சனி, 3 செப்டம்பர், 2011

திருமண வாழ்த்து

நீ நினைக்கிற கல்யாணம் விரைவிலேயே நடக்கும். கவலையே வேண்டாம். அலையாதே சகோதரனே! என்று என் சகோதரி எந்த நேரத்தில் சொன்னாரோ (எழுதினாரோ) அவரது வாக்கு உடனே பலித்துவிட்டது. அடுத்த 2, 3 மாதங்களுக்குள்ளேயே எனது திருமணம் முடிந்து விட்டது. என் திருமணம் கூட மிகப்பெரும் போராட்டங்களுக்கிடையேதான் நடந்தது. அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன்.
என் தங்கையோட ஸ்நேகிதிகளான எஸ். லட்சுமி, என். ரேவதி, ஆர். கண்ணகி ஆகிய மூன்று பேரும் என்னோடு அவ்வப்போது பேசுவது வழக்கம். அவர்கள் நாளடைவில் எனக்கும் ஸ்நேகிதிகளாக மாறிப்போனார்கள். இவர்கள் எனது திருமணத்திற்கு வரவில்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்காக பரிசுப்பொருளோடு ஒரு திருமணவாழ்த்தையும் எடுத்துக்கொண்டு என் இல்லம் தேடிவந்து கொடுத்துவிட்டுப் போனார்கள் வந்தார்கள்.
அந்தக்கால கல்யாணங்களில் திருமண வாழ்த்து அளிப்பதும், பிட் நோட்டிஸ் அடித்தோ அல்லது கண்ணாடி ஃப்ரேம் போட்டு கொடுக்கும் வழக்கம் இருந்தது. நானே கூட பல திருமணங்களில் இப்படியான வாழ்த்தை எழுதி ஃபிரேம் போட்டு கொடுத்திருக்கிறேன். என் சகோதரிக்கும் கொடுத்திருந்தேன்.
ஒரு காகிதத்தில் தட்டச்சு செய்யப்பட்ட வாழ்த்து அது. கிழிந்து மக்கிப்போன நிலையில் உள்ள அதைக்கூட என்னால் கிழித்துப்போட மனம் வரவில்லை.
கீழே பாருங்கள் அந்த வாழ்த்தை!




‘மங்கல நன்னாள் தன்னில்
மான்புடை வாழ்க்கை ஏற்றீர்!
எங்குமே புகழைக் கொண்டே
ஏற்றமாய் வாழ்க நீவீர்!
தங்கமாம் உள்ளநீ தன்னால்
தகைபெறு மனையாள் தன்னை
அங்கமாம் கண்ணைப் போல
அனைத்திலும் எண்ணி வாழ்க!
ஓங்குயர்ந்த தோளானும்
உயர்ந்தோங்கு குனத்தாலும்
பாங்குடனே வாழ்வுதன்னில்
பலர் போற்ற வாழியவே!......

இதுக்கு மேல படிக்கமுடியவில்லை. அதன்பிறகு கொஞ்சநாள்தான் நீடித்தது அந்த நட்பு. இதில் அந்த ரேவதி மட்டும் என்னோடு பேசுவதில் மிகுந்த ஆர்வமுடையவள். என் கவிதைத் தொகுப்பு ஒன்றைக் கொடுத்து அதைப்பற்றிய கருத்தை எழுத்து மூலமாக கேட்டதில் ரேவதி மட்டுமே அக்கறையாய் படித்து தனது கருத்தை எழுதிக் கொடுத்தவள். அது எங்கே இருக்கிறது என்றுத்தேடி இதோடு இணைக்க வேண்டும்!.

காட்சி என்ற வலைப்பதிவில் அஞ்சல்தலை என்கிற தலைப்பில் சில கடிதங்கள் நெஞ்சைத் தொடுகின்றன. அவசியம் போய்ப் பாருங்கள்.
என்றும் நட்புடன்,

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது… [Reply]

பரிசுப் பொருள்களைவிட
மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு
மதிப்பு அதிகம்!!!!!!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே! ஆனால் இந்தக்காலத்தில் பரிசைத்தானே பார்க்கிறார்கள், மனசைப் பார்ப்பதில்லையே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!