மறக்க முடியாத நண்பர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறக்க முடியாத நண்பர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

என்னைக் கல்யாண கோலத்துல பார்க்கணுமா?


மயிலாடுதுறை மாலாவின் கடிதங்கள்


 வணக்கம்! நான் மலா! தங்கள் கடிதம் கண்டேன். எனக்கு பரிசுத்தொகை இன்றுதான் கிடைத்தது. தங்கள் கடிதம் 25.03.1998 அன்று கிடைத்தது. இன்று காலையில் பரிசுத்தொகை கிடைக்கவில்லை என்று ஒரு கடிதம் எழுதி அதை போஸ்ட் பண்ணுவதற்குள் பணவிடை வந்துவிட்டது. தங்களுக்கும் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். கிடைத்துவிட்டதா எனக்குத்தெரியப்படுத்துங்கள். நான் இந்த பத்திரிகையை எப்போதும் வாங்குவதில்லை. யதார்த்தமாக எழுதி அனுப்பினேன். ரெகுலராக வாங்காததால் தங்களது கட்டுரையை படிக்கவில்லை. SORRY, ANYWAY  வாழ்த்துக்கள். என்னைப் பாராட்டியதற்கு நன்றி!

உங்களது கையெழுத்து மிகவும் அழகாக உள்ளது. 'அச்சில் கோர்த்தது போல' என்பார்களே அதுபோல். ரியலி சூப்பர்ப். போட்டி 7 ற்கு அனுப்பியுள்ளீர்களா? நான் ஏதோ கிறுக்கி அனுப்பியுள்ளேன். தங்களுக்கு விருப்பமிருந்தால் என்னை 'PEN FRIEND' ஆக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கடிதம் எழுதுங்களேன். பரிசுத்தொகை கிடைத்ததும் தெரியப்படுத்துங்கள். மற்றவை பிறகு....

என்றும் நட்புடன்,
மாலா.
மயிலாடுதுறை.


 முதன் முதலாக ஒரு போஸ்ட் கார்டில் ஆரம்பித்த இந்த நட்பு கடிதப்போக்குவரத்து இல்லாவிட்டாலும் இன்றுவரை தொடர்கிறது. எப்போதோ ஒரு முறை கைப்பேசியில் பேசிக்கொண்டுதானிருக்கிறோம். முகம் தெரியாமல் ஆரம்பித்த நட்புகுடும்ப விஷயங்களையும் பரிமாறிக்கொள்வது வரை தொடர்ந்தது. 1998 ல் ஆரம்பித்த போது மாலா எனக்கு எழுதிய கடிதம் மேலேயும், நண்பர்களான பின்பு 2006- ல் எனக்கு எழுதிய கடிதம் கீழேயும் இருக்கிறது.

அன்புடையீர்,                                                                                                  28.01.2006

எப்படியிருக்கிறீர்கள்? நலமா? உங்கள் கடிதம் கிடைத்தது. சம்பிரதாயமா நலம் விசாரிச்சிகூட லெட்டர் எழுதாம ஒரு வருஷத்துக்கும் மேல இருந்திருக்கேன். என் மேல கோபமே வரலயா?! ஆனா எனக்கே என் மேல கோபம்தான், ஏனிப்படி ஒருவருடனும் கடிதத்தொடர்பில்லாம விட்டேத்தியா இருக்கோம்னு.

காரணம் சொல்லனும்னா நிறைய அடுக்கிக்கிட்டே போகலாம்ஆனா நான் சொல்லப்போறதில்ல! பாபுகிட்டக் கூட எப்பவாவது போன்ல பேசறதோட சரி. பஹ்ரைனில் இருக்கும் பஹ்ருதீன்கூட என்மேல பயங்கர கோபத்துல இருக்கு. போன வருஷம் ரம்ஜான் அப்போ எங்க வீட்டுக்கு வந்து நிறைய பொருட்கள் கொடுத்துட்டுப்போச்சு. அப்போ நான் வீட்ல இல்லை. பிறகு போன்ல பேசினேன். அவங்க வீட்டுக்கு வரச்சொன்னார். பல வேலைகள்ல 10 நாள் கழிச்சி, அன்னிக்கு போலாம்னு அவங்க வீட்டுக்கு போன் பண்றேன். முதல் நாளே ஃபிளைட் பிடிச்சிடுச்சாம். என் போன் நம்பரைத் தொலைச்சிட்டு ரொம்ப தவிச்சான்னு அவங்க அக்கா சொன்னாங்க. என் மேல கோபம் இருக்கிறது நியாயம்தானே! ஆனா இன்னிக்குவரைக்கும் மனசுக்குள்ள ஆயிரம் தடவை 'சாரி' கேட்கறேன். லெட்டர் எழுதலை!?

