வியாழன், 29 செப்டம்பர், 2011

எனக்குச் சாதகமான பதில் இல்லை!

God is Love                                                                                      31.10.1995
அன்பின் பிரியமுள்ள நண்பருக்கு,

அன்புத்தோழி க்ளாரா எழுதுவது. இங்கு நான் நலம். உங்கள் நலன் காண ஆவல். உங்கள் அன்புக் கடிதம் கிடைத்தது. எனது கடிதங்களை இங்கு யாரும் பிரிக்க மாட்டார்கள். எனவே நீங்கள் அதைப் பற்றி எதுவும் நினைக்க வேண்டாம்.


உங்கள் கடிதத்தில் எனக்குச் சாதகமான பதில்தான் வரும் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் என்னை திருமணம் செய்துகொள் என்று சொல்கிறீர்கள். வீட்டில் நண்பர் ஓருவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றுதான் சொன்னேன். ஆனால் எனக்கு திருமணம் செய்து கொள்ள மனம் இல்லை. மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. எதுவும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை. பெங்களூரில் வேலை செய்கிறார். உங்கள் பதில் கடிதம் வந்ததும்தான் பிடிக்கவில்லை என்று கண்டிப்பாக சொல்லிவிட்டேன்.

மாப்பிள்ளை கொஞ்சம் முரண்பட்டவர் என்று நினைக்கிறேன். எங்க அக்காவிடம் உங்கள் தங்கையை கண்டிப்பாக இந்தப் புடவையிலிருந்து மாற்றிக்காட்டுகிறேன் என்று சவால் விட்டுப் போயிருக்கிறார். கண்டிப்பாக அவரால் என் மனது இல்லாமல் என்னை மாற்ற முடியாது. ஏன் தெரியுமா? நான் உங்கள் தோழி! மேலும் வரன் பிடிக்கவில்லை. காரணம் சொல்லத் தெரியவில்லை என்று எழுதினேன். கூச்சப்படாமல் எழுது என்றீர்கள். காரணங்கள் எழுதவா?

உங்கள் வாழ்வில் ஏதோ ஒரு சலிப்பு இருக்கிறது. அதை உங்கள் கடிதங்களிலிருந்து புரிந்து கொண்டேன். அப்போதே நான் எடுத்த முடிவு இதுதான். அதுமட்டுமல்ல திருமணத்திற்குப் பின்னால் நான் விரும்பும் பணியை நிச்சயமாக செய்ய அனுமதி கிடைக்காது. எனவே வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாது. அதைவிட முக்கியமானது, எனது இன்பத்திற்காக நான் உங்கள் நட்பையும், உங்களையும்  இழக்கத் தயாராயில்லை.
இதனால் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லை. உங்கள் மேல் உள்ள அன்பும் பாசமும் நாளுக்குநாள் அதிகரிக்கிறதே தவிர, எந்த சூழ்நிலையிலும் உங்களை மறக்க முடியவில்லை. எனது வாழ்வில் இடைஞ்சல் இல்லாதிருக்கும் வரை உங்கள் நட்பு நீடிக்கும் என்று எழுதியிருந்தீர்கள். ஆனால் அப்படி என் வாழ்வில் ஒருஇடைஞ்சல் வந்தாலும் என்னால் உங்களை மறக்க முடியாது. இதற்குமேல் என்னால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.

எனவே இதற்குமேல் தயவுசெய்து என்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்த வேண்டாம்.

இங்கு ஊர் மக்கள் நல்ல அன்பாகப் பழகுகிறார்கள். இங்கு என்னோடு இருப்பவர்கள் இரண்டு பேர். இருவரும் பெரியவர்கள். அதில் ஒருவர் அடிக்கடி நான் அப்பா அம்மா இல்லாத்தைப் பற்றி அனாதை என்ற தொணியில் குத்திப் பேசுவார். அப்படிப்பட்ட நேரங்களில் உங்கள் நினைப்பு வரும். உங்கள் கவிதை நினைப்பு வரும். இருநிதாலும் அம்மா நினைவும் என்னை வாட்டுகிறது.

மனதில் உள்ளவற்றைச் சொல்லி ஆறுதல் அடைய இங்கு யாரும் இல்லை. எனக்கு எல்லாமே நீங்கள்தான். இந்தக் கடிதத்தோடு மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுப்பதற்காக எடுத்த என்னுடைய ஃபோட்டோ ஒன்று வைத்திருக்கிறேன். பார்த்துவிட்டு அடுத்த கடிதத்தில் அனுப்பி வையுங்கள். ஃபோட்டோதான் எடுத்தேன். மாப்பிள்ளை வீட்டாரிடம் கொடுக்கவில்லை. கடிதம் உடன் எழுதினால் 17-ம் தியதிக்கு முன்னால் எழுதுங்கள். இல்லையென்றால் 28-ம் தியதிக்குப் பின்னால் எழுதுங்கள்.

நீங்கள் கேட்ட யோபு ஆகமம் இன்னும் கொஞ்சம் எழுதவேண்டும். அடுத்த கடிதத்தில் நிச்சயம் அனுப்புகிறேன்.

என்றும் பிரியமுடன்,
க்ளாரா.
குறிப்பு: ஏதாவது தவறாக இருந்தால் மன்னித்து அடுத்த கடிதத்தில் எழுதுங்கள்.


2 கருத்துகள்:

அம்பலத்தார் சொன்னது… [Reply]

மீண்டும் மீண்டும் எத்தனைதடவைகள் படித்தாலும் சலிப்புத்தட்டாதவை - கடிதங்கள்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தொடர்ந்து எனது வலைப்பக்கத்திற்கு வந்து ஆதரவு தரும் அம்பலத்தாருக்கு நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!