சனி, 24 செப்டம்பர், 2011

1996 உள்ளாட்சித் தேர்தலில் எவர்சில்வர் தட்டு... இப்போது???

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி அது சம்பந்தமான விஷயம் என்பதால்... இது ஒரு மீள் பதிவு
அன்புள்ள நண்பருக்கு இனிய வணக்கம்!

எனது முந்தைய கடிதம் கிடைக்காதது குறித்து வருத்தமடைகிறேன்.
நான் தேர்தலில் 20 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.
உன் நண்பன் 61 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தான். இந்த தேர்தல் எனக்கு தந்த படிப்பினைகள் ஏராளம்.
  •       ஜாதி, பணபலம் இல்லாத எனக்கு தேர்தல் பணிக்கு ஆள் இல்லை. 
  •   ஆண்கள் வாக்குச்சாவடிக்கு ஏஐன்ட் நியமிக்க இயலாததால் 60 க்கும்   மேலான கள்ள ஓட்டுக்களைத் தடுக்க முடியவில்லை. 
  •           வயதான கண் பார்வை மங்கியவர்களின் ஓட்டுக்கள் சுமார் 20 இருந்தும் இவர்களை அழைத்து வந்து ஓட்டு போடவைக்க ஆள் பலம் இல்லை. 
  •   ஓசூரிலிருந்து தம்பிகளை மூன்று தினங்கள் முன்னதாக வரச் சொல்லியும் வந்து ஓட்டு போட்டதும் சென்றுவிட்டனர்.
  •      வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி, மல்டி ஓட்டுக்களை எப்படி கணக்கிடுவது என்று அதிகாரிகளுக்கு தெரியாத காரணம்...  

இந்தக்காரணங்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் விதிமீறல்களை ஆதாரங்களுடன் திரட்டி மாவட்ட தலைமை நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். வழக்கு முடிவு இடைத்தேர்தலாக இருக்கும்.

மற்றபடி 20 ஓட்டுக்கள் என்னைவிட கூடுதலாகப் பெற்ற பா.ம.க. வேட்பாளர் ஜாதியபலம் இருந்தும் கூட, ஒரு ஓட்டுக்கு ஒரு எவர்சில்வர் தட்டு கொடுத்ததால்தான் வெற்றி பெற முடிந்தது.

ஜாதிபலம் இல்லாத நான் 20 வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும்கூட இது ஆச்சரியமில்லை. இந்த நபர் 26 ஆண்டுகாலமாக என் நெருங்கிய நண்பன். பா.ம.க.வுக்கு நான் ஊரில் நல்ல ஆலோசகனாக இருந்து இவனை வழிநடத்திச் சென்றேன்.

                                                

கூட்டுறவுத் தேர்தலில் இவனும், உள்ளாட்சித் தேர்தலில் நானும் போட்டியிடுவதாக நண்பர்கள் மத்தியில் முடிவு செய்தோம். 96 கூட்டுறவு தேர்தலில் இவன் வெற்றிபெற முதுகெலும்பாக செயல்பட்டேன். கூட்டுறவு தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே எனக்கே தெரியாமல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டான்.

கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெற்றும் கூட உள்ளாட்சித்தேர்தலில் போட்டியில் இருந்து விலகவில்லை. இந்த துரோக நிகழ்ச்சி எந்நாளும் நான் மறக்க முடியாத ஒன்றாகும்.

பா.ம.க. நான் விரும்பும் கட்சி. புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் துணிவாக ஆதரவு தரும் ராமதாஸ் அவர்கள் மீது எனக்குள்ள ஈடுபாடு ஆழமானது. இந்தக்கட்சி வளரவேண்டும் என்பதே எனது பேரவா! இதற்குத் தடையாக கீழ்மட்டக் கிராமங்களில் வன்னிய ஜாதி உணர்வுடன் செயல்படும் கட்சிக்காரர்கள் இருப்பதற்கு எடுத்துக்காட்டு மேற்கூறிய சம்பவமாகும்.

பா.ம.க. ஊரில் என்னை எதிர்த்து போட்டியிடாமல், ஆதரவு தெரிவித்திருந்தால், பா.ம.க. ஜாதிக்கு அப்பாற்பட்ட வெகுஜன அமைப்பு என, எங்கள் ஊரில் பிற ஜாதியினருக்கு உணர்த்தும் வாய்ப்பு இருந்திருக்கும். என் சொந்தச் செலவில் தந்தை பெரியாருக்கு எங்களூரில் சிலை நிறுவி, அதனை அஞ்சாத சிங்கம் நிகர் தமிழின ஒப்பற்ற ஒரே தலைவன் தம்பி பிரபாகரனை உறுதியுடன் ஆதரிக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களின் கையால் திறந்து வைக்கவேண்டும் என்ற எனது நீண்ட நாளைய ஆசைக்குக்கூட எங்களூர் பா.ம.க. வினர் இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதில் எனக்கு பெயரும் புகழும் கிடைத்து விடுமாம்.
.
  .                      
பெயருக்காக புகழுக்காக நான் கடந்த காலத்தில் ஆதிக்க எதிர்ப்பு குணத்தில் செயல்படவில்லை. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக, சிறுமைகளைக் கண்டு சீற்றம் கொண்டு, உயிரை துச்சமாக மதித்து நான் செயல்பட்டதெல்லாம் பெயருக்காகவா? புகழுக்காகவா?