உண்மையைச் சொல்லனும்னா…. பணத்தை துரத்திகிட்டிருக்கேன். ஏனிப்படி படிச்சி, நாலெழுத்து தெரிஞ்சிகிட்டு வேலை காசுன்னு ஓடறோம்னு இருக்கு. இப்படி உட்கார்ந்து புலம்பக்கூட நேரமில்லாம ஓடவேண்டியிருக்கு? நமக்கான கடமைகள்னு வரும்போது….    அதுக்கு கொடுக்கக்கூடிய விலைகள் அதிகம்தான் போலிருக்கு.

நம்ப மாட்டீங்க இந்த லெட்டர் எழுத ஆரம்பிக்கிறேன். மணி இரவு 12.00. எப்படியும் முடிக்க ஒரு வாரம் ஆகும்னு நினைக்கிறேன். டைரி மாதிரி தேதி போட்டு எழுதிடறேன். என் தம்பிதான் அன்னிக்கு போன் பண்ணினான். அடுத்தநாள் லெட்டர் எழுதிட்டியான்னு கேட்டான். இல்லைன்னேன். எங்கிட்டியாவது சொல்லேன். நானாவது எழுதறேன்னான்-ரொம்ப கடுப்பா! (அவங்க அப்பா அம்மாவுக்கு 2 வரி கார்டு எழுதச்சொன்னாக் கூட முடியாதுன்னு சொல்றவன்). இலவச இணைப்பா  நீயெல்லாம் பிரண்ஷிப்புக்கு லாயக்கேயில்லாத ஆள்னு திட்டு வேற!

ஜூன் மாதம் உங்களுக்கு நான்கு பக்கம் எழுதி வச்சிருந்தேன். ரொம்ப கேப் விழுந்திருச்சி. அந்த பேப்பர்ஸை எங்கே வச்சேன்னு தெரியலை. இந்த லெட்டர்ல அந்த மேட்டர்சையும் சேர்த்து எழுதிடறேன்.

எங்க வீடு எப்போதும் போல சண்டையும் சமாதனமுமா நீருபூத்த நெருப்புமா போய்க்கிட்டிருக்கு. அப்பா உடல்நலம் பரவாயில்லை. பனிக்காலம் என்பதால் இருமலும் வீசிங்கும் அதிகம்தான். அடிக்கடி மெட்ராஸ் போயிட்டு வராங்க. அம்மா எப்பவும்போல நலம். சாந்தி ஓகே.  ஈஸ்வரி இப்போ அண்ணா நகரில் ஒரு ஸ்கூலில் வேலை பார்ப்பதால் ஜாகையும் அங்கேதான். குழந்தையையும் அங்கே சேர்த்துவிட்டாள். சுஜி பெண்ணை 3 மாசமா எங்க வீட்ல விட்டிருக்கா. புவனாவிற்கு இரண்டாவதா மகன் பிறந்திருக்கான்.

