Friday, September 2, 2011

அலையாதே சகோதரனே! - மறக்க முடியாத கடிதங்கள்

என்னுடைய நண்பர்கள் மட்டுமல்லாது உறவினர்களிடமிருந்தும் கடிதம் வருவது வாடிக்கை. எனது சகோதரி சென்னையிலிருந்து எனக்கு எழுதிய கடிதங்களைப் படித்துப்பார்த்தால் இப்போது கூட மெய் சிலிர்க்கும். இவரோ எளிதில் யாரிடமும் பேசக்கூடியவரில்லை. யாருக்கும் கடிதம் எழுதியதும் இல்லை. ஆனால் இங்கே இவருடைய கடிதத்தை படித்துப் பாருங்கள். எத்தனை நகைச்சுவை உணர்வோடு எழுதியிருக்கிறார். எனது திருமணத்திற்கு முன்பு அவர் எழுதிய கடிதம் தான் இது. சரி கடிதத்தைப் படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

(கொஞ்சம் பெரிய கடிதம்)                   03.07.1993     சென்னை.
அன்புள்ள சகோதரனுக்கு உன் அன்பு மறவா சகோதரி எழுதும் அன்புக்கடிதம். இங்கு எல்லோரும் நலமே! அங்கு உன் நலனுடன் அனைவரின் நலன் அறிய ஆவலாய் உள்ளேன்.

மற்றும் உன் கடிதத்திற்கு உடனே பதில் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் எழுத முடியவில்லை. மன்னிக்கவும் மறக்கவும். உன் அன்றைய கடிதம் (27.12.1992) கண்டேன். படித்தேன். படிக்கப் படிக்க மறுபடியும் படிக்கவேண்டும் போல் ஆவல் தூண்டியது. பல முறை படித்தேன்.
நீ மிகவும் விரக்தியாக இருப்பது போல் தோன்றுகிறது, ஏன்? நான் உன்னை அதிகமாக புகழ்ந்திருப்பதாக எழுதியிருந்தாய். தகுதியுள்ளவர்களை உயர்த்திப் பேசுவதில் தவறில்லையே! (உன்னைத்தான் குறிப்பிட்டேன், என்னை அல்ல).
உன்னுடைய அன்றைய கடிதத்திற்குப் பிறகு நான் வேலூர் வந்திருந்தேன். ஆனால் அங்குதான் (உன் இருப்பிடம்) வர முடியவில்லை. நான் முன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி நான் தனியாக வருவதாகத்தான் இருந்தேன். ஆனால் மாமா அதற்குச் சம்மதிக்கவில்லை. சம்மதித்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பேன். அவரோடு வந்தபோது வேலை அதிகம் இருப்பதால் இப்பொழுது வேண்டாம் அடுத்தமுறை பார்க்கலாம் என்று கூறிவிட்டார்.

இவையெல்லாம் நேரில் பார்க்கும்போது கூற முடியவில்லை. நேரமும் இல்லை. அதனால் கடிதத்தில் எழுதிவிட்டேன். புரிந்து கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன். உடனே கடிதம் எழுதலாம் என்றாலோ எனக்கு அப்பொழுது உடம்பும் சரியில்லை. வேலையும் அதிகமாக இருந்தது. அதனால்தான் எழுதமுடியவில்லை, வருந்த வேண்டாம்.

மற்றும் நான் எழுத்தாளனும் இல்லை, கவிஞனும் இல்லை என்று எழுதி இருந்தாய். அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் மட்டுமல்ல உன் கவிதைகளைப் படித்தவர்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நீ இந்த அளவிற்கு எழுத முனைந்ததற்கு அண்ணனைக் காரணம் காட்டியிருந்தாய். அப்படியே இருக்கட்டும். அவர்கள் உனக்கு ஒரு ஏணியைப் போல பயன்பட்டிருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் ஒவ்வொரு படியிலும் விழாமல் கால்வைத்து ஏறியது உன்னுடைய முயற்சி அல்லவா? உனக்கும், முயற்சி செய்து முன்னேறத் துடிக்கும் உன் திறமைக்கும், அந்த ஏணிக்கும் எனது பாராட்டுக்கள் சேரட்டும்.
முதன் முதலாய் என் திருமணத்தின் போதுதான் கவிதை எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தாய். பொய் சொல்ல விரும்பவில்லை. உண்மையாகவே எனக்கு அந்தக் கவிதைப் பற்றி நினைவில்லை. அந்தக்கவிதை உன்னிடமிருந்தால் எனக்கு கண்டிப்பாக எழுதி அனுப்பவும்.

