செவ்வாய், 27 செப்டம்பர், 2011

விழியில் விழுந்து .. உயிரில் கலந்த …

தாண்டவமூர்த்தி இவன் பால்ய காலத்தோழன். ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரொண்டாம் வகுப்புவரை ஒன்றாய்ப் படித்தவர்கள் நாங்கள். நல்ல புத்திசாலி. தேர்வு காலங்களில் அதற்காக மெனக்கெட்டு படிக்கவே மாட்டான். வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தியதை மனதில் வைத்தே தேர்வை எதிர்கொள்வான். பள்ளிப் படிப்பிற்குப்பின் எந்தவித இலக்கும் சரியான வழிகாட்டுதலும் இன்றி இராணுவத்தில் சேர்ந்துவிட்டான்.


நான் திருமணம் செய்துகொண்டபின், நான் செய்துவந்த தொழிலில் நட்டம் ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நேரத்தில் என்னைச் சந்தித்த இவன் (ராணுவத்திலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்த நேரம்) என் நிலைமை தெரியாமல், ‘உனக்கென்னப்பா தொழிலதிபர் என்கிற ரீதியில் கிண்டலடிக்க, ஆற்றாமையில் நான் பொறிந்து தள்ளிவிட, மிகவும் சங்கடப்பட்ட அவனோ மௌனமாய் என் சட்டைப்பையில் நூறு ரூபாய்த் தாளை செருகிவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விட்டான்.


குழந்தைக்குப் பால் வாங்கக்கூட பணமில்லாமல், பொங்கல் பண்டிகையை எதிர்கொள்ள இருந்த எனக்கு அந்தப் பணம் எனக்கு பேருதவியாய் இருந்த போதிலும், அதுவரை யாரிடமும் என் நிலைமையைச் சொல்லி கையேந்தாத எனக்கு, அன்றைய நிகழ்வு மிகப்பெரும் சங்கடத்தைக் கொடுத்தது. வாங்க மறுக்கும் சந்தர்ப்பத்தைக் கூட எனக்குக் கொடுக்காமல் பணத்தைச் சட்டைப் பையில் திணித்துவிட்டு அவன் விருட்டென சைக்கிளில் பறந்து போனது இன்னும் என் நினைவில் நிழலாடுகிறது.


விடுமுறை முடிந்து அவன் போனவுடன் எனக்கு ஒரு கடிதமும் போட்டிருந்தான். அந்தக் கடிதம்தான் இது:

இறைவன் துணை             04/11

அன்பு நண்பா!
திரண்டு வரும் அன்பை
திரட்டி, மையாக ஊற்றி
இதயத்தையே காகிதமாக்கி
எழுதுகிறேன் நான் – இதை
விழியில் விழுந்து
உயிரில் கலந்து
உதட்டிலே நிற்காமல்
உயிரில் கலந்தது
நம் அன்பு!

புதிய வாழ்க்கை,
புதிய பாதை
பூத்துக் குலுங்குகிறது
கண் முன்னே!
பூபாளம் பாடுகிறது
இளந் தென்றல்!
புன்னகை புரிகின்றன

பூக்கள் எல்லாம்
பூரித்துப் போகிறது
என் மனம் – உன்
பாதங்கள் படும்
பாதை எல்லாம்
பரணி பாடுவதைக்
கேட்கின்றேன்.

பார்த்துக் கொண்டே
இருப்பேன் தொலைவிலிருந்து
என் பிரார்த்தனை எல்லாம்
உன் வெற்றிக்காகத்தான்.
வளமுடன் வாழ்க என்றே
நாளும் வாழ்த்துவேன்.

நேரிலே வந்து சொல்ல
நாட்களே சில இருப்பினும்
வடித்து அனுப்புகிறேன்
வார்த்தைகளை.

கவிதை எழுத நான்
கவிஞனும் இல்லை
கற்பனையும் அவ்வளவு இல்லை
என்ன செய்ய?