இந்த வருட தீபாவளிக்கு முதல் நாள், தீபாவளிக்கெல்லாம் மெட்ராஸ் ராமச்சந்திராவுல வாழ்க்கை வெறுத்து உட்கார்ந்திருந்தேன். புவனாவுக்கு அங்கதான் பிரசவம்.  சுதா கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்டாள்னு சொன்னா அது பொய். அடிக்கடி ஞாபகம் வர்றதில்ல. அப்பாதான் தவறுதலா அடிக்கடி சுதா சுதாங்கிறாங்க. அப்போ சுத்தியிருக்கிறவங்க எல்லாம் ரணப்படுறோம். அம்மா உடனே அழுவாங்க. சுஜி வீட்டுக்குப் போன எங்க ஊர்க்காரப்பையன் சுதாவையும் பார்த்துப் பேசியிருக்கான். ஆனா எனக்கு அது பிடிக்கல. அவனைக்கண்டிச்சேன். ஏனோ மனசு வெறுத்துப்போச்சு!

என்னைக் கல்யாண கோலத்துல பார்க்கணுமா? கவலைப்படாதீங்க. சீக்கிரம் பாரத்துடலாம். எஸ். ஜாதகக்கட்டு வெளில எடுத்து 2, 3 மாசமாச்சு. அங்கங்க விநியோகிச்சிட்டிருக்கோம். பெரிய அத்தான்தான் பார்க்கிறார். வூட்ல உள்ள ஒவ்வொருத்தரும் அவங்க அவங்களோட கனவு, ஆசை எதிர்பார்ப்பு, அக்கா எல்லாம் எதிர்பாரத்து கிடைக்காத வாழ்க்கைஇப்படி எல்லாருடைய விருப்பங்களையும் ஆளுக்கு ஒண்ணா வெளியிட்டுக்கிட்டிருக்காங்க. அப்படித்தான் மாப்பிள்ளை பார்க்கப்போறம்னு சொல்றாங்க. எனக்கான வாழ்க்கையை எல்லாரும் ரொம்ப ஆசையா கனவு கண்டுக்கிட்டிருக்கிறதுனால, எனக்குன்னு பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்லை.


புதன், 30 மே, 2012

மறக்கவே மாட்டீர்களா?....



மறக்க முடியாத நினைவுகளில் சந்தோஷமான நினைவுகள் மட்டுமே இருப்பதில்லை. சோகமான சம்பவங்களும், ஆறாத துயரங்களும், வேதனைகளும், வலிகளும் கூட இருக்கலாம் இல்லையா? மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் மனதிற்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரவல்லது. ஆனால் மறக்க வேண்டிய நிகழ்வுகளும் கூட அடிக்கடி வந்து ஞாபகப்படுத்தி நிம்மதியைக் குலைத்துக்கொண்டே இருக்கும். 

உதாரணமாக காதலில் துரோகத்தைச் சந்தித்தவர்கள் அந்த நிகழ்வை மறக்க மிகவும் பிரயத்னப்பட வேண்டியிருக்கலாம். கொஞ்சநாள் மறந்திருந்தாலும் கூட நண்பர்கள் யாராவது ஞாபகப்படுத்திவிட்டால் மீண்டும் அவர் பழைய துயர நிலைக்கு மாறலாம். ஆனால் முற்றிலும் மறந்துபோக வழி இருக்கிறதா?

‘நாம் யாரிடமாவது வாக்குவாதம் போடும்போதோ, சண்டை போடும்போதோ… உன்னால் எனக்கு ஏற்பட்ட இந்த கசப்பை நான் காலம் முழுக்க மறக்கவே மாட்டேன்…’ – என்று நினைத்துக்கொள்வோம். ‘இன்றைக்கு நீ சொன்னதை என்றைக்கும் நான் மறக்கமாட்டேன்’, என்று வெளிப்படையாகவே சொல்வோம்.

இப்படி நீங்கள் சொல்லும் போதே அந்த சண்டையில் அவரால் நீங்கள் துக்கமும், மனவேதனையும் அடைந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்களுக்கு துக்கத்தையும் மனவேதனையையும் தந்த அந்த செயலை, அந்த வார்த்தையை ஒருபோதும் மறக்கமாட்டீர்கள் என்றால், வாழ்நாள் முழுவதும் அந்த துக்கத்துடனும், மனவேதனையுடனும் தான் இருப்பேன் என்று உங்களுக்குள்ளே உறுதிமொழி எடுத்துக்கொள்வது எவ்வளவு பெரிய அறியாமை. தேவையற்ற துக்கத்தையும், வேதனையையும் யாராவது சேமித்து வைப்பார்களா?!

