்கள் நிச்சயம் விழலுக்கு இரைத்த நீராகியிருக்காது என்றே கருதுகிறேன். ஒரு சமயம் இவர்களைத் தயார்படுத்த பல வருடங்களாக நான் முனைந்ததில் சரியான அணுகுமுறை இல்லையோ எனக் கருதுகிறேன்.


மற்றபடி உங்களைப் பற்றியும் அடுத்த மடலில் எழுதுங்கள். பணிபுரியும் நிறுவனம், சம்பளம், எதிர்காலம், குடும்பம் பற்றியும் எழுதுங்கள். ஞாயிறு வீட்டில் இருப்பீர்களா? நேரில் வந்தால் உங்களை எப்போது சந்திக்க இயலும் என எழுத வேண்டுகிறேன்.


எனது குடும்பம் இப்போது ஊரில்தான் இருக்கிறது. அங்கு ஒரு காலி மனையை விற்றுள்ளேன். இந்தப் பணத்தில் ஓசூர் புறநகர்ப் பகுதியில் ஒரு இடம் வாங்க நினைக்கிறேன். PF, LIC -லோன் மூலமாக குறைந்த பட்ஜெட்டில் சில மாதங்களுக்குள் ஒரு வீடும் கட்டி எதிர்காலத்தில் ஓசூரில் குடியேறலாம் என்ற யோசனை மனதில் உள்ளது.


உமது விசாரிப்பை இங்கு நண்பர்களுக்குக் கூறினேன். பதில் எழுதும்போது அவர்களின் விசாரிப்பையும் எழுதச் சொன்னார்கள். எனது வழக்கறிஞருக்கான படிப்பு இன்னும் முடியவில்லை. இன்னும் 8 பேப்பர்கள் உள்ளது. 10 பேப்பர்கள் முடித்துள்ளேன். இந்த 8 பேப்பர் முடிக்கும் வரை வேறு சிந்தனைகள் செயல்கள் இல்லாதிருந்தால் நலமாக இருக்கும். மற்றவை உங்கள் அன்பு மடல் கண்டு. தொடர்ந்து மடலிட அன்புடன் கோருகின்றேன்.


இப்படிக்கு, 
என்றென்றும் அன்புடன், 
இனிய நண்பன் 
பாலசண்முகம்.


4 comments:

மாலதி said... [Reply]

உளம் நிறைந்த பாராட்டுகள் இந்த எண்ணம் எனக்கும் உண்டு அதாவது இப்படிப்பட்ட ஒரு சிறந்த படைப்பை தரவேண்டும் என எண்ணிக் கொண்ட்ருந்த வேளையில் நீங்கள் தந்துள்ளீர்கள் சரியான அல்லது மிகசரியான நேர்மையான விமர்சனம் பாராட்டுகள் தொடர்க .

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கு ந்ன்றி மாலதி! தங்கள் கருத்துரை மற்றம் பாராட்டுதல்களுக்கும் நன்றி! தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துங்கள்!

அம்பலத்தார் said... [Reply]

நல்லதொரு பதிவு இட்டதற்கு வாழ்த்துக்கள்

கவிப்ரியன் said... [Reply]

வருகைக்கு நன்றி அம்பலத்தாரே! தொடர்ந்து வந்து ஆதரவு தாருங்கள்!

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!