அன்புடையீர்,
வணக்கம். நலம் நலமறிய ஆவல். வீட்டில் அனைவரும் நலமா? மனைவி குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? குட்டீஸிற்கு பேர் வெச்சாச்சா? எனக்கு என்ன பேர் சொல்றதுன்னே தெரியலை. ஒரே குழப்பமா இருக்கு. அதனால நீங்களே ஒரு சூப்பர் பேரா வெச்சிடுங்க. கை, கால், கண் எல்லாம் சின்னதா அழகா இருக்கும்ல! ஐயோ.... எனக்கு குட்டீஸைப் பார்க்கனும்னு ஆசையா இருக்குங்க. உங்க மனைவி என் கடிதம் பார்த்து சந்தோஷப்பட்டாங்களா? என்னைப்பற்றி என்ன சொல்லியிருக்கீங்க? ‘இது பெரிய வாயாடி’ என்றுதானே! பெரிய குட்டி ஸ்கூல் போறாளா? வீடு மாறனும்னு சொன்னீங்களே, வேறு வீடு கிடைத்துவிட்டதா? மெட்ராஸ்ல வீடு கிடைக்கிறது குதிரைக்கொம்பாச்சே!
என் தங்கை கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். தங்கியுள்ள வீட்டில் தண்ணீர் பிரச்னை என்பதால் வேறு வீடு பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று சொன்னாள். அவளைப் பார்க்க வந்தால் உங்கள் வீட்டிற்கும் வருகிறேன். வரலாம்தானே!
உங்கள் கடிதம் நிறைய சந்தோஷச் செய்திகளைத் தாங்கி வந்ததில் எனக்கும் சந்தோஷமே! நிஜமாகவே என்னுடைய வேண்டுதல் வீண் போகலை. உங்க கம்பெனி வேலைநிறுத்தம் முடிவக்கு வந்ததைத்தான் சொல்கிறேன். ஆறு மாதப் பிரசைனைக்குத் தீர்வு கிடைத்ததா? சம்பளம் அதிகமாகத் தருகிறோம் என்று கம்பெனியில் ஒத்துக்கொண்டார்களா? இனிமே ஒண்ணும் பிரச்னையில்லை, அதனால நிறைய படிப்பீர்கள்தானே! இந்த பிரச்னையால்தானே படிக்கிற ஆர்வம் குறையுதுன்னு சொன்னீங்க.
நீங்க திரும்பவும் வேலைக்குப் போறேன்னு சொன்னதும் எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? எங்க முருகனை மிரட்டி வச்சிருந்தேன் ‘முருகா, எனக்குத் தெரியாது கவிப்பிரியன் குடும்பத்துக்கு எந்த பிரச்னையுமில்லாம பாத்துக்க வேண்டிய பொறுப்பு உன்னோடதுதான்னு சொன்னேன். செய்திருக்கிறார் போலிருக்கிறது. அதனால உங்கள் சார்பில் முருகனுக்கு ‘நன்றி’யும் கூறிவிட்டேன்.
நான் கூட ‘பெண்ணியம்’ பத்தி எனக்குத் தோணியதை ஒரு நாலு பக்கத்துக்கு எழுதியிருக்கேன். எல்லாத்தையும் தொகுத்து அடுத்த லெட்டர்ல அனுப்பறேன்.
வரதட்சனை பற்றி எனது கருத்து என்னவென்றால், (ஆண்களை அவன், இவன் என்று சொல்லுவேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்.....) நிச்சயமா இப்போ வரதட்சனை என்றாலே அதனை மாமியார்தான் கேட்கிறாள் என்கிறார்கள். அதுவும் உண்மைதான். ஆனாலும் எதற்கெடுத்தாலும் அதிகாரம் பண்ணும் ஆண்கள் இப்போது மட்டும் வாய்மூடி மௌனியாக இருப்பதேன்? அவர் நிஜமாகவே மனைவிக்கு பயந்தவராகவே இருக்கலாம்! ஆனால் (மாப்)பிள்ளை .... ?