ஒருபுறம் மகிழ்ச்சியாக வாழ்வதற்காகவும், அமைதியாக இருப்பதற்காகவும் நாம் எவ்வளவோ விஷயங்களை சிரத்தை எடுத்து செய்து கொண்டிருக்கிறோம். மறுபுறம் நமக்கு வேதனைகளை உருவாக்கும் சம்பவங்களையும், எண்ணங்களையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு முரண்பாட்டிற்குரிய, முட்டாள்தனமான விஷயம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.



கணவன் மனைவிக்குள் தடித்த வார்த்தை ஒன்று விழுந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அதை ‘போய் தொலை’ என்று மனதை விட்டு அகற்றிவிடவேண்டும். அகற்றாமல் அதை அப்படியே மனதுக்குள் வைத்துக்கொண்டு மேலோட்டமாக இருவரும், ஒருவர் மீது இன்னொருவர் அன்பு செலுத்துவதுபோல் காட்டிக்கொண்டு சினிமாவுக்குச் சென்றாலும், அல்லது வேறு எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அது தற்காலிக நிம்மதியாக மட்டுமே இருக்கும்.

திடீரென்று ஒருநாள் உள்ளே அமுங்கிக்கிடக்கும் கசப்பு 'இந்த மனுஷனை திருப்திப்படுத்த முடியாது’ என்று மனைவியோ, ‘எவ்வளவு வாங்கிக் கொடுத்தாலும் இவளுக்கு திருப்தியே வராது’ என்று கணவரோ பேசி, விட்ட இடத்தில் இருந்து மீண்டும் வாக்குவாதத்தையோ, சண்டையையோ தொடங்கிவிடுவார்கள்.

நட்பிலும் காதலிலும் கூட இதே கதைதான். துரோகத்தால்தான் மனிதன் அதிகம் பாதிக்கப்படுகிறான். நமக்கு துரோகம் செய்தவர்கள் குற்ற உணர்ச்சியே இல்லாமல் சந்தோஷமாக வாழும் போது தவறே செய்யாத நாம் ஏன் புழுங்கித் தவிக்கவேண்டும். அவரின் சுயரூபம் இப்போதாவது தெரிந்ததே என்று நிம்மதி அடைந்து அடுத்த வேலையைப் பார்க்கப் போகவேண்டும். அதேயே நினைத்துக் கொண்டிருப்பதும், நெஞ்சில் அவர் மீது வன்மத்தை வளர்த்துக் கொள்வதும் எந்தவிதத்திலும் நம் உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியமானதல்ல.

மேலோட்டமாக நாம் என்னதான் செய்தாலும், அடிப்படையான எண்ணங்களும் உணர்வுகளும் சரியால்லாமல் கசப்புடன் இருந்தால், அந்த உறவு அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போல்தான் காணப்படும். வாரத்திற்கு ஒருமுறை அந்த உறவு சரிந்துகொண்டுதான் இருக்கும். உடனடியாக நாம் உறவின் அஸ்திவாரத்தை சரி செய்திடவேண்டும். சரி செய்யாவிட்டால், ‘இவரை (இவளை) ‘சரிசெய்யவே முடியாது’ என்று கணவன்-மனைவி உறவுக்குள் போலித்தனம் புகுந்துகொள்ளும்.

நம் உறவில், நட்பில் போலித்தனம் இல்லாமல் வாழவேண்டும் என்றால், கசப்பான வார்த்தைகளையும், கசப்பான சம்பவங்களையும் மனதிற்குள் வைத்துக்கொள்ளவே கூடாது. அதாவது யார் மீதும் ‘கொலவெறி’ இருக்கவே கூடாது. இது முடிகிற காரியமா? மானமிருந்தால் மார்க்கமுண்டு இல்லையா?

