புதன், 14 செப்டம்பர், 2011

காதல் கோட்டை - மறக்க முடியாத சினிமா


மறக்க முடியாத சினிமாக்களில் காதல் கோட்டை முதன்மையானது. இந்தத் திரைப்படம் வெளியானபோது நான் பார்க்கவில்லை. சினிமா பார்ப்பதின் மோகம் குறைந்து போய் தியேட்டர் பக்கமே போகாதிருந்த காலம் அது. அப்புறம் எங்கு பார்த்தேன் இந்த படத்தை என்று நினைவில்லை. தொலைக்காட்சியில்தான் பார்த்திருக்கவேண்டும். 

பார்த்தவுடன் பிடித்துப் போய்விட்டது இந்தப்படம். காரணம் தெரியவில்லை. இயல்பிலேயே பேனா நட்புகளில் மிகுந்த ஆர்வமுடையவன் என்பதால் இருக்கலாம். நமக்கும் இந்த மாதிரி நட்பு இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைக் கோட்டையாக இருக்கலாம். நானும் சில தோழிகளோடு கடிதத் தொடர்பு கொண்டிருந்ததாலும் இருக்கலாம். கல்யாணமாகிய பிறகு இப்படியெல்லாம் பேனா நட்பை கண்டிக்காத மனைவியினாலும் இருக்கலாம். எது எப்படியோ ஃபிரேம் பை ஃபிரேம் எனக்கு பிடித்திருந்தது. 


படம் வெளியான ஆண்டு 1997 ஜூலை மாதம் என நினைக்கிறேன். ஒரு திரைப்படம் நமக்கு ஏன் பிடித்துப்போகிறது? நாம் அந்தக் கதையோடு ஒன்றிப்போய்விடுவது இல்லையென்றால் நமக்கு நடந்த நிகழ்வாகவோ, நடக்காமல் போன நிகழ்வின் ஏமாற்றம் திரைப்படத்தில் வெற்றிகரமாக காண்பிக்கப்படுவதாலோ கூட இருக்கலாம். நம்முடைய வாழ்க்கையின் சோகத்தின் பிரதிபலிப்பாக உணர்வதாலும் இருக்கலாம்.

எனக்கும் அடுத்த சில ஆண்டுகளிலேயே ஒரு தோழி கிடைத்தாள். சகலத்தையும் என்னோடு பகிர்ந்து கோண்டாள். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த கௌரவங்களில் மிக முக்கியமானது இது. முகம் தெரியாமலேயே என்னை நம்பியது, மதித்தது, நட்பு பாராட்டியது, சகல விஷயங்களையும் பரிமாறிக்கொண்டது என இந்த நட்பில், காதலில் நான் பரவசமடைந்ததும், கற்றுக்கொண்டதும் ஏராளம். 

காதல் கோட்டையில் கடைசியில் காதலர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள். ஆனால் என் வாழ்க்கையில் இன்றுவரை நாங்கள் ஒன்று சேரவில்லை. முகத்தைக்கூட பார்க்கவில்லை என்பதே மிகப்பெரிய சோகம். நீ இங்கு நலமே... நான் அங்கு நலமா?... நலம் நலமறிய ஆவல்...... மனசுக்குள்ளேதான் விசாரித்துக்கொள்ள முடிகிறது! யார் எங்களுக்குத் தூது போவார்கள்?! நான் இறப்பதற்கு முன்போ இல்லை அவள் இறப்பதற்கு முன்போ நாங்கள் சந்திக்கமுடியுமா???

இதுதான் வாழ்க்கையின் விசித்திரம் போலும். பரஸ்பரம் அவரவர் வாழ்க்கையில் பிரச்னைகளைத் தவிர்க்க நாங்களாகவே எடுத்துக்கொண்ட முடிவு இது! இப்போது புரிந்திருக்கும் காதல் கோட்டை எனக்கேன் பிடித்த படம் என்று!

