Monday, September 5, 2011

மறக்க முடியாத ஆசிரியர்கள்


நம் வாழ்க்கையின் சில முக்கியமான முடிவுகளில் நமக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. ஒவ்வொருவரும் பல கட்டங்களைக் கடந்துதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். இலக்கே இல்லாத வாழ்க்கையில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, இலட்சியம் குறித்தான பார்வையை விசாலப்படுத்தியவர்கள் நமது ஆசிரியர்கள்தான். நகர்ப்புற மாணவர்களுக்கு எப்படியோ, கிராம்பபுற மாணவர்களுக்கு இன்று வரை ஆசிரியர்களே அவர்களின் வழிகாட்டி!

முற்றிலும் கிராம்பபுறத்தைச் சேர்ந்தவனான எனக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் அதிகம். ஒழுக்கமான பிள்ளைகளிடத்தும், நன்றாக படிக்கும் பிள்ளைகளிடத்தும் ஆசிரியரின் அன்பு கூடுதலாக இருக்கும். கொஞ்சம் சுமாராகப் படிக்கும் எனக்கு ஆசிரியர்களின் அன்பு நிறையவே கிடைத்தது.

நான் தொடக்கப் பள்ளியில் பயின்ற நாட்கள் இன்றும் என் நினைவை விட்டு அகலவில்லை. மரத்தடி பள்ளிக்கூடம் இன்று பார்ப்பதற்கு அரிது. நான் 2-ஆம், 3-ஆம் வகுப்புகளில் மரத்தடியில் உட்கார்ந்து பாடம் படித்திருக்கிறேன். ஆசியர்களுக்கு நாற்காலியைத் தவிர ஒன்றும் இருக்காது. கர்மவீரர் காமராஜர் காலத்தில் அறிமுகப்பட்டுத்தப்பட்ட மதிய உணவு திட்டம் அமுலில் இருந்த நேரம். ஒரு மூன்று சக்கர மோட்டார் வண்டி பெரிய சத்தத்தோடு கருப்பு நிற ‘கேன்களில் கோதுமையால் செய்யப்பட்ட ஒரு உணவை எடுத்து வரும். அது எங்கிருந்து தயார் செய்யப்பட்டு வருகிறது என்பது தெரியாது. ஆனால் மிகவும் சுடச்சுட இருக்கும். சாப்பாட்டு மணி அடித்ததும் எல்லோரும் வரிசையில் உட்காருவோம். 5-ஆம் வகுப்பு படிக்கும் திடகாத்திரமான மாணவர்களே எல்லோருக்கும் பறிமாறுவார்கள். அப்படி ஒருமுறை வரிசையில் உட்கார முண்டியடித்தபோது அப்போதைய தலைமையாசிரியர் என்முதுகில் அறை கொடுத்ததை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. அவரின் பெயர் பீதாம்பரம். 

5-ஆம் வகுப்புக்கு மாறிய போது கணிதப்பாடம் மாதாந்திரத் தேர்வில் முழு வெள்ளைத்தாளில் எழுத வேண்டியவற்றை குட்டிக்குட்டியாய் நுணுக்கி, நுணுக்கி எழுதி அரைப்பக்கத்திலேயே முடித்திருந்தேன். இந்த காரணத்துக்காக 100க்கு 100 கிடைக்க வேணைடிய எனக்கு 98 மதிப்பெண்கள் போட்டு என்னைக் கண்டித்து தேர்வு எழுதும் முறையைக் கற்பித்தவர் திருமதி. மனோன்மணி டீச்சர். அப்புறம் திருமூர்த்தி சார், கோபால் சார் என ஒரு சிலரே ஞாபகத்தில் இருக்கின்றனர்.

உயர்நிலைப்பள்ளியில் என் கிராமத்திலிருந்து 3 கி.மீ. நடந்துபோக வேண்டும். அங்கும் எனக்கு வழிகாட்டியாக துர்கா டீச்சர், தமிழாசிரியை மனோன்மணி டீச்சர், தமிழாசிரியர்கள் திரு. தங்கராசு, திரு. அமரன், திரு. நாராயணசாமி ஆகியோர்களும், 8,9 வது படிக்கும்போது ,திரு.கண்ணபிரான், திரு. ஜான் மனோகர், திரு. அப்பாசாமி, திரு. ராஜரத்தினம் ஆகியோர்களும் முக்கியமானவர்கள்.

மேல்நிலை வகுப்புக்கு போனபோது ஆசிரியர்களும் நாங்களும் மிகவும் நெருக்கமானோம். தமிழாசிரியர் திரு. சைலவாசன், ஆங்கில ஆசிரியை திருமதி. கோமதி, தாவரவியல் துறை ஆசிரியர் திரு. ராமகிருஷ்ணன், விலங்கியல் துறை ஆசிரியை திருமதி. சாந்தி எமி, வேதியியல் துறை ஆசிரியை திருமதி. மங்களம், இயற்பியல் துறை ஆசிரியர்களான திரு. மாசிலாமணி, திரு. சுந்தர்ராஜன் என இவர்கள் எல்லோருமே நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் போதித்தவர்கள். தனிப்பட்ட முறையிலும் அன்பு செலுத்தியவர்கள். கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு கல்வி போதித்தவர்கள் என்பதால் இவர்கள் மட்டும் அடிக்கடி ஞாபகத்தில் வந்து போவார்கள்.

தொழில் கல்வி படித்த போது இன்றைய வேலைக்கும், வாழ்க்கைக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த ஆசிரியர்கள், திரு. கதிர்வேலு, திரு. செல்வராஜ், திரு. பாலசுப்பிரமணியன் ஆகியோர்களும் மிக முக்கியமானவர்கள்.

சென்னையில் படித்து வளர்ந்து, இந்தியாவின் மிக உயரிய தகுதியான ஜனாதிபதி பதவிவரை உயர்ந்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் இந்த வேளையில் நானும் ஒரு ஆசிரியன் (தொழில் கல்வி பயிற்றுனர்) என்ற வகையில் பெருமையடைகிறேன்.

இந்தப்பதிவை என்னை வார்த்தெடுத்த எல்லா ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றியோடு சமர்ப்பிக்கிறேன்.
என்றும் நட்புடன்,

0 comments:

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!