இப்படி கசப்பான சில மறக்க முடியாத நினைவுகளை மறக்க முயற்சித்துக்கொண்டிருக்கும்,

உங்கள் அன்பன்,



புதன், 28 செப்டம்பர், 2011

வெளிநாட்டு மோகம்!

நம் எல்லோருக்கும் வெளிநாட்டு மோகம் இருப்பதை மறுக்க முடியாது. அது வேலைக்காகவும் இருக்கலாம். சுற்றிப் பார்க்கவும் இருக்கலாம். ஆனால் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை யாரும் உணர்வதே இல்லை. 


நானும் கூட கொஞ்சநாள் இப்படிப்பட்ட வெளிநாட்டு மோகத்தில் இருந்தேன். இரண்டு மூன்று முறை அந்த வாய்ப்பு வந்து கை நழுவிப் போனது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்களே அதுபோல.



பல விதங்களில் முயன்று கொண்டிருந்தேன். பத்திரிகைகளில் பார்த்து விண்ணப்பிப்பது மட்டுமல்லாது தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லாரிடத்தும் சொல்லி வைத்திருந்தேன். ஒருமுறை ‘மார்க்யூப் என்ற ஒரு அமெரிக்க நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் தங்களின் கிளையை அமைக்க விரும்பி அதற்கான பணிகளைத் துவங்கி ஆட்களையும் தேர்வு செய்யத் தொடங்கியிருந்தார்கள். 


நானும் விண்ணப்பித்து இறுதி நிலை வரை போய் கடைசியில் தேர்வு செய்யப்பட்டேன். அடுத்த பதினைந்து நாட்களில் அமெரிக்காவிற்கு ஆறு மாதம் பயிற்சிக்காக அனுப்பப்போவதாகவும் அதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்துகொள்ளுமாறும் அறிவித்துவிட்டர்கள்.


மகிழ்ச்சிக்கு சொல்ல வேண்டுமா? அமெரிக்கக் கனவுகளில் நான் மூழ்கியிருந்த நேரம் வாஜ்பாயியின் (13 நாள் அரசோ அல்லது 13 மாத ஆட்சியோ சரியாக நினைவில்லை) அரசு போக்ரானில் அணுவெடிச் சோதனையை நடத்தியது. அமெரிக்காவிற்குத் தாங்குமா?! இந்தியா மிது பொருளாதாரத் தடையை விதித்தது. நான் தேர்வு செய்யப்பட்ட அந்த அமெரிக்க நிறுவனம் இங்கு தொடங்குவதும் தடைபட்டது. என் ஆசை நிராசையானது.


இப்படி பல சமயங்களில் வாய்ப்புகள் கை நழுவிப்போயிருக்கிறது. என்றாலும் முயற்சியை விட்டுவிடவில்லை. நான் குடியிருந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் காவியா என்ற பெண் எங்களோடு நன்றாக பழகிவந்தாள். ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது அவளுக்கு சிங்கப்பூரில் ஒரு தோழி இருப்பதாக சொன்னாள். நான் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வதைக் கூறி அவரை அறிமுகப்படுத்துமாறு கேட்டேன். இரண்டு பேரும் சேர்ந்து சிங்கப்பூர் தோழிக்கு கடிதம் எழுதினோம். அங்கிருந்து காவியாவிற்குப் பதிலாக எனது முகவரிக்கு பதில் வந்தது. நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். காவியா அப்புறம் லைனிலேயே இல்லை.


இந்த சிங்கப்பூர் தோழியின் பெயர் ஜெஸி. மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். சென்னயிலேயே பிறந்து வளர்ந்ததால் தமிழ் எழுத, படிக்கத் தெரியும். அப்புறம் எங்களுக்குள் கடிதப் போக்குவரத்து கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. அப்புறம் என்ன காரணத்தினாலோ நின்று போய்பிட்டது. இப்போது எங்கே எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் எனக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.


