வியாழன், 15 டிசம்பர், 2011

நான் யார் உங்கள் மீது கோபப்பட? மறக்கமுடியாத கடிதங்கள்

கடந்த செப்டம்பர் மாதம் திருமண வாழ்த்து என்ற பதிவில் என் தங்கையின் ஸ்நேகிதிகளான லட்சுமி, கண்ணகி, ரேவதி இந்த மூன்று பேரும் எனக்கும் ஸ்நேகிதிகளானதும் எனக்கு திருமண வாழ்த்து அளித்ததையும் எழுதியிருந்தேன். இதில் ‘ரேவதி மட்டும் என் கவிதைகள் சிலவற்றிற்கு விமர்சனம் ஒன்றையும், அவ்வப்போது கடிதமும் எழுதுவது வழக்கம்.


இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த ரேவதியின் அக்கா பத்மாவதி என்னுடைய வகுப்புத்தோழி! ஆனால் பழக்கமுமில்லை அதிகம் பேசுவதுமில்லை. பத்தாம் வகுப்பு முடித்தவுடன் உடனே அவளுக்கு கல்யாணம் செய்து அனுப்பிவிட்டார்கள். பக்கத்து ஊரில் உள்ள பள்ளிக்குப் போகும்போது (நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்) அவளது தெரு வழியாகத்தான் நடந்துபோக வேண்டும். அந்த காலகட்டத்தில் அஞ்சாவதோ ஆறாவதோ படிக்கும் இந்த ‘ரேவதியை நிறைய முறை பார்த்திருக்கிறேன். கால் ஒரு பக்கம் தாங்கித்தான் நடப்பாள். அது நன்றாக நினைவிருக்கிறது. அதற்கடுத்த பத்து வருடங்களில் அவள் பள்ளியிறுதி படிப்பை முடித்தது கல்லூரி போகும்போது எனக்கே தோழியாக வந்ததும் ஆச்சர்யமான விஷயம்தானே!

ஒருமுறை அவள் எனக்கு எழுதிய கடிதம்தான் கீழே இருப்பது ..........

அன்பு நண்பா!

உங்கள் ஆசைப்படி நீங்கள் எழுதிய கவிதையைப் பற்றி எழுதியுள்ளேன். சரியாக எழுதவரவில்லை. தவறாக எழுதியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் கேட்ட பாடல்களை பதிவு செய்து கொடுத்தமைக்கு மிகவும் நன்றி. இது காலதாமதம் ஆனதற்குக் காரணம் நானேதான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் நினைத்திருந்தால் கண்ணகி தங்கையிடம் கடிதம் கொடுத்தனுப்பியிருக்கலாம். நான் உங்களுடன் தொடர்பு கொண்டிருப்பேன்.

உங்கள் மீது என்னென்ன கோபம்? நான் யார் உங்கள் மீது கோபப்பட? சில மாதம்தான் உங்களுடனான நட்பு! நான் நார் மீதும் கோபப்பட மாட்டேன். கோபப்பட்டால் நட்டத்தோடுதான் வரவேண்டும். ஆனால் என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அது நான் ‘மற்றவர்களிடம் பேசும்மோது என்னதான் பேசுகிறேன் என்று எனக்கே தெரியாது. வேகமாக படபடவென்று பேசிவிடுவேன். பிறகு கவலைப்படுவேன். ஆனால் அது உங்களுக்கு கோபமாகத் தெரியும். அப்படி எப்பொழுதாவது பேசியிருந்தால் என்னை மன்னித்துவிடவும்.

அப்புறம் நான் பாடல்களைப் பதிவுசெய்யக் கேட்ட அனைத்துப் பாடல்களுமே துயரப் பாடல்கள்தான். எங்களுடைய நண்பர்கள் அனைவரும் துயரத்தையே கண்டவர்கள். இன்பத்தைக் கண்டதில்லை. அந்த பாடல்கள் அடங்கிய கேசட்டை தோழிக்குத்தான் கொடுக்கவேண்டுமா? தோழனுக்குக் கொடுக்கக்கூடாதா? 

எங்கள் விஷயத்திலும் நீ தலையிடலாம். Sorry……….. நீங்கள் தலையிடலாம். உங்களை நண்பனாக அடையவும், எதையும் பகிர்ந்து 
கொள்ளவும் நாங்கள் பெருமை அடைகிறோம்.

See you Kavipriyan!

இவண்,
நட்புடன் உயிர்,
ரேவதி.

இப்போது எங்கே எப்படி இருக்கிறாள் என்று ஒன்றுமே தெரியவில்லை. இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை என்றும் கேள்விப்பட்டேன். காலம் எல்லாவற்றையும் கண்டபடி கலைத்துப் போட்டுவிடுகிறது இல்லையா? அவளை மீண்டும் சந்தித்து அளவளாவ முடியுமா? மனசு ஏங்கித்துடிக்கிறது.

மறக்கமுடியாத நினைவுகளோடு,


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!