வாழப்போகிறவன் அவன்தானே! சாதாரணமா பத்து வயசு ஆகிட்டாலே ஆம்பளைப் பசங்க எதிர்த்துப் பேச ஆரம்பிச்சிடறாங்க. விளையாடாதேன்னா கேக்கறதில்லை. காலேஜை கட் பண்ணாதே, சிகரெட் பிடிக்காதேன்னு சொன்னால்லாம் கேக்கறதில்லை. திருட்டுத்தனமா செய்றாங்க. ஆனா கல்யாண விஷயத்துல மட்டும் அம்மா எது சொன்னாலும் தலையாட்டிடறாங்க. ஏன் அப்படி?
தன்னோட லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுக்கிறோம் என்கிற நினைப்பைவிட, அவள் கொண்டுவரப்போகும் பொருட்களைப் பற்றிய நினைப்புதான் அதிகம். உண்மையைச் சொல்லணும்னா அவனுக்கும் அப்பொருளின் மீது, பணத்தின் மீது தீராத ஆசைதான். ஆனா அதை வெளில காட்டிக்காம, ‘அம்மாதான் கேக்கறாங்கன்னு பழிய சொல்லிட்டு தப்பிச்சிடறாங்க. எனக்கு இந்தப் பெண்தான் வேணும். வரதட்சனை வேண்டாம்னு ஏன் யாரும் செல்றதில்லை. ஆசையும், பேராசையும்தான் காரணம்.
ஆனா தன்னையே ஏலம் போட்டு விற்றுவிட்டு எப்படி அவனால் தலைநிமிர்ந்து நடக்க முடிகிறது என்பதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம்! சுய கௌரவம், தன்மானம் எல்லாத்தையும் இழந்துட்டு எப்படி அவனால் வாழ முடிகிறது?
சாதாரணமா தன் பெண்ணுக்கு தங்களோட ஞாபகமா ஏதாவது அவளோட அப்பா, அம்மா கொடுக்கப்போய், பிறகு, அதுவே கட்டாயமா கொடுக்கணும்னு ஆகிவிட்டதா? எப்போது ஆரம்பித்தது இந்தப் பழக்கம்? எப்போது முடியும்?
அந்த ஆண்களுக்கு உரைக்குமா தான் செய்யும் செயல் கேவலம் என்று? அப்படி அவர்களைக்கு உரைத்தால்தான் இந்தப் பழக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வரும். அதுவரை பெண்கள் நிலை பாவம்தான். பெண்கள் எதிர்க்கலாம், போராடலாம். ஆனால் அவர்களை இந்த சமுதாயம் விடுவதில்லையே! ஏன்னா பொண்ணு பிறக்கும்போதே செலவு வந்திடுச்சுன்னுதானே நினைக்கிறாங்க. எது செய்யணும்னாலும், ‘உன்னால அதையெல்லாம் செய்ய முடியாது, சும்மாயிரு’ என்று சொல்லிவிடுவார்கள். அதனாலேயே அவர்கள் கிணற்றுத்தவளையாகி விடுகிறார்கள்.
‘வரதட்சனை’ங்கிறது மிகப்பெரிய வலை. அதற்குள் கணக்கிலடங்காத மனிதர்கள். ஒவ்வொருவரும் முயன்றால்தான் வெளியே வரமுடியும். அதுவரை இதே நிலைதான் நீடிக்கும்.
என்னைப் பொறுத்தவரை, மாமியார்தான் கேட்கிறாள் என்றாலும் அவளுக்குப் பின்னால் அதே பேராசை பிடித்த ஆண்களும் இருக்கிறார்கள் என்பதுதான்.
எனக்குத் தோணினதை எழுதியிருக்கேன். தப்போ, ரைட்டோ தெரியலை. தப்பா இருக்க சான்ஸ் இல்லைன்னு நினைக்கிறேன். ஏக வசனத்துல எழுதியிருக்கேன். அதனால கோபமில்லையே! எனது கருத்தை விமர்சியுங்கள். உங்கள் கருத்தையும் எழுதுங்கள்.