அய்யோ! மாங்காய், எலுமிச்சை, தக்காளி, கேரட் பத்தொன்பது வகை ஊறுகாயா? என்ற விளம்பரம் போல் எத்தனை எத்தனை எழுதியிருக்கிறாய்! உன்னுடைய கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்களைத்தான் குறிப்பிடுகிறேன். இவ்வளவு எழுதியிருந்தும் என்ன சாதனை செய்திருக்கேன் என்று ஏன் குறைபட்டுக் கொள்கிறாய்? இந்த வயதிற்கு இதுவே அதிகம் தம்பி. என்னுடைய புகழ்ச்சி உனக்கு உண்மையாகவே பொருந்தும். இதில் சந்தேகம் வேண்டியதில்லை.
உன்னுடைய கவிதைகள் எல்லாமே எனக்குப் பிடித்திருந்தது. அதிலும் ‘கண்ணம்மா என்ற கவிதை எனக்கு பிகவும் பிடித்தது. காரணம் எனக்கும் அந்த ‘பாரதிக் கண்ணம்மாவின்மேல் அளவிற்கதிகமான விருப்பம்.
     ‘எந்தன் வாயினிலே அமுதூறுதே – கண்ணம்மா
     என்ற பேர் சொல்லும் போதிலே 
என்று நம் பாரதியின் வாய் தனிலே அமுதூறச் செய்த பெயரல்லவா? 


அதனால் எனக்கும் அந்தப் பெயரைக் குறிப்பிடும் பொழுது என் வாயிலும் அமுதூறுவது போல ஒரு எண்ணம். மேலும் அந்தப் பெயரை வைத்து நீ எழுதிய கவிதையும் அற்புதம்.
நிறைய எழுது. உன் விருப்பத்திற்காக மட்டுமல்ல, என்னுடைய மற்றும் என்னைப் போல் உன்னை ஊக்கப்படுத்தும் நட்பு வட்டத்தின் விருப்பத்திற்காகவும் நிறைய எழுது. அதிகம் எழுத அதையும் நிறைவுடன் எழுத என்னுடைய வாழ்த்துக்கள்.

என்னுடைய ஊக்கம் நிறைந்த வார்த்தைகள் என்றென்றும் உனக்கு உண்டு. ஆனால் அடிக்கடி கடிதம் எழுதவேண்டும் என்று மட்டும் நினைக்காதே! என்னால் முடியும்போது கண்டிப்பாக எழுதி அனுப்புகிறேன். அதற்காக நீ எங்களுக்கு கடிதம் எழுதாமல் இருந்துவிடாதே! தொடர்ந்து எழுது.
நீ அழகாய் இல்லை ஏன் நினைக்கிறாய்? (தம்பி அதிகம் ஃபீல் பண்ணாதே). எல்லோரும் அழகாய் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாயோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. நீ நினைப்பது போலவும் இருக்கலாம்.
பட், எல்லாருக்குமே (அழகுள்ளவர் என்று நீ நினைபவருக்குக் கூட) அந்த அழகையும் குலைக்கக் கூடிய அளவிற்கு அசிங்கமான எண்ணங்கள்,  செயல்கள் இருக்கிறது. அப்படியிருக்கிற அவர்களை அழகானவர்கள் என்று நீ நினைக்கிறாயா? நீயே சொல்லு! ஆனால் நான் நினைக்கமாட்டேன்பா! அழகில்லாமல் இருந்தால் என்ன அவர்களிடத்திலேயும் உயர்ந்த நல்ல குணங்கள், செயல்கள் இருந்தால், அந்த உயர்ந்த பண்பே அவர்களுடைய அழகை அதிகப்படுத்தி, அழகுள்ளவர்களை விடவும் சிறந்தவர்களாக உயர்த்திக்காட்டும்.

உன்னிடத்தில் உள்ள அந்தச் சிறிய குறையையும் மறைக்கக் கூடிய அளவிற்கு உன்னிடத்தில் நிறைய திறமைகள் இருக்கு. அதுவே உனக்கு அழகுதான். நீ உன்னிடத்தில் இருக்கும் முன் கோபத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு உன் திறமைகளை நல் வழியில் பயன்படுத்தினால் அதுவே உன் வாழ்க்கையை உயர்த்தும். அழகு நம்மை உயர்த்தாது. நாங்கள் மட்டும் மிகவும் அழகோ?! எங்களுக்கெல்லாம் வாழ்க்கைத் துணை கிடைக்காமலா போய்விட்டது. காக்கைக்கேற்ற காக்கை கிடைக்காமலா போய்விடும்? விட்டுத் தள்ளப்பா கவலையை.

அடுத்த விஷயத்திற்குப் போவோமா? விதவைப் பெண்ணை மணப்பது குறித்து கேட்டிருந்தாய். எல்லா ஆண்களும் கூறுவதைப் போலத்தான் நீயும் கூறுவதாகப் படுகிறது. //‘எந்த வாழ்வையும் என்னால் நிறைவாய் ஏற்றுக்கொள்ள முடியும்’// என்ற உன் வரிகளைத்தான் குறிப்பிடுகிறேன். இவை எல்லாம் வாயால் பேசுவதற்கும், எழுத்தால் எழுதுவதற்கும் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட வார்த்தைகள். நம் நடைமுறை வாழ்க்கைக்கு இவையெல்லாம் சரிப்படும் என்று தோன்றவில்லை. வேண்டாம், எதற்கு ரிஸ்க்.

தங்கை, தம்பிகளின் நலன், படிப்பு, வேலை ஆகியவைப் பற்றி உன் மூலம் அறிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. மற்றபடி உனக்கு ஓய்வே இல்லை என்றும், வாழ்க்கை எந்திரத்தனமாக இருக்கிறதென்றும் எழுதியிருந்தாய். ஓய்வு எப்படிப்பா கிடைக்கும்? கிடைக்கிற நேரத்தைத்தான் பயனுள்ள வழிகளில், வேலைகளில் செலவழிக்கிறாயே... அது போக, மீதி நேரத்தை உன் கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும், அன்பாக பேசவும், சிரிக்கவும் செலவழிப்பதுதானே! வாழ்க்கையில் எந்திரத்தனம் கொஞ்சம் குறையும் என்று நினைக்கிறேன். 
( செய்து பார் சோதனை எண் 1).

மற்றும் நீ நினைக்கிற கல்யாணம் விரைவிலேயே நடக்கும். கவலையே வேண்டாம். அலையாதே சகோதரனே! (கோபம் மூக்கிற்கு மேல் வருவது போல் தெரியுது வேண்டாம்பா, அடக்கு. விளையாட்டிற்குத்தான் சொன்னேன்). நீ வேண்டுமென்றால் பாரு, சீக்கிரமே உன் சுகத்தில், துக்கத்தில் பங்கு கொண்டு, நீயே என் துணை என்று உன் கையை விடாமல் பிடித்துகொள்ள உன் மனதிற்கேற்ற ஒரு நல்ல பெண் வரப்போகிறாள். என் வார்த்தை பலிக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன். நீயும் வேண்டிக் கொள்ளப்பா.

மாமா கடிதத்தைப் படித்தார். அதனால் நீ விசாரித்ததை புரிந்து கொண்டிருப்பார். என்னுடைய மகள்களில், பெரியவள் 1st  standard-ல் 1st RANK தான் ( எல்லா மாதமும்), 2nd standard-ல் எப்படி என்று தெரியவில்லை. சின்னவள் நன்றாக இருக்கிறாள். கொஞ்சம் அடம்தான் அதிகமாக இருக்கிறது.

பேச வேண்டிய அனைத்தையும் கடிதமாக எழுதிவிட்டேன். பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தாலும் கடித்ததில் உள்ளது போல் விரிவாக பேசியிருக்க முடியாது என்று தோன்றுகிறது. எழுதுவதில் இப்படியொரு அனுகூலம் இருக்கிறது இல்ல! எண்ணத்தில் பூக்கும் வார்த்தைப் பூக்களை காகிதத்தில் எழுத்துக்களாய் அள்ளித்தூவி மணம் பரப்பச் செய்யமுடிகிறது. நீயும் அப்படியே உன் எண்ணப் பூக்களைத் தூவி அனுப்பு. முகர்ந்து பார்க்க ஆவலோடு இருக்கிறேன்.

உனக்காக ஒரு சின்ன கவிதை
 
வேதனைகள் ஏனடா (சாரி) மானிடனே
வேண்டாம் ஒதுக்கிடு முள்ளெனவே
விரக்தி வேண்டாம் மனதினிலே
விரட்டிடு அதை நீ தவறெனவே
வெறுப்பிற்கு இடமில்லை வாழ்வினிலே-பிறரை
வியக்க வைப்பதில்தான் சாதனையே
அல்லல்கள் இருப்பது மனதிடமே-அதனை
அழித்திடு வெற்றி தினம் தினமே.
வசந்தம் தேடிவரும் உன் பாதையிலே
வளமை கூடிவரும் உன் வாழ்வினிலே
கலக்கம் வேண்டாம் என் சகோதரனே
கடமை ஒன்றுண்டு செய் தோழனே
கண்ணம்மா எனும் தோழியே-உன்
எண்ணம்போல் தருவாள் மனசாந்தியே!

மற்றவை உன் கடிதம் கண்டு,
அன்புடன் உன் சகோதரி,
கவிதா

இன்னொரு சுவையான காதல் கடிதம் கார்க்கி அவர்களின் சாளரம் வலைப்பக்கத்தில்...
 

0 comments:

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!