Tuesday, November 17, 2015

நான் ரசித்த கேள்வி-பதில்கள்


 

குடும்ப உறவுகளைத் தீர்மாணிப்பது பணம்தானே?
அந்தக் காலத்தில்உடைந்த கூரை வீடுகள்; உடையாத கூட்டுக் குடும்பங்கள்
இந்தக் காலத்தில்உடையாத மாடிகள்; உடைந்த குடும்பங்கள். பணமிருந்தால் மட்டும் போதுமா?

மனசாட்சி எப்படிப்பட்டது?
நீதிபதியாகி தண்டிப்பதற்கு முன்னால், தோழனாக நம்மை எச்சரிப்பது அதுதான்.

ஆசைகளே இல்லாவிட்டால் ஏமாற்றம் இருக்காதல்லவா?
ஏமாற்றம் மட்டுமா, முன்னேற்றமும் கூடத்தான்.

செய்யும் வேலை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
ஹென்றி ஃபோர்டு கார்களைத் தயாரித்து விற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர். அவர் ஒரு முறை சொன்னார்; ‘பணம் தவிர வேறு எதையும் தராத தொழில் அற்பமான தொழில்.’

வெற்றிகரமான கணவன் மனைவிக்கு அடையாளம்?
மனைவி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வருமானமுள்ள கணவனும், அப்படிப்பட்டவனைக் கண்டுபிடித்துக் கல்யாணம் செய்யும் மனைவியும் வெற்றிகரமானவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு.

சினிமாத்துறை பண்பாட்டைக் குலைக்கும் என்கிறார்களே! நீங்கள் எப்படி?
எனக்கு சில நல்ல பண்பாடுகளைக் கற்றுக்கொடுத்ததும் திரைத்துறைதான். ஒரு நாள் நடிகர் திலகம் சிவாஜியிடம் சிரித்துக்கொண்டே கேட்டேன்; எம்.ஜி.ஆர். பாசமானவர், நீங்கள் கொஞ்சம் கர்வி என்கிறார்களேஉண்மையா? அவரும் சிரித்தார்.

அது வேற ஒண்ணுமில்ல ராசா… ‘அவர் யார் வந்தாலும் சட்டுன்னு எழுந்து நின்னு வரவேற்பாரு. நான் கொஞ்சம் சுகவாசி. உட்கார்ந்துகிட்டேவாங்கம்பேன்’. அதை அப்படியே மாத்திப் பரப்பிட்டானுங்க பல பேரு.’
அன்று முதல் நான் எழுந்து நின்று வரவேற்க ஆரம்பித்தேன். என்னை எம்.ஜி.ஆர் ஆக்கினார் சிவாஜி.
-        கடைசி கேள்வி மட்டும் - கவிஞர் வைரமுத்து குமுதத்தில் 13.06.2007-ல்

Wednesday, November 11, 2015

இந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா?


எத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது? கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து! பிள்ளைகளின் படிப்பும், ஒரே இடத்தில் பணியில்லாத காரணத்தாலும் இப்படி ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாகவே பணியிட மாறுதல் குறித்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எனது மேலிடத்தில் கோரிக்கை வைத்தபடிதான் இருந்தேன். அதை எதையும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. நான் கோரிக்கை வைத்த எனது மேலதிகாரியே மாறுதலாகி போய்விட்ட பிறகு இனி எதற்கு இங்கு வேலை செய்ய வேண்டும் என்ற சலிப்பு வந்துவிட்டது. 

 

காரணம், நம்மை இத்தனை வருடங்களாக புரிந்து கொண்டவர்களாலேயே நமக்கு மாறுதல் கிடைக்க வழியில்லாத போது புதிதாய் வருபவரிடம் வேலை செய்து அவரின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் கோரிக்கை வைத்து ‘என்ன பொழப்புடா’ இது என்றுதான் தோன்றுகிறது. புதிய புதிய இடங்களையும் மனிதர்களையும் பார்க்கும் ஆவல் இருந்தாலும் சில மாதங்களில் ‘எப்படா சொந்த ஊருக்குப்போய் நிரந்தரமாக குடும்பத்தோடு வாழ்வது’ என்ற ஏக்கம் வர ஆரம்பித்து விடுகிறது.

என்னதான் வசதிகள் செய்து கொடுத்தாலும், மனைவி மக்களோடு இருக்கும் சந்தோஷத்திற்கு ஈடாகுமா? வெளிநாட்டில் வேலை செய்தபோது வருடத்திற்கு ஒரு முறையும், இந்தியாவில் பிற மாநிலங்களில் வேலை பார்க்கும்போது குறைந்த பட்சம் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும்தான் ஊருக்குப்போய் வரமுடிகிறது.