எனது குடும்ப சுய தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ளாமல், எனது சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை கடந்த காலத்தில் செலவழித்து செயல்பட்டது புகழுக்காகவா? பெயருக்காகவா?

அநீதிகளை எதிர்த்ததால் நான் மட்டுமின்றி என்னை பெற்றெடுத்த ஒரே காரணத்திற்காக எனது பெற்றோர்களையும் பொய் வழக்குகளுக்கு ஆளாக்கி எங்களூர் ஆதிக்க சக்திகள் செயல்பட்டதில் நான் சந்தித்த இடையூறுகள் எல்லாம் கேவலம் இந்த பதவிக்கும் புகழுக்காகத்தானா?

                                             

மார்க்சிய எண்ணங்களை மனதில் கொண்டு, புரட்சியை நேசிக்கும் நான் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு போட்டியிடவில்லை. காலத்தின் கட்டாய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நான் தேர்தலில் பங்கெடுத்தது பதவி சுகத்திற்காகவா?

சராசரி அரசியல் கட்சிகளிலிருந்து மாறுபாடான செயல்பாடுகளைக் கொண்டுள்ள பா.ம.க. வளர்ச்சி என்பது என் வருங்கால ஆசைகளில் ஒன்றாகும். எங்களூரில் இந்தக்கட்சிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துவிட்டதாக நான் கருதியது பகற்கனவு என்றுதான் உணர முடிகிறது. இந்தக்கட்சிக்கு மூளையாக செயல்பட்ட எனக்கு எங்களூர் பா.ம.க.வினர் ஜாதிய கண்ணோட்டத்தில் கொடுத்த பரிசுதான் கடந்த தேர்தல் முடிவு.

எனது தோல்வி என்பது எங்களூரில் ஆதிக்க சக்திகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதை என்னை நன்குணர்ந்த உங்களுக்குப் புரியும் என்று கருதுகிறேன். அந்த அநீதி, ஆதிக்க சக்திகளுக்கு ஒரு புத்துணர்வை எங்களூர் பா.ம.க. வினர் எளிதாக வழங்கிவிட்டார்கள்.

இந்த அநீதி, ஆதிக்க சக்திகளை எதிர்த்து போரிட என்னிடமிருந்த ஆயுதமாகிய மக்கள் சக்தியை தற்காலிக சபலத்திற்கு அடிமையாக்கி (தேர்தல் விதிமுறை மீறலாகிய எவர்சில்வர் தட்டு கொடுத்து) எனக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததைப் போன்ற ஒரு மாயத்தோற்றத்தை எங்களூர் பா.ம.க.வினர் ஏற்படுத்திவிட்டார்கள்.

இந்தக்கடிதத்தை ஒரு சராசரி மனிதனின் கடிதமாக் கருதாமல், ஒரு சமூக உணர்வாளனின் மனக்குமுறல் என்று கருதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளதால் உங்களின் விரிவான கருத்தை அறிய விரும்புகிறேன்.
நீங்கள் சென்னையிலிருந்து ஊருக்கு அடிக்கடி வந்து செல்கிறீர்களா? மற்றவை உங்கள் மடல் கண்டு!

இப்படிக்கு,
என்றென்றும் மாறாத அன்புடன்,
இனிய நண்பன்.
பாலசண்முகம்


2 கருத்துகள்:

அம்பலத்தார் சொன்னது… [Reply]

வாழ்க்கை செலவு ஜாஸ்தியான இன்றையகாலத்தில் சில்வர் தட்டஎல்லாம் எம்மாத்திரம். அதுதான் இப்ப பெரியபெரிய அயிட்டமெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

மிகவும் சரி அம்பலத்தாரே! இப்போது பஞ்சாயத்து தலைவர்களின் சொத்துக்களைப் பாருங்கள் கோடிக்கணக்கில்! அரசியல் என்பது தொழிலாகி பல வருடம் ஆகிவிட்டது. முதல் போட்டு பின்பு சம்பாதிக்கிறார்கள்!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!