விழி வாசலைத் திறந்து என்
வரவுக்காக காத்திரு.
வந்துவிடுவேன் சில நாளில்.
வாழ்த்துக்களை நம் நண்பர்கள்
அனைவருக்குமே!

இவன்,
தாண்டவமூர்த்தி

இப்பொது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று சென்னைப் பக்கம்தான் எங்கோ வேலை செய்கிறானாம். ரொம்ப நாளைக்குப் பிறகு ஏதேச்சையாக பேருந்தில் பார்த்துப் பேசினேன். என் கைத்தொலைபேசி எண்ணைக் கொடுத்த நான், இறங்கும் அவசரத்தில் அவன் தொலைபேசி எண்ணை வாங்க மறந்து போனேன். இன்றுவரை அவனிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.


கடிதங்கள் குறித்த அருமையான வலைப்பதிவு ஒன்று 'மகிழம்பூச்சரம்', சாகம்பரி என்பவர் எழுதுகிறார். 'கடிதம்' என்ற தலைப்பில் உள்ள கடிதங்களைப் படியுங்கள் எத்தனை இனிமையாய் இருக்கிறது.


8 கருத்துகள்:

சாகம்பரி சொன்னது… [Reply]

ஒருவரிடம் நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்துவது உறவுகளை மேன்மையடைய செய்யும். எந்தவித தடையுமின்றி தயக்கமும் இன்றி நம்முடைய மென்மையான எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்த கடிதங்கள் உதவுகின்றன. தொலைப்பேசியில் பேசுவது உணர்வுகளை காற்றில் கலந்துவிடச் செய்யும். ஆனால் கடிதத்தின் உணர்வுகள் ஒவ்வொரு முறையும் அதனை படிக்கும்போது உணர்வுகளை மீட்டெடுக்கும். எனவே அடிக்கடி கடிதம் எழுதுங்கள். நட்பின் ஆழத்தை விளக்கும் இந்த அருமையான பதிவிற்கு வாழ்த்துக்கள் கவிப்பிரியன்.

நிரூபன் சொன்னது… [Reply]

இனிய மதிய வணக்கம் பாஸ்,

பிரதியுபகாரம் எதிர்பார்க்காத உண்மை நட்பு எவ்வளவு காலம் சென்றாலும் உதவி செய்யும் பக்குவம் கைவரப் பெற்றது என்பதனை அனுபவ விளக்கப் பகிர்வினூடாகச் சொல்லி நிற்கிறது உங்களின் இப் பதிவு.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி சாகம்பரி அவர்களே! அருமையான கருத்துக்களை பதிவு செய்திருக்கிறீர்கள்.
//தொலைபேசியில் பேசுவது உணர்வுகளை காற்றில் கலந்துவிடச் செய்யும். ஆனால் கடிதத்தின் உணர்வுகள் ஒவ்வொரு முறையும் அதனை படிக்கும்போது உணர்வுகளை மீட்டெடுக்கும்//
சத்தியமான வரிகள். இந்தக் கடிதங்களைப் படிக்கும்போதெல்லாம் அதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

இனிய நல்வரவு நிரூபன். உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் பல.

அம்பலத்தார் சொன்னது… [Reply]

பாதுகாத்துவைத்து மீண்டும் மீண்டும் படிக்கும் கடிதம் எழுதும் வழமையை தொலைத்துவருவது வேதனக்குரியது.

அம்பலத்தார் சொன்னது… [Reply]

பெரும்பாலும் கஸ்டத்தில் கைகொடுப்பவர்கள் நல்ல நண்பர்களே நன்றாகச் சொல்லியிருக்கிறிர்கள்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மைதான் அம்பலத்தாரே! கடிதமே எழுதாத இந்தத் தலைமுறைக்கு அதன் அருமை பெருமைகளை எப்படி புரியவைப்பது?!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

துன்பத்தில் பங்கெடுக்கிறவர்கள் நண்பர்கள்தான் என்றாலும், உறவினர்களின் துரோகத்தைவிட நண்பர்களின் துரோகம் நிலைகுலையச் செய்துவிடுகிறது அம்பலத்தாரே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!