காதல் கோட்டை

‘நீ இங்கு நலமே.... நான் அங்கு நலமா?!
சில சமயம் ஆர்ப்பாட்டமான வாணவேடிக்கைகளைவிட, மிக எளிமையாக ஒளிவீசும் ஒரு மெழுகுவத்தி நம் மனதை அள்ளிக்கொண்டு போய்விடுவது உண்டு. அந்த வகையில் அவ்வப்போது தென்றலாக வந்து வருடிவிட்டுப் போகிற திரைப்படங்களும் உண்டு. காதல் கோட்டை மெழுகுவத்தி வகை!
காதல் என்கிற மகத்தான சக்தியால் பின்னிப் பிணைந்து கட்டுண்ட இருவர் கடைசிவரை தங்களுக்குள் நேரில் அறிமுகமாகாமலே இருப்பது என்பது ஆச்சர்யமான ஒரு கரு. அந்தக் கருவுக்கு வெற்றிகரமாக ஒரு உருவம் கொடுத்து உயிரோட்டத்துடன் நடமாடவிட்டால் நாம் ஆர்வத்தோடு ஆர்ப்பரிக்காமல் என்ன செய்ய?

ஜெய்ப்பூரில் தனக்கு கிடைத்த புது வேலையில் சேர, சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து கிளம்புகிற அஜீத்திற்கு ரயிலில் கிடைக்கிறது அந்தக் கைப்பை. வேலை தேடும் யாரோ ஒரு பெண்ணின் சர்ட்டிஃபிகேட்டுகள் அதில் இருப்பதைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அந்த முகவரிக்கு பார்சலில் அனுப்பி வைக்கிறார்.

நம்பிக்கை இழந்த தேவயானி, பத்திரமாக வந்துவிட்ட தன் சர்ட்டிஃபிகேட்டுகளைப் பார்த்துக் கண்ணீர் தளும்ப பரவசம் அடைகிறார். முகம் தெரியாத அஜீத் மீது அவருக்கு இனம்புரியாத பற்றுதல் உண்டாக இதுவே போதுமானதாக இருக்க, கடிதத் தொடர்பு வளர... படிப்படியாக அது காதலாக பிரமாண்ட வடிவம் எடுக்கிறது.

‘இது என்ன கதை... இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்ற கேள்வியை தியேட்டரில் யாரேனும் எழுந்து கேட்டால் தர்ம அடி விழும் ஆபத்துகூட உண்டு. ‘பரவசமான சஸ்பென்ஸ் என்கிற உணர்வு ஆடியன்ஸைத் தொற்றிக் கொண்டுவிடுவதுதான் காரணம்!

இந்தப் படத்தில் வரும் எல்லாரும் நல்லவர்கள். சராசரி மனிதர்கள். இதனால் அவ்வப்போது தலைதூக்கும் நமது ஃபார்முலா ஊகங்களை இந்தப்படம் உடைத்துக்கொண்டு போகும்போதெல்லாம் ஏற்படுவது இன்ப அதிர்ச்சிகளே!

ஹோல்டரில் பல்பு பொருத்துவது போல் கச்சதமாகப் பொருந்துகிற ரோல் அஜீத்துக்கு. இயக்குனர் ‘ஸ்விட்சைத் தட்டியவுடன் படம் முழுக்கப் பிரகாசிக்கிறார் அவர். இறுதிக் காட்சியில், ‘நடப்பது என்ன? என்று எதுவும் புரியாமல் சற்றே குழப்பத்தை அவர் காட்டி அடக்கி வாசித்திருப்பது மிருதுவான நடிப்பு!
மனதில் உறுதியும் முகத்தில் அப்பாவித்தனமுமாக வரும் தேவயானி காரெக்டரைப் பார்க்கும்போது, நாமும் வீட்டிலிருந்து எழுந்து சென்று இந்தப் பெண்ணின் காதலுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற தவிப்பு எழுகிறது.
அஜீத்தின் கோடீஸ்வர முதலாளியாக ஹீராவைப்போட்டு, அஜீத்தை விடாப் பிடியாகத் துரத்த வைத்திருக்கிறார்கள். தனது அன்பை ஹிஸ்டீரிக்கலாக அஜீத்திடம் வெளிப்படுத்தும் இடத்தில் ‘ஒலிம்பிக் சாம்பியனாக வெல்கிறார் ஹீரா.