இதற்கு முன்பே வெளிநாட்டிலிருந்து இருவர் அறிமுகம் ஆகிமாயிருந்தனர். ஒருவர் இலங்கையிலிருந்து யாழினி. இன்னொருவர் அமெரிக்காவிலிருந்து சுப்பிரமணியம். இதே காலகட்டத்தில் எனக்கு மயிலாடுதுறையிலிருந்து அறிமுகமானவர் மாலா என்கிற தோழி. இவர்களின் கடிதங்களையெல்லாம் இன்றுவரை பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறேன். ஒரே வருத்தம் என்னவென்றால் என் கடிதங்களின் கதி என்னவாயிற்று என்பதுதான். எல்லோரும் என்னைப்போல பைத்தியக்காரத்தனமாய் குப்பைகளைச் சேர்த்து வைத்திருப்பார்களா என்ன?!

அந்த என் கடிதங்களையும் பதிவு செய்ய மனம் ஏங்குகிறது. என்னுடைய எழுத்தும்,சிந்தனையும் எண்ணமும் அப்போது எப்படியிருந்தது என்று பார்க்க ஆசையிருக்காதா? எந்த நண்பர்களையும் இப்போது தொடர்பு கொள்ள முடியவில்லை. கல்யாணம் வரை இருக்கும் காதலைப் போல, உயிருக்குயிரான நட்பு என்பதெல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான் என நினைக்கிறேன். கடிதம் எழுதுதில் இருந்த ஆத்ம திருப்தியும், காத்திருத்தலும் இந்த நவீன யுகத்தில் இல்லாமற் போனது வருத்தமளிப்பதாய் இருக்கிறது 


தோழர்களே! உங்களுக்கும் இருந்தால் இங்கே வந்து அதைப் பகிரலாமே!


வியாழன், 25 ஆகஸ்ட், 2011

மறக்க முடியாத நண்பர்கள்


 மறக்க முடியாத நண்பர்கள் பட்டியல்ல என் நண்பன் சுப்பிரமணிக்கு முக்கிய இடம் உண்டு. ஏழ்மையிலிருந்து வந்ததால் மிகவும் எளிமையாக இருப்பான். நல்லா விவாதம் பண்ணுவான். எல்லார்கிட்டயும் பழகினாலும் என்கிட்ட பாசமா இருப்பான். விடுதியிலே தங்கி படிக்காம தனியா அறை எடுத்து தங்கி படிச்சதுனால, சாப்பாட்டு ருசிக்காக நான் வீட்டிலிருந்து கொண்டுவரும் டிபன் பாக்ஸை காலிபண்ணிடுவான். அப்பறம் நாங்க அவன் அறைக்கு போய் அவன் செஞ்சு வச்சிருக்கிற சாப்பாட்டை காலிபண்ணுவோம்.


ம்... அதெல்லாம் ஒரு காலம். இதுல ஒரு விஷயம் அவங்க ஊர்ல இருக்கிற நண்பரைப் பற்றி சதா சொல்லிக்கிட்டே இருப்பான். அவர் பேரு பாலசண்முகம். அவருதான் எனக்கு குரு. அவருதான் எனக்கு எல்லாமே அப்படின்னு செல்ல்லுவான். ஊர்ல எந்த பிரச்சனையானாலும் இவர் பெயர் அடிபடுமாம். எனக்குள்ளவும் அதே மாதிரி ஓரு துடிப்பு எப்பவும் இருந்துகிட்டே இருக்கும். நாமும் நம்ம ஊருக்கு ஏதாவது செய்யனும்னு நினைப்பேன்.ஆனாலும் படிக்கிற வயசில்லையா அடக்கி வாசிச்சேன்.

இந்த பாலசண்மும் என்பவரை பார்க்கனும்கிற ஆவல் நிறைய இருந்தாலும் படிப்பு முடியும் வரை சந்தர்ப்பம் கிடைக்கலை. என் நண்பன் சுப்பிரமணியோட கல்யாணத்துக்கு அவன் ஊருக்கு போன பிறகுதான் பார்க்க முடிஞ்சுது. அதோட சரி. நானும் மறந்தாச்சு. அவரும் மறந்தாச்சு. படிப்பு முடிஞ்சி, ட்ரெயினிங் முடிஞ்சு எங்க ஊர் நண்பர் கண்ணன் என்பவர் மூலமா முதன்முறையா பெங்களூருக்கு வேலைக்குப் போனேன்.