அப்புறம் இந்த மாதத்திலிருந்து ‘பல்சுவை நாவல்’ வாங்க முடிவு செய்துள்ளேன். பாலகுமாரன் நாவல் படி. வாழ்க்கை பற்றிய தெளிவு பிறக்கும்’னு ரெண்டு மூனு பேர் (நீங்க, இன்னெரு நண்பர்) சொன்னதால தொடர்ந்து படிக்கலாம்னு இருக்கேன். குமுதத்துல வர்ற தொடர் 1 மாதமா படிக்கலை. நான் குமுதம் வாங்குவதில்லை. இன்னொருவரிடம் வாங்கிப் படிப்பேன். அதனால சரியா படிக்க முடியலை.
மற்றவை அடுத்த கடிதத்தில் தொடர்கிறேன்.
BY
மாலா.
09/08/1998
2 கருத்துகள்:
வேதப்படி பெண்களை திருமணம் செய்து கொடுக்கும்போது சீதனம் ரொம்ப முக்கியமானது.
இனி அவளுக்கு எதை செய்யப்போகிறாய். அதனால் மொத்தமாக அவளுக்கு செய்ய வேண்டியதை செய்துவிடு என்கிறது வேதம்.அதனால், பெண்ணுக்காக ஆபரணங்கள் வஸ்திரங்கள், வாசனை திரவியங்கள் என பல விலை மதிப்பற்ற பொருள்களை பெண்ணுடன் சேர்த்து அனுப்புவார்கள்.
சீதனம் எவ்வளவு இருக்கும் என்பதை யூகிப்பதற்காக ஒரு வேத மந்த்ரம் பாருங்கள்
‘ஏ கந்தர்வாஹா அப்சரஸ்ய தேவிஹிஏஷீ விருஷ்ஹேசு ஆஷதே ஷிவாஸ்தே’
ஏ, தேவதையே கந்தவர்களே எங்கள் பெண்ணை திருமணம் செய்து அனுப்புகிறோம். அவளுக்காக சீதனங்களை வண்டி வண்டியாக அனுப்புகிறோம். அவை அனைத்தும் அவளோடு பத்திரமாக போய்ச்சேரவேண்டும். எல்லாமே விலை மதிப்பற்ற பொருட்கள் என்பதால் பேய்கள், பிசாசுகள் அவற்றை அண்டாமல் அபகரித்துச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வேண்டுகிறது அந்த வேத மந்த்ரம்
சீதனம் என்றால் நகைகள், வாசனை வஸ்துக்கள் போன்ற ஜடப் பொருள்கள் மட்டும்தானா? இன்னாரு புதிய சீதனத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது வேதம். அதன் பெயர் அனுதேயி. அனுதேயி என்றால் என்ன பொருள்? அதன் பயன் என்ன? நீங்கள் கேட்பது புரிகிறது. அனுதேயி என்றால் ஜடப் பொருள் அல்ல. அது இயங்கும் உயிர் பொருள். மணப்பெண் மணமுடித்து புகுந்த வீட்டுக்கு செல்லும் போது கூடவே இந்த உயிர்ப் பொருளும் செல்லும். அவள் சொன்ன வேலைகளைச் செய்யும். அப்படி என்ன சீதனம் அது என யோசிக்கிறீர்களா?
அதாவது அனுதேயி என்றால் பின் தொடர்ந்து வந்து சொன்னதை செய்பவர். அதாவது இங்கே இன்னொரு பெண் . ஆமாம். பெண்ணுக்கு இன்னொரு பெண்ணையே சீதனமாக கொடுப்பது.
click the links and read
1. >>>>> வேதப்படி பெண்களை திருமணம் செய்து கொடுக்கும்போது சீதனம் ரொம்ப முக்கியமானது. <<<<<<
2. >>>> சிவனும் வரதட்சணை வாங்காமல் இருக்க முடியாது. சிவன் வாங்கிய வரதட்சணை! கடவுளாகிய சிவன் வரதட்சணை வாங்கியதாம் <<<<<
.
சிந்திக்க சில உண்மைகள் தளத்திலிருந்து வந்து கருத்து கூறிய நண்பருக்கு மனமார்ந்த நன்றி!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!