இப்படிப்பட்ட ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு ஆரம்ப காட்சிகளை அமைக்கும்போது எச்சரிக்கையான ‘நகாசு வேலைகள் தேவைப்படுகின்றன. இதெல்லாம் வரப்போகிற கதைக்கு ‘முன்னுரைதான் என்று புரிந்து விடுவதால், இருப்பதை ரசிப்பதைவிட வரப்போவதை நாம் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவது ஒரு முக்கிய குறை! இதனால்தான், ரொம்ப அக்கறையாக போடப்பட்ட பாடல் காட்சிகள்கூட நம்மை பொறுமை இழக்கச் செய்கின்றன.

சின்னச்சின்ன குறைகள் இந்தப்படத்தில் இருக்கலாம். அவற்றையெல்லாம் புத்திசாலித்தனமாக பட்டியல் போட்டு மெனக்கெடுவது அவசியமில்லாத வேலை. ஏனென்றால் காதல் சன்னதிக்கு ஒரு தனி மரியாதையும் சக்தியும் (திரையுலகிலும்) உண்டு. அந்த சக்தியை இந்தப்படம் மிகப்பெரிய அளவில் காட்டியிருக்கிறது.

தங்கர்பச்சானின் கேமரா-இத்தனை நாள் பார்க்காத ஜெய்ப்பூரின் அழகை, ஒட்டுமொத்த அழகோடு அள்ளிக்கொண்டு வருகிறது... ஆட்டோக்களின் நடுவில் நடக்கும் ஆக்ரோஷ சண்டையில் துள்ளிக்கொண்டும் பயணிக்கிறது! 

தேவா இசையில் மூன்று பாடல்கள் தென்றலான இன்னிசை!

மணிவண்ணன், விஜய், கரன், ராஜீவ் மற்றும் பாண்டு இந்தக் காதல் கதையை வெற்றிகரமாக தூக்கிவிட கச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் எஸ்கலேட்டர்கள். கிளைமாக்ஸில் வரும் மகத்தான மழையும்தான்!

கொட்டுகிற மழையில் – ஆட்டோவில் – ஒருவரையொருவர் யாரென்றே தெரிந்து கொள்ளாமல் டிரைவரும், பாஸஞ்சருமாகக் காதலர்கள் பயணிக்க... முதல் தர சஸ்பென்ஸ் படங்களுக்கு இருக்கிற பரபரப்பை இந்தக் காதல் கதையின் உச்சகட்ட நிமிடங்களில் கொண்டுவந்திருப்பதன் மூலம் அனாயாசமாக ஒரு காதல் கோட்டையை எழுப்பி அதன் மேல் வெற்றிக்கொடியை அழுத்தமாக நாட்டியிருக்கிறார் இளம் டைரக்டர் அகத்தியன்.
ஆ.வி. விமர்சனம்.                     28.07.1996



2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… [Reply]

இறுதிக் காட்சியில், தேவயாணி "நான்தான் கமலி" என்று சொன்ன பின்னும் முகத்தில் ஒரு பிரகாசமும் காட்டாத அஜித் நடிப்பு ரொம்ப கேவலம். இதில் சூர்யா என்ற பெயர் வேறு (நல்ல ஜோக்)

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

இருக்கலாம். படம் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இதன் இந்தி பதிப்பான ஸிர்ப் தும் மிக அருமையாக இருக்கிறது.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!