இந்தப் பத்திரிகைகளில் வாசகர் கடிதம்னு ஒண்ணு வருமே, அதுமேல எனக்கு ஒரு அலாதி ஈர்ப்பு அப்போ. ரொம்ப பெரிய மேதாவிங்களாட்டம் நாட்டு அரசியல் பத்தி, அரசியல் தலைவர்களைப் பத்தி, நாட்டு நடப்புகள் பத்தியெல்லாம் பலபேரு கருத்து சொல்வாங்க. ஏன் பத்திரிகை தலையங்கமே சரியில்லைன்னு கூட அதே பத்திரிகைக்கு எழுதுவாங்க. வேலூர் மாவட்டத்துல ஒரு சின்ன குக்கிராமத்துல பொறந்த எனக்கு, இதெல்லாம் அப்போ ஆச்சர்யமான விஷயம். எனக்கும் ஆசை துளிர்த்துச்சு. நாமளும் எழுதுனா என்ன?

இதுக்கு முன்னோடி நிச்சயமா திரு. சண்முகம்தான். பெங்களூருல வேலை பார்த்துக்கிட்டு ஊருக்கும் மாசத்துக்கு ஒருவாட்டி வந்து போய்க்கிட்டிருந்தேன். அப்பதான் கல்கில எங்க வடார்க்காடு மாவட்டத்து பிரச்சனைகள் பற்றி நாம தெரிவிச்சா, அவங்க அதை பத்திரிகைல வெளியிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்கிட்டயும் அதுபற்றி கேட்டு வெளியிடப்போறதா அறிவிப்பு வந்துச்சு. இதுதான் நமக்கு கிடைச்ச சான்ஸ். இதை விடக்கூடாதுன்னு தோணுச்சு. எங்க ஊர்ல இருக்கிற நாலு பிரச்சனையை கல்கிக்கு எழுதிப்போட்டுட்டு என் வேலைய பார்க்க பெங்களூருக்குப் போயிட்டேன்.


அந்த பெங்களூர் கம்பெனில நூலகம் மாதிரி ஒரு அமைப்பு உண்டு. தமிழ் பத்திரிகைகள் எல்லாம் வரும். நாம ரெஜிஸ்டர்ல என்ட்ரி பண்ணிட்டு புக்கை வீட்டுக்கு எதுத்துகிட்டு போகலாம். புதுசா வர்ற வாரப்பத்திரிகைகளை எதுத்துட்டுப் போக போட்டி கூட இருக்கும். அதுல கல்கியும் உண்டு. 

நான் கல்கிக்கு எழுதிப்போட்ட மேட்டர மறந்து போனதால கல்கி புக்குக்கு ஆர்வம் காட்டல. ஆனா யாரும் சீண்டாம கிடந்த புக்கை நாம எடுத்துக்கிட்டு போகலாம்னு கைல எடுத்தா ஆச்சர்யம் தாங்க முடியல. எங்க ஊர் பேரும், போட்டோவும் அட்டையிலே!!!

மறக்க முடியாத நண்பர்கள்னு ஆரம்பிச்சிட்டு எங்க ஊரப்பத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டேன் இல்ல. கரணம் இருக்கு, இந்த கல்கி விஷயத்துல இருந்துதான் திரு. பாலசண்முகம் அவர்களும், நானும் ரொம்ப நெருக்கமா ஆனோம். என் நண்பன் லைன்லேயே இல்ல.

இப்படியான சம்பவம் பல நட்பு வட்டங்கள்ல நடந்திருக்கு. நம்மள அறிமுகப் படுத்தினவங்கள ஓரங்கட்டிவிட்டு மத்த ரெண்டுபேரும் க்ளோஸாயிடறது. ஆண்-பெண் நட்பு வட்டத்துல இதனாலேயே பெண்கள் தன் ஸ்நேகிதனை யாருக்கும் அறிமுகப்படுத்தறதே இல்லை.

தொடர்ந்து வாங்க, நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு.