மறக்கமுடியாத கடிதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறக்கமுடியாத கடிதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

எம்.ஜி.ஆர். 1948 ல் தன் ரசிகனுக்கு எழுதிய கடிதம்!

எம்.ஜி.ஆரின் மருமகன் மயிலை விஜயகுமார் (விஜயன்), எம்.ஜி.ஆர். பவளவிழா நினைவுமலர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பொது மக்களிடமிருந்து அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும், அவரைப் பற்றிய துணுக்குகளையும் பெறுவதற்காக ஒரு விளம்பரம் செய்தார். அப்போது அப்படி வந்த பல நினைவுப் பொருட்களில் 1948 ம் ஆண்டு, எம்.ஜி.ஆர் தன் கைப்பட எழுதிய ஒரு கடிதமும் ஒன்று.
பி.ஜி.எம். செல்வராஜ் என்கிற நண்பருக்கு எம்.ஜி.ஆர். எழுதிய பதில் கடிதம் இது. அப்போது அவர் எழுதிய அந்தக் கடிதம், இப்போதும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைபவர்களுக்குப் பொருந்தும் வகையில் உள்ளதுதான் ஆச்சர்யம்!

அந்தக் கடிதம் கீழே!
எம்.ஜி.ராம்சந்தர்.                                                   கேம்ப்; கோவை.                           நாள்; 19.02.1948


அன்புள்ள சகோதரர் பி.ஜி.எம்.எஸ். அவர்கட்கு, நலம். நலங்காண ஆவல். கடிதம் கிடைத்தது மகிழ்ச்சி.


தங்களை இதற்குமுன் சந்தித்ததுண்டா என்று நன்கு நினைவில்லை. ஆனால் கடிதத்தில் உள்ள தங்கள் முகம் மட்டும் அறிமுகமானதாகத்தான் தெரிகிறது. அது எப்படியோ இருக்கட்டும். என் மனதிலுள்ள சில விஷயங்களை உங்களுக்கு கட்டாயம் எழுத வேண்டியிருப்பதற்காக உண்மையில் வருத்தமேயாயினும் தங்கள் கடிதத்திலிருந்து எனக்குண்டான கடமை என்னை எழுதும்படி தைர்யப் படுத்துகிறது.


சோதரா! தங்களுடைய கடிதத்திலிருந்து தங்களுடைய வாழ்க்கை கௌரவத்துடன் மனிதனாக வாழத்தகுதியுள்ள சௌகர்யங்களுடன் கூடிய ஒன்றாக இருக்குமென்று தெரிகிறது.


முதலாவதாக, சினிமாவிலிருக்கும் எல்லா நடிக நடிகையர்களும் உயர்வானவர்கள், நிறைய பண வசதியுள்ளவர்கள், கருணையுள்ளவர்கள், சுயநலமற்றவர்கள் என்று எந்த நிமிடத்திலும் தவறிக்கூட நினைத்துவிட, நம்பிவிடக் கூடாதென்பது என் எச்சரிக்கை!


அன்பரே! தாங்கள் சினிமாவில் நடிக்கவேண்டுமென்று விரும்புவதற்கு அடிப்படையான காரணங்கள் என்னென்ன? பணத்திற்கா? புகழிற்கா?? கலைக்கா???


பணத்தை உத்தேசித்தாயின் தற்கால (தமிழ்) சினிமா உலகத்தில் மிகச்சிலரைத் தவிர மற்ற எல்லோரும் பரிதாபப்படத்தக்க நிலையில்தான் பணத்தைப் பெறுகிறார்கள் என்பதை என் அனுபவத்திலிருந்து நன்கு அறிந்திருப்பதால் அதை உத்தேசித்து சினிமாவில் சேர விரும்புவது சரியல்ல.


புகழை உத்தேசித்தாயின் எந்தப் புதிய நடிகனும் சீக்கரத்தில் (அதாவது சில விசித்திரமான காரணங்களால் அல்லாமல்) புகழடைந்ததில்லை. என் சரித்திர அனுபவம் (நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து குறைந்தது 12 வருடங்களாகின்றன) உங்களுக்கு பாடத் தெரிந்திருப்பின் ஒருவேளை சீக்கிரத்தில் புகழடையலாம். (ஆனால் அதுவும் இரண்டாம் பட்சம்தான்).


கலையை உத்தேசித்தாயின் எப்படிப்பட்டது கலையென்று இதுவரை தீர்மாணிக்கப்படவே இல்லை. ஏனெனில் சில படங்கள் பாட்டிற்காகவும், சில சண்டைக்காகவும், சில தந்திரக்காட்சிகள் நிறைந்ததற்காகவும் இன்னும் இப்படிப்பட வெவ்வேறு காரணங்களைக் கொண்டும் நன்கு ஓடுகிறது. ஆனால் யாரும் இம்மாதிரி காரணங்களைக்கொண்டு வெற்றியடையும் படங்களை கலை நுணுக்கம் வாய்ந்த படங்கள் என்று ஒத்துக்கொள்வதே இல்லை.


சினிமாவில் சொல்லுவது போல் டெக்னிக் நன்றாக இருக்கிறது என்று சொல்லப்பட்ட, நினைக்கப்பட்ட படங்கள் பெட்டியில் தூங்குகிறது. இதற்குக் காரணம் மக்களின் ருசி கோளாரா? அல்லது எடுக்கப்படும் (கலையென்று சொல்லும்) முறையின் கோளாரா? இவ்விரண்டில் எந்த முடிவுக்கு வந்தாலும் தற்சமயம் நம்மால் கலையைக் காணமுடிவதில்லை.


ஆக, நான் நினைத்த காரணங்கள் எதுவும் எந்த விதத்திலும் தங்கள் சினிமா பிரவேசத்துக்குப் பொருத்தமே இல்லை. ஆனால் நான் எந்த விதத்தில் தங்களுக்கு உதவமுடியுமென்றால் தங்களுக்கு தெரிந்த பணவசதியுள்ளவர்கள் படமெடுக்க முயன்றால் தங்களை நடிக்க வைக்க, தாங்கள் வெற்றியடைய நான் உதவியாயிருக்க முடியும்.


ஆனால் தாங்கள் கதையைத் தேர்ந்தெடுக்குமுன் தங்களுக்கு பொருத்தமான வேடமுள்ள கதைதானா என்பதை நன்கு ஆலோசித்து தீர்மாணித்த பிறகே கதையை முடிவு செய்ய வேண்டும். நடிப்பென்பது ஓரளவு ஒருவர் சொல்லிக் கொடுக்க வேண்டியதுதான் என்றாலும் அது இயற்கையாகவே ஒவ்வொருவரிடமும் இருக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரை எத்தனை விதமான உணர்ச்சிகளுடன் கூடிய மனிதர்களையும், நம் மன உணர்ச்சிகளை நிமிடத்துக்கு நிமிடம் மாற்றக்கூடிய நிகழ்ச்சிகளையும் காண்கிறீர்கள்.


ஓர் உதாரணம்; ஒரு குழந்தை விளையாட்டின் மேல் உள்ள ஆர்வமிகுதியால் தெருவின் குறுக்கே ஓடுகிறது. அதே சமயம் தெருவில் வேகமாக லாரி வந்துவிடுகிறது. உடனே நீங்கள் உங்களையும் மறந்து கூச்சலிடுகிறீர்கள். அல்லது பயத்தினால் தூண்டப்பட்டு குழந்தையைக் காப்பாற்ற ஓடுகிறீர்கள். இதைப்போன்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடிப்பின் (நடிப்புக் கலையின் ) ஒவ்வொரு பகுதியேதான்.


ஆகையால் அன்பரே! (நடிப்பின் ஓரளவு கூட தெரிந்துகொண்டிராத) என் போன்றோரிடம் கற்றுக்கொள்ள முயலுவதைவிட, தாங்கள் காணும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மனதில் பதிய வைத்து, அந்தந்த நிகழ்ச்சிகளில் ஈடுபட்டவர்களின் உணர்ச்சிகளைப் பார்த்து குறித்துக்கொண்டு தனியாக கண்ணாடி முன் நின்று பழகி (அதாவது தாங்கள் கற்பனை செய்யும் சம்பவத்திற்கும் தாங்கள் நடிப்பதற்கும் பொருத்தமுண்டா? தாங்கள் நேரில் கண்ட முக பாவத்திற்கும் தற்சமயம் தாங்கள் செய்து பார்க்கும் பாவத்திற்கும் பொருத்தமுண்டா என்பதை) பார்த்துக்கொண்டால் நாளடைவில் நடிப்பில் வெற்றியடையலாம். இத்துடன் முக்கியமானது ஒழுக்கம்.


இந்த ஒழுக்கத்தை தற்கால சினிமா உலகில் எல்லோரிடமும் காணமுடிவதில்லை. அதுமட்டுமில்லஒழுக்கம் என்பது வெறும் கேலிக்கூத்து என்று கூட நினைக்கும், பேசும், நடக்கும் நடிக நடிகையர்களும் இருக்கிறார்கள் என்பதை நடிகர் என்ற முறையில் தலைகுனிவுடன், வெட்கத்துடன் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஆனாலும் ஆர்வமுள்ள நேர்மையுள்ள தங்களைப் போன்ற வாலிபர்கள் நடக்கத் தீர்மானித்தால் தற்காலம் உள்ள இந்த இழிவான  நிலையை மாற்றி நிச்சயம் வெற்றி காண முடியும். ஆகவே தாங்கள் சினிவில் நுழைவதன் முன் ஒழுக்கத்தைப் பற்றி நன்கு உணர்ந்து தாங்கள் எங்கிருந்தாலும் அதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக்கிக் கொள்ளச் சிறிதும் தவறக்கூடாது.


ஆகையால் தாங்கள் தயவு செய்து நன்கு யோசித்து சினிமா நுழைவைத் தீர்மானிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சிலர் பணத்தை வாங்கிக்கொண்டு சினிமாவில் சேர்த்துவிடுவதாகச் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட அன்பர்களிடம் தாங்களோ தங்களைப் போன்ற நண்பர்களோ சிக்காமல் பார்த்துக்கொள்ளத் தவற வேண்டாம்.


இப்படிக்கு,


தங்கள். எம்.ஜி.ராம்சந்தர்.

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

என்னைக் கல்யாண கோலத்துல பார்க்கணுமா?


மயிலாடுதுறை மாலாவின் கடிதங்கள்


 வணக்கம்! நான் மலா! தங்கள் கடிதம் கண்டேன். எனக்கு பரிசுத்தொகை இன்றுதான் கிடைத்தது. தங்கள் கடிதம் 25.03.1998 அன்று கிடைத்தது. இன்று காலையில் பரிசுத்தொகை கிடைக்கவில்லை என்று ஒரு கடிதம் எழுதி அதை போஸ்ட் பண்ணுவதற்குள் பணவிடை வந்துவிட்டது. தங்களுக்கும் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். கிடைத்துவிட்டதா எனக்குத்தெரியப்படுத்துங்கள். நான் இந்த பத்திரிகையை எப்போதும் வாங்குவதில்லை. யதார்த்தமாக எழுதி அனுப்பினேன். ரெகுலராக வாங்காததால் தங்களது கட்டுரையை படிக்கவில்லை. SORRY, ANYWAY  வாழ்த்துக்கள். என்னைப் பாராட்டியதற்கு நன்றி!

உங்களது கையெழுத்து மிகவும் அழகாக உள்ளது. 'அச்சில் கோர்த்தது போல' என்பார்களே அதுபோல். ரியலி சூப்பர்ப். போட்டி 7 ற்கு அனுப்பியுள்ளீர்களா? நான் ஏதோ கிறுக்கி அனுப்பியுள்ளேன். தங்களுக்கு விருப்பமிருந்தால் என்னை 'PEN FRIEND' ஆக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கடிதம் எழுதுங்களேன். பரிசுத்தொகை கிடைத்ததும் தெரியப்படுத்துங்கள். மற்றவை பிறகு....

என்றும் நட்புடன்,
மாலா.
மயிலாடுதுறை.


 முதன் முதலாக ஒரு போஸ்ட் கார்டில் ஆரம்பித்த இந்த நட்பு கடிதப்போக்குவரத்து இல்லாவிட்டாலும் இன்றுவரை தொடர்கிறது. எப்போதோ ஒரு முறை கைப்பேசியில் பேசிக்கொண்டுதானிருக்கிறோம். முகம் தெரியாமல் ஆரம்பித்த நட்புகுடும்ப விஷயங்களையும் பரிமாறிக்கொள்வது வரை தொடர்ந்தது. 1998 ல் ஆரம்பித்த போது மாலா எனக்கு எழுதிய கடிதம் மேலேயும், நண்பர்களான பின்பு 2006- ல் எனக்கு எழுதிய கடிதம் கீழேயும் இருக்கிறது.

அன்புடையீர்,                                                                                                  28.01.2006

எப்படியிருக்கிறீர்கள்? நலமா? உங்கள் கடிதம் கிடைத்தது. சம்பிரதாயமா நலம் விசாரிச்சிகூட லெட்டர் எழுதாம ஒரு வருஷத்துக்கும் மேல இருந்திருக்கேன். என் மேல கோபமே வரலயா?! ஆனா எனக்கே என் மேல கோபம்தான், ஏனிப்படி ஒருவருடனும் கடிதத்தொடர்பில்லாம விட்டேத்தியா இருக்கோம்னு.

காரணம் சொல்லனும்னா நிறைய அடுக்கிக்கிட்டே போகலாம்ஆனா நான் சொல்லப்போறதில்ல! பாபுகிட்டக் கூட எப்பவாவது போன்ல பேசறதோட சரி. பஹ்ரைனில் இருக்கும் பஹ்ருதீன்கூட என்மேல பயங்கர கோபத்துல இருக்கு. போன வருஷம் ரம்ஜான் அப்போ எங்க வீட்டுக்கு வந்து நிறைய பொருட்கள் கொடுத்துட்டுப்போச்சு. அப்போ நான் வீட்ல இல்லை. பிறகு போன்ல பேசினேன். அவங்க வீட்டுக்கு வரச்சொன்னார். பல வேலைகள்ல 10 நாள் கழிச்சி, அன்னிக்கு போலாம்னு அவங்க வீட்டுக்கு போன் பண்றேன். முதல் நாளே ஃபிளைட் பிடிச்சிடுச்சாம். என் போன் நம்பரைத் தொலைச்சிட்டு ரொம்ப தவிச்சான்னு அவங்க அக்கா சொன்னாங்க. என் மேல கோபம் இருக்கிறது நியாயம்தானே! ஆனா இன்னிக்குவரைக்கும் மனசுக்குள்ள ஆயிரம் தடவை 'சாரி' கேட்கறேன். லெட்டர் எழுதலை!?

உண்மையைச் சொல்லனும்னா…. பணத்தை துரத்திகிட்டிருக்கேன். ஏனிப்படி படிச்சி, நாலெழுத்து தெரிஞ்சிகிட்டு வேலை காசுன்னு ஓடறோம்னு இருக்கு. இப்படி உட்கார்ந்து புலம்பக்கூட நேரமில்லாம ஓடவேண்டியிருக்கு? நமக்கான கடமைகள்னு வரும்போது….    அதுக்கு கொடுக்கக்கூடிய விலைகள் அதிகம்தான் போலிருக்கு.

நம்ப மாட்டீங்க இந்த லெட்டர் எழுத ஆரம்பிக்கிறேன். மணி இரவு 12.00. எப்படியும் முடிக்க ஒரு வாரம் ஆகும்னு நினைக்கிறேன். டைரி மாதிரி தேதி போட்டு எழுதிடறேன். என் தம்பிதான் அன்னிக்கு போன் பண்ணினான். அடுத்தநாள் லெட்டர் எழுதிட்டியான்னு கேட்டான். இல்லைன்னேன். எங்கிட்டியாவது சொல்லேன். நானாவது எழுதறேன்னான்-ரொம்ப கடுப்பா! (அவங்க அப்பா அம்மாவுக்கு 2 வரி கார்டு எழுதச்சொன்னாக் கூட முடியாதுன்னு சொல்றவன்). இலவச இணைப்பா  நீயெல்லாம் பிரண்ஷிப்புக்கு லாயக்கேயில்லாத ஆள்னு திட்டு வேற!

ஜூன் மாதம் உங்களுக்கு நான்கு பக்கம் எழுதி வச்சிருந்தேன். ரொம்ப கேப் விழுந்திருச்சி. அந்த பேப்பர்ஸை எங்கே வச்சேன்னு தெரியலை. இந்த லெட்டர்ல அந்த மேட்டர்சையும் சேர்த்து எழுதிடறேன்.

எங்க வீடு எப்போதும் போல சண்டையும் சமாதனமுமா நீருபூத்த நெருப்புமா போய்க்கிட்டிருக்கு. அப்பா உடல்நலம் பரவாயில்லை. பனிக்காலம் என்பதால் இருமலும் வீசிங்கும் அதிகம்தான். அடிக்கடி மெட்ராஸ் போயிட்டு வராங்க. அம்மா எப்பவும்போல நலம். சாந்தி ஓகே.  ஈஸ்வரி இப்போ அண்ணா நகரில் ஒரு ஸ்கூலில் வேலை பார்ப்பதால் ஜாகையும் அங்கேதான். குழந்தையையும் அங்கே சேர்த்துவிட்டாள். சுஜி பெண்ணை 3 மாசமா எங்க வீட்ல விட்டிருக்கா. புவனாவிற்கு இரண்டாவதா மகன் பிறந்திருக்கான்.

இந்த வருட தீபாவளிக்கு முதல் நாள், தீபாவளிக்கெல்லாம் மெட்ராஸ் ராமச்சந்திராவுல வாழ்க்கை வெறுத்து உட்கார்ந்திருந்தேன். புவனாவுக்கு அங்கதான் பிரசவம்.  சுதா கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்டாள்னு சொன்னா அது பொய். அடிக்கடி ஞாபகம் வர்றதில்ல. அப்பாதான் தவறுதலா அடிக்கடி சுதா சுதாங்கிறாங்க. அப்போ சுத்தியிருக்கிறவங்க எல்லாம் ரணப்படுறோம். அம்மா உடனே அழுவாங்க. சுஜி வீட்டுக்குப் போன எங்க ஊர்க்காரப்பையன் சுதாவையும் பார்த்துப் பேசியிருக்கான். ஆனா எனக்கு அது பிடிக்கல. அவனைக்கண்டிச்சேன். ஏனோ மனசு வெறுத்துப்போச்சு!

என்னைக் கல்யாண கோலத்துல பார்க்கணுமா? கவலைப்படாதீங்க. சீக்கிரம் பாரத்துடலாம். எஸ். ஜாதகக்கட்டு வெளில எடுத்து 2, 3 மாசமாச்சு. அங்கங்க விநியோகிச்சிட்டிருக்கோம். பெரிய அத்தான்தான் பார்க்கிறார். வூட்ல உள்ள ஒவ்வொருத்தரும் அவங்க அவங்களோட கனவு, ஆசை எதிர்பார்ப்பு, அக்கா எல்லாம் எதிர்பாரத்து கிடைக்காத வாழ்க்கைஇப்படி எல்லாருடைய விருப்பங்களையும் ஆளுக்கு ஒண்ணா வெளியிட்டுக்கிட்டிருக்காங்க. அப்படித்தான் மாப்பிள்ளை பார்க்கப்போறம்னு சொல்றாங்க. எனக்கான வாழ்க்கையை எல்லாரும் ரொம்ப ஆசையா கனவு கண்டுக்கிட்டிருக்கிறதுனால, எனக்குன்னு பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்லை.


புதன், 19 செப்டம்பர், 2012

ஆட்சியும் அவலக்காட்சியும்...


22.02.1990                                                                                                     பெங்களூர்-58


அன்பிற்குரிய இனிய நண்பர் திரு.கவிப்ரியனுக்கு, உனது அன்பை என்றும் மறவாத நண்பன் பாலசண்முகம் எழுதும் மடல்.

உங்களின் 11.01.1990 தேதியிட்ட மடல் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். உடனடியாக மடல் போட இயலவில்லை. மன்னிக்கவும், திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் சில பிரச்னைகள், சிக்கல்கள் காரணமாக மன வேதனையில் ஆழ்ந்துவிட்டிருந்தேன். எனவே மனல் போட தாமதம் நேரிட்டுவிட்டது. பெற்றோர், உடன்பிறந்தோரின் பாசத்தில் சிறு விரிசல்கள்!

மற்றபடி நீங்கள் சுயதொழில் மேற்கொண்டதில் மகிழ்ச்சி.( உங்கள் போனஸ் பணம் கம்பனியிலிருந்து பெற்றுவிட்டீர்கள்தானே?!) முன்னேற மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நண்பன் சுப்பிரமணியின் மனைவிக்கு கடந்த 14.02 1990 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம். மற்றபடி நண்பர்களும் நலம்தான். நீங்கள் பெங்களூர் வரும்போது அவசியம் என்னை சந்திப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

உங்கள் ஐ.டி.ஐ ஆசிரியர் (சுப்பிரமணி திருமணத்திற்கு வந்திருந்தவர்) இறந்துவிட்ட விபரம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

திருமணத்திற்குப் பிறகு நான் தினமணியில் வாசகர் கருத்துக்கள் சரிவர எழுதுவதில்லை. எழுதும் மனநிலையும் இல்லை. என் மனைவி பெயரில் இரண்டு கடிதங்கள் பிரசுரமாகியிருந்தது. 11.02.1990 'கல்கி' இதழிலும் மனைவி பெயரில் கருத்து பிரசுரமாகியிருந்தது. மனைவி ஊரில் தான் இருக்கிறாள். இன்னும் ஓரிரு வாரத்தில் குடும்பத்தை பெங்களூருக்கு மாற்றிவிடுவேன்.
என் மனைவியும் ஒரு சராசரி பெண்தான். என் மனநிலைக்கு ஏற்றவாறு இவளை மாற்றுவதில்தான் என் எதிர்காலமே அடங்கி உள்ளது. அது வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

வி.பி.சிங் ஆட்சி பற்றி கருத்து கேட்டு எழுதியிருந்தீர்கள். ராஜீவை விட பரவாயில்லை. வி.பி.சிங் ஒருவர் மட்டுமே சரியானவராக இருப்பதில் பயன் ஏதுமில்லை. பதவி வெறி பிடித்த தேவிலால் போன்றோரும், சந்திரசேகர் போன்றோரும் இருக்கும்வரை தேசிய முன்னனி அரசு சோதனையை சந்திக்கப்போவது நிச்சயம். வர்க்க ரீதியான புரட்சி மட்டுமே எதிர்கால இந்தியாவை வளப்படுத்த முடியும்.

ஜனதாதள வேட்பாளர்கள் தேர்வு குறித்து இரு தினங்களுக்கு முன்பு தினமணியில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. கேடிகளும், ரௌடிகளும் எல்லாக் கட்சிகளிலும் தங்கள் செல்வாக்கினைப் பெற்றிருக்கும் கேவலநிலை என்றுமே மாறாது. இந்திய அரசியல் அமைப்பில் இது மாறாத சாபக்கேடாகும்.
ஏழ்மையும், வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சரியான தொலை நோக்கு திட்டங்கள் இல்லாத இந்தியா அதிகமான வெளிநாட்டுக் கடனில் சிக்கி மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் மறுமலர்ச்சிக்கு இளைய தலைமுறைகள் வித்திடவேண்டும். நாட்டு நடப்பை தெரிந்துகொள்ளும் இளைய தலைமுறையினர்கள் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. அவர்களும் தெரிந்து கொண்டதை புரிந்துகொண்டு உணர்ந்து செயல்பட முன்வருவதில்லை. காலத்தின் மாற்றம் நிச்சயமாக ஒரு புரட்சியை இந்தியாவில் தோற்றுவிக்கும். பதுக்கலும், சுரண்டலும், அடக்குமுறைகளும் இந்த நாட்டை சீரழிவுப்பாதையில் அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது.

ஆட்சிகள் மாறினாலும் நாட்டில் அவலக்காட்சிகள் மாறப்போவதில்லை. இப்போதைக்கு வி.பி.சிங்கின் ஆட்சி ராஜீவ் ஆட்சிக்கு சரியான மாற்று என்றாலும்கூட இந்த அரசும் மனிதகுல வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இயலாது. வி.பி.சிங்கின் ஆரம்பகால நல்ல நடவடிக்கைகள், முடிவுகள் கூட போகப்போக சரியான பாதையைக் காட்டப்போவதில்லை.

மற்றபடி உங்கள் கருத்தை எழுதவேண்டுகிறேன். உங்களின் திருமண ஏற்பாடுகள் பற்றி செய்தி இருப்பின் தெரிவிக்கவும். இதுதான் விபரம்.

இப்படிக்கு,
என்றும் மாறாத அன்புடன்,

பால.சண்முகம்.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

உங்களுக்குள்ளும் எவ்வளவு திறமை முடங்கிக் கிடக்கிறது?


அன்புள்ள சகோதரருக்கு,
உங்கள் அன்பு மறவா சகோதரி ஜெயந்தி எழுதுவது. இங்கு மாமா, கிரண் மற்றும் ஊரில் உள்ளவர்கள் அனைவரும் பூரண நலம். அதுபோல் உங்கள் இருவர் நலன் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி அறிய ஆவல்.
உங்களுடைய கடிதம் கடந்த ஏப்ரல் மாதம் 26.04.2000 அன்று கிடைத்தது. கடிதத்தைப் படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அச்சில் வார்த்தது போல் அழகிய கையெழுத்து, அழகிய வார்த்தை நடையில் எழுதியிருந்தீர்கள். உங்களுக்குள்ளும் எவ்வளவு திறமை முடங்கிக் கிடக்கிறது. அதை சரியான முறையில் வெளிக்கொணராமல், வழி தெரியாமல் போராடுகிறீர்கள். நீங்கள் முயற்சி செய்தால் நல்ல ஒரு பத்தரிகை நிருபராகக் கூட வரலாம்.
நீங்கள் கூறியிருந்தபடி எனக்கு ஓய்வு கிடைக்கும் பொழுதெல்லாம் வரையவேண்டும் என்று ஆசைதான். ஆனல் பெயின்டிங் பிரஷ் தொடக்கூட நேரமில்லை. இரண்டு குடும்பங்களையும் கவனிக்க வேண்டும். கட்டட வேலை, டெய்லரிங், கம்ப்யூட்டர் கிளாஸ் என்று ஓய்வில்லாமல் ஏதோ செய்து கொண்டிருப்பதால் என்னால் முழு மூச்சாக ஓவியத்தில் ஈடுபட முடியவில்லை.
உங்கள் கடிதத்தில் இருக்கும் ஊக்கம்தான் என்னை முழுமையாக ஓவியத்தில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மாமாவிற்கு துணைத்தாசில்தார் பதவி கிடைத்திருக்கிறது. ஆனல் சீனியாரிட்டிக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவர் கலெக்டர் ஆஃபிசில்தான் வேலை செய்கிறார். கிஷோர் நன்றாக படிக்கிறான். கூடவே இந்தியும் படிக்கிறான்.



18.04.2000 அன்று நீங்கள் வந்து போனதாக மாடி வீட்டில் இருப்பவர்கள் கூறினார்கள். நீங்கள் வந்த நேரத்தில் நான் இல்லாததது குறித்து வருத்தம் அடைந்தேன்.
நான் வரைந்த ஓவியத்தை ஃபோட்டோ காப்பியாக மாற்றி அனுப்பியிருந்தீர்கள் அல்லவா? அதை எப்படி ஃபோட்டோ காப்பியாக மாற்றுவது என்ற விபரத்தை எழுதி அனுப்பவும். நீங்கள் வாழ்த்தாக மாற்றிய ஓவியம் இருந்தால் இரண்டு நகல் அனுப்பி வைக்கவும்.
நானும் இங்கே சில படங்களை வரைந்து வைத்திருக்கிறேன். அதை எப்படி இவ்வாறு மாற்றுவது என்று தெரியவில்லை. அதனால்தான் உங்களிடம் விவரம் கேட்டு எழுதியிருக்கிறேன்.நீங்கள் ஊருக்கு வந்தால் அவசியம் வந்து போகவும்.
இவருடைய அக்கா மகன் இப்போது அமெரிக்காவிலுள்ள BOSTON-ல் சாஃப்ட்வேர் என்ஜினியராக இருக்கிறான்.
உங்கள் கம்பெனி நிலவரம் பற்றி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். தற்போது நிலைமை எப்படி இருக்கிறது? அதனால்தான் சொல்கிறேன் உங்களுக்குள்ளே இருக்கும் திறமையை நம்பி முழுமையாகப் போராடுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
உங்கள் கம்பெனி வேலையை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்காமல் கூடவே கட்டுரை, கவிதை என எழுத்து வேலையையும் தொடர்ந்து செய்யுங்கள். அதில் நிச்சயம் முன்னேற்றம் காண்பீர்கள்.
இதுதான் சங்கதி. மற்ற விஷயங்கள் ஏதுமின்றி முடிக்கிறேன்.
இங்ஙனம்,
ஜெயந்தி.
தொடர்புடைய இடுகை;
எத்தனை அழகான வாழ்த்து மடல்.


ஞாயிறு, 1 ஜனவரி, 2012

எத்தனைஅழகான வாழ்த்து மடல்!

பதிவுலக தோழர்கள், தோழிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு (2012) நல்வாழ்த்துக்கள்!


என்னுடைய சகோதரிமுறை உறவினர் (மாமாவின் மனைவி) ஒருவர் சிறந்த ஓவியங்களை வரையக்கூடிய திறமை மிக்கவர். தற்செயலாகத்தான் அவரின் திறமை எனக்குத் தெரியவந்தது. வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தை நிர்வகித்து வருபவர். நிறைய உறவினர்கள் இருந்தும் எங்கள் குடும்பத்தோடும், என்னோடும் நெருக்கமாக பழகுபவர். வசதிமிக்க குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் எந்தவித அலட்டலோ, படோபடமோ இல்லாதவர். 


ஓவியத்திறமை இருப்பதாலோ என்னவோ நிதானமாக பேசுவார். எதையும் மிகவும் யோசித்தே முடிவெடுப்பார். ஆனால் தொழில் நிமித்தமாய் நான் இடம்பெயர்ந்து போனபோது அவரது தொடர்பும் தொடர்பற்றுப்போனது.
எப்போதாவது சோந்த ஊருக்குச் செல்லும்மோது அவசியம் அவரையும் பார்த்துவிட்டுத்தான் வருவேன். 


அவரது குடும்பம் பிள்ளயின் படிப்பு கருதி கிராமத்தைவிட்டு நகர்ப்புறத்துக்குப்போக எண்ணி இடம் வாங்க நல்ல இடமாக தேடியபோது நான்தான் ஒரு புரோக்கர் மூலம் முடித்துக்கொடுத்தேன். வீட்டின் கட்டுமானப்பணிகளில் அவரது ஓவியமும், அதை என் மூலமாக கிரில் ஜன்னல், கதவுகளில் கொண்டுவர அவர் காட்டிய முயற்சியும், ஆர்வமும் அளவிடற்கரியது.


ஒருமுறை நான் அவர் இல்லம் சென்றபோது ஒரு பழையதாளில் பாதி வரையப்பட்ட ஓவியம் ஒன்று கசக்கி எறியப்பட்டும், மற்றொரு புதிய ஓவியத்தை வரையும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். எனக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க எண்ணி உள்ளே போனபோது, கசக்கி எறியப்பட்ட அந்த ஓவியத்தை நான் பிரித்துப் பார்த்தேன். எனக்கென்னவோ அதில் எந்தக்குறையும் தென்படவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று மீண்டும் அதைக் குப்பைக்கூடையில் போடாமல் மடித்து சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன்.


ஆறுமாதமோ அல்லது ஒருவருடமோ கழித்து எங்கோ புத்தகத்தின் நடுவில் வைத்திருந்த அந்த ஓவியத்தைப் பார்க்கநேர்ந்தவுடன் எனக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. உடனே அதை செயல்படுத்தினேன். அதை எடுத்து கொஞ்சம் வண்ணம் தீட்டி மெருகேற்றி, சூடான அயர்ன் பாக்ஸால் தேய்த்து கசங்கலை சரிசெய்து, புகைப்படக்கலை நிபுணரான என் நண்பரிடம் கொடுத்து அதை புகைப்படமாக்கி பல நகல்களை எடுத்து, அடுத்து வந்த புத்தாண்டிற்கு என் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தாக அனுப்பி வைத்தேன். 

இதை வரைந்த என் சகோதரிக்கும் (ஆனந்த அதிர்ச்சி கொடுக்க) அனுப்பிவைத்தேன்.

அவர் எனக்கு அப்போது எழுதிய கடிதம் இது!

அன்புள்ள சகோதரருக்கு,


ஜெயந்தி எழுதும் கடிதம். இங்கு நான், மாமா மற்றம் கிரண் அனைவரும் பூரண நலம். அதுபோல் உங்கள் இருவர் மற்றும் குழந்தைகள் இருவரின் நலன்பற்றி அறிய ஆவல்.


மற்றபடி நீங்கள் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து மடல் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. 'எனக்கு வந்த வாழ்த்து மடல்களிலிலேயே உங்கள் வாழ்த்து மடல்தான் மிகவும் மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. நான் ஒருபொருட்டில்லாமல் கீழே போட்டிருந்த ஓவியத்தை நீங்கள் எத்தனை அழகான வாழ்த்து மடலாக மாற்றி அனுப்பியிருக்கிறீர்கள்' என்று வியந்தேன். 


அழகான ஓவியங்களைப் படைத்துவிட்டு சரியான முறையில் பராமரிக்காமல் விட்டுவிடும் எனக்கு இது ஒரு பாடமாகக் கூட இருக்கிறது. உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக்கொள்கிறேன்.


உங்கள் இருவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் மனைவி எப்படி இருக்கிறார், நான் கேட்டதாகக் கூறவும். குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? மாமாவும் உங்களுக்கு கடிதம் எழுதச்சொன்னார். கிரணும் நன்றாகப் படிக்கிறான். 

தவிர நீங்கள் பொங்கலுக்கு ஊருக்கு வருவீர்கள் என்று நினைக்கிறேன். அப்பொழுது விரிவாகப் பேசிக்கொள்ளலாம். ஏதுமின்றி முடிக்கிறேன். (எனது தந்தை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார்)


இப்படிக்கு,

ஜெயந்தி.
01.01.2000


முத்து போன்ற எழுத்துக்கள் கோர்த்து அதோடு புத்தாண்டு வாழ்த்தையும் சேர்த்து அனுப்பிய சகோதரருக்கு நன்றி!


(இந்த புத்தாண்டு முதல் நாளில் எனது இந்த 69 வது பதிவோடு பத்தாயிரம் (10,000) பக்கப்பார்வைகளைக் கடந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம்தான் நான் பதிவிடத் துவங்கினேன். இத்தனை குறுகிய காலத்திற்குள் நான் இந்த நிலையை எட்டியிருப்பது என்னளவில் பெரிய சாதனையே! ஆதரவு தந்த அனைத்து வலையுலக வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)


மறக்கமுடியாத நினைவுகளுடன்,

திங்கள், 26 டிசம்பர், 2011

சந்தோஷமா அப்பா.............

எனக்கு மிகவும் பிடித்த கடிதம் இது. மறைந்த குமுதம் ஆசிரியர் ஏ.எஸ்.பி. அவர்கள் தன் மகளுக்கு எழுதிய கடிதம் எக்காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. அதை அவர் மகள் நினைவுகூர்ந்த விதமும் வியக்க வைக்கிறது.

அன்புள்ள அப்பா....

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனக்குத் திருமணமான புதிது. இருபது வயது. ‘கணவரின் பெற்றோர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை;  என்னை அன்புடன் நடத்தவில்லை. எனக்கு இந்த திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரவில்லை! என்ற ஆதங்கத்தில் நான் மூழ்கி இருந்த காலகட்டம். மைசூரில் இருக்கும் அக்கா வீட்டில் சில நாட்கள் மாறுதலுக்குந் தங்கி வரலாம் என்று புறப்பட்ட நேரம். ‘அப்பா கடிதம் எழுதுவார்கள், கலங்காமல் போ!என்று ஆத்தா அனுப்பி வைத்தார்கள்.

‘பெற்றோர் நாங்கள் இருக்கிறோம், கவலைப்படாதே! என்ற ரீதியில் ஒரு சமாதான கடிதத்தைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால், என்னுடைய வாழ்க்கையை வழிநடத்தப்போகும் ஒரு சாசனத்தைப் படைத்தனுப்புவீர்கள் என்று துளிகூட நினைக்கவில்லை.


ஆமாம். இதுதான் என் வாழ்க்கையின் மூலசாசனம். இதை மையமாக்கித்தான் என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இருக்கிறேன். அதன் பலன் தெரியுமாப்பா?


வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடத் தோன்றுகிறது. இத்தகைய பேரின்பமான வாழ்க்கையைத் தந்த இறைவனுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் மனம் தத்தளிக்கிறது. இந்தப் பிறவி எடுக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ? என்று மலைப்பாக இருக்கிறது. இதைவிட என்ன பலன் வேண்டும்?

யாருடனும் பகிர்ந்து கொள்ளாத இந்தக் கடிதத்தை, இன்று, உங்கள் நினைவுநாள் அன்று, எங்களை எல்லாம் விட, நீங்கள் அதிகம் நேசித்த உங்கள் குமுதம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சந்தோஷமா அப்பா?

உங்கள் அன்பு மகள்
கிருஷ்ணா சிதம்பரம்.
ஓம்
சென்னை.
06.08.1988


கவலையைச் சுட்டெறி. அது, மெதுவாக நுழைந்து, ஓசைப்படாமல் கடித்து உயிரைக் குடிக்கக் கூடிய நச்சுப்பாம்பு. அதற்கு இடம் தராதே என்கிறது கீதை. கவலையுறாதே. எழுந்திரு. உற்சாகமாக வாழ்க்கையைச் சந்தி. எத்தனையோ பிறவிகள் எடுத்து, புல்லாய், பூடாய், மிருகமாய், பறவையாய்த் திரிந்து, புண்ணியம் செய்து பெற்ற பெறற்கரிய ஜன்மம் இந்த மானிட ஜென்மம். 




அதுவும் கூன், குருடு, முடமாய் பிறக்காமல் முழுமையாய் பிறந்தது பேரதிஷ்டம். ‘அதை வீணாக்கலாமா? என்று கேட்பார் ஆதிசங்கரர். சந்தோஷமாக, முகமலர்ச்சியுடன் பழகு. இனிமையாகப் பேசு. மனதுக்குள் விளக்கு ஏற்றி வைத்துக்கொள். அது முகத்தில் பிரகாசித்து உன்னைப் பார்க்கிறவர்கள் எல்லோரையும் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு, சோர்விலிருந்து மகிழ்ச்சிக்கு, கோழைத்தனத்திலிருந்து வீரத்திற்கு அழைத்து வரட்டும்.


எண்ணம் குட்டி போடும் தன்மையுடையது. எந்த எண்ணமும் தனித்துத்தோன்றி, தனியாக மறைவதில்லை. தன்னைப்போல் பத்து நூறு எண்ணங்களை அடுக்கடுக்காகத் தோற்றுவித்து விட்டுத்தான் போகும். 


‘நான் சோர்வாக இருக்கிறேன், நான் தோல்வி அடைந்துவிட்டேன், எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது என்று ஒருமுறை, ஒரே ஒருமுறை நினைத்தாலும் கூட, அது குளத்திலே எறிந்த கல்லானால் எழும் வட்டங்களைப் போல் பெரிதாகிப், பெரிதாகி, ஆளையே அழித்துவிடும். எண்ணத்தை நீ ஏன் பயன்படுத்திக் கொள்ளலாகாது?


‘நான் நல்லவள் என்று நினை, நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று எண்ணு. ‘எனக்கு எல்லோரையும் பிடித்திருக்கிறது. எனக்கு விரோதிகளே இல்லை. நான் எல்லோரிடமும் அன்பு செலுத்துகிறேன். எனக்கு எல்லோரிடமும் பிரியம் உண்டு. எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள் என்று ஒரு முறை நினை. அந்த ஒரு எண்ணமே வேர்விட்டு, கிளைத்து, பெரிய ஆலமரமாகி, அசைக்கமுடியாத சக்தியாக உனக்குத் துணை நிற்கும்.


வாழ்க்கை அழகானது. வாழ்க்கை ரசிக்கத் தகுந்தது. தெய்வீகமானது. அது ஓர் வீணை. அதை அன்புடன் வாசித்து, இன்னிசை எழுப்பு.
அது உன் கையில்தான் இருக்கிறது.


எஸ்.ஏ.பி.


புதன், 21 டிசம்பர், 2011

ஈழத்திலிருந்து யாழினி ......


இலங்கையிலிருந்து வந்த நந்தினியின் கடிதத்திற்கு பதில் கடிதம் போட்டு பல நாட்கள் காத்திருந்தேன். ஆனால் பதில் கடிதம் வரவேயில்லை. போர்ச்சூழல் காரணமாக அவர்கள் இடம் பெயர்ந்திருக்கலாம் என்றெண்ணி நானும் மறந்து போனேன். ஆனால் திடீரென்று ஒருநாள் இலங்கையிலிதுந்து கடிதம் ஒன்று வந்தத்து. ஆனால் அது நந்தினியிடமிருந்து இல்லை?!


அவரின் 20 வயது தங்கையிடமிருந்து. நான் மகிழ்ச்சியல் பூரித்துப் போனேன். நட்புக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவமும், இந்தியாவின் பாலும், தமிழகத்தின் மீதும் அவர்கள் வைத்திருந்த பற்றும் ஆச்சர்யப்பட வைத்தது.

நமது தமிழ்க்கலாச்சாரம் என்பதும், தமிழரின் எண்ணங்களும் எந்த நாட்டிற்குப் போனாலும் மாறாது வேரூன்றி இருப்பது கண்டு நாம் பெருமை பட்டுக்கொள்தில் தவறில்லை என்றே தோன்றியது.
ஆனால் துரதிஷ்டவசமாக நந்தினியிடமிருந்தும் சரி, யாழினியிடமிருந்தும் சரி ஒரே ஒரு கடிதத்திற்குப் பிறகு இரண்டாவது கடிதம் வரவேயில்லை. அது இன்றுவரை மனதில் ஒரு ஏக்கமாகவே இருக்கிறது. இப்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள். இலங்கையிலா அல்லது வெளிநாட்டிலா எதுவுமே தெரியவில்லை. 

தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் அவர்களும் முகப்புத்தகம், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களிலோ அல்லது பிளாகர், வேர்ட்பிரஸ் தளங்களை வாசிப்பவர்களாக இருந்தாலோ அல்லது அவர்களின் நெருங்கிய நண்பர்கள் இதைப் படித்து தெரிவித்தாலோ எத்தனை சந்தோஷம் அடைவேன். இது நடக்குமா? நடக்கவே நடக்காது என்று சொல்வதற்கும் இல்லை. பார்ப்போம்.

கீழே யாழினியின் கடிதம்.


அன்புடன் அனைவருக்கும் அநேக நமஸ்காரங்கள்!
இம்மடல் தங்களை வியப்பிலாழ்த்தும். ஆச்சர்யப்படவைக்கும். அயினும் மேலுள்ள முகவரி சிறிதளவு தெளியவைக்கும். தங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மடல் வரைந்த ‘நந்தினி என்பவரை மறக்கமுடியாது என்று நினைக்கிறேன். அவரின் சகோதரியே நான். துரதிஷ்டமோ அல்லது அதிர்ஷ்டமோ தங்களுக்கு நானே மடல் வரைய வேண்டியுள்ளது. அதற்காக எனது சகோதரியின் நிலை எப்படியோ?...... என எண்ணாதீர்கள். அவர் நலமே. மருத்துவப் படிப்பை மேற்கொண்டுள்ளார்.

நிற்க!

இவ்வளவு காலமாய் மடல் எழுதாமை பற்றி தாங்கள் என்ன நினைத்தீர்களோ தெரியாது. ஆனால் இலங்கைத் தமிழர்களாகிய எமது நிலை பற்றி அறிந்திருப்பீர்கள். இடம் பெயர்வுகளுக்கும், இன்னல்களுக்கும் மத்தியில் இன்றுதான் மடல் வரையமுடிந்தது. அதற்காக தயவு செய்து மன்னிக்கவும்.

மேலும் நட்பின் முதல் அம்சம் அறிமுகப்படலம்தானே!
எது பெயர் யாழினி! ஆனால் இந்திய இராணுவத்தினர் இங்கிருந்தபோது எனது பெயரை வானொலியின் பெயரா எனக்கேட்டனர்?! வயது 20. தமிழை சிறப்புப் பாடமாகவும், பொருளியல், இந்து நாகரிகம், அளவியலும் விஞ்ஞானமுறையும் எனும் பாடங்களை உப பாடங்களாகக் கொண்டு பரீட்சை எழுதிவிட்டு முடிவிற்காகக் காத்திருக்கிறேன். மற்றும் படி கவிதை, சிறுகதை, சிறியளவு ஓவியத்திறமை போன்றன உண்டு.

இவை தற்போதைக்குப் போதும் என நினைக்கிறேன். எமது நட்பு தொடரும் பட்சத்தில் ஏனையவற்றையும் எழுத ஆவலாக உள்ளேன். எமது யாழ்ப்பாணத் தமிழர்கள் நட்பை மிகவும் நேசிக்கிறார்கள். மதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? எழ முடியாமல் விழும்போதெல்லாம் தோள் கொடுத்து எழுப்பி விடுவது நட்புதான். அவ்வகையில் என் பிரிய நாடான இந்தியாவில் எனக்கு ஒரு குடும்பம் நட்பாக அமைந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

எனக்கு இந்தியாவில் காலடி பதிக்க ஆசை. மகாத்மா காந்தி பிறந்த மண்ணை தொட்டு வணங்க ஆசை. பாரதியார் பிறந்த இல்லத்தை கண்குளிரக் காண ஆசை. அன்னை தெரசா வாழ்ந்த பூமியை, எனக்குப் பிடித்த எழுத்தாளர்களை, எம்மை ஆதரிக்கும் தமிழ்நாட்டை, காவிரித்தாயை, தஞ்சையை, கவிஞர்களை............... இப்படி பல ஆசைகள் உண்டு. காலம் வரும்போது கண்டிப்பாக வருவேன்.
மிக்க நன்றி! அன்புடனும் நட்புடனும்,

வீ. யாழினி.
கோவில்கடவை.
ஸ்ரீலங்கா.

சனி, 17 டிசம்பர், 2011

இலங்கையிலிருந்து ‘நந்தினி’ ....

ஒருமுறை  நமது சொந்தங்கள் வாழும் பக்கத்து நாடான இலங்கையிலிருந்து நட்புநாடி ஒரு கடிதம் வந்து வியப்பேற்படுத்தியது. ‘குமுதம்வார இதழ் நடத்திய ஏதோ ஒரு போட்டியில் வென்றமைக்காக எனக்கு பட்டுப்புடவை பரிசு கிடைத்த சமயம் அது. பரிசு கிடைத்தவர்கள் விபரம், முகவரி எல்லாமே குமுதத்தில் வெளியிட்டிருந்தார்கள். அந்த முவரியை குறித்து வைத்துக் கொண்டு சில மாதங்கள் கழித்து எனக்கு இலங்கையிலிருந்து ‘நந்தினி என்ற பெண் ஒரு கடித்த்தை எழுதியிருந்தார். அதைக்கண்டதும் நான் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தேன். 


வெளிநாட்டிலிருந்து அதுவும் ஒரு தமிழ்ப் பெண்ணிடமிருந்து! ஏற்கனவே எனக்கு அமெரிக்காவிலிருந்து சுப்ரமணியம் என்பவரும், சிங்கப்பூரிலிருந்து ஜெஸி என்பவரும் நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். அவர்கள் தமிழகம் வந்தபோது சந்தித்து உரையாடி இருக்கிறேன். ஆனால் இவர் மட்டுமே வெளிநாட்டு வாழ் தமிழர்.

சந்தோஷத்திற்கு இன்னொமொரு காரணம் இருந்தது. அப்போது எத்தனைதான் பத்திரிகைகளில் படித்தாலும் இலங்கைப் பிரச்னையின் உண்மை நிலை என்பது தெரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. வெவ்வேறு தரப்பினரின் பேச்சைக் கேட்டாலும் சரியானதாகவே படும். (இதைப் பற்றி விரிவாக வேறு ஒரு பதிவை எழுதுகிறேன்). 


அந்த மண்ணிலிருந்து விருப்பு வெறுப்பற்ற ஒரு நபர் அதுவும் நமது நண்பர் அங்குள்ள நிலவரம் பற்றி எழுதினால் நிறைய தெரிந்து கொள்ளலாமே என்ற ஆர்வம் இருந்தது. ராஜிவ்காந்தியின் படுகொலைக்குப் பிறகு இலங்கே நிலவரங்களை சற்று அக்கறையுடனே கவனிக்க ஆரம்பித்திருந்தேன்.

அப்போதுதான் இந்த நந்தினியின் கடிதம் எனக்கு கிடைக்கப் பெற்றது. இதோ அவரின் கடிதம்..................

மதிப்பிற்குரிய நண்பருக்கு,

வணக்கங்கள் பல. நான் உங்களுக்கு புதியதொரு அறிமுகம. நான் தங்களின் பேனா நட்பினை விரும்பும் நண்பி. எனக்கு எனது நாடான ஈழத்தில் பல பேனா நண்பிகள் உண்டு. ஆனாலும் இந்தியாவில் எனக்கு இதுவரை பேனா நண்பர்கள் எவருமே இல்லை. எனக்கு எங்கள் சகோதர நாடான தமிழகத்தில் பேனா நண்பரை உருவாக்கிக் கொள்ள மிகப்பெரும் ஆவலாய் இருக்கின்றது. அவ்வேளையில்தான் குமுதம் சுதந்திர தினச் சிறப்பிதழில் உங்கள் முகவரியைக் கண்டேன். நண்பரே நீங்கள் எனது பேனா நட்பை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இனி என்னைப் பற்றி சில வார்த்தைகள் கூறலாம் என்றே நான் நினைக்கிறேன். எனது பெயர் நந்தினி. நான் யாழ்ப்பான மாவட்டத்திலுள்ள கரவெட்டி என்னும் ஊரில் வசிக்கின்றேன். நான் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மருத்துவத்துறையில் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். எனது தந்தையார் ‘பேங்க் ஆஃப் சிலோனில் பணி பரிந்தவர். தற்போது இறந்துவிட்டார். தாயார் ஆசிரியையாக பணிபுரிகிறார். எனக்கு இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உண்டு.


இப்போதைக்கு என்னைப்பற்றிய இவ்வளவு தகவல்கள் போதுமென்றே நினைக்கிறேன். என் பேனா நட்பை நீங்கள் ஏற்றுக்கொண்டால் மிகுதி விபரங்களை உங்கள் பதில் கண்டு எழுதுகின்றேன். உங்களைப் பற்றிய செய்திகளையும் எனக்கு எழுதுங்கள். அவற்றை நான் அன்போடும், ஆவலோடும் எதிர்பார்த்துக் காத்திருப்பேன். என் எதிர்பார்ப்பை நீங்கள் வீண்டிக்க மாட்டீர்கள் என்றே நான் நினைக்கிறேன்.

எங்கள் பேனா நட்பு என்றிடும் இந்த அரிய உறவு என்றுமே தொடர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இம்மடலை நிறைவு செய்கிறேன். உங்களை அடுத்த மடலில் சந்திக்கும் வரை,

என்றும் நட்புடன்,
Miss. Nanthini Veeravagu.
Shrilanka


மறக்கமுடியாத நினைவுகளோடு,






வியாழன், 15 டிசம்பர், 2011

நான் யார் உங்கள் மீது கோபப்பட? மறக்கமுடியாத கடிதங்கள்

கடந்த செப்டம்பர் மாதம் திருமண வாழ்த்து என்ற பதிவில் என் தங்கையின் ஸ்நேகிதிகளான லட்சுமி, கண்ணகி, ரேவதி இந்த மூன்று பேரும் எனக்கும் ஸ்நேகிதிகளானதும் எனக்கு திருமண வாழ்த்து அளித்ததையும் எழுதியிருந்தேன். இதில் ‘ரேவதி மட்டும் என் கவிதைகள் சிலவற்றிற்கு விமர்சனம் ஒன்றையும், அவ்வப்போது கடிதமும் எழுதுவது வழக்கம்.


இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த ரேவதியின் அக்கா பத்மாவதி என்னுடைய வகுப்புத்தோழி! ஆனால் பழக்கமுமில்லை அதிகம் பேசுவதுமில்லை. பத்தாம் வகுப்பு முடித்தவுடன் உடனே அவளுக்கு கல்யாணம் செய்து அனுப்பிவிட்டார்கள். பக்கத்து ஊரில் உள்ள பள்ளிக்குப் போகும்போது (நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்) அவளது தெரு வழியாகத்தான் நடந்துபோக வேண்டும். அந்த காலகட்டத்தில் அஞ்சாவதோ ஆறாவதோ படிக்கும் இந்த ‘ரேவதியை நிறைய முறை பார்த்திருக்கிறேன். கால் ஒரு பக்கம் தாங்கித்தான் நடப்பாள். அது நன்றாக நினைவிருக்கிறது. அதற்கடுத்த பத்து வருடங்களில் அவள் பள்ளியிறுதி படிப்பை முடித்தது கல்லூரி போகும்போது எனக்கே தோழியாக வந்ததும் ஆச்சர்யமான விஷயம்தானே!

ஒருமுறை அவள் எனக்கு எழுதிய கடிதம்தான் கீழே இருப்பது ..........

அன்பு நண்பா!

உங்கள் ஆசைப்படி நீங்கள் எழுதிய கவிதையைப் பற்றி எழுதியுள்ளேன். சரியாக எழுதவரவில்லை. தவறாக எழுதியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் கேட்ட பாடல்களை பதிவு செய்து கொடுத்தமைக்கு மிகவும் நன்றி. இது காலதாமதம் ஆனதற்குக் காரணம் நானேதான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் நினைத்திருந்தால் கண்ணகி தங்கையிடம் கடிதம் கொடுத்தனுப்பியிருக்கலாம். நான் உங்களுடன் தொடர்பு கொண்டிருப்பேன்.

உங்கள் மீது என்னென்ன கோபம்? நான் யார் உங்கள் மீது கோபப்பட? சில மாதம்தான் உங்களுடனான நட்பு! நான் நார் மீதும் கோபப்பட மாட்டேன். கோபப்பட்டால் நட்டத்தோடுதான் வரவேண்டும். ஆனால் என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அது நான் ‘மற்றவர்களிடம் பேசும்மோது என்னதான் பேசுகிறேன் என்று எனக்கே தெரியாது. வேகமாக படபடவென்று பேசிவிடுவேன். பிறகு கவலைப்படுவேன். ஆனால் அது உங்களுக்கு கோபமாகத் தெரியும். அப்படி எப்பொழுதாவது பேசியிருந்தால் என்னை மன்னித்துவிடவும்.

அப்புறம் நான் பாடல்களைப் பதிவுசெய்யக் கேட்ட அனைத்துப் பாடல்களுமே துயரப் பாடல்கள்தான். எங்களுடைய நண்பர்கள் அனைவரும் துயரத்தையே கண்டவர்கள். இன்பத்தைக் கண்டதில்லை. அந்த பாடல்கள் அடங்கிய கேசட்டை தோழிக்குத்தான் கொடுக்கவேண்டுமா? தோழனுக்குக் கொடுக்கக்கூடாதா? 

எங்கள் விஷயத்திலும் நீ தலையிடலாம். Sorry……….. நீங்கள் தலையிடலாம். உங்களை நண்பனாக அடையவும், எதையும் பகிர்ந்து 
கொள்ளவும் நாங்கள் பெருமை அடைகிறோம்.

See you Kavipriyan!

இவண்,
நட்புடன் உயிர்,
ரேவதி.

இப்போது எங்கே எப்படி இருக்கிறாள் என்று ஒன்றுமே தெரியவில்லை. இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை என்றும் கேள்விப்பட்டேன். காலம் எல்லாவற்றையும் கண்டபடி கலைத்துப் போட்டுவிடுகிறது இல்லையா? அவளை மீண்டும் சந்தித்து அளவளாவ முடியுமா? மனசு ஏங்கித்துடிக்கிறது.

மறக்கமுடியாத நினைவுகளோடு,