இதற்குத் தீர்வுதான் என்ன? இந்த வேலையை விட்டுவிட வேண்டும். வேலையை விட்டுவிட்டு ஊருக்குப்போய் என்ன செய்வது? அடுத்த வேலைக்கு முயற்சி செய்வது… அல்லது சுயதொழில் ஆரம்பிப்பது. இப்படித்தான் கொஞ்ச நாளாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணும், கல்லூரிக்குள் காலடி வைக்கத் தயாராய் இன்னொரு பெண்ணும் இருக்கும்போது அவர்களுக்கு வழிகாட்ட தந்தையின் அருகாமை அவசியம் என்பது அனைவரும் அறிந்ததுதான். சென்னைக்கு அருகாமையில் அல்லது பெங்களூரில் கிடைத்தால்கூட வேலை மாறிவிடலாம் என்றுதான் முடிவெடுத்திருக்கிறேன்.

நான்கு வருடங்களுக்கு முன்புகூட இதே மாதிரி மாற்று வேலைக்கு முயற்சித்து பன்னாட்டு நிறுவனம், வாரத்திற்கு ஐந்து நாட்கள்தான் வேலை, சம்பளமும் அதிகம் என்று ஆசைப்பட்டு இருக்கிறதை விட்டு அங்கு தாவினேன். யாருடைய ஒத்துழைப்பும் இல்லாத அந்த நிறுவனத்தில் ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவதைப்போல மூன்று மாதம் வேலையில்லாமல் அமர்ந்திருந்தேன். பொறுத்தது போதுமென்று ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு கிளம்பிப் போய்விட்டேன். அவர்கள் கைப்பேசியில் தொடர்பு கொண்டபோது வேலையில் தொடர விருப்பமில்லை என்று சொல்லி மின்னஞ்சலிலேயே என்து ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன்.

அடுத்து என்ன செய்வது என்று ஒரே யோசனை? மீண்டும் வேலை தேடும் படலமா? பிள்ளைகள் கல்லூரிப்படிப்பைத் தொடங்கும் காலத்தில் அப்பன் வேலை தேடுவதில் உள்ள சிக்கலும் நிலைமையும் எத்தனை பேருக்கு வாய்த்திருக்குமோ தெரியவில்லை. நான் அனுபவித்திருக்கிறேன். அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நல்லவேளை பழைய நிறுவனத்தில் நல்ல பெயர் சம்பாதித்து, நல்லபடியாய் வெளியே வந்ததினால் தொடர்பு விட்டுப் போகாமலிருந்தது. எங்கிருக்கிறாய்?... என்ன செய்கிறாய்?... என்று வினவியபோது வேலை தேடிக்கொண்டிருப்பதைச் சொல்ல மீண்டும் வந்து சேரச்சொல்லி விட்டார்கள்.

பொதுவாக ஒரு நிறுவனத்திலிருந்து போனபின் அதே நிறுவனத்தில் மீண்டும் வேலை கொடுக்க மாட்டார்கள். நாம் போய் சேர்ந்தாலும் அத்தனை மதிப்பிருக்காது. ஆனால் சேர்த்து வைத்து நற்பெயரால் அந்த மாதிரி தர்மசங்கடங்கள் எதுவும் எனக்கு நிகழவில்லை. இன்றுவரை அங்குதான் இருக்கிறேன். இங்கிருந்து வெளியேறத்தான் தற்போது சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நிறுவனத்தைப் பிடிக்காமல் போகவில்லை. கடைசி காலத்தில் குடும்பத்தோடு வாழ ஆசைப்படுகிறேன் அவ்வளவுதான்.

அதனால் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் மீண்டும் இன்டர்வியூக்களுக்கு போய்வந்து கொண்டிருக்கிறேன்.


அப்படித்தான் போன வாரம் ஊருக்குப் போயிருந்தபோது சென்னையில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தின்  நேர்காணலுக்கும் போயிருந்தேன். இப்போதெல்லாம் இன்டர்வியூக்குப் போகும்போது எந்தவித எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்வதில்லை. கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் வருத்தமில்லை என்ற மனநிலையில்தான் சென்றிருந்தேன். 30 வருட அனுபவம் என்பதால் அதிகம் கேள்விகள் கேட்கவில்லை. முதல் கட்டமாக தெரிவு செய்து கடிதம் கொடுத்திருக்கிறார்கள். சம்பளமும் பரவாயில்லை. மிகப்பெரிய சந்தோஷம் சென்னையிலேயே வேலை. அடுத்தது மருத்துவ சோதனையிலும் பிரச்னை ஏதுமில்லாமல் இருந்தால்தான் பணி வாய்ப்பு கிடைக்கும்.

அதையும் முடித்துவிட்டு வந்திருக்கிறேன். என்ன ஆகும் என்று தெரியவில்லை. இத்தனை வயதுக்கு அப்புறமும் இப்படி வேலை தேடி இன்டர்வியூக்களுக்குப் போவது எனக்கென்னவோ அசிங்கமாக இருக்கிறது. ஐம்பதை நெருங்கும் வயதில் வேலை தேடுவது கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது.